logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருமுல்லைவாயில் அந்தாதி

Thirumullaivayil andhadhi

ஆசிரியர்: சிவஞானமுனிவர்

பதம் பிரிக்கப்பட்ட பாடல்கள் 




கணபதி துணை
திருச்சிற்றம்பலம்.

திருமுல்லைவாயிலந்தாதி.

காப்பு
மல்லைவினாயகனிந்தெம்மையாளொற்றிவைபுகல்வே
றில்லைவினாயகனன்கேனுமில்லென்றிகழலெனுஞ்
சொல்லைவினாயகனைந்திரப்போர்க்கருள்சோதிபெற்ற
முல்லைவினாயகன்முல்லையந்தாதிக்குமுன்னிற்குமே.

நூல்.

திருத்தங்குமாமுல்லைவாயிற்பிரானிருசேவடிநீர்த்
திருத்தங்குமார்க்கத்திற்செல்லாமலாடப்பெற்றேமினிமால்
திருத்தங்குமாரனென்றோதிப்பிறரைப்பின்சென்றுநின்று
திருத்தங்குமாதுமுனிந்தாலுநைந்துளந்தேம்பிலமே.

1

தேங்கொன்றையாரணவுஞ்சடைவாழ்வைத்திசையனைத்துந்
தேங்கொன்றையாரணவல்லாரெமைச்சினஞ்செய்துபொறி
தாங்கொன்றையாரணஞ்செய்யாதுமுல்லைத்தலத்திறைவா
தாங்கொன்றையாரணவென்றிரந்தேத்துந்தவம்பெறினே.

2

தவலரும்பல்கலைதேர்முல்லைவாயிற்சயிலவில்லார்
சுவலரும்பல்கலைதந்திடக்கொண்டவர்தூயமதி
நுவலரும்பல்கலைநீர்முடியாரைநுவன்றறியா
வவலரும்பல்கலைவேண்டியென்வீணிலலைவதுவே.

3

அலைவனமந்தரங்காற்றங்கிமண்ணெனுமைந்துமல்லாத்
திலைவனமந்தரங்கத்தானமாத்திருமுல்லையின்வாழ்
தலைவனமந்தரங்காட்டுநஞ்சுண்டுதருவிசும்பிற்
கலைவனமந்தரங்காப்பினைமாற்றுங்கருணையென்னே.

4

கருமமலங்கொடுமாயையுநீக்கிக்கதிர்த்துவரா
றருமமலங்கொடுபாய்தடஞ்சூழ்முல்லைதன்னிலொன்னார்
மருமமலங்கொடுசெற்றோன்பரசவரும்பெருமா
னருமமலங்கொடுமாமாசிலாமணியாண்டகையே.

5

கைதவநாடகங்காட்டியறிவைக்கமரகத்தே
பெய்தவநாடகவாக்கழித்தாய்புகழ்பெற்றதொண்டைச்
செய்தவநாடகமுல்லைப்பிரான்பதஞ்சிந்தைசெய்தே
கைதவநாடகமேயெங்குளானெங்கணம்பனென்றே.

6

எங்கணம்பன்பரசேரடியாரினிணைமலர்த்தா
ளங்கணம்பன்பரசேமுல்லையாயருளென்றமரர்
தங்கணம்பன்பரசேய்கரத்தான்முல்லைதன்னிறையாஞ்
செங்கணம்பன்பரசேதனன்பாதமென்சிந்தையதே.

7

சிந்தைத்திருக்குமரமுங்களவுஞ்செறிந்தவஞ்ச
கந்தைத்திருக்குமரநேர்விழியவர்காமங்களு
முந்தைத்திருக்குமரன்மாயமுமுடித்தாளுமொரு
விந்தைத்திருக்குமரபறியாமுல்லைமெய்ப்பொருளே.

8

பொருப்புக்குழைத்தகரத்தார்வமுல்லைப்புரத்ததியான்
கருப்புக்குழைத்தகரத்தார்நகக்கலங்காதருளும்
விருப்புக்குழைத்தகரத்தார்மலர்குழன்மெல்லியலா
மருப்புக்குழைத்தகரத்தார்தலைமைத்தென்வாழ்முதலே.

9

வாரம்படைத்தகருநீலக்கண்மயில்பாகரயில்
வாரம்படைத்தகருவந்தகோன்றொழுமன்னர்செய்யின்
வாரம்படைத்தகருவறுப்பார்க்கிடம்வண்டொழில்செய்
வாரம்படைத்தகருவாற்குலைசெய்வளமுல்லையே.

10

முல்லைப்பதிகமஞ்சூற்கொண்டல்சூழ்முதுகின்றினும்வாழ்
தில்லைப்பதிகமடமார்பன்மூவர்திருத்தமிழின்
சொல்லைப்பதிகமலர்த்தொடையன்றன்றுணைமலர்த்தா
ளொல்லைப்பதிகமனத்தேயமன்வருமுப்பொழுதே.

11

தேங்கடம்புந்திகழுமலர்ச்சென்னிச்செவ்வேளைப்பெற்றோய்
தாங்கடம்புந்திகழுமலக்கோன்றமிழ்சூடியடி
யோங்கடம்புந்திகழுமலற்றோங்கவுயர்முல்லையா
யாங்கடம்புந்திகழுமலத்தெவ்வறவாணைகொண்டே.

12

கொண்டலங்கண்டருமால்போலுமுல்லைக்குழகர்முன்னாள்
விண்டலங்கண்டருமாலுழந்தேங்கவெகுண்டெழுநஞ்
சுண்டலங்கண்டருமாபதியார்முடியூடுமதித்
துண்டலங்கண்டருமாவாவெனைத்தொண்டுகொண்டனரே.

13

கொண்டானனங்கனஞ்சக்கொடும்பார்வைகுரைகடனஞ்
சுண்டானனங்கனம்வாவியுங்காவுமுலாவுமுல்லைக்
கண்டானனங்கனகம்புத்திமுத்தியுங்காட்டவஞ்சு
பிண்டானனங்கனற்கண்ணொடுவாழும்பெருமையென்னே.

14

பெரும்புங்கவருமகிழ்ந்தேத்துமுல்லைப்பெம்மான்களவே
விரும்புங்கவருமதியாளர்நட்பைவிழையும்வெறுந்
துரும்புங்கவருமனமிதுதீர்த்தென்றுரிசுளத்தே
யரும்புங்கவருமவைகளுமாயவரும்பொருளே.

15

அருவினையேனையெவர்புரப்பாரென்றழுங்கிநெஞ்சே
கருவினையேனைகாமின்றித்தென்முல்லைகாவலன்றாண்
மருவினையேனைவினைகளுநீங்கினைமாற்றினையிவ்
வுருவினையேனையுறுதியினியுனக்கென்குறையே.

16

குறைமதியாதவமாற்றுநர்கேண்மைவெங்கோளர்பொய்ம்மை
மறைமதியாதவமாமோபரதமமார்க்கமிந்த
மிறைமதியாதவமாதவர்வாழ்முல்லைமேவுமன
னிறைமதியாதவமால்விழியாரைநினைநெஞ்சமே.

17

நெஞ்சகங்கோடிமறமேபயின்றுநன்னீர்மையின்றி
வஞ்சகங்கோடிசெய்தாலும்பொறுத்தருள்வாயையனே
யஞ்சகங்கோடிரிந்தும்பர்குன்றாமலமுதுசெய்த
நஞ்சகங்கோடிவளைமுத்தமீன்முல்லைநாயகனே.

18

நாயகங்கைக்கிளைதாந்தெங்கங்காயுறினாயென்செயுந்
தூயகங்கைக்கிளைமீனமெல்லாமச்சுவைகொள்ளுமோ
தீயகங்கைக்கிளையார்சேர்கிலாமுல்லைத்திண்பதியேந்
தாயகங்கைக்கிளையாற்பயன்கோடலத்தன்மையதே.

19

தன்னகராவதுதென்முல்லையேதன்பணிமணிகண்
மின்னகராவதுவைப்பெண்கொடியிடைவெள்விடைநஞ்
சன்னகராவதுசெற்றதுவாமன்பர் நால்வர்க்கறஞ்
சொன்னகராவதுலாவென வேத்துநந்தோன்றலுக்கே.

20

தோன்றற்கரியபொரு ளெளிதேவந்துதோன்றிநற
வூன்றற்கரியகுழன்மாதொடு முல்லையுள்ளிருந்து
கூன்றற்கரியல்பறியா முடிபுண்மைகூறியென்னை
யேன்றற்கரியயனேனோ ரழுக்கறுத்தென்பயனே.

21

என்பதிகந்தனையேந்துங் குடங்கையிறைவனரு
ளென்பதிகந்தனைமுல்லையிற் சேர்ந்திலையித்துடக்கா
மென்பதிகந்தனையன்புவி பொன்பொருளென்றழிவ
தென்பதிகந்தனையைய கொல்லோபுகலேழைநெஞ்சே.

22

சேவடிவானவரேத்தத்திசை முகன்றேர்செலுத்தச்
சேவடிவானரிதாங்கப் புரஞ்செற்றதென்முல்லையாய்
சேவடிவானரமேவுங் கயிலைச்சிலம்பினர்
சேவடிவானறுந்தீந்தமிழ் பாடவுஞ்செய்தருளே.

23

அருளாதரித்திரந்தன்பு செய்வேங்கட்கமருலகோர்
பொருளாதரித்திரந்தானிற்குமோமுல்லைப்பொன்னையுள்ளா
மருளாதரித்திரந்தேர்ந்தறியா ரம்மடவரையே
வெருளாதரித்திரந்தோ வினைகாளிங்குமேவரிதே.

24

மேவருந்தென்றலுக்காற்றா தென்மான்வெம்பிநைந்துதனி
யேவருந்தென்றனக்கார்துணையாவரென்றேங்கியிந்த
நோவருந்தென்றயனேன் விதித்தானென்றுநொந்தழுமாற்
பாவருந்தென்றமிழ்முல்லைப்பிரானருள்பாலிப்பையே.

25

பாலிவடகரைகோடியுமொன் றெனப்பார்ப்பவர்வாழ்
பாலிவடகரைமுல்லைப் பிரான்பழிதீரவருள்
பாலிவடகரைவேலெம ரென்னினைப்பாரெனுமைம்
பாலிவடகரையன்னையர் நேர்ந்தும்பசப்புறினே.

