logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கடம்பர் உலா

On the Lord of (Kulithalai) Kadambanthurai

கடம்பர்கோயில் உலா 
இயற்றிய ஆசிரியர் இன்னாரென்பது தெரியவில்லை


கணபதிதுணை.
கடம்பர்கோயில் உலா
இது
மஹாமஹோபாத்யாய-தாக்ஷிணாத்யகலாநிதி
Dr. உ.வே.சாமிநாதையரவர்களால்
பரிசோதித்துத் தாம் நூதனமாக எழுதிய குறிப்புரையுடன்
பதிப்பிக்கப் பெற்றது.

செந்தமிழ்ப்பிரசுரம் - 69.
மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை,
மதுரை
1932. விலை அணா 6.
------------------------


கணபதி துணை.

 

முகவுரை.

திருநாவுக்கரசுநாயனார் தேவாரம்.
திருச்சிற்றம்பலம்.

ஆரியந்தமி ழோடிசை யானவன்
கூரியகுணத் தார்குறி நின்றவன்
காரிகையுடை யான்கடம் பந்துறைச் 
சீரியல்பத்தர் சென்றடைமின்களே.

தேவாரவைப்பு

"காவிரிசூழ் கடம்பந்துறை யுறைவார் காப்புக்களே."

"கடைமுடிகானூர் கடம்பந்துறை
கயிலாய நாதனையே காணலாமே"

"மயிலாடுதுறை கடம்பந்துறை யாவடுதுறை
மற்றுந்துறையனைத்தும் வணங்குவோமே" -திருநா,
"பரங்கூ ரெங்கள் பிரானுறையுங் கடம்பந்துறை" -சுந்தர.

காடவர்கோன் திருவெண்பா.

அழகு திரிகுரம்பை யாங்கது விட் டாவி
ஒழுகும் பொழுதறிய வொண்ணா-கழகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் றென்பாற்
குழித்தண் டலையானைக் கூறு.

திருச்சிற்றம்பலம்.

உலாவென்னும் தமிழ்ப்பிரபந்தம் பாட்டுடைத்தலைவனது பவனியைச் சிறப்பித்துப் பாடப்படுதலால் இப்பெயர்பெற்றது; உலா-பவனி. தலைவன் வீதியிற் பவனிவருகையில் அவ்வீதியின்கணுள்ள பேதைமுதற் பேரிளம்பெண் ஈறாகிய ஏழுபருவமகளிரும் அவனைக்கண்டு காதல்கூர்ந்ததாகக் கவிவெண்பாணற் பாடப்படுவது இது, தத்தம் புலமைத்திறத்திற்கேற்பக் கருத்துக்களைத் தொடர்புபெற அமைத்து விரித்துத் தாம் வழிபடுதெய்வங்கள்மீதும், தம் ஆசிரியர்மீதும், தம்மை ஆதரித்த உபகாரிகள்மீதும் பல புலவர்கள் உலாக்களைப் பாடியிருக்கின்றனர்.

சேரமான்பெருமாணாயனாரால் இயற்றப்பட்ட ஆதியுலாவும், தத்துவராயரால் இயற்றப்பெற்ற ஞானவிநோதன்உலாவும், கவிச்சக்கரவர்த்தியாகிய ஓட்டக்கூத்தரால் இயற்றப்பெற்ற மூவருலாவும் ஆகிய பழையநூல்கள் முறையே இம்மூன்று வகைக்கும் உதாரணங்களாக உள்ளவை.

தலங்களிலுள்ள மூர்த்திகளைத் தலைவராகக்கொண்டு பாடப்பட்ட தமிழ்ப்பிரபந்தங்கள் பிற்காலத்து மலிந்தன. அவ்வகையில் உலாக்களும் இயற்றப்பட்டன. "நன்னெடு வீதியின், மதகளிறூர்தன் முதனிலை யாகும்" பன்னிருபாட்டியல், சூ 216) என்ற சூத்திரத்தோடு இயையப் பாட்டுடைத்தலைவர்களாகிய அரசர்கள் களிற்றின்மீது பவனிவந்தனரென மூவருலாவிற் காணப்படுகின்றது. ஆதியுலாவிற் சிவபெருமான் இடபவாகனத்தின்மீது எழுந்தருளியதாகச் சொல்லப்பட்டுள்ளது. தலசம்பந்தமாகப் பி்ற்காலத்து இயற்றப்பெற்ற உலாக்களில் அவ்வத் தலத்திலுள்ள நாயகர் (ஸோமாஸ்கந்தர்) திருத்தேரில் எழுந்தருளியதாக அமைக்கப்பட்டுள்ளது. சொக்கநாதருலாவில்மட்டும் தேர் முதலிய ஏழுவாகனங்களிற் சொக்கநாதர் ஏழுநாள் உலாப்போந்ததாகக் காணப்படுகின்றது.

தலசம்பந்தமான[1] உலாக்கள் அவ்வத்தலத்துக்குரிய கணிகையர்களால், தொன்றுதொட்டுப் பாடப்பெற்றுவந்தன. உலாக்களிற்கூறப்படும் எழுபருவமகளிரும் பொதுமகளிராதலின் இப்பிரபந்தம் அவர்களோடு தொடர்புடையதாயிற்று.
----
[1] இப்பொழுது இந்த வழக்கம் பலதலங்களில் அருகிவிட்டது. சொக்கநாதருலா, முகவுரையைப் பார்க்க.
----

மகளிர்க்குரிய ஏழுபருவங்களின் இயல்புகள் ஒவ்வோருலாவிலும் வருணிக்கப்படுமேனும் ஒவ்வொன்றும் தனித்தனியான சிறப்புக்களோடு விளங்கும். பெருங்கதையில் நீராட்டரவம் என்னும் பகுதியில் இவ்வேழுபருவ மகளிருடைய இயல்புகள் கூறப்பட்டுள்ளன. நிற்க. 

தலவரலாறு

கடம்பர்கோயிலுலாவென்பது சோழநாட்டிற் காவிரியின் தென்கரையிலுள்ளதும் தேவாரம் முதலியவற்றைப் பெற்றதுமாகிய கடம்பர் கோயிலென்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் தலைவராகக்கொண்டு பாடப்பெற்றது. இதனை இயற்றிய ஆசிரியர் இன்னாரென்பது தெரியவில்லை. ஆனாலும் திருத்தேரை, "திருவா வடுதுறையி, லெம்பிரா னன்ப ரிதயமோ" (கண்ணி,84) என்பதனால் அவர் திருவாவடுதுறையாதீனத்து அடியவராகிய ஒரு பெரியவரென்று கருதப்படுகிறார்.

இத்தலத்து மூர்த்தி கடம்பவனநாதர், சுந்தரேசர், ஸௌந்தரரென வழங்கப்பெறுவர்.

அம்பிகையின் திருநாமம் முற்றாமுலையம்மையென்பது (29,57,74,179); இது வடமொழியில் பாலகுசாம்பிகை என வழங்கும்.

தலவிருட்சம்: கடம்பமரம், 13,25,41.

தீர்த்தம்: காவிரியாறு; 16,34,46,58,361. 
பிரமதீர்த்தமென்ற ஒரு தீர்த்தமும் உண்டு; 
கோவையாரில், 
"தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகந் தண்ணெனவே"(220) 
என்று சொல்லப்படும் கடம்பைத் தடம் இதுவாக இருத்தல்கூடுமென்று தோற்றுகிறது.

இத்தலம் கடம்பை, கடம்பந்துறை, கடம்பவனம், தட்சிணகாசி, குழித்தண்டலையெனவும் வழங்கும். பிரமதேவர் வழிபட்டுத் திருக் கோயில் முதலியன அமைத்துத் திருத்தேர்விழாவும் நடத்தினமையாற் பிரமபுரமென்றும் (19),சேரமகாசுரனிடத்திலிருந்து திருமால் வேதங்களை மீட்டற்குக் காரணமாகிய திருவருளைப்பெற்ற இடமாதலிற் சதுர்வேதபுரியென்றும் (33-6), முருகவேள் பூசித்துப் பேறுபெற்றமையிற் கந்தபுரமென்றும்(37) இது பெயர்பெறும். இத்தலத்திற் சத்தகன்னியர் பூசித்தும், தம்மைப்பற்றி வருந்திய பிரமகத்தியினின்றும் நீங்கினர் (21-6); வேதசன்மாவென்னும் ஓரந்தணர் தவம்புரிந்து மதுரையில் நிகழ்ந்த திருமணக்கோலத்தை இங்கே தரிசித்தனர்(27-31); அகத்தியமுனிவர் பூசித்துப் பேறுபெற்றனர்;32. 
இத்தலத்துத் திருக்கோயிலில், பிரமதேவர், சத்தமாதர்கள், அகத்திய முனிவர் முதலியவர்களுடைய திருவுருவங்கள் தனித்தனியே உள்ளன. இப்பொழுது [2] கடம்பர்கோயிலைச்சார்ந்ததும், குழித்தலைஎன வழங்குவதுமாகிய ஊரின்கண் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீசுந்தரேசுவரரென்பது. அம்பிகையின் திருநாமம் ஸ்ரீமீனாட்சியென்பது. இவற்றை நோக்கும்பொழுது கடம்பர்கோயிலிற் சிவபெருமான் திருமணக்கோலம் காட்டியதன் அறிகுறியாக இவ்வாலயம் பண்டைக்காலத்தில் அமைக்கப்பெற்றதென்று கருதப்படுகின்றது. 
----
[2] இச்செய்தியையும் வேறுசிலவற்றையும் எனக்குத்தெரிவித்தவர், குளித்தலை போர்டுஹைஸ்கூல் ஸம்ஸ்கிருத பண்டிதர் ப்ரம்மஸ்ரீ அருணாசலசாஸ்திரிகள். ----

இத்தலத்திற்குத் திருநாவுக்கரசுநாயனார் அருளிய தேவாரப் பதிகம் ஒன்றும், ஐயடிகள்காடவர்கோன் நாயனார் அருளிய திருவெண்பா ஒன்றும், ஸ்ரீஅருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழும் உண்டு.

120-ஆம் கண்ணியால் காளத்தியென்பவரால் இயற்றப்பெற்ற அந்தாதி ஒன்று உண்டென்று தெரிகின்றது. மதுரைத் திருப்பணி மாலையால், பாகையென்னும் ஊரிலிருந்த காளத்தியப்ப முதலியாரென்பவர் ஒருவர் மதுரையிற் சில திருப்பணிகள் செய்தாரென்று புலப்படுகின்றது. அவர் இவ்வந்தாதி செய்தவராகக் கருதப்படுகிறார்.

இவையன்றி வடமொழியில் ஒருபுராணம் உண்டு. திருவாரூர் ஸ்ரீ முத்துஸாமிதீக்ஷிதரென்னும் சங்கீதவித்வானால் கேதார கௌளராகத்தில் இயற்றப்பெற்ற மிகச்செவ்விதாகிய, "நீலகண்டம் பஜே" என்னும் வடமொழிக் கீர்த்தனம் ஒன்றும் இத்தலத்திற்கு உண்டு.

"சேர்தொண்டை மண்டலத்தோர் செய்தபெரும் புண்ணியமோ, ஈதென்னும் பொற்றடந்தேர்"(85) என்னுங் கண்ணியால் இத்தலத்தில் அக்காலத்தில் இருந்த சிவபக்திச்செல்வர்களாகிய தொண்டைமண்டல வேளாளர்களால் திருத்தேர் இயற்றாப்பெற்றதென்பதும், 86-7-ஆம் கண்ணிகளால் பாகையென்னும் ஊரிலிருந்த சரவணையென்னும் ஒரு செல்வர் இத்தலத்துச் சிவபெருமானுக்குத் திருவாபரணங்கள் செய்து சாத்தினரென்பதும் தெரியவருகின்றன.

பாகையென்பது தொண்டைநாட்டில் திருக்கூவமென்னுந்தலத்துக்கு அருகிலுள்ள பாகசாலை யென்னும் ஊர். அவ்வூரினராகிய சரவண முதலியாரென்பவர் இற்றைக்குச் சற்றேறக்குறைய 200 வருடங்களுக்கு முன்பு திரிசிராப்பள்ளி நவாபினிடம் மந்திரியாக இருந்தவர். அவர் இத்தலத்தில் இருந்த திருவாவடுதுரை ஆதீனத்து மடத்தில் மடபதியாக இருந்தவர்பால் நேசம் உடையவராக இருந்தார். அவ்விருவர்களும் சேர்ந்து கடம்பந்துறைக்கோயிலை புதுப்பித்துத் திருத்தேர், திருவாபரணம் முதலியவை செய்து வைத்திருக்கின்றார்கள். மதுரைக் கோயிலிலும் அக்காலத்திலிருந்த மாணிக்கவாசகத் தம்பிரானென்பவர் மூலமாக சில கட்டளைகளை நடத்திவந்தார். கலியப்தம். 4790-இல் பலஜமீன்தார்கள் இவரது தெய்வபக்தி முதலியவற்றை உணர்ந்து இவருக்குப்பல கிராமங்களை செப்புச்சாஸனம் மூலமாக அளித்திருக்கிறார்கள். இவருடைய உருவம் கடம்பந்துறைக்கோயில் தூணில் அமைக்கப்பட்டுள்ளது. கலி.4890இல் இவரது பெளத்திரராகிய சரவண முதலியாரென்பவர் காலத்தும் சில நிலங்கள் அவர்களால் கொடுக்கப்பட்டிருக்கின்றனவென்று தெரியவருகின்றது.

நூலாராய்ச்சி.

ஏழுபருவமாதர்களுடைய இயல்புகளும் விளையாட்டுக்களும் மரபு வழுவாமல் இந்நூலிற்கூறப்படுகின்றன.

பேதை.

ஆசிரியர் பேதையை வருணிக்கையில் மன்மதன் விற்குணத்தைக் கண்டறியா மெல்லரும்பு தான்உரைக்கும் சொற்குணத்தை ஓராச் சுகப்பிள்ளையென்று உருவகம் செய்கின்றார். இக்கதைத்தொடர்பமைய, 
"பொற்கை, உழையார் கடம்பலரிமட் டுண்டதான வண்டு" (144-5) 
என்கின்றார். 
"கடம்பருறையன் கடவுளிளஞ்சூகத்தின் கொம்பிலுறையாக் குயிற்பிள்ளை" (ஏகாம்பரநாதருலா) 
"என்னானைக்கற்றா ரிமயத்தராதரத்து, ........" (திருவானைக்காவுலா) 
"மைதிகழு நீலகண்டன் வாழ்கின்ற புட்பவன மெய்தினீரோ விளஞ்சுரும்பு" (திருப்பூவணநாதருலா) 
எனப் பிறரும் இங்ஙனமே கூறுதல் காண்க.

பின்னும் இவர், "சீணிலத்து மகனும் கலைபொருந்த மான்கன்று", "நீர் பின்னஞ் செயலறியாப் பிள்ளையன்னம்" எனச் சிலேடைநயம்பட உருவகம் செய்கின்றார். அவளுடைய முடிக்கப்படாத கூந்தலுக்கு எழுவாய்ப்பயனிலையின்றி முடிக்கப்படாமலிருக்கும் புன்கவிஞருடைய செய்யுளை உவமிக்கின்றார். அவளுடைய இனிய மழலை மொழிக்கு உவமையாகத் தொண்டர்கள் பக்திபரவசர்களாகி இறைவன்முன் நாத்தழுதழுத்துக்கூறும் துதியைச் சொல்லுதல் அறிந்து மகிழ்தற்குரியது. அவள் பாவையொடு பயிலல் சிற்றிலியற்றிச் சிறுசோறட்டு விளையாடல் முதலிய பேதைப்பருவத்திற்குரிய செயல்களை மரபு வழுவாமல் அமைக்கின்றார். சிறு சோற்றை, "அரனார்க் கிட்டமுறும், அன்பருலகத் தருந்தா தருந்திடுசிற், றின்பமென" அவளுண்டாளென்பதனால், அன்பர்களுடைய இயல்பைப் புலப்படுத்துகின்றார். அவள் கடம்பவன நாதரைக்கண்டு இவர்யாரென்று செவிலியரைக் கேட்ப அவர்கள் விடை கூறும்பகுதியில் அவள் பருவத்திற்கேற்ப, " அண்டங்களைச் சிற்றிலாகச் சமைத்து விளையாடும் பாலன்" என்னும் பொருள் தோன்றக்கூறிப்பின் பலமுறை பாலனென்னும் பெயர் தொனிக்குமாறு இறைவனுடைய தன்மைகளை அவர்கள் எடுத்துச் சொல்லுவதாக அமைத்திருக்கின்றார்.

பெதும்பை 

பெதும்பை, அன்பு அரும்பினும் அது முற்றாப்பருவத்தினள். இப்பருவம் புனைவதற்கரியதென்பதை, "பேசு முலாவிற் பெதும்பை புலி" என்னும் செய்யுட் பகுதியால் அறியலாம். இப்பருவத்ததினளை, "பேதைகுணம் பாதிமங்கைப் பெண்குணத்திற்பாதிகலந், தோது பருவமுறு பெதும்பை" (172 ) எனத் தகுதிபெற இவ்வாசிரியர் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. இங்ஙனம் வேறு யாருங் கூறியதாகத் தெரியவில்லை. காதலென்னும் வித்துமுளைத்து நெஞ்சைக் கொழுகொம்பாகக்கொண்டு, வளருந் தன்மையினளென அவளியல்பைப் புலப்படுத்துகின்றார். 

அவளது முடிக்கப்பட்ட கூந்தலுக்குத் தவங்கள் பல செய்தும் முடிவுபெறாமல் ஈசனருளெய்துங்காலத்திலே நிறைவேறி முடியுஞ்செயலை உவமையாக்குகின்றார். அவள், நீலம், முத்து, பச்சை, மாணிக்கம், கோமேதகம், வைரம், பவளமென்னும் ஏழுவகை மணிகளாலாகிய ஏழு கழங்குகளை எடுத்து ஆடத்தொடங்கியதாக ஒரு செய்தியை அமைக்கின்றார். இப்பகுதியில் அவ் வேழு கழங்கிற்கும் சிவ பெருமானோடு தொடர்புடைய பொருள்களையே உவமை கூறுகின்றார்.

பெதும்பைப்பருவப்பெண்கள் ஏழுகற்களையேனும் ஏழுய்கழற்சிக் காய்களையேனும் ஒருவகைப் பாட்டுப்பாடி ஆடுதல் தமிழ்நாட்டுவழக்கு. அப்பாட்டில் ஒன்றுமுதல் ஏழு எண் வரையுள்ள பொருள்கள் முறையே கூறப்படும். இம்முறையைப் பின்பற்றி இங்கே ஆசிரியர் ஒன்றுமுதல் ஏழு எண் வரையிலுள்ள எண்கள் அமையத் தலப்பெயரையேனும் தலங்களின் செய்திகளையேனும் எடுத்துக்காட்டுகின்றார். அவ்வகையில் ஒன்றுக்கு ஏகாம்பரமும், இரண்டுக்கு இருவர்தேடும் மலையும், மூன்றுக்குத் திரிசிராப்பள்ளியும், நான்குக்கு நான்மாடக்கூடலும், ஐந்துக்குப் பஞ்சநதியும், ஆறுக்கு ஆறுபெண்கள் அட்டமாசித்திபெற்ற பட்டமங்கையும், ஏழுக்கு ஏழுலகத்தலங்களும் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு ஏழுகழங்குகளுக்குரிய பாடற்பொருளாகத் தலச்செய்திகள் அமைக்கப் பெற்றிருத்தலைத் திருவானைக்காவுலா, ஏகாம்பரநாதருலா, திருக்காளத்தி நாதருலா, இரத்தினகிரி (வாட்போக்கி)யுலா, திருவேங்கடவுலா என்பவற்றிற் காணலாம்.

பெதும்பை, கடம்பவனநாதரைத் தரிசித்ததை, "மாலளந்து காணா மலையை யிருவிழிக்கோ லாலளந்தாள்" என்கின்றார். அவள் நிலையைக் கண்ட தாய்மார், "தன்னை யறியும் தருணம்வந்த தாற்றலைவன், றன்னை மனக்குறிப்பிற் றானறிந்தாள்" என்று கூறுகின்றனர். இதன்கண், பெதும்பை மங்கைப்பருவத் தன்மைவாய்ந்தனளென்பது குறிப்பிக்கப் படுகின்றது; "நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்ணோற்று, நின்றறிவு தோற்று நிறைதோற்று நன்றாகக், கைவண்டும் கண்வண்டு மோடக் கலையோட, நெய்விண்ட பூங்குழலாணின் றொழிந்தாள்" (பெதும்பை) என ஆதியுலாவும், "மல்கு முவகைக் கலுழி வரவாப்,பில்கு....... கொங்கைப் புதுவரவும் தோளும் குறைநிரம்ப, மங்கைப் பருவத்தே வாங்கினாள்" (பெதும்பை)என இராசராசசோழனுலாவும், "உருவமிகப்பாரித் தொளிபடைத்து மற்றைப், பருவ மெனப்புளகம் பாரித் தொருவாத, பேரழகு நத்தம் பெருமாட்டிக் கெய்தியது" எனச் சொககநாதருலாவும் கூறுகின்றன. பெதுமபையின் நிலைகண்ட செவிலியர் இறைவனைநோக்கி, "மேற்பசப்புக், காட்மொன் காடடியிசைக் கானமறி யாதவெங்கள் வீட்டுமான் கைக்கொளவோ வீதிவந்தீர்" என்று கூறும் சொற்களில் சிலேடையும், மானைக்காட்டி மானைப் பிடிப்பதென்னும் வழக்கமும் அமைந்துள்ளன.

