logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

பிரபுலிங்கலீலை - மூன்றாம் பகுதி - Third part of Prabhulingaleelai

 

15. மருளசங்கர தேவர் கதி

[இக் கதிக்கண், அல்லமதேவரை வசவண்ணர் அடியார் புடைசூழத் தம் இல்லத்துள் அழைத்துச் செல்லுகிறார். அல்லமதேவர் பல வாயில்களையுங் கடந்து இறுதியில் சேடகுண்டத்தை (எச்சில் இலை போடும் இடம்) அடைகிறார். ஆங்கு மருளசங்கர தேவர் என்பவர் எழுந்தருளியிருத்தலைக் காண்கிறார். அல்லம தேவரைக் கண்ட மருளசங்கர தேவர் அவருடைய அடிகளைப் பணிகிறார். தம்மை வணங்கிய மருளசங்கர தேவரை அல்லமதேவர் தூக்கியெடுத்து அருள் செய்கின்றார். மருள சங்கர தேவரின் பெருமையைச் சித்தராமையருக்குக் கூறுகிறார். மெய்யறிவு பெற்றுள்ளாரின் மேன்மையை எளிதில் உணர முடியாது என்கின்றார். அவர்கள் எத்தகைய நிலையினும் உலகில் இலங்கியிருப்பர் என்கிறார். மருளசங்கர தேவர் சேடத்தை யுண்டிருத்தற்குரிய காரணத்தையும் சேடத்தின் பெருமையையும் சித்தராமையருக்கு விளக்கிக் கூறுகிறார். வசவண்ணர், ‘நான் மருங்கிலிருந்தும் மருளசங்கரதேவர் பெருமையை உணராதிருந்தேன், நீ அதனை உணர்த்தினாய்’ என்று அல்லமதேவரைப் பணிகிறார். வசவண்ணர் பெருமையை அல்லமதேவர் வசவண்ணரிடமே விளக்கிக் கூறுகிறார். அல்லமதேவர் மொழியைக் கேட்டு அடியார்கள் மனம் மகிழ்கிறார்கள். அல்லமதேவர் மருளசங்கர தேவருக்குத் திருவருள் செய்கிறார் என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]

                       நூலாசிரியர் கூறல் 

 

               தாணுவின் உயர்பிர சாத குண்டத்தில்  

               காணரு மருளசங் கரனைக் கண்டருள்  

               பூணணி அல்லமன் போத நல்கிய  

               மாணுறு நெறியினை வகுத்துக் கூறுவாம்.                                              1 

 

 

                    அல்லமரை வசவண்ணர் தம்  

                  மனைக்குள் அழைத்துச் செல்லல் 

 

               மாதவர் எண்ணிலர் மருங்கு சூழ்தர  

               ஆதுலர் எதிர்பொரு ளாக அல்லம  

               நாதனை அறிவறி நந்தி கொண்டுதன்  

               ஏதமில் மனையிடை எய்தல் மேயினான்.                                               2 

 

 

                 அல்லமர் சேடகுண்டத்தை அடைதல் 

 

               அவத்தைகள் பற்பல அகன்று மெய்ப்பர  

               சிவத்தினை அடைபவர் செய்கை போற்கடை  

               தவப்பல கடந்துபோய்ச் சாதகுண் டத்தை  

               உவப்புடன் அடைந்தனன் ஒப்பில் அல்லமன்.                                    3 

 

 

                    ஆங்கு மருளசங்கர தேவர்  

                எழுந்தருளி யிருத்தலைக் காணல் 

 

               உயர்பிர சாதகுண் டத்தின் ஒண்கரை  

               மயல்மலி பித்தரின் மருள சங்கரன்  

               பயிலுதல் கண்ணுறீஇப் பரம யோகிதன்  

               இயலினை உணர்ந்தனன் எம்பி ரானரோ.                                        4 

 

 

                மருளசங்கர தேவர் அல்லமதேவரைப்  

                               பணிதல் 

 

               கண்டருள் அமலனைக் கண்டு தானெதிர்  

               வெண்திரை அமுதினை மிடியன் மேவியே  

               உண்டனன் எனமகிழ்ந் தோடி வீழ்ந்தனன்  

               வண்திரு வடிமிசை மருள சங்கரன்.                                                    5 

 

 

                     தம்மை வணங்கிய மருளசங்கரரின்  

                   தன்மையைச் சித்தராமருக்குக் கூறல் 

 

               வணங்கிய அறவனை வந்தெ டுத்துமெய்  

               அணைந்தெழும் உவகையோ டருள்செய் தல்லமன்  

               இணங்குற அருணிலை இராமற் பார்த்தவன்  

               குணங்களை வியந்திது கூறல் மேயினான்.                                              6 

 

 

                 மருளசங்கரர் தன்மையை வசவண்ணர்  

                  போன்றாரும் உணரவில்லை எனல் 

 

               குண்டமே வுறுபிர சாதம் கொள்ளைகொண்  

               டுண்டுவாழ் மாதவன் உண்மைத் தன்மையைத்  

               யூண்டநா யகன்முதற் சரணர் யாவரும்  

               கண்டிலர் யாரினிக் காண வல்லவர்.                                            7 

 

 

                    மெய்யுணர்வுடையாரை யாரும்  

                         அறியமுடியாது எனல் 

 

               சரிதையொண் கிரியைகால் தடுக்கும் யோகிவை  

               புரிபவர் தம்மையப் புரியும் செய்கையால்  

               தெரிதரல் ஆகுமோர் செயலும் இன்றிவாழ்  

               அரியநன் ஞானியை அறிய லாகுமோ.                                          8 

 

 

                       மெய்யறிவு பெற்றோனே  

               எவ்வறத்தினும் நிலைநிற்போன் எனல் 

 

               நலமுறும் ஓர்சிவ ஞானி இல்லில்வாழ்  

               நிலையறம் ஆகினும் நீத்து நிற்குமோர்  

               தலையறம் ஆகினும் தரித்து ஞாலமேல்  

               இலைமறை காயென இருக்கும் என்பவே.                                               9 

 

 

               ஞானியானவன், எல்லா நிலையினும் இருப்பன்  

                                  எனல் 

 

               வல்லனென் றிருப்பினும் இருக்கும் வன்மையொன்  

               றில்லனென் றிருப்பினும் இருக்கும் எள்ளுறப்  

               புல்லனென் றிருப்பினும் இருக்கும் புண்ணிய  

               நல்லனென் றிருப்பினும் இருக்கும் ஞானியே.                                    10 

 

 

               ஞானியால் அல்லது பிறப்பு நீங்காது  

                               எனல் 

 

               அறிவறி ஞானியால் அன்றி வன்பவம்  

               மறிவுறு கருமியான் மாய்வு றாதுகாண்  

               எறிகதிர் இரவிவந் தெழுந்தி டாவிடில்  

               செறியிருள் அகலுமோ சித்த ராமனே.                                           11 

 

 

                  சித்தராமர், மருளசங்கரர் இருக்கும்  

                       நிலையைப்பற்றி வினவல் 

 

               சங்கர முனிநிலை தனைக்கண் டாய்கொலென்  

               றெங்குரு பரன்சொல இராமன் கைதொழு  

               திங்கிவன் மருளரில் இருந்த தன்மையென்  

               அங்கண அறைகென அறைதல் மேயினான்.                                             12 

 

 

                               (வேறு)

 

                  சேட உணவினை உண்டிருத்தற்குக்  

                          காரணம் கூறுதல் 

 

               தொழிலான் முயன்று நுகர்வமெனின்  

                       துயரொன் றுயிர்க்கு விளையுமென  

               ஒழியா அமல சரமூர்த்தி  

                       உண்ட மிச்சில் நுகர்வமெனில்  

               பழியா துமிலை அகன்றுபோம்  

                       பவமும் என்னப் பிரசாதக்  

               குழியா னதனை அகலாமற்  

                       கொண்டிங் கிருந்தான் குணமிக்கான்.                                     13 

 

 

           சிவனடியார் திருவடி கழுவிய நீரின் பெருமை 

 

        பந்தம் அகன்ற சிவபத்தர் பாதம் விளக்கும் புனற்குழியில்  

        வந்து பிறந்து மூழ்கியதில் வைகும் புழுவின் பெரும்பேறு  

        முந்து சங்கை முதலவா முற்றும் படிந்து தீவினைகள்  

        சிந்தும் அந்த ணாளருமே சேரார் என்று மறைசாற்றும்.                                   14 

 

 

                       சேடப்பொருளின் சிறப்பு 

 

        தாய்க்கு வழுவின் மகளிர்க்குத் தந்தை தனக்குப் பசுவிற்குச்  

        சேய்க்கு மறையோர் தமக்கிடர்செய் தீர்வில் கொடிய பாதகமும்  

        போக்கும் இமைப்பிற் கரணத்தைப் புனிதம் ஆக்கிச் சிவமாக  

        ஆக்கும் அரன்தன் பிரசாதம் ஆயின் அதற்கு நிகருண்டோ.                                15 

 

 

                   மருளசங்கர தேவரின் மாண்பு 

 

        பசிக்கு மருந்து மாய்வீடு பயக்கும் வண்மை சேர்ந்துபவம்  

        ஒசிக்கும் அரன்தன் பிரசாத ஊதி யந்தான் உணர்ந்திங்கு  

        வசிக்கும் தகைமை சங்கரற்கே வருவ தன்றிப் பசிக்குணவு  

        புசிக்கு மனிதர் தமக்கென்றும் பொருந்தா தென்றான் எம்பிரான்.                            16 

 

 

           நீங்களிருவரும் ஒருவரை ஒருவர் உணர்வீர்கள் எனல் 

 

        நின்னை அறிவன் சங்கரனே நீயே அவனை அறிகுவாய்  

        பின்னை உலகில் யாரறிவார் பேசிற் பாம்பே பாம்பின்கால்  

        தன்னை அறியும்  எனஅலமன் தாள்தா மரையின் கீழ்ப்பணிந்தான்  

        என்னை அடிமை யாவுடைய இராமன் என்னும் இணையில்லான்.                         17 

 

 

           மருளசங்கரர் பெருமை உணராமைக்கு வசவண்ணர்  

                               வருந்தல் 

 

        அம்பொன் வைப்பின் மீதிருந்தும் அறியா தல்லற் படுவான்போல்  

        நம்பன் மருள சங்கனை நானோ அறியா திருந்தழிந்தேன்  

        இம்பர் மருவி நிரஞ்சனநீ எனக்குக் காட்டித் தந்தனையென்  

        றும்பர் பரவும் அல்லமனை உவந்து பணிந்தான் அருணந்தி.                                      18 

 

 

                 உன்னைச் சினந்தது உனக்கு இன்பம்  

                        உண்டாதற்கே எனல் 

         

               இணங்கும் மிக்க காமிதனக்  

                       கின்பம் ஊடல் சரலிங்கம்  

               பிணங்கல் முத்தி காமிக்குப்  

                       பேரின் பென்ப துணர்த்தற்குக் 

               குணங்கள் மிக்காய் நினைச்சினந்தாம்  

                       குறையொன் றுளதோ நினக்கரவின்  

               பணங்கொள் நிலத்தில் பரமசிவ  

                       பத்திக் குவால்நீ என்றக்கால்.                                           19 

 

 

                     நினது இல்லம் சிறந்தது எனல் 

 

        இங்கு மருள ளங்கரன்போல் எண்ணி லார்நின் மனைவாய்தல்  

        கங்குல் பகலும் அகலாமற் காப்பர் என்னின் நின்முன்றில்  

        பங்க வினையின் வலிகடந்த பலரும் தாஞ்செய் தவப்பயனால்  

        தங்கு கயிலை மலையன்றோ தண்ட நாதஎன் றமலன்.                                   20 

 

 

                கடவுள் அன்பெல்லாம் நினதே எனல் 

 

               வெம்மை எதன்கண் நிகழ்ந்திடினும்        

                       வெந்தீக் குணமென் பதுபோல  

               மும்மை உலகின் யாண்டேனும்  

                       முனைக்கிற் பத்தி யதைநினதென்  

               றிம்மை உலகம் இயம்புமெனில்  

                       எங்கள் வசவ நின்பெருமை  

               கொம்மை இளமென் முலைமடந்தை  

                       கூறன் அன்றி யாரறிவார்.                                                      21 

 

         

                  உன்மைப்போல்வார் உலகில் யாரும்  

                            இல்லை எனல் 

 

               பத்திக் கடலே குணக்குன்றே  

                       பாசப் பகையே எம்உறவே  

               முத்திக் கரசே சிவானந்த  

                       முதலே ஞான மணிவிளக்கே  

               சித்திப் பொருளே அருணந்தித்  

                       தேவே நின்னைத் தொழும் அடியார்  

               புத்திக் கமுதே யாவர்நினைப்  

                       போல்வார் அவரை அறியேமால்.                                               22 

 

 

         அல்லமரைப் போற்றியதால் உண்டாயதே தம் பெருமை  

                               எனல் 

 

        என்று கூறு எமையுடையான் எனக்குப் புகன்ற நலமெல்லாம்  

        சென்ற நாளில் இலைநினது செந்தா மரைத்தாள் தொழப்பெற்ற  

        இன்று தொடங்கி உளவாமென் றெந்தை நந்தி வணங்கியெழ  

        நின்ற அமல சிவசரணர் நெஞ்சம் உவகை பூத்தனரால்.                                   23 

 

 

                    மருளசங்கரருக்கு அல்லமர்  

                           அருள்புரிதல் 

         

               அருளான் மருள சங்கரனுக்  

                       கமரர் தாமும் அறிவரிய  

               பொருளா கியபே ரின்பவனு  

                       பூதி விளக்கம் அருள்செய்தான்  

               உரையால் நினைவால் அருணோக்கால்  

                       உலகர் உணர்வைப் பிணித்தமல  

               இருளான் அதனை அறமாற்ற  

                       எழுந்த ஞான சூரியனே.                                                       24 

 

 

பதினைந்தாவது - மருளசங்கர தேவர் கதி முடிந்தது

 

கதி 15 - க்குச் செய்யுள் - 795

 


 

16. இட்டலிங்க கதி

[இக் கதிக்கண், வசவண்ணர் மனைக்குள் இருக்கையொன்றில் அல்லமதேவர் எழுந்தருளுகின்றார். அங்கு அல்லமதேவர் போந்து அவ்வாறெழுந்தருளியது பெருந்தவத்தின் பேறென்று வசவண்ணர் போற்றுகின்றார். நான் இறைவனிடத்துக் கொள்ளும் அன்பு நெறியை உணர்ந்தது ஊமை கண்ட கனவைப் போலிருக்கின்றது; ஆதலின் எனக்கு அன்புநெறியை உரைத்தருள வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறார். மக்கட்பேற்றின் மாண்பையும், அறவழிப்படுதலின் அருமையையும், சிவநெறிப்படுதன் செம்மையையும், இட்டலிங்க வழிபாட்டின் ஏற்றத்தையும், பிற நல்லுரைகளையும் அல்லமதேவர் வசவண்ணர்க்கு உரைக்கின்றார் என்னும் செய்திகள் கூறப்படுகின்றன.]

