logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Om symbolசோணசைல மாலைOm symbol

Singer

Play Song

Source language

Translation language

Click on the songs to view the meaning


Sona Shaila Malai காப்பு சதுரனெழிற் சோண சயிலற் றுதிப்பன் மதுரமொழி யன்பர் மனமாங்-குதிரைதிறை கொண்டவனென் றேத்துங் குரைகழற்கால் யானைதிறை கொண்டவனை யென்னுளத்தே கொண்டு. நூல் அண்ணன்மா புகழ்மூ வரும்புனை யரும்பா வன்றியென் கவியுநின் றனக்காம் பண்ணுலா மிருவ ரிசைகொணின் செவியிற் பாணிமா னொலியுமேற் றிலையோ விண்ணுலா முடியின் மேருவின் வடபால் வெயிலொரு புடையுற வொருபால் தண்ணிலா வெறிப்ப வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (1) துவக்கற வறிந்து பிறக்குமா ரூருந் துயர்ந்திடா தடைந்துகாண் மன்றும் உவப்புட னிலைத்து மரிக்குமோர் பதியு மொக்குமோ நினைக்குநின் னகரைப் பவக்கடல் கடந்து முத்தியங் கரையிற் படர்பவர் திகைப்பற நோக்கித் தவக்கல நடத்த வுயர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (2) நீங்கருந் துயர்செய் வளிமுதன் மூன்ற னிலையுளே னவைதுரந் திடுமுன் வாங்கிநின் றனிவீட் டுறைகுவான் விரும்பி வந்தன னின்குறிப் பறியேன் ஆங்குறை மதியே தாங்கியென் றுலக மறைகுறை யறநிறை மதியுந் தாங்கிய முடியோ டோங்கிய சோண சைலனே கைலைநா யகனே. (3) கனிமலை துவர்வாய்க் கோதையர்க் குருகுங் கன்மனக் கொடியனுக் கென்னீ துனிமலை பிறவி தவிர்த்தனை யெனநிற் சுளிபவ ரிலையெனக் கிரங்காய் பனிமலை கதிர்வந் துறநிலை யாடி பயின்றபீ டிகையென வுதயத் தனிமலை யிருப்ப வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (4) சுடரிலை நெடுவேற் கருங்கணார்க் குருகித் துயர்ந்துநின் றலமரு மனநின் நடநவில் சரண பங்கய நினைந்து நைந்துநைந் துருகுநா ளுளதோ மடலவிழ் மரைமாட் டெதினென வருகு மதியுறக் கார்த்திகை விளக்குத் தடமுடி யிலங்க வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (5) அருங்கவி வாத வூரனே முதலோ ரன்பிலே மென்றது வேண்டி இரங்குதல் பொய்ம்மை யன்பிலே னெனயா னியம்பலே மெய்யெனக் கருளாய் கருங்கட முமிழு மீர்ங்கவுட் பனைக்கைக் கரியுரிக் கஞ்சுகங் கடுப்பத் தரங்கமுண் டெழுகார் முகில்பயில் சோண சைலனே கைலைநா யகனே. (6) புரத்துறு மவுணக் குழாமும்வண் டிசைகூர் பூங்கணை மதனுமுன் பெறுநின் சிரித்த வண் ணகையு நுதல்விழி நோக்குஞ் சிறியனே னிருண்மலம் பெறுமோ கருத்தினுங் கருத வரியநுண் ணியனென் கடனற வுலகெலாங் காண்பான் தரித்ததி தூல வடிவறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (7) ஆர்த்தெழு திரைகள் சுருண்டெறி கடனஞ் சமுதுசெய் பெரும்புகழ்த் தனிமை தீர்த்திட வுளங்கொண் டவலனேன் றனைநின் றிருவடிக் கண்பனாக் கிலையே கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து கண்டவ ரகத்திரு ளனைத்தும் சாய்த்துநின் றெழுந்து விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (8) தொடையுடைத் திரடோ ணமன்புறத் துடலந் தொலைக்குமு னகத்துட றொலைத்துத் தடையறத் திகழ்பே ரறிவுரு வாகத் தமியனேற் கருளுநா ளுளதோ புடையினிற் கரிக்கோ டிளம்பிறை புரையப் பொங்குசோ தியங்கொடி விரித்த சடையெனப் படர்ந்து கிடந்தொளிர் சோண சைலனே கைலைநா யகனே. (9) கண்புன றுளிப்ப வழற்படு மிழுதிற் கரைந்துகு நெஞ்சினின் றனையே பெண்பயி லுருவ மொடுநினைந் தெனது பெண்மய லகற்றுநா ளுளதோ வண்புனல் வேந்த னார்கலிக் குடத்து மணிமுகிற் கலயத்தின் முகந்து தண்புன லாட்ட வாடுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (10) வேலையந் துகில்சூழ் மலர்தலை யுலகின் மெய்யினைப் பொய்யெனு மவர்க்கே ஏலவந் தருள்வ தன்றிமெய் யினைமெய் யெனுமெனக் கருள்புரிந் திடாயோ காலநன் குணர்ந்து சினகரம் புகுந்து காண்பரி தெனாதுல கனைத்துஞ் சாலநின் றுழியே கண்டிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (11) மயலினா லழுந்தும் பிறவியா மளற்றை வளர்தரு