மங்கை 

மங்கைப்பருவத்தினளை, "காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலைமலருமிந்நோய்" என்றாற்போலவே, "பேதையரும்பிப்பெதும்பை யந்தப்போதாகி, மாது மலர்ந்த வனப்பினாள்" என்கின்றார். இக்கருத்து முற்பருவத்து நிலைமையையும் இப்பருவ நிலைமையையும் புலப்படுத்து கின்றது. "நாணம், மடம், அச்சம்,பயிர்ப்பு என்னும் மந்திரிமார்கள் சூழ நகிலாகிய மகுடத்தைச்சூட்டிப் பெண்கள் மன்மதனுக்குரிய மந்திரங் களையுரைக்க மனமாகிய சிம்மாதனத்திலேற்றிச் சிவபெருமானுடைய புகழாகிய அபிஷேகத்தைச்செய்து மூர்த்திகாமுண்டாக்கி மோகமாகிய அரசனுக்குப் பட்டந்தரித்தாள்" என்பதில் அவளது காதல் முற்றிய தன்மையை விளக்குகின்றார். அவள் சிவபெருமான் புகழைப்பாடி அம் மானையாடினாளென்பதை, "அம்மானையாடிவந்த வம்மானைப்பாடியே, யம்மானை யாடுமளவிலே" என்று சொற்பின் வருநிலையணிபடச்சொல்லு கின்றார். திருவானைக்காவுலாவில் அரிவைப்பருவத்தில் அம்மானை கூறப்படுகின்றது. திருக்காளத்திநாதருலாவில் மங்கைப்பருவத்தில், "தன்னைமறந்தாட்டுத் தலைபடைத்த வம்மானை, அன்னைதனையீன்ற மலை யம்மானை-முன்னைநாட், கொள்கையொரு மூன்றுடைய கொம்பை யருளம்மானை, யங்கையிலே வீற்றிருக்கு மம்மானைக்-கங்கையெனும் அம்மானைப் பெற்ற சடையம்மானைப்பாடியவ, ளம்மானையாடுமளவிலே" என வருவதும், இரத்தினகிரியுலாவில் மங்கைப்பருவத்திலும் திருப்பூவன நாதருலாவில் மங்கைப்பருவத்திலும் அம்மானைகூறப்படும் பகுதி களும் இதனோடு ஒப்புமை உடையன.

மடந்தை 

மடந்தைப்பருவத்திற் பின்னுள்ள செய்தி கூறப்படுகின்றது; மடந்தைப்பருவப்பெண் தன் பாங்கி ஒருத்தியை விளித்து "ஓர் ஓவியனை அழைத்துவந்து கடம்பவன நாதர் திருவுருவத்தை எழுதும்படி கூறுவாயாக" என்றாள். அதற்குப் பாங்கி, அப்பெருமானை யாரெழுதவல்லார்? அவனது திருமுடியை எழுதினாலும் அதிலே கங்கையை எவ்வாறு அமைத்திடுவாய் திருநெற்றினை வரைதலும் அதிலுள்ள அக்கினிக்கண்ணை எங்ஙனம் எழுதுவாய்? மற்ற இரண்டு கண்களைத்தீட்டினாலும் அவற்றில் அருட்பார்வையை எப்படிப் பொருத்தமுடியும்? திருச்செவியில் தோடுகளை எழுதினாலும் அத்தோட்டு வடிவமாகவுள்ள கம்பளாசுவதரர்களென்னும் இசைவல்லார்களின் பாடலைப் புலப்படுத்தமுடியுமோ? திருக்கழுத்தை எழுதினாலும் அது வேதத்தை முழங்கும்படி செய்யமுடியுமோ? திருக்கரங்களை எழுதினாலும் அவை உன்னைத் தழுவிக்கொள்ளும்படி செய்வானோ? திருவடிகளை எழுதினாலும் கால்மாறியாடலைக்காட்டமுடியுமோ? அவனை அவறவர்களே அறிவார்கள். இப்படிய னிவ்வுருவ னிவ்வண்ணத்தன் - ஒப்புடையன், ஆமென் றெழுதவல்லா ரியாரே" என்று விடை கூறினாள். 

ஓவியத்திற் கடவுளின் திருவுருவை எழுதுவித்துக்கண்டு மகிழும் விருப்பம் மடந்தைக்கு இருந்தமையை இவ்வாசிரியர் கூறுதலைப் போலவே சிலசில வேறுபாடுகளுடன் வெவ்வேறு பருவப்பெண்கள் அங்ஙனம் விரும்புவதைச் சில உலாக்கள் கூறுகின்றன. எகாம்பரநாதரு லாவில் அரிவைப்பருவத்தினள் ஒரு சித்திரசாலையிற் சென்று காஞ்சித் தலசம்பந்தமான வரலாறுகளைப் புலப்படுத்தும் ஓவியங்களைக்கண்டு மகிழ்ந்தாளென்றும், திருப்பூவணநாதருலாவில் தெரிவைப்பருவத்தினள் ஓர் ஓவியனை அழைத்துத் திருப்பூவணநாதர் திருவிளையாட்டு முதலிய வற்றை எழுதுமாறுசெய்து கண்டு களித்தாளென்றும், சங்கரலிங்க உலாவில் பேரிளம்பெண்பருவத்தினள் சித்திரசாலையிற்சென்று அங்கே எழுதியிருந்த சங்கரலிங்கத்தின் திருவிளையாடல்களின் உருவத்தைப் பிறருக்குக்காட்டினாளென்றும், தஞ்சைப் பெருவுடையா ருலாவிற் பெதும்பைப்பருவத்தினள் ஓவியன் ஒருவனைக் கண்டு சோமாஸ்கந்தமூர்த்தியின் திருவுருவத்தைத் தீட்டித்தரச்செய்து கண்டா ளென்றும் கூறப்பட்ட செய்திகளால் இவ்வழக்கத்தை அறியலாம்.

அரிவை

அரிவையில் வருணனையில் சிலேடையொடுகூடிய தற்குறிப்பேற்ற அணி அமைந்துள்ளது. அவளுடைய கண் மானை மருட்டி வண்டைச் சிறைப்படுத்தி மீனைப் பயமுறுத்தி வனசத்தைப் பூங்கமுறச்செய்து குவளையை வனத்தில் ஏற்றி வாரிதியை அதோகதியாகப் பண்ணி விஷத்திற்கு நித்யகண்டமேவும் நிலைகொடுத்து சீவல் முனையைச் சத்தியிலையெனவும் கத்தியை உறையிடக்காணாதெனவும் சொல்லச் செய்து கொலைக்குணத்தில் தன்னைநோக்க யமன் தருமனென்னும் பெயரால் வழங்கச்செய்ததென்று புனையும் பகுதியில் அவ்வப்பொருள் களின் இயற்கைத்தன்மையையும் தொழிலையும் பெயரையும் வேறு பொருள்படும்படி தோற்றச்செய்து அமைத்துள்ளார். அவள்குழல், "சூரியன்வந்தாலும் நீர் என்றுவந்தீர்? என்று அஞ்சாமற் கேட்கும் இருளைப்போன்றது" என்று சொல்வதில் நகைச்சுவை காணப்படு கின்றது.

அவள் ஒரு விறலியை அழைத்துத் தேவர்களுக்குள்ளே வீரம் கருணை அழகு என்னும் மூன்றினாலும் மிக்கவர் யார் என்று கேட்ப' அவ்விறலி காமதகனம், திரிபுரசங்காரம், தக்கயாகசங்காரம், பிரமன் தலையைக்கொய்தது, அந்தகாசுர சங்காரம், காலசங்காரம் முதலிய வீரச் செயல்களைச் சொல்லிச் சிவபெருமானது வீரத்தையும்; யானை, வண்டு, சிலந்தி, பாம்பு, கரிக்குருவி, பன்றிக்குட்டிகள், எறும்பு முதலிய விலங்கினங்கட்கும் திருவருள்செய்ததைச் சொல்லி அவரது பெருங்கருணையையும்; முனிவர்களும் பெண்மையை அவாவிய பேரழகை யுடைய திருமாலே பெண்ணாகி அவாவும் அழகுடையவரென்று சொல்லி அவரது அழகையும் புலப்படுத்தி, "வீரப் பெருக்கழகன் மென் கருணைச் சீரழகன், ஆரத் திருமேனி யாரழகன்" (309) ஆகிய அவரே யாவற்றிலும் மிக்கவரென்று வீணைவாசித்தல் முகமாகக்கூறினாளென்ற ஒருசெய்தி காணப்படுகின்றது. 

இவ்வாறு பாட்டுடைத்தலைவருடைய ஏற்றத்தைப் புலப்படுத்தும்வழக்கு வேறு சில உலாக்களிலும் உண்டு. ஏகாம்பரநாதருலாவில் பேரிளம்பெண் அந்தணரொருவரைநோக்கி, "சிவபெருமான்நிலைக்கும் எனைத்தேவர்நிலைக்கும் வாசி கூறுக" எனக் கேட்க, அவர் சிவபெருமான்பெருமையைப் புலப்படுத்தியதாக அமைத்த செய்தியும்; திருக்காளத்திநாதருலாவில் அரிவை விறலியொருத்தியை அழைத்துப் பெண்களை ஆட்கொண்ட அழகுடைய நாயகர்களுக்குள்ளே சிறந்தவர் யாரென்றுகேட்ப அவள் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு குற்றம் கூறிச் சிவபெருமானே சிறந்தவரென நிறுவுவதாக உள்ள செய்தியும்; இரத்தினகிரியுலாவில் மடந்தை பாங்கியர்களைப்பார்த்து, 'விண்ணுக்கு மண்ணுக்கும் வேறா முலகுக்குங், கண்ணுக் கினியவராங் காவலரை எண்ணித்தான், சொல்லுவீர்" என்ன அவர்கள் சிவபெருமானே அத் தகையவரெனக் காரணங்காட்டிப் புலப்படுத்தியதாகக் கூறப்படும் செய்தியும் இவ்வகையைச் சார்ந்தனவே.

தெரிவை

தெரிவைப்பருவத்தில் குறத்தியின்செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. அது வருமாறு:

தெரிவை மணிமேடையில் வீற்றிருக்கையில் குறிசொல்லும் குறத்தி ஒருத்தி அங்கே வந்தாள். அவளைக்கண்ட தெரிவை, "என் மனக் குறிப்பையறிந்து சொல்வாயாக" என்றாள். அவள், "ஒரு வருடம் சொல்வாயாக"என்றாள். "பதினோராவது வருடம்" என்றாள் தெரிவை. அவ்வருடம்‘ஈசுவர' ஆதலின், "ஈசுவரன்பால் உனக்கு விருப்பம் இருக்கின்றது என்றாள்.பின் ஒருமாதத்தைச்சொல் என்று அவள் கூற, தெரிவை, "நான்காவதுமாதம்"என்றாள். அம்மாதம் ஆடி யாதலின், "மன்றாடிமீதில் விருப்பம் உனக்கு இருக்கிறது" என்றாள். பின்னும் குறத்தி ஒருவாரத்தை கேட்க இரண்டாவது வாரமென்றாள். அதுசோமவாரமாதலின், "நீ சோமசேகரனை விரும்புகின்றாய்"என்றாள். குறத்தி. அவர் வருவாரோஎனத் தெரிவைகேட்ப, "வந்து அவர் அருள் செய்வார்" என்று குறத்தி கூறிப்பரிசுபெற்றுச் சென்றாளென்பது.

இவ்வாறு குறத்திபாற் குறிகேட்கும்வழக்கம், உலாநூல்களுள் சங்கரசோழனுலாவில் பெதும்பைப்பருவத்தில், "தூற்று, விசும்பின் மழைகடுப்ப மெய்க்குறஞ்சொன் னாட்குப், பசும்பொன் மழைபொழியப் பார்த்தும்" எனச் சுருக்கமாகவும்,தஞ்சைப்பெருவுடையாருலாவில் மடந்தைப்பருவத்தில் குறத்தி தலைவியின்கைரேகையைப்பார்த்துக் குறிசொன்னாள் என்னும்பகுதியில் விரிவாகவும் காணப்படுகின்றது.

பேரிளம்பெண்

பேரிளம்பெண்வருணனையில் அவள்குழலைப் பிராயத்திற்கேற்ப, "இருட்டறையுட் பல்கணியி லெய்துநிலாக் கூடும், இருட்டனைகே ரூடு நரை யெய்தும்-திருக்குழல்" என்பார். பூணணிதலையும் மையிடுதலை யும் அவள் நீத்தவளென்பார். இவ்வாறே பிற உலாக்களிலும் காணப்படு கின்றது.

அவள் ஒரு பூங்காவை அடைந்து அங்கே உள்ள ஒவ்வொரு மரத்தையும் கண்டு அவ்வம் மரம் தலவிருட்சமாக உள்ள தலத்தை நினைத்து பரவினாளென்கின்றனர். இம்முறை, திருவானைக்கா உலாவில் பேரிளம்பெண்பருவத்திலும், சொக்கநாதருலாவில் அரிவைப் பருவத்திலும் காணப்படுகின்றது.

பேரிளம்பெண் இறைவரது சேவையையே செய்துகொண்டிருப்பவ ளென்பது பல உலாக்களிற் கூறப்படும். இவர், "பரன்சேவை யன்றிப், புதுமை விழிக்குப் பொருந்தாள்" என்பதில் அக்கருத்தைச் சிலேடையில் நன்கு அமைத்துக்காட்டுகின்றார்.

பிறதலங்கள்

இந்நூலில் பல தலங்களைப்பற்றிய செய்திகள் இடையிடையே கூறப்படுகின்றன. 
கடம்பவனநாதர் எழுந்தருளுகையில் இன்ன இன்ன தலத்தை யுடையவர் வந்தாரென்று திருச்சின்னம் முழங்கின எனக் கூறப்படும் பகுதியில் பலதலங்களின் பெயர்கள் வேறுதொனிப்பொருள் தோற்று கின்ற அடைமொழிகளோடு ஆளப்படுகின்றன. இதனை ‘அங்கயற் கண்ணிசார் கூடலான், ஆட்டைவிடாப் புலியூரான், சண்மதத்து மேலான தந்திவனத்தான், மண்பரவு புற்றிடத்தான், ஆவணத்து முற்றும்விலையா மென்றவன், பூவணத்து வாசப்பொருள், துன்பக்கடல் கடத்துந் தோணிபுரத்தான், இன்பவெள்ளத்து ஐயாற்றிறை, தேவி மருங்கமரும் காஞ்சிபுரன், துதிக்கைபெற்ற வாரணவாசியான்,பைக்கு ளடங்காத மாணிக்கமலையான், ஆனந்தத்தேனை அன்பர்க்கு கூட்டிவைக் கும் ஈங்கோய்மலையெம் பிரான்' என்பனவற்றா லறியலாகும். இப்பகுதியிற் சொல்லப்பட்டதலங்கள் முறையே மதுரை, தில்லை, திருவானைக்கா, திருவாரூர், திருவெண்ணெய்நல்லூர், திருப்பூவணம், சீகாழி, திருவை யாறு, காஞ்சீபுரம், காசி, இரத்தினகிரி, திருவீங்கோய்மலை என்பன. (112-9). பெதும்பை கழங்காடுகையிற் பாடுவதாக அமைத்துள்ள தலங்கள் திருவேகம்பம், திருவண்ணாமலை,திரிசிராப்பள்ளி, மதுரை, திருவையாறு, பட்டமங்கை என்பன. பின்னும் விறலியொருத்தி இறைவர்கருனையைப் புலப்படுத்தற்காக அவரை வழிபட்டு அருள் பெற்ற விலங்கு முதலியவற்றைக்கூறும் வாயிலாகச் சிலதலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை, திருக்காளத்தி, திருவானைக்கா, ஸ்ரீசைலம், திருவண்டுறை, திருக்குடந்தைக்கீழ்கோட்டம், திருநாகேச் சுரம், திருநாகைக்காரோனம், திருப்பாம்புரம், திருப்பாம்பணி, திருக்கேதீச்சுரம், திருவாலவாய், திருக்குற்றாலம், திருவெறும்பீச்சுரம் (303-5) முதலியன.

பேரிளம்பெண், பூங்காவை அடைந்து ஒவ்வொரு மரத்தையுங் கண்டு அவ்வம்மரத்தைத் தமக்குரிய விருட்சமாகப்பெற்ற தலங்களை நினைந்து வழிபட்டதாகக் கூறும்பகுதியில் வந்துள்ளவை: திருப்பைஞ் ஞீலி, திருக்குற்றாலம், திருநெல்வேலி, திருமுல்லைவாயில், திருவேகம் பம், திருவாட்போக்கி, திருவீங்கோய்மலை, திருவாலீசம் (அயிலூர்) என்பன. அவன் இன்பத்தைப் பயிரின் விளைவாக உருவகம்செய்யும் பகுதியில், "காட்சிக்கதிர்தோன்ற, ஏமமுறு நெல்வேலி யீசரே" எனத் திருநெல்வேலி அதற்கு இயைபுற எடுத்தாளப்படுகின்றது.

கடம்பவிருட்சம், திருமணக்கோலக்காட்சி, சுந்தரரென்னும் திரு நாம மென்பவற்றால், இத்தலம் மதுரையோடு ஒப்புமையுடையதாதலிது, அத்தலச் செய்திகள் பல இதன்கண் எடுத்தாளப்படுகின்றது; "செல் லாகுஞ் சோலைத் திருவால வாயதனில்,வில்லாகும் பதிரவிமானத்துட் கல்லாணை, சித்தரகு ளாற்கரும்பு தின்னுமாநாட் டென்னனணி, முத்து வடம் போலுமிள மூரலாள்" (150-51) என்பதில் திருவாலவாவென் னும் திருநாமமும் இந்திரவிமானமும் கல்லாணைக்குக கரும்பருத்திய திருவிளையாடலும், "மையேந்து சோலை மதுரை நகர்கவுரி, கையேந்து பாலன்" (167) என்பதில் விருத்தகுமார பாலரான திருவிளையாடலும், "மீனக் கொடியன் விரைவிற் பயந்ததால்" (238) என்பதில் தடாதகைப் பிராட்டி திருவவதாரமும், "தாண்மாறி ஆட்டுவிகசுப் பாண்டியனா ரல்ல வே" (260) என்பதில் கான்மாறியாடிய திருவிளையாடலும், "முன்னா ளிசைவாது சாய்ந்திடவே, எம்பிரான் கூட லிறைவனருளாற் சயித்த, கும்பமுலை மாமயிலே" (292-3) என்பதில் இசைவாதுவென்ற திரு விளையாடலும், "வல்லமையில் லாதகய வாய்தமக்கும் வெல்லமரில், அன்னை யிழந்த வடலேனக் குட்டிகட்கும் அன்புதவி (303-5) என்பதில் கரிக்குருவிக்கு உபதேசம்செய்த திருவிளையாடலும், பன்றிக் குட்டிக்குப் பால்கொடுத்த திருவிளையாடலும் குறிக்கப்படுகின்றன.

கடம்பவனநாதருக்குரிய தசாங்கங்கள் 369 ஆங் கண்ணிமுதலிய வற்றில் மடக்கணி அமையச் சொல்லப்படுகின்றன. அவை வருமாறு:- (1) மலை: கயிலைமலை, (2) ஆறு: காவிரி, (3) நாடு: சோழநாடு, (4) நகர்: கடம்பர்கோயில், (5)மாலை: கொன்றை, (6)குதிரை: வேதம், (7) யானை: அயிராவணம், (8)கொடி: இடபம், (9)குரல்: ஓங்காரம், (10) ஆணை: சந்திரன் முதலியவற்றை நிலைபெயராது ஒழுகச்செய்யும் ஆணை.

சிவபெருமான் பெருமை.

இன்னும் சிவபெருமானது பெருமைகளைப் பலவாற்றானும் எடுத்துப் பாராட்டுவார். சக்தியாகவும் சிவமாகவும் அருள்புரியும் தன்மையான்1(1). மணமாகவும் மலராகவும் உள்ளவன்(3) என்று இவர் கூறுதல், "வாச மலரெலா மானாய் நீயே" என்னும் திரு வாக்கையும், "உள்ளத்தி லுள்ளன் புடையார் கருத்தறியும், வள்ளல்" என்பது "மனத்து ணின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னை" என்பதையும் நினைப்பிக்கின்றன. பட்டிமையில் லாருளத்தின் பாக்கியமே"(268) என்பதில் வஞ்சகமில்லாருடைய உள்ளத்தில் வீற்றிருக்குந் தன்மையைப் புலப்படுத்துகின்றார். "மெய்யடியான், திங்கட் சுதையெனவே செய்யுமொரு முப்பாலுஞ், சங்கத்தி னூட்டுந் தமிழ்ப்பாலன்"(167-8)என்பதனாலும், "தெள்ளுதமிழ்ச் சொல்லே, பொருளே"(380-381) என்பதனாலும் இறைவருக்குத் தமிழோடுள்ள தொடர்பைக் கூறுகின்றார்.

பொருளணிகள்.

கடம்பவனநாதர் திருவுலாப்போதுதற்குமுன் திருவாடை முதலியன அணிந்து கொள்வதாகாக் கூறியுள்ள பகுதியில் (59-68) சிலேடையொடு கூடிய தற்குறிப்பேற்ற அணி அமைந்துள்ளது. திலகம் தீட்டியதை, தேவியோடு சேர்ந்திருக்கச்செய்யும் மன்மதனைக் கோபித்த அக்னியிருக்கும் வீட்டின் கதவைப்பூட்டி ஒரு முத்திரையிட்டதுபோல இருந்த தென்கின்றார். திருக்குடைநிழற்றல் முதலியவற்றைச் சொல்லும் பகுதியிலும் (77-82), அவ்வணி அமைந்துள்ளது. மங்கையர்கள் சாமரை இரட்டியது சிவபிரான் திருமுடியிலுள்ள கங்கை கிரீடத்தால் மறைக்கப்பட்டமையால் அதிற்சென்று விளையாட எண்ணிய அன்னங்கள் அதனைக்கானாமற் சுழல்வது போன்றிருந்தது என்கின்றார். சூரியோதயத்தைச் சொல்லுகையிலும், அரிவையின்வருணனையிலும்(274-85) அவ்வணியினமைதி காணப்படுகின்றது.