26

உறுமாசிலாமணிமாயையென்றேகொள்ளுயிர்க்கிவற்றைத்
தெறுமாசிலாமணிவள்ளல்வெற்பாவனைத்தேடிக்கண்ண
ரறுமாசிலாமணிவைத்த மண்பாவையன்னேனெனுஞ்சீர்
பெறுமாசிலாமணிகேட்குமுன் சோருமிப்பேதையின்றே.

27

இன்றகலங்கலவாதொழிந் தாலுமெடுத்தசிலைக்
குன்றகலங்கநன்கொன்றையேனுங்கொடுத்தியன்றேன்
மன்றகலங்கலனேதூணிகட்புனல்வராவிடா
நின்றகலங்கலர்காணாத முல்லைநிருமலனே.

28

நிருதியமனைவிந்திரனாதியர்நேர்த்திறைஞ்சிக்
கருதியமனனர்ச்சிக்க நல்குங்கடிமுல்லைத்தலை
வருதியமனனல்காதி யுலாவரைவாழ்த்துவமிம்
பருதியமனனயப் பேமலமலப்பாழ்ங்குழிக்கே.

29

verses 30, 31 missing

30, 31

வந்தனையாற்றமவாக்கொண்டு தாளிணைவாழ்த்துமெய்த்த
வந்தனையாற்றமர்வார்க்கருள்வான் றருமையல்கொண்டு
வந்தனையாற்றமர்காணிலென்னா மென்றுவைதெனைத்தை
வந்தனையாற்றமருண்டே னருண்முல்லைவான்பொருளே.

32

பொருதவிசாகரஞ்சத்தியுங் கும்பனும்பொற்பழிக்க
விருதவிசாகரந்தானும் வருத்துமெய்யன்பருள்ள
மொருதவிசாகரந்தென்முல்லை யாவுடையாரருளா
ரிருதவிசாகரநெஞ்சே யல்லாற்செயலியாதுனக்கே.

33

யாதவமாதவனாரணனா ரின்னுநாடியறி
யாதவமாதவடன்பால் வளரெழின்முல்லையினை
யாதவமாதவமன்றோ வென்னேரிரங்காதிருத்தல்
யாதவமாதவர்வெற்பா வறியவியம்புகவே.

34

இயம்புகவேதனையா மந்திரப்பொருளென்றுசிறைக் 
கயம்புகவேதனைவீழ்த்தோன் புகழ்முல்லைக்கண்ணிருவர்
பயம்புகவேதனை நாடரிதாவளர்பண்ணவன்கா
வியம்புகவேதனையுற்றேற் கருண்மிகவைப்பதென்றே.

35

வைப்பதுமத்தகமீதோர் விழிமுல்லைமாநகர்வ
சிப்பதுமத்தகயத்துரி போர்ப்பதுதேவிசா
ணப்பதுமத்தகம்வைப்பார்க் கறுப்பதுநான்கிரண்டு
முப்பதுமத்தகவாளர்க் கென்னோமயன்மூண்டதுவே.

36

மூண்டவிக்காமன்றனக் கம்பலர்மொழிநாணரிவின்
னிண்டவிக்காமன்னவைத்தமை போர்நெடுங்காமமகத்
தீண்டவிக்காமன்வருத்தாதெமைக்கொக்கிறான்மிடற்றிற்
றீண்டவிக்காமன்மிசைதடஞ்சூழ்முல்லைச்சிற்பரனே.

37

பரம்பரன்பண்டரங்கன்முல்லைவாணனெண்பாற்குணமு
நிரம்பரன்பண்டரங்கன்றேட நீண்டநிமலனெண்டிக்
கொரம்பரன்பண்டரங்கண்டோதும் பத்திரவுத்தமயாழ்
நரம்பரன்பண்டரங்கஞ் சேரருட்கடனந்தெய்வமே.

38

நந்தமருமந்தமெய்வாழ்வுமற்றைநலங்களுந்தி
கந்தமருமந்தவான்புகழ்சேர்முல்லைக்கண்ணிருந்த
பந்தமருமந்தமெல்விரல்பாகன்பகைவருரஞ்
சிந்தமருமந்தனைப்போழுஞ்சூலத்திருக்கரனே.

39

திருமுல்லைவாயின் மருவுமெந்தாயிளஞ்சேய்க்கழகு
தருமுலைவாயின்வைத்தாலன்றி யுண்ணுந்தகுதியுண்டே
வருமுலைவாயினற்பட்டழுந்தா தெமையாண்டுமன
மிருமுலைவாயின்மெழுகாயுருகச் செய்தேன்றுகொள்ளே.

40

கொள்ளுந்திகம்பரமுல்லைப்பிரான்பைங்குழவிநிலா
வெள்ளுந்திகம்பரவுஞ்சடையான்வெற்பினீர்ச்சுழியைத்
தள்ளுந்திகம்பரநேர்களங்கண்ணிதருநலத்திற்
குள்ளுந்திகம்பரமெல்லாமதிப்பினுமொப்பல்லவே.

41

அல்லியந்தாமரையாளிடமோர்பொழுதவ்வளம்போய்
வல்லியந்தாமரையாளிடமாமதைவாழ்த்திடன்மின்
பல்லியந்தாமரையாமத்தினுங்கண்படாமுல்லையார்ப்
புல்லியந்தாமரையாசையின்வாழ்த்தும்புலவர்களே.

42

புலத்தலைவாவினியாற்றேமென்றெய்துநர்புந்திவெந்தீப்
புலத்தலைவாவினுங்கைகொடுப்பார்முல்லைப்பூவைவிடு
புலத்தலைவாவிநன்னீர்விளையாடிப்புணருதும்வா
புலத்தலைவாவிங்ஙனென்றருள்வாய்மலர்ப்பூங்கொடியே.

43

கொடியானையந்தநல்லூரனையாண்டநங்கோனைமதக்
கொடியானையந்தகனைச்சீறிமுல்லையுட்கோவைமுல்லைக்
கொடியானையந்தபவாண்டானையீண்டுறற்குக்கரைந்தாற்
கொடியானையந்தமுள்ளாய்க்கிடுவேன் கொளுமூன்பலியே

44

ஊன்காளத்திக்குச்சுவையுளதோதிண்ணுடற்கறைக்கா
னான்காளத்திக்குத்தெளிவுளதோமுல்லைநாயகனெங்
கோன்காளத்திக்குத்தரனலம்யானறிகொள்கையல்லான்
மான்காளத்திக்குக்கியாராவர்போலுமற்றெங்கையரே.

45

கைக்கவிகமகநைந்தழுங்கிக்கலங்காதருள்சேர்
கைக்கவிகமகவாதியிலாசைகருத்துள்ளுக
கைக்கவிகமகனாதியர்வாழ்முல்லைகாவலன்புன்
கைக்கவிகமகவுங்கொடுபாய்கழுங்குன்றனையே.

46

குன்றத்தஞ்சாதிமலர்க்கூந்தன்மாதிடங்கொண்டிருந்த
னன்றத்தஞ்சாதிவழாமுல்லைவாணனடித்தனன்றென்
மன்றத்தஞ்சாதிநெஞ்சேநமக்கென்குறைவாழ்வுபெற்றேம்
பின்றத்தஞ்சாதிரிமாயாயென்றேவெற்றிபேசுவமே.

47

பேசித்திருந்தநம்முல்லையில்வந்தெமைப்பேணித்தொண்டீர்
பூசித்திருந்தம்வினைதீர்த்துமென்றருள்பொற்பர்வெற்பி
னேசித்திருந்தண்புனலீர்க்கும்போதுற்றுநேர்ந்தெடுத்தா
ராசித்திருந்தபடிபோலொருவரஞ்சாதியென்றே.

48

சாதிப்பரியதவத்தார்க்குமுல்லைத்தலத்தினுண்மை
போதிப்பரியனலம்பாடுதும்புல்லறிவுபரம்
பாதிப்பரியமனைதோறும்வண்டுபகர்ந்ததுமுன்
காதிப்பரியகளிற்றுரிபோர்த்ததுங்கட்டுரைத்தே

49

கட்டோம்புதலெனக்காமாதியாறுங்கரிசறுத்தோ
முட்டோம்புதவுதிறந்தின்பவீடுபுக்குச்சரித்தோஞ்
சிட்டோம்புதல்விமண்ணோருந்திகஞ்சந்தெளிவின்முன்பின்
விட்டோம்புதலுறுநள்ளெழுத்தான்முல்லைமேவப்பெற்றே.

50

பெற்றவரம்பலவுங்குன்றயான்பிணைபோல்வெருள
வுற்றவரம்பலங்கோதவென்பேதையொருதனியே
முற்றவரம்பலசெய்தகன்றாளென்னைமுல்லைப்பிரான்
கற்றவரன்பலவற்பணியாரிற்கடுஞ்சுரமே

51

கடுத்தியம்பாம்பன்மலரானையாதுகவலைநெஞ்சே
விடுத்தியம்பாம்பனல்வாயாற்புகழ்ந்தின்றுமேவுதுமுட்
படுத்தியம்பாம்பலுரிபிறைமான்வெம்பரசொடுந்து
வடுத்தியம்பாம்பணிமுல்லையுளம்பலவாணனையே.

52

அம்பலவாணன்மடவார்விழியென்றழிந்துழலு
மம்பலவாணங்கனையலியாகியமர்ந்தருளு
மம்பலவாணன்றிருமுல்லைவாயிலழகன்றில்லை
யம்பலவாணன்வழியினில்லா வென்னறிவுகளே.

53

அறிவறியாகமெதுவதுவாகமல்லாதவென்னாங்
குறிவறியாகடிமுல்லையிற்சேர்புழுக்கூட்டைவிண்டு
தறிவறியாகஞ்செயன்பாலெனையர்ச்சனைசெயுன்பாற்
செறிவறியாகந்தருவலென்றாண்டனன்சின்மயனே.

54

மயங்காதுவரையும்பொய்ப்பொருளியாவும்வரையச்செய்ய
பயங்காதுவரையுண்மால்போற்றுமுல்லைநம்பாவிழிப்பங்
கயங்காதுவரையுநீள்சீர்க்கொடியிடைகாதலசூர்
சயங்காதுவரையுமைங்கரனாரையுந்தந்தவனே.

