logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

மேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை

ஆசிரியர்: கோயமுத்தூர் கந்தசாமி முதலியார்

மேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை
கோயமுத்தூர் கந்தசாமி முதலியார்


 

Source: 
"மேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை"
இஃது கோயமுத்தூர் வித்துவான் கந்தசாமி முதலியாரவர்களால் 
இயற்றப்பட்டு கோயமுத்தூர் கலாநிதி அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
விஷு வருஷம் கார்த்திகை மாதம்
1881 வருஷம்



சிவமயம்
திருச்சிற்றம்பலம்

பேரூர் மும்மணிக்கோவை


காப்பு 

மூவுல கேத்தும்பேரூர் மும்மணிக்கோவைக் கெமது
நாவுலவிவாக்கு வளநல்குமால் – பூவுலகின்
மாலடைந்த பாம்புருவ மாற்று பட்டியானைமலர்க்
காலடைந்து கைதொழுதக் கால்.

1


நூல்

ஆசிரியப்பா
பூந்துணர் பொதுளிய சேந்தண் சோலை
சோலையி னகமெலாம் வாலிதாம் பொய்கை
பொய்கையி னயலெலாம் தையல ரீட்டம்
தையலர் முகமுங் கையுமா மம்புயம்
அம்புயங் கண்டதி வெம்பய மெய்திப்
பயமிகுத் துடையவக் கயனிடை யொளிப்ப
விடையிடை வதிதரு நடையுடை மீன்கணங்
கண்ணிணை நோக்கி யுண்ணனி வெருவி
விண்ணினிற் பாயவங் கண்ணிய பொழில்வயின்
வயின்றொறுந் தண்ணிறான் முயன்றிடை தாக்கலின்
இன்றேன் மாரி நன்றுபெய் மழையெனப்
பெய்துயர் பைங்கூ ழைதுற வளர்க்கும்
வளங்கெழு பண்ணை விளங்கிய சிறப்பின்
ஓரூர் நிகரிலாப் பேரூர்க் கிறைவ
பதம்பெறு மேலைச் சிதம்பர தேவ
வாஞ்சித் தவைதருங் காஞ்சிமா நதியாய்
பிறவாப் பேறும் இறவாப் பேறும்
பிறவா நெறிப்பெயர் பெற்றவித் தலத்தி
லுறைவோர் தமக்கே யுதவு முண்மைக்குப்
பிறவாப் புளியொடும் இறவாப் பனையைச்
சான்றாய் நிறுவிய தோன்றால் கேண்மதி
பிறந்துழிப் பிறவா திறந்துழி யிறவாது
நிற்புழி நில்லா துற்பவக் கடலிடை
மறங்கிளர்ந் தியக்கக் கறங்கெனச் சுழலுறும்
யானா டறியாமேனாட் டவத்தால்
விழியிலா வறியன் கிழியீடு பெற்றென
நற்றல மிதில்வரப் பெற்றன னாதலால்
வானோர் தமக்கும் வழங்கிடற் கரிய
ஞானோப தேசமும் நான்பெறற் குரித்தே.

1

வெண்பா

உரியபல வானவர்தம் மூரும் வேற்றூரும்
அரியயனார் தம்மூரும் அந்தோ – பெரிதென
ஓரூரை யான்வேண்டேன் ஒன்னார் புரம்பொடித்தான்
பேரூரை யானடைந்த பின்.

2

கலித்துறை
பின்னப் படும்பல் சமயப் பிராந்தி பெரிதலைப்ப
என்னப்பன் என்றாய் எனக்குயிர் என்குருவென் றடைவே
பன்னப் படும்பல் பொருளாகும் பேரூர்ப் பசுபதியை
முன்னப் படும்பொழு தெல்லாம் பொய்யாகி முடிந்ததுவே.

