logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருத்தொண்டர் புராண சாரம்

[மூலமும் கதைச் சுருக்கமும்]

நூல் வந்தவழி

ஆசிரிய விருத்தம்

 

மல்குபுகழ் வன்றொண்டர் அருளால் ஈந்த 

        வளமருவு திருத்தொண்டத் தொகையின் வாய்மை

நல்கும்வகை புல்கும்வகை நம்பி யாண்டார் 

        நம்பிதிரு அந்தாதி நவின்ற வாற்றால் 

பல்குநெறித் தொண்டர்சீர் பரவ வல்ல 

        பான்மையார் எமையாளும் பரிவால் வைத்த 

செல்வமிகும் திருத்தொண்டர் புராண மேவும் 

        திருந்துபயன் அடியேனும் செப்ப லுற்றேன்.                              1

 

 

 

1. சுந்தரமூர்த்தி நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆடி - சுவாதி நட்சத்திரம்

 

தண்கயிலையது நீங்கி நாவ லூர்வாழ் 

        சைவனார் சடையனார் தனயனாராய்

மண்புகழ அருட்டுறையான் ஓலைகாட்டி 

        மணம்விலக்க வன்றொண்டர் அதிகை சேர்ந்து 

நண்பினுடன் அருள்புரிய ஆரூர் மேவி 

        நலங்கிளரும் பரவைதோள் நயந்து வைகித் 

திண்குலவும் விறன்மிண்டர் திறல்கண் டேத்தும் 

திருத்தொண்டத் தொகையருளால் செப்பி னாரே.                         2

 

செப்பலரும் குண்டையூர் நெல்ல ழைத்துத் 

        திருப்புகலூர்த் செங்கல்செழும் பொன்னாச் செய்து 

தப்பின்முது குன்றர்தரும் பொருள்ஆற் றிட்டுத் 

        தடத்தெடுத்துச் சங்கிலிதோள் சார்ந்து நாதன் 

ஒப்பில்தனித் தூதுவந்(து)ஆ றூடுகீறி 

        உறுமுதலை சிறுமதலை உமிழ நல்கி 

மெய்ப்பெரிய களிறேறி அருளால் சேர 

        வேந்தருடன் வடகயிலை மேவினாரே.                          3

 

2. தில்லைவாழந்தணர்

 

குருபூசை நாள் : 

சித்திரை - (ஆண்டு) முதல் நாள்

 

 

நல்லவா னவர்போற்றும் தில்லை மன்றுள் 

        நாடகஞ்செய் பெருமானுக்கு அணியார் நற்பொன் 

தொல்லைவான் பணியெடுத்தற்கு உரியார் வீடும் 

        துறந்தநெறி யார்தொண்டத் தொகைமுன் பாடத்

‘தில்லைவா ழந்தணர்’ என்று எடுத்துநாதன் 

        செப்பும்அரு ளுடையார்முத் தீயார் பத்திக்கு 

எல்லைகாண் பரியார் ஒப்பு உலகில் தாமே 

        ஏய்ந்துளார் எமையாள வாய்ந்து ளாரே.                          4

 

3. திருநீலகண்ட நாயனார்

 

குருபூசை நாள் : 

வைகாசி - மூலம் நட்சத்திரம்

 

 

தில்லைநகர் வேட்கோவர் தூர்த்த ராகித் 

        ‘தீண்டில் எமைத் திருநீல கண்டம்’ என்று 

சொல்லுமனை யாள்தனையே அன்றி மற்றும் 

        துடியிடையா ரிடையின்பம் துறந்து மூத்துஅங்கு 

எல்லையில்ஓடு இறைவைத்து மாற்றி ‘நாங்கள் 

        எடுத்திலம்’ என்று இயம்புமென இழிந்து பொய்கை 

மெல்லியலா ளுடன்மூழ்கி இளமை எய்தி 

        விளங்குபுலீச் சரத்தரனை மேவி னாரே.                         5

 

4. இயற்பகை நாயனார்

 

குருபூசை நாள் : 

மார்கழி - உத்திரம் நட்சத்திரம்

 

 

எழிலாரும் காவிரிப்பூம் பட்டி னத்துள்

        இயல்வணிகர் இயற்பகையார் இருவர்தேட 

அழலாய பிரான்தூர்த்த மறையோ னாகி

        ஆயிழையைத் தரவேண்டி அணைய ஐயன் 

கழலாரப் பணிந்துமனைக் கற்பின் மேன்மைக் 

        காதலியைக் கொடுத்(து) அமர்செய் கருத்தால் வந்த

பிழையாருஞ் சுற்றமெலாம் துணித்து மீளப் 

        பிஞ்ஞகனார் அழைத்தருளப் பெற்று ளாரே.                      6

 

5. இளையான்குடிமாற நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆவணி - மகம் நட்சத்திரம்

 

 

மன்னியவே ளாண்தொன்மை இளைசை மாறர் 

        வறுமையால் உண்வுமிக மறந்து வைகி 

உன்னருநள் ளிருள் மழையில் உண்டி வேண்டி 

        உம்பர்பிரான் அணையவயல் உழுது வித்தும் 

செந்நெல்முளை அமுதுமனை அலக்கா லாக்கிச் 

        சிறுபயிரின் கறியமுது திருந்தச் செய்து 

பன்னலரும் உணவுஅருந்தற்கு எழுந்த சோதிப்

        பரலோக முழுதாண்ட பான்மையாரே.                           7

 

6. மெய்ப்பொருள் நாயனார்

 

குருபூசை நாள் : 

கார்த்திகை - உத்திரம் நட்சத்திரம்

 

 

சேதிபர்நற் கோவலூர் மலாட மன்னர் 

        திருவேடம் மெய்ப்பொருளாத் தெளிந்த சிந்தை 

நீதியினா ருடன் பொருது தோற்ற மாற்றான 

        நெடுஞ்சினமுங் கொடும்படையும் நிகழா வண்ணம் 

மாதவர்போல் ஒருமுறைகொண்டு அணுகி வாளால்

        வன்மைபுரிந் திடமருண்டு வந்த தத்தன்

காதலுற நமர்தத்தா!’ என்று நோக்கிக் 

        கடிதகல்வித்து இறைவனடி கைக்கொண் டாரே.                   8

 

7. விறன்மிண்ட நாயனார்

 

குருபூசை நாள் : 

சித்திரை - திருவாதிரை நட்சத்திரம்

 

 

விளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் தொன்மை 

        விறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில்

வளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும் 

        வன்றொண்டன் புறகுஅவனை வலிய ஆண்ட 

துளங்குசடை முடியோனும் புற(கு) என்(று)அன்பால் 

        சொல்லுதலும் அவர் தொண்டத்தொகை முன்பாட 

உளங்குளிர ‘உளது’ என்றார் அதனால் அண்ணல் 

        உவகைதர உயர்கணத்துள் ஓங்கினாரே.                          9

 

8. அமர்நீதி நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆனி - பூரம் நட்சத்திரம்

 

 

பழையாறை வணிகர் அமர்நீதியார் பால் 

        பரவுசிறு முனிவடிவாய்ப் பயிலும் நல்லூர்க் 

குழைகாதர் வந்(து) ஒருகோவணத்தை வைத்துக் 

        கொடுத்ததனை எடுத்தொளித்துக் குளித்து வந்து 

தொழிலாரும் அதுவேண்டி வெகுண்டு நீர்இத் 

        துலையிலிடுங் கோவணநேர் தூக்கும் என்ன 

எழிலாரும் பொன்மனைவி இளஞ்சேய் ஏற்றி 

        ஏறினர்வா னுலகுதொழ ஏறினாரே.                                     10 

 

