logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

பட்டீச்சுரப் புராணம்

ஆசிரியர்: திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் 
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் 
"
பிரபந்தத்திரட்டு" - பகுதி 1 (3332- 3369) 
பட்டீச்சுரப்புராணம் **


 


கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

** பிள்ளையவர்கள் இயற்றத்தொடங்கிய நூல்களிற்சில அபூர்த்தியாகவே 
நின்றுவிட்டனவென்பது பலர்க்கும் தெரிந்ததே. அவற்றுள், கிடைத்தவை 
பதிப்பிக்கப்படுகின்றன.
----------------
கடவுள் வாழ்த்து 

3332

விநாயகர்.
பூமேவு குழைச்செவிதம் புடையினெழு கடாங்கவரும் பொருட்டு மேன்மேற், 
றாமேவு வண்டரெலாந் துரப்பவகத் தொரு கருவி தகக்கொண் டாங்கு, 
மாமேவு பொன்பொதிந்த காற்கவரி தூங் கியொளி வயங்க மேவுங், 
காமேவு மைந்தடக்கை யானைமுகப் பெரு மானைக் கருத்துள் வைப்பாம்.

1

3333

ஆணைவிநாயகர்.
சீர்பூத்த பலபுவனத் தெவ்வுயிரு முனிவறத்தஞ் சிரமேற்கோட, 
லார்பூத்த நமதாணை யெனறெரிப்ப வாணைவிநா யகரென் றோர்பேர், 
நீர்பூத்த குணத்தமைந்து வன்னியடிப் பொடிமூடு நெருப்பு மான, 
வேர்பூத்த செம்மேனி வெண்ணீற்றோ டமர்பவர்தா ளிறைஞ்சி வாழ்வாம்.

2

3334

மதவாரணப்பிள்ளையார்.
நாமதவா ரணங்குறித்த படிகொடுதீ வளர்த்துமென நவிலுந் தக்க, 
நாமதவா ரணங்குசிவ மிகப்பினென வுங்கொள்ளா னண்ணு மாற்றண், 
ணாமதவா ரணங்குமிறுந் தடப்பட்டீச் சரம்புகுந்து நலியச் செய்தா, 
நாமதவா ரணங்குளிர்பூந் தாளருள வின்பநல நண்ணினேமால்.

3

3335

பட்டீசர்.
மாமேவு பண்ணவரு மெண்ணவரு மகவானு மறைநூ லாய
பாமேவு நாவலனுங் காவலனு முனிவரரும் பகர்மற் றோருங்
காமேவு பன்மலரு மென்மலரும் படியிறைப்பக் காட்சி நல்கு
தாமேவு திருவுருவோ ரெட்டீசர் பட்டீசர் சரணஞ் சார்வாம்.

4

3336

வெளியுறலுட் புகலின்றிக் களத்துநடு வமர்தருவெவ் விடமு நாளு, 
மிளிகிளர்பெண் ணுருவமுமா ணுருவமுமா கியவுருவு மருண்மு கத்தே, 
யொளிர்விழிக ளொடுநுதல்சான் முரண்விழியுந் தன்பெருமை யுணர்த்த வோவாத், 
தெளிகிளர்பட் டீசம்வளர் பட்டிலிங்கப் பெருமான்றாள் சேர்ந்து வாழ்வாம்.

5

3337

ஞானாம்பிகை.
நயனநுதல் பன்னிறத்த வயனரியா தியர்பலரு நயக்குமாறு, 
வியனமைய வேற்றிடவும் வேறுநிற முறாவனையான் மேனியேபோற்,
பயனமையும் வெண்மகளுஞ் செம்மகளுங் கலக்கவுந்தம் பண்பு மாறாக், 
கயன்மருள்கட் பல்வளைக்கைக் காமருஞா னாம்பிகைதாள் கருத்துள் வைப்பாம்.

6

3338

வண்ணிறங்கொள் பன்மலர்மா மகண்முதலோ ரிறைத் திடலால் வதிப ராக, 
மொண்ணிறங்கொ ளன்பர்மன மாயாவணுக் குழாஞ்செறிவ துணர்த்துங் காலுந், 
தண்ணிறங்கொள் பல்லறமுமடைந்துகோ லுபுசெறியுந் தகையு ணர்த்தும், 
வெண்ணிறங்கொள் பல்வளைக்கை யும்பெறுஞா னாம்பிகைதாண் மேவி வாழ்வாம்.