137,147,203,346-7-ஆம் கண்ணிகளில் சிலேடையணி அமைந்துள்ளது.237-9-ஆம் கண்ணிகளில் கடம்பவனநாதருக்கும் அம்பிகைக்கும், மங்கைக்கும் சிலேடையும்,337-9-ஆங் கண்ணிகளில் மன்மதனுக்கும் வேடனுக்கும் சிலேடையும் காணப்படுகின்றன. சொற் பொருட்பின்வருநிலை(73), சொற்பின்வருநிலை(125,166-70,225), நிரனிறை(296-8,318-21),என்னும் அணிகளும் இடையிடையே உள்ளன.

44-5-ஆங் கண்ணிகளில் இரதம் முதலிய நாற்படைகளின் பெயர்களும், 46-ஆம் கண்ணிமுதலியவற்றில் அரசன்,மந்திரி, தளகர்த்தன், ஸ்தானாபதி,ராயசத்தன், அதிகாரி, காரணிகன், கற்பித்தோன்,மகா ஜனன்,பிரவர்த்தகன் என்னும் உத்தியோகப்பெயர்களும், 112-ஆம் கண்ணி முதலியவற்றில் வேறுசிலபெயர்களும், 205 ஆம் கண்ணியில் காட்டுமான் என்பதும் தொனியில் அமைந்துள்ளன.

பலவகையான மடக்கணிகளும் (38, 40-12, 126-7, 141, 235, 247, 258, 269-71, 360-67), திரிபும் (காப்பு, 13, 32, 41, 43, 256, சந்தமும் (195-7, 226-7), இன்றியமையாத இடங்களில் வகையுளியும் (34-5, 106, 146),இந்நூலிற் காணப்படும்.

சொல்லாட்சி

மந்த்ரி (46), விக்ரமன், ப்ரபை, சக்ரம் (196), அனுக்ரகம் (197), மந்த்ரம் (217), சித்ரமணி(291) என வருவனபோன்ற ஸம்யுக்தாக்ஷ ரங்களமைந்த வடசொற்களையும்; தீனப்ரவர்த்தகன் (49-50), அங்க்ரார்ப் பணம் (52), சொர்க்க மத்ய பாதலம் (101,) பாதாதிகேசபரியந்தம் (129), சீதள சோம திவாகர லோசன, வேத சொரூப வினோத புராதன, மாருத பாகவ மாதவ சாயக, மேரு சராசன வீர சரோருக பாதன் (226- 8), வீரப்ரதாபவிசயம் (322) என வருவனபோன்ற வடசொற்றொடர் களையும்; வத்திரம், வர்ச்சித்து (59), தெக்கணம் (12), பிரமவத்தி(24), கெங்காதரன் (62), நாதிக்க (162) முதலிய வடசொற்றிரிபுகளையும் ஆளுகின்றார்.

வச்சு (35), ஆச்சுது (266), தணிச்ச (283) என்பனபோன்ற மரூஉமொழிகள் உரிய இடங்களில் அமைந்துள்ளன. இவர் எடுத் தாண்ட சில அரும்பதங்கள்; திண்டு (88), கும்பு தெம்பு, (141), பாணினி (விறலி) (295), சரி(346), தெரியலர் (பகைவர்) (282), உச் சிதம் (323); பொருந்த என்னும் பொருளில் ஏல என்பதனையும் (104, 177), ஒருங்கே என்னும் பொருளில் ஒருமிக்க என்பதனையும் (106, 191), நன்கமைத்தலென்னும் பொருளில் பாணித்தலென்பதனையும் (118), 252), யானையென்னும் பொருளில் ஒர்கையென்பதையும் (364 இவர் வழங்குகின்றார்.

இத்தகைய அரியநூலை இயற்றிய இவ்வாசிரியர் சிவபக்திச் செல்வமும், சிவபெருமானது கருணையை வியந்துபாராட்டும் தன்மையும், சிவனடியார் பக்தியும், சிவதலங்களில் அன்பும், பலநூலாராய்ச்சியும், ஆசிரியபக்தியும் உடையவரென்று தெரியவருகின்றது.

இவ்வுலாவின் ஈற்றிற் காணப்படும், 'விருப்பிருக்கும்' என்னும் செய்யுளால் அக்காலத்து அடியார்கள்செய்யும் திருப்பணிகளுக்குச் சிலர் இடையூறு செய்துவந்தார்களென்றும் அதுகண்டு இவர் மிக வருந்தினாரென்றும் தோன்றுகின்றது.

இந்நூல் ஏட்டுப்பிரதி ஒன்று ஏறக்குறைய 50-வருடங்களுக்கு முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துப் புத்தகசாலையிற் கிடைத்தது; அதனைப் பிரதிசெய்துகொண்டேன். அதுமுதல் இன்றுவரை தேடியும் வேறுபிரதி கிடைக்கவில்லை. ஸ்ரீகடம்பவனேசருடைய திருவருள் கூட்டுவித்ததனால் இப்பொழுது குறிப்புரையுடன் வெளியிடலாயிற்று.

கடம்பர்கோயில் சம்பந்தமான அரிய சில செய்திகளை அவ்வூர் ஆயுர்வேதவைத்தியர் மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ எஸ் குருசாமி முதலியாரவர்கள் அன்புடன் விசாரித்து விளங்கச்செய்தார்கள்.

இதனைப் பதிப்பிக்குங்காலத்து உடனிருந்து பலவகையான உதவி புரிந்துவந்த உபகாரிகளின் அன்புடைமை மறக்கற்பாலதன்று.

பலவருஷங்களாகத் தேடிச் சேகரித்துப் பரிசோதித்து வைத்திருந்தும் பலவிதமான காரணங்களால் வெளிப்படுத்தாமலிருக்கும் இதைப்போன்ற பிரபந்தங்கள் பல உண்டு. தனித்தனியே வெளிப்படுத்தினால் காலம் நீட்டிக்குமென்றும் வேறு காரணங்களைக் கருதியும் சிலகாலமாக மாதப்பத்திரிக்கைகள்மூலம் அவை வெளியிடப்பெற்று வருகின்றன. அவ்விதம் செந்தமிழ்ப்பத்திரிக்கையில் இக்காலத்து வெளிவரும் நூல்களில் இது மூன்றாவதாகும்.

சென்னை, 4-11-1932 
இங்ஙனம்,
வே.சாமிநாதையர்.
-----------


-------- 


சித்திவிநாயகர் காப்பு. 

வெண்பா.

பொன்மருவு தென்கடம்பைப் பூரணவி லாசருலா
நன்மதுரமாகவே நவிற்றவே-என்மனத்து
வஞ்சத் திருப்பதஞ்செய் மைந்து றுசித் திக்களிற்றின் 
கஞ்சத் திருப்பதமே காப்பு.

அவையடக்கம்.

நன்னிலஞ்சே றாக்கிடினு நன்குமகிழ் வார்முனியார்
செந்நெல்விளை வெய்துஞ் சிறப்புடையோர்-இந்நிலத்தில்
என்சொலிக ழார்புலவோ ரீசனுலா வென்றுகொள்வார்
புன்சொலனார் கொள்வார் பொருள்.

நூல்.

கலிவெண்பா.

இறைவன் பெருமை.
1. சீர்கொண்ட சத்தி சிவமா யருள் புரியும்
பார்கொண்ட சோதிப் பசுபதியாய்-ஏர்கொண்ட 

2. அண்டமா யண்டத்தி னப்பாலா யிப்பாலாய்ப்
பிண்டமாய்ப் பல்லுயிரின் பேதமாய்ப்- பண்டை

3. அருவா யுருவா யருவுருவ மொன்றாய்
மருவாய் மலரின் வடிவாய்ப்-பெருவாழ்வாய்

4 எல்லா வுயிர்களுக்கு மின்பம் புண்ர்த்திவைக்கும்
வல்லான் கருணை மகாதேவன் - தொல்லைமுது

தல விசேடம்.
5. வானோர் துதிக்க மறைமுழங்க வானோரும்
ஏனோரும் வந்துபணிந் தேத்தெடுப்பத்-தேனாரும்

6. வெள்ளி வரையின்மிசை வீற்றிருப்பப் பூங்கமலத்
துள்ளிருப் போனன் புடன்பணிந்து-வள்ளலே

7. அன்பருன்னாற் பெற்ற வழியாப் பெரும்பதவிக்
கென்பதவி சொல்லி னினையாமோ-மின்பருதி

ஒக்குமோ வென்றுற் றுணர்ந்தே னருவருத்து

9. முத்திப் பதத்தின் முறையுரைக்க வேண்டுமென
அத்த னகைத்தங் கருள்செய்வான் - பித்தொழிந்து

10. வந்தனையே முன்னாண் மறந்தனையே யஞ்சலினிச்
சிந்தனையென் கேளாய் திசைமுகனே-பந்தமற்றோர்

11. இம்மை மறுமையென்ப தெல்லா மறிந்தறிவால்
தம்மையறிந் தெம்மையன்றே தாமறிவார்-செம்மைமனப்

12. பக்குவத்த னல்லையினும் பாரிடத்தின் மேலான
தெக்கண காசியெனுஞ் சீர்பொருந்தும்-மிக்க

13. கடம்பவன மொன்றுளது கண்டாலு முள்ள
மடம்பவநந் தக்கதியும் வாய்க்கும்-இடம்பெரிதாம்

14. அத்தலத்தி னீசென் றரியதவஞ் செய்தக்காற்
கைத்தலத்தி னெல்லிக் கனியெனவே-முத்தி

15. நெறியு நெறிக்கு நிலையான நந்தம்
குறியு மறிவாய் குறித்தங்-குறுதியென

16. வேதன் பணிந்தெழுந்து மேவுபொன்னி நீராடி
மாதவங்கள் செய்து மகமியற்றி-நாதன்

17. அருள்பெற் றணிநகரு மாலயமுஞ் செய்து
மருளகற்று சித்திரையின் மன்னும்-திருவிழாக்

18 . கண்டழியாப் பேறுபெற்ற காரணத்தி னாற்கொண்ட
தண்டலை யென்னுந் தனிப்பெயரும்-கொண்ட

19. பிரமபுர மென்னும் பெயரும் படைத்துப்
பரவு கடம்பைப் பதியான்-சுரரை

20. ஒடுக்கும் புகைக்க ணொருவா ளரக்கன்
இடுக்கண் பொறாம லெதிர்த்தே-கடுத்துப்

21. பொருமையிடற் காய்ந்தடன் போர்க்குத் துனையாய்
வருதிறலி னோங்குசத்த மாதர்--பெருவலியாற்

22. சாடிப் பொரலுஞ் சலித்து மருண்டுபயந்
தோடிச்செலும்போ தொருவஞ்சம்--நாடியே

23. ஆதித் தனைப்பார்த் தருந்தவஞ்செய் மாமுனிபாற்
பேதித் தவன்மறைந்த பெற்றிதனைச்--சோதித்

24. திடாதே யவனிவனென் றெண்ணி முனியை
அடாது செயப்பிரம வத்தி--விடாது

25. தொடரப்பல் கோடிதலஞ் சூழ்ந்துந் தவிரா
திடர்தொலைக்கு நீபவனத்தென்றாய்-உடனிருக்கும்

26. தன்னை யருச்சிக்கத் தான்மகிழ்ந்து நின்றிடுமேழ்
அன்னையர் பாவ மகற்றினோன் --முன்னைவினை

27. மாசகலும் வேதசன்மா மாமறையோன் செய்தவமும்
பூசனையுங் கண்டவன்முன் போந்தருளிக் --கேசவனை

28. ஒப்பாய் நமதன் புடைமையினால் வேண்டுவதென்
செப்பா யெனவுரைக்கத் தென்மதுரை--மெய்ப்பதியில்

29. தோன்று மலயத் துவசன்மக ளாய்க்கயற்கண்
மூன்றுமுலை யுற்றவண்முற் றாமுலையாய்-ஏன்றிடப்பின்

30. எந்தை மணஞ்செய் தியனறதிருக் கல்யாண
சுந்தரனாந் தன்மையிங்குத் தோற்றிடென-அந்தப்

31. படியே தரிசனமும் பாலித்தாட் கொண்டோன்
அடியார்க் கெளியவ னாதி-முடியாச்

32. சுகத்தியன் மாமுனிவோர் சூழ்ந்து பாவும்
அகத்தியன் பூசனைசெ யையன்-சகத்தசுரச்

33. சோமகன் வேதத் துரகதத்தைப் பாதலத்தில்
ஏமமுறக் கொண்டொளித்தங் கெய்திடலும்-தரமோ

34. தான்வணங்கி நின்று தவம்புரியச் சைவாத்
திரங்கொடுக்க வாங்கித் திருக்கா-விரியிலவன்

35.மச்சவுரு வாயுததி மார்க்கத்திற் சென்றவன்றுஞ்
சச்செகுத்து மீண்டுதிருச் சந்நிதியில்-வச்சு

36. வணங்கமறை வாயிருந்த மாமறைவாய் தோறும்
இணங்குசதுர் வேதபுரி யீசன்-குணங்கடந்தோன்

37. கந்தவேண் முந்தக் கடிமலரா லர்ச்சித்துப்
புந்திமகிழ் கந்த புரநாதன்-பந்தமுற

38. வல்லார்க்கு முந்துதுற வல்லார்க்கு மில்லார்க்கும்
எல்லார்க்குந் தாயா யினிதளிப்போன்-தொல்லைப்

39. பலிக்குமுனந் தாருவனப் பாவையர்முன் சென்றோன்
எலிக்கு மரசளிக்கு மெந்தை-புலித்தோல்

40. உடையா னெனையா ளுடையான்சொல் பூதப்
படையான் கணிச்சிப் படையான்-விடையேறு

41. வானனத்தன் வானனத்தன் வந்து துதிக் குஞ்சாம
கானனத்த னீள்கதம்ப கானனத்தன்-மீனவிழிப்

42. பாணிகொண்ட சென்னிப் பசுபதிபஞ் சானனத்தன்
பாணிகொண்ட சென்னிப் பரமேட்டி-நாணிகொண்ட

43. மாகனக வில்லியிம வானுதவும் வல்லியிடப்
பாகனக வில்லிற் பதிகொண்டோன்-யோகனகன்

44. நாவி லிரதனொரு நால்வேதத் தந்தியான்
தூவெண் சரீரத் துரகத்தான்-மூவுருவன்

45. அம்பலத்து ணின்றுநட மாடும் பதாதியான்
நம்பலரைப் பார்த்து நகைசெய்தோன்-செம்பொனதிச்

46. சுத்தக் கடம்பந் துறையரசன் றெய்வதமாய்
வைத்தசத்த கோடி மகாமந்த்ரி-அத்துவிதன்

47. தற்பரன் பூத தளகர்த்தன் றாரணியிற்
பற்பலவாந் தானா பதியினான்-பொற்புற்

48. றொருமூவ ராயசத்த னோங்குகுலத் தோரைக்
கருமத் தடக்குமதி காரி-பொருகுதிறற்

49. கானு கரணிகன் பாடலிலே கற்பித்தோன்
மானசச் சீர்மை மகாசனன்-தீனபிர

50. வர்த்தகன் பண்ணை வகுத்துரைக்கும் பங்காளி
அத்த னமல னமரேசன் -கர்த்தன்முனந்

திருவிழா.

51. தோடலருங் கஞ்சன் றொகுத்துப் பணிதிருநாள்
மேடமதிச் சித்திரையின் மேவுதலும்-நாடியே

52. பூணவங்கு ரார்ப்பணமும் பொற்பமைத்துக் காப்பணிந்து
காணுந் தூசாரோ கணஞ்செய்து-நாணிறைய

53. ஒன்றிரண்டு மூன்றோ டொருநாலைந் தாறேழும்
சென்றிடப்பி னெட்டாந் திருநாளில்-அன்றுதய

54. காலத் திருவிழாக் கண்டுவந்து வந்தருளி
மாலைவிழா வீதியுலா வந்ததற்பின்-ஞாலமெல்லாம்

55.போற்றுமணி மண்டபத்திற் பொன்னனையா ராடல்கண்டு
வீற்றிருந்து பொற்கோயின் மேவியே-தோற்றுருவின்

56 மன்மதனைக் கையெடுத்து மண்டலத்தோர் கொண்டாட 
மென்மலர்ப்பூம் பள்ளியணை மீதணைந்து-தொன்மையகி

57.லாண்டமு மீகுறமுற்றி லாமுலையென் னம்மையொடு
காண்டகுசோ திக் கடவுள் கண்மலர்ந்து-நீண்டசடைக்

திருமஞ்சனம் கொண்டருளுதல்.

58.கங்கைக்கு மேலாகக் காவிரிமேன் மேன்மேன்மை
தங்கத் திருமஞ் சனமாடி-மங்குலொத்த

அலங்காரம்.

59.சுத்தக் கறுப்பென்றுஞ் சொன்னீலப் புள்ளியென்றும்
வத்திரங்கொள் வத்திரங்கள் வர்ச்சித்து-மெய்த்ததிக்காம்

60. எட்டாடை மின்னா ரிடைப்பட்ட வென்றொருவிப்
பட்டாடை பீதாம் பரஞ்சாத்தி-இட்டமுடன்

61. ஆதியந்த மில்லா வடிக டிருமுடிமேற் 
சோதி மணிமகுடஞ் சூட்டியே-பூதித்

62. திரிபுண் டரமணிந்து சேணா ரிமய
கிரியுதவுங் கன்னிதனைக் கெங்கா- தரனுடனே

63. கூட்டிவைக்கு மாரனைமுன் கோபித்த வக்கினிதன் 
வீட்டின் கதவடைத்து மேலிறுகப்-பூட்டி

64.ஒருமுத் திரிபொறித்த தொக்கவே மிக்க 
திருநெற்றி யிற்றிலதந் தீட்டிப்- பெருகுதவத்

65.தின்னிசை வீணை யிருவோ ரிசைந்தாடப்
பொன்னூசல் போற்குழைகள் பூட்டியே-மின்னுமணி

66. மாமாலைமுத்து வடமாலை பொன்மாலை
பூமாலை மாலைப் புயத்தணிந்து-தோமறுசீர்

67. இத்தலத்து மான்மியங்க ளெத்தலத்து மின்றெனத்தன்
கைத்தலத்தினா லுரைக்குங் காட்சியென-வைத்த

68. வாத வபயமு மான்மழுவுங்கொண்ட
கரதலங்கள் சேர்கங் கணமும்-இரவியெனத்

69. தோளணிகண் மார்பந் துளங்குபவீ தம்பதக்கம்
வாளணிகண் முற்றும் வனைந்தருளி-நீளணிகொள்

70. பட்டிகையுஞ் சேர்த்தருண பாதார விந்தமிசைக்
கட்டிசையுஞ் செம்பொற் கழல்புனைந்து-சிட்டர்

71. செவியி னமுதாச் சிலம்புஞ் சிலம்பும்
கவினத் தரித்துக் கனிவாய்ப்-புவிபுகழும்

மகாபூசை

72.அவ்வியமி னெஞ்சத்தி னாதிசைவ ராகமத்தால்
திவ்வியமா பூசை செயமகிழ்ந்து-கவ்வை

திருவீதிக்கு எழுந்தருளல்.

73. மறைமுழங்க வந்து தொழு வார்முழங்க மூவர்
முறைமுழங்கச் சங்கமுழங்கக்- குறைவிலைந்து 

74. துந்துபிகல்லென்று தொனிப்பவகி லாண்டமெல்லாம்
தந்தமுற்றி லாமுலைச மேதனா-எந்தை

75. உலகமெலாங் கண்டுதொழு துய்யவே செம்பொன் 
இலகு மணித்திருத்தண் டேறித்-திலகநுதல்

76. மின்னார்க ளாட விடையின் கொடியிலங்கப்
பொன்னால வட்டமண்டம் போர்த்தாட-முன்னெடுநாட்

77. பேரரவி னுட்கிடந்த பிள்ளைமதி வாடுமென
ஈர மதிநெஞ் சிரங்கியே-ஆரமுதம்

78. போதத் திரட்டிப் புகட்டுவபோல் வெள்ளியங்காற்
கோதிலா முத்தின் குடைநிழற்ற-ஆதியிலே

79. ஒன்றாய் விரிவா யொடுக்கமாய்ப் பின்விரிவாய்
நின்றா னிலைமையிது நீர்காணும்-என்றுசொல்லித்

80. தேவருக்கும் யாவருக்குஞ் செப்புவபோற் பஞ்சவண்ணப்
பாவாடை மீது பணிமாற-ஓவாது

81. பைத்த மணியும் பனிமதியு முள்ளடங்க
வைத்த கிரீட மறைத்ததனால்-மொய்த்தனங்கள்

82. கங்கை புகும்வழி காணா சுழல்வனபோல்
மங்கையர்கள் வெண்சாமரையிரட்டத்-துங்க

83. மணிக்கோ புரநிரையின் வாயில் பலசென்
றணிக்கோல் வீதி யணைந்து- கணிப்பரிய

திருத்தேரில் எழுந்தருளல்.

