logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)

அப்பய்ய தீக்ஷிதர் அருளிய சிவதத்துவவிவேகம்

சிவஞான சுவாமிகள் மொழிபெயர்ப்பு


உ 
கணபதிதுணை. 
திருச்சிற்றம்பலம். 

 சிவதத்துவவிவேக மூல மொழிபெயர்ப்பு


பாயிரம்.

உலகெ லாந்தன தொருசிறு கூற்றினு ளமைய 
வலகி லாற்றலா னிறைந்தவ னெனவரு ணூலோர் 
குலவி யேத்துவோ னெவனவ னுமையொரு கூற்றி 
னலர்க றைக்களச் சிவபிரா னடியிணை போற்றி.
(1)
வேறு. 

செவியுற வாங்கி மோகத் திண்படை சிலையிற் பூட்டுங் 
கவிகைவேண் மடியச் சற்றே கறுத்தியோ குறையும் பெம்மான் 
குவிதழை நிறையப் பூத்த கோழிணர்ப் பதுமச் செங்கே 
ழவிர்தரு விழித்தீக் கென்றன் வினையிலக் காகு மாலோ.
(2)
வேறு. 
திருமாலிந் திரன்பிரம னுபமனியன்  
       றபனனந்தி செவ்வேளாதி,  
தருமமுது குரவருக்குந் தனதருளா  
        லாசிரியத் தலைமை நல்கி,  
வருமெவர்க்கு முதற்குருவாய் மெய்ஞ்ஞான  
       முத்திரைக்கைம்மலரும் வாய்ந்த,  
வுருவழகுங் குறுநகையுங் காட்டியரு  
       டருஞ்சிவனை யுளத்தில் வைப்பாம்.
(3)
வேறு. 
எல்லை யில்கலை யென்னுங் கொடிபடர் 
மல்லல் வான்கொழு கொம்பரின் வாய்ந்தருள் 
கல்வி ஞானக் கடலமு தாயசீர் 
பல்கு தேசிகர் பாத மிறைஞ்சுவாம்.
(4)
வேறு. 
மறைமுடிவிற் பயில்கருத்து மன்னியமெய்ப் பொருள்விருப்புங் 
கறைமிடற்றோன் றிருவடிக்கீழ் மெய்யன்புங் கடுந்துயர்நோய் 
பறையவரு மிம்மூன்றும் பரிந்தியல்பாக் கிடைத்தமன 
நிறையவுடையோ ரேவரவர் நீடுழி வாழியவே.
(5)
பரசி வன்றன துயர்ச்சியே தெரிப்பதிற் பகரொருப் பாட்டிற்றா 
யரிய காலாகதிர் வியாதனா தியர்மொழி யால்விளங் கிடுநீர்த்ரய்த் 
திரிவு காட்சிய ருளத்துறு தறிநிகர் செம்பொருட் கோவைத்தாய் 
விரியு நீருல கினுக்கிதந் தருமுதல் வித்தையோங் குகமாதோ.
(6)
வேறு 

எட்படுநெய் யெனவுயிருக் குயிரா யெங்கு  
        மேகமாம் பகவதிதாளேத்துஞ் செய்யுள்,  
விட்பருமுண் ணிறைந்தபொருட் சுவையனாய் 
        மேலோர்தம் வழிச்செல்லு மறுபா னுக்கு,  
முட்கருத்து வெளிப்படுப்ப விழிந்த மார்க்கத்  
        துழல்வோர்தம் பிதற்றுரைகட் கணுகொ ணாத, 
நட்புடைய வுரையீண்டுச் செய்ய லுற்றே  
        னல்வழிச்சல் வறிவாளர் நயக்குமாறே.
(7)

நூல். 

நின்பெருந் தன்மை வானவர் தமக்கு  
        நிகழ்த்தரி தாதலின் மனித,  
னன்பொடும் வழுத்த விழைந்தடி  
       னகையே யடைவதற்கையமின் றேனு,  
முன்பெயர் கருதும் பெருந்தவ வருவா  
       யொருவழி யாற்கிடைத் திடுக,  
வென்பதோர் மதிவந் தென்னையீர்த்  
       தெழுமா லெங்கணு நிறைந்தபூ ரணனே.
(1)
விச்சுவா திகனும் விசுவசே வியனும்  
       விமலநீ யேயென மறைக, 
ணிச்சய மாக முழக்கவு மறியா  
       நீசர்தாம் பிணங்குவ ரந்தோ,  
மச்சரத் துனக்கே தீங்கிழைத் தவர்தம்  
       வாழ்க்கையும் பயன்படா தாலத்,  
துச்சர்சொற் கேட்டோர்க் கிறுதலே  
       தண்டஞ்சொற்றிடு நூலெலா மன்றே.
(2)
ஏழைய ரிருகாற் பசுக்கண்மற் றிவரா  
       லியன்றிடத் தக்கதொன் றிலையே,  
வாழிய நலந்தீங் கறிந்துயி ரியற்ற  
       வல்லதோ யாங்கணும் விரவிச்,  
சூழுநீ யெவ்வா றசைந்தனை யவ்வா  
       றசைதலிற்சுதந்திர மிலதாற்,  
பாழிமால் விடையா யவ்வுயி  
ரந்தோ பழித்திடுந் தகையதொன் றன்றே.
(3)
கீதநான் மறையு ளோரொரு விதிவாக்  
       கியங்களைப் பற்றிநல்வேள்வி,  
யாதிகண் முயலத் துணிபவ ரெல்லா  
       வருமறை முடிவினு முழக்கு,  
மேதகு முனது தலைமையைத்  
       துணியா தொழினரோ விளங்கிழை யொருபா,  
னாதனே யவர்தாம் பரவசத் தினவும்  
       நணுகில ராயிடின் மன்னோ.
(4)
உன்றனை யெதிரே கண்டுமம் புயத்தோ  
        னணர்ந்திலன் மால்சொல வுணர்ந்தான்,  
வென்றிவெள் ளானைப் பாகனு முமையாள்  
        விளம்பிடத் தேர்ந்தன னிமலா,  
மன்றலந் துளவோ னயனுடனுன்னான்  
        மயக்கறுத் துணர்ந்தன னென்றா,  
லின்றுனை யேழை மானுட ரறியா  
        ரென்பது மாயவேண் டுவதோ.
(5)
உன்றிரு வடிக்கி ழுறுதியா மன்பு  
       முன்றிரு வருளினாற் கிடைப்ப,  
தன்றிநூல் பலவு மாய்ந்ததா லுரைசெ  
       யளப்பருந் திறனையான் மதியான்,  
மன்றவே கிடைப்ப தன்றுமற் றதனை  
       மாதவஞ் செய்திலாக் கயமை,  
துன்றிய புலையோர் யாங்ஙனம்  
       பெறுவார் சோதியே கருணைவா ரிதியே.
(6)
உலகர்சே ருறுதிப் பயனெவற் றினுக்கு  
        முறைவிட மாய்த்துயர் முழுதும்,  
விலகுறத் துமிக்குங் கணிச்சியா முன்றாள்  
        விரைமலர்க் கியற்றுமெய்ப் பத்தி,  
யலகிலாப் பிறவி தொறும்புரி தவத்தா  
       லல்லதெள் வாற்றினு மரிதே,  
நலமதொன் றடைதற் குறுமிடையூறு  
       நாதனே பலவுள வன்றே.
(7)
பலவகைப் பவந்தோ றெய்திடுந் தவத்தோர்  
        படர்ந்தெழு மகத்திருள் கடிந்தோர்,  
நலமுறு மியம நியமநற் செய்கை நயந்துளோ  
        ருனைப்பெற முயல்வார்,  
கலியுறு நவைசே ருளத்தவ ரசுரக்  
        கடுமையர் ததீசியா திகளா,  
லலமரச் சபிக்கப் பட்டுளோ ரெவ்வா  
        றறிவரோ வையநின் றனையே.
(8)
அளவிலுன் பெருமை யறியவு முன்றாட்  
        கழிவிலா வன்புவைத் திடவுந்,  
தளமல ரெடுத்துன் னருச்சனை யாற்றிச்  
        சாலநின்றிருவருள் பெறவும்,  
வளமலி புலியூ ரம்பலத் தமுதே  
        மலர்தலையுலகனுட் சுரும்ப,  
ருளர்துழாய்ப் படலை மார்புடை  
        யண்ண லொருவனே வல்லனா மன்றே.
(9)
தணப்பிலா நிரதி சயமதாஞ் சச்சி தானந்த  
        வடிவமாய்த் துவிதப்,  
பிணக்கிலி பரமான் மாவெனுந் தகைத்தாய்ப்  
        பிரதியக் காயுபநிடதத்,  
திணக்குறு மகண்டப் பொருள்களா  
        லுணரு மியல்பதா யனந்தமா யோங்குங்,  
குணிப்பருஞ் சோதி யாகிநிற் கின்றாய்  
        கோதிலாச் சிவபரம் பொருளே.
(10)
குணங்களைக் கடந்தோ யெனினுமா  
       யையினைத் தோய்தலாற் குணமுடை யவன்போ,  
லணங்கொரு பாலுங் கறைமிடற்  
       றழகுமம்பக மூன்றுமா முருக்கொண்,  
டிணங்குறு நாமஞ் சிவன்பவன்முதலா  
       வியைந்தய னரியரன் முன்னா,  
முணங்கிடா வுலகை நடாத்துவோ னாகி  
       யோங்கினை நீங்கரும் பொருளே.
(11)
(அதர்வசிகை) 
முளரியோன் முதலாஞ் சுரரெலாம் பூத  
        முதலவற் றோடுதித் துள்ளோ,  
ரளவிடுந் தலைமை யாளரென் றவரை  
        யகற்றிமால்விடையவ நினையே,  
வளமுறு மெல்லாத் தலைமையு  
       முடையோன்வருமுதற் காரண னல்லோ,  
ருளமுறு தியானப் பொருளெனச் 
        சிகைதேர்ந் துரைப்பவு மயங்குவர் சிலரே.
(12
மறையகத் தெல்லாத் தலைமையோ  
        ரொருபால் வகுத்திடுங்கேவல மதுதா,  
ளிறைவனே யிவ்வா றம்புயன் முதலோ  
       ரினும்பிரித் துத்தியால் விளக்கா,  
தறைதருமிதனான் முரணுழி  
       வேறோராற்றினாற் போக்கவற் றாமற்,  
கறைமிடற் றடக்கி யேழைவா  
      னவரைக் காத்தருள் கருணைமா கடலே.
(13)
கதித்தெழும் பொருளா லுனைவிளக்  
        கிடுங்கா ரணபத மனுவதிப் பென்னாப்,  
பொதுக்குணம் பொதுச்சொற் பற்றியே  
       தொடக்கம் புகல்பொருண் மாயவன் றானே,  
யிதற்கெனத் துணியா விறுதியும் வலியா  
       லிம்முறை யேற்றிமற் றொருவ,  
னதிர்ப்புற மருளின் மருளூக பிறரு  
       மந்நெறிப் படருமா றெவனோ.
(14)
(சுவேதாச்சுவதரம்.) 
தற்பரா வுலகுக் காதிகா ரணந்தான்  
       றலைமையி லுயிருடன் சடத்தைச்,  
சொற்றிடிற் பழுதாற் பிரமமா மெனவே  
       துணிந்துபின் பிரமமா ரென்றாய்,  
வுற்றிடு மான்றோ ருமையரு ணோக்கா 
       லுணர்ந்தனர் நீயென வென்னா,  
வற்புறச் சுவேதாச் சுவதர மென்னு  
       மறைமுடி வுரைத்திடு மன்றே.
(15)
படைப்புறு முறைமை சொலற்கெழுஞ் சுருதிப்  
        பரப்பெலாம் பிறிதொன்றன் பொருட்டாய்க்,  
கிடைத்தலா லவற்றுட் காரண பதத்தைக்  
       கிளத்தலாந் தன்பொருள் படாமை,  
விடைக்கொடி யாயீண் டீசனென் றரனென்  
       றெடுத்து மெய்க் காரணந் துணிதற்,  
கடுத்தெழு மொழியுந் தன்பொருள் படாதே  
       லாவினித்துணிவென்ப தெங்கே.
(16)
இதனுளெப் போது தமமது பகலன்  
        றென்னுமந் திரமுனையுணர்த்தி, 
யிதமுறு மேனைக் காரணமொழிகள்  
        யாவுநின் பாலுறச் செலுத்தி,  
மதமுறு மருளோ ரவற்றினைப்  
        பிறர்மேல் வகுப்பதைப் பயன்படா தாக்கு,  
மதனுடல் பொடிப்ப நுதல்கிழித்  
        தெழுந்த வாளெரி காட்டிய முதலே.
(17)
மநுவிதிற் சிவச்சொல் வேறுள சுருதி  
        யாம்புரோ வாதத்திற்றெரிக்கும்,  
புனிதமாம் பொருளே சாற்றிடு  
        மெனிலெப் போதினுமாதிகா லத்தை,  
யனுவதித் துன்ற னுண்மையை  
        விதியா தாயின்மற் றென்செயப் புகுந்த,  
தினியபே ரின்பத் தண்ணருள்  
        கொழிக்கு மெம்பிரா னிந்தமந் திரமே.
(18)
பெரிதுமா னத்தா லுயர்ந்தவள் பிறரைப்  
        பேசிடா வரன்சிவன் முதலா,  
மரியநின் னாமக் குருமணிக் கோவை  
       யாலுடன் முழுதலங் கரித்தாள்,  
கரியவற் கரியாய் நின்னொடொப்  
       பவரே கருதினு மிலையெனத் துணிந்துன்,  
றிருவடிக் கேதன் கருத்தெலா 
       மமைத்தாள் சீருப நிடதமா மிவளே.
(19)
புருடசூத் தத்தின் மந்திர மிதனுட்  
        பொருந்தினு முனைக்குறித் திடும்பல்,  
சுருதியா னியமித் ததனையெவ் வாறு  
        துரக்குமிம் மறைமுடி வதாஅன்று,  
திருவுருத் திரத்து மந்திரம் பலவுஞ்  
       சிறப்பவீண் டுறுதலா லறியாக்,  
குருடர்தா மதனாற் றுணிவது தகுமோ 
       கோமளக் குணப்பெருங் கடலே.
(20)
உருத்திர மனுக்கண் முன்னரும் பின்னு  
        முரைக்குமீண் டாதலா லிவைதாந்,  
தெரித்துற விளக்கு நின்றிருப் பெயராற்  
        சிறத்தலா லுருத்திர மோதல்,  
கருத்தனா முனக்கே நிச்சயித் ததனாற் 
        கதம்பயி லெறுழ்விடைப் பாகா,  
வருத்தியா லவற்றை யுரைத்ததே யீண்டைக்  
        களந்தறிந் திடச்செயு மெமக்கே.
(21)
உரைக்குமீ சானச் சுருதியாற் றெரிக்கு  
        முன்னிடத் தெய்துமென் பதுவே, 
பொருத்தமாம் புருட சூத்தத்தின் முடிவு  
        புனைமலர்க் கருங்குழல் பாகா,  
விருப்புறு மேனோர் பூசனை விதியுள்  
        விளம்பினு மவ்விதிக் கேற்பக்,  
கருத்துறும் பொருட்டுப் பொருள்விரித்தறவோர்  
        காட்டினு மிதுவழுப் படாதே.
(22)
(அதர்வசிரசு.) 
அனைத்துயிர் களுமாந் தன்மையும்  
       விண்ணோ ராற்றொழு தகைமையு மரனே,  
யுனக்குரைத் தயன்மான் முதலியோ  
       ருனதுவிபூதியென் றோதியுன் பெயர்கட்,  
கினப்பொரு ளுரைக்குங் கடமையாலுன்ற  
       னிறைமையே குறித்துநின் பெருமை,  
சினத்தொகை யகலத்தேற்றுமா  
       லதர்வ சிரோபநிடதமுழுவதுமே.
(23)
நின்றுழி நின்று முடிவுகொள் ளாது  
       நீயறைந் தமைசொலுங்கிளவி,  
யுன்றனிக் கூற்று முடிவிடத் துய்த்துக்  
       கொண்டுகூட் டிடுந்தசைத் தாயுந்,  
தன்றன திடத்தே முடியுமீண் டெனுமிச்  
       சழக்குரை தேர்ந்திடிற் றலைவா,  
புன்றொழிற் கயவர் தமதறி யாமை  
புலமையாய்ப் பரிணமித் ததுவே.
(24)
ஈண்டுநீ யாரென் றுன்னுருக் கடாவு  
        மிமையவர்க் கேனையோருருவை,  
யாண்டுநீ யிறுத்தாயெனில்வழு வாகா  
        தடுக்குமோ நீயுயிர்க் குயிராய்க்,  
காண்டக நிறைந்து மவனென யாரைக்  
        கழறுளதோ பெரு கன்பு,  
பூண்டவர்க் கெளியாய் கயவருக் கேனும்  
        பொருந்துமோ விச்சழக் குரையே.
(25)
அனைத்தினும் பிரமந் தனக்கதிட் டான  
        மறையுமந் திரங்களினானு,  
முனற்கரும் பரிதி மண்டலத் துறையு  
        மப்பொருட் குமைவிழிகளிப்ப,  
மனக்கொரு வடிவஞ் செவியறி வுறுக்கு  
        மனுக்களி னானுமெய் யடியா,  
ரினத்தனே நீயே யெங்ஙணு முறைவோ  
        னென்பதை யறியலா மன்றே.
(26)
ஐம்பெரும் பூத மிருசுட ரான்மா  
       வன்றிவே றுலகிலை யவைதா, 
முன்பெரு வடிவ மெனப்படு மன்றே  
       யோர்ந்துளோர்க் கிங்கது தன்நா,  
லெம்பிரா னீயே நிறையதிட் டாதா  
       வென்பதற் கையமு முளதோ,  
வம்பரா மூர்க்கப் பேய்கடா மயக்கான்  
       மாறுபா டுறப்பிதற் றுவரே.
(27)
(கைவல்லியம்.) 
மலைகம டுணைவன் முக்கண னீல  
       மணிமிடற் றவனென வானோர் திலகனே  
யுன்னைத் தகரமாங் குகையுட் டியானஞ்செய்  
       திடுமுறை செப்பி,  
யலரவன் முகுந்த னீசனோ டெனையு  
       மையநின்விபூதியென் றுரைக்கு,  
மலவிரு டுமித்துச் சிவச்சுடர் விளக்க  
       வந்தகை வல்லிய மறையே.
(28)
(தைத்திரியம்.)  
மிருமது சுருதி கூறுமுன் றகர  
       வித்தையை வேறுள விசேடப்,  
பருதிக ளானுந் தயித்திரி யந்தான்  
       பகர்ந்திடும் வள்ளலே மாயோ,  
னாமுறு பொருளா முனைத்தியா னிப்பா  
       னவன்றனை நடுவணோ  
திடுமவ் வகையறி யாத பேதைகண்  
மயக்கான் மற்றொரு வாறுகொள் ளுவரே.
(29)
(விருகதாரணியாதி.) 
மறைகளிற் றலைமை யெய்திய விருக  
       தாரணி யகமுதன் மறைகள்,  
பிறவுநல் விதயத் துறுபொரு ளாமுன்  
       பெருமையே பேசிடு மன்றே,  
யறவனே யிவற்றின் கருத்தெலா  
       முன்பா லடைவதேநியமமென் றுரைப்பார்,  
திறனறிந் துயர்ந்தோ ராதலாற்  
       கயவர் தீமொழி யாற்பய னென்னே.
(30)
(மாண்டூக்கியம்.) 
தன்பொருள் விரிக்கும் பிறசுரு தியினாற்  
       றன்கருத் தறிதருந்ததைத்தா,  
நின்புடை யெல்லா முதன்மையு முண்மை  
       நிகழ்த்துமாண் டூக்கிய சுருதி,  
யுன்கழ றருமீ சானமா மனுவோ  
       டுருத்திரோபநிடத மனுக்க,  
ளென்பவு மேனை மனுக்களு மநேக  
       மிம்முறை விளங்கவோ திடுமே.
(31)
அறப்பெருங் கடலே யளவிலா வணக்க  
        மறைந்திடு மெண்ணிலா மனுக்கள்,  
பிறர்க்குரித் தாகார் சிறந்ததோர்  
        பெருமை பேசிடும் வெளிப்படை யுனக்கே,  
கறைப்பெரு மிடற்றாய் சூத்திரர்  
       முதலோர் காலினும் விழுந்திடு மூர்க்கர்,  
குறித்துனை வணங்கக் கூசுவ ரந்தோ 
        கொள்ளுவ ரோதெரிந் தவரே.
(32)
மொழிந்திடு மெல்லா வணக்கமு மெல்லா  
       மொழிகளு முன்னையே சாரு,  
மிழிந்திடாத் திருமா லாதிவிண் ணோரை  
       யீன்றவன் றானுநீ யெனவே,  
பொழிந்தசீ ருனது தலைமையே யெடுத்துப்  
       புகழ்ந்துநின் பெருங்கணத் தலைமை,  
விழைந்துளோர் தமது பெருமையுஞ்சால  
       விளக்கிடுஞ் சுருதிகள் பலவே.
(33)
(புராணங்கள்.) 
எண்ணிலாச் சாகைக் குவால்களாற் றெரித்திங்  
       கெம்மனோர் மாசறத் தெளிய,  
நுண்ணிய நியாய வொழுங்குக ளானு  
       நுவன்றுறத் தேற்றுநின் பெருமை,  
பண்ணவா விளங்கப் புராணங்க ளெல்லாம்  
       பன்முறை யுணர்த்திடு மன்றே,  
கண்ணிலாச் சிறுவர் தமக்குமுள் ளங்கை  
       நெல்லியங் கனியெனும் படியே.
(34)
(பாரதம்.) 
நின்பதாம் புயத்தி னருச்சனை யாற்று  
        நெறியினன் மாயவ னெனவு,  
மன்புறு மீசன் மாலயன் றனக்கு மாதியங்  
        கடவுணீ யெனவு,  
மின்புறக் கிளக்கும் பாரதந் தானு  
        மெந்தைநின் றலைமையே விரிக்கும்,  
புன்புலை யேற்குந் தண்ணருள்  
        புரிந்த பூரணா னந்தமா கடலே.
(35)
(இராமாயணம்.)  
அகந்தைநோ யறுக்கு மயனரி யரற்கு  
       மாதியாம் பகவனீ யெனவு,  
மகஞ்செய விரும்பு மிராமனுன் னிடத்து  
      வைத்திடுங் குறிப்புரை யதனாற்,  
றிகழ்ந்தவச் சுவமே தத்தினால்  
      வழுத்துந் தெய்வ நீ யென்நவும் விளக்கி,  
யுகந்தவான் மீகி செய்தகாப் பியமு  
       முன்புக ழேவிரித் திடுமே.
(36)
(மிருதியோக நூல்கள்.) 
பெரும்பெயர் மனுயோ கீச்சுரன் முதலாம்  
        பெரியருஞ் சாத்திரந் தெரித்த,  
விரும்பதஞ் சலியார் முதலியோர் தாமு  
       மேனையோர்க் குரியபல் பேதம்,  
விரும்புபல் வழியுங் காட்டியா வர்க்கு  
       மேற்பட நினைப்புகழ்ந் துரைப்பார்,  
கரும்பனைக் காய்ந்த கடவுளே யிதனைக்  
       கண்டுமந் தோமயங் குவரே.
(37)
(வேதாந்தசூத்திரம்.) 
பிறநய மாகும் புருடனங் குட்டப் பிரமிதி  
      தனைவிரும் பாம லறவனே யுனதீ சானநற்  
சுருதி யாற்பர மென்றுநிச் சயித்தோன் 
       செறியும்வே தாந்தப்  
பொருளினைத் தெரிக்குஞ் சூத்திரஞ்  
       செய்தவன் கருத்து,  
மிறைவநின் பெருமை கண்டதே  
      யாகு மென்பராலாயவல் லவரே.
(38)
(கீதைகள்.) 
பெருவழக் காகக் கீதைக ளகத்துப்  
        பேசுமோந் தத்துசத் தென்னு,  
முரைதரு பதமும் பிரமமென் பதமு  
       முணர்த்திடும் பொருளுநீ யென்றே,  
தெரிதரக்காட்டுஞ் சாத்திரங்களினும்  
       வெளிப்படத் தெரிந்தன மையா,  
விரிதரு நீயே யுலகினுக் கெல்லா  
      மேற்படுந் தெய்வமென் பதுவே.
(39)
உனையலா லெல்லா விறைமையு முடையோ  
       னென்றுமற் றெவன்றனை யுரைப்பே,  
முனிவிலீ சான முதலிய சுருதி  
       மொழிப்பொரு டானுநீ யன்றே,  
யனையனா யிவைதாஞ் சமாக்கியை  
       சுருதி யலவெனு மயங்கிருட் குகையுள்,  
வனைபுகழ் வேதத் துபயநூறேர்ந்த 
       மதியினோர் மதியகப் படாதே.
(40)
பலபல விடத்துஞ் சுருதியி லுனையே  
       பகர்ந்திடு புராணமுமிவ்வா,  
றிலகுறத் தெரிக்கும் விச்சுவா திகனென்  
      றிப்பெயர் சிற்பராவெல்லா,  
வுலகினுக் கதிக னீயெனப் பகுத்து  
      வெளிப்படத் தெளியவற் புறுத்திக்,  
கலகஞ்செய் பொல்லாக் கயவர்தஞ்  
      செவிக்குங் கடுங்கனற் சலாகையா மன்றே.
(41)
இறைமையிவ் வாறு பகுத்திடத் தகாதே  
       லுனையொழிந் தியாண்டுமுற் றுறுமோ,  
முறைபெரு மண்டந் தொருமய னரன்  
       மான்மூவரும் வேறுவே றாகிப்,  
பிறழுறுங் கற்பந் தொறுநவ நவமாய்ப் 
       பிறந்துநின் னாணையி னடங்கி,  
யுறைவரே யாதி யந்தமு மின்றி 
       யொழிவற நிறைந்தவான் பொருளே.
(42)
வைப்பெனப் பெறுமுன் பெருமையே முழக்கு  
       மறைகளும் பலபல மறைதே,  
ரப்பொருள் விரிக்கும் புராணமு மவ்வா  
       றாகுமிவ்வளவினாற் றானே,  
செப்பிடத் தகுமா னின்பெருந் தகைமை  
      தேருநர்க் கிதுவன்றி வேறு,  
மெய்ப்படு மளவை வேண்டுமோ  
      வேண்டா விளங்கிழைக் கிடங்கொடுத் தவனே.
(43)
பிறர்க்குரித் தல்லாப் பெயர்களான் மறைகள்  
        பிஞ்ஞகா நாரணன் மேன்மை,  
குறித்துரைத் திடுமா லேனைவிண் ணவர்க்குக்  
        கூறிடா திம்முறை யிதனான்,  
மறைப்பொரு ளுண்மை தெரியலா  
        மென்னா மந்திரோ பநிடத முதலாந்,  
திறப்படு மறைக ளோதிடாக் கயவர்  
        செப்பிடு முரைபயன் படாதே.
(44)
தாணுமா லயற்குத் தம்முளே யுயர்ச்சி  
       தாழ்ச்சிகூ றிடும்புராணங்கட்,  
கேணுறுங் கற்பப் பிரிவினாற் போக்கென்  
       றியம்பிடு மச்ச புராண,  
மாணலா ரிதனைச் சிவபுரா ணத்திற்  
       கப்பிர மாணமோ துவதா,  
நாணிலா துரைத்துத் தமதறி யாமை  
       நாட்டுவர் நாடரும் பொருளே.
(45)
உன்னிறை மையினை முகுந்தன திடத்து  
      முவனவ தாரங்க ளிடத்துந்,  
தன்னுடைக் கூறா மொற்றுமை  
      யதனாற் சாற்றிடு மாரண மொழிக,  
ளின்னதிவ் வளவே யவற்றினுள்  
      ளுறையென் றியம் புவ ரருந்தவ முனிவர்,  
மன்னனே யிதனைத் தேறிட மாட்டார்  
      மயக்கமாங் கடலழுந் துவரே.  
(46)
மாயவ னின்பா லேகனாய் முன்னர்  
        வந்துதித் தனன்பின்னரவன்றான்,  
பாயுல கொடுக்கும் புருடனை யயனைப்  
        படைத்தனன் முந்துகா லத்தென்,  
றேயுறு மகோப நிடதமோ திடுவ  
        தியாதது நின்னிடத் துறாதா,  
லோய்விலா துருகி யுள்ளவல்  
       லவாக ளுள்ளகத் துறைமணி விளக்கே.
(47)
அறுக்குமோர் கற்பத் தயனொரு கற்பத்  
       தரியொரு கற்பத்திலரன்முன்,  
பிறப்பனுன் பான்மற் றிருவரை முன்னோன்  
       பெற்றளித் திடுவன்மற் றிதனா,  
லுறப்பெறு முயர்ச்சி தாழ்ச்சிக ளொருவர்க்  
       குள்ளதோ வில்லையென் றிவ்வா,  
றிறப்புறா மறைகண் முழுவது 
      முணர்ந்தோ ரியம்புவ ரெம்பெரு மானே.
(48)
ஆங்கொரு சாரா ரயனரி யிருவர்க்  
       குருத்திர னதிகனா மெனவு,  
மீங்கிவர் தம்பா லவன்பிறந் தானென்  
       பதுமவன் கூற்றினுக்கெனவு,  
மோங்குமால் விடையா யுன்னுரு  
       நாம மொப்புமை செய்கைமற் றெல்லா,  
நீங்கிடா துடையோ னாதலான்  
       மேலாய் நிற்பவனெனவுமோ துவரே.
(49)
தேவர் மூ வருக்குந் தலைமையொப்  
       புமைதான் செப்புக வன்றி மற் றிவருண், 
மேவரு மேலோ னுருத்திர னெனத்தான்  
       விளம்புக வெந்தவா றேனுங்,  
காவல நீயே யாவர்க்கு மேலாய்  
       கடவுளென் பதுபெரு வழக்கே,  
யோவுறா துலகெ லாம்பணி செய்யு  
       மொருவனீ யாகிநின் றனையே.
(50)
உலகெலாம் பணிசெய் திடத்தகுந் தலைமை  
        யொருவனீ யேரிது வறியாக்,  
கலதிகள் வறிதே போக்குவர் வாணாள்  
        கடையனேற் கருள்பசு பதியே,  
சுலவுதே வருக்கு மானுடர் போலச்  
       சுராசுரர் மானுடர் முதலாம்,  
பலவுயிர் களுமுன் பணிவழி நிற்றற்  
       பாலன பசுக்கள்போ லன்றே.
(51)
மானிடர் தருமப் பெருமைதேர்ந் துரைக்கு  
      மாதவர் நின்னிடத் தன்பு,  
மானிடந் தரித்தோய் தரும்மார்க் கத்துட்  
      சிறந்தெடுத் ண்ணிய வாற்றான்,  
மானிடப் பிறப்பைப் பெற்றுஞ்செய்  
      வினையின் வயத்தராய் நினக்கன்பு செய்யா,  
மானிடப் பதர்கட் கெந்தவாறேனும்  
      வருங்கதி கண்டிலன் யானே.  
(52)
இருபிறப் பாளர் நியதியாய் வழுத்தற்  
        கெடுத்தல்கா யத்திரி யன்றே,  
வருமதற் குயர்ந்த தெய்வநீ யென்றே  
        வழுத்திடு மிதுபெருவழக்கே,  
மருவரும் பொருளே யாதலி னுன்றாள்  
        வழிபடா விருபிறப் பாளர்,  
புரியுநல் வினைக ளியாவையும்  
        புனையுந் தூசிலா வணியெனப் படுமே.
(53)
விப்பிரர்க் கெல்லா மங்கியிற் றெய்வ  
        மேவுமென் றுந்தழற்கடவுட்,  
கொப்பிலா நீயே யந்தரி யாமி யென்னவு  
       முயர்மறை மிருதி,  
செப்பிடும் வசன மிவ்விரு வகையுந்  
       திரண்டுநீ யடியனே னரகிற்,  
குப்புறா தருள்வோய் விப்பிரர் தமக்குக்  
       குலதெய்வ மென விளக் கிடுமே.
(54)
வேதியர் குலத்திற் பிறந்தவர் தமக்கு  
        விசேடமா யிக்கலி யுகத்தில்,  
வேதநீ தெய்வ மெனப்புரா ணங்கள்  
        விளம்பவு மன்பினாலுன்றன்,  
பாததா மரையை வழிபடா தேனைப்  
        பண்ணவர் தமைவழிபடுவோர்,  
பாதகமறையோர் மூடர்க ளவர்க்குப்  
        பயன்றரா பரதெய்வங் களுமே.
(55)
எந்தைநீ பொறுமை யுடையவன் கருத்துக்  
        கெளியவ னுள்ளருள் கையில்,  
வந்தது போலுன் னடியர்க்கு விரைவின்  
        வாய்த்திடுமவர்பெறும் பேறுஞ்,  
சிந்தைவேட் டதற்கு மேற்படப் பெறுவர் 
       தேர்ந்திடின் முழுதுமுன் னுடைமை,  
யிந்தவாய் மையினாற் பயன்குறித் தவர்க்கு  
        மீண்டுநீ சரணெனத் தகுமே.
(56)
இம்மையிற் போக முனைவழி படுவோர்க்  
        கெண்ணரும் பெருமைய தென்ப,  
ரம்மையி லேனை யுள்ளன நிற்க  
        வண்ணலே யுன்னனு சரர்க,  
டம்முடைப் பதமு மரியயன் முதலோர்  
        தம்பதங் களுக்குமே லாகச்,  
செம்மைதேர்ந் துரைப்ப ராகமத் துறையிற்  
        றிளைந்துமெய் யுணர்ந்தமா தவரே.
(57)
நிகழ்பிர கிருதி கடந்தமெய் வாழ்வா  
       நிரதிச யானந்த மதுவுந்,  
திகழுநின் னருளாற் பெறுவதாம்  
       பிறவித் தீயநோ யறுக்குநன்மருந்தே,  
புகலுதற் கேது மெய்ப்பொரு ளுண்மை  
       போதிக்கு ஞானமா மதுவு,  
மகலிடத் துனது திருவருள் கிடைத்தா  
       லல்லது கிட்டுறா தன்றே.
(58)
வருந்திடா வகைவேட் டதனின்மேம்  
       பட்ட பயன்பெற வுதவிடவற்றாந், 
திருந்துநின் வழிபா டொருதலை யாகச்  
        செய்யவேண் டிடுந்தகைத் தாயும், 
பிரிந்துனை நீத்து வேறொரு தெய்வம்  
        வழிபட நாடுவர் பேயோ, 
ரருந்தவப் பொருளே வெய்யவூழ்க்கொடுமை  
        விலக்குத லரிதரி தந்தோ
(59)
மருளினா லவிச்சை யாலவாத் தன்னான்  
        மதாபிமா னங்களால் வறிதே, 
யொருவுக வாணா ளுனைத்தொழா மூர்க்க  
        ரொருவனேயாங்களெல் லோமுந், 
திருமகன் மனைவி முதலியோ ரோடுஞ்  
        சேரநின் னடியராய்த் தொழுதேம், 
பெரிதுமிம் மதியே பெயர்ந்திடாதிருக்கும்  
        பேறளித் தருள்கமற் றெமக்கே
(60)

 

வேறு 
இவ்வா றுமுப்பா னிரட்டிப் படுசெய் யுளாலுன் 
செவ்வா னடியிற் சிவதோத் திரமாலை சேர்த்தே 
னவ்வாய் மையினித் தமொர்கா லிதனைப் படிப்போ 
ருய்வா னுனதின் னருள்கூ டுகவும்பரானே.
(61)
வேறு 

விண்ணோர் தமக்குந் தெரிவருநின்  
       மேன்மை யெங்கே யானெங்கே, 
தண்ணார் துதியென் றிதுவு மொரு  
        குற்றந் தானாய்ச் சமைந்ததா, 
லண்ணா வன்புக் கெளியாயா  
        னவாவாற் செய்தே னாதலினா, 
லெண்ணா தெல்லாம் பொறுத்தருள்வா  
        யென்னு மிதுவென்றுணிபரமே.
(62)
வேறு 
யானே யறிவே னிவனை யெனத்தன் றனாவா 
லானா வரியே புகன்றா னெனிலந் தநின்சீர் 
தேனா ரமுதே யினிமற் றெவர்தே றவல்லார் 
கோனா யுயிர்தோ றுறையம் பலக்கூத் துளானே.
(63)

(ஆகக் கூடி செய்யுள் - 70) 
--------- 
சிவதத்துவவிவேக மூலமுடிந்தது.  
 

Related Content

சோமேசர் முதுமொழி வெண்பா

பிரம்மதருக்கஸ்தவம் (அப்பய்ய தீக்ஷிதர்) - மொழிபெயர்ப்பு அம்ப

ஶ்ருதி ஸூக்தி மாலா (ஹரதத்த) Shruti Sukti Mala of Haradattach

தருக்கசங்கிரகம் தருக்கசங்கிரகதீபிகை என்னும் உரையுடன் (தமிழ்