logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு

சிவஞான யோகிகள் அருளிய 
பிரபந்தத் திரட்டு - பாகம் 5



கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.

 

5.3 திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு.

 

ஆனந்தமானந்தந்தோழி - கம்பர்
ஆடுந்திருவிளையாட்டினைப்பார்க்கில்
ஆனந்தமானந்தந்தோழி.

   

ஒன்றுவிட்டொன்றுபற்றாமல் - என்றும்
ஒன்றுவிட்டொன்றினைப்பற்றவல்லாருக்
கொன்றுமிரண்டுமல்லாமல்-நின்ற
ஒன்றினைவாசகமொன்றிலளிப்பார்,

ஆனந்தம்.

 

இரண்டுவினையால்விளைந்த-வகை
இரண்டையுங்காட்டியென்சென்னியின்மீதே
இரண்டுசரணமுஞ்சூட்டி-அஞ்சில்
இரண்டையிரண்டிலடக்கவல்லாராம்,

ஆனந்தம்.

 

மூன்றுலகும்படைப்பாராம்-அந்த
மூன்றுலகும்முடனேதுடைப்பாராம்
மூன்றுகடவுளாவாராம்-அந்த
மூன்றுகடவுளர்காணவொண்ணாராம்,

ஆனந்தம்.

 

நாலுவருணம்வைப்பாராம்-பின்னும்
நால்வகையாச்சிரமங்கள்வைப்பாராம்
நாலுபாதங்கள்வைப்பாராம்-அந்த
நாலுக்குநாலுபதமும்வைப்பாராம்,

ஆனந்தம்.

 

அஞ்சுமலமஞ்சவத்தை-பூதம்
அஞ்சுதன்மாத்திரையஞ்சிந்திரியம்
அஞ்சுதொழிலஞ்சுமாற்றி-எழுத்
தஞ்சுமஞ்சாகவமைக்கவல்லாராம்,

ஆனந்தம்.

 

ஆறாறுதத்துவக்கூட்டம் -உடன்
ஆறத்துவாக்களு மாதாரமாறும்
ஆற்றுகுற்றங்களுநீங்க-இரண்
டாறின்முடிவினடனஞ்செய்வாராம்,

ஆனந்தம்.

 

ஏழுபுவனப்பரப்புங்-கடல்
ஏழுஞ்சிகரிகளேழும்பெருந்தீ
ஏழும்பிறவிகளேழும்-இசை
ஏழும்படைத்தவிறைவரிவராம்,

ஆனந்தம்.

 

எட்டுவடிவுமாவாராம்-அந்த
எட்டுவடிவுக்குமெட்டரியாராம் 
எட்டுக்குணமுடையாராம்-பத்தி
எட்டுமுடையோரிதயத்துளாராம்,

ஆனந்தம்.

 

ஒன்பதுமொன்பதுமொன்றும்-மற்றை
ஒன்பதுமுப்பதுமொன்பதுமொன்றும்
ஒன்பதுமொன்பதுமொன்றும்-பின்னும்
ஒன்பதுமானவைக்கப்புறத்தாராம்,

ஆனந்தம்.

 

பத்துத்திசையுடையாராம்-பத்துப்
பத்துப்பத்தாந்திருப்பேருடையாராம்
பத்துக்கரமுடையாராந்-தவம்
பத்தினிலொன்றுபத்தாகச்செய்வாராம்,

ஆனந்தம்.

 

ஞானமுஞேயப்பொருளும்-பற்றும்
ஞாதாவுமில்லையென்பார்க்கரியாராம்
ஞானமுஞேயப்பொருளும்-பற்றும்
ஞாதாவுமாய்ப்பகுப்பார்க்குமெட்டாராம்,

ஆனந்தம்.

 

மெய்யிலணிவதும்பாம்பு-மலை
வில்லினினாணாய்விசிப்பதும்பாம்பு
கையிற்பிடிப்பதும்பாம்பு-அவர்
காட்டினநாடகங்காண்பதும்பாம்பு,

ஆனந்தம்.

 

நாதத்துடியினடிப்பும்-மெல்ல
நடந்துநடந்துநடிக்குநடிப்பும்
வேதம்படிக்கும்படிப்பும்-நுதல்
மீதுவிளங்குகுறுவேர்ப்பொடிப்பும்,

ஆனந்தம்.

 

கையிற்கபாலத்தழகுந்-திருக்
காலினிற்பாதுகைசேர்த்தவழகும்
மெய்யணிநீற்றினழகும்-மையல்
மீறுங்குறுநகைமூரலழகும்,

ஆனந்தம்.

 

உடுப்பதுகாவியுடையாம் - மறை
ஓதிமந்தேடுஞ்சிரமேற்சடையாம்
எடுப்பதுபிச்சையமுதாம் - மார்பில்
ஏற்பதுகாமாட்சிகொங்கைச்சுவடாம்,

ஆனந்தம்.

 

ஆனந்தக்களிப்பு முடிந்தது

மெய்கண்டதேவர்திருவடிவாழ்க.
சிவஞானயோகிகள்திருவடிவாழ்க.

Related Content