logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருஞானசம்பந்தசுவாமிகள் ஆனந்தக்களிப்பு

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்

Tiricirapuram makavitvan minatci cuntaram pillaiyin pirapantat tirattu 
tirunjanacuvamikal anantakkalippu

 


Acknowledgements: 
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany  for providing us with a photocopy of the work. Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. We thank the following persons in the preparation and proof-reading of the etext: 
S. Karthikeyan, Swaminathan Narayanan, V. Devarajan and V.S. Kannan Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. 
© Project Madurai, 1998-2007. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the websitehttps://www.projectmadurai.org/   You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

 

  • ஆனந்த மானந்தந் தோழி - திரு
    வாளர்சம் பந்த ரருள்விளை யாடல்
    ஆனந்த மானந்தந் தோழி
     
    பார்புகழ் காழி நகரிற் - சிவ
    பாத விருதயர் செய்த தவத்தாற்
    சீர்புகழ் மிக்க மகவா - ஐயர்
    திருவ ருளாலவ தாரஞ்செய் தாரால்.        (ஆனந்த)
    1
    கூடும் பருவமோர் மூன்றி - லம்மை
    கொங்கை சுரந்த கொழுஞ்சுவைத் தீம்பா
    னாடுபொன் வள்ளத்தி னூட்ட - உண்டு
    ஞானசம் பந்த ரெனப்பொலிந் தாரால்        (ஆனந்த)
    2
    சொல்லு மயனரி யாலு - மென்றுஞ்
    சுட்டி யறியப் படாத பொருளை
    யொல்லுஞ்செந் தாமரை யன்ன - செங்கை
    யோர்விர லாற்சுட்டிக் காட்டிநின் றாரால்        (ஆனந்த)
    3
    வைதிக சைவந் தழையப் - பெரு
    மண்ணுல காதி மகிழ்சிறந் தோங்க
    வுய்திற மாந்தமிழ் வேதந் - தோ
    டுடைய செவியனென் றாரம்பித் தாரால்        (ஆனந்த)
    4
    விண்ணும் புவியுங்கொண் டாடுந் - தமிழ்
    தேவ மொழியும் பொழுதொற் றிடுமா
    றெண்ணுந் திருக்கோலக் காவி - லைந்
    தெழுத்தும் பொறித்தபொற் றாளம்பெற் றாரால்        (ஆனந்த)
    5
    என்னென் றியானுரை செய்கே - னைய
    ரேழிசை யோங்க வினிமை ததும்பப்
    பன்னும் புகழ்த்திரு வாக்காற் - கொடும்
    பாலை குளிர்நெய்த லாகிய தென்னின்        (ஆனந்த)
    6
    மூவுல கும்புகழ் தில்லை - வளர்
    மூவா யிரர்கண நாதராய்த் தோன்றப்
    பாவு மிசையுரு வாய - புகழ்ப்
    பாணருக் காங்கறி வித்துநின் றாரால்        (ஆனந்த)
    7
    மும்மை யுலகும் புகழச் - செழு
    முத்தின் சிவிகை குடைதிருச் சின்னஞ்
    செம்மை யரத்துறை மேய - தேவ
    தேவ னருளச் சிறப்பிற்பெற் றாரால்        (ஆனந்த)
    8
    . தாரை திருச்சின்ன மெல்லாம் - பர
    சமயத்தின் கோளரி வந்தன னிந்தப்
    பாரையுய் விப்பவன் வந்தான் - ஞானப்
    பாலறா வாயன்வந் தானென வூதும்.        (ஆனந்த)
    9
    முந்திய மாமறை யின்க - ணைய
    முற்று மொழிய மொழிந்து மறையோர்க்