 

 

                      நூலாசிரியர் கூறல் 

 

               சிட்டன் அல்லம தேவன் அருளுறீஇ  

               நட்ட நண்பொடு நந்தி உணர்வுற  

               இட்ட லிங்கத் தியல்பு புகன்றமை  

               கட்டு வல்வினைக் கட்டற ஓதுவாம்.                                           1 

 

 

                  அல்லமதேவர் வசவண்ணர்  

                 இல்லத்துக்கு எழுந்தருளுதல் 

 

               சங்க ரற்குத் தனைநிகர் இன்பவீ  

               டங்க ளித்தருள் அல்லமன் நந்திதன்  

               மங்க லத்திரு மாளிகை கட்செவிக்  

               கங்க ணற்கினி யாரொடு கண்டனன்.                                            2 

 

 

               அல்லமதேவர் இருக்கையொன்றில்  

                     எழுந்தருளியிருத்தல் 

 

               மண்டு பேரொளி மாடத்து நாப்பணம்  

               தண்ட நாதன் தவிசொன் றமைத்திட  

               அண்ட நாயகன் அல்லமன் ஆயிடைக்  

               கண்ட நோக்கம் களிப்ப இருந்தனன்.                                            3 

 

 

                அல்லமதேவரை மலர்கள் தூவி  

                          வணங்குதல் 

 

               ஆத னத்தில் அமர்ந்தருள் அல்லமன்  

               பாதம் அன்பொடு பன்மலர் தூயிது  

               மாத வத்தின் வலியெனத் தாழ்ந்தெழு  

               காதல் மிக்குக் கசிந்துள நந்திதான்.                                                     4 

 

 

                 வசவண்ணர் தமக்குக் கடவுளன்பு  

                உண்டாகுமாறு உரைக்க வேண்டல் 

 

               அடிய னேன்சிவ பத்தி அறிந்தமை  

               படியில் ஊமன் கனவெனப் பட்டது  

               முடியு மாறு மொழிந்தருள் என்றுபொன்  

               தொடியு லாங்கை தொழுது விளம்பினான்.                                              5 

 

 

                     அல்லமர் உனக்கு யாரும்  

                    உணர்த்தவேண்டாம் எனல் 

 

               கேட்ட வாரியன் கேடில் சிவநெறிக்  

               கூட்ட மேவுறு கொள்கையி னாய்நினைக்  

               காட்டு வாருள ரோசெங் கதிர்க்கிருள்  

               ஓட்டு சோதியும் உண்டுகொ லோஎன்றான்.                                              6 

 

 

               வசவண்ணர், அல்லமர் தம்மைப் புகவது  

                             கூடாதெனல் 

 

               வள்ளல் இன்றெனை வந்து புகழ்ந்தனன்  

               தெள்ளு தண்புனல் தேக்கு முளைத்தலைக்  

               கிள்ளி நின்றெறி கின்றவர் போலெனா  

               உள்ளு டைந்திட் டுரைக்கும் வசவனே.                                         7 

 

 

                               (வேறு)

 

                            இதுவும் அது 

 

               இகழ்ந்தென துளச்செருக் கினைய கற்றிலாய்  

               புகழ்ந்தனை விழைபுளிங் கறியிட் டாறுநோய்  

               மிகுந்தெழ வளர்த்தல்போல் எனவி ளம்புபு  

               தகுங்கழல் இறைஞ்சினன் தண்ட நாயகன்.                                              8 

 

 

                வசவண்ணர் அல்லமரை வேண்டுதல் 

 

               அருளினால் நினதடி அருச்சிக் கும்படி  

               தெருளிலா எனக்குரை செய்தி என்றலும்  

               மருளனாம் எனுமொரு மதிஞற் கீந்தருள்  

               பொருளினான் இனையன புகறல் மேயினான்.                                    9 

 

 

                    நல்வினை செய்யும் உயிர்க்கே  

                     மக்கட்பிறவி கிட்டும் எனல் 

 

               புன்மரம் நெளிபுழுப் புள்ளி லங்கெனும்  

               பன்மைய துயர்செயும் பவங்கள் தப்பியே  

               வன்மைகொள் நிலமிசை மக்கள் ஆகுதல்  

               நன்மைகொள் உயிர்க்கலால் அரிது நந்தியே.                                            10 

 

 

                 அறம் செய்யும் வழியில் நிற்றல்  

                       யார்க்கும் அரியதெனல் 

 

               நரர்வடி வாயினும் நன்மை ஆற்றுறா  

               மரபினில் உலகினில் வருதல் தப்புதல்  

               அரிதுநல் அறம்புரி வழிய டுப்பினும்  

               மருவுதல் அரிதறம் வளர்க்கும் அங்கமே.                                               11 

 

 

               அறவழி நிற்பினும் ஆகமவழி நிற்றல்  

                           அரிதெனல் 

 

               அறத்துறுப் பெய்தினும் அன்பி னாலறம்  

               சிறப்புறச் செய்தலிங் கரிது செய்யினும்  

               புறச்சம யங்களைப் போக்கி ஆகம  

               நெறிச்சம யங்களை அரிது நேர்தலே.                                           12 

 

 

                  ஆகம வழிநிற்பினும் சைவசமய  

                       நெறிநிற்றல் அரிதெனல் 

 

               ஆகமம் புகல்நெறி அடைவன் ஆயினும்  

               சோகமில் சைவநல் துறையை நன்றெனச்  

               சேர்குதல் அரிதது சேர்வன் ஆயினும்  

               ஏகலிங் கயிக்யனா குதலன் றெண்மையே.                                              13 

 

 

                    இட்டலிங்க வழிபாடு செய்பவன்  

                          ஏற்றமுளான் எனல் 

 

               புண்ணிய முதிர்வினாற் பொருந்தி அங்கையில்  

               கண்ணுற நிகழவுறு சிவலிங் கத்தினை  

               எண்ணிய மனமுடன் என்றும் வந்தனை  

               பண்ணிய முயல்பவன் பத்தன் என்பவே.                                        14 

 

 

                 இட்டலிங்க வழிபாடு ஆணவத்தை  

                          அகற்றுமென்றல் 

 

               ஆவுறு பிணிகெட ஆவின் பால்கறந்  

               தாவினை ஊட்டல்போல் ஆண வங்கெட  

               ஆவியுள் அமலனை அங்கை தந்துபின்  

               ஆவியுள் அமைவுற ஆக்கும் ஆரியன்.                                          15 

 

 

                     இட்டலிங்கம் அகமும் புறமும்  

                            இலங்குதல் 

 

               கருங்கொடி இருவிழிக் கண்ணும் ஓர்மணி  

               திரிந்திடு செயலெனத் திரிதல் இன்றியே  

               பொருந்துறும் அகமொடு புறமும் தீர்வற  

               இருந்தில குறுமருள் இட்ட லிங்கமே.                                           16 

 

 

                       இட்டலிங்க இயல்பு 

 

               குறிபல பலமுறை கொண்டு பல்வகைப்  

               பொறிதொறு மருவியொண் புலன்நு கர்ந்துமாய்ந்  

               தறிவரு நிலையவா தார மேவியும்  

               நிறைவுறும் அங்கையின் நிகழும் இட்டமே.                                             17 

 

 

                 இட்டலிங்கம் வினைவலி தொலைத்தல் 

 

               அடைந்துள உருச்சுவை அமைதி என்பன  

               உடம்பொரு மூன்றினும் உற்ற டைந்திடும்  

               தொடர்ந்துள வினைவலி தொலைத்தி யானெனும்  

               இடும்பையில் இன்பருள் இட்ட லிங்கமே.                                               18 

 

 

                     மாயையை வென்றவன் 

 

               என்றறி வறவறிந் திட்ட லிங்கமாம்  

               ஒன்றொரு பொருளிலே உறவி ழித்தவன்  

               பொன்றுறு சகமெனப் புணர்ந்த மாயையை  

               வென் றவன் அவனெனா விளம்பும் வேதமே.                                    19 

 

 

                     பரமனையிருத்தும் பத்தன் 

 

               பொருவில்சற் பத்தியாம் தாரம் பூண்டொரு  

               வரவயி ராகமாம் வத்தி ரம்புனைந்  

               தொருவலில் உணர்வெனும் செச்சை ஒன்றுறப்  

               பரமனை இருத்துவோன் பத்தன் ஆகுவான்.                                             20 

 

 

                 இட்டலிங்கப் பற்றால் சிவமயமாவன்  

                               எனல் 

 

               ஒன்றினொன் றுள்ளுற உடம்பு மூன்றையும்  

               மன்றநல் வத்திர மடிய தாக்கியே  

               என்றுமங் கமைவுற இட்டம் வைப்பனேல்  

               அன்றவன் சிவமயம் ஆகும் என்பவே.                                          21 

 

 

               சிவத்தொண்டன் இத்தன்மையன் எனல் 

 

               அருளெனும் புனலினை ஆட்டிச் சாந்தமாம்  

               வரைநறும் சந்தொடு மருவ இந்திய  

               விரைமலர் புனைந்தறி வினைய ருத்துறில்  

               பரமனை அவன்சிவ பத்தன் ஆகுவான்.                                         22 

 

 

                  இறைவன் ஒருவன் அன்பையே  

                        விரும்புவன் எனல் 

 

               பூசறு மனத்தெழும் அன்பை அன்றியே  

               பூசனை உவக்கிலன் புராரி சென்னிமேல்  

               வீசுறு திரையினும் மிக்க தோசொலாய்  

               ஊசல்செய் மனமுடை ஒருவன் ஆட்டுநீர்.                                               23 

 

 

               இறைவனை வழிபடுவோர் இறைவனே  

                               எனல் 

 

               பூப்புனை கையுமெம் புனிதன் தன்புகழ்ப்  

               பாப்புனை நாவுமே படைத்து ளான்தனைச்  

               சேப்புனை கொடியுடைத் தேவ னேயென  

               நாப்புனை புகழொடு நாகர் ஏத்துவார்.                                           24 

 

 

                இறை வழிபாடு செய்யாதவரினும்  

                     குரங்கு சிறந்ததெனல் 

 

               பூசனை செயாதகை புராந்த கன்புகழ்  

               பேசுதல் இலாதவாய் பெற்று ழன்றிடும்  

               நீசரா னவர்தமில் நெடுவ னத்திடைக்  

               கூசுதல் இலாதபுன் குரங்கு நன்றரோ.                                           25 

 

 

                 தான் உண்பவற்றை இறைவனுக்கே  

                  படைப்போனை வினை அணுகா 

 

               குடிப்பன விழுங்குவ கூரெ யிற்றினால்  

               கடிப்பன நக்குவ அனைத்தும் கைம்மலர்  

               அடுத்துள சிவன்தனக் கர்ப்பித் துண்பவன்  

               விடுத்தவன் மேல்வரும் வினைகள் யாவுமே.                                           26 

 

 

                  யான், எனது எனும் பற்றற்றோன்  

                          இறைவனே எனல் 

 

               தானுறும் உடல்மனம் தனமென் றுள்ளவை  

               ஈனமில் குருசிவ சரங்கட் கீந்துதான்  

               யானென தென்குதல் இன்றி வைகுவோன்  

               மேனிகழ் சிவமொடு வேற லானரோ.                                           27 

 

 

               ஆசிரியர் முதலியோர்க்கு ஈந்த பொருளை  

                மீண்டும் பெற எண்ணுவோன் கொடியன்  

                               எனல் 

 

               குருசிவ சரங்கொளக் கொடுத்த மெய்மனம்  

               பொருளிவை நமவெனப் புந்தி செய்துகொள்  

               ஒருவனில் வழிமறித் தொறுத்துக் கொள்வன  

               சரனனி நல்லன்மெய் தவறி லாமையால்.                                               28 

 

 

                    சிவனடியார்க்கு வேண்டுவன  

                    வேண்டாதன இவை எனல் 

 

               விடுவன காமம்வெவ் வெகுளி மாலிவை  

               தொடுவன குருசிவ சரங்கள் தொல்பவம்  

               கடுவென வெருவிய கருத்து ளளர்க்கிவண்  

               அடுவன எனப்புலன் அட்ட ஆற்றலாய்.                                          29 

 

 

                   இட்டலிங்கத்தைப் போற்றாதவர்  

                         சிறப்பற்றவர் எனல் 

 

               அங்கையின் அமர்தரும் அரனை விட்டொரு  

               வெங்கட வுளர்தமை விழைந்து போற்றுவார்  

               கங்கையை அகன்றுவர்க் கழியின் மூழ்குநர்  

               தங்களின் வேறலர் தரும மூர்த்தியே.                                           30 

 

 

               தூய்மையுடையவனே இறைவனுக்கு  

                         அன்பன் எனல் 

 

               மோகமில் குருசர முனியின் முன்னுள  

               தாகிய செயிர்முழு தகன்று வண்துறை  

               போதிய மடியெனப் புனிதன் ஆகுமேல்  

               பாகியல் மொழியுமை பாகற் கன்பனாம்.                                         31 

 

 

                 அடியார்களை இகழாதவனே இறைவன்  

                            அன்பன் எனல் 

 

               விள்ளரு நற்சிவ வேடத் தோர்பொருள்  

               கொள்ளைகொள் கிற்பினும் குறைகள் கூறினும்  

               பிள்ளையை அறுப்பினும் பிழைகள் செய்யினும்  

               எள்ளுதல் இலனெனில் ஈசற் கண்பனாம்.                                               32 

 

 

                சிவனடியார்களிடத்தில் குலம் முதலிய  

                வேறுபாட்டைக் கருதியவன் அளற்றில்  

                            அழுந்துவான் 

 

               சங்கமம் தனக்கொரு சாதி உன்னினான்  

               அங்கையின் அமர்தரும் அரற்கு முன்னினான்  

               சங்கர னொடுசரந் தம்மில் வேறெனும்  

               அங்கவன் அறிவரும் அளற்ற ழுங்குவான்.                                              33 

 

 

                  அடியவர்கட்கு ஆக்கும் உணவே  

                          அமிழ்தம் எனல் 

 

               தலைமைகொள் குருசிவ சரங்கட் காகவே  

               உலையிடும் அரிசியன் றோங்கல் மத்தெறி  

               அலையமு தாந்தமக் காக ஆக்குறில்  

               கொலைசெயும் நஞ்சினும் கொடிய தாகுமால்.                                   34 

 

 

                நற்செயல் உள்ளான் பிறர் பிறவியை  

                          நீக்குவோன் எனல் 

 

               தனுவுள அளவுமோர் தகுநற் செய்கையும்  

               மனமுள அளவும்பா வனையும் ஞானமுண்  

               டெனவுள அளவுஞே யமுமி யைந்தவன்  

               பினையுள அளவுநோய் பிறர்க்க கற்றுமே.                                              35 

 

 

                உள்ளத்தில் இறைவனையே அமர்த்த  

                          வேண்டும் எனல் 

 

               ஈசனை இருத்துறும் இதயத் தோர்பொருள்  

               ஆசையை இருத்துதல் அந்த ணாளர்தாம்  

               வாசமுற் றிடுமொரு மனையிற் புன்செயல்  

               நீசரை இருத்துதல் நிகர்க்கும் என்பரால்.                                         36 

 

 

                அழுக்குள்ள மனத்தில் இறைவன் தங்கான்  

                               எனல் 

 

               சினமுத லியமயல் தீர மாற்றுபு  

               வினைதபு வாய்மையாம் மெழுக்கை அன்பெனும்  

               புனலொடு விரவியே பூசின் அல்லது  

               மனமெனும் மனையிடை வராதி லிங்கமே.                                              37 

 

 

                 அடியார்கள் மங்கையர் அழகையும்  

                பொருளையும் விரும்பலாகாதெனல் 

 

               காலமும் கருமமும் கடந்த காரணன்  

               பாலுறும் பரிசறப் பார்ம டந்தையர்  

               கோலமும் பொருளையும் குறித்து நச்சுதர்  

               சீலமும் விரதமும் தீய என்பரால்.                                                     38 

 

 

                   தீச்செயலினர் கையில் இறைவன்  

                     இருப்பினும் கிட்டான் எனல் 

 

               வெங்கொலை களவுபொய் வெகுளி ஆசையென்  

               றிங்கிவை யொடுமரீஇ இருக்கின் றார்தமக்  

               கங்கையின் நெல்லிபோல் அவிர்ச டைப்பிரான்  

               செங்கையில் இருப்பினும் சேயன் சேயனே.                                             39 

 

 

                 அடியார்கள் அன்பர்கள் எதையும்  

                        விரும்புவார் எனல் 

 

               பத்தரைப் புகழ்வுறப் பணிய உண்டவர்  

               வைத்தன கொளவுடன் மருவப் பெற்றவர்  

               சித்தியும் கடவுளர் சிறப்பும் வேறொரு  

               முத்தியும் பொருளென முன்னு றார்களால்.                                             40 

 

 

               அல்லமர், அங்குள்ள அடியார் அறியவே  

                  வசவண்ணர்பால் கூறினார் எனல் 

 

               இன்னன நன்னெறி யாவும் ஆயிடைத்  

               துன்னிய சிவகணம் துணிந்து கொள்ளவே  

               மன்னவன் எனுமருள் வசவ நாயகன்  

               தன்னொடு புகன்றனன் தலைவன் அல்லமன்.                                            41 

 

 

               வசவண்ணர், அல்லமரைப் போற்றிப்  

                   பணிந்து மகிழ்ச்சி மிகுதல் 

 

               பாடினன் பரவினன் பணிந்த சொல்லுரை  

               ஆடினன் பன்முறை அல்ல மன்திருத்  

               தாடலை புனைந்தனன் தண்ட நாயகன்  

               மூடிய உவகையின் மூழ்கி னானரோ.                                           42 

 

 

                     அல்லமர், கலியாணபுரத்தில்  

                        எழுந்தருலியிருத்தல் 

 

               திருந்தவிவ் வகையுப தேசித் தெண்ணிலா  

               அருந்தவர் குழாத்தொடும் அருணந் திப்பெயர்ப்  

               பெருந்தகை மகிழ்வுறப் பிரிவில் ஆரியன்  

               இருந்தனன் மலிகலி யாணத் தென்பவே.                                        43 

 

 

பதினாறாவது - இட்டலிங்க கதி முடிந்தது

 

கதி 16 - க்குச் செய்யுள் - 838

 


 

17. கதலிவன கதி

[இக் கதிக்கண், அல்லமதேவர் கலியாணபுரத்தில் எழுந்தருளியிருத்தலை அக்கமாதேவி அறிந்துகொண்டு அங்கடைந்து அல்லமதேவரைப் போற்றுகிறாள். அக்கமாதேவியைக் கண்ட பலரும் பலவகையாக எண்ணுகிறார்கள்; அல்லமதேவர் அக்கமாதேவிக்கு மெய்ம்மைப் பொருளை யுரைத்தருளி வாழைக்காடு என்னுமிடத்திற் சென்று அருளுரையின் மெய்ம்மைப் பொருளை நடைமுறையில் காண்பாயாக வென்று உரைத்தருளுகின்றார்; அக்கமாதேவியும் அவ்வாறே திருச்சைலத்திலுள்ள வாழைத் தோட்டைத்தை (கதலிவனத்தை) யடைகிறாள் என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]

 

 

                       நூலாசிரியர் கூறல் 

 