நின்பெருங் கருணை வெயிலினா லுலர்த்தி யெனதுளக் கமலம் விரிக்குமொண் பரிதிநீ யலையோ பயிலுமா லயமோர் சைலமோர் சைலம் பகைப்புல முருக்குகார் முகமோர் சைலமா துலனா மெனக்கொளுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (12) புலம்பரி துயரங் கழன்றுநின் கழற்கால் புந்தியஞ் சினகரத் திருத்தி நலம்புரி மனிதர் பேரவை தமியே னணுகுவா னருளுநா ளுளதோ வலம்புரி மனிதர் கடலென வொலித்து வளைவுற நடுவண்மந் தரம்போல் தலம்புரி தவத்தி னின்றொளிர் சோண சைலனே கைலைநா யகனே. (13) நீரினி லெழுமொக் குளினழி யுடம்பு நிலையென நிலைக்குமா னந்த வாரிதி படிய வறிந்திடா துழலு மடைமையே னுய்யுநா ளுளதோ ஏரியல் பதமுன் றேடுமக் கேழ லின்றுநா டியகிளைத் திடல்போற் சாரலி னேன மருப்புழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (14) கருத்திடை நினது கருணைமா மேனி கண்டெழுத் தைந்துநா வியம்பச் சிரத்தினி லமைத்த கரத்தொடு நினையான் தினம்வலம் புரியுமா றருளாய் வரத்திரு முடியின் மதிதிரு முடியின் வனைந்துகந் தரத்தினி லிருள்கந் தரத்தினி லிருத்தி விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (15) பாரெலா மிகழு மிகழ்ச்சியும் புகழ்ச்சிப் பயனென வுணர்ந்துநா டொறுமா ரூரனா ரவையி னிகழ்ந்தசொற் றுதியி னுவக்குநின் பதந்தொழ வருளாய் ஏருலா மண்டச் சுவர்மதின் மிசைப்பா லிலங்குறு மண்டகோ ளகையாச் சாருமா லயத்தி லிலிங்கமாஞ் சோண சைலனே கைலைநா யகனே. (16) இந்தியங் கரண முடலமவே றாக்கி யிருண்மலப் படலமுங் கீறிக் கந்தமு மலரு மெனநினை யென்னிற் காண்பறக் காணுநா ளுளதோ வந்தொரு களிறு முழுவையுங் கொன்ற மலிபகை தவிர்ப்பவெண் ணிகந்த தந்தியும் புலியும் வளர்த்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (17) முழங்குவண் டினங்கள் விருந்துணு மலங்கன் மொய்குழன் மகளிர்தம் மயலாற் புழுங்குமென் றனைநின் றிருவடி நிழலிற் புகவிடுத் தளிக்குநா ளுளதோ வழங்குவெண் டிரையா றவிர்சடை கரப்ப மணிமுடி நின்றிழிந் திடல்போல் தழங்குவெள் ளருவி யிழிந்தொளிர் சோண சைலனே கைலைநா யகனே. (18) குன்றுதோ றாடுங் குமரனே யெனவுங் கொடுஞ்சிலை மதனவே ளெனவும் புன்றொழின் மனிதர்ப் புகழ்ந்துபாழ்க் கிறைக்கும் புலமைதீர்த் தெனக்கருள் புரியாய் ஒன்றொரு தினந்தோட் குட்குழைந் தனமென் றுறாதுநா டொறுமக மேரு தன்றலை தாழ்ப்ப வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (19) வெண்டிரு நீறு புனையுமா தவர்க்கு விருந்துசெய் துறும்பெரு மிடியுங் கொண்டநல் விரதத் திளைக்கும்யாக் கையுமிக் கொடியனேற் கருளுநா ளுளதோ வண்டுழுங் குவளை மலர்தடஞ் சுனையின் மற்றைவா னவர்க்குரித் தன்றிச் சண்டியுண் மகிழ்ந்து கொளமலர் சோண சைலனே கைலைநா யகனே. (20) வந்துமா மறலி யெனதுயி ருண்பான் மயிலையுண் சிரலினிற் கின்றான் முந்திநீ யெனையா னந்தவா ரிதியின் மூழ்குற விடுத்தருள் புரியாய் நந்துளான் மலையே யென்றுசா திப்ப நனைமலர் வேங்கையு மசோகுஞ் சந்துமேன் முளைப்பச் செய்துகொள் சோண சைலனே கைலைநா யகனே. (21) பூமழை யமரர் பொழியமா தவர்கட் புனன்மறு கிடைப்பொடி யடக்கத் தூமொழி மனைநீ தூதுபோம் பயனில் சொற்பதர் புடைத்திளைக் கின்றேன் யாமுணர் மிகுபே ருருவமாய் வரினு மிருவரு முணர்த்திடி னன்றித் தாமுணர் கிலரென் றெழுந்துயர் சோண சைலனே கைலைநா யகனே. (22) கழைமொழிக் கொடியோர்க் கேவல்செய் துடலங் கமருகு மமிழ்தின்மங் குறாமல் விழைவறத் துறந்துன் றிருவடிக் கமலம் விழைகுநர்க் கேவல்செய் திலனே மழைமதக் களிநல் யானைமத் தகம்பாய் வள்ளுகி ரோடுசெல் லரிமாத் தழைசிறைச் சிம்புள் கொண்டெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (23) கார்தரு சுருண்மென் குழற்சிறு நுதற்பூங் கணைபுரை மதாரிக் கருங்கண் தார்தரு குவவுக் கொங்கைநுண் மருங்குற் றையலார் மையலென் றொழிவேன் சீர்தரு மணியி னணிந்தன வெனக்கட் செவியுமொண் கேழலின் மருப்புஞ் சார்தரு முலக விளக்கெனுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (24) நந்துகைத் தலத்து