7

3339

சபாபதி.
வந்துதரி சித்திடுவார் மலமாசு மண்ணவெழு மாண்புபோலச், 
சிந்துபல சீகரமந் தாகினிவெவ் வினைக்காடு தீத்த லேபோன்
முந்துசுடர் விட்டெழுசெந் தழலின்மே னோக்கவொளிர் மூவா மன்றி
னந்துதிரு வருள்பெருக நடநவிலும் பெருமானை நயந்து வாழ்வாம்

8

3340

சிவகாமசுந்தரியம்மை.
3340. 
தொண்டுகாட் டிடுதிறத்தா லொவ்வொருவ ரனுபவிக்கத் துணிவார் பூமே, 
லண்டுகாட் டிடுபிரம னாதியர்மற் றென்செய்வாரவர்போ லாது, 
பண்டுகாட் டிடுமன்றுட் பரமர்புரி திருநடமாம் பரமா னந்தங், 
கண்டுகாட் டிடுக்கருணைச் சிவகாம சுந்தரிதாள் கருத்துள்வைப்பாம்.

9

3341

தஷிணாமூர்த்தி.
இருவரா லியற்றிரண்டு மெய்துருவ மெய்தாம லெந்தஞான்று, 
மொருவரா லளப்பருந்தன் னடிமருவி யின்பநிலை யுவப்பயாங்க, 
ளிருவரா லியற்றிரண்டு மெய்தாத திருவுருவ மெய்தி நாளு,
மொருவரா லளப்பருமா லடிமருவும் பெருமானை யுளங்கொள்வாமால்.

10

3342

வைரவக்கடவுள்.
அரிவிதிசே வித்திடுகாற் கையுளதென் னெனவிதியையரிவி னாவ, 
விரிதருபுண் டரிகமென வதனகத்தென் னெனவரியை விதிவி னாவப், 
பிரியமது வெனநகஞ்சூற் றலைச்சிவப்பென்சொற்றிரெனப் பிறர்வி னாவப், 
பரியசமழ்ப் பவர்கொளச்சூ லமுங்கபாலமுந்தரித்தோன் பாதம் போற்றி.

11

3343

அனுஞ்ஞைவிநாயகர்.
சடையிலிளம் பிறைபொலிய வதன்சாயை யெனமுகத்தோர் தவளக் கோடு, 
மிடையவொழுக் கமுதெனவெண் ணூலிலங்க வீசியவெண் ணிலவு மான, 
வடையரைவெண் படமிளிர வவ்வொளியை யஞ்சியிரு ளடிவீழ்ந் தென்ன, 
விடைதலிலுந் துருவமைய வளரனுஞை மழகளிற்றை யெண்ணி வாழ்வாம்.

12

3344

முருகக்கடவுள்.
இறவிதபுத் தலையுணர்த்த யமனைவருத் தியதந்தை யெண்ணந் தேர்ந்து, 
பிறவிதபுத் தலையுணர்த்த வயனைவருத் துபுமறைகள் பிதாவுஞ் சேயு, 
மறவிதபுத் துணர்மினந நியரெனறேற் றியகருணை வள்ள லன்ப, 
ருறவிபசு மயிலுகைக்குங் குமாரநா யகன்மலர்த்தாளுள்ளி வாழ்வாம்.

13

3345

திருநந்திதேவர். வேறு
இடையினொற் றொழியச் சூட லெப்பெய ரிறைக்கப் பேரே
யடைதரு தனக்கு மாக்கி யவன்பணி முடியிற் றாங்கிக்
கடையரேம் பணியு மங்கோ கனகநே ரடியிற் றாங்கு
முடையனெங் குரவர் முன்னோ னருளடைந் துய்வார் மேலோர்.

14

3346

அகத்தியமுனிவர்.
வரையரத் தழுந்த வாழி வற்றமால் சிவமாக் காணப்
புரையுதள் பதும மாகப் பொலியொரு கரத்தா லாற்றிக்
கரைநகை முதலாற் றெவ்வைக் கடப்பவ னிலுஞ்சீர் வாய்ந்து
தரைபுகழ் பொதியில் வாழ்செந் தமிழ்முனிக் கடிமை செய்வாம்.

16

3347

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்.
இறையரு ளதனா லூர்தி யெய்தியு நீழல் செய்யு
முறையதொன் றெய்தி லேமென் றயனொடு முகுந்த னாணக்
குறைவிலாச் சிவிகை யோடு பந்தருங் குலவப் பெற்ற
நிறைவுசால் காழி ஞானப் பிள்ளைதா ணினைந்து வாழ்வாம்

16

3348

திருநாவுக்கரசுநாயனார்.
விடமெழ வெறுப்பு வைத்தா ரமுதெழ விருப்பஞ் செய்த
கடவுள ரயன்மா னாணக் கையரப் பூதி யிட்ட
வடர்விட மமுத மள்ளி யள்ளியுண் டளவா வின்பத்
தொடர்பமைந் தொளிர்வா கீசர் துணையடி போற்றி செய்வாம்.