9. எறிபத்த நாயனார்

 

குருபூசை நாள் : 

மாசி - அஸ்தம் நட்சத்திரம்

 

 

திருமருவு கருவூர் ஆனிலையார் சாத்தும் 

        சிவகாமி யார்மலரைச் சிந்த யானை 

அரனெறியோர் எறிபத்தர் பாக ரோடும் 

        அறஎறிய என்னுயிரும் அகற்றீர் என்று 

புரவலனார் கொடுத்தபடை அன்பால் வாங்கிப் 

        புரிந்துஅரிவான் புகஎழுந்த புனித வாக்கால் 

கரியினுடன் விழுந்தாரும் எழுந்தார் தாமும் 

        கணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே.                          11

 

10. ஏனாதிநாத நாயனார்

 

குருபூசை நாள் : 

புரட்டாசி - உத்திராடம் நட்சத்திரம்

 

 

ஈழக் குலச்சான்றார் எயின னூர்வாழ் 

        ஏனாதி நாதனார் இறைவன் நீற்றைத் 

தாழத் தொழுமரபார் படைகள் ஆற்றும் 

        தன்மைபெறா அதிசூரன் சமரில் தோற்று 

வாழத் திருநீறு சாத்தக் கண்டு 

        மருண்டார் தெருண்டார்கை வாள்வி டார்நேர் 

வீழக் களிப்பார்போல நின்றே யாக்கை 

        விடுவித்துச் சிவனருளே மேவி னாரே.                          12

 

11. கண்ணப்ப நாயனார்

 

குருபூசை நாள் : 

தை - மிருகசீரடம் நட்சத்திரம்

 

 

வேடரதி பதிஉடுப்பூர் வேந்தன் நாகன் 

        விளங்கியசேய் திண்ணனார் கன்னி வேட்டைக் 

காடதில்வாய் மஞ்சனமும் குஞ்சிதரு மலரும் 

        காய்ச்சினமென் றிடுதசையும் காளத்தி யார்க்குத் 

தேடருமன் பினில்ஆறு தினத்தளவும் அளிப்பச் 

        சீறுசிவ கோசரியும் தெளியவிழிப் புண்ணீர் 

ஓடவொரு கண்அப்பி ‘ஒருகண் அப்ப! 

        ஒழிக’வெனும் அருள்கொடரு(கு) உறநின் றாரே.                13 

 

12. குங்குலியக்கலய நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆவணி - மூலம் நட்சத்திரம்

 

 

சீலமலி திருக்கடவூர்க் கலய னாராம் 

        திகழ்மறையோர் பணிவறுமை சிதையா முன்னே 

தாலியைநெற் கொளஎன்று வாங்கிக் கொண்டு 

        சங்கையில்குங் குலியத்தால் சார்ந்த செல்வர் 

ஞாலநிகழ் திருப்பனந்தாள் நாதர் நேரே 

        நரபதியும் தொழக்கச்சால் நயந்து போதப் 

பாலமுதம் உண்டாரும் அரசும் எய்திப் 

        பரிந்துஅமுது செயஅருள்சேர் பான்மை யாரே.                    14 

 

13. மானக்கஞ்சாற நாயனார்

 

குருபூசை நாள் : 

மார்கழி - சுவாதி நட்சத்திரம்

 

 

கஞ்சநகர் மானக் கஞ்சாற னார்சீர்க் 

        காதல்மகள் வதுவைமணங் காணநாதன் 

வஞ்சமலி மாவிரதத் தலைவனாகி 

        வந்துபுகுந்து அவள்அளகம் மகிழ்ந்து நோக்கிப் 

பஞ்சவடிக் காம்என்ன அரிந்து நீட்டும் 

        பத்தர்எதிர் மறைந்து இறைவன் பணித்தவாக்கால் 

எஞ்சலில்வண் குழல்பெற்ற பேதை மாதை 

        ஏயர்பிராற்கு உதவிஅருள் எய்தி னாரே.                         15 

 

14. அரிவாட்டாய நாயனார்

 

குருபூசை நாள் : 

தை - திருவாதிரை நட்சத்திரம்

 

 

தாவில் கணமங்கலத்துள் வேளாண் தொன்மைத் 

        தாயனார் நாயனார் தமக்கே செந்நெல் 

தூவரிசி எனவிளைவது அவையே ஆகத் 

        துறத்துணவு வடுஅரிசி துளங்கு கீரை 

ஆவினில்ஐந் துடன்கொணரக் கமரில் சிந்த 

        அழிந்தரிவாள் கொண்டுஊட்டி அரியா முன்னே 

மாவடுவின் ஒலியும் அரன்கரமுந் தோன்றி 

        வாள்விலக்கி அமரர்தொழ வைத்தது அன்றே.                    16

 

15. ஆனாய நாயனார்

 

குருபூசை நாள் : 

கார்த்திகை - அஸ்தம் நட்சத்திரம்

 

 

மங்கலமா மலநாட்டு மங்கலமா நகருள் 

        மருவுபுகழ் ஆனாயர் வளர்ஆ மேய்ப்பார்

கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து 

        குழலிசையின் ஐந்தெழுத்தும் குழைய வைத்துத் 

தங்குசரா சரங்களெல்லாம் உருகா நிற்பத் 

        தம்பிரான் அணைந்து செவிதாழ்த்தி வாழ்ந்து 

பொங்கியவான் கருணைபுரிந்து ‘என்றும் ஊதப் 

        போதுக’ என்று அருளவுடன் போயி னாரே.                      17

 

16. மூர்த்தி நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆடி - கார்த்திகை நட்சத்திரம்

 

 

வழங்குபுகழ் மதுரைநகர் மூர்த்தி யாராம் 

        வணிகர்திரு ஆலவாய் மன்னர் சாத்தத் 

தழங்குதிர முழங்கைதரத் தேய்த்த ஊறுந் 

        தவிர்ந்துஅமணர் வஞ்சனையும் தவிர மன்னன் 

இழந்தஉயி ரினனாக ஞாலம் நல்க 

        எழில்வேணி முடியாக இலங்கு வேடம் 

முழங்குபுகழ் அணியாக விரை நீறாக 

        மும்மையுல காண்டு அருளின் முன்னி னாரே.                   18

 

17. முருக நாயனார்

 

குருபூசை நாள் : 

வைகாசி - மூலம் நட்சத்திரம்

 

 

மன்னுதிருப் புகலூர்வாழ் முருக னாராம் 

        மறையவர்கோ வர்த்தமா னீச்ச ரத்தார் 

சென்னியினுக்கு அழகமரும் மலர்கள் கொய்து 

        திருமாலை புகழ்மாலை திகழ சாத்திக் 

கன்னிமதில் கழுமலநா டுடைய நாதன் 

        காதல்மிகு மணங்காணுங் களிப்பி னாலே 

இன்னல்கெட உடன்சேவித்து அருளால் மீளாது 

        இலங்குபெரு மணத்துஅரனை எய்தி னாரே.                      19 

 

18. உருத்திரப்பசுபதி நாயனார்

 

குருபூசை நாள் : 

புரட்டாசி - அசுவதி நட்சத்திரம்

 

 