நாரணற் கயற்கு நவமணிக் கரகநீ ரிருந்தும் மைந்துறக் குறித்து மாட்டியுங் காண்பான் மதித்திடா துனையெதிர்ந் திலரே ஐந்துகைத் தனிக்கோட் டொருபெருங் களிறு மறுமுகம் படைத்த கேசரியுந் தந்தெமைப் புரக்குங் கருணைகூர் சேரண சைலனே கைலைநா யகனே. (25) வினையரும் புகலிக் கிறைமணப் பந்தர் விருந்தினுக் குதவிலேன் முந்திற் றுனையிரந் திடுவான் வந்தனன் பதநீ யுதவியென் றுயரொழித் தருளாய் இனியபைந் தமிழின் பொதியமால் வரைபோ லிசைக்குரு காதிம மலையின் தனையையின் றீஞ்சொற் குருகுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (26) பெண்ணருங் கலமே யமுதமே யெனப்பெண் பேதையர்ப் புகழ்ந்தவந் திரிவேன் பண்ணுறுந் தொடர்பிற் பித்தவென் கினுநீ பயன்றர லறிந்துநிற் புகழேன் கண்ணுறுங் கவின்கூ ரவயவங் கரந்துங் கதிர்ணூ றாயிரங் கோடித் தண்ணிறங் கரவா துயர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (27) உயங்குநூ லிடைப்பூங் கோதைய ரல்கு லொளிமணிப் பாம்புதீண் டுதலால் மயங்குவேன் றனக்குன் பதமருந் துதவி மயக்குமென் றொழித்தருள் புரிவாய் முயங்குமா புகழ்ப்பூம் புகலியந் தணர்க்கு முத்துவெண் பந்தரீந் தகல்வான் தயங்குமீன் முத்துப் பந்தர்வாழ் சோண சைலனே கைலைநா யகனே. (28) மெய்த்தவ ரடிக்குற் றேவலின் றிறத்தும் விளங்குமா கமவுணர்ச் சியினும் புத்தலர் கொடுநிற் பரவுபூ சையினும் பொழுதுபோக் கெனக்கருள் புரிவாய் முத்தமு மரவ மணிகளு மெறிந்து முதிர்தினைப் புனத்தெயின் மடவார் தத்தைகள் கடியுஞ் சாரலஞ் சோண சைலனே கைலைநா யகனே. (29) பாயும்வெண் டிரைப்பே ராழிசூ ழுலகிற் பழமொழி யொழியமெய் யடியார் ஆயுமென் மலரோர் மலையள வணிய வமர்ந்தநின் கோலம்யான் மறவேன் தூயவெண் மதியிற் களங்கமென் றுரைப்பச் சூழ்பசுங் கொடிபயி லுருவச் சாயைசென் றுறநின் றிலங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (30) நடமிடு பசும்பொற் புரவிமேற் கொண்டு நளினமென் மலர்க்கரத் தெறிபூம் படையொடு துரந்து வந்துமென் விடயப் பகைப்புலி தனையெறிந் திலையே அடிநடு நிழல்சென் றெழுகட லடைய வகல்பெரும் புறத்துவா ரிதியில் தடமுடி நிழல்சென் றுறவளர் சோண சைலனே கைலைநா யகனே. (31) யாவுமா முமையுண் ணாமுலை முலைப்பா லீந்துபா டச்செயா யெனினும் மேவுமா துயர்செய் சூலைநோ யெனினும் விடுத்துநிற் பாடுமா றருளாய் ஓவுமா னலது தொல்லுருக் கொளின்வே றொன்றெடுத் திடுமென நினைந்து தாவுமா னினமெண் ணிகந்தசூழ் சோண சைலனே கைலைநா யகனே. (32) விருப்பொடு வெறுப்பு மகன்றுபே ரின்ப வெள்ளத்து ளழுந்துநின் னடியார் திருப்பத மிறைஞ்சி யவர்க்குவே ளாண்மை செய்பெருஞ் செல்வமே யருளாய் பொருப்புக டொறும்வீழ் பொங்குவெள் ளருவி போன்றறி விலர்க்கிடை யறாமல் தரிப்பருங் கருணை பொழிதருஞ் சோண சைலனே கைலைநா யகனே. (33) பொங்குறு கவினுங் கற்பும்வாய்ந் திலங்கு புண்ணிய மடந்தையும் பொருளும் இங்குநன் குதவி யங்குவான் கதியி னிருத்துநிற் புலவரென் புகழார் துங்கவெங் குறவர் புனத்திடு பரண்கா றுணித்துநட் டாரமீ மிசைமா தங்கவெண் மருப்புப் பரப்புறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (34) போழ்ந்திடு வடுக்கண் மகளிரை யணைத்துப் புகழ்நந்தி பிரம்படிக் கொதுங்கிச் சூழ்ந்திடு மமரர் நெருங்குசந் நிதியிற் றொண்டனேன் வரவருள் புரியாய் வாழ்ந்திடு மகக்கண் டுருகுதாய் முலைப்பால் வழிந்தொழு குதலென வடியார் தாழ்ந்தெழ வருவி யொழுகுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (35) நேர்ந்திடு மொருசெங் கோல்கொடு கொடுங்கோ னிமிர்ந்திட விலங்கைசென் றடைந்தோன் கூர்ந்தவன் பொடுநின் றிறைஞ்சுபு வழுத்துங் குரைகழ லிரக்கவஞ் சுவல்யான் சேர்ந்திடு மலைமான் பெருமுலை யுவமை சிறுமலை களுக்குத வாமற் சார்ந்திட விரும்பி வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (36) தெருமரும் பிறவி தமையகன் றிடாத தேவரைத் தேவரென் றெண்ணி அருமருந் தனைய நினையடை யாத வறிவிலார் பவப்பிணி யறுமோ கரிமருங் கணைந்த தெனமுழை வாயிற் கார்வர விரைந்தெழுந் துகள்கே சரிமறைந் திருந்து நாணுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.