    கந்தியின் மந்திர மோரிற் - றிரு
    வைந்தெழுத் தேயென் றருளிச்செய் தாரால்        (ஆனந்த)
    10
    அண்டர் புகழ்ந்துகொண் டாடும் - பாச்சி
    லாச்சிரா மத்தெம் மடிகண்மு னன்பு
    கொண்ட மழவன் மகளைப் - பற்று
    கொடிய முயலக நோயொழித் தாரால்        (ஆனந்த)
    110
    கொங்கி னடியரைச் சார்ந்த - வெங்
    குளிர்ப்பிணி யாதி குலைந்தொழி வெய்த
    வெங்கும் புகழ்திரு நீல - கண்ட
    மீற்றி னுறுதமிழ் வாய்மலர்ந் தாரால்        (ஆனந்த)
    12
    தாவில்பட் டீச்சரத் தையர் - நன்கு
    தந்த மணிமுத்துப் பந்தர் விரும்பி
    மேவு திருச்சத்தி முத்தத் - தி‍டை
    மெய்ம்மையிற் பெற்றனர் வெங்குரு வேந்தர்        (ஆனந்த)
    13
    தந்தை கருத்து முடிப்பான் - வளஞ்
    சார்பொழி லாவடு தண்டுறை யார்பா
    லந்தமின் முத்தமி ழாள - ருல
    வாக்கிழி யாயிரம் பொன்னிற்பெற் றாரால்        (ஆனந்த)
    14
    நீலகண் டப்பெரும் பாணர் - திரு
    நெஞ்ச முவந்து நெடுங்களி கூரக்
    கோலத் தரும் புரத்தி - லிசை
    கோலிய யாழ்மூரி வாய்மலர்ந் தாரால்        (ஆனந்த)
    15
    மாங்குயில் கூவும் வளஞ்சேர் - திரு
    மருகலிற் பிள்ளையார் வாக்கெழு முன்னே
    தூங்கி யெழுந்தவன் போல - விடத் 
    தோய்வா லிறந்தவன் றானெழுந் தானால்        (ஆனந்த)
    16
    வீழி மிழலைப் பிரானா - ரெங்கள்
    வித்தகர் சண்பை விரகர்முன் றோன்றிக்
    காழியிற் றோணியின் மேவும் - வண்ணங்
    காட்டுகின் றோமென்று காட்டப்பெற் றாரால்.        (ஆனந்த)
    17
    காமரு வீழி மிழலை - யமர்
    கண்ணுத லாரடி யார்க்கமு தாக
    மாமரு வோர்செம்பொற் காசு - தினம்
    வைக்கப்பெற் றார்சண்பை வந்த விரகர்        (ஆனந்த)
    18
    .மன்னிய மாமறைக் காட்டிற் - சண்பை
    வந்த கவுணியர் வாய்திற வாமுன்
    றுன்னிக் கதவ மடைத்த - திறஞ்
    சொல்லி னெவரே வியப்படை யாதார்.        (ஆனந்த)
    19
    மானியா ரன்பு மமைச்சிற் - புகழ்
    வாய்ந்த குலச்சிறை யாரன்பு மோர்ந்தே
    யானி யிலாமறைக் காட்டி - னின்று
    மாலவாய் மேவ வெழுந்தன ரையர்.        (ஆனந்த)
    20
    செழுமணி யானத் திவர்ந்து - திருச்
    சின்ன முழங்கத் திசைதொறு மொய்த்து
    வழுவி லடியவர் போற்ற - ஆல
    வாய்வந்து காட்சி கொடுத்தனர் யார்க்கும்        (ஆனந்த)
    21
    கூடலின் மேய பிரானார் - கழல்
    கும்பிட் டடியவர் கூட்டங் குலாவ
    வாட லமைச்ச ரமைத்த - திரு
    வார்மட மேவி யமர்ந்திருந் தாரால்        (ஆனந்த)
    22
    தீய வமணக் கொடிய - ரையர்
    திருமடத் திற்செய்த தீமை யருளான்
    மேய வழுதி யுடம்பு - பற்றி 
    வெஞ்சுர மாகத் திருவாய் மலர்ந்தார்        (ஆனந்த)
    23
    செம்மையில் கூனொடு வெப்பு - நின்ற
    சீர்நெடு மாறற்கு நீங்கப் பொலிவு
    வெம்மை யமணர்க்கு நீங்க - ஐயர் 
    மேதகு நீறு திருக்கைதொட் டாரால்        (ஆனந்த)
    24
    அருகர் முகமு மனையா - ரழ
    லாங்கிட்ட வேடு மொருங்கு கருகப்