3

ஆசிரியப்பா
முடியாப் பொருளைப் படியா லளப்பினும்
மக்களை மாதரை ஒக்கலை அளிப்பினும்
தள்ளியங் கவையெலாங் கொள்கில னாகி
யயிரே கொண்டுறு மியமனார் வந்துழிப்
பூசைகைப் புக்க பாசிளங் கிளியென
நாச்செற் றைய மீச்செறி வெய்தக்
காலொடு கையை மேலெடுத் தியக்கவும்
அவசமாய்க் கிடக்கும் திவசம் வந்திடுமேல்
அஞ்சேல்; என்பார் யாவ ரெஞ்சா
தளவிலாப் பற்பல வளமெலாம் மலிதலின்
பேரூர் பேரூர் பேரூ ரிதுவெனப்
பேர்பெற் றிலகிய வூரினுக் கிறைவ
விச்சையா லுருவுகொள் பச்சை வல்லிதாய்
மீக்கொளப் படர்தரு மாக்கொளு கொம்பே
நலியா வன்பின் மலர்தரு மலரே
பத்தியாம் புலத்தில் வித்திய வித்தே
நீயே அஞ்சலென் பாயேல் உய்வேன்
வேற்றோர் தெய்வங் கூற்றை யுதைத்தமை
நாட்டினில் வழங்கக் கேட்டது மிலையால்
உலகுயிர்க் கிடுக்கண் பலசெயுங் கொடிய
காலனைக் காமனை யால காலத்தை
வன்றிற லடக்கிய நின்றனிச் சரணே
சரணென வடைந்தே னைய
அரணதா யெனையாண் டஞ்சலென் றிடற்கே.

4

வெண்பா
இடராம் பெருங்கடலை யேறினோம் ஏறித்
திடராகும் பேரூரைச் சேர்ந்தோம் - அடரும்
முரசம் பலமுழங்கு முன்றிலின்கண் மேவி
அரசம் பலங்கண்டோ மால்

5

கலித்துறை
கண்டன்ன மென்மொழி வேலன்ன வாள்விழி நீள்கதலித்
தண்டன்ன பொற்குறங் காயிழையாந் தழலுண்ணச் செல்லும்
வண்டன்ன பேதையை யுயக்கொள்வா யகல்வா னகத்தே
பண்டன்ன மானவன் காணாத பேரூர்ப் பரம்பரனே.

6

ஆசிரியப்பா
பரம்பர னுவந்து நிரந்தர மமர்தலின் 
ஒள்ளிய தாகிய வெள்ளியங் குன்றினை
யொப்பத் திகழ்ந்தே யப்பெயர் தாங்கிய
வெள்ளியங் கிரியும் வள்ளி மணாளன்
முருகற் கினிய மருதக் கிரியும்
அரியயர் கிரியொடு தெரிவைதன் கிரியென
ஐங்கிரி நடுவுட் டங்கு பேரூரிற்
கிட்டருந் தவமுடைப் பட்டிமா முனிவனும்
மாமுனிக் கணந்தொழுங் கோமுனிப் பனவனும்
காலவ னாதிய சீலருந் தொழுதிடப்
பங்குனி யுத்திரத் திங்களின் ஞான்று
பரசிய பெருமை யிரசித மன்றத்துள்
மேனிவந் தோங்கிய ஞான பீடிகையின்
மாண்டகு நடநவில் தாண்டவ ராய
தேவ தேவ மூவருண் முதல்வ
கால கால ஆலமார் களத்த
காம நாச சோமவன் யார்க்க
லோசன பாவ மோசன நீயே
யோரால் நீழ லீரிரு யோகியர்க்
கியோகினை யுணர்த்தும் யோகியா யமர்ந்து
கரமலர் காட்டிய பரமயோ கத்தில்
வீற்றிருந் தருளிய வாற்ற லுணர்ந்தும்
அந்த யோகுசி தைந்திடல் குறியா
துன்றிரு முன்னர்ச் சென்றிடும் அடியார்
பாடியும் ஆடியும் பலதொழில் புரிகுவர்
நாடிடி னவர்செயல் நன்றுகொல் யானே
அகநோக் கிலனே யாயினு மாகச்
சகநோக் குடைய சழக்கனா தலினால்
அந்நிலை புரியாது சந்நிதி யடைந்துழிப்
பாடிலேன் ஆடிலேன் பரவிலே னுவகை 
கூடிலேன் விம்முக் கொண்டக மலரே
னுண்ணெகிழ்ந் துருகிக் கண்ணீர் சொரியேன்
கைம்மலர் முகிழ்த்து மெய்வியர்ப் படையேன்
குற்றி யென்ன வுற்றமர்ந் துறைகுவன்
குற்றமாகக் கொள்ளலை அருளை
முற்ற வழங்குதன் முறைமையென் றனக்கே.