        வரையிற் புண்ணிய வனத்தினில் வளங்கெழு நதியின்  

        கரையிற் பன்னெடு நாளருட் குரவனைக் காண்பான்  

        திரிதற் குற்றுலாய் வந்துமா தேவிகல் யாண  

        புரியிற் கண்டுவந் தேகிய முறையினிப் புகல்வாம்.                                              1 

 

 

             அக்கமாதேவி கலியாணபுரம் சேர்தல் 

 

        காட்டி னும்பெருங் குன்றினும் தேடினன் காணாள்  

        வாட்டு றும்பிறப் பெனும்பிணி மாய்வுற வீட்டில்  

        கூட்டு நன்மருந் திருப்பதை அறிஞராற் கூறக்  

        கேட்டு வந்துமா தேவியந் நகரினைக் கிடைத்தாள்.                                              2 

 

 

          அக்கமாதேவி கலியாணபுரத் தெருவில் புகுதல் 

 

        தலையில் வெண்கலை ஒன்றுற வெற்றரை சமைத்துப்  

        பலிகொ ளும்படி மனைதொறும் உலகெலாம் பழிச்ச  

        அலம ரும்பரற் கினியவள் வெற்றரை யாய்க்கட்  

        புலன்வி ருந்துணுங் கடிநகர் வீதியுட் புகுந்தாள்.                                         3 

 

 

         கண்ட நகரமக்கள் பித்துடையாள் எனக்கருதுமாறு  

                       சென்றாள் எனல் 

 

        நாற்கு ணங்களுள் முதற்குணம் ஆகிய நாணைத்  

        தீர்க்கும் இம்மடம் உடையவள் யார்கொலோ தெரியேம்  

        பார்க்கில் இன்னவள் பித்துடை யாளெனப் பலரும்  

        நோக்கும் வண்ணம்வந் துற்றனள் உலகியல் நோக்காள்.                                  4 

 

 

              வசவண்ணர் திருமடத்தை அடைதல் 

 

        உலகு ளார்தமைப் பேதையென் றுணர்ந்தன ளோதான்  

        உலகு ளார்தனைப் பேதையென் றுணர்குவர் என்றோ  

        உலகு ளார்தமை நாணிலள் நீங்கிய உடையாள்  

        உலகு ளார்தொழும் தண்டநா யகன்மடத் துற்றாள்.                                              5 

 

 

           அல்லமதேவரைக் கண்டு வணங்குதல் 

 

        தண்ட நாயக னொடுபலர் நெருங்குறத் தவிசின்  

        அண்ட நாயகன் அல்லமன் வீற்றிருந் தருளக்  

        கண்டு போயரு கிறைஞ்சினள் ஆண்டமர் கணங்கள்  

        பண்டு தாமறி யாவியப் படைந்தனர் பார்த்து.                                           6 

 

 

         பிறவிப் பிணிக்கு அஞ்சினேன் அருள்க எனல் 

 

        நெஞ்சம் ஆரழல் அரக்கென நெக்குநெக் குருகச்  

        செஞ்சொல் வாய்தடு மறவாள் விழிபுனல் சிந்தக்  

        கஞ்ச நாள்மலர்க் கைதொழு தனங்கன்நோய் காணாள்  

        அஞ்சி னேன்பவப் பிணியினி அருள்செயென் றழுதாள்.                                   7 

 

 

          அக்கமாதேவி அருள்பெறத் தக்காள் என  

                       அல்லமர் கருதல் 

 

        வீடு வப்பவர் ஆணெனப் பெண்ணென வேறோ  

        ஏட லர்க்குழல் உமைகலை யேயிவள் இவள்போல்  

        நாடு றிற்பரு வம்பெறும் அவரிலை ஞானம்  

        கூடு தற்குரி யாளென அல்லமன் குறித்தான்.                                                    8 

 

 

         அக்கமாதேவியின் மெய்யறிவை யாவரும்  

                       வியத்தல் 

 

        தான லாதொரு பொருளிலைக் சகமென என்னும்  

        ஞான மேவலாற் காமஇன் பந்தனை நண்ணாள்  

        தான லாதர வால்தனைத் தழுவியின் புறுநர்  

        ஏனை மாந்தருள் உளர்கொலோ என்றனர் இருந்தார்.                                             9 

 

 

          அக்கமாதேவி காமனை வென்றவள் எனல் 

 

        இன்று காமனை வென்றவள் இளையளா யிழையோ  

        டொன்று மேனியன் ஆகிய கண்ணுதல் ஒருவன்  

        வென்று ளானென உலகினில் எடுத்தசொல் மெய்ம்மை  

        அன்று போலுமென் றியம்பினர் சிலரவண் அமர்ந்தோர்.                                   10 

 

 

           இவள்போன்று பற்றற்றவர்க்கே தீவினை  

                         கெடுமெனல் 

 

        உடல மானமற் றிவளென அனைத்தையும் ஒருங்கு  

        விடவ லார்க்கலால் இளமையும் செல்வமும் விரும்பி  

        நடலை வாழ்வினில் வெறுப்புறாப் புல்லிய நரர்க்குத்  

        தொடரு மாவினை தொலையுமோ எனச்சிலர் சொன்னார்.                                11 

 

 

         அல்லமர் அக்கமாதேவிக்கு அருளுரை வழங்க  

                          நினைதல் 

 

        சென்று தேடிநாம் தத்துவம் அருள்செயும் சீடர்  

        அன்றி ஞானதே சிகனுள னோஎன ஆய்ந்திட்  

        டின்று மேவுமா தேவிபோல் இலைஎன எம்மான்  

        நின்ற ஞானமூ லந்தனை உணர்த்துவான் நினைந்தான்.                                           12 

 

 

        பூதம் பொறி முதலியன நீ அல்லவெனக் கூறல் 

 

        பூதம் நீயலை பொறிகளும் அலையலை புந்தி  

        ஏதும் நீயலை இவற்றினை மயங்கியான் என்னும்  

        போதம் நீயலை என்றிவை அனைத்தையும் போக்கிச்  

        சோதி ஆகிய பிரமமே நீயெனச் சொல்லி.                                                       13 

 

 

            உண்மைப் பொருளினை யுரைத்தல் 

 

        ஞேய ஞானஞா துருவெனும் இவைபல நிற்கும்  

        ஆயின் வேறறு முத்தியன் றதுசகம் ஆமென்  

        றேயும் ஆறிது அதுவெனும் சுட்டிலா இயல்பை  

        மாயை மாறிய தேவிபால் அருளினன் வள்ளல்.                                         14 

 

 

         அக்கமாதேவி அல்லமதேவரைப் போற்றுதல் 

 

        தேறு நீரென எனதுளந் தெளித்ததே சிககைம்  

        மாறு காண்கிலேன் உடல்பொருள் ஆவிகள் மதிப்பில்  

        வேறு போய்நின ஆயின என்றவள் விழிகள்  

        ஊறு நீரொடும் அல்லமன் தாள்தொழு துளைந்தாள்.                                             15 

 

 

          நான் உரைத்த அருளுரையை நடைமுறையிற்  

                       காண்பாய் எனல் 

 

        அன்னை நீயினிக் கதலிமா வனத்தினை அடைந்திட்  

        டென்னை மேவினை கேட்டவிப் பொருளினை எல்லாம்  

        நின்னின் நீதேளிந் துறுதிகொள் நிதித்தியா சனத்தின்  

        மன்னு வாயென ஏவினன் தற்கொடை வள்ளல்.                                         16 

 

 

            அக்கமாதேவி திருமலையைச் சேர்தல் 

 

        வள்ளல் நாள்மலர்த் திருவடி வணங்கியம் மருங்கில்  

        கொள்ளை மாதவர் தாள்தொழு தருள்விடை கொண்டு  

        வெள்ளம் ஆகிய அன்புநின் றுய்த்திட மேவித்  

        தெள்ளும் ஆரமு தனையவள் பருப்பதம் சேர்ந்தாள்.                                             17 

 

 

         கதலிவனம் திருச்சைலத்தில் உள்ளது எனல் 

 

        வசவன் பாலருள் அல்லமன் உற்றென வானோர்  

        பசுவின் பானிறை சுனையிடை நழுவிவீழ் பழத்தை  

        மிசையும் பூங்கிளி மிழற்றொலி கடலென விரவ  

        இசையும் பாசிலைக் கதலியங் காடதில் இலங்கும்.                                              18 

 

 

                  வாழைக்காட்டின் வளம் 

 

        விரிந்த வாழையின் நெட்டிலை மிசைநிறை மதியம்  

        பொருந்து மாறுவிண் முழுதையும் அளித்தருள் புத்தேள்  

        அருந்த வாய்மடைத் தொழில்திறம் நிரம்பிய அடிசில்  

        சொரிந்த தாமென மனங்களி கூர்தரத் தோன்றும்.                                        19 

 

 

              அக்கமாதேவி வாழைக்காட்டில்  

                  எழுந்தருளியிருத்தல் 

 

        இனைய வாழையங் காடுகண் டெங்கள்மா தேவி  

        முனிவர் வானவ ரியாவரும் முறைமுறை போற்றத்  

        தனிய ளாயொரு புறம்பசந் துளசுவை தருசெங்  

        கனிய வாவிய உளமொடு மிருந்தனள் களித்து.                                          20 

 

 

பதினேழாவது - கதலிவன கதி முடிந்தது

 

கதி 17 - க்குச் செய்யுள் - 858

 


 

18. சாதகாங்க கதி

[இக் கதிக்கண், வசவண்ணர் வீடுபேற்றிற்குரிய நல்ல வழியினை உரைத்தருளுமாறு அல்லமதேவரை வேண்டிக்கொள்ளுகிறார். அல்லமதேவர் வசவண்ணரைப் பார்த்து, ‘இறைவனை அகத்திற் காண்பவனே சிறந்தவன், புறத்திற் காண்பவன் இழிந்தவனாவான். எல்லாச் செயல்களுக்கும் மனவொடுக்கமே சிறந்த வழியாகும். நல்லவைகளைச் செய்து மக்களை உயர்த்தவும் நல்லவைகள் அல்லாதவைகளைச் செய்து மக்களைத் தாழ்த்தவும் இந்த மனமானது வல்லது. மனத்தை அடக்கி வசப்படுத்தினால் மற்றவைகள் தாமே வசமாகும். மனம் எளிதில் ஒருவனுக்கும் அடங்காது. யோக வழிகளால் உயிர்ப்புக் காற்று ஓடாது தடுத்து நிறுத்தினால் மனமும் நிற்கும். மனம் நிற்கவே வீடுபேறு தானாகவே கூடும்’ என்று அறிவுரைகள் அருளுகிறார். அடியார்கள் அல்லமதேவரைப் பணிகிறார்கள் என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]

 

 

                       நூலாசிரியர் கூறல் 

 

               வினைய டுத்த விழுமம் துடைத்தெமக்  

               கனைய டுத்த அருளுடை அல்லமன்  

               மனன டக்கம் வசவற் குணர்த்துதல்  

               தனையெ டுத்தினிச் சாற்றுதும் நாமரோ.                                        1 

 

 

                    அக்கமாதேவி சென்றபின்  

                       வசவண்ணர் கூறல் 

 

               காவின் நீடும் கதலி வனத்துமா  

               தேவி போதத் திருவருள் செய்தவண்  

               மேவி ஞான விளக்குற எம்முடை  

               ஆவி போலும் வசவன் அறைகுவான்.                                          2 

 

 

                 வசவண்ணர் வீடுபேற்றுவழி  

                    கூறுமாறு வேண்டல் 

 

               மத்தர் வாத மயக்கம் இலாதுயர்  

               முத்தி சாதனம் என்று மொழிந்தருள்  

               அத்த நீயென் றடிகள் தொழுதெழப்  

               பத்தி வேண்டும் பரமன் பகருமால்.                                             3 

 

 

                    மனம் சொல் செயல்கள்  

                 தூய்மைபெறலே வீட்டுநெறிக்  

                       காரணம் எனல் 

 

               பரம முத்தி பதம்பெறும் ஏதுவுள்  

               கரண சுத்தி அதனது காரணம்  

               அரண் எரித்த அமலற் குறித்தநல்  

               கிரியை இத்திறம் வேதம் கிளக்குமால்.                                         4 

 

 

                   மனம், இலிங்க வடிவாக  

               மாறாவிடின், இலிங்கம் அணிந்தும்  

                    பயன் இல்லை எனல் 

 

               மனமி லிங்க மருவிலை யேலுடல்  

               தனிலி லிங்கம் தரித்தும் இலையிலை  

               எனவி யம்பும் இணையிலி ஆகமம்  

               நினைவ ரன்கழல் நிற்க நிறுத்தினாய்.                                           5 

 

 

                    மனத்தொடு பொருந்தாத  

               வழிபாட்டினால் பயனில்லை எனல் 

 

               தாவி லாத மனமொடு சார்தரா  

               தோவும் ஆயின் உலகிற் புனலுமொண்  

               பூவும் நாடொறும் போக்குறு பூசனை  

               ஆவி போகிய ஆகம் நிகர்க்குமால்.                                                     6 

 

 

                இறைவனை அறிஞன் உள்ளத்துட்  

                         காண்பன் எனல் 

 

               புறம்பு காண்குவன் புல்லியன் ஈசனை  

               அறிந்த ஞானி அகமுறக் காண்பனால்  

               எறும்பி காணுறில் இன்கரும் பேகொளும்  

               செறிந்த ஆடிலை தின்பன என்பவே.                                            7 

 

 

                அமைதி பெறாத உள்ளமே பகை  

                               எனல் 

 

               கரங்கள் நல்ல கருமம் செயாநிற்பத்  

               திரிந்து செல்லும் செலாத இடத்துநெஞ்  

               சொருங்கு றாத ஒருமனம் தன்னினும்  

               பரந்த அல்லற் படுக்கும் பகையிலை.                                           8 

 

 

                  மனம் திரிந்தலைந்தால் சிறிதும்  

                    இன்பம் உண்டாகாதெனல் 

 

               துயிலை இன்பெனச் சொல்லுதல் இந்தியத்  

               தியலு நெஞ்சம் இலாமையி னாலன்றோ  

               பயிலு நெஞ்சம் பரந்து திரிதரும்  

               செயலில் இல்லை சிறிதும் சுகமரோ.                                           9 

 

 

                  மனம் வசப்பட்டால் பிறவியை  

                        அடையான் எனல் 

 

               மனமொ ருத்தன் வசப்படு மேலவன்  

               பினைவ ருத்தும் பிறப்பை அடைந்திடான்  

               மனமொ ருத்தன் வசப்படா தோடுமேல்  

               நனிபி றப்பிடை நாளும் சுழலுமே.                                                     10 

 

 

                எச்செயலுக்கும் மனமே துணை எனல் 

 

               அறவி னைக்கும் அரும்பொருள் இன்பொடு  

               பெறுவ தற்கும் பெருங்கல்வி கற்றுயர்  

               விறலி னுக்குநல் வீரம் தனக்குமொண்  

               துறவி னுக்கும் துணைமனம் என்பவே.                                         11 

 

 

                எல்லாவற்றிற்கும் மனமே காரணம்  

                               எனல் 

 

               நல்ல செய்து நரரை உயர்த்தவும்  

               அல்ல செய்தங் களற்றிடை ஆழ்ப்பவும்  

               வல்ல திந்த மனமல தையனே  

               இல்லை என்ன இயம்பும் மறையெலாம்.                                        12 

 

 

                  இறைவனை மனம் பற்றினால்  

                 தீவினையெல்லாம் கெடும் எனல் 

 

               நெஞ்சம் மாதுமை நேசனை நண்ணுமேல்  

               விஞ்சு பாதகம் கோடி விளைப்பினும்  

               அஞ்சு றானவன் அவ்வினை யாவையும்  

               பஞ்சு தீயிடைப் பட்டென மாயுமே.                                             13 

 

 

                மனத்தால் சிறப்புறாவிடின் மக்களும்  

                           மாக்களே எனல் 

 

               மக்கள் மானிடர் என்று மனத்தினால்  

               மிக்க மேன்மை விளங்கினர் இல்லெனில்  

               பொக்க மேவும் பொறிகளோர் ஐந்தினால்  

               ஒக்கு மாவினை ஒத்துயர் வுற்றிடார்.                                           14 

 

 

               மனத்தை அடக்குபவனே பிறவியைக்  

                         கடக்கலாம் எனல் 

 

               கெடுக்க வல்லதும் கெட்டவர் தங்களை  

               எடுக்க வல்லதும் இம்மனம் என்றதை  

               அடக்க வல்லவன் ஐய பவக்கடல்  

               கடக்க வல்லவன் ஆவன் கடிதரோ.                                                     15 

 

 

                மூச்சுக்காற்று ஒடுங்கினால் மனம்  

                         ஒடுங்கும் எனல் 

 

               ஆயின் மிக்கோர் அரிய செயலெலாம்  

               நேய மிக்க மனத்தை நிறுத்தல்காண்  

               வாயு நிற்க மனமும் உடனிற்கும்  

                தோய நிற்குறின் நிற்கும் துரும்புமே.                                            16 

 

 

                மனத்தை அடக்க விரும்புவோர் மூச்சை  

                         உள்ளடக்குவார் எனல் 

 