    பெருகிய சைவர் முகமு - மையர்
    பேரழ லேடும் பசந்தன காணாய்.         (ஆனந்த)
    25
    அண்ணுங் கொடிய வமண - ரோரெண்
    ணாயிர ருங்கொடுங் கூர்ங்கழு வேற
    வெண்ணு முயிர்களீ டேற - வையை
    யாற்றிட்ட வேடெதி ரேறிய தம்மா.         (ஆனந்த)
    26
    உள்ள நிகரப் புறமு - மிக்
    கோங்கிருண் மூடிக் கொடுவினை பூண்ட
    கள்ள வமணர்கள் யாருங் - கண்
    கலங்கிக் கழுமரத் தேறினர் மாதோ.         (ஆனந்த)
    27
    நந்திய சீர்மலை மங்கை - கொங்கை
    ஞானமுண் டார்திரு வாய்மலர் சொல்லே
    யுந்தி விடுநெடுங் கோலாச் - சுழ
    லோடங் கரையரு குற்றது நோக்காய்.         (ஆனந்த)
    28
    வித்தகர் தந்திரு முன்ன - ரூது
    மெய்த்திருச் சின்னமெண் ணாது தடுத்த
    புத்தன் றலையுருண் டோடச் - சினம்
    பொங்கி யுருமொன்று வீழ்ந்தது கண்டாய்.         (ஆனந்த)
    29
    வெங்குரு வேந்தர் திருமுன் - வாத
    மேன்மேலுஞ் செய்து மெலிவுற்றுத் தோற்றே
    அங்குறு புத்தரெல் லோரும் - சைவ
    ராகின ரைய ரடிமலர் போற்றி.         (ஆனந்த)
    30
    நாடுல கத்தெவர் பெற்றார் - திரு
    நாவுக் கரசுஞ் சிவிகையைத் தாங்கிக்
    கூடுமன் போடு மகிழ்ந்து - தவங்
    கூடிற் றெனவருங் கோதற்ற பேறு.         (ஆனந்த)
    31
    மன்னன் றிருவீரட் டானங் - காழி
    மாமறைக் கன்று மகிழ்ச்சியிற் லெலப்
    பன்னும் புகழ்த்தம்பி ரானார் - நடம்
    பண்ணிய மேன்மைத் திருவரு ளோரின்.         (ஆனந்த)
    32
    உய்ய வெமையெடுத் தாள்வார் - திரு
    வோத்தூரில யார்க்கு மதிசய மேவ
    வையர் திருவருள் வாக்காற் - பல
    வாண்பனை பெண்பனை யாயின மாதோ.         (ஆனந்த)
    33
    கச்சியின் மேற்றளி மேய - கருங்
    கண்ணனங் கண்ணுத லெண்ணுரு மேவ
    வுச்சியின் மாதவர் சூடு - மைய
    ருண்மைத் திருவாக் கியற்றிய தோராய்.         (ஆனந்த)
    34
    பெற்றனர் யாவர் பெறுவ - ரறம்
    பேணு திருவாலங் காட்டுறை யையர்
    பற்றுங் கனவினிற் றோன்றி - நம்மைப்
    பாட வயர்த்தனை யோவென் றருள.         (ஆனந்த)
    35
    மேவு சமயம் பலவுஞ் - சைவ
    மேபொரு ளென்று விரும்பிக்கொண் டாடத்
    தூவு மெலும்புபெண் ணாக - அருள்
    சொல்லி னதிசய மல்லதெ னுண்டாம்.         (ஆனந்த)
    36
    நாட்டும் புகழின் மலிந்த - திரு
    ஞானசிந் தாமணி நல்லெழி லென்றுங்
    காட்டும் பெருமண நல்லூர் - மணங்
    காணவந் தார்சிவம் பூணச்செய் தாரால்.         (ஆனந்த)
    37
    ஆரண மாகமம் வாழ்க - புக
    ழாறு முகத்திரு ஞானசம் பந்த
    காரண தேசிகர் வாழ்க - நெடுங்
    கால மவரடி யார்களும் வாழ்க.
    38

    ஆனந்த மானந்தந் தோழி - திரு
    வாளர் சம்பந்த ரருள்விளை யாடல்
    ஆனந்த மானந்தந் தோழி.

    திருஞானசம்பந்தசுவாமிகள் ஆனந்தக்களிப்பு முற்றிற்று.

Related Content

திருவிடைமருதூர்த் திரிபந்தாதி

பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி

திருக்கற்குடிமாமலை மாலை