7

வெண்பா
என்றன் கனவகத்தில் ஏந்தலையான் கண்ணுற்றேன்
உன்றன் பேரூரே துரையென்றேன் – அன்றதுவே
தானென்றான் மெய்ப்பொருளைச் சற்றுணர்த்திப் போதியென்றேன்
கானென்றான் போனான் கரந்து.

8

கலித்துறை
கரவறியாக் கல்விகல் லாதவன் கற்றநல் லவர்க்குத்
தரவறி யாதவன் தள்ளுண்டவன் சிவசந்நிதிக்கு
வரவறி யாதவ னானாலும் வந்து வணங்கினனல்
குரவறியாச் செல்வர்வாழ் பேரையூ ரருட்கோ விலையே.

9

ஆசிரியப்பா
இலைமலி சோலை யுளவிரை நாடி
வெண்பணி லத்திற் செம்முக மந்திகள்
பைந்தேன் பிழிந்து பொன்னிறப் பலவின்
கனியெதி ரேந்தக் காய்சினப் பேடை
கடுவன் வரவு தாழ்த்தமை நினைத்துச்
சிறிதுள முனியப் பெரிதகம் வருந்தித்
திணிந்த கோபந் தணிந்திடற் பொருட்டா
ஏறிய காத லிரங்கிய நெஞ்சமொடு
காலின் மிசையே தலைவைத்து வணங்குபு
நல்லன நவிற்றியவ் வல்லதை யகற்றிடும்
ஒப்பிலா வளஞ்சேர் திப்பியப் பேரூர்
அரச வனத்தி லிரசித மன்றத்துத்
தட்டமிட் டருளிய பட்டியெம் பெரும
பத்தருக் கெய்ப்பினில் வைத்திடும் வைப்பே
யானொன்று வேண்டுவ துளதே யதுதான்
உண்பன வல்ல வுடுப்பன வல்ல
காண்பன வல்ல பூண்பன வல்ல
ஊர்ந்திடற் குரிய வூர்திக ளல்லச்
சார்ந்திடற் குரிய தாவர மல்ல
இம்மை அம்மை யும்மையு மலவால்
என்றிடு மிவற்றி னொன்றுமற் றன்றென
நீதான் விழைந்த தியாதோ துதியெனிற்
பேரூர் நெஞ்சிற் பிரியா துறைதரும்
சீரூ ரடியா ரடியார்க் கடியார்
மன்னிய மனைசீத் தகற்றிய
துன்னரும் பாதத் துகளதா லதுவே.

10

வெண்பா
துகளாக வெப்பொருளுந் தோற்ருமலமா
திகளான மாசேதுஞ் சேரா –வகழார்
பிறவா நெறிபடைத்த பேரூரை யண்ணிப்
பிறவா நெறிபடைத்த பேர்க்கு.

11

கலித்துறை
படையேறு தானைதற் சூழப்பல் செல்வம் படைத்து வெற்றிக்
குடையேறு மாமுடிக் கோமக னாவதிற் கொல்லை வெள்ளை
விடையேறு நம்பிதன் பேரூரிலூர் மலமேந் துழலும்
நடையேறு சூகர மாவது சாலநலந் தருமே.