               ஓடு மாவை நிறுத்துறின் உள்ளுறக்  

               கோடும் வாய்க்கலி னத்தினைக் கொள்ளுவார்  

               நீடு மாமன நிற்க நிறுத்துறில்  

               ஓடும் வாயுவை உள்ளுற ஈர்ப்பரால்.                                           17 

 

 

                 வாயுவை வசப்படுத்தினால் மனமும்  

                               வசப்படும் 

 

               அடுத்த நாடிகள் ஆங்கொரு மூன்றினும்  

               விடுத்து வாங்கியும் மேவ நிறுத்தியும்  

               தடுத்தும் வாயுவைத் தன்வசம் ஆக்கில்வாய்  

               மடுத்தி டாது மனமும் வசப்படும்.                                                      18 

 

 

                    நல்ல மனத்தின் இயல்புகள் 

 

               ஓடும் பொன்னும் உறவும் பகையுமோர்  

               கேடும் செல்வமும் கீர்த்தியும் நிந்தையும்  

               வீடும் கானமும் வேறற நோக்குதல்  

               கூடுந் தன்மை கொளுமனம் நன்மனம்.                                          19 

 

 

               தீய மனத்தின் இயல்புகள் இவை  

                            எனல் 

 

               மன்னு காம வெகுளி மயக்கமென்  

               றின்ன கூடி எறிவளி முற்சுடர்  

               என்ன ஆடு இயல்மனம் தீமணம்  

               தன்னை யாரும் தடுக்கத் தகாதரோ.                                            20 

 

 

                    இலிங்க வடிவமாவோன்  

                    இத்தகையோன் எனல் 

 

               மறிந்தி டாது மனபவ னங்கள்தாம்  

               செறிந்த வாயிற் சிவமயம் ஆகுமால்  

               அறிந்து வாயுவை அங்ஙனம் எய்தினோன்  

               இறந்தி டாத இலிங்கப் பிராணியாம்.                                            21 

 

 

                அல்லமர், வசவண்ணரிடம் இவ்வாறு  

                          கூறினார் எனல் 

 

               இன்ன வாறு பலவும் இயம்பினான்  

               அன்னை போலுநம் அல்லம தேசிகன்  

               தன்னை நேர்தரு சைவம் வளர்க்குமோர்  

               மன்னன் ஆகும் வசவனை நோக்கியே.                                          22 

 

 

                    வசவர், அல்லமரைப் புகழ்தல் 

 

               நின்னை நோக்கவும் நின்னை இறைஞ்சவும்  

               நின்னை வாழ்த்தவும் நின்மொழி கேட்கவும்  

               என்ன மாதவம் எய்தின வோஎனப்  

               பன்னி நாதற் பணிந்தனன் நந்தியே.                                             23 

 

 

                    சித்தராமர் முதலியோர்  

                    அல்லமரைப் போற்றல் 

 

               சித்த ராமனுஞ் சென்ன வசவனும்  

               முத்தன் ஆமருள் மாச்சன் முதலிய  

               பத்த ராகும் பலருமென் புன்தலை  

               வைத்த நாதன் மலரடி வாழ்த்தினார்.                                           24 

 

 

                அல்லமர், பலருக்கும் அருள்புரிய  

                           எண்ணுதல் 

 

               ஆன காலையில் அல்லமன் ஆகிய  

               ஞான வாரி நடந்துல கெங்கணும்  

               ஏனை மாதவர்க் கின்பம் அளிக்குவல்  

               யானெ னாவுளத் தெண்ணினன் என்பவே.                                               25 

 

 

பதினெட்டாவது - சாதகாங்க கதி முடிந்தது

 

கதி 18 - க்குச் செய்யுள் - 883

 


 

19. கோரக்கர் கதி

[இக் கதிக்கண், அல்லமதேவர் கலியாணபுரத்தைவிட்டு மறைகிறார். வசவண்ணர் முதலியோர் அல்லமரைக் காணாது வருந்துகிறார்கள். அல்லமதேவர் பல வளங்கள் பொருந்திய பெருஞ் சிறப்புமிக்க திருப்பருப்பதம் என்னும் ஓங்கலை யடைகிறார். ஆண்டு உடலழியாப் பேறுபெற்று அதனையே பெரிதாக மதித்து நிற்கிற கோரக்கர் என்னுஞ் சித்தரைக் காண்கிறார். அக் கோரக்கர் அல்லமதேவரையும் தம்மைப்போன்ற ஒரு சித்தராக எண்ணிப் போற்றுகிறார். உடலழியாப் பேறுபெற்றுள்ள தம் பெருமைகளை அல்லமதேவர்க்கு உரைக்கிறார். அல்லமதேவர் கோரக்கரின் கொள்கையை மறுத்துக் கண்டித்து உரைக்கிறார். கோரக்கர் வலிய வாள் ஒன்றினை அல்லமதேவர் கையிற் கொடுத்துத் தம் உடலை வெட்டி ஊறுபடுத்திப் பார்க்குமாறு கூறுகிறார். அல்லமதேவர் கோரக்கர் மீது வாட் படையை வீசுகிறார். பேரொலி ஒன்று உண்டாகிறது. அவ்வொலியைக் கேட்டுப் பலரும் அஞ்சுகின்றனர். பின்னர்க் கோரக்கர் அல்லமதேவர் அருள் உரைப்படி அல்லமதேவரைத் தாக்கிப் பார்க்கிறார். படைக்கலம் அல்லமதேவர் மீது படாமற் போகிறது. கோரக்கர் அல்லமதேவரின் பெருமையை உணருகிறார். தம்முடைய பிழைகளைப் பொறுத்தருள வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறார். அல்லமதேவர் நீர் உண்மையை உணர வேண்டும் என்று உரைத்துக், குகேசன் என்னும் மொழிப்பொருளையும் விளக்கியருளுகிறார். பரம் பொருளாகிய அல்லமதேவர் தம்முடைய கையில் இலிங்கந் தாங்கியுள்ளமைக்குக் காரணம் யாதென்று வினவுகிறார். தாம் கையில் இலிங்கங் கொண்டதற்குக் காரணம் கூறிக் கோரக்கருக்கு அருள்புரிகிறார். கோரக்கர் உண்மையை உள்ளவாறுணர்ந்து சிறப்படைகிறார் என்னுஞ் செய்திகள் விரிவாகக் கூறபபெறுகின்றன.]

 

 

                       நூலாசிரியர் கூறல் 

 

        வசவனை முதலாய் உள்ள மாதவர் தமைய கன்று  

        பசுமதி தவழ்கு வட்டுப் பருப்பத மலையை நண்ணிக்  

        குசைசுடு மறையோர் போற்றும் கோரக்கன் எனும்பேர்ச் சித்தன்  

        இசைவுற உண்மை எந்தை இயம்பிய வாறு சொல்வாம்.                                 1 

 

 

             அல்லமர் கலியாணபுரத்தைவிட்டு நீங்குதல் 

 

        பொறிவழி செயலாது நெஞ்சம் புனிதமாம் வகைபு கன்ற  

        நெறிமுறை வழாதி யற்றி நீவிர்நின் மின்கள் மிக்க  

        அறவரை உலகிற் கண்டிங் கடைதுமென் றாண்டை யோர்கட்  

        கிறையவன் இனிதி யம்பி எழுந்துமின் எனம றைந்தான்.                                 2 

 

 

        வசவண்ணர் முதலியோர் அல்லமரைக் காணாது வருந்துதல் 

 

        கன்றின்வாய் முலைநெ கிழ்த்துக் கறவைவிட் டகன்ற தென்னச்  

        சென்றனன் ஐயன் என்று திசைதொறும் நோக்கி மாழ்கி  

        வன்றழல் இழுதுபோல மனமுகக் கண்ணீர் மல்கி  

        நின்றனர் வசவன் ஆதி நிகரில்சற் பத்தர் எல்லாம்.                                              3 

 

 

                       இதுவும் அது 

 

        காணுதல் ஒழிக நல்லார்க் காணினங் கவர்பால் நட்புப்  

        பேணுதல் ஒழிக பேணிற் பிரிவுறல் ஒழிக உற்றால்  

        மாணுயிர் உடம்பில் வாழும் வாழ்க்கை போய் ஒழிக என்னா  

        ஊணிடும் ஒருதாய் நீத்த பார்ப்பென உளங்கு லைந்தார்.                                  4 

 

 

        சித்தராமையர் சொன்னலாபுரத்தை அடைந்திருத்தல் 

 

        தண்டநா யகன்க ரத்தில் தம்பிரான் தன்னைக் கண்டு  

        பண்டுபோல் உவகை பூத்துப் பத்திசெய் தாங்கி ருந்தான்  

        தொண்டனா கியவி ராமன் சொன்னலா புரத்தில் நெஞ்சில்  

        கொண்டவா ரியனோ டேகிக் கொடுவழி தப்பி நின்றான்.                                  5 

 

 

             மற்றையோரும் தத்தம் இடங்கட்குச் செல்லல் 

 

        அல்லமன் அறைந்த மாற்றம் அகங்கொடு பிறரும் தாம்செய்  

        நல்லன புரிந்து தத்தம் இடந்தொறும் நணுகி வாழ்ந்தார்  

        தொல்லைநல் வினையால் தன்னைத் தொழப்பெறும் அடியர் தம்பால்  

        செல்லுவன் என்று சென்றோன் செயலினித் தெரிக்க லுற்றாம்.                                    6 

 

 

           அல்லமதேவர் திருப்பருப்பதத்தை அடைதல் 

 

        எரிபுரை தளிர்த ளிர்ப்ப இளமரக் காவில் தென்றல்  

        மருவுதல் போல அன்பர் மனமொடு கண்க ளிப்பத்  

        திருவுரு ஒன்ற டைந்து சென்றவக கருணை வள்ளல்  

        கருமுகில் தவழ்ப ராரைப் பருப்பதம் கண்டு சென்றான்.                                  7 

 

 

          திருப்பருப்பதத்தின் பெருமை செப்புதற்கு அரியது  

                               எனல் 

 

        அல்லமன் கண்டு செல்லும் அப்பருப் பதத்தின் மேன்மை  

        சொல்லுதல் அறியார் ஆகிச் சுரர்முனி வரர்கள் தம்முள்  

        வல்லவர் எனவி ருக்கும் அறிஞரும் மயங்கி நிற்பப்  

        புல்லறி வாண்மை கொண்டு புகலுவன் சிறிதஞ் சாமல்.                                          8 

 

 

        திருச்சைலமலை இறைவனைத் தாங்கி நிற்பதெனல் 

 

        நாடொறும் உதித்தொ டுங்கும் ஞாயிறு தனைச்சு மக்கும்  

        கோடுறு வரைகு ணக்கும் குடக்குமாய்த் திகைத்து நிற்பக்  

        கூடுதல் பிரிதல் இன்றிக் குறைமதி தலைச்சேர்ந் தின்பம்  

        தாடரு கதிரைச் சென்னி தரிப்பதக் குன்றம் மாதோ.                                             9 

 

 

           வெள்ளிமலையின் வெண்மைக்கு ஒரு காரணங்  

                             கற்பித்தல் 

 

        பொன்னிற்குன் றெழுவா யாகப் பொருப்பள விறந்த நிற்பச்  

        சென்னிக்கண் தவழ்வெண் திங்கட் சிலாதரன் குழவி வெற்புத்  

        தன்னைக்கண் டவரை என்னோர் தலைமிசை ஏற்றும் என்னென்  

        றின்னற்கட் படிந்தன் றோவவ் விறைமலை விளர்த்த தம்மா.                                     10 

 

 

         மேருமலையை இறைவன் வளைத்ததற்குக் காரணங்  

                               கூறல் 

 

        பரசிவ லிங்கம் ஒன்று பருப்பதம் போல்த ரிப்பத்  

        துரிசற அடைந்தேன் இல்லை என்னுமச் சோகத் தீயால்  

        உருகுறும் அமையத் தோடி ஒருமலை குழைத்தான் அன்றிக்  

        குருகமர் தளிரி யற்குக் குழைந்தவன் குழைக்கு மோதான்.                                       11 

 

 

          மைந்நாகமலை கடலிற் சென்று வீழ்ந்தது நாணத்தால்  

                               எனல் 

 

        பொருப்பிறை மகனான் எற்கும் பொருந்துறா தீசன் நாமம்  

        நெருப்பனை யான்சார்ந் தாங்கு நிகழ்தொடர் மொழியின் அன்றிப்  

        பருப்பதம் எனவே கூறப் படுமிது என்னும் நாணால்  

        திரைப்பொலி கடலிற் சென்று வீழ்ந்தது சிலம்பொன் றம்மா.                                      12 

 

 

         மற்ற மலைகளும் பருப்பதமலைக்கு நிகராகா தெனல் 

 

        தன்னையோர் கையால் வீழப் பிலத்திடைத் தள்ளி வந்தோன்  

        சென்னியால் வணங்கி ஏத்தும் சிலம்பினை விந்தம் ஒக்கும்  

        என்னலாம் என்ன லாமோ இணையறு பருப்ப தத்தைப்  

        பின்னுவார் திரையில் இட்டுப் பெயர்த்தபுன் மத்தோ ஒக்கும்.                                      13 

 

 

                    மலைச் சுனையின் மாண்பு 

 

        நகைமதிப் பிள்ளை போல நரைத்தகூன் கிழவன் சென்றோர்  

        முகைமலர்ச் சுனையின் மூழ்கி முருகுகொப் புளிக்கும் தோட்டுப்  

        பகைமலர்க் குழல்ம டந்தை பகர்ந்தவோர் ஆணை காத்து  

        மகிழ்மனத் தன்ப னேபோல் வந்துமேல் எழுவன் அன்றே.                                 14 

 

 

             அம்மலை பலவகை மலர்களையுடைமையால்  

                       மங்கையரை ஒக்கும் எனல் 

 

        சினைமலர் புதல்மென் போது செழும்புனற் பசுந்தாட் செந்தேன்  

        நனைமலர் தமது தண்பூ நண்ணியீர்ங் கொடிகள் குண்டுச்  

        சுனைமலர் விழிகள் போலத் தோன்றுமப் பராரைக் குன்றில்  

        புனைமலர் பலவும் காட்டும் புரிகுழல் மகளிர் போலும்.                                   15 

 

 

          அருவிநீர் ஞாயிற்றையும் குளிரச் செய்யும் எனல் 

 

        தூங்கிசை அருவி பாயத் தொளைக்கைவெண் கோட்டு ரற்கால்  

        ஈர்ங்கவுள் நெடுநல் யானை யேற்பவெந் தழல லாமல்  

        தேங்குதண் புனல்மேல் நோக்கா தென்பது தீரச் சென்று  

        பூங்கதிர் பனிவெண் திங்கள் போன்மெனத் திவலை செய்யும்.                                     16 

 

 

               அம்மலையில் யாழோசைச் சிறப்பு 

 

        விங்சையர் உளர்ந ரம்பின் வீணையாழ் எழுமின் னோசை  

        குஞ்சரம் அனைய வென்றிக் குன்றவர் புறத்தில் என்றும்  

        தஞ்செவி மடுத்துக் கேட்பார் தனிநிலை யோக முற்றார்  

        அஞ்செவி நிறைய உள்ளே அரியயாழ் ஓசை கேட்பார்.                                   17 

 

 

             அம்மலை பொன்முடிபோல் விளங்குதல் 

 

        பீடுறு கருவி னோடு பெயரிய வில்லின் உம்பர்  

        ஓறும் பசும்பொ னாற்செய் தோங்குறு சிகரம் ஒன்று  

        நீடுறு சிலாத ரன்றன் நெடுந்தவப் பிள்ளைக் குன்றில்  

        மோடுறு முடியின் மீது கவிழ்த்தபொன் முடியை ஒக்கும்.                                18 

 

 

        ஒளிமரத்தின் (சோதி விருட்சம்) ஒளியைப் பறவைகள்  

                         மாறாகக் கருதுதல் 

 

        செங்கதி ரவனெ ழுந்த திவாவிடைக் குடம்பை தெற்றிப்  

        பொங்கொளி மரத்திற் சீர்சால் புள்ளினம் பொறையு யிர்த்துக்  

        கங்குலின் அடைகி டப்பக் கருதிவந் ததனைக் கண்டு  

        வெங்கனல் கொளுந்திற் றென்று மீமிசைச் சுழின்றி ரங்கும்.                                      19 

 

 

                       மூங்கில்களின் சிறப்பு 

 

        நறுமலர்க் குழல்வெண் முத்த நகைமலை மடந்தை மிக்க  

        அறம்வளர்ப் பதற்கு நெற்சிற் றளவிரு நாழி என்று  

        கறைமிடற்  றிறைய ளப்ப ஒருபெருங் கருவி தானிவ்  

        வெறிமலர்க் குடுமிக் குன்றின் வேய்களுள் ஒன்றிற் பெற்றாள்.                                    20 

 

 

                    மரங்களின் வியத்தகு மாண்பு 

 