பங்கமில்வண் புகழ்நிலவு தலையூர் வாழும் 

        பசுபதியார் எனும்மறையோர் பணிந்து செந்தேன் 

அங்கமல மடுவினிடை அல்லும் எல்லும் 

        அகலாதெ யாகளமாய் அமர்ந்து நின்று 

திங்கள்வளர் சடைமுடியான் அடிகள் போற்றித் 

        திருவெழுத்தும் உருத்திரமும் திகழ ஓதி 

மங்கையிடம் உடையபிரான் அருளால் மேலை 

        வானவர்கள் தொழுமுலகின் மன்னி னாரே.                      20 

 

18. திருநாளைப்போவார் நாயனார்

 

குருபூசை நாள் : 

புரட்டாசி - ரோகிணி நட்சத்திரம்

 

 

நன்மைதிகழ் மேற்காநாட்டு ஆதனூர் வாழ் 

        நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப் 

பொன்மலிதென் புலியூர்க்கென்று உரைப்பார் புன்கூர்ப் 

        பொய்கை அமைத்து அடலேறு பிரிய நோக்கி 

வன்மதில்சூழ் தில்லையிறை அருளால் வாய்ந்த 

        வண்தழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற 

மின்மலிசெஞ் சடைமுனியாய் எழுந்து நாதன் 

        விளங்குநடம் தொழமன்றுள் மேவி னாரே.                              21 

 

20. திருக்குறிப்புத்தொண்ட நாயனார்

 

குருபூசை நாள் : 

சித்திரை - சுவாதி நட்சத்திரம்

 

 

கொந்தலர்பூம் பொழிற்கச்சி நகர்ஏ காலிக் 

        குலத்தலைவர் தவர்குறிப்புக் குறித்து ளார்பால் 

வந்திறைவர் ‘நமக்கின்று தாரீ ராகில் 

        வருந்தும்உடல்’ எனவாங்கி மாசு நீத்த 

கந்தைபுல ராதொழிய மழையும் மாலைக் 

        கடும்பொழுதும் வரக்கண்டு கலங்கிக் கல்மேல் 

சிந்தமுடிப் புடைப்பளவில் திருவே கம்பர் 

        திருக்கைகொடு பிடித்துயர்வான் சேர்த்தி னாரே.                   22 

 

21. சண்டேசுவர நாயனார்

 

குருபூசை நாள் : 

தை - உத்திரம் நட்சத்திரம்

 

 

வேதமலி சேய்ஞலூர் எச்ச தத்தன் 

        விளங்கியசேய் மறைபயிலும் விசார சன்மர் 

கோதனமேய்ப் பவன்கொடுமை பொறாது தாமே 

        கொண்டுநிரை மண்ணியிந்தென் கரையின் நீழல் 

தாதகியின் மணலிங்கத்து ஆன்பால் ஆட்டத் 

        தாதைபொறாது அவையிடறும் தாள்கள் மாளக் 

காதிமலர்த் தாமம்உயர் நாமும் உண்ட 

        கலம்மகனாம் பதம்அருளாற் கைக்கொண் டாரே.                  23 

 

22. திருநாவுக்கரசு நாயனார்

 

குருபூசை நாள் : 

சித்திரை - சதயம் நட்சத்திரம்

 

 

போற்றுதிரு வாமூரில் வேளாண் தொன்மைப் 

        பொருவில்கொறுக் கையர்அதிபர் புகழ னார்பால் 

மாற்றரும்அன் பினில்திலக வதியாம் மாது 

        வந்துதுத்த பின்புமரு ணீக்கி யாரும் 

தோற்றிஅமண் சமயமுறும் துயரம் நீங்கத் 

        துணைவரருள் தரவந்த சூலைநோயால் 

பாற்றருள்நீள் இடரெய்திப் பாடலிபுத் திரத்தில் 

        பாழியொழித்து அரன்அதிகைப் பதியில் வந்தார்.                  24 

 

வந்துதமக் கையர் அருளால் நீறுசாத்தி 

        வண்தமிழால் நோய்தீர்ந்து வாக்கின் மன்னாய் 

வெந்தபொடி விடம்வேழம் வேலை நீந்தி 

        வியன்சூலம் கொடியிடபம் விளங்கச் சாத்தி 

அந்தமில்அப் பூதிமகன் அரவு மாற்றி 

        அருட்காசு பெற்றுமறை அடைப்பு நீக்கிப் 

புந்திமகிழ்ந்து ஐயாற்றிற் கயிலை கண்டு 

        பூம்புகலூர் அரன்பாதம் பொருந்தி னாரே.                         25

 

23. குலச்சிறை நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆவணி - அனுஷம் நட்சத்திரம்

 

 

கோதில்புகழ் தருமணமேற் குடியார் கோவண்

        குலச்சிறையார் தென்னர்குல அமைச்சர் குன்றா 

மாதவர்கள் அடிபரவும் பரபார் பாண்டி 

        மாதேவி யார்அருள்வான் பயிர்க்கு வேலி 

காதல்மிகு கவுணியர்கோன் வாதில் தோற்ற 

        கையரைவை கைக்கரைசேர் கழுவிலேற்றும் 

நீதியினார் ஆலவாய் நிமலர்ச் சேர்ந்த 

        நின்மலனார் என்மங்கள் நீக்கினாரே.                             26

 

24. பெருமிழலைக்குறும்ப நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆடி - சித்திரை நட்சத்திரம்

 

 

கொண்டல்பனி வளர்சோலை மிழலை நாட்டுக் 

        கோதில்புகழ்ப் பெருமிழலைக் குறும்ப னார்சீர் 

அண்டர்பிரான் அடியவருக்கு அடியா ராகும் 

        ஆதரவால் அணுக்கவன் றொண்டர்க் காளாய் 

மண்டொழும்எண் டருசித்தி வாய்த்து ளார்தாம் 

        வன்றொண்டர் வடகயிலை மருவு நாள்முன் 

எண்டிகழும் மறைமூல நெறியூ டேகி 

        இலங்கொளிசேர் வடகயிலை எய்தி னாரே.                       27

 

25. காரைக்காலம்மையார் நாயனார்

 

குருபூசை நாள் : 

பங்குனி - சுவாதி நட்சத்திரம்

 

 

தங்குபுகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க 

        தனதத்தன் தரும்புனித வதியார் மாவின் 

செங்கனிகள் திருவருளால் அழைப்பக் கண்டு 

        திகழ்கணவன் அதிசயித்துத் தேசம் நீங்க 

அங்கவுடல் இழந்துமுடி நடையால் ஏறி 

        “அம்மையே” எனநாதன் அப்ப! என்று 

பொங்குவட கயிலைபணிந்து ஆலங் காட்டில் 

        புனிதநடம் அனவரதம் போற்றி னாரே.                           28

 

26. அப்பூதியடிகள் நாயனார்

 

குருபூசை நாள் : 

தை - சதயம் நட்சத்திரம்

 

 

அந்தமில்நல் திங்களூர் வரும் அப்பூதி 

        அருமறையோர் திருநாவுக்கரசின் நாமம் 

பந்தரிடை எழுதக்கண்டு அரசும் எய்தப் 

        பணிந்துபரி கலம்நேடிப் படப்பை சேர்ந்த 

மைந்தனுயிர் உயர்கதலி இலைமேல் துஞ்சும் 

        வாளரவு கவரவுடன் மறைத்தல் கேட்டுச் 

சிந்தைமகிழ்ந்து உயர்பதிக மருந்தால் தீர்த்துத் 

        திருவமுது செயவருளைச் சேர்ந்து ளாரே.                               29

 