12

ஆசிரியப்பா
நலம்பெறு குறுமுனி நிலம்படர்ந் தன்று
சையத் திழிந்து வையமேற் படர்தரு
பொன்னி யென்னும் பொருவறு நன்னதி
சென்னி நாட்டிற் சேர்வதன் முன்னர்ப்
பன்னாட் டினிலுந் துன்னாற் றினையெலாம்
வென்றுதன் கீழ்ப்படுத் தின்றுயர் கொங்கிலும்
வந்தன ளெனச்சிலர் முந்திவந் துரைசெயக்
கொங்கு நாட்டிற்கோர் பங்கமீ தாமெனக்
காஞ்சிசூழ் மருங்குக் காஞ்சிநன் னதிதான்
விடையுடைப் பகவன் சடையினை நிகர்த்த
பச்சிம வெண்குவ டுச்சிநின் றிழிந்து
போதி வனத்தரன் பாதம் பணிந்து
திருவருள் கைக்கொடு வருபொழு தெதிர்ந்த
பொன்னியை நோக்கி யென்னிவ ணுற்றனை
யெனைபோ லீசன் றனைப்பூ சித்திலை
வெள்ளியங் குன்றிடை யுள்ளநீ யோவலை
அரசக் கானம் பரிசித் தாயலை
வியனுல கோர்க்குப் பயனளித் தாயிலை
என்புறு பாவிதன் துன்பொழித் தாயிலை
அகமெலி சோழன் முகமளித் தாயிலை
கரத்திற் றொங்கினை கரகத் தடங்கினை
காக்கை காறள்ளித் தாக்க வலைந்தனை
சத்தியந் தவறி யித்தலத் தடைந்தனை
கொண்டோன் துயரங் கண்டோட் டெடுத்தனை
நீயோ கொங்கெனுந் தூய்நிலத் தடைகுவை
யென்னப் பொருதுழிப் பொன்னிநா ணெய்தி
ஆண்மை விடுத்துக் கேண்மை கொண்ட ளவளாய்க்
கொங்கிற் புகாது தங்குசோ ணாட்டிடைச்
சென்றுபல பயிரையும் பிற்பட வளித்துந்
திருமலி காஞ்சியைப் பொருவ லாமையினாற்
சித்துரு வெடுத்தொளித் துற்றனள் புணரியைப்
பரவுறு காஞ்சிவரநதி யாயிடைப்
பொன்னியை நொய்தாய் வெந்நிடக் காண்டலின்
வையக மின்னு நொய்யலென் றோதிடும்
அவ்விடை தணந்து செவ்விதிற் போந்து
விரிபுகழ்ப் பேரூர் பிரியா தமர்ந்தெனத்
திகழ்தரு காஞ்சி மகிழ்தரு கரையிற்
போதியங்கான் வளராதியம் பகவ
மரகதம் படர்வித் துருமப் பிளம்பே
அன்ப ரென்புருக்கு மின்ப வாரிதியே
வழக்கொன் றுன்பாற் கிளக்குத லுளதது
தேவரும் புகழ்தரு நாவலூர் நம்பியைத்
தொண்ட னிவனெனப் பண்டுநீ வழக்கிட
வெறுத்தப் பெரியோன் மறுத்திட விடாது
மூத்த வோலைகச் சாத்தவை காட்டி
அடிமை படைத்து நெடிது சிறந்தனை
தொண்டா யென்னைக் கொண்டரு ளிலையேற்
றொண்டர்தந் தொண்டாய்க் கொண்டரு ளெனவே
யானே யிரப்பவு மேனோ கொள்கிலை
கேளார் போல வாளா விருந்தனை
மிக்குயர் நீயோ பக்கவா தியுமலை
என்வயின் நினக்கோ வன்ம மாதிகளிலை
யென்னே காரணம் அதனால்
என்னையும் அடிமைகொள் ளென்னநின் றிடலே.