        நெடியவன் குறுகி அப்பால் நின்றுகை தொழுமவ் வெற்பின்  

        மிடியுடை ஒருவன் விற்கும் விறகினைக் குறித்துச் சென்று  

        வடியுடை நவியங் கொண்டோர் மரத்தினைத் துணித்த லோடும்  

        படியுறும் பசும்பொன் ஆகும் பரிசுகொண் டுவந்து செல்வான்.                                     21 

 

 

                    நண்டு இராசிவரை மண்டிய மரங்கள் 

 

        கொண்டல்கள் முழவின் ஆர்க்குங் கோதைவெள் ளருவி வெற்பில்  

        வண்டுபாண் முரன்று மூசி மலர்திளைத் தூறு செந்தேன்  

        உண்டுகண் துயில்பூங் கொம்பர் உயர்மரத் திவர்ந்தி ராசி  

        ஞெண்டுகண் டஞ்சி மந்தி ஞெரேலென இழியும் அன்றே.                                  22 

 

 

                       பிடியின் பேதைமை ஊடல் 

 

        தளிர்க்குள கிளைத்தேன் தோய்த்துத் தனதுவாய் கொடுக்கும் செய்கை  

        பளிக்கறை அதனுட கண்டு பரிந்துவே றொன்றி னுக்கிங்  

        களித்ததென் றுளம யங்கி அரும்பிடி ஒருகூர்ங் கோட்டுக்  

        களிற்றினை முனிந்து செல்லும் கம்பலை உடைத்தக் குன்றம்.                                    23 

 

 

         குறத்தி, திங்களின் மானைப் பிடித்துத் தரக் குறவனை  

                               வேண்டல் 

 

        நண்ணுறு மதியின் மானைப் பிடித்துநீ நல்கு கென்னா  

        ஒண்ணுதல் மடந்தை வேண்ட ஒருகுற மகன்கேட் டன்று  

        பெண்ணுரை கொண்டி ராமன் பிடிப்பதற் கெண்ணு மாபோல்  

        எண்ணிலன் இதற்கென் செய்வேன் என்றுளம் நைந்து நிற்பான்.                                   24 

 

 

           அருவிகள், மலை அழுங் கண்ணீரைப்போல்  

                          தோன்றுதல் 

 

        மேருமந் தரமே ஆதி வெற்பெலாம் எனைவெ றுப்பச்  

        சாருமென் மாட்டே முக்கண் தம்பிரான் எனநி னைந்து  

        சேருமொன் னலரை அஞ்சிச் சிலம்பழு மாறு போல  

        ஆரவெள் ளருவி பாயும் அழகினை உடைத்து மாதோ.                                   25 

 

 

          அல்லமதேவர் கோரக்கர் இருக்குமிடத்தை அடைதல் 

 

        இனையன வளமி குத்த எம்திருச் சயிலம் தன்னை  

        அனையினும் இனியன் எங்கோன் அல்லமன் சென்று நண்ணித்  

        தனியுடல் சித்தி பெற்றுத் தருக்குமக் கோரக் கன்தான்  

        நளியுள மகிழ்ந்தி ருக்கு நல்லிடந் தனைய டைந்தான்.                                           26 

 

 

         கோரக்கர், அல்லமரை ஓர் இருக்கையில் இருத்திக்  

                               கூறல் 

 

        அத்தனேர் வருதல் கண்ணுற் றப்பெருஞ் சித்தன் தன்னோ  

        டொத்தவோர் சித்த னாக உன்னுபு தனைவி யந்து  

        நித்தனாண் மலர்த்தாள் தாழா நின்றுகை குவித்து ஞான  

        சித்தநீ வருக என்றோர் தவிசிடைச் சேர்த்திச் சொல்வான்.                                        27 

 

 

                          (வேறு)

 

             கோரக்கர், அல்லமதேவரைப் போற்றுதல் 

 

        இரவி வானவன் எழுந்ததும் இன்றெனக் கதாஅன்று  

        தெரிவ ஆயின கண்களும் இன்றுநின் சிறந்த  

        வரவு நானெதிர் இன்றுபெற் றமையினின் வரவு  

        பொருளில் மாதவம் புரிந்திடார்க் கெளியதோ புகலின்.                                    28  

 

 

         அடியார்களைப் போற்றாதவன் இறைவனையும்  

                       அடையான் எனல் 

 

        மதலை ஆகிய நற்குணம் சார்ந்துநல் வாய்மை  

        சிதைவி லாவடி யாரினம் சேர்ந்திடா தவன்கண்  

        நுதலி னானையும் சேந்திடான் என்ப எந்நூலும்  

        முதலி லான்பெறும் ஊதியம் யாதுகொல் மொழியில்.                                            29 

 

 

         கோரக்கர், அல்லமரை நீ யார் என்று கேட்டல் 

 

        ஒருவி ருந்தினர்க் குரைசெயும் முகமனோ டொப்பக்  

        குருப ரன்தனக் கினையன இன்மொழி கூறி  

        வருபெ ருந்தகை யார்கொல்நீ உரையென வாழ்த்தி  

        அருளின் அங்கடல் தனைவினாய் நின்றனன் அன்றே.                                            30 

 

 

        அல்லமர், மெய்யறிவாளியே என்னை யுணர்வான்  

                               எனல் 

 

        செறிந்த மூலவாங் காரத்தின் வேறெனத் தீர்ந்திட்  

        டிறந்தி டாதுதற் கண்டவன் என்னையும் காண்பான்  

        மறிந்து போமுடல் மானியை உரைப்பதென் மதித்தென்  

        றறிந்த ஞானிகள் வேறற அறிபவன் அறைந்தான்.                                               31 

 

 

          குளிகைகயால் உடலை உறுதிப்படுத்தினோன்  

                   என்றும் அழியான் எனல் 

 

        ஆதி நாதன தருளினாற் குளிகையா திகளான்  

        மேதை ஆமுடல் சித்திபெற் றவனென் றும்விளியான்  

        ஆத லாலது பெறாதவன் அழியுமென் றறைந்தான்  

        பூத மேனியே தானெனப் பொருந்துபுந் தியினான்.                                        32 

 

 

            அல்லமர் கோரக்கரைப் பார்த்து மொழிதல் 

 

        உடம்பு வாழ்தல்தான் வாழ்தலும் ஊன்பொதிந் தியற்றும்  

        உடம்பு சாதல்தான் சாதலும் ஆகவே உரைத்தாய்  

        உடம்பு தானுயிர் என்னநீ உன்னினை போலும்  

        உடம்பு வேறறி யாவுல காயதன் ஒத்து.                                                 33 

 

 

           உடம்பு நீ அல்லை என்று அருளுரை வழங்குதல் 

 

        யாக்கை தானெனில் எனதுடம் பென்பதிங் கென்னை  

        போக்கும் ஆடைபொன் முதலிய பொருளுளொன் றெனதென்  

        றாக்கு வார்தமில் அதனையான் என்பவர் ஐய  

        பார்க்கில் யாருளர் பகர்தியென் றல்லமன் பகர.                                          34 

 

 

          தான் எனப்படுவது எது? எனக் கோரக்கர்  

                       கேட்டல் 

 

        யானி னைந்தனன் ஓடினன் என்றியம் புதலால்  

        தானெ னப்படு கின்றதே தெனக்கது தன்னை  

        நீதி கழ்த்துக என்றுகோ ரக்கனின் றியம்ப  

        ஞான நற்குரு பரனிது நவின்றனன் நயந்து.                                                     35 

 

 

               நீ கூறியது கற்பனை எனல் 

 

        நானி னைந்தனன் எனல்கர ணத்தினை நண்ணும்  

        ஆன தன்மையால் உடல்பொறி கரணங்கள் அனைத்தும்  

        நானெ னும்படி வரும்வரத் தான்ப்ல அதனால்  

        நீந வின்றதத் தியாசமென் றறிகென நிகழ்த்த.                                                   36 

 

 

         உடலிலுள்ள உயிரன்றி வேறுண்டோ எனல் 

 

        ஒழியும் என்னுயிர் எனுமிடத் தவ்வுயிர் ஒழிய  

        மொழிய வேறுமோர் உயிருள தோஇதை மொழிநீ  

        பழியில் நல்லருட் குன்றமே என்றவன் பகரச்  

        செழிய மென்மலர்ப் பதத்தெமை ஆள்பவன் செப்பும்.                                            37 

 

 

        உயிர் என்னும் பெயர் ஆன்ம வடிவிற்கு ஆகுபெயர்  

                               எனல் 

 

        உயிரெ னும்பெயர் இயங்குகாற் கியற்பெயர் உரைப்பின்  

        அயலு றுந்தனக் கப்பெயர் ஆகுபேர் ஆமென்  

        றியலு ணர்ந்தவர் இயம்புவர் என்றெமக் கிறைவன்  

        மயல றும்படி உணர்ந்திஃ துரைத்தனன் மன்னோ.                                        38 

 

 

              நீ உடலை நம்பிக் கெட்டாய் எனல் 

 

        தன்னைச் சச்சிதா னந்தமென் றருமறை சாற்ற  

        மின்னிற் கெட்டிடும் தசைநிணம் என்புதோல் மேய்ந்த  

        இன்னற் பொய்க்குடில் ஆகிய உடம்பினை யானென்  

        றுன்னிக் கெட்டனை என்கொனீ என்றினும் இயம்பும்.                                             39 

 

 

            வீடுபேற்றை விரும்புவோன் உடலை  

                 வெறுக்கவேண்டும் எனல் 

 

        வெருவு றப்படும் பிறவியை ஒழித்துமெய் வீடு  

        மருவு தற்குளம் வைத்தவன் இம்மல வடிவைத்  

        தெருவி னிற்புனி தம்படா ஒன்றனைத் தீண்டி  

        அருவ ருப்பவன் போலரு வருத்ததை அகற்றும்.                                         40 

 

 

               உடம்பொடு உறவு கூடாதெனல் 

 

        மருந்து கொண்டுநோய் தீர்ப்பவர் போற்சிவ மருவி  

        இருந்த இவ்வுடம் பினைப்பெரி யவர்விட எண்ண  

        மருந்து கொண்டுநோ யோடுற மதிப்பவன் போல  

        இருந்த இவ்வுடம் போடுற எண்ணினை என்னோ.                                               41 

 

 

              தோன்றிய உடல் அழிந்துபோம் எனல் 

 

        பிறந்த ஆகமொன் றிறந்திடாப் பெருமையும் உடைத்தோ  

        எறிந்த வான்சிலை வீழ்ந்திடா திருப்பதிங் கில  

        செறிந்த காரியம் என்பதென் றாயினுஞ் சிதையும்  

        இறந்தி டாதுகா ரணமெனப் படுமதே யென்றும்.                                          42 

 

 

        உடல் அழிவது; ஆதலால் நீ வீடுவேறு விரும்புக  

                               எனல் 

 

        மருந்தி னாலுடல் நித்தமாம்என்று நீ வகுத்த  

        திருந்து வாழுநாட் பன்மைகொண் டன்றிவே றில்லை  

        பொருந்தி நீயுடல் அழிந்திடா தென்பது பொருந்தா  

        தருந்த வாவினி வீடுவேண் டென்றனன் ஐயன்.                                          43 

 

 

            கோரக்கர் என் உடல் அழியாது எனல் 

 

        ஏது சொல்லினும் என்னுடல் அழிவுறா தென்றும்  

        வாது செய்வதென் காட்சியால் உணர்த்துவன் வலியின்  

        றாதி நாதன தருளினால் என்றுகோ ரக்கன்  

        தீதி லாவருள் வாரியோ டுரைத்திது செய்யும்.                                           44 

 

 

          கோரக்கர், அல்லமரிடம் வாள் கொடுத்துத் தன்  

               உடல் வன்மையை ஆராயக் கூறல் 

 

        இன்னி யங்களின் முழங்குவெள் ளருவிவெற் பெறிந்த  

        மன்ன வன்படை அன்னதோர் ஒளிரயில் வாய்வாள்  

        தன்னை எம்பிரான் கைக்கொடுத் தனையனென் தன்னை  

        நின்னி ரும்புய வலியினால் எறிகென நிகழ்த்தி.                                          45 

 

 

          ஈச்சிறகளவு தோல் அறுபடினும் நான் சித்தன்  

                       அல்லன் எனல் 

 

        அத்த ஈச்சிற கன்னதோர் தோலறு மேனும்  

        சித்தன் நானலேன் என்றுமுன் நின்றனன் செருக்கி  

        நித்தன் யானிவன் கருதிய தேசெய்து நெஞ்சின்  

        வைத்த மாதருக் கொழிப்பலென் றருளுளம் வலித்தான்.                                  46 

 

 

          அல்லமர், கோரக்கர்மேல் வாளினை வீசல் 

 

        வாங்கு வாளினை மின்னென விதிர்த்தருள் மாரி  

        ஓங்கி வானுரு மேறென அதிர்த்தவன் உடம்பில்  

        தாங்க மால்வரை மீதெறிந் தானெனத் தாக்க  

        ஆங்கொர் ஓதைதிண் என்றுமேல் எழுந்ததை அன்றே.                                    47 

 

 

           அவ்வொலி கேட்டபோது உமையம்மையும்  

                          அஞ்சுதல் 

 

        திருப்ப ருப்பதம் நடுங்கிய தவ்விறற் சீற்றத்  

        தரக்கன் உற்றிது தனையுமின் றெடுத்தனன் ஆமென்  

        றுரைப்ப தற்ரி தாகிய அச்சமுற் றோடிப்  

        பொருப்பி றைக்கொரு மகளரன் புயங்கள்புல் லினளால்.                                   48 

 

 

         உலகில் யாவரும் அவ்வொலியால் அஞ்சுதல் 

 

        விஞ்சை மாதர்தம் யாழொலி கேட்டமா வேடர்  

        அஞ்சில் ஓதியர் பதலைகேட் டயரசு ணம்போல்  

        நெஞ்சு மாழ்கினர் புள்ளினம் எழுந்தகால் நிமிர்த்துத்  

        துஞ்சு மாவெழுந் தோடின வான்துளி துளித்த.                                           49 

 

 

           கோரக்கர் செருக்கை அல்லமர் அறிதல் 

 

        இன்ன வாறொலி எழவுடன் ஊறின்றி இருப்ப  

        முன்ன மேவிய செருக்கினும் மும்மடங் கெய்தி  

        என்னை நேர்பவர் இலையென அவனுளத் தெண்ணித்  

        தன்னை யேநனி வியந்தமை அறிந்தனன் தலைவன்.                                            50 

 

 

           அல்லமர் கோரக்கரிடம் வாளொன்று கொடுத்துச்  

                          சொல்லல் 

 

        ஒலியெ ழுந்திட இன்னணம் நினதுபே ருடம்பு  

        வலிய டைந்தநின் ஒப்பவர் இலைவளி வழங்கும்  

        உலகில் என்றுகை குலைத்திள நகைபுரிந் தொருகைம்  

        மலர்பொ ருந்துவாள் அவன்கையிற் கொடுத்திது வகுத்தான்.                                      51 

 

 

          அல்லமரைக் கோரக்கர் வாளால் வெட்டுதல் 

 

        வாங்கும் வாளினால் நின்வலி யொடுநுமர் வலியும்  

        தாங்கி என்னைநீ எறிந்துகாண் என்றுநம் தலைவன்  

        ஆங்கு நின்றனன் சித்தனும் அஞ்சிலன் ஆகி  

        ஓங்கி வாளினால் எறிந்தனன் ஒப்பிலான் உருவை.                                              52 

 

 

             அல்லமதேவர்மீது வாள் படாது போதல் 

 

        அணும யங்குமின் நுழைகதிர் எறிந்தவா ளாக  

        இணைம யங்குமெய்ப் படாதுவாள் வறிதுபோ யிற்று  

        பணைம யங்குதோள் மாயைதன் படாமுலை படாத  

        மணம யங்குதண் சோதிமேல் வாள்பட வற்றோ.                                         53 

 

 

                               (வேறு)

 

                 கோரக்கர் அல்லமதேவரைப் பணிந்து  

                               கூறுதல் 

         

               வானெறிந்து கையிளைத்த கோரக்க  

                       நாதன்மிக மனம்வி யந்து  

               நானிறைஞ்சும் பரஞ்சுடரே இவனென்று  

                       மெய்விதிர்ப்ப நடுந டுங்கித்  

               தானடைந்த செருக்கொழிந்து தலையன்பின்  

                       நெறிநடப்பத் தலைப்பட் டெங்கோன்  

               தேனடைந்த செழுங்கமலத் திருவடியில்  

                       வீழ்ந்தெழுந்து செப்பு கின்றான்.                                         54 

 

 

                  தன் பிழையைப் பொறுத்தருளுமாறு  

                            மீண்டுந் தாழ்தல் 

 

               நின்னையறி யாதுமது உண்டவன்போல்  

                       மனஞ்செருக்கி நினைந்த பாவம்  

               பின்னரெதிர் நின்றுநின துரைமறுத்துப்  

                       பித்தனெனப் பிதற்றுந் தீமை  

               இன்னுயிர்கொன் றுடல்கவரும் மறவன்போற்  

                       செய்தபிழை எல்லாம் எந்தாய்  

               மன்னியநின் பேரருளால் தீர்த்தெனையாட்  

                       கோடியென மறித்தும் தாழ்ந்தான்.                                              55 

 

 

                 நீ உண்மை உணர வேண்டும் என்று  

                          அல்லமர் கூறுதல் 

 

               செய்தபிழை போகவினிப் பிழைசெய்யா  

                       துடம்புநசை தீர்ந்து நின்றன்  

               மெய்தெரியின் எனக்குநீ இனியனெனப்  

                       பெருங்கருணை வெள்ளங் கூற  

               உய்தலிலென் பிழைபொறுத்திட் டடித்தரிய  

                       வானமுதம் ஊட்டு கின்றாய்  

               கைதருசெம் மணியனையாய் யான்செய்வ  

                       தேதுளது கைம்மா றென்று.                                            56 

 

 

                  கோரக்கர் அருள்புரிய வேண்டுதல் 

 

               முற்றுமருள் செய்துநீ யானறிய  

                       வேண்டுபொருள் மொழிதி யென்று  

               பற்றுடலம் நசைதீர்ந்து கோரக்கன்  

                       நிற்பஅவன் பருவங் கண்டு  

               கற்றறியும் அறிவினால் அறிவரிய  

                       பரஞ்சோதி கருணை கொள்ளப்  

               பெற்றதிரு வுளமகிழ்வுற் றன்பொடுகேண்  

                       மதியென்னாப் பேச லுற்றான்.                                          57 

 

 

                  கோரக்கர், குகேசன் என்னும் மொழிப்  

                          பொருளை வினவல் 

 

               இருந்தபடி குகேசனை நீ அறிவையெனின்  

                       நின்பிறவி எனுநோய் தீர்ந்து  

               பொருந்துறுவை பேரின்பம் என்றமலன்  

                       கூறஅவற் போற்றி எந்தாய்  

               பரிந்தருள்செய் குகேசனெனும் மொழிப்பொருளே  

                       ததுகூறப் படுவான் யாவன்  

               தெரிந்துணர அருள் செய்வாய் என்றுதொழ  

                       எம்பெருமான் செப்புகின்றான்.                                          58 

 

 

                    அல்லமர், குகேசன் என்னும்  

                   மொழிப்பொருளை விளக்குதல் 

 

               குகையிதயம் அதன் கணமர் இறையீசன்  

                       என்றுபொருள் குறித்துக் கொண்மோ  

               நிகழனைய குகேசமொழி உடையன் யான்  

                       தானெனவே நிமலன் கூற  

               அகமகிழ முகமலர்ந்து சித்தனறை  

                       குவனீயே ஆகிலுன்றன்  

               முகையவிழ்மென் மலர்க்கரத்திற் சிவலிங்கங்  

                       கொண்ட தென்கொல் மொழிதி என்றான்.                                59 

 

 

                  கையில் சிவக்குறி கொண்டமைக்குக்  

                            காரணம் கூறுதல் 

 

               பிறந்தபயன் பெறவுலகர் எனைக்கண்டு  

                       கொண்டுமனம் பிறழ்தல் இன்றிச்  

               சிறந்தசிவ லிங்கமலர்க் கரங்ஙஙஙண்டு  

                       பூசனையாம் செய்ய வேண்டி  

               நிறைந்தவென துருவாகும் இக்குறிகைக்  

                       கொண்டனன்யான் நீங்கா தென்றும்  

               அறிந்துதெளி குதிமனமென் றருள்செய்தெங்  

                       குருதேவன் அறைய லுற்றான்.                                         60 

 

 

                  பிறர்க்கு நன்னெறி கூறுவோன்  

                  அவ்வழியில் நடக்கவேண்டும் 

 

               போதகனா கியகுரவன் எஞ்ஞான்றும்  

                       நற்கருமம் புரிக என்று  

               வேதமுத லாகியநூல் முழுதுமொருங்  

                       கொருவந்தம் விதித்த லாலே  

               சாரகனா கியபருவ மாணாக்கன்  

                       பாசவலி தணிக்க வல்லான்  

               மேதினிமேல் உடலொடுநற் செயல்விடுவ  

                       தன்றியிடை விடலா காதால்.                                           61 

 

 

                    அல்லமர் அருளுரை வழங்கல் 

 

               என்றுதன தியலுணர்த்தி உடம்புநான்  

                       என்றிருந்த இயல்பு போல  

               நின்றவெனை உணர்ந்துநீ சோகம்பா  

                       வனைகொண்டு நிற்பை யாயில்  

               பொன்றலுறு விடங்கலுழன் தனைநினைப்பப்  

                       போதல்போற் போம விச்சை  

               நன்றறிதி என அறிவித் தனனெங்கோன்  

                       கோரக்க நாதன் தன்னை.                                                      62 

 

 

                  கோரக்கர் உண்மையை உணர்ந்து  

                           சிறப்படைதல் 

 

               ஞானகுரு பரனருளால் தனக்குரைத்த  

                       மொழிப்பொருளை நன்ற றிந்திட்  

               டூனைவடி வென்பதுவிட் டுண்மையலா  

                       அனைத்தையுநீத் துண்மை கண்டு  

               தானதனை அடைந்துதான் அதுவென்னும்  

                       மருளகன்று தானே ஆகி  

               வானவரும் அறிவரிய பெரும்புகழ்கோ  

                       ரக்கனவண் மன்னி னானால்.                                           63 

 

 

பத்தொன்பதாவது - கோரக்கர் கதி முடிந்தது

 

கதி 19 - க்குச் செய்யுள் - 946

 


 

20. முனிவரர் கதி

[இக் கதிக்கண், அல்லமதேவர் வடநாடு நோக்கிச் செல்லுகிறார். நல்லவர் பொல்லாதவர் அனைவருக்கும் அருள்புரிந்துகொண்டு செல்லுகிறார். ஒரு காட்டிற் செல்லும்போது வேடன் ஒருவன் எதிர்ப்படுகிறான். அவனுக்கு அருள்புரிந்து மேலே செல்லுகிறார். வழியில் ஒரு தவக்காடு காணப்பெறுகிறது. அக்காட்டில் முனிவரர் பலர், யோகம், வேள்வி, இறைவழிபாடு, மறையோதுதல் முதலியவைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அல்லமதேவர் அம்முனிவரர்கட்கு அருள்புரிய எண்ணுகிறார். மெய்யறிவு பெற்றாலன்றி வீடுபேறு கைகூடாதென்றுரைத்து அருளுரை வழங்கி யருளுகின்றார். முனிவர்கள் அல்லமதேவர் அருளிய நெறியைப் பின்பற்றிச் சிறப்படைகிறார்கள் என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]

 

 

                       நூலாசிரியர் கூறல் 

 

               பனிவரை மகளொடு பவள வார்சடைத்  

               தனிவரை அமர்திருச் சயில நீங்கியே  

               துனிவரை அல்லமன் சுருதி மெய்ப்பொருள்  

               முனிவரை உணர்த்திய முறை¬ கூறுவாம்.                                              1 

 

 

                  அல்லமர் வடநாட்டு முனிவர்களுக்கு  

                        அருள்புரியச் செல்லுதல் 

 

               அருந்தவம் முயன்றகோ ரக்கற் கம்முறை  

               விரிந்தறி வுருவமாம் மெய்ம்மைத் தன்மையைப்  

               பரிந்தருள் அமலனப் பாலும் உத்தரம்  

               பொருந்துநர் தமக்கருள் புரியப் போயினான்.                                             2 

 

 

                    அல்லமர், நல்லார் பொல்லார்  

                      யாவர்க்கும் அருள்புரிதல் 

 

               நல்லன தீயன நாடு றாதுகொள்  

               வல்லழல் எனவருள் மயையெ னப்படும்  

               அல்லமன் எதிர்ந்தவர் அறமு ளாரறம்  

               இல்லவர் எனாதறி வியற்றி னானரோ.                                          3 

 

 

               அல்லமதேவர் ஒரு காட்டிற் செல்லுதல் 

 

               யாவரும் தனதருட் கேற்று ளாரெனப்  

               பாவவன் தளையறப் பரிந்து நன்னெறி  

               மேவவந் தருள்புரி விமலன் ஆயிடை  

               மாவழங் குறுமொரு வனத்திற் போயினான்.                                             4 

 

 

                அக்காட்டில் ஒரு வேடன் எதிர்ப்படுதல் 

 

               அக்கொடு வனத்தெதிர் அன்பென் கின்றதுள்  

               புக்கறி கிலாவொரு புளினன் கூன்புறக்  

               கொக்கென நாடொறும் கொலைகுறித்தவன்  

               கைக்கொடு மரமொடு கடிது தோன்றினான்.                                              5 

 

 

               அல்லமதேவர் அவ்வேடனுக்கு அருள்செய்ய  

                           எண்ணுதல் 

 

               அன்பனாய்க் கண்ணிடந் தப்பும் வேடனுக்  

               கின்பமீ குதல்புகழ்க் கேற்ற தன்றுநான்  

               வன்பனாய்த் திரியுமிம் மறவற் காப்பலென்  

               றென்பொலா நெறிமனம் இரங்கிற் றென்றனன்.                                  6 

 

 

                 அவ்வேடன்மீது அல்லமதேவர் அருட்கண்  

                               வைத்தல் 

 

               நல்லறி வவனுள நடுதற் கொப்பிலா  

               அல்லமன் வினையற அருட்கண் வைத்தனன்  

               கொல்லையின் விதையிடக் கொழுப்புக் காமுளி  

               புல்லெரி வுறவழற் போகட் டென்னவே.                                         7 

 

 

                   வேடன், அல்லமரை அருள்புரிய  

                             வேண்டுதல் 

 

               மேவுதீ வினையெலாம் விளிந்து தூயனாய்ப்  

               பாவியேன் உய்வகை பகர்தி என்றனன்  

               மாவலால் வழங்குறா வனத்தில் வேட்டுவன்  

               யாவர்தாம் இறையருள் எய்தின் உய்ந்திடார்.                                            8 

 

 

                 ஐம்புலன்களையும் அடக்கவேண்டும்  

                               எனல் 

 

               அறிவெனும் வேலினால் ஐம்பு லன்களாம்  

               மறியினம் அருளெனும் வலையைத் தப்புறா  

               தெறிகுவை எனினுனக் கில்லை துன்பெனா  

               நெறியினை வழுவற நிமலன் கூறினான்.                                               9 

 

 

                என்னையடையின் திருமாலும் நின்னைப்  

                           பணிவன் எனல் 

 

               அறிவொடு மனஞ்சிலை அம்ப தாகநான்  

               குறியென எய்வையேற் குமர நின்றனைப்  

               பொறிமதில் இலங்கைமுன் புரந்து ளான்தலை  

               பறிபட எய்தவன் பணியும் என்றுமே.                                           10 

 

 

                  தவக்காடு ஒன்று காணப்பெறுதல் 

 

               இப்பரி செறுழ்வலி எயினன் உய்வகை  

               செப்பிநல் நிலையருள் செய்தி ருத்தியே  

               அப்புறம் அருளுடை அமலன் போம்பொழு  

               தொப்பறு தவவனம் ஒன்று தோன்றிற்றே.                                               11 

 

               கோடமை கரிகளும் கொடும டங்கலும்  

               பாடமை பகைதவிர் பரிசி னானதற்  

               காடர வொடுமதி அமர்பி ரான்சடைக்  

               காடல துவமையால் கண்ட தில்லையே.                                        12 

 

 

               அக்காட்டில் விலங்குகள் முனிவர்கட்குப்  

                          பணிவிடை புரிதல் 

 

               பெயர்க்குறு கால்கள்கை யாகப் பெற்றவும்  

               உயிர்க்குறு நாசிகை யாக உள்ளவும்  

               மயக்கறு தீயினை வளர்த்து வான்புனல்  

               பயக்குறு முனிவரர் பணிகள் செய்யுமால்.                                               13 

 

 

                   அக்காட்டகத் துறையும் முனிவரர்  

                               தொழில் 

 

               மறைபல ஓதுநர் மகம்வ ளர்க்குநர்  

               கறைமிட றுடையநங் கடவுட் பூசனை  

               முறைவழி புரிகுநர் மூச்ச வித்தொரு  

               தறியென வசைவற விருக்குந் தன்மையார்.                                             14 

 

 

                               (வேறு)

 

                 அல்லமதேவர் அம்முனிவர்கட்கு  

                     அருள்புரிய எண்ணுதல் 

 

               ஆயி ருக்கும் அருந்தவர் தங்கள்பால்  

               போயி வர்க்குறு போதனை யாற்பவ  

               நோய கற்றுவல் என்று நுவன்றனன் 

               தாயெ னக்கொரு தானெனும் அல்லமன்.                                        15 

 

 

                    மெய்யறிவாலன்றி மேன்மை  

                         உண்டாகாது எனல் 

 

               நோற்று நோன்புடன் நொந்து வருந்துவீர்  

               ஆற்று நீர்மகம் ஆதி வினையினால்  

               மாற்று மாயை மலஞ்செறு விற்படு  

               சேற்றி னாற்கழுஞ் சேறு நிகர்க்குமால்.                                          16 

 

 

                    வேள்வியால் வீடுபேறு  

                       கிடைக்காதெனல் 

 

               ஞானம் கொண்டு நணுகும் சிவபதம்  

               ஊனம் கொண்ட கருமத் துறுவது  

               வானம் கொண்டு வளர்த்தல் புகையநு  

               மானம் கொண்டு வளர்த்தலை ஒக்குமால்.                                              17 

 

 

                ஐம்புலன்களையும் அழித்தலாலே  

                   வீடுபேறு உண்டாமெனல் 

 

               குடுமி யங்கிரி ஒப்பக் குவித்தபுல்  

               சுடுதல் கொண்டு பிறவி சுடப்படா  

               தடுபு லன்கள் அறிவெனும் அங்கியில்  

               சுடுதல் கொண்டு பிறவி சுடப்படும்.                                             18 

 

 

               மெய்யறிவாம் வேள்வி புரிபவனே  

                   வீடுபேறடைவான் எனல் 

 

               போதம் ஆகும் புனிதத் தழலினுள்  

               பேத பாவனைப் பேரவி பெய்வனேல்  

               ஆதி சோவுடை மாசி அவனென  

               வேதம் யாவும் விளங்க விளம்புமே.                                            19 

 

 

                பேரறிஞர்கள் மெய்யறிவு பெறுவர் எனல் 

 

               மறையின் உள்ள கரும மனவினை  

               வறியர் கொள்ளுதல் போல மதியறும்  

               சிறியர் கொள்வர் தெளிதத் துவமசி  

               அறிஞர் கொள்வர் அணிகொளும் செல்வர்போல்.                                 20 

 

 

                  முனிவர்கள் அல்லமதேவரை  

                     வணங்கி வாழ்த்துதல் 

 

               என்று கூற இருந்தவர் அன்பொடு  

               நின்று ஞான நெடுந்தகை தாள்மிசை  

               இன்று நீவர எத்தவம் செய்தனம்  

               மன்ற யாமென வாழ்த்தி வணங்கினார்.                                         21 

 

 

                முனிவர்கள் மோகம் நீங்கப்பெறுதல் 

 

               மாயை தோன்றிய ஞான்று மனத்தெழும்  

               மூய மோகம் முடிந்திடச் செம்மலர்  

               வாயி னால்துரு வாசன் சொலப்படும்  

               தூய னாமவன் என்று துதித்தனர்.                                                      22 

 

 

               அல்லமர், முனிவர்கள் சிறப்படையச்  

                             செய்தல் 

 

               இன்ன வாறிங் கிருந்தவர் இன்புற  

               மன்னு ஞான மறைமொழி கூறியே  

               தன்னை மேவும் தலைமை புரிந்தனன்  

               அன்னை போலுநம் அல்லம தேவனே.                                          23 

 

 

இருபதாவது - முனிவரர் கதி முடிந்தது

 

கதி 20 - க்குச் செய்யுள் - 969

 


 

21. சூனிய சிங்காதன கதி

[இக் கதிக்கண், வசவதேவர் அல்லமதேவரை அறியும் பொருட்டுச் சூனிய அரியணை ஒன்று தேவரும் வியக்கத்தக்க முறையிற் செய்து வைத்துக்கொண்டு, அடியார்கள் திருக்கூட்டத்தோடு அல்லமதேவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்குஞ் செய்தி கூறப்பெறுகினறது.]