55

தவத்துக்கணிகலனட்டோனென்றறோரிற்றவறுமவை
பவத்துக்கணிகலனெஞ்சேயிவைவிடப்பார்வடிவ
கவத்துக்கணிகலன்மாவாக்குமுல்லையினானரியா
யவத்துக்கணிகலந்தோர்பான்மருவுமெம்மண்ணலையே.

56

அண்ணலந்தோயமனைவீட்டிமுல்லையிலார்ந்ததுவு
மெண்ணலந்தோயமுடித்ததுமற்றெம்மிறைவியைப்போ
லுண்ணலந்தோயவிழைந்திரந்தேங்கியுளைந்துநந்தம்
பெண்ணலந்தோயவெளிவந்தருளுமெய்ப்பேறன்றியே.

57

அன்றினங்காதரமாய்நின்றுகத்துமலைகடலெம்
முன்றினங்காதரவத்துக்களவிலைமூரிமதன்
கன்றினங்காதரவாருளரோவிருகண்ணுந்துஞ்சா
வின்றினங்காதரமாமுல்லைவாணமற்றெங்களையே.

58

களைகண்டனம்புயமாமுல்லைக்கோன்வெற்பகாதன்மிக்க
கிளைகண்டனம்புயன்மேவுந்தடவரைக்கீழொருசார்
விளைகண்டனம்புயங்கஞ்சேல்வல்வேய்சொன்னடைநிதம்பந்
திளைகண்டனம்புயமாக்கொண்டுநிற்குமொர்தீங்கரும்பே.

59

தீங்கரும்புங்கவறாடிப்பயனிலைசெப்பின்மின்னார்
தாங்கரும்புங்கவலாக்கனியும்மெனச்சாற்றியந்தோ
நீங்கரும்புங்கவசையுறுவீர்முல்லைநீணகரின்
பாங்கரும்புங்கவரும்போற்றுமீசனைப்பாடுமினே.

60

பாடகமன்னவருந்துயர்தீரப்பரன்புகழ்வாய்
பாடகமன்னவருங்குணம்போனலம்பார்த்தெடுத்துப்
பாடகமன்னவருளான்றன்பாற்பைங்கொடியிடையென்
பாடகமன்னவரும்போற்றவாழ்முல்லைப்பண்ணவனே.

61

பண்ணகங்காரிகைபான்முல்லைவாயும்பதிந்திருந்தோய்
வண்ணகங்காரிகைமற்றுமென்போற்பகர்வாரிலையென்
றெண்ணகங்காரிகைதூவாதியற்றுமிருவினையாந்
திண்ணகங்காரிகைதீண்டுமெந்தாய்கெடச்செய்தருளே.

62

செய்தவமாயத்தன்செல்வமுநீயெனச்சிந்தைசெய்யா
தெய்தவமாயத்தன்மங்களைமாற்றியியற்றுமென்றன்
கைதவமாயத்தன்மைக்கோரளவில்லைகண்ணருளாற்
பொய்தவமாயத்தன்முல்லையுள்ளாய்நலம்போதிப்பையே.

63

திப்பியமாவடுதண்டுறைக்கண்ணுந்திருந்துநிலை
தப்பியமாவடுத்தீர்முல்லையூரினுஞ்சந்தமுலை
யம்பியமாவடுவார்கண்ணிபாகனமர்ந்துபுகழ்
பப்பியமாவடுநாமமொன்றாக்கொண்டுபாரிப்பதே.

64

பாரகந்தைக்குமரும்புகழ்சேர்முல்லைப்பாலவருள்
பாரகந்தைக்குமதியார்பின்சென்றுதண்பாலிநதிப்
பாரகந்தைக்கும்வழியின்றிவாடும்பரிசுநன்றோ
பாரகந்தைக்குமைக்குங்கயஞ்செற்றபராபரனே.

65

பரங்கிரியாவிகள்சூழ்முல்லைபோற்பரிந்தென்னுளமா
மரங்கிரியாவிடையாரருளுண்மையறிவினின்ற
வரங்கிரியாவியினுள்ளேயழுத்தும்வகையறியேன்
சிரங்கிரியாவிதியாற்றுஞ்செல்லேனுய்யுஞ்செய்கையென்னே.

66

செய்வசித்தாந்தமிழ்முல்லையுளீசசெவ்வேமநய
வைவசித்தாந்தம்பொருளைந்துடையவவற்றிரண்டு
நைவசித்தாந்தவிர்மூன்றுமொன்றொன்றினணுகுமென்னுஞ்
சைவசித்தாந்தநெறியுபதேசந்தனையெமக்கே.

67

தனையரியானனநான்கானுந்தேடிடத்தான்முடியாஞ்
சினையரியானனமார்தடஞ்சூழ்முல்லைச்சிற்பரனென்
வினையரியானனருள்சேர்ந்துநீயொருமின்னின்விழி
யினையரியானனனேர்மெழுகாயினென்னாம்பிறிதே.

68

தேவருந்தானவருங்காரி கண்டஞ்சித்தீவினையா
னேவருந்தானவனாம் பகுப்பற்றவர்நேர்முல்லைநம்
பாவருந்தானவவென்றோ லிடப்பண்டருந்தியுமந்
தோவருந்தானவமீதறியார் சிலர்தொண்டர்களே.

69

தொண்டையநாடுகடீரச்செய்யாமற்றுவரிதழ்வாய்த்
தொண்டையனாடுமலர்க்கூந்தலார்க்குடைந்தும்பிழைத்தேன்
றொண்டையனாடுபுகழோங்குமுல்லையிற்றோன்றுமுருத்
தொண்டையனாடுமலரடிக்கீழின்றிதொண்டுசெய்தே.

70

செய்யுடையல்குலைக்காட்டிமய்க்குநர்தீமைகெடச்
செய்யுடையல்குலைப்பால்வளைவெண்ணித்திலம்பரப்புஞ்
செய்யுடையல்குலையாவளமுல்லையிற்சேர்ந்துபகர்
செய்யுடையல்குலைத்தாரானைப்பால்வைத்ததேவைநெஞ்சே.

71

நெஞ்சலமந்திரங்கக்கூற்றந் தோன்றினுநெக்குருகி
யஞ்சலமந்திரந்தான் முதலாறுமற்றேமறுத்தேஞ்
சஞ்சலமந்திரம்பெற்றுள முல்லைத்தலத்தழகு
துஞ்சலமந்திரந்தன்னிலெங் கோனைத்துதிக்கப்பெற்றே.

72

பெற்றத்திருந்துறுவாழ் வெமக்கீயப்பெருகுவள
முற்றத்திருந்துறுமுல்லையின் முல்லையின்முல்லியில்வாழ்
நற்றத்திருந்துறுநீர்வேணியீர் நள்ளுமன்பரென்னுஞ்
சுற்றத்திருந்துறுகண்டீர்த் தெமைத்தொண்டுகொள்ளுமினே.

73

மின்பங்கம்பொன்றுந்துமேருவில் லோடமர்வேதியவென்
றன்பங்கம்பொன்றுந்துறைகாட்டி முத்தியிற்சாரவரு
ளன்பங்கம்பொன்றுந்துபியோசை யென்றுமறாமுல்லையா
யின்பங்கம்பொன்றுந்துவர்க்கையற் கீந்தருளென்னரசே.

74

அரங்கந்திருவம்பலமுக்கணானுக்கமர்விடஞ்சீ
ரிரங்கந்திருவம்பலர்தொறும் வாழவிலங்கும்பிர
மரங்கந்திருவம்பலபாடும் வாவிகண்மல்குமுல்லைப்
புரங்கந்திருவம்பலங்குங் கொடியிடைப்பூண்முலையே.

75

பூண்டிலஞ்சித்தத்துமெய்யன்பெவ்வாறினிப்பொன்பெண்ம
ண்ணாந், தூண்டிலஞ்சித்தத்துவங்கடந்தானந்தந்தோய்வுற
லூர்,பாண்டிலஞ்சித்தத்துவாத்துடக்கொக்கப்பறித்தருள்வா,
யாண்டிலஞ்சித்தத்துநீர்புடைசூழ்முல்லையங்கணனே.

76

அங்கங்கரகரவென்றோதம்போலொலியார்ப்பவன்பர்
சங்கங்கரகரகத்தோர்துதிக்கத்தண்ணீற்றினொளி
பொங்கங்கரகரமுல்லையுள்ளாரெனைப்பொத்திக்கொண்ட
பங்கங்கரகரநின்றாலுனைப்பற்றிக்கொல்லுவரே.

77

பற்றிக்கொல்லாதொழிவேனோவினிமலப்பாவமறங், கற்றிக்
கொல்லாருலைவேற்கண்ணிபால்கவர்முல்லைப்பிரான், 
பெற்றிக்கொல்லாதவர்போலென்றனையெண்ணும்பேதையெண்ண,
முற்றிக்கொல்லாம்வருகின்றனைபாரின்றென்முன்னர்வந்தே.

78

வந்தியன்றேவரைநின்னன்றியான்முல்லைவாணவென்னோ
வந்தியன்றேவரையாதருளாமைமண்முற்றும்பெற்றும்
வந்தியன்றேவரைமாமாதுநீயுமவ்வாறுநின்செவ்
வந்தியன்றேவரைவாட்கரித்தான்கெடவைத்தவனே.

79

வைத்தலைவாளிநிகர்விழியான்மதனம்புடல்சு
வைத்தலைவாளினியாற்றகில்லாண்மன்னச்செய்தியருள்
வைத்தலைவாளினிதார்முல்லைவாண்மதிக்குடைக்கோ
வைத்தலைவாளினிலேற்றன்றிச்சாந்தம்வார திவட்கே.

80

வட்காதகைதவரூரெரித்தாயுன்னைவாஞ்சித்தவி
வட்காதகைதவமிக்கோர்புகழ்மணிவார்த்தைநிறை
யுட்காதகைதவவாணர்கள்வாழ்முல்லையுத்தமனே
யுட்காதகைதவன்கைப்பிரம்பாலடியுண்டவனே.

81

உண்டாயினந்தமயல்செய்வதென்னினியோடுநஞ்ச
முண்டாயினந்தமதாண்டவன்முல்லையுறாருறும்புன்
கண்டாயினந்தமர்போல்வந்தெம்மான் கண்ணருள்புரிந்தான்
கண்டாயினந்தமமேயுனக்கீங்கென்னகாரியமே.

