ராகம்: கீரவாணி
தாளம்: ஆதி
பல்லவி
உனை நம்பினேன் அய்யா (நான்)
அனுபல்லவி
நாகம் புனை சம்போ நடராஜா புலியூர் வாழ் ஈசா (உனை)
சரணம் 1
இருவர் தம் இசைகொண்ட காதா தித்தி என நின்று நடம்செய்யும் இங்கித பொற்பாதா
திருநாவலூரன் விடு தூதா தில்லை சிவகாமி ஒரு பாகா சிதம்பர நாதா (உனை)
சரணம் 2
மழுவினைத் தரிக்கின்ற கையா கொன்றை மலர் மாலை புனைகின்ற வடிசுடர் மெய்யா
எழு புவி துதிக்கின்ற துய்யா அன்பர் இடமாய் இருந்தின்பம் உடனாளும் அய்யா
சரணம் 3
நெடியமால் அயன்தேடிக் காணாதெங்கும் நிறைந்தவா எலும்பெல்லாம் அணிந்திடும் பூணா
அடியவர் தொழுந் தமிழ்ப்பாணா தில்லையம்பதி நடராஜா அம்பலவாணா (உனை)
ராகம்: மாயாமாளவ கௌளை
தாளம்: ஆதி
பல்லவி:
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ
அனுபல்லவி:
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்
சரணம் 1:
பங்கயச் சிலம்பைந்தாடப் பாதச் சலங்கைகள் கிண் கிணென்றாடப்
பொங்குமுடனே உரித்து சரித்த புலித்தோல் அசைந்தாட
செங்கையில் ஏந்திய மான் மழுவாட செம்பொற்குழை கண் முயலகனாட
கங்கை இளம்பிறை செஞ்சடையாடக் கனக சபைதனிலே
சரணம் 2:
ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவும் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாடச் சிதம்பரத்தேர் ஆட
பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும்
பூஜித்துக்கொண்டு நின்றாடக் கனக சபைதனிலே
சரணம் 3:
நிர்த்த கணபதி வேலர் நின்றாட நின்றயன் மாலொடு இந்திரன் ஆட
முப்பத்து முக்கோடி தேவருடனே முனிவரும் நின்றாட
மெய்ப் பத்தி மேவும் பதஞ்சலியாட வியாக்கிர பாதரும் நந்தியும் ஆட
ஒப்பற்ற சிவகாமியம்மையும் கூடவே நின்றாட
ராகம்: ஆந்தோளிகா / ஆபோகீ
தாளம்: ஆதி
பல்லவி: சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா
அநுபல்லவி: சேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம்
தேவாதி தேவன் திருச் சன்னிதி கண்டு
சரணம் 1: காரானை மாமுகத்தைந்து கரத்தானை கற்பக ராயனை முக்குறுணீயாணை
சீரார் புலியூர்ப்பதி மேலை வாசல் வாழ் தேவர் சிறை மீட்கும் சேவற்க்கொடியானை
சரணம் 2 : சிங்காரமான சிவகங்கையில் மூழ்கி சிவகாமி சன்னிதி முன்பாகவே வந்து
பாங்காகவே ப்ரதட்சிணமும் செய்து பக்தர்கள் சித்தர்கள் பணிவிடையோர் தொழ
சரணம் 3: சித்தர் பரவும் திருமூலத்தானை சிற்றம்பலமென்னும் பேரம்பலத்தானை
அட்ட திக்கும் புகழம்பலவாணனை ஆண்டவனைத்தில்லைத்தாண்டவராயனை
சரணம் 4: நல்ல திருவிழா ஆணித்திருதேரும் நாடெங்குமே புகழ் நற்கோபுர நான்கும்
தில்லை மூவாயிரவர் வளர் வீதியும் திருமஞ்ஜனமும் மார்கழி தரிசனமும்