 

 

                               நூலாசிரியர் கூறல் 

 

               அல்லமனை அறிதற்கோர் அறிகருவி ஆகவுனிச்  

               சொல்லரிய எழுநிலைப்பொற் சூனியசிங் காதனமொன்  

               றில்லையெனல் இல்லையெனும் எங்கள்குரு வசவேசன்  

               மல்லலுற இனிதாற்றி வைகுமுறை வகுத்துரைப்பாம்.                                    1 

 

 

                     வசவதேவர் மனத்தை அடக்க முயலல் 

 

               ஒடுக்குமனம் வீட்டுநெறிக் கொருதுணையா கும்புறத்து  

               நடக்கு மனம் நிரயவழி நடப்பதற்குத் துணையாமென்  

               றிடக்கர்மனம் அடக்கும்வகை எம்பிரான் இயம்பியவா  

               றடக்கமன முறுநெறியின் அருணந்தி தலைப்பட்டான்.                                    2 

 

 

                   வசவதேவர் மனத்தை அடக்கி ஓவியம்போல்  

                               அசைவற்றிருத்தல் 

 

               நில்லாது போமனத்தைக் கால்பிடித்து நிறுத்தியே  

               வில்லாரும் மதியமுதம் விருந்திட்டு நட்புறீஇப்  

               பொல்லாத புலனுகரப் புறத்துநிலை தடுமாறிச்  

               செல்லாமல் உடல்கொண்டு சித்திரமொத் திருந்தனனால்.                          3 

 

 

                 அல்லமதேவர் வரவை எதிர்ப்பார்த்திருத்தல் 

 

               நின்றமனங் கொண்டுதான் நித்தமாந் தனைஉணர்த்த  

               என்றுவரு ஞானகுரு எனவெழுந்து வளர்காதல்  

               ஒன்றுமொழி வறநிற்ப உவப்பதுல கிற்பொருள்வே  

               றின்றியருள் நந்திபிரான் எந்தைவர வினைநோக்கி.                                       4 

 

 

                  அல்லமதேவரையறியச் சூழ்ச்சி யெண்ணுதல் 

 

               எவ்வுருவி னொடுவருமோ எம்பிரான் தெளியகிலேன்  

               செவ்வியவோர் தவிசமைத்துச் சேர்ந்ததன்மேல் இருப்பவனை  

               அவ்வியமில் அல்லமனென் றறிவன்யான் என்றுதுணிந்  

               திவ்வுலகம் உளம்வியப்ப இதுசெய்தான் அருள்நந்தி.                                     5 

 

 

                               (வேறு)

 

               சூனிய அரியணை ஒன்று செய்வித்தல் 

         

        ஆதியா தாரம் ஆதி அடுக்கெனப் பல்நி றத்த  

        சோதியேழ் நிலைகள் ஓங்கச் சூனிய பீடம் ஒன்று  

        போதினோன் உளம்வி யப்பப் பொன்மணி பளிங்கு கொண்டு  

        சாதிநான் மறைகள் போற்றும் சைவநா யகன்செய் வித்தான்.                                     6 

         

         

               சூனிய அரியணையின் இயல்பு 

         

        காரண உபாதி ஏழ்மேற் கண்டிடு ஞானி போலச்  

        சீரணி நுதலின் மீது சென்றுகாண் யோகி போலப்  

        பூரண ஞானா னந்தப் போதகன் இருப்புக் காண்பான்  

        ஏரணி நிலைகள் ஏழ்மேல் நிகழ்வெளித் தவிச மைத்தான்.                                       7 

         

         

         பார்ப்பவர் உடல் நிழல் அவ்வரியணையில் தோன்றுதல் 

         

        களங்கமில் மதியம் போலக் கண்டவர் மனம லர்த்தும்  

        பளிங்குசெய் நிலையுள் வந்து பார்ப்பவர் மெய்ந்நி ழற்போய்  

        விளங்குதல் தன்மேல் தோன்ற வெந்தெரி பசும்பொ னாற்செய்  

        துளங்கொளி நிலையைச் சென்னி சுமத்தல்போல் செய்த ஒக்கும்.                          8 

         

         

          அவ்வரியணையைக் கண்டோர் வசவரை வியத்தல் 

         

 

        திருந்திய பளிங்கு கொண்டு செய்தவந் நிலையின் வாய்தல்  

        பொருந்துதல் தெரிகி லாராய்ப் புகுந்துகாண் மனிதர் எல்லாம்  

        கரங்கொடு தடவிக் கண்டு கண்தெரி யார்கள் போல  

        வருந்திய மனம கிழ்ந்து வசசனை வியப்பர் அன்றே.                                            9 

 

 

          அவ் வரியணையைக் கண்ட தேவரும் வியத்தல் 

 

        நினைவினால் ஒருவன் செய்த நெஞ்சுளா லயமே அன்றி  

        வினையினால் உலகர் செய்து விளங்கிய பணிகள் தம்முள்  

        இனையதோ டுவமை ஆதல் இல்லையென் றும்பர் எல்லாம்  

        தனையலால் நிகரி லாத தவிசினை வியந்து நின்றார்.                                           10 

 

 

          அடியார்கள் அங்குச் சென்று அவ்வணையைப்  

                    பார்த்து மகிழ்ந்திருத்தல் 

 

        அம்பரா சனமி யன்ற அதிசயம் கேளா முக்கண்  

        தம்பிரான் அடியர் ஆகத் தரையுளார் எல்லாம் சென்று  

        செம்பொனால் இயன்ற அந்தச் சீர்கெழு பீட நோக்கி  

        எம்பிரான் வசவ தேவன் இணையடி தொழுதி ருந்தார்.                                   11 

 

 

         இவ் விருக்கையில் அல்லமர் ஒருவரே இருக்க  

                       இயலும் எனல் 

 

        கரையிது கல்விக் கென்னக் கற்றவர் பலரும் ஏத்தத்  

        தரைமிசை அமைத்தி ருந்த சாரதா பீட மேபோல்  

        உரைமனம் இறந்த தாமிவ் வொருதனி ஞான பீடம்  

        அருள்தரு குருகு கேசன் அன்றியே றிடுதற் காமோ.                                              12 

 

 

               அல்லமரே அதில் ஏறக்கூடியவர் என  

                         நினைந்திருத்தல் 

 

        இப்பெரும் பீடம் ஏறி இருந்திட வல்லோன் என்றும்  

        வைப்பெனும் படிம றைந்தெம் மனத்திருப் பதற்கு வல்ல  

        அப்பெருங் கருணைக் குன்றம் ஆகுமல் லமனே என்று  

        செப்புறு பரிசி லானாய்ச் சிந்தைசெய் திருந்தான் நந்தி.                                   13 

 

 

           அல்லமதேவர் வரவை எதிர்பார்த்து இருத்தல் 

 

        கரைபொரு கங்கை யாற்றிற் கண்ணிவைத் தரச அன்னம்  

        வருதலை நோக்கி நிற்கு மாறுபோல் இருள்வி ழுங்கிப்  

        பெருகொளி விரிக்கு ஞான பீடமொன் றமைய ஆக்கிக்  

        குருபரன் வரவு நோக்கிக் கொண்டிருந் தனனெங் கோமான்.                                       14  

 

 

           அடியார்களும் அல்லமர் வரவை எதிர்பார்த்தல் 

 

        ஏட்டினைப் புதுநீர் ஆற்றில் எதிர்கிழித் தேற விட்டோன்  

        பாட்டுடைத் தலைவன் அன்பர் பலருநம் வசவன் தன்னை  

        நாட்டமுற் றடையும் ஆசான் நமக்குமாம் என்றி ருந்தார்  

        வீட்டினுக் கேற்றுஞ் சோதி விருந்திற்கும் உதவு றாதோ.                                  15 

 

 

இருபத்தொன்றாவது - சூனிய சிங்காதன கதி முடிந்தது

 

கதி 21 - க்குச் செய்யுள் - 984

 


 

22. சூனிய சிங்காதனத்தில் இருந்த கதி

[இக் கதிக்கண், அல்லமதேவர் எழுந்தருளுவதற்காகவும், அல்லமதேவரைத் தாம் அறிந்து கொள்வதற்காகவும் வசவண்ணர் வெளி அரியணை (சூனிய சிங்காதனம்) ஒன்று செய்து வைத்துக் கொண்டு, அல்லமதேவரின் வரவை எதிர்நோக்கியிருக்கிறார். ஓராண்டாகியும் அல்லமதேவர் வரவில்லை. நான் செய்த செய்கை பிள்ளைச் செய்கையாகிவிட்டதே என்று வசவண்ணர் வருந்தி யிருக்கும்போது, ஒருநாள் அல்லமதேவர் வருவதற்கான நற்குளிகள் காணப்பறுகின்றன. அவ்வளவில் வசவண்ணர், கலியாணபுரத்தை அழகுபடுத்துமாறு செய்து படைத்திரளுடன் அல்லமதேவரை எதிர்கொள்ளும் பொருட்டுச் செல்லுகிறார். சென்னவசவர், மடிவாலமாச்சையர், கின்னரப் பிரமன் முதலியோரும் வசவண்ணரைச் சூழ்ந்து செல்லுகின்றனர். இதனைக்கண்ட அமணர்கள் விச்சல மன்னனிடஞ் சென்று கூறுகிறார்கள். அல்லமதேவர், வசவர் முன்பு பித்தர்போலத் தோன்றுகிறார். பலவகையான ஆடல் பாடல்களைச் செய்கிறார். வசவண்ணர், அல்லமதேவரை யுணர்ந்து போற்றுகிறார். அடியார்களும் போற்றுகிறார்கள். வசவண்ணர் திருமனைக்குச் சென்று வெளி அரியணையைக் கண்டு அதன்மீது எழுந்தருளுகிறார் என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]

 

 

                               நூலாசிரியர் கூறல் 

         

               பள்ளம்புகு புனல்போல்நெறி படரும்சிவன் அடியார்  

               உள்ளம்புகும் அருள்நந்தியிவ் வுலகோரறி யாமல்  

               கள்ளங்கொளு மனமோடுசெய் அணைமேலொரு கருணை  

               வெள்ளங்கடி தேறும்செயல் விருப்பாலெடுத் துரைப்பாம்.                         1 

         

         

                     வசவண்ணர் அல்லமதேவர் வரவை  

                               நாடியிருத்தல் 

         

               சிரல்நாடுறு கயலாடல்செய் செந்நாடுடை உழவர்  

               அரன்நாடுறும் ஒருகாவிரி அறல்நாடுறு முறைபோல்  

               பரன்நாடுறும் அடியார்வினை பரியத்திரி குரவன்  

               வரல்நாடுறும் உருகும்பர வசவன்புறு வசவன்.                                  2 

         

         

                அல்லமதேவர் வாராமையின் வசவண்ணர் வருந்தல் 

         

               பொன்னானமை கதிர்வீசணை புரிந்தீரறு பருவம்  

               பின்னாயின யான்செய்தொழில் பிள்ளைத்தொழில் ஆயிற்  

               றெந்நாள்வரும் எனையாளுடை எம்மானறி யேனென்  

               றுன்னாவரு துயரோடுளம் உளைந்தான்வினை களைந்தான்.                               3 

         

         

               ஒருநாள் வசவண்ணர் உள்ளத்தில் அல்லமர் வரவு  

                                 தோன்றுதல் 

         

               இவ்வாறமர் நாளோர்பகல் எமையாளுடை வசவன்  

               செவ்வாறுசெல் மனத்தல்லம தேவன்வரல் தோன்றிற்  

               றவ்வாறது நிகழ்வுற்றவன் ஆர்வந்தனை ஒருநான்  

               எவ்வாறுரை செய்வன்பணி இறையுஞ்சொல அரிதால்.                                   4 

 

 

                 வலத்தோள் விழி முதலியன துடிக்கும் நற்குறி  

                                 கண்டு மகிழ்தல் 

 

               வலமாடின விழிதோளருள் வசவற்கதி தூரம்  

               செலுமாடவன் வருநாள்விழி இடமாடிய செயல்வாய்  

               குலமா துளம் எனவேமகிழ் கொண்டன்பு நிறைந்து  

               மலமா யைகள் துரக்குஞ்சென்ன வசவற்கிது புகல்வான்.                          5 

 

 

                               (வேறு)

 

               நற்குரியைச் சென்னவசவர்க்கு நவிலல் 

 

        நற்குறி பலவும் இற்றை நாள்நிகழ் கின்ற என்பால்  

        வற்கலை முனிவர் போற்றும் வசவஅந் நிகழ்ச்சி யானாம்  

        பிற்பெறு பயன்யா தென்று பெருந்தகை வினவ நின்ற  

        சிற்பரம் உணர்ந்த சென்ன வசவதே சிகனு ரைப்பான்.                                            6 

 

 

         இந்நற்குறியினால் இன்று அல்லமரைக் காண்பாயெனல் 

 

        ஐயவிந் நிமித்தம் தன்னால் அல்லமற் காண்பை இன்று  

        மெய்யுரை இதுகாண் என்னா விடுத்தனன் மருகன் எங்கள்  

        கையுறும் அமுத னான்தான் கருதிய படிவிண் ணப்பம்  

        செய்யவுள் மகிழ்வு பூத்துச் செயல்செய்வார்க் குரைக்க லுற்றான்.                         7 

 

 

        வசவண்ணர் கலியாணபுரத்தை அழகுபடுத்தக் கட்டளையிடுதல் 

 

        உடம்பெனும் வனத்தில் நின்ற உயிரெனும் கன்னி தன்னைத்  

        தொடர்ந்திசை மணத்தாற் சேர்ந்த துணைவனல் லமனின் றெய்தும்  

        அடைந்தருள் கல்யா ணத்தை அணிமினென் றெந்தை கூற  

        நடந்தனர் நன்றென் றன்னனர் நகரியோர்க் குணர்த்தி னாரால்.                                     8 

 

 

                    நகரில் தோரணங் கட்டுதல் 

 

        அலர்கதிர் ஞாயி றூரும் அணிநெடுந் தேர்க்கொ டிஞ்சி  

        விலகுற அதில்தாக் காமல் மேலள வொருசாண் நிற்பப்  

        பலர்புகழ் மணிமா டத்துப் பறக்குமொண் கிளியொ ழுங்கில்  

        இலைசெரு கியப சும்பூந் தோரணம் இசைய ஆர்த்தார்.                                  9 

 

 

              கொடி கட்டுதலும் தேர் செய்தலும் 

 

        போதகக் குருநம் ஊருட் புகக்கொடி கட்டல் நன்றென்  

        றாதர வொடும சைத்தார் அவிர்கொடி மாடத் தும்பர்  

        சோதிதன் இரதம் என்றும் சுழன்மென நகுதல் போல  

        வீதியுள் ஆடி ஓடு விளங்குறு நிலைத்தேர் செய்தார்.                                             10 

 

 

          பலவித மணப் பொருள்களை இறைத்து மாலை  

                          கட்டுதல் 

 

        குங்குமம் நறிய சந்தம் குழைத்ததண் பனிநீர் சிந்திப்  

        பொங்கெழில் மறுக னைத்தும் புதைசெழுஞ் சேறுசெய்தார்  

        மங்கல மனைமுன் பந்தர் மணப்பந்தர் உண்மை யாகக்  

        கொங்கவிழ் இதழ்ந றும்பூங் கோதைகள் தூக்கி னாரால்.                                  11 

 

 

                  வாழை முதலியன கட்டுதல் 

 

        வயலிடம் சேர்ந்து நின்ற வாழையும் கரும்பும் பாளை  

        உயரிளங் கமுகும் ஒன்றோ டொன்றுநின் றுசாவித் தாமெல்  

        லியரருந் தொடைதோள் கண்டம் எனுமுறுப் பழகி ரக்கும்  

        செயலில்வந் தடைந்த என்னச் செழுங்கடைத் தலைமுன் ஆர்த்தார்.                               12 

 

 

                      நிறைகுடங்கல் அமைத்தல் 

 

        இலையினாற் பொலிந்த வாழை தொடையினால் எய்து பேறு  

        முலையினாற் பெறுவம் என்று முன்னிவந் திருத்தல் போலக்  

        கலையினாற் சிறந்த அல்குற் கயற்கணார் நிறைகு டங்கள்  

        விலையினாற் சிறந்த செம்பொன் வேதிகை மீது வைத்தார்.                                      13 

 

 

                      திருவிளக்கு வைத்தல் 

 

        மனத்திருள் அகற்றா நின்ற மணிச்சுடர் வரவு பார்ப்ப  

        நினைத்துவந் திருத்தல் போல நெடுமணிக் கதவு வாய்தல்  

        முனைத்திரு விளக்கு வைத்தார் முகிழ்முலைக் கருநெ டுங்கண்  

        தனிச்சிலை நுதற்பூங் கோதைச் சரிகுழல் தளிர்க்கை நல்லார்.                                     14 

 

 

              மாதர்கள் நிலைத்தேரேறி யிருத்தல் 

 

        அல்லம குரவன் தன்னை அருள்நந்தி யோடு காணச்  

        செல்லுவம் என்று செம்பொற் சீர்கெழு விமானத் தோடும்  

        ஒல்லையின் நிலத்தி ழிந்த உம்பர்வாழ் மகளிர் போல  

        இல்லெனும் மருங்குல் மாதர் இருந்தனர் நிலைத்தே ரேறி.                                       15 

 

 

              கழிக்கப்பட்ட பொருள்களின் மிகுதி 

 

        திருநகர் இதனை இன்று திருந்தவே றலங்க ரிப்ப  

        நெருநலுள் ளனக ழத்து நீத்தவை அமரர் கோமான்  

        ஒருநகர் அலங்க ரித்தற் குரியன என்னின் நந்தி  

        பெருநகர் அணியின் மிக்க பெருமையார் கூற வல்லார்.                                  16 

 

 

            வசவண்ணர் அல்லமதேவரை எதிர்கொள்ளப்  

                       புறப்படுதல் 

 

        இன்னணம் அலங்க ரித்த எழில்மணி மறுகின் ஊடு  

        மன்னவர் மன்னன் உய்ய மந்திரிக் கிழமை பூண்டோன்  

        தன்னொரு குரவன் தன்னைத் தானெதிர் கொள்ள வேண்டிப்  

        பொன்னவிர் கோயில் நின்றும் புறப்படாப் போத லுற்றான்.                                       17 