82

மேதக்கசிந்தனைத்தாபதர்வாழ்முல்லைமேவுநம்ப
வாதக்கசிந்தனைத்தாவீரமென்றட்டுமன்மதனைக்
காதக்கசிந்தனைத்துங்குடியார்முடிக்கண்ணுதலென்
றோதக்கசிந்தனைக்கென்னெஞ்சமேகுறையோதுதியே.

83

துதிப்பருந்தாதவிழ்பூம்பொய்கைசூழ்முல்லைத்தொன்னகாவாழ்
மதிப்பருந்தாதகிகொன்றைச்சடாதரவானியங்குங்
கதிப்பருந்தாதரவாயென்னுடம்பிற்கசியும்புலாற்
குதிப்பருந்தாதமுன்வந்தென்றனைத்தொண்டுகொண்டருளே. )

84

அருந்துதியானன்பினேத்தவைத்தாரருள்கற்பினல
மருந்துதியானம்புவிக்களித்தாரகுளாரமுதை
யருந்துதியானம்புரிமனமேவிரைந்தாள்வரெம்மை
யருந்துதியானன்கவர்முல்லைக்கேசொல்லுமவ்வெண்ணமே.

85

எண்ணப்படிகடியாதன்பர்க்கீந்தெழின்முல்லையினுங்
கண்ணப்படிகடியானத்துந்தோன்றுமிக்கான்கழற்கீழ்
நண்ணப்படிகடிநெஞ்சேயவனம்பிழையெண்ணினுந்
தண்ணப்படிகடிதாறுதல்போலுமத்தன்மையனே.

86

அத்தன்மையர்ந்தெரியற்குழலாரமர்முல்லைநில
யத்தன்மையாந்தெரிமூழ்காமலுண்மையருவுருக்கா
ரத்தன்மையாந்தெரியக்குருவாய்வந்தனைத்துமல்லா
வத்தன்மையாந்தெரிவைபாகத்தாமறியென்றனனே.

87

அறிவென்றவவழிச்செல்லார்தமையுமடக்குங்கண்ணாய்
குறிவென்றவவடியேற்களித்தாயிணைக்கூற்றின்மையாற்[வை
பொறிவென்றவர்பெறும்பேற்றையொக்குமிப்பொன்னுரு[ச்
செறிவென்றவவலியென்றோவெம்மான்முல்லைத்தீங்கரும்பே.

88

கருப்பந்தங்குங்குறியான்முல்லைவாணகதிகடொறுந்
திருப்பந்தங்குங்குமலமால்போன்றுதெரிவையரைப்
பொருப்பந்தங்குங்குமக்கொங்கையென்றோதிப்பொய்யாதொழிப்பா
யுருப்பந்தங்குங்குலியக்கலயன்றொழிமுத்தமனே.

89

தமக்கடியாகமையொன்றித்தவஞ்செய்யுந்தன்மையிலா
தமக்கடியாகமுதவாரைச்சாரத்தகுமுனக்குத்
தமக்கடியாகமறையாளர்முல்லைத்தலத்திறைவர்
தமக்கடியாகமெய்த்தொண்டுசெய்வேங்களைச்சார்வரிதே.

90

சார்வருந்திப்பியமால்கொள்வதென்னைதண்முல்லைநகர்ச்
சார்வருந்திக்குடையார்செயல்கேட்டிதகுவர்கட
மூர்வருந்திக்கெடப்புன்மூரல்கொள்ளுவரோரெருதை
யூர்வருந்திப்புனல்சூடுவராடுவரொண்ணுதவே.

91

ஒண்ணுதலங்கனைமாரிடந்தோறுமுவந்துநடம்
பண்ணுதலங்கனையக்குழைத்தார்முல்லைப்பாடியினை
யண்ணுதலங்கனையானைத்தொழலிவையன்றிநெஞ்சின்
கண்ணுதலங்கனைமுன்நீருலகிற்கருமங்களே.

92

மங்களமேவியன்முல்லைப்பிரானின்றுவைத்தனன்கா
மங்களமேவியனாட்டத்தவர்பொய்மலமதங்கன்
மங்களமேவியசெய்தெனைவாட்டுமனமினிநீ
மங்களமேவியபுன்புதன்மானவலியிழந்தே.

93

இழவாதென்போதமிழப்பித்தமுல்லைக்கிறையவனைத்
தெழவாதென்போதகங்கைக்கொண்டென்றன்மைத்துரிசுகளி
னுழவாதென்போதமெய்யன்புசெய்வீணிலுழலுமிந்தப்
பழவாதென்போதவிர்நெஞ்சேயுனக்கிதுபண்பல்லவே.

94

அல்லாக்குமாரிருணெஞ்சேதொழும்பர்க்கடித்தொழில்செ
யல்லாக்குமாரியென்றேத்தேலகிலமுமீன்றுமுதிர்
வல்லாக்குமாரிதன்பங்காளனீலவரங்கமெல்லை
யல்லாக்குமாரியமுல்லைப்பிரானடிக்கன்புசெய்யே.

95

அன்புடையாளியங்காக்குறுங்கானத்திவல்சியெனத்
தன்புடையாளியங்காக்குமதர்தனியெய்தவிவ
டுன்புடையாளியங்காக்குமொலிமுல்லைத்தோன்றலதள்
வன்புடையாளியங்காக்குமிடறன்னவல்லிருளே.

96

வல்லியம்போதகவண்டோடொலிக்கும்வளமுல்லைவாழ்
வல்லியம்போதகமாய்த்தபிரான்வரைமேலிடையோ
வல்லியம்போதகவாம்விழிதாமிந்தவார்முலையோ
வல்லியம்போதகரக்குழலாய்திருவாய்மலர்ந்தே.

97

வாயானஞ்சக்கரமால்விடையாவைத்தமுல்லைப்பிரான்
வாயானஞ்சக்கரமோதித்தொழாதவறியர்க்கெய்த
வாயானஞ்சக்கரமீதுணவேந்திமயிலைத்துறை
வாயானஞ்சக்கரவாதழலாய்வருமம்புலியே.

98

அம்பவளவளவாயெனக்கும்முல்லையாளர்வில்லி
னம்பவளவளவாம்விழியெங்கைக்குமன்புவைத்த
நம்பவளவளவாச்சொரிபாலொக்குநட்பறியாய்
நம்பவளவளவாவேதகுமிங்குநண்ணலையே.

99

நண்ணத்திருவளவானந்தவீட்டினயந்தெண்ணிடு
மெண்ணத்திருவளகத்திகழ்ந்தேகிரியிரும்பரிதி
வெண்ணத்திருவளர்கையேந்திகாணரும்வேந்தனமர்
திண்ணத்திருவளமுல்லையிற்சேர்மின்றிருத்தகவே.

100


திருமுல்லைவாயிலந்தாதி முற்றியது.
மெய்கண்டதேவர் திருவடிவாழ்க.
சிவஞானயோகிகள்திருவடிவாழ்க.


பதம் பிரிக்கப்பட்ட பாடல்கள் 

 

 

        திருச்சிற்றம்பலம்

    மாதவச் சிவஞான யோகிகள் அருளிய 
      வடதிருமுல்லைவாயில் அந்தாதி

        காப்பு

முல்லை வில் நாய! கனிந்து எம்மை ஆள்; ஒற்றிவை; புகல்வே(று)
இல்லை. வில்: நாய் அகன் நன்கு ஏனும் இல் என்று இகழல்; எனும்
சொல்லை வினாய், அகன் தைந்து, இரப்போர்க்கு அருள்; சோதி பெற்ற
முல்லை வினாயகன் முல்லை அந்தாதிக்கு முன் நிற்குமே!    (1)

        நூல்

திருத் தங்கு மா முல்லை வாயில் பிரான் இரு சே அடி நீர்த்
திருத்தம் கு மார்க்கத்தில் செல்லாமல் ஆடப்பெற்றேம் இனி மால்
திருத் தம் குமாரன் என்று ஓதிப் பிறரைப் பின்சென்று நின்று
திருத்தம், கு மாது முனிந்தாலு(ம்) நைந்து உளம் தேம்பிலமே.   (2)

தேம் கொன்றை ஆர் அணவும் சடை வாழைத் திசை அனைத்தும்
தேங்கு ஒன்றை யார் அண வல்லார் ? எமைச்சினம் செய்து பொறி
தாம் கொன்று ஐயாரணம் செய்யாது, முல்லைத் தலத்து இறைவா!
தாங்கு ஒன்று ஐ ஆரண என்று இரந்து ஏத்தும் தவம் பெறினே.   (3)

தவல் அரும் பல் கலை தேர் முல்லைவாயில் சயில வில் ஆர்
சுவலர் உம்பல் கலை தந்திடக் கொண்டவர் தூய மதி
நுவல் அரும்பு அல்கு அலை நீர் முடியாரை நுவன்று அறியா
அவலரும் பல்கலை வேண்டி, என் வீணில் அலைவதே?   (4)

அலைவனம், அந்தரம், காற்று, அங்கி, மண் எனும் ஐந்தும் அல்லாத்
தலைவனம் அந்தரங்கம் தானம் ஆ திருமுல்லை வாயில் வாழ்
தலைவன் அ மந்தரம் காட்டு(ம்) நஞ்சு உண்டு தரு விசும்பில்
கலைவு அன மந்தர் அங்காப்பினை மாற்றும் கருணை என்னே!   (5)

கருமம், மலம், கொடு மாயையும் நீக்கி, கதிர்த்து வரால்
தரும மலங்கொடு பாய் தடம் சூழ் முல்லை தன்னில் ஒன்னார்
மருமம் அலம் கொடு செற்றோன் பரச வரும் பெருமான்
அரும் அமலம் கொடு, மா மாசிலாமணி ஆண்டகையே !   (6)

கைதவ நாடகம் காட்டி அறிவைக் கமரகத்தே
பெய்து அவம் நாள் தகவு ஆ கழித்தாய், புகழ் பெற்ற தொண்டைச்
செய் தவம் நாடு அகம் முல்லைப் பிரான் பதம் சிந்தை செய்தே
நை; தவ நாடு அகமே! எங்கு உளான் எங்கள் நம்பன் என்றே   (7)

