logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருத்தொண்டர் திருநாமக்கோவை

 

சிவஞான யோகிகள் அருளிய 
பிரபந்தத் திரட்டு - பாகம் 5கணபதி துணை
திருச்சிற்றம்பலம்.
 

5.5 திருத்தொண்டர் திருநாமக்கோவை.


காப்பு. 

மெய்யன்பர் நாமமெல்லாம் வெவ்வேறு போற்றிடவைங்கையன் றிருவடியே காப்பு.

நூல்
தில்லைவா ழந்தணர்கள் சீர்நீல கண்டனார்
இல்லை யளித்த வியற்பகையார்- தொல்லை
இளையான் குடிமாறர் மெய்ப்பொருளா ரென்றும்
இளையா விறன்மிண்ட ரின்பம்-அளவுமமர்
நீதி யெறிபத்தர் நீண்டபுக ழேனாதி
நாதர்திருக் கண்ணப்பர் நற்கலயர்-மேதகுசீர்
மானக்கஞ் சாறரரி வாட்டாய ரானாயர் 
ஞானத் திருமூர்த்தி நாயனார்-மேன்மை
முருகர் பசுபதியார் முன்னாளைப் போவார்
துரிசி றிருக்குறிப்புத் தொண்டர்-மருவுமறைச்
சண்டீசர் வாகீசர் தக்க குலச்சிறையார்
கொண்ட மிழலைக் குறும்பனார்-தொண்டுசெயும்
நீள்காரைக் காலம்மை யப்பூதி நீலநக்கர்
மூளு நமிநந்தி முத்தமிழை-ஆளுந்
திருஞான சம்பந்தர் செய்யகலிக் காமர்
அருண்மூலர் தண்டி யடிகள்-வருமூர்க்கர்
சோமாசி மாறனார் சாக்கியனார் சூழாக்கூர்
நாமார் சிறப்புலியார் நற்றொண்டின்-ஏமச்
சிறுத்தொண்டர் சேரமான் செய்யகண நாதர்
விறற்களந்தைக் கூற்றுவனார் விஞ்சைத்-திறத்துமிகும்

பொய்யடிமை யில்லாப் புலவர் புகழ்ச்சோழர்
மொய்கொ ணரசிங்க முனையரையர்-ஐயரதி
பத்தர்கலிக் கம்பர் கலியர்பகர் சத்தி
கைத்தபுல னையடிகள் காடவர்கோன்-மொய்த்தகணம்
புல்லனார் காரிநெடு மாறர்புகழ் வாயிலார்
நல்ல முனையடுவார் நாயனார்-மல்குகழற்
சிங்க ரிடங்கழியார் தஞ்சைச் செருத்துணையார்
கொங்கார் புகழ்த்துணையார் கோட்புலியார்-அங்கணர்க்கு
பத்தராய்த் தாழ்வார் பரமனையே பாடுவார்
சித்தஞ் சிவன்பாலே சேர்த்துள்ளார்-நித்தமும்
முத்திநெறி காட்டு முதல்வர் முழுதுணர்ந்தோர்
பித்தனுறை யாரூர்ப் பிறந்தார்கள்-அத்தனையே
முப்போதுந் தீண்டுவார் முழுநீறு பூசுவார்
அப்பாலு மீச னடிச்சார்ந்தார்-மெய்ப்பூசல்
மானியார் நேசனார் வாழ்செங்கட் சோழனார்
பான்மையார் நீலகண்டப் பாணனார்-மேன்மைச்
சடையரிசை ஞானியிவர் தம்மையெல்லாஞ் சேர்த்துத்
தொடையாகப் பாடியவன் றொண்டர்-அடியிணைகள்
சிந்தனைசெய் திந்தத் திருநாமக் கோவைதனை
மந்திரமாக் கொண்டு மயிர்சிலிர்த்து-நைந்துருகி
மெய்யன்பா லென்றும் விளம்பப் பெறுவார்கள்
கைதவமும் புல்லறிவுங் கற்பனையு-மையலுந்தீர்ந்
தத்துவிதா னந்த வகண்டபரி பூரணத்தின்
நித்தியமா வாழ்வார் நிசம்.

திருத்தொண்டர் திருநாமக்கோவை முடிந்தது.

மெய்கண்ட தேவர் திருவடி வாழ்க.
சிவஞான யோகிகள் திருவடிவாழ்க.


 

Related Content