(37) ஆண்டுகம் பலசென் றிடவிருந் திடினு மன்றியோ ரிமைப்பினி லுடலம் மாண்டுகு மெனினு நன்றுநின் கமல மலரடிக் கன்பரா யிருப்பிற் பூண்டயங் கயில்வேற் குதலையந் தீஞ்சொற் புதல்வன்மே லிவர்செய லெனமார்த் தாண்டவன்வந் திவர விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (38) விரைவிடை யிவரு நினைப்பிற வாமை வேண்டுநர் வேண்டுக மதுரம் பெருகுறு தமிழ்ச்சொன் மலர்நினக் கணியும் பிறவியே வேண்டுவன் றமியேன் இருசுடர் களுமேல் கீழ்வரை பொருந்த விடையுறன் மணிக்குடக் காவைத் தரையிடை யிருத்தி நிற்றனேர் சோண சைலனே கைலைநா யகனே. (39) ஒண்மணிப் பசும்பொற் பூணிள முலையார்க் குளத்திட மெலாமளித் தடியார் கண்மணிக் கமையா விருந்துசெய் தருணீ கணமிருப் பதற்கிடம் புரியேன் வெண்மணிக் கழைமுன் கரியநெற் றிதழி வேங்கைபொன் சொரியமா சுணங்கள் தண்மணிப் பைக ளவிழ்த்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (40) அருங்கலம் புனையு மகளிரோ ரிருவ ரணிமணம் புணர்த்திவா ரணமுந் துரங்கமும் புலவர்க் குதவுநின் றனையே துதித்திடா துழன்றனன் வறிதே மருங்குநின் றழகா லத்திதாங் குவபோன் மரைமலர்ப் பெருஞ்சுனை யொடுபூந் தரங்கநின் றிலங்க விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (41) ஏணுறு மமரர் கடைகட லளித்த விருளொடு மணிமிடற் றடியேன் ஆணவ விருளுங் கலந்திடிற் கருமை யழகுமிக் கிலங்குறுங் கண்டாய் மாணெழில் வராக முழும்புழை யனந்தன் மணியொளிப் பிழம்பெழல் சிறுதீத் தாணுவின் முருக னெழுதனேர் சோண சைலனே கைலைநா யகனே. (42) மின்னவிர் சடிலக் கற்றையு மருள்கூர் விழிகளுந் திருமுகத் தழகுங் கன்னவி றிரடோ ணான்குமீ ரடியுங் கண்டுகண் களிக்குநா ளுளதோ இன்னிசை யொலிகேட் டுருகுதல் கடுப்ப விழிதர வருவிகிம் புருடர் தன்னிக ரிசைகூர் சாரலஞ் சோண சைலனே கைலைநா யகனே. (43) அள்ளிவெண் டிருநீ றுடன்முழு தணியு மடியவர்ப் பெறினெழுந் திளங்கன் றுள்ளிநின் றுருகு மன்னையின் மனநெக் குருகுபு சென்றிறைஞ் சிலனே எள்ளிவெம் புலியெண் கரிதிரு மேனி யேறுத றகாதென வெகுண்டு தள்ளிவந் தருவி யிழிதனேர் சோண சைலனே கைலைநா யகனே. (44) இழையெனத் தளர்சிற் றிடையுணா முலையா ளெனக்குவண் புகலிவேந் தயின்ற கழுமணிப் பசும்பொற் குலவுபாற் கிண்ணங் கழுவுநீர் வார்ப்பதற் குரையாய் முழையிடைக் கதிர்மா மணிவிளக் கேற்றி முசுக்கலை பிணாவொடு மசோகத் தழையிடைத் தழுவி யுறங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (45) வினைவழி யுடலிற் கமைந்துறு முணவே வேண்டினர் வினைகொடு புணரா நனைமலர் புனைநின் றிருவடி யடைவா னாடொறும் வேண்டில ருலகர் கனையிருள் கரந்த விடமறிந் துணப்போங் காட்சியிற் புனக்கிளித் தொகுதி தனையெறி மணிகண் முழைபுகுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (46) மாங்குயின் மிழற்று நாவலூர்ப் புலவன் மறுப்பவு முடிமிசை யிருத்தும் பூங்கழ லடியேன் றலைமிசை யிருத்தப் புகலினு மென்கொனீ யிரங்காய் ஓங்குறு மண்ட கோளகை யளவு முயர்ந்துமோர் மழவிடை முதுகில் தாங்குபு நடக்க விருந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (47) ஈரமு மருளு மொழுக்கமுஞ் சால்பு மின்சொலு மிந்தியப் பகைவெல் வீரமு மருளி யெனதுவெம் பிறவி விலக்கியாட் கொள்ளுநா ளுளதோ ஆரமு மகிலுந் தடிந்துசெம் மணிக ளரித்தெறிந் தெறுழ்வலிக் குறவர் சாரலி னிறுங்கு விதைக்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (48) தொகைமிகு மமரர் முனிவரர் பரவித் தொழுதகை யொடுவிரை கமழ்பூம் புகைமிகு மணிமண் டபத்திடை நெருங்கப் புழுகுநீ யணிதல்கண் டுவந்தேன் குகைமிகு வாயிற் சோதிமா மரஞ்சேர் குளிர்மதி விழுங்கவாய் வைத்த தகைமிகு மூரற் றிரளைநேர் சோண சைலனே கைலைநா யகனே. (49) சினம்படு முளங்கொன் றவரவை யெனையுஞ் சேர்ப்பது தகுமுனக் கிசைவண் டினம்படு