84. செம்பொற் கிரியோ திருவா வடுதுறையில்
எம்பிரா னன்ப ரிதயமோ-கம்பைநதி

85. சேர்தொண்டைமண்டலத்தோர் செய்தபெரும் புண்ணியமோ
ஈதென்னும் பொற்றடந்தே ரேறியே - நீதிநிறை

86. பாகைச் சரவணைதன் பாக்கியமேன் மேல்வளர
ஓகையுடன் சிந்தை யுவந்தமைத்த - நாகரிகச்

87. சோதி நவமணியின் சுந்தரப்பொன் னாபரனச்
சாதிகள்க பாய்த்தகட்டிற் றாமிலங்கக் - கோதில்லாத்

88. திண்டொழுகு பஞ்சணையுஞ் சீர்பொருந்த வெத்திசையும்
கொண்ட பதாகை குடைவிளங்க - மண்டலத்திற்

89. பல்லா யிரகோடி பானு வுதித்ததென
வில்லார்சிங் காதனத்தில் வீற்றிருப்ப - மல்லாரும்

உடன் வருவோர்

90. தந்திமுகக்கடவுள் சண்முகத்து வேற்கடவுள்
நந்திமுதற் பூதகண நாதருமை - ஐந்துருவ

91. மிக்கசிவன் போற்கடவுள் வேறிலையுண் டென்பவர்க்குத்
தக்கன் மறுதலையே சாட்சியெனும் - உக்கிரனும்

92. பால நயனப் பதினோ ருருத்திரரும்
மாலதிருஞ் சூல வயிரவரும் - மேலிசைத்த

93. கற்றுணையா வுற்ற கடல் கடந்து கற்பனையிற்
சொற்றுணையி னாலமணர் சூழ்கடந்து - நற்றுனையாய்ச்

94. சாரத் திருப்பதிகஞ் சாத்தி மலர்க்கையுழ
வாரப் பணிவிடைகொள் வாக்கிறையும் - பேரறிவால்

95. தேறுஞ் சமயஞ் சிவசமய மொன்றெனவே 
கூறும் பரசமய கோளரியும்-வீறொருத்தி 

96. வாது நடத்தின் மகிழ்வோனை யாரூரில்
தூது நடத்திவைத்த சுந்தரரும்-மேதகுபேர்

97. ஆனந்த வெள்ளமகத் தாறாக மாறாமல்
ஊனந் தவிர்நயனத் தூற்றெடுக்கத்-தேனுந்து

98. பாவைதிருச் சிற்றம் பலமுடையார் கையெழுத்தாம்
கோவை யுரைத்தெமையாட் கொண்டவரும்-ஓவறுசீர்த்

99. தாதை யடியைத் தடிந்தரனைப் பூசித்துத்
தீதகற்றுந் தண்டித் திருத்தேவும்-மாதவனாம்

100. கார்கொண்ட மேனிக் கடவுளுமம் போருகனும்
சீர்கொண்ட விந்த்ராதி தேவருடன்-ஏர்கொண்ட

101. பான்மதியுஞ் சொர்க்கமத்ய பாதலத்து மேற்றுவிளக்
கான வொருபனிரெண் டாதவரும்-வானகஞ்சூழ்


102 பூதலத்திற் பேறுபெற்ற புண்ணியரு மெண்ணரிய
பாதலத்து மேலான பன்னகரும் - போதநிறை

103 மோனந் தவாத முனிவோரு மெய்ஞ்ஞான
ஆனந்த சித்த ரனைவோரும் - வானந்தம்

104 ஏலப் புவன மிருநூற் றிருபத்து
நாவிற் கடவுளரு ந்ண்னியே - கோலமணித்

105 தேர்திகழ்வி மானஞ் சிவிகைமுதற் றங்கடங்கள்
ஊர்தி களிலு முவந்தேறப் - பேரொலிசேர்

வாத்தியங்கள்.

106 தக்கை யுடுக்கை தடாரிதவில் பேரியொரு
மிக்க முழங்க விருதார்ப்ப - மிக்கதொனி

107 மத்தளங்கைத் தாளவொலி மாரி முழங்கொலிபோல்
தத்தளங்கென் றேபாதஞ் சாதிப்ப - எத்திசையும்

108 துரும்பு வீணை சுரமண்டலம் பாடற்
றரும்பு நாதந் தனியிசைப்ப - உம்பரல்லாம்

109 ஆர்ப்ப மறைக ளருண்மூவர் பாடலண்டம்
போர்ப்பவிசைத் தன்பர் புறஞ்சூழப் - பார்ப்புறத்தில்

110 இன்று புதுத்தே ரிசைந்தழுத்திச் செல்வதனால்
துன்றுபழந் தேர்வயிறு சூலுளைந்து - நன்றுதவு

111. பைஙகுழவி யொன்றீன்ற பான்மையென மேன்மைதரும்
செங்கதிரோன் றேர்கீட் டிசைதோன்றப்-பஙகயப்பூந்

திருச்சின்னம்.

112. தாட்டுணையா ளங்கயற்கண் சார்கூட லான்வந்தான்
ஆட்டை விடாப்புலியூ ரான்வந்தான்-நாட்டிவைத்த

113. சண்மதத்து மேலான தந்திவனத் தான்வந்தான் 
மண்பரவு புற்றிடத் தான்வந்தான்-உண்மையன்பன் 

114. ஆவணத்து முற்றும்விலை யாமென் றவன்வந்தான்
பூவணத்து வாசப் பொருள்வந்தான்-மேவினர்தம்

115. துன்பக் கடல்கடத்துந் தோணிபுரத் தான்வந்தான்
இன்பவெள்ளத் தையாற் றிறைவந்தான்-நம்பும்

116 அருங்குமுதச் செவ்வா யறம்வளர்த்த தேவி
மருங்கமருங் காஞ்சிபுரன் வந்தான் - நெருங்குசடா

177 தாரண மாமுனிவோர் தந்தந் துதிக்கைபெற்ற
வாரண வாசி யான்வந்தான் - பேரணியாய்ப்

118 பாணித் தணிந்தபணிப் பைக்குளடங் காதபெரு
மாணிக்க மாமலை யான்வந்தான் - தாணிறையத்

119 தேங்கோய்வில் லானந்தத் தேனையன்பர்க் கூட்டிவைக்கும்
ஈங்கோய் மலையெம் பிரான்வந்தான் - தீங்கை

120 அடும்பாமன் காளத்தி யந்தாதி கொண்ட
கடம்பைச் சிவசங் கரனாம் - நெடுங்கயிலைக்

121 குன்றுடையான் றொண்டர் குழாமுடையான் வந்தானென்
றென்றுதிருச் சின்ன மெடுத்திசைப்ப - மன்றல்

122 இசைந்ததிருத் தேர்வீதிக் கேகவுடன் கூடி
வசந்தன் றிருத்தேர் மருவப் - பசும்பொன்னிப்

குழாங்கள்.

123 பூதலத்துப் பூவையரும் பொன்னாட்டின் மின்னாரும்
பாதலத்தி னாககன்னிப் பாவையரும் - சீதமலி

124 கொண்டன் முழக்கங் குறித்தமயிற் கூட்டம்போல்
எண்டிசையுங் கொள்ளா தெதிர்நின்றே - அண்டர்


125. பெருமானை மானைப் பிடித்திடுபெம் மானைப்
பெருமானைப் போர்வைப் பிரானை-ஒருமானை

126. ஆகத்து வைத்தவனை யந்தகனை யங்கணம்போல்
ஆகத்து வைத்தவனை யங்கணனை-ஏகத்

127. தொருவனையான் போற்ற வுவந்தானை யென்றும்
ஒருவனையான் றன்னையரு ளோனைக்- கருவிழியாம்

128. உற்பலத்தா லர்ச்சித்தா ருள்ளன் புடன்பணிந்தார் 
பற்பலவாத் தோத்திரங்கள் பண்ணினார்-பொற்பமரும்

குழாங்களின் கூற்று.

129. பாதாதி கேச பரியந்தம் பார்க்கவிழி
போதாதென் செய்வோமெனப் புகன்றார்-வேதாதி

130. நூலறியா யாரு நுவலறியா நாடியயன்
மாலறியாத் தேவர் வடிவழகைச்- சாலவே

131. கண்டுதவப் பேறுபெற்றோங் காதலுற்றோங் கொன்றையருள்
கொண்டுதவப் பேறெமக்குக் கூடாதோ-ஒண்டொடியார்

132. எல்லார்க்கு நல்லார்களென்ப துமக்கிலையோ
கல்லார்க்கு நெஞ்சு கனியாது-தொல்லுலகில் 

133 தன்னுயிர்போன் மன்னுயிர்க்குத் தானிரங்க வேண்டுமென
முன்ன மனுநூன் முறையுரைத்தீர்-என்னசொல்வோம்

134 மிஞ்சு மதிப்பகைக்கும் வேனிரதத் தென்றலுக்கும்
அஞ்சா தரவி னணிகொண்டும்-குஞ்சரமாம்

135 கங்குலுக்கு மைந்து கணையரும்புக் கும்வேட்கும்
துங்கவிழி யாமுச் சுடர்கொண்டும்-புங்கவர்க்கா

136 ஆக்கங் கருதி யமர்க்குத் துணிந்தமதன்
போர்க்குனிவில் வாளி புறப்பட்டுத்-தாக்கமுன்பின்

137 பார்த்தீர் விழித்தீர் பயந்தலைக்கொண் டீருடலம்
வேர்த்தீ ரொருபாதி மெய்யானீர்-தோத்திரமாச்

138 சொல்லவோ வேளுமக்குத் தோற்றானோ தோற்றீர்நீர்
அல்லவோ மாலீ தறியானோ-வல்லமையால்

139 ஆண்பெண் ணிருவருமோ ராடைகட்டச் செய்ததுவும்
வீண்பேச்சோ வுங்கள் விளையாட்டோ-நாண்போக்கித்

140 தானையெல்லாம் போக்கித் தரணியிலெங் கொங்கைமத
யானையெல்லாம் வெட்டவெளி யாக்கியே-சேனையெல்லாம்

141. கும்பிட்டு நம்பகையைக் கும்பிட்ட தென்றுமதன்
தெம்பிட்டுச் சீறிச் சினந்திட்டான்-வம்பிட்டுத்

142. தையலருந் தூற்றினார் சற்றே கடைக்கணித்தால்
மையலரென் றையலர்க்கு வாடோமே-துய்யபுகழ்

143. ஈசரே யென்றென் றெடுத்துப் பலபலவாப்
பேசு மவரி லொருபேதை-பூசன்மதன்

பேதை

144. விற்குணத்தைக் கண்டறியா மெல்லரும்பு தானுரைக்கும்
சொற்குணத்தை யோராச் சுகப்பிள்ளை-பொற்கை

145. உழையார் கடம்பலர்மட் டுண்டறியா வண்டு
மழையார்ப் புணராத மஞ்ஞை-இழைபுகா

146. மாணிக்க மீசனுக்கு மாரன் பணிந்து வைக்கும்
காணிக்கை யானதங் கக்கட்டி-நீணிலத்து

147. மன்னுங் கலைபொருந்தா மான்கன்று பாற்படுநீர்
பின்னஞ் செயவறியாப் பிள்ளையன்னம்-புன்கவிஞர்

148. பாட்டி னெழுவாய் பயனிலைபோ லொன்றொன்று
கூட்டி முடியாக் குழலினாள்-வாட்டமுறும்

149. அண்டத் தமரரைமுன் னஞ்சலெனக் காத்தசிவன்
கண்டத் தமர்விடம்போற் கண்ணினாள்-மண்டுபுனற்

150. செல்லாருஞ் சோலைத் திருவால வாயதனில்
வில்லாரு மிந்த்ர விமானத்துட்-கல்லானை

151. சித்தரரு ளாற்கரும்பு தின்னுமந்நாட் டென்னனணி
முத்துவடம் போலுமிள மூரலாள்-நத்துலவு

152. பாணிக்குட் சிற்றரும்பாம் பங்கயம்போல் வெற்றிமதன் 
தூணிக்கு ளக்கணையின் றோற்றம்போல்-வாணிதொழு

153. நாரிசெங்கை யான்மறைத்த நாத னிருவிழிபோல்
சூரியனிற் சந்த்ரகலை தோய்த்ததுபோல்-வாரிதியில்

154. பண்டமுத கும்பம் பதித்திருந்தாற் போலவெளிக்
கொண்டினிமேற் றோன்றுங் குவிமுலையாள்-தொண்டர்

155. அரகர சஙகரவென் றானந்த வின்பக்
குரைகடற்கு ளாகிக் குளித்துப்-பரவசமாய்

156. ஏறுடையான் முன்ன ரிசைநாத் தழுதழுத்துக்
கூறுந் துதிபோற் குதலையாள்-வீறுடைய

157. வள்ள றிருச்சடைமேல் வைத்தபிறை போற்களங்கம் 
எள்ளளவு மெய்தா விதயத்தாள்-உள்ளமகிழ்

158. பூவையுடன் பேசியந்தப் பூவைசொன்ன சொல்லைமரப்
பாவைக்குத் தானே பயிற்றுவாள்-ஆவலுடன்

159. முத்து வயிர முழுநீலங் கோமேதம்
வித்துரும மாணிக்கம் வெள்ளிசெம்பொன்-இத்தனையும்

160. அட்டி லடுகலங்க ளம்மி யுரலுலக்கை
வட்டிலெனச் சோறு வகுத்தானாற்-கிட்டமுறும்

161. அன்ப ருலகத் தருந்தா தருந்திடுசிற்
றின்பமெனக் கையா லெடுத்துண்டு-நன்கமைந்த 

162. வீதிக் கணித்தாக மேவுதலு நூபுரங்கள்
நாதிக்கக் கைத்தாயர் நற்றாயர்-பேதையுடன்

163. சென்று பரனைத் தெரிசித்தா ரவ்வளவில்
இன்று புதுத் தேர்மீதி லீங்கிவரார்-என்றலுமே

164. அண்டம் புவன மருஞ்சக்ர வாளகிரி
விண்டலமேழ் பாதலம்பொன் மேருவரை-மண்டலங்கள்

165. சிற்றிலா கச்சமைத்துச் செல்வவிளை யாட்டயரும்
பற்றாக் குதலைமொழி பாலனென-மற்றிவளும்

166. நாடரிய பாலனுட னானிருந்து கூடவிளை
யாடநம தில்லி லழையுமெனக்-கோடரத்தில்

167. மையேந்து சோலை மதுரை நகர்க்கவுரி
கையேந்து பாலனருட் காபாலன்-மெய்யடியான் 

168. திஙகட் சுதையெனவே செய்யுமொரு முப்பாலும்
சங்கத்தி னூட்டுந் தமிழ்ப்பாலன்-அங்கசனுக்

169. காமளவு நாமத் தனங்கனெனப் பின்னுமொரு
நாமந் தரித்தநய னப்பாலன்-மாமறைக்கும்

170. அப்பாலுக் கப்பால னன்பாலுன் பாலணையும் 
இப்பால் விளையாட்டி னெய்துமோ-செப்புகெனத்

171. தேர்திரும்ப மற்றோர் தெருவி லிவளைமட
வார்திரும்பக் கொண்டு மனைபுகுந்தார்-மீதொருத்தி 

பெதும்பை 

172. பேதைகுணம் பாதிமங்கைப் பெண்குணத்திற் பாதிகலந்
தோது பருவ முறுபெதும்பை-காதலெனும்

173. வித்தங் குரித்துவளர் மென்பூஞ் சிறுகொடிக்குச்
சித்தங் கொழுகொம்பாஞ் செய்கையினாள்-மெய்த்தவங்கள்

174 ஈட்டினு மீசனரு ளெய்தி முடிப்பதுபோல்
கூட்டி முடிக்குங் குழலினாள்--நாட்டநுதல்

175 ஏற்குமெம்மான் கைம்மா னினமோ வெனமருண்டு
பார்க்கும் புதியமருட் பார்வையாள்--சீர்க்கமலன்

176 இவ்வளவு செய்தோ மினிநிகரி லாதவெழில்
அவ்வளவு பூரித் தமைப்பதனுக்--கிவ்வாறென்

177 றேலத்தன் சிந்தையுள்ளே யெண்ணி முடிக்குநிகழ்
காலத் தமைந்தமுலைக் கன்னிகையாள்--சாலநிறை

178 விற்பளிங்கு மாளிகையின் மேனிலத்து மின்னனைய
பொற்பளிங்கு வாருமெனப் புந்திமகிழ்--அற்புடைய

179 தன்னனைய பெண்க டனித்தனியே சூழ்ந்திருக்க
வென்னனைமுற் றாமுலைபங் கீசனெழில்--மன்னுதிருக்

180 கந்தரம்போ னீலக் கழங்குங் களங்கமில்லாச்
சந்திரன்போன் முத்தின் றனிக்கழங்கும்--எந்தையுடற்

181 பாதியன்ன பச்சைப் பசுங்கழங்கும் பாதியெழிற்
சோதிமா ணிக்கச் சுடர்க்கழங்கும்--தாதலரும்

182 கொன்றையந்தே னன்னநிறக்கோமே தகக்கழங்கும்
துன்றுகங்கை போல்வயிரச் சொற்கழங்கும்--மன்றுடையான்

183 வேணியன்ன செம்பவழ மென்கழங்கும் பங்கையப்பூம்
பாணி யதனிற் பரிந்தெடுத்து--நீணிலத்துப்

184. பாகாங் குதலைமொழிப் பாவைகுறித் தொன்றையெடுத்
தேகாம் பரத்தினிசைபாடி-வாகாகக்

185. கூடு மிரண்டெடுத்துக் கொண்டாடி யன்றிருவர்
தேடு மலையின் செயல்பாடி-நாடரிய

186. வள்ளிதழி மூன்றெடுத்து மன்னு திரிசிராப்
பள்ளியெனுந்தலத் தைப்பாடி-உள்ளமகிழ்

187. வாடலா னாலென் றடுத்தெடுத்து நான்மாடக் 
கூடல்வளம் பாடிமிகக்கொண்டாடித்-தோடவிழும்

188. கிஞ்சுகப்பூஞ் செவ்வாய்க் கிளிமொழியா ளைந்தெடுத்துப்
பஞ்சநதி மான்மியத்தைப் பாடியே-கஞ்சவிழி

189. அத்திறத்தா லாறெடுத்தன் றாறுமின்னா ரட்டமா
சித்திபெற்ற மெய்த்தலத்தின் சீர்பாடிக்-கைத்தலத்தில்

190. ஏழெடுத்துப் பாரிடத்தி லித்தலங்களாதியா
ஏழுலகத் தெம்மா னிசைதலங்கள்-சூழுறும்பே

191. றெல்லாங் கடம்பநக ரெய்தினோர்க் குண்டெனவே
எல்லா மொருமித் தினிதெடுத்துச்-சல்லாப

192 மூக்குத்தி முத்தாட முத்து வடமாட
நோக்கிரண்டு மாட நுசுப்பாட--ஆக்கமகள்

193 கொண்டாட மாதுசெங்கை கொண்டாடும் போதிலே
வண்டாடுங் கூந்தலனை மாரதனைக்--கண்டிங்

194 கமையு மமையுமட வன்னமே யென்னும்
அமைய மதனிலெமை யாளும்-உமைபாகன்

195 அத்த னிருத்த னடிக்கண் மலர்க்கணை
வைத்திட மெச்சி மகிழ்ச்சிபெ--றத்திரி

196 விக்ரம னுக்கு மிகுத்த ப்ரபைக்கன
சக்ரம ளித்திடு தற்பரன்-உக்ரம

197 குக்குட முற்ற கொடிக்கர சைச்சொறு
திக்கை யனைத்தரு சிட்டன-னுக்ரக

198 சச்சிதா னந்தச் சதாசிவனம் பொற்றடந்தேர்
விச்சைமணி வீதிதனின் மேவுதலும்--பச்சைமயில்

199 ஆயமன்ன சாய லணியிழைமின் னாருடனே
தாயரும்போற் றிப்பணியத் தான்பணிந்தாள்--தூயனத்தண்

200 மாலளந்து காணா மலையை யிருவிழிக்கோ
லாலளந்தா ளந்த வளப்பறிந்தார்--பாலனைமார்

201. தன்னை யறியுந் தருணம்வந்த தாற்றலைவன்
தன்னை மனக்குறிப்பிற் றானறிந்தாள்-மின்னெனவே

202. எண்ணிய போதி லிவர்பாகம் பச்சையாய்
நண்ணியவா றேது நவிலுமெனக்-கண்மணியே

203. சூலிக்குப் பச்சுடம்புஞ் சொன்முலைப்பா லும்பெருகப்
பாலிக்கு மென்றுசொல்லாற் பாராட்டிச்-சேல்விழிப்பெண்

204. மாலையிட வந்தீரிம் மாதினுக்கு நீர்வலிய
மாலையிட வந்ததென்ன மார்க்கமோ-மேல்பசப்புக்

205. காட்டுமான் காட்டியிசைக் கானமறி யாதவெங்கள்
வீட்டுமான் கைக்கொளவோ வீதிவந்தீர்-கேட்டீரோ

206. நன்றாச்சு தையர் நடத்தைவிடர் புல்லருமே
நன்றாச் சரியமென நாடுவார்-என்றென்று

207. செப்பும் வினோதந் திறமெனக்கொண் டேயமுதம்
ஒப்புமிள் மூரலுட னோர்வீதிக்-கற்புதனும்

208. செல்லக் கனிவாய்ச் சிறுகுயிலு மின்னாரும்
இல்லத் திருந்தா ரினியொருத்தி-வல்லதிரு

209. மங்கைகலை மங்கைமலை மங்கையெனு மூவருமிந்
நங்கைதனைக் கண்டக்கா னம்பதிகள்-இங்குநமை

210. வஞ்சிப்ப ரென்று மனம்வாக்குக் காயத்தில்
அஞ்சா திருக்கவெழி லார்மங்கை-எஞ்சாது

211. காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி 
மாலை மலரு மயலென்றாற்-போலவே

212. பேதை யரும்பிப் பெதும்பையந்தப் போதாகி
மாது மலர்ந்த வனப்பினாள்-சோதிமணிப்

213. பன்னாகம் பூண்டோன் பரவையிடைத் தூதுசென்ற
அந்நா ளிருள்போ லளகத்தாள்-உன்னாமல்

214. அன்றுநமை வென்றகண்ணொன் றாமினிச்செய் கையிதென
நின்றுநின்று பார்த்து நினைத்துமதன்-இன்றுசிவன்

215. முக்கணையும் வெல்ல முழுநீல முக்கணையா
இக்கணையோ டெய்வே னெனுங்கண்ணாள்-தக்கதிறல்

216. நாண்மடமச் சம்பயிர்ப்பா நன்மந் திரர்சூழப்
பூண்முலையா மாமகுடம் பொற்பமைத்து-மாணிழைமார்

217 அங்கசன் மந்த்ரமெல்லா மாக்கம் பெறவுரைப்பத்
தங்குமனச் சிங்கா தனத்தேற்றி-அங்கணன்றன்