எங்கள் நம்பன் பரசு ஏர் அடியாரின் இணை மலர்த்தாள்
அங்கண் நம்பு அன்பு அரசே முல்லையாய் அருள் என்று அமரர்
தம் கணம் பன் பரசு ஏய் கரத்தான் முல்லை தன் இறை ஆம்
செங்கண் அம்பன் பர சேதனன் பாதம் என் சிந்தையதே!   (8)

சிந்தை திருக்கு மரமும், களவும், செறிந்த வஞ்ச -
கம் தைத்து இருக்கும் அரம் நேர் விழியவர் காமங்களும்
முந்தைத் திருக்குமரன் மாயமும் முடித்து ஆளும் ஒரு
விந்தைத்து !  இருக்கும் மரபு அறியா முல்லை மெய்ப்பொருளே!   (9)

பொருப்புக் குழைத்த கரத்து ஆர்வம் முல்லைப்புரத்தது; யான்
கருப்புக்கு உழைத்து அகரத்தார் நக கலங்காது அருளும்!
விருப்புக்குழை தகரத்து ஆர் மலர்க் குழல் மெல்லியல் ஆம்
மருப்புக்கு உழைத்து அகரத்து ஆர் தலைமைத்து என் வாழ்முதலே!  (10)

வாரம் படைத்த கருநீலக் கண் மயில் பாகர் அயில்
வார் அம் படைத் தகர் உவந்த கோன் தொழும் மன்னர் செய்யின்
வாரம் படைத்த கரு அறுப்பார்க்கு இடம் வண் தொழில் செய் -
வார், அம்பு அடைத்து அகருவால் குலை செய் வள முல்லையே!    (11)

முல்லைப் பதி கமம் சூல் கொண்டல் சூழ்முதுகுன்றினும் வாழ்
தில்லைப் பதி கமட(ன்) மார்பன், மூவர் திருத் தமிழின்
சொல் ஐப் பதிக மலர்த் தொடையான், தன் துணை மலர்த்தாள்
ஒல்லைப் பதிக, மனத்தே; யமன் வரும் உப்பொழுதே !    (12)

தேம் கடம்பும் திகழும் மலர்ச் சென்னி செவ் வேளைப் பெற்றோய்!
தாங்கு அடம்பு உந்தி கழுமலக் கோன் தமிழ் சூடி அடி -
யோங்கள் தம் புந்தி கழுமல் அற்று ஓங்க உயர் முல்லையாய்!
ஆங்கு அடு! அம்பு உந்து ! இகழும் மலத் தெவ் அற ஆணை கொண்டே!   (13)

கொண்டல் அங்கு அண் தருமால் போலு(ம்) முல்லைக் குழகர் முன்னாள்
விண் தலம் கண்டு அருமால் உழந்துஏங்க, வெகுண்டு எழு நஞ்சு
உண்டு அலம் கண்டர் உமாபதியார் முடியூடு மதித்
துண்டு அலங்கு அண்டரும் ஆ! ஆ!! எனைத் தொண்டு கொண்டனரே!!!   (14)

கொண்டான் அனங்கன் அஞ்ச கொடும் பார்வை குரைகடல் நஞ்(சு)
உண்டான் அனம், கனம், வாவியும், காவும் உலாவும் முல்லைக்
கண், தான், அனம், கனகம், புத்தி முத்தியும் காட்ட, அஞ்சு
பிண்ட ஆனனம் கனல் கண்ணோடு வாழும் பெருமை என்னே!    (15)

பெரும் புங்கவரும் மகிழ்ந்து ஏத்து முல்லைப் பெம்மான் களவே
விரும்பும் கவரும் மதியாளர் நட்பை விழையும் வெறும்
துரும்பும் கவரும் மனம் இது தீர்த்து என் துரிசு உளத்தே
அரும்பு உங்கு அவரும் அவைகளும் ஆய அரும் பொருளே!   (16)

அருவினையேனை எவர் புரப்பார் என்று அழுங்கி நெஞ்சே!
கருவில் நையேல் நைகரம் இன்றி தென் முல்லைக் காவலன் தாள்
மருவினை ஏனை வினைகளும் நீங்கினை; மாற்றினை இவ்
உருவினை; ஏன் ஐயுறுதி இனி? உனக்கு என் குறையே?    (17)

குறை மதியாது அவம் ஆற்றுநர் கேண்மை வெம்கோளர் பொய்மை
மறை மதி; ஆ! தவம் ஆமோ! பரமத மார்க்கம் இந்த
மிறை மதியா தவ மாதவர் வாழ் முல்லை மேவும் அனல்
நிறை மதி, ஆதவ(ம்), மால்விழியாரை நினை நெஞ்சமே!   (18)

நெஞ்சு அகம் கோடி மறமே பயின்று நல் நீர்மை இன்றி
வஞ்சகம் கோடி செய்தாலும் பொறுத்தருள்வாய் ஐயனே!
அம் சகம் கோள் திரிந்து உம்பர் குன்றாமல் அமுது செய்த
நஞ்ச! கங்கு ஓடி வளை முத்தம் ஈ முல்லை நாயகனே!   (19)

நாய் அகம் கைக்கு இளை தாம்தெங்கங்காய் உறின் நாய் என் செயும்?
தூய கங்கை கிளை மீனம் எல்லாம் அச் சுவை கொள்ளுமோ?
தீ அகம் கைக்கு இளையார் சேர்கிலா முல்லைத் திண்பதி எந் -
தாய்! அகம் கைக்கிளையால் பயன் கோடல் அத் தன்மையதே!    (20)

தன் நகர் ஆவது தென் முல்லையே தன்பணி மணிகள்
மின் நகு அரா; வதுவைப் பெண் கொடியிடை ; வெள்விடை நஞ்சு
அன்ன கரா அது செற்றது ஆம்; அன்பர் நால்வர்க்கு அறம்
சொன்ன கரா, அதுலா! என ஏத்தும் நம் தோன்றலுக்கே!   (21)

தோன்றற்கு அரிய பொருள் எளிதே வந்து தோன்றி நற (வு)
ஊன்று, அல் கரிய குழல் மாதொடு முல்லையுள் இருந்து
கூன் தற்கர் அறியா முடிபு உண்மை கூறி என்னை
ஏன்றற்கு அரி, அயன், ஏனோர், அழுக்கறுத்து என் பயனே?   (22)

என்பதி கம்தனை ஏந்தும் குடங்கை இறைவன் அரு(ள்)
என்பது இகந்தனை, முல்லையில் சேர்ந்திலை இத் துடக்கு ஆ(ம்)
என்பு அதிகம் தனையன் புவிபொன் பொருள் என்று அழிவ(து)
என்? பதிகம் தனை ஐயகொல்லோ! புகல் ஏழை நெஞ்சே !  (23)

சேவடி வானவர் ஏத்தத் திசைமுகன் தேர் செலுத்தச்
சேவடி வான் அரி தாங்கப் புரம் செற்ற தென் முல்லையாய்!
சே அடி வானரம் மேவும் கயிலைச் சிலம்பின் அர -
சே! வடி, வான், நறும் தீந்தமிழ் பாடவும் செய்தருளே!   (24)

அருள் ஆதரித்து இரந்து அன்பு செய்வேங்கட்கு அமருலகு ஓர்
பொருளா? தரித்திரம் தான் நிற்குமோ? முல்லைப் பொன்னை உள்ளா
மருள் ஆதர் இத் திரகம் தேர்ந்து அறியார் அம் மடவரையே!
வெருளாது அரித்திர் அந்தோ! வினைகாள்! இங்கு மேவு அரிதே !  (25)

        நற்றாய் இரங்கல்

மேவரும் தென்றலுக்கு ஆற்றாது. என்மான் வெம்பி நைந்து தனி -
யே வருந்து என்றனக்கு ஆர் துணை ஆவர்? என்று ஏங்கி இந்த
நோவு அருந்து என்று அயன் ஏன் விதித்தான் என்று நொந்து அழும் ஆல்
பா அரும் தென் தமிழ் முல்லைப் பிரான் அருள் பாலிப்பையே!    (26)

    அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல்

பால், இ அடகு, அரை, கோடியும், ஒன்று எனப்பார்ப்பவர் வாழ்
பாலி வடகரை முல்லைப் பிரான் பழிதீர அருள்
பாலி! வடகு அரைவேல் எமர், என் நினைப்பர் எனும் ஐம் -
பால் இவள், தகரை அன்னையர் நேர்ந்தும் பசப்பு உறினே?    (27)

    இரவுக்குறி நேரும் பாங்கி, தலைவி பருவரல் உரைத்தல்

உறும் ஆசு இலாம் மண் இ மாயை என்று கொள் உயிர்க்கு இவற்றைத்
தெறு(ம்) மாசிலாமணி வள்ளல் வெற்பா! உனைத்தேடி கண்ணீர்
அறுமா? சிலாமணி வைத்த மண்பாவை அன்னேன் எனும் சீர்
பெறும் ஆசில ஆ(ம்)மணி கேட்கு(ம்) முன் சோரும் இப்பேதை இன்றே   (28)

        மாலை விருப்பு உரைத்தல்

இன்று அகலம் கலவாது ஒழிந்தாலும், எடுத்த சிலை
குன்ற! கலங்கலம்; நன் கொன்றை யேனும் கொடுத்தி, அன்றேல்
மன்ற! கலம், கலனே தூணி, கண்புனல் வாரவிடா
நின்று அகலம்; கலர் காணாத முல்லை நிருமலனே!   (29)

நிருதி, யமன், அனல், இந்திரன் ஆதியர் நேர்ந்து இறைஞ்சிக்
கருதிய மனன் அர்ச்சிக்க நல்கும் கடிமுல்லைத் தலை -
வர் உதிய மனன் நல்கு ஆதியுலா வரை வாழ்த்துவம்; இம் -
பர் உதியம், மனல் நயப்பேம் அலம், மலப் பாழ்ங்குழிக்கே.   (30)

        தலைவன் நீடத் தலைவி வருந்தல்

"கேண்மையில் நேரிய நேர்வேம் இருவரும் கேழ்முளரித்
தாள் மையில் நேர் இயல் " என்று அகன்றார். இனிச் சார்வர் கொல்ஆம்!
மாண்மையின் நேரியன் மைந்தனுக்கா வளர்முல்லையில் வந்(து)
ஆள் மையின ஏர் இயல் மாமிடற்றான் தன் அருவரைக்கே.    (31)