13

வெண்பா
என்னே புதுமை யிஃதெல்லோருங் காண்மிகள்
தன்னதாம் பேரூர்ச் சபைநடுவே- அன்னோ
வாடுமகிழ்ந் தாடுமெமெ தையனைப் பாம்பென்னவின்று
மாடுமகிழ்ந் தாட்டுதிதோவந்து.

14

கலித்துறை
வந்தித்திடு தினம்வாழ்த்து பஞ்சாக்கர மந்திரத்தைச்
சிந்தித்திடு திருப்பேரூர் வணங்கிச் சிவனையுள்ளே
பந்தித்திடு தவிராதின்ன செய்யினீ பாவிநெஞ்சே
தொந்தித்திடு பவப்போர் வெல்லவாய்த்த துணையெனக்கே.

15

ஆசிரியப்பா
துணையது பிரியா தணைதரும் பிடிதம்
மேனிதை வந்திட யானையின் குழாங்கள்
குன்றிடை மதநீர் நின்று சொரிவன
ஆங்கதே போல வோங்கு மாடத்து
முகிற்குலம் வயிற்றைத் துகிற்குலந் தடவத்
தூவா மழையை யோவாது பெய்வன
இவ்விரு நீத்தமும் அவ்வயி னொன்றாய்க்
கங்கையை யமுனை கலந்த தேய்ப்பத்
தங்கிப் பண்ணையின் றருண நோக்கி
யாற்றி வளர்த்துப் போற்றிய வளஞ்சேர்
மருதவைப் பிடையமர் தருதிருப் பேரூர்ப்
பட்டித் தலத்துறை பட்டிப் பெரும!
உள்ளத் துள்ளே யூற்றேழு மமுதே!
கள்ளக் கருத்திற் கைக்குமின் சுவையே!
முப்புவ னத்தும் ஒப்பறு முதலே!
யாவரும் யாதும் யாவுமா னவனே!
கரிபரி யாதிய வுரியவூர் திகளொரீஇக்
கரியுழு வைத்தோல் தெரிய வுடுத்ததூஉஞ்
செம்பொற் பணிதி கொளம்பொற் கலனொரீஇ
என்பொடு சிரமுங் கொம்பு மணிந்ததூஉங்
கடல்தரு மமுதைக் கடவுளர்க் கீந்தொரீஇக்
கடல்தருங் கொடிய கடுவிட மயின்றதூஉந்
தூய்மைத் தலனொரீ யீமத் தமர்ந்ததூஉம்
உண்கல னொரீத்தலை வெண்கல னெடுத்ததூஉம்
இன்ன பிறவும் நின்னிடை நிகழ்தலின்
தீயவை யனைத்துந் தூயவாம் நினக்குத்
தீக்குணப் பாவியேன் செயலும்
ஏற்குமால் தகவுட னெனவடுத் தனனே.

16

வெண்பா
தனதாயகத் தமைத்துச் சாற்றுதியே நெஞ்சே
மனதாம் பகையடங்கி வாய்க்கு – முனமேலோர்
செப்பிலக்கா நத்தினரைச் செந்நெறிக்க ணுய்க்கவல்ல
பிப்பிலக் கானத்த தவன்பேர்.

17

கலித்துறை
பேரைப்பதி யென்றொருகாற் சொலினமன் பேர்க்கணக்கிற்
பேரைப்பதியா தகற்றிடு மும்மலம் பேர்த்தவர்தம்
பேரைப் பதியென வாக்கிடும் வேண்டிய பேறுதரும்
பேரைப்பதியினை யொத்திடுமேகொல் பிறபதியே.

18

ஆசிரியப்பா
பதியா நீயே துதிபெறு முலகா
மல்ல லம்பண்ணை யிலெல்லை யிலாத
சராசர பேதம் விராவும் பயிரெலாம்
ஆக்கி யளித்தழித் தூக்கிய வுழவினில்
ஒல்லைப் பழமைத் தொல்லே ருழவனாய்
உற்றினி தமர்ந்து நற்றலப் பேரூர்ப்
பண்ணைநோக் கிடுவான் பள்ளனாம் வடிவொடு
நண்ணியே ருழுதொழி னடாத்துபு நோக்கியும்
அமையாக் காதலோ டுமையாள் தன்னையும்
எள்ள லிலாத பள்ளியாய் வரநிறீஇ
வயலிடை நடவு பயிலப் பயிற்றிடிற்
பேரூர்ப் பண்ணையின் சீர்சொலற் பாற்றே
அத்தகு பேருர் அமர்தரு வித்தக!
முத்தமிழி லிலக்கண முனமொழி புலவ!
என்னுயிர்த் தலைவி சின்னஞ் சிறியளாய்த்
தெருளா விடத்துனைப் பொருளாக் கொண்டிலள்
ஐம்புலச் சிறுவர் செம்பொறிச் சிறுமியர்
சிற்றினஞ் சேர்ந்து சிற்றிலாட் டயர்ந்தும்
அந்தக் கரணத் தொந்தமிட் டாடிப்
படர்மனக் குரங்கின் நடனம் நோக்கியுஞ்
சகசா லத்தே யகமகிழ் வெய்தி
முரண்டர நடந்தனள் தெருண்ட காலை
அன்னவை யொழித்துத் தன்னந்தனியளாய்
நீதரப் பெற்ற காத லீர்ப்பத்
துன்னெறி யாகிய பன்னெறி கடந்து
தன்னுயிர்த் தோழியாம் என்னையும் அயர்த்துப்
பேரூர் கேட்டுனைப் பின்தொடர்ந் துற்றனள்
நீவரத் தாழ்க்கில் ஆவி தரிக்கிலள்
ஆதலின் வந்தவட் புணர்ந்து
காதல்சே ரகத்துக் கலத்தலுன் கடனே.

19

வெண்பா
கடனாகும் நிற்கே கலைசோரின் கைக்கும்
உடனா முபசார முண்டோ – மடமையேம்
போதிப் பதியாது முற்றுணர்ந்த புங்கவர்வாழ்
போதிப் பதியாய் புகல்.

20

கலித்துறை
புகலற்ற பேர்க்குப் புகலாகும் பேரைப் பொருப்பன்பினே
பகலற்ற போது சுடுஞ்சுட ரம்புலிப் பாய்ச்சலுக்கும்
இகலற்ற காலை வருத்திளங் காலுக்கும் எய்த்தடைந்தாள்
நெகலற்ற நெஞ்சு நினைப்பிற் சுடுஞ்சுரம் நேரிழையே

21

ஆசிரியப்பா
நேரிழை காணச் சீரர சம்பலத்
தொருநட நவிற்றிய திருநட ராய
எள்ளுக் குள்ளே யெண்ணெ யொத்துயிரி
னுள்ளுக் குள்ளே யொளித்திடுங் கள்வ
சொல்லரும் பொருளைச் சொல்லா துணர்த்த
அன்றுகை காட்டிய அற்புதம்போல
இன்றும் உலகோர்க் கியம்பா துணர்த்த
வொருகை
பிறந்திறந் துழலும் பீழைக் குடைந்தோர்
இம்மென விவ்விடை வம்மினென் றழைப்ப
வுடுக்கை யசைத்து நடத்த வமைத்தும்
ஒருகை
அங்ஙனம் போந்த வாருயிர்த் திரள்கட்
கெங்கணு மச்ச மில்லை யென்றும்
அஞ்சுத லொழிக்க நெஞ்சகத் தமைத்தும்
ஒருகை
ஐய நெஞ்சகத்து வையத்தீரே
இத்திற முற்றுஞ் சத்திய மென்னற்
கழல்சான் றாக்கித் தழல்கொள வமைத்து
மொருகை
இடர்தவிர்ந் திருப்ப தெங்ஙனென் றெண்ணலிர்
படர்மி னிந்தப் பதநிழல் தானே
வீட்டின் பாற்றெனக் காட்ட வமைத்தும்
இன்ன வண்ணம் நின்னருட் குறிப்பைக்
கைக்குறிப் பதனான் மெய்க்குறிப் புணர்த்திய
அக்குறிப் புணர கிற்றிலே னாயினன்
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்ணென மேலோர்
சொல்ல ளவாய்க்கண் இல்லே னாதலிற்
பல்சம யக்குழி யில்விழுந் துழல்வேன்
குழியிடை வீழும் விழியிலா மாக்களைக்
கோல்கொடுத் தழைப்பதே போல்வந் தெனக்குத்
திருவருட் கோல்கொடுத் தீர்த்துன்
அருகுற வரப்பணித் தாண்டரு ளுதியே.