218 சீர்த்தி யபிடேகஞ் செய்து தலைமைபெறு
மூர்த்திகா முண்டாக்கி மோகமெனும்-பார்த்திபனுக்

219 கிட்ட மிகுந்தநல்லா ரெல்லாருங் கொண்டாடப்
பட்டந் தரித்த பருவத்தாள்-கட்டிசைந்த

220 செம்பதும ராகச் செழுமணிப்பொன் னாடரங்கில்
அம்பதுமை மின்னா ரருகிருக்க-விம்பவிதழ்

221 அன்னமுன்னந் தாருவனத் தங்கனைமா ரேந்தியபால்
அன்னமென முத்தினணி யம்மானை-தன்னிருகைக்

222 கொண்டா ளிசையாற் றாயினாணச் செங்குமுதம்
விண்டா ளெடுத்து விளையாடல்-கண்டோர்கள்

223 துன்றனமூன் றங்கையெனச் சொல்வனசப் பூவிரண்டில்
ஒன்றிருக்க வொன்றெழுவ தொக்குமென-வென்றிமழு

224 வல்லா னுருவெளியின் மாலை யெனத்திரண்டு
பல்லாரங் கன்றெழுந்து பார்ப்பதென-வல்லமைசொல்

225 அம்மானை யாடிவென்ற வம்மானைப் பாடியே
அம்மானை யாடு மளவிலே-எம்மானாம்

226 சீதள சோம திவாகர லோசன
லேத சொரூப வினோதப-ராதன

227 மாருத பாலக மாதவ சாயக
மேரு சராசன வீரச-ரோருகப்பொற்

228 பாதன் கயிலைப் பரமன் கடம்பவன
நாதன் றிருவீதி நண்ணுதலும்-மாதுகரத்

229 தம்மனையை வைத்தா ளனமனையார் தங்களுடன்
அம்மனைநின் றேகி யடிபணிந்தாள்-சென்மக்

230 கருவிலியைக் கண்ணாரக் கண்டாள்கண் காணா
உருவிலியைக் காணென் றுறுக்கி-மருமத்

231 தொருகோல் செவிமட் டுறவாங்கி விட்டாள்
குருகோ லிடுங்கரப்பூங் கோதை--வெருவியே

232 அம்புலி யென்ப தழற்க ணுறும்புலியோ
வம்புரைக்கப் பெண்கண்மட மானாரோ--கும்பமுனி

233 குன்றிற் பிறந்த குழவியிளங் காலுடலம்
கன்ற வுதைத்திடும்வன் காலாச்சோ--ஒன்றுகுயில்

234. ஓசையெல்லாம் காளகண்டத் துற்றதோ வுள்ளடங்கும்
ஆசையினி யாசைக் கடங்காதோ-பேசுமொழி

235. அஞ்சுகமன் னீரிரவின் யாமமொரு நாலுமினி
அஞ்சுகமோ வாறுகமோ வாரறிவார்-நெஞ்சுகந்து

236. கூட்டிவைக்க வல்லீரோ கூறுமெனத் தெள்ளமுதம்
ஊட்டிவைத்த சொல்லா ருரை செய்வார்-கேட்டீரோ

237. பாதி யுடம்பாய்ப் பசப்பையுற்ற பெண்பாலாற்
போதவன்னி யத்தமனப் போதுறலாற்-கோதிலா

238. மீனக் கொடியன் விரைவிற் பயந்ததால்
ஊனக் கொடியகரு வுள்ளடையா-மோனர்

239. இமய வரையளித்த வெந்தையனை யென்னும்
உமையு முமையுமே யொத்த-அமைவால்

240. இவளுக் கொருபா லிசையுமெனப் பாகத்
தவளுக் கறியா தமைக்கும்-உவமை

241. அபய கரத்திலங்க வைந்தருவின் மேலாம்
உபயன்மற்றோர் வீதிதனி லுற்ற - அபரி

242. மிதமான தாருவன மேவு முனிவோர்
இதமா யிவண்மருவு மின்பம்-உதவாத

243. சங்கைத் தவமே தவஞ்செய்தோ மென்னமன்னும்
மங்கைக்கு மேலான மாமடந்தை-பொங்குகதிர்ச்

மடந்தை.

244. சந்திரனாற் சூரியனாற் றள்ளுண் டுடனடந்தோடி
வந்து புகுந்து மறைந்துமறைந்-துய்ந்திடவே

245. வானா ரிருட்கு மலரோன் வகுத்துணர்த்த
கானா ராண்போற் கருங்குழலாள்-தேனாரும்

246. சொல்லாண் மதனனுக்குஞ் சொல்லுவாள் புத்திகொங்கை
கல்லாள்கொக் கோகமுற்றுங் கற்றறிந்தாள்-எல்லாம்

247 கரும்புருவ வில்லாள் கமழ்கமல வில்லாள்
கரும்புருவ வில்லாள்லேற் கண்ணாள்-அரும்பு

248 நகையா டளிரன் னகையாள் பணிமே
னகையாள் புவிமே னகையாள்-சகமகிழும்

249 பூங்குமுதச் செங்கனிவாய்ப் பூவைதனித் தில்லிருந்தோர்
பாங்கிதனைக் கூவியுயிர்ப் பாங்கியே-ஈங்கெழுதும்

250 ஓவியங்கை வந்த வொருவனைமுற் றாதமுலைத்
தேவி மணாளன் றிருவுருவை-நீவகுப்பாய்

251 என்னப் படத்தி லிசைத்துவா வென்னலுமே
அன்னமன்ன தோழி யறிந்துசொல்வாள்-முன்னவன்றன்

252 வேணி யெழுதவல விஞ்சைகற்றா னேனுமதிற்
பாணிதனை யெவ்வாறு பாணிப்பான்-மாணமைந்த

253 நெற்றி யெழுதவல்ல நேர்மைகற்றா னேனுமதில்
உற்றகனற் கண்ணெழுத வொண்ணாதே-மற்றுமிரு

254 கண்ணெழுதக் கற்றானோ கற்றாலுந் தண்ணருள்கூர்
வண்ண மமைக்க வசமாமோ-உண்மகிழும்

255 தோடெழுத வல்லனென்று சொன்னாலும் வீணைவல்லோர்
பாடலிசைக்கப் படுவதோ - நாடி நின்று

256 செம்பவள வாய்வடுத்துச் செய்தாலு முன்னதர
விம்பவள தேனருந்த வேண்டாமோ - நம்பரமன்

257 சுந்தரம்போ லேயெழுதக் கற்றானே யானாலும்
முந்தச் சுருதி முழங்குமோ - வந்தவிஞ்சை

258 யாலிங்க னங்கரங்க ளாளெழுதி னாலுமுன்னை
லிங்க னஞ்செயலை யாரமைப்பர் - மாலறியா

259 நித்தன் திருமார்பு நின்றெழுதி னாலுமுன்மேற்
சித்த மகிழ்வதெனச் செய்யவல - வித்தகனோ

260 தாட்டுணைகள் போலெழுதித் தந்தாலுந் தான்மாறி
ட்டுவிக்கப் பாண்டியனா ரல்லவே வாடங்கண்

261 மின்னே மணியே விளக்கே விலைமதியாப்
பொன்னே நால்வேதப் பொருளாவான் - தன்னுருவைத்

262 தூரிகையி னாலெழுதச் சென்னதென்னே புத்தியத்த
நாரிதனைக் காணிலுள நாணாதோ பேறிஞர்




263. அப்படிய னவ்வுருவ னவ்வணத்த னென்றறிவார்
இப்படிய னிவ்வுருவ னிவ்வணத்தன் -ஒப்புடையன்

264. ஆமென் றெழுதவல்லா ரியாரே மலரிதழித்
தாமந் தரித்தவிண்ணோர் தம்பிரான்-மான்மியஞ்சேர்

265. உள்ளத்தி னுள்ளன் புடையார் கருத்தறியும்
வள்ளல் வலிய வருமென்னத்-தெள்ளமுத

266. வாரி பவள மலைபோன் மலையனைய
தேரின் வரமகிழ்ந்து சென்றணைந்து-பாரினின்று

267. கண்டா டுதித்தாள் கனிந்தாள்பே ராசைமேன்மேற்
கொண்டாள் பணிந்தெழுந்து கும்பிட்டாள்-எண்டிசையும்

268. கட்டிய தானைக் கருணா காநிதியே
பட்டிமையில் லாருளத்தின் பாக்கியமே-புட்டிலிலே

269. ஐயம் படைத்தவனா லையா பரிகலத்தில்
ஐயம் படைத்தவர்போ லாயினேன்-மெய்யணியோ

270 டென்பணியுங் கொண்டீ ரிமய மடந்தையைப்போல்
என்பணியுங் கொண்டாலா ரேசுவார்-முன்புபச்சை

271 மாலையளித் தீரெனக்கு மாலையளித் தீரதற்கு
மாலையளித் தீரென்றால் வாழ்த்தேனோ-சூல

272 தாரே யெனவா தரத்தா லுரைக்க
வரதன் மனமகிழ்ந்து மற்றோர்-திருவீதி

273 சென்றா னிவளுந் திருமனையிற் புக்கிருந்தாள்
நின்றாரிற் பின்னுமொரு நேரிழையாள்-நன்றிசைந்த

அரிவை.

274 மானை மருட்டிவரி வண்டைச் சிறைப்படுத்தி
மீனைப் பயமுறுத்தி விண்டலர்ந்து-தேனார்

275 வனசத்தைப் பங்கமுற வாட்டிக் குவளை
இனசத் துருவைவன மேற்றிச்-சினமா

276 வடுவை வடுச்செய்து வாருதியோ மேன்மைப்
படுமென் றதோகதியாய்ப் பண்ணிக்-கடுவினுக்கு

277 நித்யகண்ட மேவு நிலைகொடுத்து வேன்முனைக்குச்
சத்தியிலை யென்னவெற்றி தான்கொண்டு-கத்தி

278 உறையிடக் காணாதென் றுயிரின் கொலைக்கு
மறலிதன்ம னாமெனப்பேர் வைத்து-விறலார்

279 உருவை யுடையா னுடைய கணைபோன்
றரிவை யுறுகண் ணரிவை-பருவமுற்றும்

280 நாளிகே ரத்தினைத்தன் னல்லடிவீழ்த் திச்சக்ர
வாளத்தை யோட்டிகெடு வான்புகுத்தித்-தானத்தை

281 ஒன்றொன்று தாக்கவிடுத் தோர்தாளிற் றாமரையை
நின்றிடெனத் தண்ட நியமித்துத்-துன்று

282 கரியைக் கிரிவைத்துக் கன்னிகா ரத்தைத்
தெரியலர்தூற் றச்சிறுமை செய்து-பரிய

283 மணிச்செப்பை வாயடைத்து வைத்த பணியுள்
தணிச்சொப்பில் கூவிளத்தைச் சாலக்-கணிப்பரிய

284 வித்தையுள்ள வெல்லாம் வெளிப்படுத்தக் கண்டுசிவ
பத்த ரிடத்திருக்கப் பாலித்து-மொய்த்தமலர்ச்

285 செண்டைப் புலர்த்தித் தினகரர் சூழ்ந்திடும்வே
தண்டத்தைப் போரிற் றலைமடக்கிக்-கண்டித்

286 திணைத்திறுகி விம்மி யிறுமாந் திளகிப்
பணைத்துத் திதலை பாந்து-துணைக்கண் 

287 கறுத்து வெளியிடையிற் காணாதிடையை
ஒறுத்துப் புனைகச் சுவந்து-மறுப்படரச்

288 சந்தந் திமிர்ந்து தரள வடம்புனைந்து
கந்தங் கமழுங் கனதனத்தாள்-அந்தரத்தின்

289 என்றடுத்து வந்தாலு மென்றுவந்தீ ரென்றெதிர்த்து
நின்றடுத்துக் கேட்குமிரு ணேர்குழலாள்-வன்றிறல்சேர்

290 அங்கோல மாரவே ளாக்கினையுஞ் சக்கரமும்
செங்கோலும் போன்ற திறலினாள் - பொங்குகதிர்ச்

291 சித்ரமணி மேடைதனிற் சிங்கா தனத்திலிருந்து
வித்தாரப் பாடல் விறலிக்கு - முத்தாரம்

292 பூந்துகில் சந்தம் புனைய வளித்துமகிழ்ந்
தேந்திழையே முன்னா ளிசைவாது - சாய்ந்திடவே

293 எம்பிரான் கூட லிறைவனரு ளாற்செயித்த
கும்பமுலை மாமயிலே கூறக்கேள் - உம்பரிலே

294 வீரங் கருணை மிகுந்த சவுந்தரமும்
சேருங் கடவுளர்யார் செப்பென்ன - ஆர்வமுடன்

295 வீணை யிடந்தழீஇ மென்மா டகந்திருத்திப்
பாணினியு மின்னிசையாற் பாடுவாள்-ஆண்மைமிகு

296 காமன் புரத்தைக் கருதார் திரிபுரத்தை
மாமன் சிரத்தைமல ரோன்சிரத்தை - ஏமமுறா

297 அந்தகனை யந்தகனை யாதி யடையலரை
முந்தத் தடிந்த முறைகேட்கின் - விந்தையாம்

298 பார்த்து நகைத்துப் பரிகரித்துக் கிள்ளியுதைத்
தார்த்து வெகு ளாதவிளை யாட்டமரை - நேர்த்திடவே

299 எத்தேவர் செய்வா ரிஃதேவ ரான்முடியும்
அத்தேவ ரெல்லா மடலுற்றால்-மெய்த்துணைகள்

300 கூடுவா ராயுதங்கள் கொள்வார் சமரிலுடைந்
தோடுவார் மீள்வா ருடற்றுவார்-நாடரிய

301 வஞ்சனையால் வெல்வார் மறுத்தக்காற் செய்வதென்னென்
றஞ்சுவார் வீர மறியோமோ-மிஞ்சும்

302 அரிபிரம ரேனுமுன மாணவமுற் றாரேல்
அரிய னரியதவத் தன்பர்க்-குரியனென்று

303 சொல்லுவது நிற்கமுனந் தும்பி சிலந்தியரா
வல்லமையில் லாதகய வாய்தமக்கும்-வெல்லமரில்

304 அன்னை யிழந்த வடலேனக் குட்டிகட்கும்
என்னேயோ ரிக்கு மெறும்புக்கும்-தன்னிடத்தில்

305 அன்புதவி யென்று மழியாப் பெரும்பதவி
பின்புதவி யாள்கருணைப் பெம்மானும்-நம்பான்காண்

306 பெண்கண்மயக் கற்றதவப் பேரறிவு தானிழந்து
பெண்கள் வடிவெடுத்துப் பேரெழில்கண்-டெண்களிப்பி

307 னாலே யொருபதினா றாயிர மாமுனிவோர்
மாலாய்ப் புணர்ந்ததிரு மாலேபெண்-பாலாய்

308 மருவி னிமவான் மருக னழகுக்
கொருவரிணை யாவாரு முண்டோ-பொரும்விசய

309 வீரப் பெருக்கழகன் மென்கருணைச் சீரழகன்
ஆரத் திருமேனி யாரழகன் -ஓரழகுக்

310 கெவ்வளவு மீச னிணையிலியென் றேயுரைக்கும்
அவ்வளவிற் பல்லியத்தி னார்ப்பரவம்-கொவ்வையிதழ்

311 மாது செவியுறலும் வந்ததுதே ரென்றெழுந்தாள்
நாத னடிபணிந்து நாடியே-சீதமலி

312 காவெல்லா மாரன் கணையே கணைமுதிரும்
பூவெல்லா நாணின் பொருத்தமே-மேவுவயல்

313 மேடெல்லா மன்மதன்கை வில்லே குடியிருக்கும்
வீடெல்லாஞ் சேனை விளக்கமே-கூடும்

314 இரவெல்லாம் வேள்களிற்றி னீட்டமேகொல்லைப்
பரவெல்லாம் சொல்வாம் பரியே-தரணியிலே

315 எங்கெங்கே பார்த்தாலு மென்னவெளி கண்டவிடத்
தங்கங்கே தேரு மவனுமே-சங்கரரே

316 தேவரீர் சித்தந் திரும்பினா லிக்கணமே
யாவு முறவா யிணங்குமென்று-பாவை

317 புகலக் கடைக்கணித்துப் போந்துபின்னோர் வீதி
திகழ வதிலோர் தெரிவை-மகிழும்

தெரிவை.

318 அயிலு மயிலு மனமுங் கனமும்
குயிலும் வடமுங் குடமும்-இயலும்

319 கொடியுந் துடியுங் குளிருந் தளிரும்
படியுமிசைக் காந்தளொடு பாந்தள் - அடிமையெனும்

320 மேன்மைபெறு கண்சாயல் வீதிநடை கூந்தலிசைப்
பான்மை யுதரம் பயோதரங்கள் - வான்மருங்குல்

321 மெல்லடிசெங் கைநிதம்ப மிஞ்சு சவுந்தரஞ்சேர்
வல்லி மதனகலா வல்லியாள் - தொல்லுலகில்

322 வீரப்ர தாப விசயமன்னர் கப்பமிடப்
பாரப்ர தாபம் படைத்தமன்னர் - நேரொக்க

323 வச்ரமணி மேடைதனில் வாளரிச்சிங் காதனத்தில்
இச்சையுடன் வீற்றிருக்கு மேல்வைதனில் - உச்சிதஞ்சேர்

324 அங்குறப்பெண் ணாமொருத்தி யானகுறி சொல்வனென்றே
அங்குறப்பெண் ணாரமுத மாயினாள் - பங்கமுறா

325 தோர்ந்தென் மனக்குறிப்பி லொன்றுளது சொல்லெனவே
தேர்ந்து மலைக்குறப்பெண் சிந்தைமகிழ்ந் - தாய்ந்துநன்றாய்

326 ஓர்வருட மோர்மாத மோர்நா ளொருவாரம்
ஆர்வமுடன் சொல்லென் றவளிசைப்பச் - சீர்பொருந்த

327 உன்னும் வருட முரைக்கும் பதினொன்றாம்
என்னுமுன்னே யீச்சுரன்மே லிச்சையென்றாள் - பின்னுமவள்

328 மாதமொரு நாலென்றாண் மன்றாடி தன்மீதிற்
காதலுற்றாற் போலுங் கருத்தென்றாள் - பேதமில்லா

329 நாளினுமோ ராறென்றா ணன்றுதிரு வாதிரையான்
தோளின்மேன் மையாலென்று சொல்லினாள்- கோளிலகு

330 வார மிரண்டென்றாள் வாழ்சோம சேகரனைச்
சேர மனதிற் சிறந்ததென்றாள்-ஆரணங்கும்

331 ஆமெனது யோகத்தா லந்தக் கரணமுடன்
தாம மளிப்பரோ சாற்றென்ன - மாமயிலே

332 வந்தோர் கணப்பொழுதின் மாலை யுதவுமதிற்
சந்தேக மில்லையெனத் தானுவந்து - விந்தைமிகு

333 பொன்னாடை மின்னுமணிப் பூணுதவு மவ்வளவில்
பன்னாகப் பூணா பரணத்தான் - தன்னெடுந்தேர்

334 மங்கலங்கள் சேர்வீதி மன்னுதலு நன்னுதலும்
அங்கலங்கண் மின்னவெழுந் தாங்கணைந்தாள் - செங்கை

335 மலரைக் குவித்து வதனமலர்ந் தாண்மேல்
மலரைக் குவித்துவிட்டான் மாரன் - அலரெடுத்து

336 நல்லாருந் தூற்றினார் நாண்மடமச் சம்பயிர்ப்பாம்
எல்லாமோர் பக்கத் திருத்திவைத்துச் - சொல்லலுற்றாள்

337 வில்லிலே வண்டன் விடுங்கணையிற் றப்பிலிபூ
வில்லிலனே யென்றாலு மெய்திடுவான்-சொல்லிலே

338 கூவென்னுஞ் சின்னமுற்றோன் கூறுமெய்யே யில்லாதோன்
காவென்றால் வந்தடிக்கக் காத்திருப்பான்-தேவரீர்

339 இவ்வே டனைவிட் டெனைவருத்தி னாலெவர்க்கும்
ஒவ்வாது நீதி ய்டையாரே-எவ்வுலகும்

340 போற்ற வரசுரிமை பூண்ட சவுந்தரரே
ஆற்று மயலேனை யாளுமெனக்-கோற்றொடிதான்

341 பேசிய போது பெருமான் றிருவுளத்தில்
நேசம்வைத்தாற் போலமற்றோர் நீள்வீதிக்-கோசைமிகு

342 தூரியம் பேரி தொனிப்பவுற்றான் பெண்மைதனிற்
பேரிளம்பெண் ணானவொரு பேரிளம்பெண்-சேரும்

பேரிளம்பெண்.