27. திருநீலநக்க நாயனார்

 

குருபூசை நாள் : 

வைகாசி - மூலம் நட்சத்திரம்

 

 

நீதிதரு மறையோர்வாழ் சாத்த மங்கை 

        நீலநக்கர் அயவந்தி நிமலர் மேனி 

ஊதிவிழுஞ் சிலம்பிகடிந் தவளை நீத்தார்க்கு 

        உமியாத இடம்நாதன் உறுநோய் காட்டக் 

காதல்மிகு மனைவியையும் மகிழ்ந்து மேவிக் 

        காழியர்கோன் அமுதுசெயக் களித்து வாழ்ந்து 

வேதிகையிற் பாணனார்க்கு இடமும் நல்கி 

        விளங்குபெரு மணத்தரனை மேவி னாரே.                               30

 

28. நமிநந்தியடிகள் நாயனார்

 

குருபூசை நாள் : 

வைகாசி - பூசம் நட்சத்திரம்

 

 

நண்ணுபுகழ் மறையோர்வாழ் ஏமப் பேறூர் 

        நமிநந்தி யடிகள் திருவிளக்கு நல்க 

எண்ணெய்அம ணர்கள்விலக்க நீரால் அரூர் 

        இலங்கும் அரனெறியாருக்கு ஏறு நாளில் 

கண்ணமணர் கெடக்கண்பெற்று அடிகள் வாழக் 

        காவலனால் நிபந்தங்கள் கட்டு வித்தே 

அண்ணலருள் கண்டாருர் அமர்ந்து ‘தொண்டர்க்கு 

        ஆனி’ எனுள் அரசினருள் அடைந்துளாரே.                       31

 

29. திருஞானசம்பந்த நாயனார்

 

குருபூசை நாள் : 

வைகாசி - மூலம் நட்சத்திரம்

 

 

காழிநகர்ச் சிவபாத விருதயர் தந்த 

        கவுணியர்கோன் அமுதுஉமையாள் கருதி யூட்டும் 

ஏழிசையின் அமுதுண்டு தாளம் வாங்கி 

        இலங்கியநித் திலச்சிவிகை இசைய ஏறி 

வாழுமுய லகன்அகற்றிப் பந்தர் ஏய்ந்து 

        வளர்கிழிபெற்று அரவின்விடம் கருகல் தீர்த்து 

வீழிநகர்க் காசுஎய்தி மறைக்கதவும் பிணிந்து 

        மீனவன்மேனியின் வெப்பு விடுவித் தாரே.                              32

 

ஆரெரியிட்டு எடுத்தஏடு அவைமுன் னேற்றி 

        ஆற்றலிடும் ஏடெதிர்போய் அணைய ஏற்றி 

ஓரமணர் ஒழியாமே கழுவி லேற்றி 

        ஓதுதிருப் பதிகத்தால் ஓடம்ஏற்றிக் 

காருதவும் இடிபுத்தன் தலையில் ஏற்றிக் 

        காயாத பனையின்மீது கனிகள் ஏற்றி 

ஈரமிலா அங்கமுயிர் எய்த ஏற்றி 

        இலங்குபெரு மணத்தரனை எய்தி னாரே.                        33

 

30. ஏயர்கோன்கலிக்காம நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆனி - ரேவதி நட்சத்திரம்

 

 

ஏதமில்வே ளாளர் பெருமங்க லத்துள் 

        ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே 

தூதுகொளும் அவன் அணுகில் என்னாம்’ என்னும் 

        துணிவினர்பால் இறைவன்அருஞ் சூலை ஏவி 

‘வேதனைவன் றொண்டன்வரின் நீங்கும்’ என்ன 

        வெகுண்டு உடல்வாள் கொடுதுறந்து மேய நாவாற் 

போதகமும் உடல்இகழ எழுந்து தாழ்ந்து 

        போற்றியது விலக்கியருள் பொருந்தி னாரே.                     34

 

31. திருமூல நாயனார்

 

குருபூசை நாள் : 

ஐப்பசி - அசுவதி நட்சத்திரம்

 

 

கயிலாயத் தொருசித்தர் பொதியிற் சேர்வார் 

        காவிரிசூழ் சாத்தனூர் கருது மூலன் 

பயிலாநோ யுடன்வீயத் துயரம் நீடும் 

        பசுக்களைக்கண்டு அவனுடலிற் பாய்ந்து போத 

அயலாகப் பண்டையுடல் அருளால் மேவி 

        ஆவடுதண் டுறையாண்டுக்கு ஒருபா வாகக் 

குயிலாரும் அரசடியில் இருந்து கூறிக்

        கோதிலா வடகயிலை குறுகி னாரே.                             35

 

32. தண்டியடிகள் நாயனார்

 

குருபூசை நாள் : 

பங்குனி - சதயம் நட்சத்திரம்

 

 

திருவாரூர் வருந்தண்டி யடிகள் காட்சி 

        சேராதார் குளந்தொட்டற்கு அமணர் சீறிக்

“குருடா! நீ முன்செவிடுங் கூடிற்று” என்று 

        குறித்தறியைப் பறித்தெறியக் கொதித்துத் தங்கண் 

அருளாலே விழித்தெவரும் அந்த ராக 

        அமணர்கலக் கம்பலகண் டவர்கள் பாழிப் 

பருவான கற்பறித்தா விக்கரையுங் கட்டிப் 

        பரனருளால் அமழுலகம் பற்றி   னாரே.                 36

 

33. மூர்க்க நாயனார்

 

குருபூசை நாள் : 

கார்த்திகை - மூலம் நட்சத்திரம்

 

 

தொண்டைவன் நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ் 

        தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று 

கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங் 

        கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார் 

விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள 

        வெகுண்டிடலான் ‘மூர்க்கர்’என விளம்பும் நாமம் 

எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும் 

        ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே.                           37

 

34. சோமாசிமாற நாயனார்

 

குருபூசை நாள் : 

வைகாசி - ஆயில்யம் நட்சத்திரம்

 

 

அம்பர்நகர் அந்தணர்சோ மாசி மாறர்

        அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு தளிப்பார்

உம்பர்நிகழ் வகையாகம் பலவுஞ் செய்யும் 

        உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார் 

நம்பர்திகழ் திருவாரூர் நயந்து போற்றும் 

        நாவலர்கோன் அடிபரவும் நன்மை யாலே 

இம்பர்தொழ உம்பர்பணிந்து ஏத்த மேலை 

        ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே.                           38

 

35. சாக்கிய நாயனார்

 

குருபூசை நாள் : 

மார்கழி - பூராடம் நட்சத்திரம்

 

 

சங்கமங்கை வரும்வேளாண் தலைவர் காஞ்சிச் 

        சாக்கியரோ டியைந்தவர்தந் தவறுஞ்ச் சைவத் 

துங்கமலி பொருளுமுணர்ந்து அந்த வேடம் 

        துறவாதே சிவலிங்கந் தொழுவோர் கண்டோர் 

அங்கல்மலர் திருமேனி அழுந்தச் சாத்தி 

        அமருநாள் மறந்தொருநாள் அருந்தா தோடிச் 

செங்கலெறிந் திடுமளவில் மகிழ்ந்த நாதன் 

        திருவருளால் அமருலகஞ் சேர்ந்து ளாரே.                               39

 

36. சிறப்புலி நாயனார்

 

குருபூசை நாள் : 

கார்த்திகை - பூராடம் நட்சத்திரம்

 

 

திருவாக்கூர் அருமறையோர் உலகம் ஏத்தும் 

        சிறப்புலியார் மறப்புலியார் உரிமேற் செங்கண் 

அரவார்த்தார் வருமேற்றார்க்கு அன்ப ரானார்க்கு 

        அமுதளிப்பார் ஒளிவெண்ணீறு அணிந்த மார்பர் 

பெருவாக்கான் மறைபரவி யாகம் போற்றும் 

        பெற்றியினார் ஐந்தெழுத்தும் பிறழரது ஓதிக் 

கருவாக்கா இறைவன்தாள் இணைகள் சேர்ந்த 

        கருத்தினார் எனையாவும் திருத்தி னாரே.                        40

 

37. சிறுத்தொண்ட நாயனார்

 

குருபூசை நாள் : 

சித்திரை - பரணி நட்சத்திரம்

 

 

பல்குமருத் துவர்அதிபர் செங்காட்டங் குடிவாழ் 

        படைத்தலைவர் அமுதளிக்கும் பரஞ்சோதி யார்மெய்ச் 

செல்வமிகு சிறுத்தொண்டர் காழி நாடன் 

        திருவருள்சேர்ந் தவர்வளருஞ் சீராளன் தன்னை 

நல்குதிரு வெண்காட்டு நங்கைசமைத் திடப்பின் 

        நன்மதிச்சந் தனத்தாதி தலைக்கறியிட் டுதவப் 

புல்கவரும் வயிரவர்தாம் மகிழ்ந்துமக வருளப் 

        போற்றியவர் சிவனருளே பொருந்தி னாரே.                      41

 

38. சேரமான்பெருமாள் நாயனார்

 

குருபூசை நாள் : 

மாசி - சதயம் நட்சத்திரம்

 

 

காவலர்ம கோதையார் கொடுங்கோ ளூர்க்கோக் 

        கழறியவை அறிந்தகோச் சிலம்போசைக் கருத்தார் 

நாவலர்கோன் நண்பர்அடிச் சேரன் என்றே 

        நவின்றுவரும் வண்ணானை நயந்த கோநற் 

பாவலர்கோப் பாணபத் திரனால் வாய்ந்த 

        பரமர்திரு முகம்வாங்கிப் பணிகோ வெற்பின்

 மேவியகோ ஆனைக்குக் குதிரை வைத்த் 

        வீரர்கோ  எனையாளும் சேரர் கோவே.                          42

 

39. கணநாத நாயனார்

 

குருபூசை நாள் : 

பங்குனி - திருவாதிரை நட்சத்திரம்

 

 

கந்தமலி வயற்காழி மறையோர் ஏத்தும் 

        கணநாதர் திருதோணிக் கடவு ளார்க்கு 

நந்தவனம் பலஅமைத்து மலருங் கொய்து 

        நற்றாமஞ் சொற்றாமம் நயந்து சாத்தி 

வந்தவரைத் தொண்ட்டாகிப் பணிகள் பூட்டி 

        வாதுசெய்த வாரணத்தை மகிழ்ந்து வாழ்த்திப் 

புந்திமகிழ்ந்து அரனருளால் கயிலை மேவிப் 

        பொருவில்கணத் தவர்காவல் பொருந்தி னாரே.                   43

 

40. கூற்றுவ நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆடி - திருவாதிரை நட்சத்திரம்

 

 

குன்றாத புகழானார் களந்தை வேந்தர் 

        கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் 

பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும் 

        பூசுரர்கள் கொடாதகலப் புனிதன் ஈந்த 

மன்றாடுந் திருவடியே முடியாச் சூடி 

        மாநிலங்காத்து இறைவனுறை மாடக் கோயில் 

சென்றாசை யுடன்வணங்கிப் பணிகள் செய்து 

        திருவருளால் அமருலகஞ் சேர்ந்து ளாரே.                               44

 

41. பொய்யடிமையில்லாத புலவர்

 

குருபூசை நாள் : 

பங்குனி - ஆண்டு நிறைவுநாள்

 

 

பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப் 

        புலவோர்பொற் பார்கலைகள் பொருந்த ஓதிச் 

செய்யுளிடை வளர்ஆ மதுரம் நல்ல் 

        சித்திரம்வித் தாரம்எனத் தெரிக்குஞ் செம்மை 

மெய்யுடைய தொடைகளெல்லாம் மன்றுள் ஆடல் 

        மேவியகோன் இருதாளில் விரவச் சாத்திக் 

கையுடையஞ் சலியினராய் அருளால் மேலைக் 

        கருதரிய அமருலகங் கைக்கொண் டாரே.                                45

 

42. புகழ்ச்சோழ நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆடி - கார்த்திகை நட்சத்திரம்

 

 

பொழின்மருவுங் கருவூர்வாழ் புகழார் சோழர் 

        போதகம்போல் என்னுயிரும் போக்கும் என்றே 

அழலவிர்வாள் கொடுத்துபிரான் அதிகை மான்மேல் 

        அடர்ந்துபெரும் படைஏவ அவர்கொண் டேய்ந்த 

தழல்விழிகொள் தலைகாண்பார் கண்ட தோர்புன் 

        சடைத்தலையை முடித்தலையால் தாழ்ந்து வாங்கிக் 

கழல்பரவி அதுசிரத்தின் ஏந்தி வாய்ந்த் 

        கனல்மூழ்கி இறைவனடி கைக்கொண் டாரே.                     46

 

43. நரசிங்கமுனையரைய நாயனார்

 

குருபூசை நாள் : 

புரட்டாசி - சதயம் நட்சத்திரம்

 

 

நாடுபுகழ் முனைப்பாடி நாடு மேய 

        நரசிங்க முனையர்புலி நயந்து மன்றுள்

ஆடுமவர் ஆதிரைநாள் அடியார்க்கு அம்பொன் 

        அமுதளிப்பார் ஒளிவெண்ணீற் அணிந்து தூர்த்த 

வேடமுடை யவர்க்குஇரட்டிச் செம்பொன் ஈந்து 

        விடுத்தழகார் ஆலயங்கள் விளங்கச் செய்து 

தோடலர்தா ருடையபிரான் அருளை யாளத் 

        தோன்றினார் எனைஅருளின் ஊன்றி னாரே.                      47

 

44. அதிபத்த நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆவணி - ஆயில்யம் நட்சத்திரம்

 

 

அலையாருங் கடல்நாகை நகருள் வாழும் 

        அதிபத்தர் பரதவர்கள் அதிபர் வேலை 

வலைவாரி வருமீனில் தலைமீன் ஈசன் 

        வார்கழற்கே என்றுவிடும் மரபார் பன்னாள் 

தலையான தொருமீனே சார நாளும் 

        தந்தொழிலால் விடுத்துமிடி சாரச் செம்பொன் 

நிலையாரும் மணிநயந்த மீன்ஒன்று எய்த 

        நீத்தருளால் இறைவனடி நேர்ந்து ளாரே.                         48

 

45. கலிக்கம்ப நாயனார்

 

குருபூசை நாள் : 

தை - ரேவதி நட்சத்திரம்

 

 

கடவுளருட் கண்ணார்கள் பயிலுந் தொல்லைக் 

        கடந்தைநகர் வணிகர்கலிக் கம்பர் அன்பர்க்கு 

அடிமையுற அமுதளிப்பார் அடியான் நீங்கி 

        அருளுருவாய் அன்பருடன் அணைய ஏத்தி 

இடையிலவர் அடியணையும் விளங்கோ நிற்ப 

        இகழ்மனைவி கரகமலி இரண்டு கையும் 

படியில்விழ எறிந்துஅவள்செய் பணியுந் தாமே 

        பரிந்துபுரிந்து அரன்அருளே பற்றி னாரே.                         49

 

46. கலிய நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆடி - கேட்டை நட்சத்திரம்

 

 

தடமதில்சூழ் ஒற்றியூர் நகருள் வாழும் 

        சக்கரப்பா டியர்குலமெய்த் தவமாய் உள்ளார் 

படர்புகழார் கலியனார் நலியுங் கூற்றைப்

        பாய்ந்தவர்க்கு விளக்கெரிக்கும் பரிவால் மற்றோர் 

உடலிலராய்ச் செக்குழல்வார்க்கு அதுவும் நேராது 

        உயர்மனைவி யைக்கொள்வார் உளரும் இன்றி 

மிடறுதிரம் அகல்நிறைய அரிய நாதன் 

        வியன்கைகொடு பிடிப்பஅருள் மேவி னாரே.                     50

 

47. சத்தி நாயனார்

 

குருபூசை நாள் : 

ஐப்பசி - பூசம் நட்சத்திரம்

 

 

விரிதருகா விரிநாட்டு வரிஞ்சை யூர்வாழ் 

        வேளாளர் சத்தியார் விமலர் பாதத்து 

உரியவர்கள் அடிபரவும் ஒருமை யார்நா 

        ஓவாமே ஐந்தெழுத்தும் உரைக்கும் நீரார் 

இருளின்மிட றுடையபிரான் அடியார் தம்மை 

        இகழ்வார்நாத் தண்டாயத் திடுக்கி வாங்கி 

அரியுமது திருதொழிலா உடையார் மன்றுள் 

        ஆடியசே வடிநீழல் அடைந்து ளாரே.                            51

 

48. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

 

குருபூசை நாள் : 

ஐப்பசி - மூலம் நட்சத்திரம்

 

 

வையநிகழ் பல்லவர்தங் குலத்து வந்த 

        மாமணிமா நிலமுழுதும் மகிழ்ந்து காக்கும் 

ஐயடிகள் காடவர்கோன் அருளால் நூல்கள் 

        அறிந்தரசு புரிந்திடுதல் அமையும் என்றே 

பொய்யனைய உடல்வாழ்வு கழியு மாறு 

        பொருந்தியிடும் புகழ்வெண்பா புலியூர் மேவுஞ் 

செய்யதிரு அவடிமுதலாப் பதிகள் தோறும் 

        செப்பினார் என்வினைகள் தப்பி னாரே.                          52

 

49. கணம்புல்ல நாயனார்

 

குருபூசை நாள் : 

கார்த்திகை - கார்த்திகை நட்சத்திரம்

 

 

இலகுவட வெள்ளாற்றுத் தென்பால் வாழும் 

        இருக்கு வேளூர் அதிபர் எழிலார் சென்னிக் 

கலைநிலவார் அடிபரவும் கணம்புல்லர் தில்லைக் 

        கருதுபுலீச் சரத்தரற்குக் காதல் தீபம் 

நிலைதரத்தாம் இடமிடியால் ஒருநாட் புல்லால் 

        நீடுவிளக் கிடஅதுவும் நேரா தாகத் 

தலைமயிரின் எரிகொளுவும் அளவில் நாதன் 

        தாவாத வாழ்வருளும் தன்மை யாரே.                           53

 

50. காரி நாயனார்

 

குருபூசை நாள் : 

மாசி - பூராடம் நட்சத்திரம்

 

 

திருக்கடவூர் வருமுரவோர் காரி யாராம் 

        திகழ்தொண்டர் வண்டமிழ்நூல் திருந்த ஓதி 

விருப்பொடுதம் பெயரால்பா விளம்பி மும்மை 

        வேந்தரையும் முறைமுறையே வேவி அங்கண் 

உரைத்தவுரை நயமாக்கி அவர்பால் ஏய்ந்த 

        ஒண்பொருளால் ஆலயங்கள் ஓங்கச் செய்து 

தரைக்கும் அருந்தவர்கேவல் தகமுன் போற்றும் 

        தன்மையால் அருள்சேர்ந்த நன்மை யாரே.                       54 

 

51. நின்றசீர்நெடுமாற நாயனார்

 

குருபூசை நாள் : 

ஐப்பசி - பரணி நட்சத்திரம்

 

 

கன்னல்மலி நெல்வேலிக் கவினார் மாறர் 

        கவுரியர்கோன் அமணர்உறு கலக்க மெல்லாம் 

பொன்னெயில்சூழ் சிரபுரக்கோன் அணைய மாற்றிப் 

        புனிதமிகு நீறணிந்து போற்றி செய்து 

மன்னுபுகழ் மங்கையர்க் கரசியாரார் 

        மலர்மாது மணிமார்பின் மகிழ்ந்து மாற்றார் 

வெந்நிடுதல் கண்டரசு புரிந்து காழி 

        வேந்தரருள் சேர்ந்தபெரு விறலி னாரே.                         55

 

52. வாயிலார் நாயனார்

 

குருபூசை நாள் : 

மார்கழி - ரேவதி நட்சத்திரம்

 

 

ஞாயிலார் மதிற்றொண்டை நாட்டு மேன்மை 

        நண்ணுமயி லாபுரியின் வேளான் தொன்மை 

வாயிலார் மலைவில்லான் அடியே போற்றி 

        மறவாமை தலைநின்ற மனமே செம்பொற் 

கோயிலா உயர்ஞானம் விளக்கா நீராக் 

        குலவியஆ னந்தமன்பே அமுதாக் கொண்டு 

தாயிலான் இருசரணம் நிகழ ஏத்தும் 

        தன்மையார் அருள்சேர்ந்த நன்மை யாரே.                               56

 

53. முனையடுவார் நாயனார்

 

குருபூசை நாள் : 

பங்குனி - பூரம் நட்சத்திரம்

 

 

பொன்னிவளந் தருநாட்டுப் புகழும் நீடூர்ப் 

        பொருவில்திரு மலிவேளாண் தொன்மை மிக்கார் 

முன்னியவர் முனையடுவார் இகலார் போரின் 

        முரண்அழிவார் தமக்காக மொழிந்த கூலி 

மன்னுநிதி கொண்டுசயங் கொடுத்து வந்த 

        வளர்பொருளால் இறைவனடி வழுவா அன்பர்க்கு 

அன்னமவர் நசையின்மிக மிசைய நல்கும் 

        அன்பர்துன்பம் அவையாவும் அகன்று ளாரே.                     57

 

54. கழற்சிங்க நாயனார்

 

குருபூசை நாள் : 

வைகாசி - பரணி நட்சத்திரம்

 

 

காடவர்தங் குலமுவந்த கழலார் சிங்கர் 

        காதல்மிகு தேவியுடன் காவல் ஆரூர் 

ஆடவல பெருமானைப் பணிவார் அங்கோர் 

        அகன்றமலர் தனமோந்த அரிவை மூக்கைச் 

சேடுடைய செருத்துணையா அரியக் கேட்டுத் 

        திறல்அரசர் மலர்எடுத்த செங்கை என்றே 

சூடகமுன் கைதடிந்து ஞாலம் காத்த 

        தூய்மையார் அருள்சேர்ந்த வாய்மை யாரே.                      58

 