17

3349

சுந்தரமூர்த்திநாயனார்.
மறையவ னெனும்பேர் பெற்றேன் மன்னவ னெனும்பேர் பெற்றே, 
னிறையவன் புகழ்யா வர்க்குண் டென்றயன் முகுந்தனாண, 
முறைமறை மறையோ னென்று மொழிவதற் கேற்பத் தூது,
கறைமிடற் றவனைப் போக்கு நம்பிதாள் கருதி வாழ்வாம்.

18

3350

திருவாதவூரடிகள்.
கரைசெயு மசுத்த மாயா காரிய மணியொன் றேற்று
வரைகொடன் மார்பில் வைத்த மால்சமழ்ப் புறவெண் ணில்லா
வுரையெனுஞ் சுத்த மாயா காரிய மணிக ளோவாப்
பரையிடப் பெருமா னுக்குச் சூட்டினார் பாதம் போற்றி.

19

3351

சண்டேசநாயனார்.
புரைதபு மன்பி னோர்பாற் புறமகங் கரையும் பெம்மான்
விரைகம ழாத்தி நீழற் புறங்கரை யாமன் மேவி
வரையென விருப்ப வான்பால் வரையறு குடங்கொண் டாட்டித்
தரைபுக ழின்பந் துய்த்த மழவுதாள் சார்ந்து வாழ்வாம்.

20

3352

அறுபத்துமூவர்.
மறைமுதற் கலைக டேறா மாதேவை யேவல் கொண்ட
தறைபுகழ் நாவ லூரர் தனித்தனி யடியேன் யானென்
றறைபெருந் தவத்த ராய வறுபத்து மூவர்க் கெண்ணில்
குறையுடை யானு மவ்வா றுரைப்பது குணமாங் கொல்லோ.

21

3353

பஞ்சாக்காதேசிகர்.
புகழிக ழுபய மாய பொழிற்றலை வாழ்க்கை வேண்டே
மகிழ்மல மாதி தன்னே ரெய்தின ரெய்தா ராக
வகழ்மதில் தனிகு லாய வாவடு துறைக்கண் மேவித்
திகழ்குரு நமச்சி வாயன் சேவடி வாழ்க்கை யோமே.

22

3354

அம்பலவாணதேசிகர்.
நம்பல மாக வைகு ஞானக்கோ முத்தி மேய
வம்பல வாண தேவ னருளிய பிராசா தத்தால்
வம்பல சாத மெல்லா மாற்றியா னந்த சாத
மும்பல மாகப்பெற்றே முதற்குமேற் பெறுவ தென்னே.

23

3355

சுப்பிரமணியதேசிகர். வேறு.
நன்மைதிகழ் தென்றிருவா வடுதுறைச்சுப் பிரமணிய நமச்சி வாயன், 
மென்மைமல ரடிப்பணிசெய் விதம்வந்த விப்பிறப்பை வியந்தேன் சற்றும், 
புன்மையிலிப் பவங்கோடா கோடிவரு மேனுமுளம் புழுங்கே னந்தோ, 
வென்மையவன் பிறவான்மற் றெனையுமவ்வா றியற்றுவன்யா னென்செய் கேனே.

24

3356

திருத்தொண்டுபுரிவோர்.
சத்திவனப் பட்டீசத் தனிப்பிராற் கியற்றுபணி தலைக்கொண் டாருண், 
முத்திவளர் திருப்பணியே முதலலகுப் பணியியற்ற முயல்வா ரீறாச், 
சித்திகொள்யா வருந்திருநீ றணிந்துருத்தி ராக்கமணிதிகழப் பூண்ட, 
புத்திகொள்யா வருங்குழுமி யிருக்கவிடங் கொடுத்திடுமென் புந்தி தானே.

25

 

3357

ஆக்குவித்தோர்.
மாமேவு சோணுட்டு வேளாளர் குலதிலகன் வல்லோர் செந்நாப்
பாமேவு சத்திமுற்ற வாழ்க்கைநமச் சிவாயமுகில் பயந்த மைந்தன்
காமேவு கொடைத்தடக்கைச் சைவசிகா மணிகல்லிக் கடலா யுள்ளான்
றூமேவு நயவதுல வாறுமுக பூபால சுகண வள்ளல்.

1

3358

வேறு.
நறைகமழ் கொன்றை மாலை நாயகப் பெருமான் மேய
மறைபுகழ் திருப்பட் டீச மான்மிய மொழிபெ யர்த்து
நிறைசுவைத் தமிழாற் பாடி நேயத்திற் கொடுத்தி யென்று
குறையிரந் தினிது கேட்பப் பாடுதல் குறிக்கொண் டேனால்.

2

 

3359

அவையடக்கம்.
மறைபல புகழுஞ் சத்தி வனத்ததி விருப்பம் வைத்த
விறையவ னனைய சத்தி சொரூபமா மென்வாய்ச் சொல்லுங்
குறையற விரும்பும் வாயின் குற்றமுட் குறியா னீன
நிறைபார தாவர்கு லப்பெண் ணேயத்தின் மணந்த தோர்ந்தே.

1

3360

3360. 
குடம்படு செருத்த லான்செய் பூசையைக் குறியாக் கொண்டோன், 
மடம்படு சுணங்கன் செய்யும் பூசையு மதித்த வாற்றா, 
லிடம்படு பெரியோர் செய்த வின்சுவைப் பாட்டொ டுஞ்சங்,
கடம்படு சிறியேன் செய்யும் பாடலுங் கைக்கொள் வானால்.

2

3361

தொகையிலக் கணஞ்சி தைந்த தொழின்முதலாமோர் மூன்றுந், 
தொகையிலக் கணங்கே டெய்தாப் பலவொடுந் தொகுத்துக் கொள்வர், 
வகையிலக் கணமைந் தேலா வறுங்கவி யெனுமான்றோரை, 
வகையிலக் கணமுஞ் சான்ற கவியொடும் வயங்கக் கொள்வார்.

3

3362

வில்லெறி புருவ வாட்கண் விளங்கிழை பகிர்ந்த மேனி,
யல்லெறி கண்டத் தெண்டோ ளண்ணலார் பலரர்ச் சிக்கு, மெல்
லெறி மலர்க ளோடு மினியதென் றொருவர் வீசுங், கல்லெறி யெற்ற
தென்சொற் காமுறல் கருதி யன்றோ.

4

33638

அருளமை யொருபா கத்த னையன்மற் றனைய பாகத்,
தெருளமை செவிவெய் தாமென் செய்யுளைக் கவர்தற் கன்றோ, 
மருளமை மான்மு ழக்க நாடொறு மருவ வேற்கும், 
பொருளமை யீது கண்டும் பாடாது போவேன் கொல்லோ.

5

3364

பொதிதுகிற் குற்ற மோர்ந்து மணியினைப் புறத்துப் போக்கார், 
மதியினிற் சிறந்து ளோரென் வாய்மொழிக் குற்ற மோர்ந்து, 
திதிசெய்மா லயனுந் தேறாச் சிவபிரான் சரித மாய, 
விதியினை யெந்த ஞான்றும் விலக்கல்செய் யாது கொள்வார்.

6

3365

மால்கிளர் மனத்தா ரெம்மான் மான்மியக் குணங்கொளாமற், 
சால்பிலா வேறு வேறு குற்றமுட் டதையக் கொண்டே,
யோல்படக் குரைப்பாரந்த மூர்க்கருக் குரைப்பா ரியாரே, 
பால்கொலோ விரத்தங் கொல்லோ முலையுண்ணி பருக லோர்வீர்.

7

3366

சிறப்புப்பாயிரம்
திருவுலகர் மகிழ்தரக்கொ ளாறுமுக பூபாலன் சிறப்பிற் கேட்பப், 
பொருவுதவிர் பட்டீச மான்மியத்தைச் செந்தமிழாற் புனைதல் செய்தான், 
தருவுமணி யும்பொரவென் போல்வாருக் கருள் சுரக்குந் தகையான் மிக்கான், 
மருவுபுகழ்ச் சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே.

8

 

3367

திருநாட்டுப்படலம்
தம்மைநேர் பட்டி லிங்கர் தண்ணருட் பல்வ ளைக்கை, 
யம்மையோ டினிது மேவ வமைந்தபட் டீச மாதி, 
வெம்மைதீர் தலமெண் ணில்ல தன்னக மிதப்பக் கொண்டுட், 
செம்மைசேர் சோழநாட்டின் வளஞ்சில செப்ப லுற்றாம்.

1

3368

சழக்கன்று கழுவாய் வேறே தகச்செய லாநின் செய்கை,
வழக்கன்று தவிர்தி யென்னு மந்திர ருரைகொள் ளாதான், 
குழக்கன்று நிமித்தந் தன்சீர்க் குலத்தரு மருந்தா யுள்ள, 
மழக்கன்று தபத்தே ரூர்ந்த மனுவளித் ததுசோ ணாடு.

2

3369

மாயவ னிளவ லாக வானக முழுதுங் காப்போ, 
னாயவனனைய வாழ்வி லதிகமா யிரம்பங் கென்று, 
பாயவன் புகழ்சா றன்பாற் பயில்குலக் கடைஞ ரோடு, 
மேயவ னாகச் செல்வ விளக்கமிக்கதுசோ ணாடு.

3

work left incomplete by mInATcuntaram piLLai


 

Related Content

பேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்