அருவருக்கத் தனியே மலக் கூட்டில் அழுந்தும் என்றன்
கரு, அருக்கத்தனிமாலை முடித்தவன் காத்தளிக்கும்
இருவருக்கு அத்தன், இமாசலை கேள்வன், எண் அன்பர் என்னும்
ஒரு வருக்கத்தன். இ நாள் அறுத்தான் முல்லையூரில் வந்தே  (32)

    சிவபெருமானைப் பவனியில் கண்டு மால் கொண்ட மாது சொல்லியது

வந்தனையால் தமவாக் கொண்டு தாளிணை வாழ்த்தும் மெய்த்த -
வம் தன் ஐ ஆற்று அமர்வார்க்கு அருள்வான், தரும் மையல் கொண்டு
வந்தனை ஆல் தமர் காணில் என்னாம் என்று வைது எனைத் தை -
வந்து அனை ஆற்ற மருண்டேன்; அருள் முல்லை வான்பொருளே!   (33)

        தலைவி நெஞ்சொடு புலத்தல்

பொருத விசாகர் அம் சத்தியும், கும்பனும், பொற்பு அழிக்க
விருது அவி சாகரம் தானும் வருத்தும் மெய் அன்பர் உள்ளம்
ஒரு தவிசு ஆகரம் தென்முல்லை ஆ உடையார் அருளார்;
இரு, தவி, சா, கர. நெஞ்சே! அல்லால் செயல் யாது உனக்கே!   (34)

யாதவ, மாதவன், ஆரணனார், இன்னும் நாடி அறி
யாதவ! மாது அவள் தன்பால் வளர் எழில் முல்லையின் ஐ -
யா! தவமா, தவமன்றோ! என் நேர் இரங்காது இருத்தல்
யாது அவம்? மாதவர் வெற்பா! அறிய இயம்புகவே!   (35)

        தலைவன் நீடத் தலைவி வருந்தல்

இயம்புக வேத அனையாம் மந்திரப் பொருள் என்று சிறைக்
கயம்புக வேதனை வீழ்த்தோன் புகழ் முல்லைக்கண் இருவர்
பயம்புக ஏ தனை நாட அரிதா வளர் பண்ணவன் கா -
வி அம்பு உக வேதனை உற்றேற்கு அருள் மிக வைப்பது என்றே?   (36)

        பாங்கி, தலைவி குறிப்பறிதல்

வைப்பது மத்தகம் மீது ஓர் விழி; முல்லை மா நகர் வ-
சிப்பது; மத்த கயத்து உரி போர்ப்பது; தேவி சர -
ணப்பதுமத்து அகம் வைப்பார்க்கு அறுப்பது நான்கு, இரண்டு,
முப்பதும், அத்தகவாளர்க்கு என்னோ மயல் மூண்டதுவே?    (37)

மூண்ட இக் காமன் தனக்கு அம்பு அலர், மொழி நாண் அரி, வில்
நீண்ட இக்கு ஆம்; அன்ன வைத்து, அமைபோர் நெடுங்காமம் அகத்(து)
ஈண்டு அவிக்காம் மன் வருத்தாது எமைக் கொக்கு இறால் மிடற்றில்
தீண்ட விக்காமல் மிசை தடம் சூழ் முல்லைச் சிற்பரனே!   (38)

பரம்பரன், பண்டரங்கன். முல்லைவாணன், எண்பாற் குணமு(ம்)
நிரம்பு அர(ன்) பண்டு அரங்கன் தேட நீண்ட நிமலன் எண்திக் (கு)
ஒர் அம்பரன் பண்தரம் கண்டு ஓதும் பத்திர உத்தம யாழ்
நரம்பு அர் அன்பு அண்டர் அங்கம் சேர் அருட்கடல் நம் தெய்வமே!   (39)

நந்தம் அருமந்த மெய் வாழ்வும் மற்றை நலங்களும் தி(க்)
அந்தம் மரும் அந்த வான் புகழ் சேர் முல்லைக்கண் இருந்த
பந்து அமரும் அந்தம் மெல்விரல் பாகன் பகைவர் உரம்
சிந்த மருமம் தனைப் போழும் சூலத் திருக்கரனே!   (40)

திருமுல்லைவாயில் மருவும் எந்தாய்! இளம் சேய்க்கு அழகு
தரும் முலை வாயில் வைத்தால் அன்றி உண்ணும் தகுதி உண்டோ?
அரும் உலைவு ஆய் இனல் பட்டு அழுந்தாது எமை ஆண்டு மன(ம்)
இரும் உலை வாய் இன்மெழுகு ஆய் உருகச் செய்து ஏன்றுகொள்ளே!   (41)

        கலவியில் மகிழ்தல்

கொள்ளும் திக் அம்பரம் முல்லைப் பிரான், பைங் குழவி நிலா
வெள் உந்தி கம் பரவும் சடையான், வெற்பின் நீர்ச்சுழியைத்
தள் உந்தி கம்பு அரம் நேர் களம் கண்ணி தரு நலத்திற்கு
உள் உந்து இகம், பரம் எல்லாம் மதிப்பினும் ஒப்பல்லவே!   (42)

அல்லி அம் தாமரையாள் இடம் ஓர் பொழுது அவ் வளம் போய்
வல்லியம் தாம் மரை ஆள் இடம் ஆம் அதை வாழ்த்திடன்மின்
பல் இயம் தாம் அரையாமத்திலும் கண்படா முல்லையார்ப்
புல்லி அம் தாமரை ஆசையின் வாழ்த்தும் புலவர்களே!    (43)

        இடம் பெற்றுத் தழால்

புலத்து அலைவு ஆ இனி ஆற்றேம் என்று எய்துநர் புந்தி வெம்தீப்
புலத்தலை வாவினும் கை கொடுப்பார் முல்லைப் பூவை விடு
புலத்தலை; வாவி நல்நீர் விளையாடிப் புணருதும் வா
புலத்தலைவா இங்ஙன் என்று அருள்வாய் மலர்ப் பூங்கொடியே    (44)

        கொடிக் குறி பார்த்தல்

கொடி ஆனை அந்த நல் ஊரனை ஆண்ட நம் கோனை மதக் -
கொடியானை அந்தகனைச் சீறு இ முல்லையுள் கோவை முல்லைக்
கொடியான் ஐயம் தப ஆண்டானை ஈண்டு உறற்கு கரைந்தால்
கொடியான் ஐ அந்தம் உள்ளாய்க்கு இடுவேன் கொளும் ஊன் பலியே   (45)

        பரத்தையைப் பழித்தல்

ஊன் காள் அத்திக்கு சுவை உளதோ திண் உடல் கறைக்கால்
நான்கு ஆள் அத்திக்குத் தெளிவு உளதோ முல்லை நாயகன் எம்
கோன் காளத்திக்குத் தரன் நலம் யான் அறி கொள்கையல்லால்
மான் காள் அத்திக்கு யாராவர் போலும் மற்று எங்கையரே,  (46)

கைக்க இகம் அகம் நைந்து அழுங்கிக் கலங்காது அருள் சேர்
கைக்கு அவிக, மகவு ஆதியில் ஆசை கருத்து உள்ளுக,
கைக் கவி கமகன் ஆதியர் வாழ் முல்லை காவலன் புன்
கை கவிகமகவும் கொடு பாய் கழுக்குன்றனையே.   (47)

குன்றத்து அம் சாதி மலர்க் கூந்தல் மாது இடம் கொண்டு இருந்த -
னன்; தத்தம் சாதி வழா முல்லைவாணன் நடித்தனன் தென்
மன்றத்து; அஞ்சாதி நெஞ்சே! நமக்கு என் குறை? வாழ்வுபெற்றேம்.
பின் தத்தம்; சா; திரிமாயாய் !  என்றே வெற்றி பேசுவமே.   (48)

    புனல் தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்

"பேசித் திருந்த நம்முல்லையில் வந்து எமைப் பேணித் தொண்டீர்,
பூசித்திர்; உந்தம் வினை தீர்த்தும்" என்று அருள் பொற்பர் வெற்பில்
நேசித்து இரும் தண் புனல் ஈர்க்கும்போது, உற்று நேர்ந்து எடுத்தார்;
ஆ! சித்து இருந்தபடி போல் ஒருவர் 'அஞ்சாதி' என்றே!   (49)

சாதிப்பு அரிய தவத்தார்க்கு முல்லைத் தலத்தின் உண்மை
போதிப்பர், இயல் நலம் பாடுதும்; புல்லறிவு பரம் -
பாது, இப்பர் இயம் மனைதோறும் வண்டு பகர்ந்ததும் முன்
காது இப் பரிய களிற்று உரி போர்த்ததும் கட்டுரைத்தே.   (50)

கட்டோம்; புதல் எனக் காமாதி ஆறும் கரிசு அறுத்தோ (ம்)
உள் தோம் புதவு திறந்து. இன்ப வீடு புக்கு உச்சரித்தோம்
சிட்டோம்; புதல்வி, மண், ஓர், உந்தி, கஞ்சம், தெளிவின் முன் பின்
விட்டு ஓம்புதல் உறும் நள்எழுத்தால் முல்லை மேவப்பெற்றே.    (51)

        நற்றாய் இரங்கல்

பெற்ற வரம் பலவும் குன்ற யான் பிணை போல் வெருள
உற்றவர் அம்பல் அங்கு ஓத, என் பேதை ஒரு தனியே
முற்ற வரம்பு அல செய்து அகன்றாள்; என்னை! முல்லைப் பிரான்
கல்தவர், அம்பலவன், பணியாரின் கடும் சுரமே!   (52)

கடுத்தி: அம்பு ஆம் பல் மலரால் நையாது. கவலை நெஞ்சே!
விடுத்து, இயம்பு ஆம்பல் நல்வாயால் புகழ்ந்து இன்று மேவுதும்; உட்
படுத்தி அம்பு, ஆம்பல், உரி, பிறை, மான், வெம் பரசொடும் து-
வள் துத்தி, அம் பாம்பு, அணி முல்லையுள் அம்பல வாணனையே.    (53)

அம்பு அல வாள் நல் மடவார் விழி என்று அழிந்து உழலும்
அம்பல ஆண் அங்கனை அலி ஆகி அமர்ந்து அருளும்
அம்பல ஆணன் திருமுல்லைவாயில் அழகன் தில்லை
அம்பலவாணன் வழியில் நில்லா என் அறிவுகளே.    (54)