55. இடங்கழி நாயனார்

 

குருபூசை நாள் : 

ஐப்பசி - கார்த்திகை நட்சத்திரம்

 

 

கோனாட்டுக் கொடும்பாளூர் இருக்கும் வேளிர் 

        குலத்தலைவர் இடங்கழியார் கொங்கிற் செம்பொன் 

ஆனேற்றார் மன்றில்முகடு அம்பொன் வேய்ந்த 

        ஆதித்தன் மரபோர்நெற் கவர்ந்தோர் அன்பர் 

போநாப்பண் இருளின்கட் காவ ளாலர் 

        புரவலர்முன் கொணரஅவர் புகலக் கேட்டும் 

ஆனேற்றார் அடியாரே கொள்க என்று 

        வழங்கிஅர சாண்டருளின் மன்னி னாரே.                         59

 

56. செருத்துணை நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆவணி - பூசம் நட்சத்திரம்

 

 

இரைத்தணையார் புனற்பொன்னி மருகல் நன்னாட்டு

        எழிலாருஞ் தஞ்சைநகர் உழவ ரேத்துஞ் 

செருத்துணையா திருவாரூர் சேர்ந்து வாழ்வார் 

        செல்வமிகும் பல்லவர்கோன் தேவி வீழ்ந்த 

மருத்துணையார் மலரெடுத்து மோப்பக் கண்டு 

        வளமலிபூங் கத்தியால் அவள்மூக் கீர்ந்த 

கருத்துணையார் விறல்திருத்தொண் டினையே செய்து 

        கருதலரும் அமருலகங் கைக்கொண் டாரே.                      60

 

57. புகழ்த்துணை நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆவணி - ஆயில்யம் நட்சத்திரம்

 

 

புண்ணியர்கள் புகழ்அழகார் திருப்புத் தூர்வாழ் 

        புகழ்த்துணையார் அகத்தடிமைப் புனிதர் சின்னாள் 

மண்ணிகழ மழைபொழியா வற்கா லத்தால் 

        வருந்துடலம் நடுங்கிடவும் மணிநீர் ஏந்தி 

அண்ணல்முடி பொதிகலசம் முடிமேல் வீழ 

        அயர்ந்தொருநாட் புலம்பஅரன் அருளால் ஈந்த 

நண்ணலரும் ஒருகாசுப் படியால் வாழ்ந்து 

        நலமலிசீர் அமருலகம் நண்ணி னாரே.                          61

 

58. கோட்புலி நாயனார்

 

குருபூசை நாள் : 

ஆடி - கேட்டை நட்சத்திரம்

 

 

குலவுபுகழ் நாட்டியத்தான் குடிவே ளாளர் 

        கோட்புலியார் குவித்துயர்த்த செந்நெற் கூடு 

நிலவணிவார்க்கு அமைத்துஆணை நிறுத்தி ஒன்னார் 

        நேர்மலைவார் திருவாணை நினையா தேநெல் 

சிலமிடியால் அழித்தபடி அறிந்து வாளால் 

        சேர்ந்தபெருங் கிளைஞருடல் சிதற வீசி 

இலகுமொரு குழவியையும் எறிந்து நாதன் 

        எண்ணரிய கருணைநிழல் எய்தி னாரே.                         62

 

59. பத்தராய்ப் பணிவார்

 

குருபூசை நாள் : 

பங்குனி - ஆண்டு நிறைவு நாள்

 

 

தொண்டரடித் தொழல்பூசைத் தொழில்மகிழ்தல் அழகார் 

        துளங்கியஅர்ச் சனைபுரிதல் தொகுதி நியமங்கள் 

கொண்டபணி திருவடிக்கே கொடுத்தல் ஈசன் 

        குணமருவும் அருங்கதையைக் குலவிக் கேட்டு 

மண்டிவிழி துளும்பல்மயிர் சிலும்பல் உன்னல் 

        மருவுதிருப் பணிகாட்டி வருப வாங்கி 

உண்டிகொளா தொழிதல்என இவையோர் எட்டும் 

        உடையர் அவர் பத்தர்என உரைத்து ளாரே.                      63

 

60. பரமனையே பாடுவார்

 

குருபூசை நாள் : 

பங்குனி - ஆண்டு நிறைவு நாள்

 

 

அருந்தமிழால் வடகலையால் அருளால் ஒன்றால் 

        அறநெறி மருவும்அருங் கவிகள் யாவும் 

திருந்தியவா னவர்பணிய மன்றுள் ஆடுந் 

        தேவர்பிரான் கழலிணையே சேர ஓதி 

விருந்திடுநா வுடையபயன் மேவி னோர்தாம் 

        மேலானோம் எனமகிழ்ந்து விழிநீர் சோரப்

பரிந்தருளால் பரமனையே பாட வல்ல 

        பான்மையார் எமையாளும் மேன்மை யாரே.                     64

 

61. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்

 

குருபூசை நாள் : 

பங்குனி - ஆண்டு நிறைவு நாள்

 

 

பாரணவும் புலன்அந்தக் கரணம் ஒன்றும் 

        படராமே நடுநாடி பயிலு நாதம் 

காரணபங் கயன்முதலாம் ஐவர் வாழ்வும் 

        கழியுநெறி வழிபடவுங் கருதி மேலைப் 

பூரணமெய்ப் பரஞ்சோதிப் பொலிவு நோக்கிப் 

        புணர்ந்தணைந்த சிவாநுபவ போகம் மேவுஞ் 

சீரண்வும் அவரன்றோ எம்மை யாளும் 

        சித்தத்தைச் சிவன்பாலே வைத்து ளாரே.                        65

 

62. திருவாரூர்ப் பிறந்தார்

 

குருபூசை நாள் : 

பங்குனி - ஆண்டு நிறைவு நாள்

 

 

பொங்கியமா தவமுடையார் வருண நான்கிற் 

        பொருந்தினர்கள் அல்லாத புகழின் உள்ளார் 

சங்கையிலா அருந்தவமுன் புயந்தார் இங்குச் 

        சார்விலார் இறைவன்அருள் சார்த லாலே 

கங்கைவாழ் சடைமுடியான் அருளை நீங்காக் 

        கணநாதர் எனவாழுங் கருத்தர் கன்னிச் 

செங்கண்வரால் வளர்வாவி திகழும் ஆரூர்ச் 

        சிறந்துளார் எமைஆளப் பிறந்து ளாரே.                          66

 

63. முப்போதுந் திருமேனி தீண்டுவார்

 

குருபூசை நாள் : 

பங்குனி - ஆண்டு நிறைவு நாள்

 

 

செப்பலருந் தவமுடைய செம்மை யாளர் 

        சிறுகாலே மலர்வாவி திகழ மூழ்கி 

ஒப்பில்திரு நீறணிந்து நியதி யாற்றி 

        ஓவாமே ஐந்தெழுத்தும் உரைத்து மேன்மைத் 

தப்பில்சிவா கமவிதியால் இன்பால் அன்பாந் 

        தன்மையால் நன்மையாம் தகையார் என்றும் 

முப்பொழுதும் திருமேனி தீண்ட வல்ல் 

        முறைமையார் பிறவிதெறும் திறமை யாரே.                            67

 

64. முழுநீறு பூசிய முனிவர்

 