343 இருட்டறையுட் பல்கணியி னெய்துநிலாக் கூடும்
இருட்டனைநே ரூடுநரை யெய்தும்-திருக்குழளாள்

344 பூணுற் றிறுகும் புணர்முலைக்குப் பூணிலதாற்
காணூறவே சாய்ந்தசையுங் காட்சியென-நாண்முதலா

345 முற்றாப் பெதும்பை முதற்பருவந் தோறும்விஞ்சை
கற்றாய்ந் தமையாக் கவினமைத்துச்-சொற்ற

346 தெரிவை வரைக்குந் திரட்டிவைத்துப் பார்த்துச்
சரியென்றாற் போலுந் தனத்தாள்-அரிய

347 பதுமை யனையாள் பான்சேவை யன்றிப்
புதுமை விழிக்குப் பொருந்தாள்-மதுகரங்கள்

348 ஓலமிடும் பூங்காவி லுற்றெவ் வொருதருவாய்ச்
சாலவெதிர் கண்டுகண்டு தான்மகிழ்ந்தாள்-கோலமிகு

349 மஞ்ஞை யனையமின்னாள் வாழைதனைக் கண்டுதிருப்
பைஞ்ஞீலி யானைப் பாவினாள்-இஞ்ஞாலத்

350 துற்றார்க் குதவி யுறுபலாக் கண்டுதிருக்
குற்றால நாதனென்று கும்பிட்டாள்-சுற்றியதன்

351 வல்வேலி யாக வளர்வேணுக் கண்டுதிரு
நெல்வேலி யீசனையே நேசித்தாள்-பல்லின்

352 மருமுல்லை வாயாள் வளர்முல்லை கண்டு
திருமுல்லை வாயில்சிந் தித்தாள்-ஒருமாச்

353 செறிவுற் றிடலுஞ் சிவனை முலையாற்
குறியிட் டவனைக் குறித்தாள்-முறியாரும்

354 நிம்பமெதிர் கண்டா ணிமல னிராசலிங்கச்
சம்புவைமுன் கண்டதென்னத் தான்மகிழ்ந்தாள்-உம்பரிசை

355 திந்திருணி கண்டா டிருவீங்கோய் மாமலையில்
எந்தைதனைச் சிந்தைதனி லேத்தினாள்-கந்தநிறை

356 வில்வமெதிர் கண்டாள் விசைந்துசொக்க நாயகிசேர்
சொல்வாலி நாதனெனச் சூழ்ந்திறைஞ்சிப்-பல்லுயிர்க்கும்

357 தன்னடியி னீழ றருவாற்குத் தான்மேலாய்த்
தன்னடியி னீழ றருங்கடம்பை-முன்னுறக்கண்

358 டன்பிற் குழைந்தாங் கடிபணிந்து கைகூப்பி
இன்பமுட னெண்ணுவா ளிக்கடம்பின்-நம்பரமர்

359 கூடலாய் வந்திருந்து கொண்டக்கா லிவ்விடையே
கூடலா மென்று குறித்திடுமுன்-நீடும்

360 கலையா னிடைபிங் கலையான் மலைய
மலையான் கயிலை மலையான்-இலகியவெள்

361 ளேற்றினா னின்பமன்பர்க் கேற்றினா னென்றுயரை
ஆற்றினான் காவிரிப்பே ராற்றினான்-சாற்றுமறைக்

362 காட்டினான் போற்றுநெறி காட்டினான் றன்னுரையை
நாட்டினான் சோழவள நாட்டினான்-ஈட்டும்

363 துதியா னுதரத் துதியா னிடத்தம்
பதியான் கடம்பைப் பதியான்-சதுர்வேதன்

364 ஆரணியன் மெய்யனடி யாரணியன் மாவிரதம்
தாரணியன் பொன்னிதழித் தாரணியன்-ஓர்கை

365 உரியான் பணிவோர்க் குரியானெண் ணாரைப்
பரியானால் வேதப் பரியான்-மருவுசெங்கை

366 வாரணத்தன் கோட்டுவெள்ளை வாரணத்தன் வாணிமரு
வாரணத்தன் போற்றுமயி ராவணத்தன் -பாரப்

367 படியேர் பொருந்தும் படியே செயும்பூங்
கொடியே புணருங் கொடியான்-நெடிது

368 வழங்கும் புவனத்து மன்னுயிர்க்குந் தானாய்
முழங்குமோங் கார முரசான் -எழுங்கதிசேர்

369 சந்திரனுஞ் சூரியருந் தானவரும் வானவரும்
இந்த்ராதி திக்குக் கிறையவரும்-ஐந்துபெரும்

370 பூதமும் பூதப் புணர்ப்பும் புகன்றசதுர்
வேதமும் வேத விதிவிலக்கும்-போதனால்

371 தானே யமைத்த சராசரமு முற்பவத்தில்
ஆன நிலைபெயரா வாணையான்-மோன

372 முனிக்கணங்கள் சூழ்கருணை மூர்த்திநால் வேதத்
தனிப்பொருளெல் லார்க்குந் தலைவன் -குனிப்புடையோன்

373 வந்தா னெனவே மணிச்சின்னந் தானிசைப்பத்
தந்தா ரிடையாளுந் தான்சென்று-முந்திப்

374 பணிந்தா ளெழுந்து பகருமதன் போர்க்குத்
துணிந்தா ளடுத்துநின்று சொல்வாள்-அணியாரும்

375 மெய்யா நிலத்தினிற்கா வேரியம்பு பாய்ச்சியுழு
தையமுறா தேபுளக மங்குரிப்பத்-துய்யதாம்

376 காமப் பயிரிலையாக் காட்சிக் கதிர்தோன்ற
ஏமமுற நெல்வேலி யீசரே-சேமித்து

377 மோக விளைவு முதிரவே ளாண்மைசெய்தால்
போக முமக்கே பொருந்துமே-மாகருணைச்

378 சுந்தரரே யென்னமற்றத் தோகையர்பல் லாண்டிசைப்ப
அந்தரத்தோர் பாதலத்தோ ரம்புவியோர்-செந்தமிழோர்

379 தேனே கனியே செழும்பாகே தெள்ளமுதே
ஊனே யுடலி னுயிர்க்குயிரே-கோனெயெம்

380 உள்ளமே யுள்ளத்தி னுள்ளுணர்வே பேரின்ப
வெள்ளமே வெள்ளை விடைப்பாகா-தெள்ளுதமிழ்ச்

381 சொல்லே பொருளே துதிசே ரிருநிதியே
எல்லே யஞ்ஞான விருளகற்றும்- வல்லானே

382 என்றென்று பன்முறைநின் றேத்த வருளிமதி
ஒன்றொன்று செஞ்சடையா னோர்காலும்-குன்றாத

383 சீருடையான் செல்வச் சிறப்புடையான் றென்கடம்பை 
ஊருடையான் போந்தா னுலா.

கடம்பர்கோயில் உலா முற்றுப்பெற்றது.
--------

விருத்தம்

விருப்பிருக்கு நினதடியார் செய்பணிக்கிங் கிடையூறு விளைக்கும் பாவ
இருப்பிருக்கு மூடர்தம திருப்புமன முருக்கிவிடற் கியல்பாய்ச் செங்கை
நெருப்பிருக்கப் படவரவத் துருத்தியுமங் கிருப்பதென்ன நினையா தென்னோ
திருப்பிருக்கு மூவிலைவேற் படையுடைய கடம்பவனத் தேவர் தேவே.
--------
--------------

 

குறிப்புரை.

காப்பு: 
பொன் - திருமகள், வஞ்சத்து இருப்பு அதம் செய்: 
அதம் -அழிவு, மைந்து - வலி.
அவையடக்கம்:
விளைவைப் பின் எய்தும், சிறப்புடையோர் மகிழ்வாரெனக் கூட்டுக.

3. அரு-அரூபம், அருவுருவம்-ரூபாரூபம், மருவாய்-மணமாகி, மலரின் வடிவாய்; "வாசமலரெலாமானாய் நீயே" - திருநா.தே.

6.வெள்ளிவரையின்மிசை-கைலை மலையின்மேல், பூங்கமலத்துள் இருப்போன் - பிரமன்: எழுவாய்.

7. மின் பருதி- மின்னலானது சூரியனை.

8. சிருட்டி விரத்தி-படைத்தற்றொழிலில் வெறுப்பை,

9.என-என்று பிரமன் கேட்க, அத்தன் -சிவபெருமான், பித்து-மயக்கத்தை, கமலத்துள்ளிருப்போன்(6)என(9)

10. இனி அஞ்சல், சிந்தனை-கவலை

12. அல்லை-அல்லாயாதலால்; இன்னும் அல்லை.

13. உள்ளம்மடம்-மனத்திலுள்ள அறியாமை; உள்ள:பெயரெச்சமுமாம். பவம்-பிறப்பு. நந்த-கெட. கதி-முத்தி.

15. குறி-திருவுருவம்; ஸ்வரூபம். என-என்று கைலையிற் சிவபெருமான் கட்டளையிட.

17. சித்திரையில்-சித்திரைமாதத்தில்; 51-ஆம் கண்ணியைப் பார்க்க.

18. கண்டு-செய்து. தண்டலை: இது குழித்தண்டலையெனவும் வழங்கும்; "குழித்தண் டலையானைக் கூறு" என்பர் ஐயடிகள்காடவர் கோனநாயனார்.

19. கடம்பையென்பது கடம்பர் கோவில், கடம்பந்துறை, கடம்பவன மென்பவற்றுள் ஒன்றன் மரூஉ; 120,363,383, கடம்பு-தலவிருட்சம்.

20. அரக்கன் இடுக்கண்-அரக்கன் செய்த துன்பத்தை. கடுத்து-கோபித்து.

21. மயிடற் காய்ந்தாள்--மகிஷாசுரமர்த்தினி; துர்க்கை சத்தமாதர்--ஏழு கன்னிகைகள்.

22. சாடி-அடித்து, வஞ்சம்-மாயச்செயலை.

23. அவன்-புகைக்கண்ணரக்கன்.

23-4. சோதித்திடாதே-ஆராயாமல். அவன் இவனென்று-அந்த அரக்கன் இந்த முனிவனென்று. அடாதுசெய-கொல்ல; இது மங்கலவழக்கு.பிரம பிரமஹத்தி.

25. தொடர-ஏழுகன்னியரைத்தொடர.என்தாயென்றது அம்பிகையை.

26. தன்னையென்றது சிவபெருமானை.

27. வேதசன்மாவென்னும் பெயரையுடைய பெரிய அந்தனன்.

27-8.அன்புடைமையினால் கேசவனை ஒப்பாய்; சிவதத்துவ விவேகம் 9ஆம் செய்யுளைப் பார்க்க.

29. கயற்கண்ணையும் மூன்றுமுலையையும் உற்றவள்; அங்கயற்கணம்மை முற்றாமுலை: இத்தலத்து அம்பிகையின் திருநாமம்.

30. எந்தையென்பது முன்னிலையின்கண் வந்தது. என-என்று வேத சன்மா வேண்டிக்கொள்ள.

31. எளியவன் ஆதி.

31-2. முடியாச்சுகத்து-பேரின்பத்தில்.

32-3. அசுரச் சோமகன்-சோமகாசுரன். துரகதம்-குதிரை. அங்கு-அப்பாதலத்தில்,

33-4. தாமோதரன்-திருமால். சைவாத்திரம்-பாசுபதாத்திரம். அவன்-திருமால்.

35. மச்ச உருவாய-மீனவடிவமாகி. உததி-கடல். துஞ்ச-இறக்க. வச்சு-வேதங்களை வைத்து

36. மறைவாயிருந்த-கண்ணுக்குப்புலப்படாமல் இருந்த.

37. பந்தம் உற-பாசம் உறுதலினாலே.

38. வல்லார்க்கும்-வல்லமை இல்லாதவர்களுக்கும். துறவல்லார்க்கும்- துறத்தலில் வன்மையை உடையவர்க்கும்; துற:முதனிலைத்தொழிற்பெயர். வல்லார்:'வல்லார்திறைகொள்வர், வல்லார்திறைகொடுப்பர்' (இ.கொ.உரை, உதாரணம்.) இல்லார்க்கும்-வறுமையையுடையவர்கட்கும்.

39. பலிக்குச் சென்றோன். எலிக்கும்: உம்மை இழிவுசிறப்பு. அரசு-அரசாட்சியை. இக்கண்ணியிற்குறிப்பிட்டது மகாபலி சக்கரவர்த்தியின் வரலாறு; "வெண்ணெ யுண்ண வெண்ணுபு வந்து, நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த, தாவுபுல் லெலிக்கு மூவுல காள, நொய்தினி லளித்த கைவளம் போற்றி" கோயினான்மணிமாலை, 40.

39-40. தோல் உடை-தோல் ஆடை. படை-சேனை, ஆயுதம்.

40-41. விடையேறுவான். அனத்தன்-பிரமனும். வான நத்தன்-பெருமை பொருந்திய சங்கையுடைய திருமாலும். சாமகானன் அத்தன்.

41-2. மீனவிழிப்பாணி-கங்கை; பாணி-நீர். சென்னியைப் பாணியிற் கொண்டபரமேட்டி; சென்னி-பிரமகபாலம்; பாணி-கை.

43. கனகவில்லி-மேருமலையை வில்லாக உடையார். வல்லி-பார்வதி. இடம் பாகன். நக இல்லில்-மலையாகிய வீட்டில்; அக இல்லிலென்றுகொண்டு அன்பர்களது இதயமாகிய வீட்டி லெனனும் பொருந்தும். யோகு அனகன்; யோகு-யோகம்.

44. நாவில் இரதன்-நாக்கிற் சுவையாயிருப்பான். வேதத்து அந்தியான் - வேதத்தால் முடிவுசெய்யப்படாதவன். சரீரத்து உரகத்தான்; உரகம்-பாம்பு.

45.பதாதியான்-பதத்தையுடைய முதல்வன். நம்பலரை-பகைவரை. பொன்நதி-காவிரியாறு.

44-5.இவற்றில் இரதமுதலிய நால்வகைப் படையுடையானென்னும் பெயர்கள் தோன்றுகின்றன.

46.மந்த்ரி-மந்திரத்தையுடையவன்.

47.பூததளகர்த்தன்-பூதப்படைக்குத்தலைவன்.

48.மூவர்ஆய-மும்மூர்த்திகளாகிய. சத்தன்-உண்மைப்பொருளாக உள்ளவன். கருமத்து-தத்தம் தொழில்களில்.

49. கால் நுகர் அணிகன்-காற்றை உண்ணும் பாம்பாகிய ஆபரணத்தை யுடையவன்;அணிகம்-ஆபரணம்; அணிதிரிந்து அணிகமாயிற்றென்பர்; (சீவக. 2811,ந.) பாடலில்-இசைக்கு. ஏகல் பித்தோன்-தூதாகப்போதலையுடைய பித்தன்; "பாதஞ் சிவக்கப் பசுந்தமிழ் வேண்டிப் பரவைதன்பாற், றூதன்றுசென்றதென் னாரூர்த் தியாகர்" (திருவாரூர்க்கோவை.) மானசம்-மானஸம். மனத்திலுள்ள தூய்மையாகியசிறப்பே தனக்குப் பெரிய ஆசனமாகஉடையவன்.

49-50. தீன பிரவிர்த்தகன்-ஏழைகளை நடத்துபவன். பண்ணை-இசையை. பங்கென்றது உமையை. ஆளி- ஆள்பவன்.

46-50. இப்பகுதியில், அரசன்,மந்திரி, தளகர்த்தன், தானாபதி (ஸ்தானாபதி),ராயசத்தன், கருமாதிகாரி, கரணிகன், கற்பித்தோன்(ஆசிரியன்), மகாசனன், பிரமர்த்தகன், வர்த்தகன் என்னும் பெயர்கள் தோன்றுகின்றன.

51. கஞ்சன்-பிரமன்;கஞ்சம்-தாமரை. மேடதி- சித்திரைமாதம். திருநாள் மேவுதலும்.

52. காப்பு-ரக்ஷை. துசாரோகனம்-கொடியேற்றம்.

54. உவந்து வந்தருளி.

55 பொன்னனையார்-உருத்திர கணிகையர்.

58. கங்கைக்குமேலாக என்றது சிவபெருமான் திருமுடியிற் கங்கை இருத்தலை நினைந்து. மங்குல்-மேகம்.

59. சுத்தக்கறுப்பு -முழுக்கறுப்பு;என்றது யானைத்தோலை; கிருஷ்ணாசினமு மாம். நீலப்புள்ளி யென்றது புலித்தோலை. வத்திரம்-முகம், ஆடை. இரண்டும் தலையோடு கூடியிருத்தலால் 'வத்திரங்கொள் வத்திரம்' என்றார். வர்ச்சித்து-நீக்கி; "பொல்லா வினைவர்ச்சி யென்றர்ச்சி யேனொரு பூவெடுத்தே" (பழனி இரட்டைமணிமாலை,20) மெய்த்த-மெய்யாகிய திக்கு ஆம்-திசைகளாகிய.

60.மின்னார் இடைப்பட்ட- தருகாவனத்து மகளிர்களிடையிலேபட்டன; என்றது அவர்களும் திகம்பரராக ஆனமையைப் புலப்படுத்துகின்றது; திகம்பரராநுந்தம்மைச் சேர்ந்தடைந்த யாமும், திகம்பரரேயாகிச் சிறந்தோம்" திருவிடை. உலா.

59-60, எட்டுத் திக்காம் ஆடை-எட்டுத் திசையாகிய ஆடை. 

61. அடிகள்-சிவபெருமானுடைய, பூதி-திருநீறு.

64. முந்திரிபொறித்தது-முத்திரையிட்டதை,

65. இருவோர்-கம்பளர், அசுவதரர்; தும்புரு நாரத ரென்பாரு முளர்; "தோடுவார் காதன்றே தோன்றாத் துணையையர், பாடுவா ரோரிருவர்க் கிட்ட படைவீடே" (திருப்பாதிரிப்புலியூர்க்கலம்பகம், 16.); "காதி லிரண்டுபேர் கண்டோ ரிரண்டுபேர், ஏதிலராய்க் காணா ரிரண்டுபேர்-பேதைமுலை, உண்ணா ரிரண்டுபே ரோங்குபுலி யூரருக்குப், பெண்ணான பேரிரண்டு பேர்" (தில்லைக்கலம்பகம்,8), "காதி லிருவரிசை காத்திருந்து கேட்பனபோற், கோதி லரவக் குழைசாத்தி" தேவையுலா, 69. 

66. மாலை புயத்திற்கு அடை.

69. உபவீதம்-பூணுநூல்.

70. பட்டிகை-அரைப்பட்டிகை; இதனை அரியாயோகமென்பர் இளங்கோவடிகள்;சிலப். 14:170. அருணம்-சிவப்பு, கட்டுஇசையும்-கட்டுதல் பொருந்தும்.

71. சிலம்பும் சிலம்பும்-ஒலிக்கின்ற சிலம்புகளையும்.

72. கவ்வை-முழக்கம்.

73. மூவர்முறை-தேவாரம்; "மூவர் பாடல்" 109.

76.அண்டம்-ஆகாயத்தை.

80. பஞ்சவண்ணப் பாவாடை-ஒரு விருது; "பஞ்ச வண்ணத்துப்படாகை நுடங்க"(பெருங்கதை); "பகற்பந்தம் பஞ்சவன்னப் பாவாடை என்னும், விகற்பந்தஞ் சின்னமென்ன மேவும்" - சிவந்தெழுந்த பல்லவராயனுலா.

81.பைத்த- விரிந்த. அன்னங்கள் மொய்த்து.

82.கங்கை புகும் வழி கானா-திருமுடியிலுள்ள கங்கையினிடத்தே செல்லுதற்குரிய வழியைக் கானாதவனாகி, இரட்ட-மாறி அசைப்ப.

81-2.வெண்சாமரைக்கு அன்னங்கள் உவமை.

84.திருவாவடுதுரையில் எம்பிரான் அன்பர்-திருவாவடுதுரையாதீன மடத்திலுள்ள அடியார். சிவபெருமான் எழுந்தருளியிருத்தற்குரிய இடமாக இருத்தல் பற்றி ‘அன்பர் இதயம்' உவமை கூறப்பட்டது.

87. கபாய்- கவசம்; "களிறுதவுக பாய்மிசைப் போர்த்தவள்" (மீனாட்சியம்மைபிள்ளைத்தமிழ், காப்புப்.10); "கம்பக் கரடக் களிற்றின் கபாயணிந்த, அம்பொற் புயத்தார்" - சிதம்பரச்செய்யுட்கோவை,25.

88. பதாகை-பெருங்கொடி.

89. வில்-ஒளி.

90. ஐயைந்துருவம்-இருபத்தைந்து மூர்த்தம்.

91. மறுதலை-ஆட்டுத்தலையாகிய வேறு தலை. உக்கிரன் - வீரபத்திரக் கடவுள்.

92. பாலநயனம்-நெற்றிக்கண்ணையுடைய. அதிரும்-நடுங்கும்.

93. கல்துணையா-கல்லைத்துணையாகக்கொண்டு. சொற்றுணையினால்- ‘சொற்றுணை வேதியன்’ என்னும் பதிகத்தால். சூழ்-சூழ்ச்சி.

94. வாக்கிறை-திருநாவுக்கரசுநாயனார்.

95. பரசமயகோளரி-திருஞானசம்பந்தமூர்த்தினாயனார். வீறு-வீறுகின்ற. ஒருத்தி- பத்திரகாளியின்.

96. நடத்தின் மகிழ்வோனென்றது இறைவன் திருவாலங்காட்டில் ஊர்த்துவதாண்டவம் செய்த செய்தியைக் குறிக்கின்றது

97. நயனத்தூற்றெடுக்க: "அழுதடியடைந்தவன்பன்" (திருவிளை. கடவுள்) என்பர் பரஞ்சோதியார். "பேரானந்தமுற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண்டாகும்" (தாயுமானவர்பாடல்) என்பது இங்கே கருதற்குரியது. ஊற் றெடுப்ப: "கண்கள், தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்பாய " -நால்வர்நான்.4.

98. ஆட்கொண்டவர்-திருவாதவூரடிகள். அவர் கோவையுரைத்தது, "காதலித்து, நானூறு காரிகையை நல்கினோன் வாசகமும்" (திருவாரூருலா73-4) என்பதனாலும், "கோவுக்குக், கோவை சொன்னா னுண்டுநெஞ்சேகுற்றால வென்றுமரப், பாவைசொன்னா லுஞ்சொலுமே பாட்டு" (திருக்குற்றாலச் சிலேடை. அவை) என்பதனாலும் விளங்கும்.

100. ஏர்-எழுச்சி; அழகுமாம்.

103. அந்தம் - முடிவு.

102-3. போதநிறைபோனம்: "மோன மென்பது ஞான வரம்பு" கொன்றைவேந்தன்.

104. ஏல-பொருந்த; 177.

106. ஒருமிக்க - ஒருங்கே; 191. விருது-காளம் முதலியன.

107. தத்தளாங்கு: தாளக்கட்டு; "மத்தளந் தத்த மழலை யொலிததும்பத், தத்தளந் தத்தந் தளங்கவென" (சிவந்தெழுந்த பல்லவராயனுலா) பரதம்- பரதநூலிற் கூறிய விதி; ஆகுபெயர்.

108. சுரமண்டலம்-ஒருவகை இசைக்கருவி.

109. மூவர்பாடல்-தேவாரங்கள்.

110. பழந்தேர் - பூமி. 
111. கீட்டிசை=கீழ்த்திசை;"கீட்டிசைக்கரியசாத்தனும்" திருவினை, திருநகரங்கண்ட, 43

112-9. இக்கண்ணிகளில் தலங்களின் பெயர்களை அழகுபட அமைத்திருத்தல் அறிந்து இன்புறற்பாலது.

112. கூடல்-மதுரை, மணத்தல், ஆட்டை-நடனத்தை; ஆடென்னும் மிருகத்தை. புலியூர்-சிதம்பரம்; "நாட்டுக்கு ளாட்டுக்கு நாலுகா லையநின், ஆட்டுக் கிரண்டுகா லானாலும்-நாட்டமுள்ள, சீர்மேவு தில்லைச் சிவனேயிவ் வாட்டை விட்டுப், போமோசொல் லாயப் புலி" (காளமேகத்தின்வாக்கு); "அம்புலியூ ரென்னு மணிகொள் சிதம்பரத்தே, வெம்புலியொன் றெந்நாளு மேவுங்கா ணம்மானை, வெம்புலியொன் றெந்நாளு மேவுமே யாமாயின் அம்பலத்தைத் தான்விட் டகலாதோ வம்மானை, ஆட்டைவிட்டு வேங்கை யாலுமோ வம்மானை" (தனிப்பாடல்); "ஆட்டைப் புலிகாக்கு மம்பலமும் " விறலிவிடு, 131.

113. மதம்-சமயம்; யானையின்மதமென்பது வேறுபொருள், தந்திவனம்- திருவானைக்கா, மண்-பூவுலகம்; புற்றிடத்தான்_திருவாரூர் வன்மீகநாதர்.

114. ஆவணம்-அடிமையோனை, கடைவீதி, பூவணம்-திருப்பூவணமென்னுந் தலம், வாசம்-வசித்தல், வாசனை.

115 தோணிபுரம்-சீகாழி.

116. அரு குமுதம். மருங்கு-பக்கம், இடை, காஞ்சி - ஒருநகரம், ஒருவகை, மேகலை, முப்பத்திரண்டு தருமங்களும் அம்பிகையாற் காஞ்சியில் வளர்க்கப் பட்டனவென்பது இங்கே அறிதற்குரியது.

117. துதிக்கை-துதித்தல், தும்பிக்கை, வாரணவாசி-காசி.

118. பாணித்து-திருந்த அமைத்து; இஃது ஆலயபரிபாஷை; 252 பணிப்பை-ஆபரணப்பை, பாம்பின்படம்.

119. தேங்கு ஓய்வு இல். ஈங்கோய்மலை: இஃது ஈக்களாற் பூசிக்கப் பெற்ற தலம்.

122. வசந்தன்-மன்மதன். அவன் திருத்தேர்-தென்றல்.

122-3, பொன்னிப்பூதலம்-சோழநாடு.

125. பெரும் ஆனைப்போர்வை. ஒருமானை-உமாதேவியாரை.

126. ஆகத்து வைத்தவனை; ஆகம்- பாதியுடம்பில், அந்தகனை - யமனை. அங்கணம்போல் ஆக - சேறுபோல ஆகும்படி, துவைத்தவனை- மிதித்தவனை,

127. ஏகத்தொருவனை: "யானையுமா மேகத்தொருவன்" (திருக்கோவையார், 71) ஒருவு அனையான்றன்னை - நீக்கிய தாயையுடையவனை; தாயில்லாதவை
யென்றபடி. 
128. உற்பலம் அருச்சித்தற்குரிய எட்டுமலர்களுள் ஒன்று.

130. அறியா என்ற பெயரெச்சங்கள், தேவர் என்பதைக்கொண்டு முடிந்தன.

131. தவப்பேறு - தவத்தாலடையும் பயன், அருள்கொண்டு உதவ, பேறு -பெறுதல்

132. என்பது - என்று மகளிர் கூறப்படுதல்.

134. சந்திரனையும் தென்றலையும் பாம்பு உண்னும்; "தென்காற்று மிந்துவுஞ் சமனே கண்டீர், வீரமா லலங்கா ரர்க்கு விடவரா விடவ ராதோ" (அழகர் கலம்பகம்,73) குஞ்சரமாம்-மன்மதனுக்கு யானையாகிய.

135. மன்மதன்கணைகளை அரும்பாகக்கூறுதல் மரபு; "சுருப்புநாண் கருப்புவி லருபுக்கணை தூவ" (மணிமேகலை, 18:105); "கரும்புஞ் சுரும்பு மரும்பும் பொரும்படைக் காமர்வில்வேள்" (சிதம்பரச்செய். 74) இருளுக்கு சந்திரனாகிய கண்ணும், அரும்புகளுக்குச் சூரியனாகிய கண்ணும், மன்மதனுக்கு அக்கினியாகிய நெற்றிக்கண்ணும் பகை என்று கொள்க, புங்கவர்க்கா-தேவர்களுக்காக.

136. முன் தாக்க.

136-7 பின் பார்த்தீர், பயந்தலைக்கொண்டீர்; பயம்-நீர், அச்சம்; சிலேடை.

138. மால்-மயக்கம், ஈது அறியானோ. 
139. ‘ஓராடைகட்டச்செய்தது' என்றது அர்த்தநாரீசுவரமூர்த்தத்தை நினைந்து.

140. தானை-ஆடை, சேனையென்றது பெண்களை.

141. கும்பு இட்டு- கூட்டமாகி; கும்பென்பது குழும்பு என்பதன் சிதைவு போலும். நம்பகையை என்றது சிவபெருமானை. இங்ஙனம் நினைந்தவன் மன்மதன். தெம்பு-வன்மை; வழக்கு. வம்பு-பழிமொழி.

142. மை அலர் என்று-குற்றமுள்ள பூக்களென நினந்து; பாணமாக நினையோம் என்றபடி. ஐ அலாக்கு-ஐந்து மலர்ப்பாணங்களுக்கு.

144. குணம்-தன்மை, நாணியாகிய வண்டு; நைடதம், அன்னத்தைக் கண்ணுற்ற. 12. சொற்குணங்களாவன: இனிமை மெய்ம்மை முதலியன; குறள். 194. பரிமேல்.

145. உழை-மான். கடம்பு: இத்தல-விருட்சம். மட்டு-தேன். மழை ஆர்ப்பு- மேகத்தின் முழக்கத்தை. இழை-ஆபரணத்தில்.

147. கலை-ஆடை, ஆண்மான். பாற்படுநீர்-பாலோடு சேர்ந்தநீர், பகுதிப் பட்டதன்மை. பின்னஞ்செய-வேறுபிரித்தறிய.

149. சிவபிரான் கண்டத்தில் உள்ள விடம் கொல்லுந்தன்மை உடைய தன்றாதலின் அஃது இவள்கண்ணுக்கு உவமை கூறப்பட்டது.

150. செல்-மேகம். வில்-ஒளி. இந்த்ரவிமானம்-இந்திரனாலமைக்கப்பட்ட சோமசுந்தரக்கடவுளது விமானம்.

151. சித்தர்-எல்லாம்வல்லசித்தர். முத்துவடம்-முத்துமாலையை; திருவிளை. 21:23

152. பாணிக்குள்-நீருக்குள். அக்கணையென்றது தாமரையரும்பாகிய கணையை.

153. நாரி-உமாதேவியார்.

157. இறைவன் அணிந்த பிறைக்குக் களங்கம் இல்லை.

158. பூவை-நாகணவாய்ப்புள்.

160. வட்டில்-ஒருவகைப்பாத்திரம்; "பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவ னாவேனே"; (பெருமாள்திருமொழி); "கறையடிச் சுவடெனுங் கனக வட்டில்கள்" - காஞ்சிப். திருநாகப். 14.

162. நாதிக்க-முழங்க; "மணிமுரசம், நாதிக்கும் பாண்டிவள நாட்டினான்" - விறலிவிடு. 38.

165. குதலை-மொழி பாலன்-அம்பிகையைப் பாகத்தில் உடையவன்; குதலைமொழி-அம்பிகை; பால்-பாகம்; குதலையை மொழிகின்ற சிறுவனென்பது வேறு பொருள். 
166. கோடரம்-மரக்கிளை. 
167. மை-மேகத்தை. கவுரி கையேந்துபாலனெபதன் வரலாற்றைத் திருவிளையாடல் விருத்தகுமாரபாலரானபடத்தாலுணர்க. காபாலன்- கபாலமென்னும் கூத்துடையவன்; "காபால மாடுங்கால்" (கலி-கடவுள்) அடியான் - திருவள்ளுவர்.

168.திங்கட்சுதை-சந்திரனிடத்துள்ள அமுதம். முப்பால்-திருக்குறள்; மூவகைப்பாலென்பது வேறுபொருள்; "முப்பாலும், மிஞ்சப் புகட்ட மிகைவளர்ந்தாய்" (தமிழ்விடுதூது),25.) சங்கம்-தமிழ்ச்சங்கம்,சங்கு; "அல்லம தேவன் சரிதத் தீம்பால், புண்ணியர்தஞ் செவிவாயிற் றமிழ்ச்சங்கத் தான்முகந்து புகட்டினானால்" (பிரபு. துதிகதி,11.) தமிழ்ப்பாலன்-தமிழின் பகுதிகளை உடையவன். அங்கசன்-மன்மதன்.

169. நயனப்பாலன் -கண்ணை நெற்றியிலே உடையவன்;பாலம்-நெற்றி

170. எய்துமோ-வருவானோ.

167-70. இப்பகுதியோடு, "யாவன் பாலனிவன்புக லென்றேன், மேவன் பாநகை மேவுறப் புரிந்து, முன்னிவன் பெருமறை மொழிக்கப் பாலன், மன்னிவன் பராரையின் வளர்கப் பாலன், மூர்த்தி முதலா மொழிமுப்ப் பாலன், சீர்த்திகொணீற்றொடு திகழ்கட் பாலன், அறுவகைச்சமயத் தறுவகைப்பாலன், மறுவகை சுருதி மணத்தக பாலன், ஆறா றாய வைக்கப் பாலன், மாறாதியற்றி வயக்குகா பாலன் வளர்தரு தெய்வ மனுச்சா பாலன், தளர்வரு கௌரி தனக் கழும் பாலன், தழைதரு மிந்நாட் சைவபரி பாலன், பிழைதரு தன்மையில் பெருந்தவப்பாலன்" (*அம்பலவாணதேசிககர்கலம்பகம்,51.) என்பது ஒப்பு நோக்கற்குரியது. *இந்நூல் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றியது.

173. வித்து அங்குரித்து-விதைமுளைத்து.

175.கைம்மான் மருண்டு பார்க்கும் என-இயைக்க.

176.பூரித்து-நிறைத்து.

177.ஏல-பொருந்த.கன்னிகை-அரும்பு.

178.பொற்பள் இங்கு வாரும் என்று அவர்களை அழைக்க.

179.என் அன்னை.

180.கந்தரம்-கழுத்து.

180-181. உடற்பாதி-உமையின் திருவுருவத்தை. பாதி-சிவபெருமானுடைய திருவுருவம்.

182. கோமேதகம் தேனின் நிறமுள்ளது; "கோமேதகத்தை, மருவுவயிடூரியத்தின் மீது தூய மதுத்துளிமே வியதென்பர்" - திருவால.25:21

183. வேணி-சடை. பாணி-கை.

184.பாகு-தேன்பாகு. ஏகாம்பரம்-காஞ்சியிலுள்ள திருவேகம்ப மென்னும் தலம்.

185. மலை- திருவண்ணாமலை.

186. வள்ளிதழி-பெதும்பை. திரி-மூன்று

187. நான்மாடக்கூடல்-மதுரை; நான்குமாடங்கள்கூடிய இடம் என்பது இதன் பொருள்; நான்குமாடங்களாவன கன்னி, கரியமால், காளி, ஆலவா யென்பன;இவற்றைப்பற்றிய வரலாறு மதுரைக்காஞ்சி, 429-மடி உரையின் அடிகுறிப்பால் உணரலாகும்.

188.கிஞ்சுகப்பூ-முள்ளுமுருங்கைப்பூ.பஞ்சநதி-திருவையாறு. நஞ்ச விழி-தாமைபோன்ற கண்ணையுடைய பெதும்பை.

189. மெய்த்தலம் பட்ட மங்கை; இது பட்ட மங்கலமென இக்காலத்து வழங்கும்; "பட்ட மங்கையிற் பாங்க* விருந்தங்,அட்டமா* சித்தி யருளிய வதுவும்" திருவாசகம்,கீர்த்தித், 62-3.

191 ஒருமித்து-ஒருங்கே; "காதலிருவர் கருத்தொருமித்-தாதரவு, பட்டதேயின்பம்" - ஒளவை பாடல்.

192-3.நோக்கு-கண்கள். நுசுப்பு-இடை. ஆக்கமகள்-திருமகள். மாது-பெதும்பை. கொண்டு-மேற்கூறிய அம்மானைகளைக்கொண்டு.

194.அமையும்-போதும். அமையம்-சமயம்.

195. மலர்க்கணை-மலர்போன்ற கண்ணை.

195-6 திரிவிக்ரமனுக்கு-திருமாலுக்கு.ப்ரபை-ஒளி. சக்கரம்-சக்கராயுதத்தை.

197.குக்குடம்-கோழி. அரசை-முருகக்கடவுளை. சொல் துதிக்கையனை-விநாயகரை.

198.விச்சை-சிற்பவித்தை.

199.ஆயம்-கூட்டம்.

200. கோல்-அம்பு, அளவுகோல். அளப்பு-அளத்தலை. பால்-பக்கத்துள்ள.

202. அனைமார் (200) எண்ணியபோதில். என-என்று பெதும்பை கேட்க.

203 சூலி-சூலத்தையுடைய உமை, கர்ப்பம் உடையவள். பச்சுடம்பு- பச்சை உடம்பு, ஈன்றணிமைத்தாகிய உடம்பு, பாலிக்கும்-அருள்செய்வார். சேல்விழிப்பெண்-அங்கயற்கணம்மை.

203-4. இத்தலத்தில் வேதசன்மாவுக்காகச் சிவபெருமான் மணக்கோலம் காட்டியவரலாறு இங்கே அறிதற்குரியது; கண்ணி, 27-31, மாலை-மயக்கத்தை. பசப்பு-பச்சைநிறம், ஏமாற்றுதல்(பாசாங்கு); "இயல்பசப்பும்" சாபேந்திர குறவஞ்சி, 30.

205. மானைக்காட்டி, மானைப்பிடித்தல் வேடர்கள் வழக்கம் மான்- உமாதேவியார், கானம்-சங்கீதம், காடு; சிலேடை, காட்டுமானைக் காட்டி வீட்டுமானைக் கொள்ளவந்தீரென்பது இதிலுள்ள நயம்.

206. நன்று ஆச்சது; ஆச்சுது-ஆயிற்று; நடத்தை-நடை, நடனத்தை, விடம்-விடபுருஷர்கள், விஷத்தையுடைய ஆதிஷேட அவதாரமாகிய பதஞ் சலிமுனிவர். புல்லர்-புன்னைக்குண்ம் உடையவர், புலிக்காலையுடைய வியாக்கிர பாதர்; புல்=புலி, நன்று-மிகுதி.

208. குயில்-பெதும்பை.

209. பதிகள்-கணவர்கள்.

208-10 மனம்-மார்பு;அதிலுள்ளவள் திருமங்கை. வாக்கு- இங்கே நாக்கு; அதிலே உள்ளவள் கலைமங்கை. காயம்-உடம்பு;அதிலே உள்ளவல் மலைமங்கை; நிரனிறை.

211. "காலை யரும்பிப் பாலெல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய்" என்னும் திருக்குறளை இக்கண்ணி குறித்துச் சுவைததும்ப நிற்கின்றது.

212. மாது-காதல்; சீவக.356.

213. பல் நாகம்- பலபாம்புகளை.

214. நின்று நின்று பார்த்து-மிக ஆலோசித்து. 
215. முக்கணையும் வெல்ல- மூன்றுகண்களையும்வெல்ல. நன்கையிலுள்ள நீலமலர்ப்பாணம் ஒன்று; இவள்கண்ணாகிய நீலமலர்ப்பாணம் இரண்டு. முழு நீலம்:"மாதே முழுநீலங், கொல்லும்" இரத்தினச் சுருக்கம்,11

216. மந்திரர்-மந்திரிகள்.

218. சீர்த்தியாகிய நீரை அபிஷேகம்செய்து;சீர்த்தி வெள்ளை நிறமுடையது; அதனால் அது வெண்மைநிறமுடைய அபிஷேகத்தீர்த்தமாகக் கூறப்பட்டது.

217-8 அபிடேகத்தாலும் மந்த்ரத்தாலும் மூர்த்திகரமுண்டாகுமென் பர்; காஞ்சிப்புராணம், நகரேற்றுப்படலம் 162-70 ஆம்பாடல்களைப் பார்க்க.

219. நல்லார்-பெண்கள், சான்றோர். கட்டு-கட்டுதல்.

220 பதுமை-திருமகள். விம்பம்-கொவ்வைக்கனி.

221அன்னம்-மங்கை; எழுவாய். பாலன்னம்-பாற்சோற்றுத்திரளை.
222.செங்குமுதம் விண்டாள்-வாயைத்திறந்து பாடினாள்.

223.துன்று அனம் மூன்று-நெருங்கிய மூன்று அன்னப்பறவைகள்.

225. அ மானை-அந்தக் காளியை; அ:உலகறிசுட்டு. ஆடிவென்ற- ஊர்த்துவ தாண்டவம்செய்து வெற்றிகொண்ட. அம்மானை-சிவபெருமானை. திருகாளத்திநாதருலா, 349; திருப்பூவணநாதருலா,265.

226.சோம திவாகர லோசனம்-சந்திரனையும் சூரியனையும் கண்ணாக உடைய.

227.மாருத பாவக மாதவ சாயகம்-காற்று,நெருப்பு,திருமால் என்னும் மூவரலாகிய அம்புடைய;"வல்வாயெரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்., வில்லாலெயி லெய்தான்" (திருஞா.தே.) மேருசராசனம்-மேருவாகிய வில்லையுடைய. சரோருகம்-தாமரைமலர்.

229. அ மனை நின்று.

229-30. சென்மக்கருவிலியை-பிறப்பில்லாதவரை.உருவிலி-மன்மதன்; இது தன்மைக்கண் வந்தது. மருமத்து-மார்பில்; நெஞ்சில்.

231. ஒருசோல்-ஓரம்பு;என்றது தாமரையரும்பை; அதுவே நெஞ்சி லெய்யப்படுவது;"நெஞ்சிலரவிந்தம்" இரத்தினச் சுருக்கம்,37. 232. வம்பு- பழிமொழி. கும்பமுனி-அகத்தியர்.

233. குன்று-பொதியில்மலை.குழவியிளங்கால்-தென்றற் காற்று; "சிறுகாற் குழந்தாய்கேள்" (பத்மகிரிநாதர் தென்றல்விடுதூது, 112.) கால்-காற்று, பாதம்.

234.காளகண்டம்-குயில்;விஷம்பொருந்திய கழுத்தென்பது வேறு பொருள். ஆசைக்கு-திக்குக்களில்.

235.அம் சுகம் அன்னீர்; சுகம்-கிளி. அஞ்சு உகமோ-ஐந்து யுகங் களோ;" இற்றை நீடி*வொன், றஞ்சுகந்தத்தை விளைக்கும்"திருவேங்கடத் தந்தாதி,12.

237-9. சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் மங்கைக்கும் சிலேடை. பசப்பு-பச்சைநிறம், பசலை. வன்னி அத்தம் மன்ன போதுறலால்- நெருப்பு கையின்கண் இருஅ வருதலால், கிளிகையின்கண் தங்கியிருப்ப வருத லினால்; அத்தமனப்போது வன்னி உறலால்; வன்னி-நெருப்பாக. மீனக் கொடியன்-மன்மதன்.பாண்டியன். விரைவில்-சீக்கிரத்தில். மணம்பொருந்திய பூவாகிய வில்லை. பயந்ததால்- அஞ்சினமையால், பெற்றதால்.

239. இமையவரையளித்த: சிலேடை. எந்தை என்னும் உம்மையும் அனை என்னும் உமாதேவியையும் என முறையே கூட்டுக.

240. ஒருபால்-ஒருபக்கம். என-என்று தோழியர் சொல்ல. பாகத்தவளுக்கு - உமைக்கு. அமைக்கும்-அடங்கும்; பெயரெச்சம். 
240-241 அபயகரமானது போதுமென்று அடக்குதலைக் காட்டினாற் போன்ற கருத்து, கூடுங் கதியொருகாற் கும்பிட்டான் போதுமென நாடு மபிநயத்தை நண்ணிற்றால் - ஓடியகட் காதனார் காணவொரு கால்நாட்டி கையமைத்து நாதனார் செய்யும் நடம் (சிதம்பர மும்மணிக்கோவை 29) என்பதில் அபயக்கை போதும் என்னும் குறிப்பை காட்டுவதாகக் கூறப்பட்டிருத்தல் காண்க

241 - ஐந்துரு - பஞ்சகிருத்தியத்திற்குரிய முர்த்திகளின் உருவங்கள் உபயன் - அருவுரு உடையவர்

242 - முனிவோர் - எழுவாய்

243 - சங்கைத்து - சந்தேகமுடையது, அவமே தவஞ்செய்தொம், அவமே- வீணாக, மங்கைக்கு-மோகினிக்கு

245 - கானராண் - காட்டரண், குழலுக்குக் காட்டை உவமை கூறுதல் மரபு. "குழற் காடேந்து மிளவஞ்சி க் கொடியே (மீனாட்சி பிள்ளைதமிழ் வருகை.9) "ஐம்பாற் காடுஞ்சுமக்கும் கரும்பே சகலகலா வல்லி மாலை 2) ரும் - ஒக்கும்

246 - புத்தி சொல்லுவான், கல் - மலை கல்லான் . .கற்றறிந்தான், சொன்முரண்

246-7. எல்லாம் கரும்பு உருவ வில்லான்-உருவமெல்லாம் கரும்பைப் போன்ற ஒளியையுடையவள்; வில்-ஒளி. கமல இல்லாள்-திருமகளைப் போன்றவள். கரு புருவ வில்லாள்-கருமையாகிய புருவ வில்லையுடையவள்.

248. தளிர் அன்ன கையான். பணி மேல் நகையாள்-ஆபரணங்களால் மேலாகிய விளக்கத்தையுடையவள். புவி மேனகையாள்-பூமியில்வந்த மேனகை போன்றவள்.

249. தனித்து இல் இருந்து.

249-50. எழுதும் ஓவியம் கைவந்த ஒருவனை-ஓவியம் எழுதுவதில் தேர்ச்சிபெற்ற ஒருத்தனை; "ஓவியத் துறைமை* போய் வொருவனை" (நைட தம், அன்னத்தைக், 6.) வகுப்பாய் எழுதுவாயாக.

251. என்னலும்-என்று மடந்தை சொன்னவுடன்.

252. விஞ்சை-வித்தையை. 
பாணிப்பான் - திருந்த அமைப்பான்; 

255 தோடு- ஒருவகை காதணி, வீணைவல்லோர் கம்பளர் அசுவதரர் 65 ம் கண்ணிக் குறிப்பைப் பார்க்க

256 அதர விம்ப வளந்தேன்- கீழுதடாகிய கொவ்வைக் கனியின் இனிமையுடைய தேனை

257 சுருதி- வேதம், இங்கே சாமகானம், "சங்கணி குழையர் சாமம் பாடுவர்"(திருஞா.தே) "மாமலர்த்தெரியலான்மணிமிடற்றிடைக் கிடந்த சாமகீதம்" (சீவக 2038), தங்கண்ட மீதுலராத சாமகீத மார்பர் போல்" (திருவிளை-மாமனாக23) தக்க 63 ம் தாழிசை அடிக்குறிப்பைப் பார்க்க

257-8 விஞ்சையால் இங்ஙணம் கரங்களால் எழுதினாலும், இங்கனம்- இங்ஙணம், லிங்கனம் செயலை- தழுவுதலை

259 வித்தகனோ, ஓகாரம் எதிர்மறை

262 தூரிகை- எழுதுகோல், அத்தநாரிதனை- பாதிவடிவத்திலுள்ள பெண்ணை, என்றது உமா தேவியை

264. "மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான் வார்சடையா னென்னி னன்னால், ஒப்புடைய னல்ல னெருவ னல்லன் ஓரூர னல்ல னோ ருமை னில்லி, அப்படியு மந்நிறமு மவ்வண் ணத்தன் இவனிறைவ னென்றெழுதிக் காட்டொ ணாதே" (திருநா, தே.) இதழித்தாமம் - கொன்றைமாலை, 

265. வரும் - வருவான்.

267-268 எண்டிசையுங் கட்டிய தானை - திகம்பரம். பட்டிமை - பொய்; "பட்டிமையும் படிறுமே பேசுகின்றார்" (திருநா, தே.) "பாவகஞ் செய்து தீட்டிப் பட்டிமை யோலை யுய்ப்பான் (திருவிளை, 30:13). புட்டிலில் - அம்பறாத்துணியில்.

269. அம்பு அடைத்தவன் - ஐந்து மலர்ப்பாணங்களைச் செருகிவைத்தவன்; மன்மதன்; பரிகலத்தில் ஐயம் படைத்தவர்போல் - பிச்சைப் பாத்திரத்தில் பலியிட்ட தாருகாவன முனிவர் பத்தினிகளைப் போல, ஆயினேன் என்றது காமமயக்கங்கொண்டு ஆடை முதலியவற்றை இழந்ததைக் குறிப்பிட்டபடி. மெய்அணி - முழு உடம்பாகிய ஆபரணம்; என்றது காயாரோகணத்திருவுருவத்தைக் குறிப்பித்தது.

270. என்பு அணியும்-எலும்பாகிய ஆபரணத்தையும். என் பணியும் கொண்டால்-என்னுடைய குற்றேவலையும் ஏற்றுக்கொண்டால். 
271. மாலை-திருமாலை. அளித்தீர்-காப்பாற்றினீர். எனக்கு மாலை அளித் தீர்-அடியேனுக்கு மயக்கத்தைத் தந்தீர். அதற்கு-அதனை நீக்குதற்கு. மாலை- பூமாலையை.

274. மருட்டி-மருளச்செய்து. சிறை-இறகு; சிறைச்சாலையென்பது மற்றொருபொருள். பயம்-நீர், அச்சம்; "உன் கண்ணோக்கி மீன்பயங் கொண் டலையும்" கோடீச்சுரக்கோவை, 23.

275.பங்கம்-சேறு, பழுது; "புன்கமுறு மம்புயத்தைப் பங்கமுற்ற தென்னவொளிர் முகத்தினாள்" (சரபேந்திர, குறவஞ்சி, 11.)வனம்-தண் ணீர், காடு; தோற்றவர்கள் காட்டில் மறைந்திருத்தல்மரபு; "இனத்தினுடனாம்ப லெழிற்போது தோற்று, வனத்திருக்க மன்னியசெல் வாயாள்" (பெருவுடை யாருலா,185) என்பதன் அடிக்குறிப்பைப் பார்க்க. சின்-சின்ன;சிறிய; "சின்னலிடைப் பாகா" காசிக்கலம். 79.

276. மேன்மைப்படும்-மேன்மையை அடையும், மேலே மேகம்பொருந் தும். அதோகதியாய்-ஆழமுடையதாக, தாழ்ந்தநிலையுடையதாக. ந*டு-விடம்.

277. நித்ய கண்டம்-தினந்தோறும் கழுத்தில், தினந்தோறும் வரும் ஆபத்து. சத்தியிலை-வேலினது இலை, ஆற்றவில்லை; "சுத்தவீ ரத்தரங்கைத் துன்னுவடி வேலதனைச், சத்தியிலை யென்னுந் *தடங்கணாள்" (பெருவுடையா ருலா, 225), "வெற்றி வேலைநீ டிதுசத்தி யிலையென வேலை, சுற்று மாநிலஞ் சொலவுறு துணைமத விழியாள்" திருவிடைமருதூர்ப்புராணம், தேவ விரதச். 24.

278. உறையிடக்காணாது-உறைக்குள் இட்டால் தோற்றாது, உறைக் கணக்கிடவும் பற்றாது; உறை-ஒருவகை எண்; "உறையிடத் தேய்ந்திடு மிவ்வந்தி வானத் துடுக்குலமே" (திருவேங்கடத்தந்தாதி, 34.) மறலி-யமன். தன்மன்- தருமராசன், கொலையே யில்லாதவன்; "கூற்றுவனை யாருங் குலவுந் தரும னெனச், சாற்றிடச் செய்யுந் *தடங்கண்ணாள்" (பெருவுடையாருலா, 183), "தருமமெனக் கூற்றை யெவருஞ் சொல்லக் கூர்த்த நயனத்தாள்" (சரபேந் திர. குறவஞ்சி, 11), "இமயனைத் தரும னெனவுயிர் வாட்டி ... ... ... இலகு மடக்கொடி கூர்விழி" திருவிடை, வரகுண. 73.

279. உரு-அழகு. உருவையுடையான்-சிவபெருமான். அரி வை உறு- அரிகளையும் கூர்மையையும் பெற்ற, திருமாலை வைக்கப்பெற்ற.

280. நாளிகேரத்தினை-தேங்காயை. சக்ரவாளத்தை-சக்கரவாகப் பறவையை; "சோணாடர் போற்றிய செம்பொற் றியாகர் துறைசைவெற்பிற், காணா மருங்கினின் பூணாரக் கொங்கையைக் கண்டழிந்த, நாணாற் புவியி லொரு வர்தங் கண்ணுக்கு நண்ணரிதாய்ச், சேணார் விசும்பிடைச் சக்கர வாகந் திரி கின்றதே" திருவாவடுதுறைக் கோவை, 22.

280-81. "மாயைமுலைக் கிணையெனவென் மூன்றானும் வந்ததென வலக்கைத் தாளம், போயிடக்கைத் தானமதைப் பொறாமையினாற் றாக்குதல் போற் புடைத்தொ லிப்ப";(பிரபுலிங்கலீலை, மாயைபூசனை. 50.) தண்டம்- தண்டனை.

282. கரி-யானை. கிரிவைத்து:தோற்றவர்கள் மலையை அடைவது மரபு. கன்னிகாரத்தை-கோங்கரும்பை. தெரியலர் தூற்ற-யாவரும் தெரியும் மலர் களைப்பொழிய, பகைவர்கள் பழிக்க. பரிய-பருத்த.

283.வாயடைத்து-வாயை மூடி, பேசாமலிருக்கச்செய்து. பணியுள் தணிக்க-ஆபரணங்களை அதற்குள் தங்கச்செய்து, குற்றேவலில் அடங்கச் செய்து. கூவிளத்தை- வில்வகனியை. கணிப்பு அரிய-அளவிடுதற்கரிய.

284. வித்தை-விதையை, கல்வி . வில்வக்குடுக்கையைத் திருநீறுவைத் துக்கொள்ளுதற்குச் சிவனடியார்கள் பயன்படுத்திக்கொள்வார்கள்.

285. புலர்த்தி-வாடச்செய்து. தினகரர் சூழ்ந்திடும் வேதண்டம்-மேரு மலை. தலைமடக்கி-வளையச்செய்து, வெட்கத்தால் தலைகுனியச்செய்து;அது வில்லானபோது வளைந்தமை இங்கே அறியற்பாலது.

286. திதலை-தேமல் 288. சந்தம்-சந்தனம்.

289. என்று-சூரியன். என்றுவந்தீர்:ஒருசமயத்தில் பாம்பு கருடனை நோக்கி, 'சுகமா' என்று கேட்டதை இது நினைப்பிக்கின்றது. காஞ்சிப் பணாதரீச்.5.

290. "அலகில் சுரபதி மதனர்க ளரசிவர் அவர திகிரியு மனிகமும்... இவர்" (தக்க. 38) என்பதையும் அதன் உரையையும் பார்க்க.

292. சாய்ந்திட-தோல்வியுற.

292-3. விறலியைப் பாணபத்திரர் மனைவியாகவே எண்ணிக் கூறியது; இங்கேகூறிய வரலாற்றைத் திருவிளையாடற்புராணம் இசைவாதுவென்ற படலத்தா லறியலாகும்.

294. சவுந்தரம்-அழகு, என்ன-என்று அரிவை கேட்ப.

295. மாடகம்-முறுக்காணி, பாணினி-விறலி.

296. புரத்தை-சரீரத்தை, மாமன்-தக்கன், ஏமம்-இன்பம்.

297. அந்தகனை-யமனை, அந்தகாசுரனை. ஆதி அடையலர்- முதலாகிய பகைவர்; என்றது யானை, சலந்தரன் முதலியவர்களை.

298. பார்த்தல் முதலியவற்றை நிரனிறையாகக் கொள்க. விளையாட்ட மரை - விளையாட்டுச்சண்டையை. நேர்த்திட-ஒக்க.

299. இஃது எவரால் முடியும். அடலுற்றால்-சண்டைசெய்யப் புகுந்தால்.

296-303. இவற்றில் வீரம் கூறப்பட்டது.

303. இனி, கருணை கூறப்படும். தும்பி-யானை. அரா-பாம்பு. தும்பி முதலிய மூன்றும் பூசித்துப் பேறுபெற்ற தலம் காளத்தி. தும்பி, சிலந்தி இரண்டும் பூசித்துப் பேறுபெற்ற தலம் திருவானைக்கா. தும்பியென்பதற்கு வண்டென்று பொருள்கொண்டு அது பூசித்துப் பேறுபெற்றது ஸ்ரீசைலம். திருவண்டுறை எனக் கொள்க. பாம்பு பூசித்துப் பேறுபெற்ற தலங்கள்: திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம், திருநாகேச்சுரம், திருநாகைக்காரோணம், திருப்பாம்புரம், திருப்பாம்பாணி, திருக்கேதீச்சுரம் முதலியன. கயவாய்-கரிக்குருவி; இதுபேறுபெற்ற தலம் திருவாலவாய். 
304. ஏனக்குட்டி-பன்றிக்குட்டிகள்; இவற்றிற்கு அருள்செய்தது திரு வாலவாயில் ஓரி-நரி; நரி அருள்பெற்ற தலம் திருக்குற்றாலம். எறும்பு அருள்பெற்ற தலம் திருவெறும்பீச்சுரம்.

306-8 இவற்றில் அழகு கூறப்பட்டது.

309. ஆரம்.சந்தனம்;முத்துமாம்.

310 ஆர்ப்பரவம்:இருபெயரொட்டு,313. கா-சோலை. நாண்-வண்டு.

313 வில்-கரும்பு. சேனை-பெண்கள்.

314. களிறு-இருட்டு. பரவு-பரப்பு, பரி-கிளி.

315.தேர்-தென்றல்.

318. அயிலும்-வேலும். அனம்-அன்னப்பரவை. கனம்-மேகம். வடம்- ஆலிலை. குடம்-கும்பம். இயலும்-அசைகின்ற.

319. துடி-உடுக்கை, குளிரும்:பெயரெச்சம்.

320. சாயல்-மென்மை, வீதி-நேரோடல், இசைப் பான்மை-இசைப் பாட்டின் பகுதி. உதரம்-வயிறு. பயோதரங்கள்-கொங்கைகள். வான்- பெருமை. மருங்குல்-இடை.

318-20. கண் முதலியவற்றிற்கு அபில் முதலியவற்றை நிரனிறையாக உவமை கொள்க. இடைக்குக் கொடியும் துடியும் உவமைகள்.

322. படைத்தமன்னர்-சக்கரவர்த்திகள்.

323. அரிச்சிங்காதனம்: இருபெயரொட்டு. ஏல்வை-காலம். உச்சிதம்-மேன்மை.

324. அம் குறப்பெண்ணாம் ஒருத்தி. அங்கு உற

325. சொல் என-சொல் என்று தெரிவை சொல்ல.

326. நாள்-நட்சத்திரம், வாரம்-கிழமை, அவள்-குறத்தி.

327. பிரபவ முதலிய அறுபதுவருட வரிசையில் பதினொன்றாவது ஈசுவர வருடம்.

328. நாலாவதுமாதம் - ஆடி

329. ஆறாவது நட்சத்திரம் - திருவாதிரை, ஆகிரையான்-சிவபெருமான் கோள்-ஞாயிறு முதலியன.

330. இரண்டாவது வாரம்-சோமவாரம்; "சோமசுந்தர னுரிய வாரமாதலாற் சோமவாரம்" திருவிளை . 14:7

331. யோகத்தால்-நல்லூழால், அந்தக்கரணமுடன்-மன உவப்புடன்.

326-ஆம் கண்ணிமுலியவற்றில் வருடம் முதலியவற்றைக் கூறிய தோடியைய யோகம், கரணம் என்பவையும் தொனிக்கும்படி கூறினார்.

334. அம் கலங்கள் - அழகிய ஆபரணங்கள், ஆங்கு-வீதியில்.

337. வண்டன்-வண்டாகிய நாணையுடையவன், துட்டன், தப்பிலி-தப்புதல் இல்லாதவன், இகழ்ச்சிக்குறிப்புப்பெயர். பூவில் இல்லன்-பூவிலுள்ள மனைவியையுடையவன்; திருமால்; இல்-மனைவி. பூவில் இலனே என்றாலும் எய்திடுவான்-பூமியில் நான் இல்லாதவன் என்றாலும் அம்பால் எய்வான்; "கொள்ளும், பொருளில ராயினும் பொங்கெனப்போந் தெய்யும்,அருளின் மறவர்" திணைமாலை. 84.

338. கூவென்னும் சின்னம்-குயில்; கூகூ வென்னும் குறிப்பு. மெய்- சரீரம், உண்மை. கா,சோலை, காப்பாயாக. வந்து அடிக்க-தென்றல் வீச, வருதலைச்செய்து கொள்ளையடிக்க.

339. வேடனை-வேள் தனை, வேடச்சாதியானை.

340. ஆற்றும்-தாங்கும்.

342. தூரியம்-வாத்தியம். பேரிளம்பெண்-பெரிய இளமையையுடைய பெண்; "காமர் கவினிய பேரிளம் பெண்டிர்" (மதுரைக்காஞ்சி,465) என்பதையும் அதனுரையையும் பார்க்க.

343. இருட்டு அறையுள். பல்கணி-சாளரம். இருள் தனை.

344. பூண்-ஆபரணம்,தண்டுக்குக் கட்டப்படும் பூண். பேரிளம்பெண்

செயற்கை அழகை விடுத்தவளாதலின் அதற்கேற்ப அவளியல்பு கூறப்படும்

346. சரி:உடன்பாட்டுக்குறிப்பு;சரிவாயாக என்பது மற்றொருபொருள்.

347. புதுமை-புதிய காட்சி, புதிய அஞ்சனம். மதுகரங்கள்-வண்டுகள்.

348. தரு-மரங்கள்.

349. வாழை திருப்பைஞ்ஞீலித் தலவிருட்சம். பின்னர்க் கூறிய மரங்களை அவ்வத் தலவிருட்சமாகக் கொள்க.

350-51 அதன் வல் வேலியாக-அந்தப் பலாவின் வலிய வேலியாக; வேணு-மூங்கில்; "வேரல் வேலி வேர்க்கோட் பலவின், சார னாட" குறுந்தொகை,18. 
352. முல்லை வாயாள்-முல்லையரும்புபோன்ற பற்களையுடைய வாயுடையாள். முல்லை-முல்லைக்கொடி. முல்லைவாயில்-வடதிருமுல்லைவாயில், தென்றிரு முல்லைவாயிலென்னும் தலங்கள். மா-மாமரம்.

353. குறியிட்டவள்-அம்பிகை. முறி-தளீர்.

354. நிம்பம்-வேப்பமரம். இராசலிங்கச்சம்பு-இரத்தினகிரீசர்;
வாட்போக்கிநாதர். 
355. திந்திருணி-புளியமரம்.

349-57. தலவிருட்சங்களைப் பாராட்டிய முறை திருவானைக்கா உலாப் பேரிளம்பெண்பருவத்திலும், சொக்கநாதருலா அரிவைப்பருவத்திலும் காணப்படுகின்றது.

359. கூடல்-மதுரை, மணத்தல்; சிலேடை. இவ்விடையே-இவ்விடத்திலேயே. 

360 கலையான்-மானையுடையவன். மலை அமலையான். இதுமுதல் தசாங்கம் கூறப்படும்.

361-2 மறைக்காடு-வேதாரணியம்.

363. உதரத்து உதியான். இடத் தம்பதியான்-இடப்பாகத்திலே மனைவி யையுடையான்; தம்பதி-மனைவி; வழக்கு.

364. ஆரணியன் -பார்வதியையுடையவன். மெய்யன் - உண்மைப்பொரு ளாக உள்ளவன். அடியார் அணியன் - அன்ப்ர்களுக்கு அருகிலுள்ளவன். மா இரதம் தாரணியன் -பூமியை பெரிய இரதமாக உடையவன்; தாரணி-பூமி. இதழித் தார் அணியன் -கொன்றைமலையை அணிந்தவன். ஓர்கை- ஒருகையையுடைய யானை; அறுகாலென்றதுபோல நின்றது.

365. பரியான்-தாங்கான். 
365-6. செங்கை வாரணத்தன் - செங்கையிற் சங்கையுடையவர்; திருமால். கோடு-நாலுகொம்புடைய. வெள்ளைவாரணத்தன் - வெள்ளையானையை யுடைய இந்திரன். வாணி-கலைமகளை; ஆரணத்தன் - பிரமன். அயிராவணம்-இரண்டாயிரங்கொம்பையுடைய யானை; "அயிராவணமேறாதானேறேறி" திருநா.தே.

367. படி-பூமிதேவி. கொடி-திருமகள். கொடியான்-துவசத்தையுடையவன்; "பொறிக்கொடி மார்பிற்கொண் மரைக்கட்கொடி" திருவிடைமருதூருலா,143. 

370. பூதப்புணர்ப்பு-பௌதிகம். போதன்-பிரமன்.

372. குனிப்பு-நடனம்.

373. தந்து ஆர்- நூலையொத்த.

375. மெய்யாம் நிலத்தினில்-தேகமாகிய நிலத்தில். காவேரியம்பு-சோலை யிலுள்ள தேனிறைந்த மலர்ப்பாணம், காவிரிநீர். புளகம்-மயிர்சிலிர்த்தல். அங்குரிப்ப-முளைப்ப.

376-7 காட்சி-தோற்றம். மோகத்தை விளைவாகக்கூறுதற்கேற்ப நெல்வேலியீசர் கூறப்பட்டார். வேளாண்மை-மன்மதனது ஆண்மை, பயிர்த்தொழில். போகம்-இன்பம், விளைவு.
378. என்ன-என்று பேரிளம்பெண் சொல்ல.

380. "உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற, கருவே" [தே].

381: தமிழ்ச் சொல்லே பொருளே - சொல்லுநன் பொருமாளே (திரு, தேவா), நல்லே - ஒளியே

382. மதி ஒன்று ஒன்று - ஒரு பிறை பொருந்திய [@] இந்த விருத்தம், ஏட்டுப்பிரதியில் இந்த உலாவின்பின் எழுதப்பட்டிருந்தது.
---------

Please send your corrections

 

Related Content

நடேசர் அநுபூதி (மாணிக்க வாசகன்)

ஸ்ரீநடேசர் கலிவெண்பா (குளித்தலை மாணிக்கவாசகம் )