"அறிவு அறி ஆகம் எது ஆகம்; அல்லாத என் ஆம்?
குறி வறியா கடி முல்லையில் சேர்; புழுக்கூட்டை விண்டு (உ)
தறு; இவறி யாகம் செய், அன்பால் எனை அர்ச்சனை செய், உன்பால்
செறிவல்; தியாகம் தருவல்' என்று ஆண்டனன் சின்மயனே.   (55)

மயங்காது வரையும் பொய்ப் பொருள் யாவும் வரையச் செய், அ -
பயம், கா, துவரையுள் மால் போற்றும் முல்லைநம்பா, விழிப் பங் -
கயம் காதுவரையும் நீள் சீர்க் கொடியிடை காதல, சூர்
சயம் காது உவரையும் ஐங்கரனாரையும் தந்தவனே!   (56)

தவத்துக்கு அணிகலன்: நட்டோன் என்று ஓரில், தவறும்; அவை
பவத்துக்கு அணிகலன், நெஞ்சே! இவை விடப் பார் வடிவ
நவத்துக்கண் இகலன் மா ஆக்கும் முல்லையினான் அரி ஆ -
ய வத்துக்கு அணிகலந்து ஓர்பால் மருவும் எம் அண்ணலையே!    (57)

"அண்ணல் அந்தோ! யமனை வீட்டி முல்லையில் ஆர்ந்ததுவும்,
எண்ணலம் தோயம் முடித்ததும், மற்று எம் இறைவியைப் போல்
உள் நலம் தோய விழைந்து, இரந்து, ஏங்கி, உளைந்து, நம்தம்
பெண் நலம் தோய எளிவந்து அருளும், மெய்ப் பேறு அன்றியே.    (58)

"அன்றில் நம் காதரமாய் நின்று கத்தும் அலைகடல் எம்
முன் தினம் காது அரவத்துக்கு அளவு இலை. மூரி மதன்
கன்றின் அங்கு ஆதரவு ஆருளரோ! இரு கண்ணும் துஞ்சா
இன்று இனம் கா; தரம் மா முல்லை வாண, மற்று எங்களையே''    (59)

    தலைவன்தனக்குத் தலைவி நிலை கூறல்

"கிளை கண்டன் அம்புயம் மா முல்லைக் கோன் வெற்ப! காதல் மிக்க
கிளை கண்டனம், புயல் மேவும் தட வரைக்கீழ் ஒரு சார்
விளை கண்டு அனம், புயங்கம், சேல், வல் வேய் சொல் நடை நிதம்பம்
திளை கண், தனம், புயம் ஆக்கொண்டு நிற்கும் ஓர் தீங்கரும்பே! "    (60)

தீங்கு அரும்பும் கவரு ஆடிப் பயனிலை செப்பில், மின்னார்
தாம், கரும்பும், கவலாக் கனியும், எனச் சாற்றி அந்தோ!
நீங்க அரும், புங்கவசை உறுவீர் முல்லை நீள் நகரின்
பாங்கரும், புங்கவரும் போற்றும் ஈசனைப் பாடுமினே'',   (61)

பாடகம் அன்ன வரும்துயர் தீரப் பரன் புகழ் வாய்
பாடு அகம்! அன்ன அரும் குணம்போல் நலம் பார்த்து எடுத்துப்
பாடு; அகம் மன்ன அருளான், தன்பால் பைங்கொடியிடை என் -
பாள் தக மன்னவரும் போற்ற வாழ் முல்லைப் பண்ணவனே!   (62)

பண்ணகம் காரிகை பால் முல்லைவாய் உம் பதிந்திருந்தோய்
வண்ணகம் காரிகை மற்றும் என்போல் பகர்வார் இலை என்று
எண் அகங்காரி கைதூவாது இயற்றும் இருவினையாம்
திண் நகம் காரி கை தீண்டும் எந்தாய் கெடச் செய்தருளே.   (63)

செய் தவம், ஆய், அத்தன், செல்வமும் நீ எனச் சிந்தை செய்யா (து)
எய்து அவம் மாயத் தன்மங்களை மாற்றி இயற்றும் என்றன்
கை தவம் மாயத் தன்மைக்கு ஓர் அளவு இல்லை. கண்ணருளால்
பொய் தவ மாயத்தன் முல்லை உள்ளாய் நலம் போதிப்பையே.    (64)

திப்பியம் ஆவடு தண் துறைக் கண்ணும் திருந்துநிலை
தப்பிய மாவடுத் தீர் முல்லை ஊரினும் சந்தம் முலை
அப்பிய மாவடு வார் கண்ணி பாகன் அமர்ந்து புகழ்
பப்பி அமா அடு நாமம் ஒன்றாக் கொண்டு பாரிப்பதே.   (65)

பார் அகம் தைக்கும் அரும் புகழ் சேர் முல்லைப் பால அருள்
பார் அகந்தைக் கு மதியார் பின் சென்று தண் பாலி நதிப்
பார கந்தைக்கும் வழியின்றி வாடும் பரிசு நன்றோ?
பார கந்தைக் குமைக்கும் கயம் செற்ற பராபரனே!   (66)

பரங்கிரி ஆவிகள் குழ் முல்லை போல் பரிந்து என் உளம் ஆம்
அரங்கு இரியா விடையார் அருள் உண்மை அறிவின் நின்று அ -
வர் அங்கிரி ஆவியின் உள்ளே அழுத்தும் வகை அறியேன்
சிரம் கிரியா விதி ஆற்றும் செல்லேன் உய்யும் செய்கை என்னே?   (67)

செய் வசித்து ஆம் தமிழ் முல்லையுள் ஈசசெவ்வே: ம, ந, ய
ஐ வ, சி, த்தாம், தம் பொருள் ஐந்து உடைய; அவற்று இரண்டு
நைவ, சித்துஆம் தவிர் மூன்றும் ஒன்று ஒன்றின் நணுகும் என்னும்
சைவ சித்தாந்த நெறி உபதேசம் தனை எமக்கே   (68)

        கற்றறி பாங்கன் கழறல்

தனை, அரி, ஆனை நான்கானும், தேடிடத் தாள் முடி ஆம்
சினை அரியான், அனம் ஆர் தடம் சூழ் முல்லைச் சிற்பரன் என்
வினை அரி ஆனன் அருள் சேர்ந்தும் நீ ஒரு மின்னின் விழி
யின் ஐ அரியான் அனல் நேர் மெழுகாயின் என் ஆம் பிரிதே?    (69)

தேவரும் தானவரும் காரி கண்டு அஞ்சித் தீவினையா -
னேவரும் "தான்', 'அவன் ஆம் பகுப்பு அற்றவர் நேர் முல்லை நம் -
பா! வருந்தானவ என்று ஓலிடப் பண்டு அருந்தியும் அந் -
தோ! வருந்தா நவம் ஈது அறியார் சிலர் தொண்டர்களே!   (70)

தொண்டை அ நாள் துகள் தீர செய்யாமல் துவர் இதழ் வாய்த்
தொண்டை அல் நாடும் மலர்க் கூந்தலார்க்கு உடைந்தும் பிழைத்தேன்
தொண்டையன் நாடுபுகழ் ஓங்கு முல்லையில் தோன்றும் உருத்
தொண்டு ஐயன் ஆடும் மலர் அடிக்கீழ் இன்று தொண்டு செய்தே    (71)

செய் உடை அல்குலைக் காட்டி மயக்குநர் தீமை கெடச்
செய் உடையல்; குலைப்பால் வளை வெள் நித்திலம் பரப்பும்
செய் உடை அல்கு உலையா வளம் முல்லையில் சேர்ந்து பகர்
செய்யுள், தையல், குலைத் தாரானைப் பால் வைத்த தேவை நெஞ்சே!   (72)

நெஞ்சு அலமந்து இரங்கக் கூற்றம் தோன்றினும் நெக்கு உருகி
அஞ்சலம்; மந்திரம் தான் முதல் ஆறும் அற்றேம்; அறுத்தேம்
சஞ்சலம்; அம்திரம் பெற்று உள முல்லைத் தலத்து அழகு
துஞ்சல் அ மந்திரம் தன்னில் எம் கோனைத் துதிக்கப் பெற்றே!    (73)

பெற்றத்து இருந்து உறுவாழ்வு எமக்கு ஈயப் பெருகு வளம்
முற்றத்திருந்துறும் முல்லையின் முல்லையின் முல்லையில் வாழ்
நல் தத்து இரும் துறு நீர் வேணியீர்! நள்ளும் அன்பர் என்னும்
சுற்றத்தீர் ! உந்து உறுகண் தீர்த்து எமைத் தொண்டு கொள்ளுமினே!  (74)

மின் பங்கு அம்பு ஒன்று உந்து மேரு வில்லோடு அமர் வேதிய என் -
றன் பங்கம் பொன்றும் துறை காட்டி முத்தியில் சார அருள்
அன்பு அங்கம்; பொன் துந்துபி ஓசை என்றும் அறா முல்லையாய்!
இன்பம் கம்பு ஒன்றும் துவர் கையற்கு ஈந்தருளு என் அரசே!   (75)

அரங்கம் திரு அம்பலம் முக்கணுக்கு அமர்வு இடம் சீர்
இரங்கு அம் திரு வம்பு அலர்தொறும் வாழ இலங்கும் பிர-
மரம் கந்திருவம் பல பாடும் வாவிகள் மல்கு முல்லைப்-
புரம் கந்து இரு வம்பு அலங்கும் கொடியிடைப் பூண்முலையே!    (76)

பூண்டிலம் சித்தத்து மெய் அன்பு எவ்வாறு இனிப் பொன், பெண், மண்ஆம்
தூண்டில் அஞ்சித் தத்துவம் கடந்து ஆனந்தம் தோய்வுறல் ஊர்
பாண்டில் அம்சித்து அத்துவாத்துடக்கு ஒக்கப் பறித்து அருள்வாய்!
ஆண்டு இலஞ்சித் தத்துநீர் புடைசூழ் முல்லை அம்கணனே!   (77)

அங்கு அங்கு அர அர என்று ஓதம்போல் ஒலியார்ப்ப அன்பர்
சங்கம் கரகரகத்தோர் துதிக்கத் தண் நீற்றின் ஒளி
பொங்கு அங்கர் அகரம் முல்லையுள்ளார் எனைப் பொத்திக்கொண்ட
பங்கம் கரகர நின்றால் உனைப் பற்றிக் கொல்லுவரே!    (78)