குருபூசை நாள் : 

பங்குனி - ஆண்டு நிறைவு நாள்

 

 

கற்பம்அறு கற்பம்உப கற்பம் என்றிக் 

        கடன்அணைந்த திருநீறும் கனற்கண் நீறும் 

பொற்புடைய அரன்ஆசான் அங்கி ஆறு 

        பொல்லாத பூமியெதிர் புனைதல் ஆகா 

அற்புதமாந் திரிபுண்ட மதியின் பாதி 

        அகிலாங்கந் தீபமிகும் அழகார் வட்டம் 

முற்பொலிய உடல்அணியும் முறையார் அன்றோ 

        முழுநீறு பூசவல்ல முனிவர் தாமே.                                    68

 

65. அப்பாலும் அடிச்சார்ந்தார்

 

குருபூசை நாள் : 

பங்குனி - ஆண்டு நிறைவு நாள்

 

 

தாராரும் மூவேந்தர் பயிலுந் தொல்லைத் 

        தமிழ்நாட்டப் புறத்திறைவன் சரணஞ் சார்ந்த 

சீராருந் தொண்டர்களும் அண்டர் ஏத்தும் 

        திருத்தொண்டத் தொகைஅருளால் செப்புங் காலத்து 

ஏராருந் தொடையிலுறா(து) இப்பால் அப்பால் 

        எந்தைபிரான் அடியடைந்த இயல்பி னோரும் 

ஆராத காதலுடை யவர்கள் அன்றோ 

        அப்பாலும் அடிச்சார்ந்த அடியார் தாமே.                         69

 

66. பூசலார் நாயனார்

 

குருபூசை நாள் : 

ஐப்பசி - அனுஷம் நட்சத்திரம்

 

 

பொருவருந்தண் டகநாட்டு நின்ற வூர்வாழ் 

        பூசுரர்கோப் பூசலார் புந்தி யாலே 

இருநிதியம் தேடிஆ லயமும் ஆக்கி 

        எழுந்தருளப் பண்ணுவதா எண்ணுங் காலை 

அரனதனைக் காடவர்கோற்கு அருள மன்னன் 

        அந்நகரம் அணைந்(து) அவ்வா(று) அறிந்துதாழ 

விரவுமனக் கோயிலுற இருத்தி அங்கண் 

        வேண்டுவகொண்டு இறைஞ்சியருள் மேவி னாரே.                        70

 

67. மங்கையர்க்கரசியார்

 

குருபூசை நாள் : 

சித்திரை - ரோகிணி நட்சத்திரம்

 

 

மங்கையர்க்குத் தனியரசி வளவர்குலக் கொழுந்து 

        மன்னவர்சூழ் தென்னவர்க்கு மாதேவி யார்மண் 

சங்கைகெட அமண்சமயஞ் சாட வல்ல 

        சைவசிகா மணிஞானத் தமிழில் கோத்த 

பொங்குதிரு வருளுடைய போத வல்லி 

        பொருவில்நெடு மாறனார் புயமேல் வாழும் 

செங்கலச முலையாள்தன் அருளால் இன்பஞ் 

        சேர்ந்தவரைப் புகழ்ந்தடியேன் வாழ்ந்த வாறே.                   71

 

68. நேச நாயனார்

 

குருபூசை நாள் : 

பங்குனி - ரோகிணி நட்சத்திரம்

 

 

சாலியர்கோக் காம்பீலித் தலைவர் மேன்மை 

        தாவாத புகழ்நேசர் தஞ்சொல் என்றுங் 

கோலியஐந் தெழுத்தோதிச் சிந்தை யுன்னிக்

        கொண்டபொருள் அன்பர்கொளக் கொடுத்து வாழ்வார் 

சீலமிகு திருத்தொண்டர்க்கு உடையும் நீளும் 

        திருந்தியவெண் கோவணமும் சேர ஈந்து 

பாலனைய ஒளிநீற்றான் பாதம் ஏத்திப் 

        பரலோகம் முழுதாண்ட பான்மை யாரே.                         72

 

69. கோச்செங்கட்சோழ நாயனார்

 

குருபூசை நாள் : 

மாசி - சதயம் நட்சத்திரம்

 

 

வெண்ணாவல் இறைக்கொளிநூற் பந்தர் செயத 

        வியன்சிலம்பி அதுஅழித்த வெள்ளா னைக்கை 

உண்ணாடிக் கடித்தவுடல் ஒழியச் சோழன் 

        உயர்குலத்துச் சுபதேவன் கமலத் தோங்கும் 

பெண்ணாகி யவள்வயிற்றில் வைகிச் செங்கட் 

        பெருமானாய்த் தென்னவராய்ப் பெருங்கோயில் பலவுங் 

கண்ணார்வித்து உயர்தில்லை மறையவர்க்கு உறையுள் 

        கனகமய மாக்கியருள் கைக்கொண் டாரே.                               73

 

70. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

 

குருபூசை நாள் : 

வைகாசி - மூலம் நட்சத்திரம்

 

 

பிறங்குஎருக்கத் தம்புலியூர் வாழும் பேரியாழ் 

        பேணிதிரு நீலகண்டப் பாண னார்சீர் 

நிறந்தருசெம் பொற்பலகை ஆலவாயின் 

        நிமலன்பாற் பெற்றுஆரூர் நேர்ந்துசிவன் வாயில் 

திரந்தருளும் வடதிசையே சேர்ந்து போற்றித் 

        திருஞான சம்பந்தர் திருத்தாள் வாழ்த்தி 

அறந்திகழும் திருப்பதிகம் யாழில் ஏற்றி 

        ஆசில்திருப் பெருமணஞ்சேர்ந்து அருள்பெற் றாரே.               74

 

71. சடையனார்

 

குருபூசை நாள் : 

மார்கழி - திருவாதிரை நட்சத்திரம்

 

 

சங்கையிலா வரன்முறையோர் நாவ லூர்வாழ் 

        தவரதிபர் தம்பிரான் தோழ ராய 

எங்கள்பிரான் தவநெறிக்கோர் இலக்கு வாய்த்த 

        இசைஞானி யார்தனயர் எண்ணார் சிங்கம் 

மங்கையர்கள் தொழும்பரவை மணவாள நம்பி 

        வந்துதிக்க மாதவங்கள் வருந்திச் செய்தார் 

வெங்கணரா விளங்கும்இளம் பிறைசேர் சென்னி 

        விடையினார் அருள்சேர்ந்த சடைய னாரே.                              75

 

72. இசைஞானியார்

 

குருபூசை நாள் : 

மார்கழி - திருவாதிரை நட்சத்திரம்

 

 

நாவல்திருப் பதிக்கோர் செல்வர் சைவ 

        நாயகமாஞ் சடையனார் நயந்த இன்பப் 

பூவைக் குலமடந்தை பொற்பார் கொம்பு 

        புனிதமிகு நீறணிந்து போற்றி செய்தே 

ஆவில் திகழ்தலைவன் வலிய ஆண்ட

        ஆரூரர் அவதரிக்க அருந்தவங்கள் புரிந்தார்

யாவக்கும் எட்டாத இசைந்த இன்ப 

        இசைஞானி எனஞானம் எளிதாம் அன்றே.                       76

 

- திருத்தொண்டர் புராண சாரம் முற்றிற்று -

 

Related Content

Thiruththontar Puranam Enra Periya Puranam - Kadal Paththara

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம்

About the Saints in English