மலரி னகவித ழொடுபுல் லிதழுமொன் றுதலுல குடைத்தே மனம்படு மடிமை யுளன்சிலை யெறிக்கு மனங்குழைந் துமையவள் களபத் தனம்பட வடிவங் குழைந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (50) வாம்பரி கரிதேர் சிவிகைபொற் குவியன் மணிப்பணி பெரும்புவி யாட்சி ஆம்பரி சலவென் றுன்பத மருவி னன்றியென் கவிகளென் கவிகள் காம்பரி முரண்மும் மதகரி வளைத்த கைவிட மோதலாற் கதிர்த்தேர்த் தாம்பரி துணுக்கென் றீர்த்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (51) துன்னுறு துயரப் பிறவிவெங் கொடுநோய் தொலைப்பினுந் தொலைத்திடா துறினும் நின்னடி மலரை யன்றியான் மறந்து நினைப்பனோ விறக்கும்வா னவரை மன்னளி பருக வுடையிறான் மதுவும் வாரண மதமும்வெள் ளருவி தன்னொடு மிகலி யொழுகுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (52) நீரினா லழலால் வருங்கொடும் பிணியா னிருதரா லலகையால் விலங்காற் சோரரால் வருந்து மவரலர் நினது தூயநா மம்புகன் றிடுவார் சீருலா மணியா லரிபர வுதலாற் றிசையுற நீள்கையா லெழின்மை சார்தலா லுமையாள் விழிநிகர் சோண சைலனே கைலைநா யகனே. (53) முகவிளக் கென்ன மணிக்குழை மிளிர முலைமுகட் டணிபெற மலராள் பகல்விளக் கென்ன வொளிகெட வரும்பொற் பாவையர்க் கிரங்கிடா தருளாய் அகவிளக் கென்ன வகறிரி நெய்தீ யாக்குவோ ரின்றியே யெழுந்த சகவிளக் கென்ன விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (54) நீலியோ டுனைநா டொறுமருச் சித்து நின்றொழில் புரிந்திட வுடற்குக் கூலியோ தனமென் றளிப்பவர்க் கன்றிக் கூற்றினைக் கடக்குமா றெளிதோ மாலியோ சனையின்வணங்குறுங் கைலை மலைநிவே தித்திடக் குவித்த சாலியோ தனமென் றிடத்திகழ் சோண சைலனே கைலைநா யகனே. (55) தோற்றிடும் பிறவி யெனுங்கடல் வீழ்ந்து துயர்ப்பிணி யெனுமலை யலைப்பக் கூற்றெனு முதலை விழுங்குமுன் னினது குரைகழற் கரைபுக விடுப்பாய் ஏற்றிடும் விளக்கின் வேறுபட் டகத்தி னிருளெலாந் தன்பெய ரொருகாற் சாற்றினு மொழிக்கும் விளக்கெனுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (56) கந்தர மிருந்து மடகுநீ ரயின்றுங் கரநிலத் தமைத்திரு பதமும் அந்தர நிமிர்ந்து நின்னிலை யறியா ரரும்பவ மொழியுமோ வுரையாய் இந்திரன் வனத்து மல்லிகை மலரி னிண்டைசாத் தியதென நிறைந்த சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (57) கூம்புறு கரமு மலர்ந்திடு முகமுங் கொண்டுநின் றனைவலம் புரிவோர் மேம்படு சரண மலர்ப்பொடி மேனி மேற்படிற் பவம்பொடி படுமே பூம்பொழிற் புகலிக் கிறைவனா னிலஞ்சேர் புண்ணியத் தலங்களி னடைந்து தாம்புனை பதிகந் தொறும்புகழ் சோண சைலனே கைலைநா யகனே. (58) கானமே மருவும் விலங்கினுங் கடையேன் கற்பவை கற்றிலேன் விடய ஞானமே யுடையே னறிஞரைக் காணி னாணிலே னுய்யுநா ளுளதோ வானமே யளவு நெடுங்கிரி மலய வாதமோ துறுபவர் கட்குத் தானமே யுதவ வளர்ந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (59) விழைவொடு மறஞ்செய் துய்கவென் றுரைக்கும் விதியினைக் கவளமுண் கெனவுங் கழைசுளி நெடுநல் யானையின் முனிந்து கடக்குமென் பவமொழிந் திடுமோ மழைமுகில் வந்து தவழ்ந்துவிண் படரு மலிதரு புகையென வெழுந்து தழலுரு வுண்மை விளக்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (60) வாத்திய முழங்கச் சிவிகையுங் கரியு மாறியூர்ந் துலவிவாழ்ந் தவரும் ஏத்திய மொழியோ டிரக்கையா னின்குற் றேவலே வாழ்வென வறிந்தேன் பாத்திய மணிகள் கொண்டிழைத் திலங்கும் பாரவா சிகைமணி மேகஞ் சாத்திய தெனவில் வளைந்துறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (61) குலத்தினிற் பிறந்து மலகினூல் கற்றுங் குணத்தினிற் சிறந்தநல் விரத பலத்தினிற் கவர்ந்து நின்னடி யவர்க்குப் பரிவிலார் கதியிலா தவரே கலத்தினிற் பொலிந்த விமயமீன் றெடுத்த கன்னிநுண் ணிடைமிசைக் களபா சலத்தினிற் குறுதி கொடுத்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (62) மூடக விருளோ டுன்னையின் றுண்ணா முலையர சாலகற் றுவலென் சூடரு மொழியா லடைந்தனன் றமியேன் சூள்வழு வாதுநீ யருளாய் வீடுறுங் கவரி கீழ்விழ வுறல்கார் மிசையனம் பன்றிதா மாறித் தாடலை துருவ வடைதனேர் சோண சைலனே கைலைநா யகனே. (63) ஐயநுண் மருங்குன் மாதர்மேல் வைத்த வாதர வுன்பதாம் புயத்தும் மெய்யுறு நறுமென் கலவையின் விருப்பு வெண்டிரு நீற்றினும் வருமோ கொய்யுறு தினைவீழ்ந் திடுபசுங் கிள்ளைக் குழுக்கடோ ரணமென வெழுந்து தையலர் கடியப் பறந்துறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (64) கனலினூ டமைத்த விழுதென வுருகக் கற்றதின் றுள்ளமென் கரங்கள் புனலுமாய் மலருங் கொடுநினைப் பூசை புரிந்தில வென்செய்கோ வுரையாய் சினவுநோய் மருந்து வேறுகொண் டிருக்குஞ் சிலம்புக ணாணவுட் கொள்வோர் சனனநோய் மருந்தா யெழுந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (65) ஊழுறு மணிப்பொற் கோயில்போய் வாவ லுறக்கொடுத் தாங்குநிற் புணர்த்தாப் பாழுறு மனம்பே ரவாக்குடி யிருப்பப் பண்ணுமென் கண்ணுநண் ணுவையோ வீழுறு மெயினர் கிழங்ககழ் குழியும் வேழம்வீழ் குழிகளு நிரம்பத் தாழுறு மருவி பொன்சொரி சோண சைலனே கைலைநா யகனே. (66) பைம்மறிப் படுப்பி னுள்ளறி யாமற் பணிநறுந் துகில்புனை மடவார் மெய்ம்மிசைக் கருந்தோல் கண்டுவந் துழலும் வினையினே னுய்யுநா ளுளதோ செம்மலர்ப் பதம்பா தலங்கடந் திடவான் றிருமுடி கடப்பினு மூவர் தம்மியற் செப்பி னடங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (67) செக்குறு திலத்தின் வருந்துபு பிறக்குஞ் செல்லலு நாடியின் பிணிப்பு நெக்குற வறிவு கலங்குசாக் காடு; நினைதொறு முளம்பதைக் கின்றேன் மொய்க்குறு முகில்கண் டரிகரி யென்னு முழக்கமு மரகர வென்னுந் தக்கவர் முழக்கு மெதிரெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (68) மரணமும் பிறவித் துயருநீங் குறநூல் வாய்ச்சிலம் பிக்கருள் புரிந்த கருணியென் றுனைவந் தடைந்தன னினிநின் கருத்தினை யின்னதென் றறியேன் முரணிபம் பரூஉக்கை தலைமிசை யெடுப்ப முழைக்கரும் பாம்பென மணித்தேர்த் தரணியுள் வெருவி யகன்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (69) அங்கையின் வைத்த கூர்ங்கனன் மழுவா லருவினைக் காடற வெறிந்து மங்கலில் பத்தி வித்திட வடியேன் மனத்தினைத் திருத்துநா ளுளதோ பொங்குறு செக்கர் கருவிசும் புறவேள் புரத்தெரி கதுவிட நோக்கித் தங்குத லொப்ப நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (70) சுருக்குமைம் புலனும் விரிக்குமூ தறிவுந் துன்னுநல் லினமுநீத் தகன்றே இருக்கும்வெங் கயவ ரினமுமென் றருளி யென்னைநின் னடிமைசெய் தருள்வாய் முருக்குமங் கதமா மணியுமிழ்ந் தகன்ற முழைதழற் றெனவுளம் வெருவித் தருக்கமொண் புலிசென் றுறமருள் சோண சைலனே கைலைநா யகனே. (71) அந்தரி குமரி யஞ்சலி கௌரி யம்பிகை மனோன்மணி மதங்கி சுந்தரி யுமையுண் ணாமுலை யெனநின் துணைவியை வாழ்த்துமா றருளாய் வந்தரி சுருதி மருங்கினிற் பாட வயங்குதும் புருவுநா ரதனுந் தந்திரி யிசையாழ் பாடுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே (72) நீக்குறு மயலு நிலைத்தபே ரறிவு நின்றிரு வடிமலர்க் கன்ப காக்குறு மனமு முடையமெய்த் தொண்டர் கணத்தினு ளெனைவிடுத் தருளாய் தேக்குறு மிறாலிற் கன்னல்காட் டுவபோற் றென்றல்வந் தசைதொறு மெல்லத் தாக்குறு காந்த டுடுப்பலர் சோண சைலனே கைலைநா யகனே. (73) பவமிலே மினியா மென்றிறு மாந்து பயமற வியந்திடப் பத்தி நவமிலே மடியே மென்செய்வா னிருந்து நாளினை வறிதொழிக் கின்றேம் அவமிலே மிமையா விழியினாற் காண்கை யால்வலங் கொளவடி நிலந்தோய் தவமிலே மெனவான் சுரர்தொழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (74) கண்கணிற் பரிந்த கண்டுவப் பனவே கைகணிற் றொழுபவே செவிகள் பண்களிற் புகழும் புகழ்ச்சிகேட் பனவே பதநினை வலம்புரி வனவே எண்குபுற் றிடப்ப வெழுமணி கரவா விருந்துசென் றிருள்கவர் வனபோல் தண்கதிர்க் கற்றை கான்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (75) நிணந்திகழ் வடிவேற் காளையே யென்று நேரிழை யவர்விழைந் திடுவோர் குணந்திரி தளிரின் மடியவே கண்டுங் கொடியனேன் வாழ்வுவந் திருந்தேன் மணந்திமிர் மகளிர் சிலம்பொடு மைந்தர் வார்கழ றுவக்கிட வலம்போய்த் தணந்திடு மமயத் தறிந்துநாண் சோண சைலனே கைலைநா யகனே. (76) மாந்தளிர் கவற்று மணிச்சிலம் படிகள் வடுவகிர் பொருவும்வா ணெடுங்கண் காந்தளி னிமைக்கு மங்கையென் றவலக் கன்னியர்ப் புகழ்வினை யறுமோ பூந்திரை சுருட்டுங் கடல்கடை குநரொண் பொறியர வின்றிமா தவர்க்குச் சாந்துய ரகற்று மருந்தருள் சோண சைலனே கைலைநா யகனே. (77) சிந்தனை கலங்கி யிணைவிழி யிருண்டு செவிகளுஞ் செவிடுபட் டைம்மேல் உந்திட வுயிர்போம் பொழுதுநின் வடிவ முளங்கொளும் பரிசெனக் கருளாய் மந்தர சைலந் தருவிடங் களத்து வைத்திடத் தினிலிம சைலந் தந்திடு மமுதை வைத்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (78) நயங்கொளு மலரா னின்றிரு வடியை நாடொறு முயிருணுங் கூற்றம் பயங்கொள வகலா தருச்சனை புரிந்து பரகதி யடையுநா ளுளதோ வயங்கொளும் விடயப் பெரும்பகை கடந்து வானநா டாண்டிட மதிப்போர் சயங்கொள வடைதற் கரணமாஞ் சோண சைலனே கைலைநா யகனே, (79) பிரம்பொரு கரங்கொண் டடிப்பநந் தீசர் பெருங்கல்வீழ் பாசியி னிமையோர் சிரம்பொர வொதுங்கி நெருங்குநின் னவையிற் றீயனே னணையுநா ளுளதோ அரம்பொர வகன்ற விலங்கிலை நெடுவே லமர்த்தகட் கிரிமக ளிணைக்குஞ் சரம்பொர விருந்து விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (80) காமரை முனிந்த முனிவரர் புகுமெய்க் கதியிடைப் புகவிடுத் திடினும் பாமர னிவனென் றிருளினுய்ப் பினுநின் பதமல ரன்றிவே றுளதோ வாமரை பொருந்து முலகுள குவட்டு மலைகள்போ லாதுணா முலையாந் தாமரை பொருந்து மானுள்வாழ் சோண சைலனே கைலைநா யகனே. (81) தொடுக்குமா கமங்க ளெலாஞ்சொலைந் தெழுத்துந் துணிந்தநெஞ் சிருக்கையாற் பகையைப் படைக்கைதா னிருந்து மஞ்சுறு மவர்போற் பகட்டுமா மறலியை வெருவேன் மடக்குவார் கலாப மயிறுயி லெழுந்து மருவலர் வேங்கைமீ தகவத் தடக்கைவா ரணங்கள் பிளிறிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (82) நிந்தியா துடல முழுதுநீ றணிய நேசியா தமலவைந் தெழுத்துஞ் சிந்தியா துழலு மெனைக்கொடுங் கூற்றென் செய்யுமோ வறிந்திலேன் றமியேன் வந்தியா வரவ மன்றிடைக் கண்ட மலர்சிலம் படியைமண் ணுணிபோய்ச் சந்தியா தயர வொளித்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (83) மங்கையர் பாரக் கொங்கையங் குவட்டு மதர்விழிக் கடலினு மளகக் கங்குலி னூடுஞ் சென்றவென் மனத்தைக் கதியிடை நடத்துமா றெளிதோ செங்கதிர் காலை மாலையுந் தங்கச் சிலம்புள வெனக்கடும் பகலில் தங்குற நீடி நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (84) கண்டிகைக் கலனே கலனென விழைந்து காயமே லணிந்துவெண் ணீற்றுப் புண்டரக் குறிசேர் நுதலொடு நினையான் பூசனை புரியுமா றருளாய் முண்டகச் செழும்பூ வெனவிளக் கெரியு முடிமிசை முத்துமேற் கட்டித் தண்டிரைக் கங்கை யாறுசேர் சோண சைலனே கைலைநா யகனே. (85) நாவினைந் தெழுத்து மந்திர மலாத நவிற்றுவோர் தமையுநீ யிருப்பப் பாவினங் கொடுபுன் மனிதரைப் புகழும் பாமரர் தமையுமென் றொழிவேன். கோவினம் புரப்பக் குன்றமன் றெடுத்த குன்றமம் பாடகக் குன்றந் தாவினஞ் சிலையென் றெடுத்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (86) திங்களுங் கதிரு மிலங்கிய மானுந் திகழ்பெரும் பூதமோ ரைந்துங் கங்குலும் பகலுங் கடந்தநின் வடிவங் கண்டுகண் களிக்குநா ளுளதோ பொங்குகுங் குலியக் கலயவா ரழலிற் புகையெனச் சரோருக வல்லி தங்குவண் டெழுபூம் பொய்கைசூழ் சோண சைலனே கைலைநா யகனே. (87) பொறியெனப் புலன்க ளெனக்கர ணங்கள் பூதங்க ளெனவிலா தடங்க அறிவெனத் தமியேற் கொருமொழி யுதவி யருவினைக் குறும்பற வெறியாய் செறிமுலைக் கரியுஞ் சிற்றிடை யரியுஞ் சேரமா துமைதினங் கட்டுந் தறியெனக் கவின்பெற் றிலங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (88) பொன்னிடத் தடைந்த மணியென வடைந்து புண்ணியர்க் கருளுநின் பதங்கள் என்னிடத் திரும்பி னடைந்தசெம் மணிபோ லெய்திய தம்மவோ வியப்பே மன்னிடக் கடலு ளடங்கும்வெற் பன்றி மலைதரு மருட்பெருங் கடலைத் தன்னிடத் தடக்கு மலையெனுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (89) நீங்கிய நேயத் தவர்க்கறி வரிய நெடியவ னெஞ்சகன் றிடாத தேங்கிய சோதி மன்றுளா டுவவென் சிந்தையு ணடப்பநின் பதங்கள் ஓங்கிய மூங்கிற் றலைமிசை மலர்வீழ்த் துழுமளி புரியிறான் மருவித் தாங்கிய வால வட்டநேர் சோண சைலனே கைலைநா யகனே. (90) எழுபசும் புல்லும் புனலுமெவ் விடத்து மிருந்திட நினைத்தவவ் விடத்தே விழைவொடு வந்து தோன்றுநீ யிருப்ப வீணின்மா னுடர்பிறந் துழல்வார் மொழிதரு கருணை மலையெனும் பெயரன் மொழியொரீஇ வேற்றுமைத் தொகையைத் தழுவுறநின்று வளர்ந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (91) வேணவா வகன்று நின்றிரு வடியின் மெய்ம்மையன் படைந்துபொய்ப் பிறவி நாணுவா ரினங்கண் டுறும்படி தூய ஞானநாட் டம்பெற வருளாய் சேணுலா மதியந் தவழ்பெருங் குடுமிச் சிலம்புகள் சிறுதுரும் பாகத் தாணுவா யெழுந்து வளர்ந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (92) நின்னையே நோக்கி விடாதகட் புலனு நின்னையே நினைக்குநெஞ் சகமும் நின்னையே துதிக்கு நாவுமென் றருளி நின்றிரு வடியின்வைத் தருள்வாய் தன்னையே றினர்க்குச் சகமெலாங் காட்டுந் தரணியோ டிகலிமே வினர்க்குத் தன்னையே காட்டு மலையெனுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (93) மின்வணங் கவருஞ் செஞ்சடா டவியும் விளங்கொளி மார்பும்வா னுலக மன்வணங் குறுநின் பதாம்புய மலரு மனங்குடி யிருக்குநா ளுளதோ பொன்வணம் புரியும் காகமொன் றினைப்பொற் பொருப்பென வடைபொரு ளனைத்துந் தன்வணம் புரியும் பொருப்பெனுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (94) குருமணி மகுடம் புனைந்துல காளுங் கொற்றவ ராதலி னென்கட் கருமணி யெனுநின் றொண்டர்குற் றேவல் கருதியாட் பட்டிட லினிதே பெருமணி விசும்பி னுச்சியி னெழுந்த பிள்ளையங் கதிரென வரவந் தருமணி யொளிவெண் மதியுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (95) சிம்புளாய் மடங்க லெறுழ்வலி கவர்ந்த திறலுமுப் புரஞ்சுடு விறலும் அம்புயா தனத்தன் முடிகளைந் திட்ட வடலுமேத் தினர்க்கிட ருளதோ உம்பர்மா மதியி லங்கையி லிருந்த வுழைகுதித் திருப்பவா ரழல்வான் தம்பமா யெழுந்து நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (96) அஞ்சலென் றவலக் கொடியனேன் றனைநின் னடியரிற் கூட்டுக வுலகின் நஞ்சமுண் டிருண்ட கண்டமென் றுனது நற்கள மிகழ்பவ ருளரோ வஞ்சமைங் கரன்கொண் டிளவலோ டிகலி வலங்கொள்வா தின்னும்வந் துறினுந் தஞ்சமென் றிடாது நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (97) அணிந்திடு கலனுஞ் சாந்துமொண் டுகிலு மரிவையர் போகமும் பெறுவான் துணிந்திடு மனமென் றுனைப்பொரு ளாகத் துணியுமோ வறிந்திலேன் றமியேன் பணிந்திடு மயன்மால் பெருமைக ளனைத்தும் பறவைகொண் டெழுதலாய் முடிந்து தணிந்திட நிமிர்ந்து நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (98) பூவுறு தடமு மதியுறு விசும்பும் பூணுறு முறுப்புநின் றுலகாள் கோவுறு நகரு மென்னவென் மனநின் குரைகழன் மருவுநா ளுளதோ ஓவுறு மனைசெய் பவர்கொள மரந்தாங் கோங்கல்க ணாணவுன் னினர்க்குத் தாவுறு முயர்வீ டளித்தருள் சோண சைலனே கைலைநா யகனே. (99) சீரணி புகழுங் கல்வியுஞ் சிறந்த செல்வமு மில்லில்வாழ் பவர்க்குப் பேரணி கலமென் புதல்வருங் கதியும் பெறத்துதிப் பவர்க்கருள் பவனீ நேரணி கதியை மறந்தவர் கண்டு நினைந்துற மிக்கபே ரருளால் தாரணி முழுதுந் தோன்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. (100)

Related Content

சோணசைலமாலை (துறைமங்கலம் சிவப்பிரகாசர்) உரை (க.வ. திருவேங்கடந