22

வெண்பா
அருள்சேர வேண்டுதிரேல் வம்மி னஞ்ஞானத்
திருள்சேர வேண்டுதி ரேலெய்தி – மருவன்மின்
வானக்கோன் றன்பழியை மாற்றவல்ல பேரூராம்
ஞானக் கோமுத்தி நகர்க்கு.

23

கலித்துறை
தகரப் பொருளோடு நாட்டுப் பொருளு நவையறுசீர்
மகரப் பொருளுள வாரிப் பொருளும் வளமலிந்த
சிகரப் பொருளுடன் யாவுஞ் செறிந்து சிவனெனவே
யகரப் பொருளுடன் பேரூ ரமர்ந்த ததிசயமே

24

ஆசிரியப்பா
அதிசய வளஞ்சேர் பதிபல வற்றினும்
தலைமை படைத்துயர் நிலைமை யுடைத்தாய்
ஆரூ ரண்ணற் கருணடங் காட்டிய
பேரூ ரமர்தரு பிறைமுடிப் பெரும
மாயவன் வேதவி யாதனாங் காலை
மாயையின் வலியால் வாரணா சியினிற்
பொய்மொழி பிதற்றிய புன்மைதீர்த் தவற்குக்
கையொடு நாவையு மொய்யென வழங்கிய
பெருங்கரு ணைத்திறம் பெட்பின் நோக்கி
அருங்கதி நல்கும் அரச வனத்தில்
வாத ராயணனென மருவுதன் பெயரொரீஇ
வரத ராயனாம் வண்பெயர் நிறீஇத்
தேசுறு மேலாஞ் சிவவிர தங்களை
மாசறு மடியார் வழிபடு மத்தினத்
தொருநாண் முந்தி யுஞற்றுதல் போல
விருநாண் முந்தி யிருந்து பவசித்
தாவல் தீர வேவல்செய் தமர்ந்தனன்
அன்னவ னடிய ரதுகடைப் பிடித்தே
இன்ன முஞ்சிவ விரதங்கள் வந்தெதிர்ப்படு
மாதங் கிழமை யாதித் திதிமுன்
இவ்விரு நாளென வெய்திடு நாளே
திவ்விய நாளெனத் தேர்ந்துகொண் டாடுவர்
மாதவப் பெயரிய மாயவன் செய்சிவ
பாதகம் நீக்கிய பண்புகண் டியானும்
பலபல பிறவியிற் பாவம் புரிந்தவை
சிலவல அவையெலாந் தீர்த்திடற் பொருட்டாய்
வந்தினி துற்றனன் பேரூர்
எந்தையுன் னடியிணை யேன்றுகொ ளெனையே

25

வெண்பா
கொள்ளும் பிறவியினிற் குப்புற் றுழல்வதையும்
விள்ளும் படியடையும் வீட்டினையும் – உள்ளுணர
ஞானநோக்கம் பெறலா நாளும் பேரூர்ப்போதிக்
கானநோக்கப் பெற்றக் கால்

26

கலித்துறை
காலொன்று வெஞ்சமன் போய்விழச் சாய்த்தது கான்முளையாய்
வேலொன்று கையனைப் பெற்றது வேத மெனற்குரிய
நூலொன்று சொற்றது மாலயன் தேடியும் நோக்கரிதாய்ப்
பாலொன்று மாதினை வைத்தது பேரைப்பழம் பொருளே.

27

ஆசிரியப்பா
பொருள்தேர் வேதப் பூசுர ராகிய
மருள்தீர் தில்லை வனத்தம ரந்தணர்
மூவா யிரவரு முந்து வணங்கிய
தேவா வழகிய சிற்றம் பலவா
வுலகிற் சிலதலமுள்ளவைக் கெல்லாந்
திலக மாகத் திகழ்தரு பேரூர்
மற்றெத் தலத்தின் மன்னெனப் படுமா
வெற்றத் திறமெனில் எவ்வெத் தலத்தும்
பாதிரி கடம்பு பனிமலர்ச் சண்பகம்
மாதவி புன்னை மந்தா ரம்மகிழ்
தில்லை யிலந்தை சீர்க்களா மருது
வில்லம் நாவல் விரவிய வன்னியாம் 
ஒவ்வொரு மரனே யுரித்தெனப் படுமல
திவ்வெலா மரனும் இயங்கி யமர்ந்துழி
அரசு செலுத்தலி னரசெனப் பெயரிய
வரசக் கானம் அவற்றினுக் கிலதே
பேரூ ரரசெனப் பேசுவ தல்லது
சிற்றூ ரரசெனச்செப்பவும் படுமோ
காஞ்சிசூழ் வைப்பாய்க் கருத்திற் கருதரி
தாஞ்சிவ ராஜ தானியா கையினால்
அத்தகு பட்டி அத்தாணி மிசையமர்
வித்தக வென்முறை விளம்பவந் தடைந்தேன்
கருவழிப் பட்டிவண் வருவதன் முன்னர்
யானுறு துன்ப மானவை யுணர்கிலேன்
ஐந்தாண் டளவையி னடைந்த துன்பம்
அந்தோ சிறிதே அறிகுவன் அதன்பின்
மலசலத் திரளால் வருபல நோயாற்
கலைபயில் திறத்தால் பலவினைப் பரப்பால்
வருந்துறு பசியால் அருந்தல் பொருந்தலால்
தீமைசெய் மனமா திகளால் வாக்கால்
காமக் குரோத மோகா திகளாற்
பஞ்ச பூதத்தாற் பல்லுயிர்த் திரளால்
எஞ்சலில் கிரகா திகள்செயு மிடக்காற்
பருவம் வளரப் பருவரல் வளர்ந்தே
இருதலைக் கொள்ளி யெறும்பொத் துழன்றேன்
தாயினு மினிய தயாபர நின்பால்
ஆயவை அனைத்தும் அகற்றுதற் பொருட்டு
வருந்திய திறனெலாம் வழாதெடுத் தியம்ப
வருந்திறம் இல்லேன் அறையுமா றெங்ஙன்
பேசற் கறியாப் பிள்ளைதன் துயரமும்
ஆசைப் பொருளும் அழுகையாற் காட்டி
மொழிந்திடா வாறே போல
மொழிந்திட வறிகிலன் முற்றுமென் முறையே

28

வெண்பா
முறைசேர் திவாகரனார் முன்னிருளுக் குண்டோ
வுறையு முறையு ளுரையாய் – நிறைமனமே
பச்சைவல்லி சுற்றுமொரு பட்டிவரப் பெற்றக்கால்
இச்சைவல்லி சுற்றா தினி.

29

கலித்துறை
சுற்றாய் மதில்புடைசூழ் பேரையான் வந்து தோன்றுதற்குச்
சற்றாயினு மினித்தாழ்க்கில னீங்குச் சகுனம்பல
வற்றாலு மன்னதுணர்ந் தனனுள்ள மகிழ்சிறப்பப்
பொற்றா துகுத்து மலர்மாரி பெய்தது பூம்பொழிலே (30)

 

 

பேரூர் மும்மணிக்கோவை முற்றிற்று

 

 

Related Content