பற்றிக் கொல்லாது ஒழிவேனோ? மலப்பாவம் மறம்
கற்று இக் கொல் ஆர் உலை வேல் கண்ணி பால் கவர் முல்லைப் பிரான்
பெற்றிக்கு ஒவ்வாதவர் போல் என்றனை எண்ணும் பேதை எண்ணம்
முற்றிக் கொல்லாம் வருகின்றனை, பார் இன்று என் முன்னர் வந்தே. (79)

வந்தியன் தேவரை நின் அன்றி யான் முல்லைவாண என்னோ
வந்து இயன்றே வரையாது அருளாமை? மண் முற்றும் பெற்றும்
வந்தி அன்றே? வரை மா மாது நீயும் அவ்வாறு நின் செவ் -
வந்தி அன்றே வரைவாட்கு அரித்தான் கெட வைத்தவனே!   (80)

        நற்றாய் இரங்கல்

வைத் தலை வாளி நிகர் விழியாள் மதன் அம்பு உடல் சு-
வைத்து அலைவாள் இனி ஆற்றகில்லாள் மன்னச் செய்தி அருள்
வைத்து அலை வாள் இனிது ஆர் முல்லைவாண மதிக்குடைக் கோ
வைத் தலை வாளினில் ஏற்று அன்றி சாந்தம் வராது இவட்கே.   (81)

    பாங்கி, தலைமகளது அவயவத்து அருமை சாற்றல்

வட்காத கைதவர் ஊர் எரித்தாய் !  உன்னை வாஞ்சித்த இ -
வட்கு ஆதகை தவமிக்கோர் புகழ் மணி வார்த்தை நிறை
உட்காத கைதவ வாணர்கள் வாழ் முல்லை உத்தமனே
உட்காத கைதவன் கைப்பிரம்பால் அடி உண்டவனே!   (82)

உண்டாயின் நந்த மயல் செய்வது என்? இனி ஓடு நஞ்சம்
உண் தாயின் நம் தமது ஆண்டவன் முல்லை உறார் உறும் புன்
கண் தாயினம்; தமர்போல் வந்து எம்மான் கண்ணருள் புரிந்தான்
கண்டாய்!  இனம் தமமே! உனக்கு ஈங்கு என்ன காரியமே?   (83)

மேதக்க சிந்தனைத்தாபதர் வாழ் முல்லை மேவு நம்ப!
வாதக்க சிந்தனைத்தா! வீரம் என்று அட்டு மன்மதனைக்
காது அக்க சிந்து அனைத்தும் குடி ஆர்முடி கண்ணுதல் என்று
ஓதக் கசிந்தனைக்கு என் நெஞ்சமே குறை ஓதுதியே.   (84)

துதிப்பு அரும்தாது அவிழ் பூம்பொய்கை சூழ்முல்லைத் தொல்நகர் வாழ்
மதிப்பரும் தாதகி, கொன்றைச் சடாதர வான் இயங்கும்
கதிப் பருந்து ஆதரவாய் என் உடம்பில் கசியும் புலால்
குதிப்பு அருந்தாத முன் வந்து என்றனைத் தொண்டு கொண்டருளே    (85)

அரும் துதி, யான் அன்பில் ஏத்த, வைத்தார் அருள் கற்பின் நலம்
அருந்துதி யான் அம்புவிக்கு அளித்தார் அருளார் அமுதை
அருந்து தியானம் புரி; மனமே! விரைந்து ஆள்வர் எம் ஐ-
யர் உந்துதி ஆல் நன்கு அவர் முல்லைக்கே செல்லும் அவ் வண்ணமே   (86)

எண்ணப்படி கடியாது அன்பர்க்கு ஈந்து எழில் முல்லையினும்
கண்ணப்ப அடிகள் தியானத்தும் தோன்றும் மிக்கான் கழல் கீழ்
நண்ண படி கடி நெஞ்சே அவன் நம் பிழை எண்ணினும்
தண் அப்பு அடி கடிது ஆறுதல் போலும் அத் தன்மையனே.   (87)

அத்தன் மை ஆம் தெரியல் குழலார் அமர் முல்லை நில -
யத்தன் மையார்ந்து எரிமூழ்காமல் உண்மை அரு உருக்கா -
ரத்து அல் மை ஆம் தெரிய குருவாய் வந்து அனைத்தும் அல்லா
அத் தன்மை ஆம் தெரிவை பாகத்தாம் அறி என்றனனே.   (88)

            புறம் காட்டல்

அறிவு என்று அவ வழிச் செல்லார் தமையும் அடக்கும் கண்ணாய்
குறிவென் தவ அடியேற்கு அளித்தாய் இணைக்கூறு இன்மையால்
பொறி வென்ற அவ் அவர் பெறும் பேற்றை ஒக்கும் இப்பொன் உருவைச்
செறிவு என் தவவலி என்றோ எம் மான் முல்லைத் தீங்கரும்பே.    (89)

 கருப்பம் தங்கும் குறியால் முல்லை வாண கதிகள் தொறும்
திருப்பந்து அங்கு உங்கும் அலமரல் போன்று தெரிவையரைப்
பொருப்பு அந்தம் குங்குமக்கொங்கை என்று ஓதிப் பொய்யாது ஒழிப்பாய்
உருப்பந்தம் குங்கிலியக் கலயன் தொழும் உத்தமனே.   (90)

தமக் கடி யா கமை ஒன்றித் தவம் செய்யும் தன்மை இலா -
தமக்கள் தியாகம் உதவாரைச் சாரத் தகும் உனக்கு உத் -
தமக் கடி யாகம் மறையாளர் முல்லைத் தலத்து இறைவர்
தமக்கு அடியாக மெய்த் தொண்டு செய்வேங்களைச் சார்வரிதே.   (91)

            நற்றாய் கூற்று

சார்வு அரும் திப்பியம் மால் கொள்வது என்னை? தண் முல்லைநகர்ச்
சார்வரும் திக்கு உடையார் செயல் கேட்டி; தகுவர்கள் தம்
ஊர் வருந்திக் கெடப் புன்மூரல் கொள்ளுவர் ஓர் எருதை
ஊர்வர், உந்தி புனல் சூடுவர், ஆடுவர், ஒள் நுதலே.   (92)

ஒள் நுதல் அங்கனை மார் இடந்தோறும் உவந்து நடம்
பண்ணுதல் அம் கல் நையக் குழைத்து ஆர் முல்லைப் பாடியினை
அண்ணுதல் அங்கு அனையானைத் தொழல் இவை அன்றி நெஞ்சின் -
கண் நுதலம்; கனை முந்நீர் உலகில் கருமங்களே.   (93)

மங்களமே வியன் முல்லைப் பிரான் இன்று வைத்தனன்; கா -
மங்கள் ஏ இயல் நாட்டத்தவர் பொய் மலம் மதம் கன்-
மம் களம் மேவிய செய்து எனை வாட்டும் மனம் இனி நீ
மங்கு! அளம் மேவிய புன் புதல் மான வலி இழந்தே!   (94)

இழவாது, என் போதம் இழப்பித்த முல்லைக்கு இறைவனைத்
தொழவா; தென்போது அகம் கைக் கொண்டு என் தன்மைத் துரிசுகளின்
உழவாது என்பு ஓத மெய்யன்பு செய்; வீணில் உழலும் இந்தப்
பழவாது என்? போ, தவிர் நெஞ்சே உனக்கு இது பண்பல்லவே.    (95)

அல்லாக்கும் ஆர் இருள் நெஞ்சே: தொழும்பர்க்கு அடித் தொழில் செய்
யல்; 'ஆ' 'கு' 'மாரி' என்று ஏத்தேல்: அகிலமும் ஈன்றும் முதிர்வு
அல்லாக் குமாரி தன் பங்கு ஆளன், நீல அரங்கம் எல்லை
அல் ஆக்கும் ஆரியம் முல்லைப் பிரான் அடிக்கு அன்பு செய்யே !  (96)

        இரவு வரல் விலக்கல்

அன்பு உடை ஆள் இயங்காக் குறும் கான் அத்தி வல்சி எனத்
தன்புடை யாளி அங்காக்கும் அதர் தனி எய்த இவள்
துன்புடையாள் இயம் காக்கும் ஒலி முல்லைத் தோன்றல் அதள்
வன்பு உடை ஆளி அங்கு ஆக்கும் மிடறு அன்ன அல் இருளே.    (97)

        கிளவி வேட்டல்

வல் இயம் போது அகம் வண்டோடு ஒலிக்கும் வளம் முல்லைவாழ்
வல்லியம் போதகம் மாய்த்த பிரான் வரைமேல் இடையோ
வல்லி அம்போ? தகவு ஆம் விழி தாம் இந்த வார்முலையோ
வல் இயம்பு ஓதகரக் குழலாய் திருவாய் மலர்ந்தே.   (98)

வா யானம் சக்கரம் மால் விடை ஆ வைத்த முல்லைப் பிரான்!
வாயான் அஞ்சு அக்கரம் ஓதித் தொழாத வறியர்க்கு எய்த
வாயான், நஞ்சு அக்கரமீது உண ஏந்தி மயிலைத்துறை -
வா, யான் அஞ்சக் கரவாது அழலாய் வரும் அம்புலியே!    (99)

        அணைந்த வழிப் புலத்தல்

அம் பவள வள வாய் எனக்கும் முல்லையாளர் வில்லில்
அம்பு அவளவு அள் அவாம் விழி எங்கைக்கும் அன்பு வைத்த
நம்ப!  அளவளவாச் சொரி பால் ஒக்கும் நட்பு அறியாய்,
நம்ப, அவள் வள் அவாவே தகும் இங்கு நண்ணலையே.    (100)

நண்ணத்திரு வள ஆனந்த வீட்டின் நயந்து எண்ணிடும்
எண்ணத்திர்! உவளகத்து இகழ்ந்து ஏகி, இரும் பரிதி
வெள்நத்து இருவளர் கைஏந்தி காண அரும் வேந்தன் அமர்
திண்ணத்து இருவளம் முல்லையில் சேர் மின் திருத் தகவே.   (101)

        முற்றும்.

        திருச்சிற்றம்பலம்

 

Related Content

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம்