logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கலைசைப் பதிற்றுப்பத்து அந்தாதி

சிவஞான யோகிகள் அருளிய 
பிரபந்தத் திரட்டு - பாகம் 5


கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

 

5.1 கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி


 

காப்பு 

பருமாலை நிரைவீதித் திருத்தொட்டிக் கலைப்பதிற்றுப் பத்தந்தாதித், 
திருமாலை யெமையாளுஞ் சிவபெருமான் றிருவடியிற் சேர்க்கநல்கும், 
பொருமாலைக் கயமுகனைக் குடர்குழம்பத் துகைத்துருட்டிப் புரட்டிநாயேன், 
கருமாலைத் துரந்தருள வெழுந்தருளுஞ் செங்கழுநீர்க் களபந்தானே.

நூல்.

திருமால்பிரமன்றெளியாதழலா
யருமாலுறநீண்டருளங்கணனெம்
பெருமான்கலைசைப்பதிபேணியவா
விருமாமலமற்றெளியேனுயவே.

(1)

உய்யும்படியொன்றுணரேனையுமான்
கையன்கதியன்கலைசைப்பதிவாழ்
மெய்யன்விமலன்விடையேறியவென்
னையன்வலித்தாண்டதுமற்புதமே

(2)

புதியான்பழையான்புறத்தானகத்தான்
முதியானிளையான்முதலான்முடியான்
பதியாங்கலைசைப்பகவன்பெருமை
மதியாலெவர்தேறிடவல்லவரே

(3)

வல்லாண்மைசெலுத்துமலத்துயராற்
பொல்லாநிலையிற்பொறிகெட்டுழல்வேன்
கல்லானிழலாய்கலைசைப்பதியா
யெல்லாமறவென்றுனையெய்துவதே

(4)

தேறாய்கலைசைச்சிவனேயிறையென்
றேறாய்சிவலோகமிடும்பையெலாம்
பாறாய்பதமஞ்சும்விதிப்படியே
கூறாயருளேகுறியாய்மனமே.

(5)

மனைமக்கள்கடும்புமடந்தையர்பொன்
னெனவிப்படி யெய்திமயக்கியிடுந்
தனையொப்புறுமாயைவிலாசமெலாங்
கனவிற்கழியாய்கலைசைக்கிறையே.

(6)

இறையுந்தரியேனினியிவ்வுடலப்
பொறைதானுனையல்லதுபோக்கறியேன்
முறையோமுறையோவருளாய்முதல்வா
நிறைநீர்க்கலைசைப்பதிநின்மலனே.

(7)

மல்கும்புலவேடர்மயக்கமருண்
டொல்குஞ்சிறியேனையுமுன்னடிசேர்த்
தல்கும்படியென்றருள்வாய்வளமே
பல்குங்கலைசைப்பதிகாவலனே.

(8)

காவாய்சிவனேசரணங்கலைசைத்
தேவாசிவனேசரணஞ்சிறியே
னாவாசிவனேசரணமருளே
தாவாசிவனேசரணஞ்சரணம்.

(9)

சரணம்புகும்வானவர்தாங்களெலா
மரணம்புகுதாதருள்வைத்துவருங்
கரளந்தனையுண்டனைகாத்தருளா
யரணம்புடைசூழ்கலைசைக்கரசே.

(10)

வேறு.

அருவுருவங்கடந்துநிறைந்தானந்தப்பரவெளியாய்
மருவுபெருஞ்சிவபோகவாரிதியிற்றுளைந்தாடி
யிரவுபகலற்றிருக்குமிவ்வாழ்வையெனக்களித்தாய்க்
குருகிமனங்கரையகிலேன்றிருக்கலைசையுத்தமனே.

(11)

உத்தியாரவகலல்குலொள்ளிழையார்முலைத்தடத்தே
பித்துமிகுந்திழிவேனைப்பிறழாமேதடுத்தாண்ட
வத்தனேயுனையிழந்துமாவிதரித்துய்வேனோ
கொத்தலர்பூம்பொழிற்கலைசைக்குலநகர்வாழ்கோமானே.

(12)

மான்போலும்விழிசாயன்மயில்போலுமடந்தையர்சொற்
றேன்போலுமெனப்பிதற்றித்திரிவேனையாட்கொண்டாய்
நான்போலும்மடிமையுமற்றுன்போலுநாயனுந்தான்
மீன்போர்செய்வயற்கலைசைவித்தகனேகிடையாதே.

(13)

கிடையாதபெருவாழ்வுகிடைத்திருந்துங்கைவிட்டு
முடையானவுடலோம்பிமூர்க்கனாய்த்திரிந்துழலுங்
கடையேனைக்கடைபோகக்காப்பதுநின்கடனன்றோ
நடையாளுந்திருக்கலைசைநகர்மேவுபரம்பொருளே.

(14)

பரந்தெழுமுன்றிருவருளேபார்த்துமனங்குழைந்துருகி
நிரந்தரமாயன்புசெயாநீசனேன்றனக்கந்தோ
புரந்தரன்மாலயன்முதலோர்புகலரும்பேறளித்தருளி
யரந்தைதவிர்த்தனையென்னேதிருக்கலைசையாண்டானே

(15)

ஆண்டாய்நீயுனக்கடியேனானேனானினியென்னை
வேண்டாதுவெறுத்திடவும்விதியுண்டோகீழ்மேலாய்
நீண்டானேதிருத்தொட்டிக்கலைமேவுநின்மலனே
தூண்டாதவிளக்கொளியாய்ச்சுடர்பரப்புந்தொல்லோனே.

(16)

தொல்லைவினைத்தொடக்குண்டுசுடுநெருப்பினரவேய்ப்ப
வல்லலுறும்புலையேனையாவாவென்றளித்தருளா
யெல்லையறுத்தூடுருவியெங்கணுமாய்நிறைந்தருளிச்
செல்வமலிகலைசையில்வாழ்சிவானந்தப்பழங்கடலே.

(17)

பழங்கணுறவெகுண்டெழுந்துபகடேறிப்படையெடுத்துத்
தழங்குபெருஞ்சேனையொடுந்தருக்கிவருங்கொடுங்காலன்
முழங்குமொலிகேளாமுன்மூரிவிடைமிசையேறி
யழுங்கேலென்றெதிர்ந்தருளாயருட்கலைசைப்பதியானே.

(18)

பதிகடொறுஞ்சென்றேத்திப்பயின்மூவர்தமிழ்மாலைப்
பதிகமெலாமங்கங்கேபாடியுளங்களிகூரும்
பதிகரொடுமெனைக்கூடப்பணித்தருளாயிமையவர்தம்
பதிகளுக்கும்பதியாகிப்பதிக்கலைசைப்பதியானே.

(19)

யானென்றுமெனதென்றுமிச்செருக்கிலெழும்வினையா
லூனொன்றிப்பொறிவழிபோயுலவாதயோனிதொறுந்
தானொன்றியிதுகாறுந்தளர்ந்தொழிந்தேனினியிரங்காய்
தேனொன்றுமலர்ச்சோலைத்திருக்கலைசையுடையானே

(20)

 

வேறு.

உடைந்துநைந்துநெக்குநெக்குளங்குழைந்துசின்மயத்
தடைந்துகண்ணசும்பிருந்துதாரைபாயவன்புநீர்
குடைந்துவாழுமன்பர்சிந்தைகோயில்கொண்டுவாழ்வரான்
மடந்தைபாகமாய்க்கலைசைவாழ்சிதம்பரேசரே.

(21)

சிதம்பரேசர்சோலைசூழ்ந்ததென்கலைசைநாயகர்
கதம்பராவுகாமனோடுகாலனைக்கடிந்தவர்
பதம்பராவியேத்துமன்பர்பாதபங்கயங்கள்சந்
ததம்பராவியேவலிற்சரிப்பரண்டவாணரே.

(22)

அண்டரண்டமூடறுத்தகம்புறம்புமேகமாய்
மண்டியெங்கணும்பரந்தவின்பவாரிதன்னுளே
தண்டலைக்கலைசைவாழ்சிதம்பரேசர்தம்முருக்
கண்டுகொண்டுபோற்றவல்லகாட்சியாளர்செல்வரே.

(23)

செல்வமென்னகீர்த்தியென்னசித்தியென்னகற்றிடுங்
கல்வியென்னவீங்கிவற்றினாற்பயன்கள்காண்பரோ
நல்லதென்கலைசைமேயநாதனன்பர்நாமமே
சொல்லியேத்தியேவல்செய்தொழும்பர்காணவல்லரே.

(24)

வல்லவண்ணம்வாழ்கலைசைவானவர்க்கடித்தொழி
லல்லுமெல்லுமாற்றுமன்பர்வேண்டிலஞ்சுபூதமு
மொல்லைமாற்றிவேறுசெய்யவல்லரும்பர்மாலயன்
றொல்லைவான்பதங்களுந்துரும்பெனக்கழிப்பரே.

(25)

பரந்தெழுந்துமுப்பதிற்றிரண்டுபல்லையுந்திறந்
திரந்துபுல்லர்வாயிறோறுமின்றுகாறுமெவ்வமுற்
றரந்தையாலழிந்துளேனிதாற்றிலேனெனையனே
வரந்தராய்கலைசைவாழ்சிதம்பரேசவள்ளலே.

(26)

வள்ளலென்றுபாரியென்றுமாரியென்றுவீணிலே
யெள்ளளவுமீகிலாரையேத்தியேத்தியாயுளைத்
தள்ளுவீர்கலைசைவாழ்சிதம்பரேசர்கீர்த்தியைத்
தெள்ளியோதுகிற்கிவீர்கணன்றுநுங்கள்செய்கையே.

(27)

கைகள்கொண்டுநொச்சியைக்கரந்தையைப்பறித்தணிந்
தையனேயிரங்கெனத்துதித்திறைஞ்சிலண்டரு
மெய்தரும்பதத்திலுய்க்குமெம்பிரான்கலைசைவாழ்
சைவனென்றறிந்திலார்சழக்குரைத்துமாய்வரே.

(28)

மாய்வதும்பிறப்பதும்வளர்ந்துமங்கைமார்முலை
தோய்வதும்புலன்வழிச்சுழல்வதும்பிணியினாற்
றேய்வதும்பவந்தொறுமெனக்கமைத்தசெல்வனே
யாய்கலைக்கலைசைமேவுமையவாழிவாழியே.

(29)

வாழ்வுமிக்கதென்கலைசைவாணநின்னையேசில
ராழியங்கைமாயனென்பரம்புயத்தனென்பர்தேன்
வீழ்கடுக்கையீசனென்பர்வெய்யவங்கியென்பர்மா
வேழ்பரித்ததேரினண்ணலென்பர்மாயையாலரோ.

(30)

வேறு.

மாயனாயினை மறையவனானாய் 
      மன்னுயிர்த்தொகையனைத்தையுமொடுக்கும்,
பாயுமால்விடை யுருத்திரனானாய் 
      பன்னுமூவர்க்கு மூல மாய்நின்றாய்,
ஞேயமாயினை ஞாதிருவானாய் 
      நிகழுஞானமுமாயினையெந்தாய்,
வேயதோளுமை பங்குறைநீல 
      மிடற்றனேதிருக்கலைசையுத்தமனே.

(31)

தமோகுணத்தினிற் றிருவுருத் தரித்துச் 
      சத்துவத்தொழில் பூண்டநாரணற்குந்,
தமோகுணத்தொழி லழிப்பினைப்பூண்டு 
      சத்துவத்துருத்தரித்தசங்கரர்க்குந், 
தமோகுணத்துறா திராசதத்துருவந் 
      தாங்கியக்குணத்தொழிலுறுமயற்குந்,
தமோமயத்தினிற் றமியனாங்லைசைத்
      தாணுநீயிறையாயிருந்தனையே.

(32)

ஆயிரஞ்சிர மாயிரமுடிகளாயிரஞ்
        செவியாயிரம்விழிக,
ளாயிரம்புய மாயிரஞ்சரண 
        மாயிரங்குண மாயிரந்தொழில்க,
ளாயிரம்பெயருடையநின்பெருமை 
        யையவென்மொழிக் கடங்குமோபத்தி,
யாயிரந்தவர்க்காயெனவுதவு மங்கணா 
        திருக் கலைசைமுக்கணனே.

(33)

முக்குணங்களின் மூவரைத்தோற்றி 
       மூவருக்குமுத் தொழில்வகுத்தருளி, 
யக்குணங்களுக் கதீதமாய்நிறைவா 
       யத்துவாக்களைக் கடந்தமேலுலகிற், 
றக்கநற்கண நாதரேத்தெடுப்பச் 
       சத்தியம்பிகையுடனருளுருவாய்த், 
தொக்ககோடிசூரிய ருதயம்போற் 
       றோற்றிநின்றனை கலைசைவிண்ணவனே.

(34)

விண்ணவார்க்கெலா முன்னமுன்னிடத்தே 
       வேதனைப்படைத்தருளினையவனுக் 
கெண்ணுவேதசாத் திரபுராணங்க 
       ளெவையுமோதுவித் தனையவன்றன்பாற், 
கண்னகன்புவி காத்தழித்தருளுங் 
       கடவுளோர்தமைத் தந்தனைகலைசை, 
யண்ணலேயெலா முன்றிருவிளை
       யாட் டாகுமாலுலகினுக்கொருமுதலே.

(35)

ஒருகற்பத்தினி லரனைமுன்படைப்பா 
       யொருகற்பத்தினி லரியைமுன்படைப்பாய், 
வருகற்பத்தினி லயனைமுன்படைப்பாய் 
       மறு கற்பத்தினின் மூவரையொருங்கே, 
தருவைமுற்படப் பிறந்தவர் 
      பிறரைத் தரவுஞ்செய்குவை நின்றிருவிளையாட், 
டருள்பழுத்ததென்கலை சைவாழ்முதலே 
      யாரறிந்தெடுத்தோதவல்லவரே.

(36)

வல்லவானவர் கடல்கடைபொழுதின் 
       மறுகவந்தெழு மாலகாலத்துக், 
கொல்கியாவரு மோட்டெடுத்தலறி 
       யோலமிட்டெமக் குறுசரணுனையே, 
யல்லதில்லையென் றரற்றிடுமந்நா 
       ளஞ்சலீரென வல்லைநீயல்லா, 
லில்லைவேறெனிற் கலைசைவானவநா 
       னெவர்க்கடைக்கலம் புகன்றுபோற்றுவனே.

(37)

போற்றிசெங்கதிர் மண்டலத்துறைவோய் 
        போற்றிசோமலோ கத்தமர்முதல்வா, 
போற்றியன்பர்தம் மனக்குகையுடையாய் 
        போற்றியாரழற்சிகை நுனியமர்வோய், 
போற்றிநாரண னகத்தொளிர்விளக்கே 
        போற்றிதில்லையம் பலத்துநின்றாடி, 
போற்றியென்றனைப்பதித்தசெஞ்சரணா 
        போற்றிதென்றிருக் கலைசைவானவனே.

(38)

வானுளோர்களு மறைகளுமின்னும் 
        வருந்திநேடியும் வரம்புகண்டறியா, 
தீனமுற்றலைந் துழன்றிடிற்சிறியே 
        னேதறிந்துனைப் பாடுவனெந்தாய், 
கானுலாமலர்க் குழலுமைபாகா 
        கலைசைமாநகர் மேவியவமுதே, 
தேனுலாமலர்க் கொன்றையஞ்சடையா 
        திரிபுரங்களைச் சிரித்தெரித்தவனே.

(39)

சிரித்தெரித்தனை புரங்களைவிழியைத் 
       திறந்தெரித்தனை மாரனையுகிரா, 
லுரித்துடுத்தனை யுழுவையைச்சரணா 
      லுதைத்துருட்டினை காலனைவிரலா, 
னெரித்தழித்தனை யரக்கனையென்பார் 
      நின்றயாவையு நீங்குநாளொருங்கே, 
பொரித்தெரித்திட வல்லதென்கலைசைப் 
      புண்ணியாவுனக் கிவையுமோர்புகழோ.

(40)

 

வேறு.

புகழ்ந்தவருக்கருள்பூங்கலைசைக்கோ
னகழ்ந்துபறந்தவரண்ணலனென்பார்
மகிழ்ந்துயர்கூடலின்மண்கள்சுமந்தே
யிகழ்ந்தடிபட்டனனென்பதுமென்னே.

(41)

என்னையுமாளுமிருங்கலைசைக்கோன்
மன்னுலகுக்கொரு மன்னவனென்பார்
மின்னிடையார்மனையெங்கணுமேவி
யன்னமிரந்தனனாவதுமென்னே.

(42)

ஆவகையன்பரையாள்கலைசைக்கோன்
மூவருமேவல்செய்முன்னவனென்பார்
நாவலர்கோன்விடநள்ளிருளின்க
ணேவலினேகினனென்றதுமென்னே.

(43)

என்மனமேவுமிருங்கலைசைக்கோன்
பன்மறையும்மறியாப்பரனென்பார்
கொன்மிகுகூளிகள்கண்டுகைகொட்ட
வன்னடமாடினனாமிதுவென்னே.

(44)

ஆமையினோடணியக்கலைசைக்கோன்
காமமறுத்தவர்கண்ணுளனென்பார்
தாமமலர்க்குழல்கொங்கைகடாக்கக்
கோமளமேனிகுழைந்தமையென்னே.

(45)

குழைத்தெனையாண்டருள்கூர்கலைசைக்கோன்
வழுத்தபுகீர்த்தியின்மாமலையென்பா
ரிழித்தபுறச்சமயத்தவரெல்லாம்
பழித்திடநின்றருள்பான்மையிதென்னே.

(46)

பான்மதிசூடுபரன்கலைசைக்கோன்
மான்முதலோர்தொழுமாமுதலென்பார்
மேன்மையில்வாணன்வியன்பதிவாயிற்
கான்மலைமாதொடுகாத்தமையென்னே.

(47)

தமைத்தெளிவோர்தெளிதண்கலைசைக்கோ
னமைப்பருமாகருணாகரனென்பா
ரிமைக்குமுனண்டமெவற்றையுமொக்கக்
குமைத்திடுமச்செயல்கொண்டிடலென்னே.

(48)

கொண்டலுரிஞ்செயில்கூர்கலைசைக்கோ
னண்டமெவற்றினுமப்புறனென்பார்
மண்டனில்விண்டனில்வான்றனில்யாருங்
கண்டிடநின்றுழல்காரணமென்னே.

(49)

காரணகாரணனாங்கலைசைக்கோன்
பேருணர்வோர்க்கருள்பிஞ்ஞகனென்பா
ரோருணர்வின்றியுயங்குமெனக்கு
மாரருள்செய்திடுமற்புதமென்னே.

(50)

வேறு.

அற்புதக்கலைசைமேவுமங்கணனளக்கொணாத
பற்பலவிளையாட்டெல்லாம்பரித்திடும்பான்மைநோக்கின்
முற்பவக்கடலின்மூழ்கிமுடிவின்றியுழலுமிந்தச்
சிற்றுயிர்களின்மேல்வைத்தகருணையாய்ச்சிறக்குமன்றே.

(51)

அன்றுதொட்டின்றுகாறுமருமறைநான்குந்தேடி
நின்றலந்தோலமிட்டுங்காணொணாநிமலமூர்த்தி
யின்றமிழ்க்கலைசைவாணனியல்பினையிரண்டுநாளிற்
பொன்றிடுமனிதர்தேறியெங்ஙனம்போற்றுவாரே.

(52)

போற்றிலேன்பூதிமெய்யிற்புனைந்திலேனெழுந்தோரைந்துஞ்
சாற்றிலேனக்கமாலைதரிக்கிலேனடியாரேவ
லாற்றிலேன்கலைசைவாழுமண்ணலேதறுகண்வெள்ளை
யேற்றனேயெளியேனந்தோவெங்ஙனமுய்யுமாறே.

(53)

மாறிலாக்கருணைமேருமலைபழுத்தனையமெய்யு
மாறணிசடையுங்காளகண்டமுமழகுபூத்த
நீறணிமார்புமுள்ளேநிலவியநகையுமம்மை
கூறுமாய்க்கலைசைவாணனெனதகங்குடிகொண்டானே.

(54)

கொண்டனையென்னையுன்னைக்கொடுத்தனைமலநோய்நீங்கக்
கண்டனைவினைகளெல்லாங்கழித்தனையுடலின்பாரம்
விண்டனைபரமானந்தம்விளைத்தனைகலைசைவாழு
மண்டனேயுண்டுகொல்லோவடியனேன்செயுங்கைம்மாறே.

(55)

மாறினேன்சமயபேதவழிப்படும்புன்மையெல்லாந்
தேறினேன்வீடுசேர்க்குஞ்சைவசித்தாந்தமென்றே
யேறினேன்சிவலோகத்தேயிரண்டறக்கலந்தொன்றாகி
யாறினேன்வருத்தமெல்லாங்கலைசைக்கோவருளினாலே.

(56)

அருள்வழிநடந்துபாசமறுக்குமாறுணரமாட்டீர்
மருள்வழிநடந்துமேன்மேல்வல்வினையீட்டவல்லீர்
தெருள்வழிகேட்பீராகிற்சிவபிரான்கலைசைவாழ்வை
யொருமுறையிறைஞ்சீரென்றுமின்பத்தேனுண்ணலாமே.

(57)

உண்ணிறையமுதேயென்றுமுயிரினுக்குயிரேயென்றும்
பண்ணினல்லிசையேயென்றும்பழத்திடைச்சுவையேயென்றுங்
கண்ணினுண்மணியேயென்றுங்கலைசைவாழ்சிவமேயென்று
மெண்ணிநெஞ்சுருகியேத்தப்பெற்றவாறெளியனேனே.

(58)

எளியனேனறிவிலாதவேழையேன்மடவாராசைக்
களியனேனுடலேயோம்புங்கடையனேனுலகவாழ்விற்
குளியனேனெனையுமாவாகுலப்புகழ்க்கலைசைக்கோமா
னளியனேனாகக்கைக்கொண்டாண்டவாறென்னேயென்னே.

(59)

என்னையுமுனையுங்காட்டாதென்னுளேயன்றுதொட்டுத்
துன்னியமலவீரத்தின்றொடக்கறுத்தறிவுகாட்டிப்
பன்னருந்துரியாதீதப்பராபரநிலையிற்சேர்த்தா
யந்நிலைபிறழாவண்ணமளித்தருள்கலைசைவாழ்வே.

(60)

 

வேறு.

வேயொன்றுதோளிமலையான்மடந்தைவிரிநீருடுத்தவுலகந்
தாயென்றிறைஞ்சுசிவகாமியம்மையொருபான்மணந்ததலைவன்
வாயொன்றுமன்பினடியார்கள்வாழ்த்து கலைசைப்பெரும்பதியில்வாழ்
தீயொன்றுகையனடியேயலாதுதெருளாதுசிந்தைபிறிதே.

(61)

பிறப்போடிறப்பிலிதுகாறுநைந்துபிறிதொன்றுசார்புகிடையா
துறுப்பான்மயங்கிமடவார்வலைக்குளுழிதந்தலைந்தசிறியேன்
புறச்சார்புமற்றையகச்சார்புநீத்துனருளைப்பொருந்தவருளா
யிறப்பார்களென்புதலைமாலைசூடிகலைசைப்பதிக்குளிறையே.

(62)

இறையென்றுநம்பிவழிபாடுசெய்யினிறவாதவின்பமருவக்
குறைவின்றிநின்றவடியார்குழாங்களொடுகூடிவாழவருளு
மறையொன்றுநாவன்முதலோர்கள்வாழ்வைமதியாதவீரமுதவும்
பொறைகொண்டசிந்தையவர்கோவிருந்தபுரமேவுமாதிமுதலே.

(63)

முதலென்பதின்றிநடுவென்பதின்றிமுடிவென்பதின்றிமுழுதா
யதுவென்பதின்றியவனென்பதின்றியவளென்பதின்றியவையா
யிதுவென்றெவர்க்குமறியப்படாதவியல்பாகியுள்ளபொறுளா
மதிதங்குசோலைசெறிகோவிருந்தபுரமன்னுமெங்கள்சிவனே.

(64)

சிவந்தாருமாவர்கரியாருமாவர்வெளியாருமாவர்செழும்பொன்
னுவந்தாருமாவர்பசியாருமாவரொளிவண்ணராவர்தழலாய்
நிவந்தேவிரிஞ்சர்முகில்வண்ணர்தங்கணினைவிற்குமெட்டவரியா
ரவந்தானிலாதகலைசைப்பதிக்கணமர்ந்தாருமாவரவரே.

(65)

அவமேவிளைத்துமுழுமூடனாகியறிவென்பதின்றியழிவாய்ப்
பவமேவிளைக்குமுடலோம்பியென்றுநரகிற்படிந்துதுளைவேன்
சிவமேவிளைக்குமடியார்குழாங்களொடுசேருநாளுமுளதோ
தவமேவிளைக்குமுயர்கோவிருந்தபுரமன்னுசைவமுதலே.

(66)

சைவத்தில்வந்துசரியாதிமூன்று தடையின்றி முற்றுபரவ
மைவைத்ததீயமலைபாகநோக்கிவினையொப்புறுத்திவழியான்
மெய்வைத்தஞானகுருவாகிவந்துகதியுய்க்கவல்லவிமலன்
செய்தற்றுடுத்தகலைசைக்குண்மேவுசிவனாகுமெய்ம்மையிதுவே

(67)

இதுவன்றிவேறுசமயத்தைநம்பிலிலைமுத்தியுண்மையெனவே
மதமாறுதோறுமதிமாறுகொண்டுபலவாதமோதிமருள்வே
னதுதீரவாய்மையிதுவென்றுகாட்டியருள்செய்தசெய்கையெளிதோ
பொதுவாட்டுகந்துவளாகோவிருந்தபுரமன்னுஞானமணியே

(68)

மண்ணீர்வீசும்புகனல்காலருக்கன்மதியாவியென்னுமுறையா
வெண்ணீர்மை‍கொண்டவிவையெட்டுமன்றியுலகென்பதில்லையிவை‍யோ
யண்ணாவுனக்குவடிவாகுமென்னிலவைதோறுயிர்க்குயிரத்தாங்
கண்ணானதெய்வமெவா வேறுளார்கள்கலைசைப்பதிக்கிறைவனே.

(69)

வனந்தோறலைந்துவிரதங்கள்பூண்டுசடைகட்டிவாடலுறினுந்
தனஞ்சேர்ந்துயர்ந்தகுலத்திற்பிறந்துசதுர்வேதமோதிவரினுந்
தினஞ்சாத்திரங்கள்பலகற்றுவாதுசெயவல்லரேனுமெவனா
மனந்தாதியானகலைசைச்சிவன்றனருளைப்பெறாதுவிடினே

(70)

வேறு.

விடரொடுதூர்த்தர்பேதையர்கயவர்வேழம்பரனையரோடுறவாய்
நடையெலாங்கெடுத்தேயிழிதொழில்விரும்பு நாயினேனுய்யுமாறுளதோ
மடலவிழ்கமலவாவிகடோறுமாதரார்வளம்புனல்குடையந்
தடநெடும்பரிசைக்கலைசைமாநகர்வாழ்தற்பராசிதம்பரேசுரனே.

(71)

சுரிகுழன்மடவாரிளமுலைப்பணைப்புந் 
       துகிலிறைசோர்வதுநகையும்,
வரிவிழித்தொழிலுஞ் சேயிதழ்த்துடிப்பு 
       மனத்திடை யெழுதிவைத்தழிவேன், 
றெரிதமிழ்க்கலைசைச் சிவபிரான்
       வடிவுஞ்செய்கையுந் தன்னடியார்க்குப், 
பரிவுகூரருளு மனத்தகத்தெழுதாப் 
       பாவியேற் கினிப்புகலென்னே.

(72)

என்பினைநரம்பாற் கட்டி மேற்றோல்போர்த் 
        திறைச்சியு மூளையுமடைத்த, 
வன்புழுக்குரம்பை நாற்றமென்னாது 
        மஞ்சளு மாடையுமணியு, 
முன்புறநோக்கி மாதரென்றெண்ணி 
        முயங்கிட முயலுதிநெஞ்சே. 
யன்புறுங்கலைசைச் சிதம்பரேசுரன்றா 
        ளடைந்துளோர் மதிப்பரோவனையே.

(73)

உன்னுமுன்கடலு மலையும்வானகமு 
        மோடுவைமீளுவைவறிதே,
பன்னிடுமெல்லாங் கிடைத்ததாய்மதித்துப் 
        பாவனைசெய்து தேக்கிடுவா, 
யென்னிதிற்பயனென் றோர்ந்திலாய்கலைசை 
       யீசனைப்பணிந்திலா யெளியேன்,
றன்னையுமுடன்கொண் டிழுத்திழுத்தலைத்தாய் 
       தக்கதோ மனக்கருங்குரங்கே.

(74)

மனக்கருங்குரங்கின்கைவசப்பட்டு
        மயங்கினேன்பதைபதைத்துருகேன், 
கனக்கறைமிடற்றாயென்றழைத்தலறேன்
        கலைசையைச்சேர்ந்திலேனடியா,
ரினக்குழாத்தெய்திச்சிவநெறி
       யொழுகேனென்செய்கேனேழையேனந்தோ,
வுனக்கெவனடுத்ததாவவென்றருளா 
       யுலந்துபோனேன்சிவமுதலே.

(75)

சிவனெனுமொழியைக்கொடியசண்டாளன் 
       செப்பிடினவனுடனுறைக, 
வவனொடுகலந்துபேசுகவனோடரு
       கிருந்துண்ணுகவென்னு, 
முவமையில்சுருதிப்பொருடனை
       நம்பாவூமரோடுடன்பயில்கொடியோ, 
னிவனெனக்கழித்தாலையனேகதி
       வேறெனக்கிலைகலைசையாண்டகையே.

(76)

ஆண்டவன்றன்னை யடிமையென்றுரைப்பா 
       ரடிமையையாண்டவனென்பார், 
மாண்டகுபதியைப் பசுவென்றும்பசுவைப் 
       பதியென்றுமதித்துனையிகழ்ந்தே, 
தாண்டருநிரயக்கிடங்கினில்
       வீழுஞ்சழக்கரோடிணங்குறாவரமே, 
வேண்டினேனருளாய் கலைசைமாநகரின்
        மேவிவாழ்ந்தருள்பசுபதியே.

(77)

பதியுமோகத்தான்மானத்தான்மருளாற் 
        பற்றியசார்பினாலுன்னைத், 
துதிசெயாதிகழ்வோரிகழுககலைசைச் 
        சுந்தராசிதம்பரேசுரனே,
மதிபொதிசடையா யாங்களெல்லோமும் 
        வழிவழியுன்னடித்தொழும்பே, 
நிதியெனவுடையேமென்றுமிக்கருத்தே
        நிலைபெறச்செய்துகாத்தருளே.

(78)

அருண்மடைதிறந்தநோக்கமும்
       வரதாபயங்களுமம்புயக்கரமுந்,
திருமுகப்பொலிவுங்குறுநகையழகுஞ் 
        செஞ்சுடர்மகுடமுமரையின்,
மருவுதோலுடையுஞ்சேவடித்துணையு
       மகிழ்சிவகாமநாயகிசே,
ருருவுமாய்க்கலைசைச்சிதம்பரேசுரரென்னுள்ள
      கங்கோயில்கொண்டனரே.

(79)

கொண்டல்போன்முழங்கிக் 
       கூற்றுவனெதிரேகுறுகிடநாடியுந்தளரக், 
கண்டவரிரங்கவைம்பொறிகலங்கக் 
       கண்டமேலையெழுந்துந்தி, 
மண்டிடவறிவுகலங்குமந்நாளுன் 
       மலரடிவழுத்திடமாட்டே,
னண்டர்சூழ்கலைசைப்பராவின்றே 
       யடைக்கலங்கண்டுகொண்டருளே.

(80)

 

வேறு.

அருவினனுருவினனருவிலனுருவில
னிருளினனொளியினனிருளிலனொளியிலன்
மருவளர்கலைசையின்மகிழ்பவனிகபர
மிருமையுமெழுமையுமெனையுடையவனே.

(81)

அவனவளதுவெனுமவைதொறும்விரவினை
யிவனவனெனவுணர்வரியதொரியல்பினை
தவமலிகலைசையின்மருவியதகுதியை
சிவனெனுமொழியினையிவையுனசெயலே.

(82)

செயலெவரறிபவர்திருவளர்கலைசையின்
மயிலியலுமையொடுமகிழுவைமதனுட
லியலறவெரிசெய்துமுனியெனவடநிழ
லயலினுமமர்குவையதிசயமரனே.

(83)

அரகரகரவெனவலறிடுபுலவரொ
டரியயன்வெருவுறவருமிடமமுதுசெய்
தரிலறுமமரரென்னொருபெயரமைவுற
வருள்பவர்கலைசையிலரனலதிலையே.

(84)

இலவிதழ்மடநடையுமையொடுமிரசத
மலைமிசையமர்பவர்மகிழ்தருமிடமா
நிலைபெறவளமையுநிதிகளுமளவறி
கலைகளுநிறைவுறுகலைசைநன்னகரே.

(85)

நகவலர்திரிபுரநலிவுறவழலென
மிகவலரரியயன்வெருவுறவுளமது
புகவலர்மதனுடல்பொடிபடவிழியெரி
யுகவலர்கலைசையினுறையிறையவரே.

(86)

இறையவனிறையினிலியமனையுதைசெய்த
நிறையவனிறையுறுகலைசையினிலவிய
மறையவன்மறைவறவளரடியவரக
வறையவனறைபுனலவிர்சடையவனே.

(87)

சடைமுடியரவணிதலைகலன்வனமிட
முடையுரிகழுதினமுணவதுபலியெனு
மடைவினர்கலைசையினடிகளையவனியி
னிடையிறையெனவழிபடுபவரெவரே.

(88)

எவனுலகுயிர்தொறுமிசைவுறுமருவின
னெவனவரவர்தமைவினைவழியிருவின
னெவனெனையுடையவனிணையறுபரசிவ
னெவனவனுயர்கலைசையில்வருமிறையே.

(89)

இறவொடுபிறவியினிழிதருமெளிய
னிறைசுகவடிவினிலைபெறவருளின
னறிவொடுவழிபடுமடியவர்குழுமிய
செறிவுறுகலைசையில்வருபரசிவனே.

(90)

வேறு

சிவந்தமேனியாய் போற்றிநாயினேன் 
        செய்திடும்பெரும்பிழைபொறுத்துவான்,
சிவந்தரும் பெருங்கருணைபோற்றிகற் 
        சிலைவளைத்து முப்புரங்கணீறெழச்,
சிவந்தவாளியாய்போற்றிகாலனைச் 
       சிதைத்துருட்டியன்றோலமென்னவஞ்,
சிவந்தபாலனைக்காத்தளித்திடுஞ்
      செல்வபோற்றி தென்கலைசைவாணனே.

(91)

வாணனார்மனச்செருக்குமாறிட மறுவில் 
        கண்ணனையேவல்கொண்டுபின்,
னாணுறாதவர்க்குனதுகோயிலி 
        னடனகாலையிற்குடமுழக்கிடக்,
கோணமால்வரங்கொடுத்தளித்திடுங்குழக
        போற்றிதென்கலைசைமேவிவாழ்,
நீணிலாப்பிறைச்சடிலமாமுடி
       நிமலபோற்றிமற்றெங்கண்மன்னனே.

(92)

எங்குநோக்கினு மங்கெலாமெனக் 
       கிருண்டகண்டமு நான்குதோள்களுங்,
கங்கைவேணியுமுக்கணுஞ்
       சிவகாமிபாகமும்கமலபாதமுஞ்,
செங்கைமான்மழுப்படையுநீற்றொளி
       சிறந்தமார்பமுங்காணவெய்திநின்,
றங்கணச்சநீத் தருள்சுரந்திடுங் 
       கலைசைவாணநின் னடிகள்போற்றியே.

(93)

போற்றிபோற்றியென்றமரர்மாதவர் 
        புவியுளோர்திரண்டிசைமுழக்கிட,
நீற்றொளிச்சிவநேசர்வாழ்த்தவின் 
       னியங்களார்ப்பெழத்தெரிவைமாரிளங்,
காற்றினொல்குபூங்கொடியினாடிடக் 
       கலைசைவீதியிற்கௌரியோடுநீ,
யேற்றின்மேல்வருஞ்சேவைதந்தெனை 
      யாண்டுகொண்டவாபோற்றியெந்தையே.

(94)

எந்தைநீயெமக் கன்னைநீயெமக் 
       கிறைவனீயெமை யாண்டநாயனீ,
சிந்தைநீசெய்யுஞ்செயலுநீபெறுஞ்செல்வ
       நீதொழுந்தெய்வநீகற்கும்,
விந்தைநீயெப்பில்வைப்புநீநசை
      வெறுப்புநீயலால்வேறுகண்டிலேங்,
கந்தவார்பொழிற்கலைசைவாழ்
      சிவகாமியாகநின்கருணைபோற்றியே.

(95)

கருணையாளனேபோற்றிதென்பெருங்கலைசை
       யாளனேபோற்றிநின்னலா,
லுரிமைவேறிலேன்போற்றிபாசநோயொழியுமாறு
       செய்போற்றியாட்கொளக், 
குருவுமாயினாய்போற்றிவீட்டினைக் 
       கூடவேண்டினேன்போற்றிஞாலமேற்,
பருவராதருள்போற்றியிவ்வுடற்
       பாரமாற்றிலேன்போற்றியையனே.

(96)

ஐயனேயடிபோற்றிபேரரு ளாளனேயடி 
      போற்றியன்பர்பான், 
மெய்யனேயடி போற்றிதில்லைவாழ் 
      வித்தகாவடி போற்றிபொய்யர்தம், 
பொய்யனேயடி போற்றியீறிலாப்
      புராணனேயடி போற்றிமான்மழுக், 
கையனேயடி போற்றிதென்பெருங்கலைசை
      யாயடி போற்றி போற்றியே.

(97)

போற்றிபோற்றிபேரின்பஞானமாப் 
        புணரியாய்நிறைந்தெங்குமாயினாய்,
போற்றிபோற்றியோர்மறுவிலாப்
        பெரும்புகழ்படைத்தவானந்தவெள்ளமே,
போற்றிபோற்றிமெய்யன்பர்
        சிந்தையிற்பொங்கியூறுதீஞ்சுவைக்கரும்பனே, 
போற்றிபோற்றிதென் கலைசைவைப்பனே
        பொறுக்கிலேனினிமாயவாழ்க்கையே.

(98)

மாயனைக்கணையாகவேவினைமாயனைவிடையாகவூர்ந்தனை
மாயனைத்திருமனைவியாக்கிமுன்மணந்துசாத்தனைத்தந்தளித்தனை
மாயனுக்கொருபாகமீந்தனைமாயனுள்ளமேகோயில்கொண்டனை
மாயனேத்திரமலர்ந்ததாளினாய்வரதபோற்றிதென்கலைசையீசனே.

(99)

ஈசனேதிருக்கலைசைமேவிவாழிறைவனேசிவகாமநாயகி
நேசனேயருட்சிதம்பரேசனேநித்தநித்தநெக்குருகியேத்துவோர்
பாசவேரறப்பறிக்குநின்னிருபாதபங்கயம்போற்றிபொய்யெலாம்
வீசிமேலைவீட்டின்பநல்குவாய்மெல்லமெல்லவந்தெனைத்திருத்தியே.

(100)


ஆகச்செய்யுள் - 101.
கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி முடிந்தது. 

மெய்கண்டதேவர் திருவடி வாழ்க.
சிவஞானயோகிகள் திருவடி வாழ்க.

 

Related Content