 

 

               சென்னவசவர் உடல் செல்லுதல் 

 

        பதியுமப் பதியாற் காணும் பசுவுமப் பசுவின் ஞானம்  

        பொதியுமைம் பாசந் தானும் பொருளென வழக்கிற் கூறும்  

        விதியுமப் பாசம் பொய்யாப் வேறறும் வீடும் ஓதி  

        மதிமயக் கறுத்த சென்ன வசவனும் மருங்கு சென்றான்.                                  18 

 

 

            மடிவாலமாச்சையரும் உடன்செல்லுதல் 

 

        எம்மடி மாசு முக்கண் இறையவன் அடிமை பூண்டோர்  

        தம்மடி மாசு நீக்கும் தன்தொழில் நெறிவ ழாத  

        செம்மடி வால மாச்ச தேவனும் அன்பு தாயின்  

        மும்மடி ஆகும் நத்தி முதல்வனோ டருகு சென்றான்.                                            19 

 

 

                     கின்னரப்பிரமன் செல்லுதல் 

 

        சங்கரன் சடையிற் பாம்பும் தவழ்ந்தெதிர் கிடந்த பிள்ளைத்  

        திங்களும் செய்த ஒப்பச் செங்கைமான் அவசம் ஆகக்  

        கங்கையும் திரைய டங்கக் கானமுன் பாடி யீச  

        கிங்கரன் தனது பாங்கர் கின்னரப் பிரமன் சென்றான்.                                             20 

 

 

             கணக்கற்ற அடியார்கள் உடன் செல்லுதல் 

 

        தண்டினர் கரகக் கையர் சடையருத் தூள னத்தர்  

        புண்டர நுதலர் கல்தோய் பூந்துகில் உடையர் நீல  

        கண்டனை அகம்பு  த்தும் கண்டவர் வினையின் நீங்கித்  

        தொண்டுறு நெறியில் நின்றோர் சூழ்ந்தனர் எண்ணி லாரே.                                       21 

 

 

               போர்மறவர் புடைசூழ்ந்து செல்லுதல் 

 

        தோள்வலம் துடித்த தின்று சுடரிலை வேற்புண் ஒன்று  

        கோள்வலம் கொள்ளும்செம்பொன் குன்றெனும் மார்பிற் காண்பேம்  

        வேள்வலம் கொண்ட நெற்றி விழியிறை அருளால் என்னும்  

        வாள்வலம் கொண்ட சேனை மறவர்வா ரிதிபோற் சூழ்ந்தார்.                                     22 

 

 

               நிலம் அதிரப் படைகள் செல்லுதல் 

 

        எங்கள்வாழ் வனைய நந்தி எழுந்தருள் மறுகின் ஊடு  

        மங்குல்வான் இரவிப் புத்தேள் மணிநெடுந் தேர்ப்பைங் கிள்ளை  

        தங்கள்கால் தூட்கு டைந்து தரிப்பரி தாகி ஓட  

        அங்கண்மா ஞாலம் எல்லாம் அதிர்தர நடந்த அம்மா.                                    23 

 

 

                    யானைகள் செல்லுதல் 

 

        அரவொடு மண்சு மக்கும் அடுகளி றெட்டோ டும்போர்  

        பொரவொரு களிநல் யானை போதுமென் றெண்ணி லாத  

        இரவொடு புரைநி றத்த ஈர்ங்கவுள் சிறுகண் தூங்கு  

        கரவளை வெண்ம ருப்புக் கடாக்களி றெழுந்த அன்றே.                                   24 

 

 

           படைத்தலைவர்கள் பலர் பக்கத்தில் செல்லுதல் 

 

        ஆனைமேற் கொண்டும்வாவும் ஆடல்வெம் பரியி வர்ந்தும்  

        கூனல்வேய் தொடுத்து ஞான்ற குச்சுடைச் சிவிகை ஊர்ந்தும்  

        சேனைகா வலரெண் ணில்லார் சிலைமதன் கோலம் என்ன  

        மானவேல் மன்னர் மன்னன் மந்திரி மருங்கு சென்றார்.                                   25 

 

 

                       குடைகள் பல செல்லுதல் 

 

        நலங்கிளர் மதன்கு டைக்கு நகைமணிக் காம்பில் என்ன  

        இலங்குறு பசும்பொற் காம்போ டெண்ணில்வெண் குடையெ ழுந்த  

        புலன்களை வென்ற வீரன் போகிய மறுகில் எங்கும்  

        விலங்கினை அன்றி அந்த விலங்கின்வால் ஆடிற் றன்றே.                                26 

 

 

                       மாதர்கள் பலர் எழுதல் 

 

        மாயைதன் தோல்வி எல்லா மாதர்க்கும் வந்த அன்றோ  

        நாயகன் தன்னைப் பற்றி நாம்வென்றி கொள்வம் என்று  

        போயுறு தன்மை போலப் புணர்முலைக் கருநெ டுங்கண்  

        தேயுநுண் மருங்குல் மாதர் திரள்பல எழுந்த அன்றே.                                    27 

 

 

          பலவகை ஒலிகளுங் கலந்து கடல்ஒலி போலாதல் 

 

        பரிகளின் முழக்கும் மிக்க பல்லிய முழக்கும் பூட்கைக்  

        கரிகளின் முழக்கும் வீரக் கழலொடு செல்லும் வெங்கோள்  

        அரிகளின் முழக்கும் மாதர் அணிகளின் முழக்கும் செங்கைச்  

        சரிகளின் முழக்கும் விம்மித் தடங்கடல் போன்ற அன்றே.                                28 

 

 

               எழுச்சியின் பொது நிகழ்ச்சி 

 

        ஆடுவ கவரி எங்கும் அசைவன சிவிறி எங்கும்  

        மூடுவ குடைகள் எங்கும் முழங்குவ இயங்கள் எங்கும்  

        பாடுவ இசைகள் எங்கும் பாய்வன கரிகள் எங்கும்  

        ஓடுவ புரவி எங்கும் உயர்வன தூளி எங்கும்.                                            29 

 

 

           வசவண்ணர் படை கடலைப்போன்றது எனல் 

 

        கரிகலம் அசையா நின்ற் கவரிகள் நுரைகள் மொக்குள்  

        விரிகுடை மதுகை வீரர் விதிர்க்கும்வாள் உகள்மீன் பாயும்  

        பரிதிரை முழக்கம் ஆர்க்கும் பல்லிய முழக்கம் ஆகப்  

        பொருகடல் எனவெ ழுந்து போயது வசவன் சேனை.                                            30 

 

 

                          (வேறு)

 

             வசவண்ண்ர் உவகையுடன் செல்லுதல் 

 

        இன்ன வாறெழுந் திரளொடு நந்தியெம் பெருமான்  

        தன்னை நேர்குரு பரனெதிர் சென்றவன் தானைச்  

        சென்னி யால்வணங் குவனெனும் ஓகையாற் சென்றான்  

        துன்னும் வானவர் தொகுதியும் வியப்பொடு துதிப்ப.                                             31 

 

 

         வசவண்ணர் செலவினைக்கண்ட அமணர்கள், 

                       எள்ளி நகையாடுதல் 

 

        அத்தி றஞ்செலும் செலவினை அகங்குருட் டமணர்  

        புத்தர் கண்டிவர் என்கொலோ வறிதெதிர் போதல்  

        பித்தன் என்றுதம் இறைவனைச் சொல்லுமிப் பேயர்  

        எத்தி றஞ்செயார் எனச்சிவ சரணரை இகழ்ந்தார்.                                        32 

 

 

          விச்சல மன்னனிடத்திற் சென்று கூறுதல் 

 

        மன்னன் விச்சலன் பாலடைந் தருகரெம் மன்னா  

        நின்ன கர்க்கொரு புதுமையொன் றுற்றது நீகேள்  

        நன்னி மித்தமொன் றெய்திய தேகொடு நந்தி  

        தன்னி டத்தொரு வன்வரும் என்றெதிர் சாரும்.                                          33 

 

 

           வசவர் செல்லுதல் பயனற்றது எனல் 

 

        தண்ட நாயகன் தோள்வலம் துடித்தது தன்னைக்  

        கொண்டு தான்வரும் குருபரன் என்றெதிர் கோடல்  

        கண்ட ஓர்கன விற்பெரும் அடிசிலைக் கருதி  

        உண்டு போம்விருந் தினர்தமைத் தேடுதல் ஒக்கும்.                                              34 

 

 

         வசவண்ணரை அமைச்சராக்கிய உன்னைப்போல்  

                       யாரும் இலர் எனல் 

 

        ஒருவன் வந்திடும் எனஎதிர் கடற்படை ஒருங்கு  

        பரவி வந்திடச் செலுமிவன் தன்னை நீ பார்த்துப்  

        பொருவில் மந்திரக் கிழமைநல் கியவுனைப் போல்வார்  

        அரவின் வன்தலைப் படிமிசை இசையென அறைந்தார்.                                  35 

 

 

         விச்சலமன்னன், வசவண்ணர் செயல் யாவும்  

                       காண்போம் எனல் 

 

        அருகர் வாசகம் கேட்டலும் உளம்வியந் தடிகேள்  

        விரகி னான்மிகு தண்டநா யகனுமெவ் விளைவு  

        கருதி னான்கொலோ அறிகிலம் முடிவுறக் காண்பம்  

        வருக நீரிரு மின்களென் றிருந்தனன் மன்னன்.                                           36 

 

 

         அல்லமதேவர், வசவண்ணர் முன்செல்ல  

                       எண்ணுதல் 

 

        தண்ட நாயகன் தனதுளம் தங்குறத் தானத்  

        தண்ட நாயகன் தன்மனம் தங்கிய தலைவன்  

        தண்ட நாயகன் தனையிகழ் சமண்செருக் கழியத்  

        தண்ட நாயகன் எதிர்செல நினைந்தனன் தனித்து.                                        37 

 

 

         பித்தன்போல் வசவண்ணர்க்கு முன்செல்லுதல் 

 

        என்னைக் காண்குவன் எவ்வகை செல்லினும் என்றும்  

        துன்னற் கோவண மொடுவிரி குஞ்சியும் தோன்றத்  

        தன்னைக் காண்குநர் பித்தனென் றெள்ளஎன் றனக்குப்  

        பொன்னைப் போலுநல் வசவன்நா யகனெதிர் போனான்.                                  38 

 

 

                               (வேறு)

 

                பித்தன்போல் வந்த அல்லமதேவரை  

                            விலக்குதல் 

 

               மருவிநின் றவரிவன் மருள னேயென  

               விரைவிலிங் ககலகல் எனவி லக்கினார்  

               ஒருவரும் கண்டிறை உருவு ணர்ந்திலர்  

               உருவுகண் டெள்ளுநர் உணர வல்லரோ.                                        39 

 

 

               அல்லலலலலர் திருவிளையாடல் புரிதல் 

 

               அல்லமன் ஆயிடை ஆடல் உன்னியே  

               பல்லெழு வாயுடைப் பாலன் ஆகுவன்  

               கொல்லிள ஏறெனக் குமரன் ஆகுவன்  

               வில்லென உடல்வளை விருத்தன் ஆகுவன்.                                            40 

 

 

                       அல்லமர் பாடியாடுதல் 

 

               விஞ்சையர் மகிழ்வுற வீணை ஒன்றுகைக்  

               கஞ்சமென் மலர்கொடு கானம் பாடுவன்  

               அஞ்சன விழிமணி அரிச்சி லம்படி  

               வஞ்சியர் மனமயல் வளர வாடுவன்.                                           41 

 

 

                  யானைமேலும் குதிரைமேலுந்  

                            தோன்றுதல் 

 

               இந்திரன் இவனென யானை மேற்கொளா  

               வந்தொரு புடைநரர் மருளத் தோன்றுவன்  

               பைந்தொடி பெயர்தரு பாணி போலவே  

               பந்திமுன் முடங்குளைப் பரிந டத்துவன்.                                               42 

 

 

                எல்லா இடங்களிலும் காணப்பெறுதல் 

 

               வானிடைக் கண்டனன் மனையிற் கண்டனன்  

               சேனையுட் கண்டனன் தெருவிற் கண்டனன்  

               யானெனக் கடிநகர் எங்கும் தோன்றுவன்  

               ஞானநற் கண்ணினாற் காணும் நம்பனே.                                        43 

 

 

                ஆடல் புரிவார் அனைவருடனும்  

                          விளங்குதல் 

 

               ஆடுநர் தம்முடன் ஆடும் நல்லிசை  

               பாடுநர் தம்முடன் பாடும் மென்மலர்  

               சூடுநர் தம்முடன் சூடும் வாள்விதிர்த்  

               தோடுநர் தம்முடன் ஓடும் அல்லமன்.                                           44 

 

 

                  அல்லமர் செயலைக் கண்டு மக்கள்  

                             மயங்குதல் 

 

               பொருவிலா வளநகர் பொருந்து மானிடர்  

               வரைவிலா ஆடலிவ் வகைசெய் கிற்பவர்  

               ஒருவரோ பலர்கொலோ உணர்கி லோமென  

               வெருவினார் அல்லமன் விநோதம் நோக்கியே.                                   45 

 

 

                வசவண்ணர், அல்லமதேவரை அறிதல் 

 

               மண்ணிடை மறைவுறு நிதிய வைப்பினைக்  

               கண்ணிடும் அஞ்சனக் காரன் காண்கைபோல்  

               நண்ணிடும் உணர்வுடை நந்தி எம்பிரான்  

               அண்ணலை அறிந்தனன் ஐயம் இன்றியே.                                               46 

 

 

                வசவண்ணர் அல்லமதேவரை வணங்குதல் 

 

               உடம்பெலாம் உள்ளமாய் உருகிக் கண்கள்நீர்  

               அடங்குறா தொழுகமெய் விதிர்ப்ப அன்பினால்  

               தொடர்ந்தெலா உயிரையும் தொண்டு கொண்டருள்  

               நெடுந்தகாய் அருளென நிலத்தி றைஞ்சினான்.                                   47 

 

 

                     அடியார்களும் வணங்குதல் 

 

               தண்டநா யகன்நிலந் தண்டில் தாழ்ந்தெழந்  

               தொண்டராய் அவனொடு துன்னி னாரெலாம்  

               கண்டுநீர் விழியுகக் கசிந்த அன்பினால்  

               அண்டநா யகன்திரு வடியி றைஞ்சினார்.                                        48 

 

 

                தேவர்கள் மலர்மழை பொழிந்து துந்துமி  

                               முழக்குதல் 

 

               நந்திதன் அன்பையும் நந்தி பால்வரும்  

               எந்தைதன் அருளையும் என்சொல் வாமெனச்  

               சிந்தினர் மலர்மழை தேவர் யாவரும்  

               துந்துமி அதிர்த்தனர் தொண்டர் ஆர்ப்பவே.                                              49 

 

 

                கலியாணபுரம் கயிலையைப்போலும்  

                               எனல் 

 

               மயலிலா நங்குரு வசவன் வாழ்தரும்  

               இயலினால் அல்லமன் எண்ணி வந்தருள் 

               செய்லினால் அடியவர் திரள்க ளித்தலால்  

               கயிலையே வளங்கெழு கல்லி யாணமே.                                        50 

 

 

                  சமணர்கள் அழுக்காறு கொள்ளல் 

 

               தெரியநல் தண்டநா யகன்தன் செய்கையும்  

               பெரியவக் குருபரன் பெருமை தன்னையும்  

               கரியமெய்ச் சமணர்தாம் கண்டும் அன்பிலர்  

               அரியவற் றரிதழுக் காறு வெல்வதே.                                           51 

 

 

               அல்லமதேவர் வசவண்ணர் மனையை  

                          அடைதல் 

 

               தந்திர முடிவெனுஞ் சைவ தேசிகன்  

               வந்தெதிர் தனதுதாள் வணங்கி னாரொடு  

               செந்திரு மகளுலாம் தெருவுட் போகியே  

               நந்திதன் மந்திரம் நணுகி னானரோ.                                             52 

 

 

                  அல்லமதேவர் வெளி அரியணையைப்  

                              பார்த்தல் 

 

               தேவரும் முனிவரும் சித்தர் ஆகிய  

               யாவரும் இதனியல் இன்ன தென்றுளத்  

               தாய்வரும் நிலையுடை அம்ப ராதனம்  

               மூவரும் அடிதொழும் முதல்வன் நோக்கினான்.                                  53 

 

 

                அல்லமதேவர் வெளி அரியணையில்  

                             ஏறுதல் 

 

               அசைவறும் அறிவுரு ஆகும் அல்லமன்  

               திசையுறு மணியணைச் சென்னி மீமிசை  

               வசையறு வழிநடை வசவ தேசிகன்  

               இசையமர் உலகிடை ஏற ஏறினான்.                                            54 

 

 

                       மலர் மழை பொழிதல் 

 

               கூறரும் ஒளியுடைக் குதிரைத் தேரினான்  

               வேறொரு மணிமய வெற்பி வர்ந்தெனத்  

               தேறரும் அணைமிசைத் தேசி கோத்தமன்  

               ஏறலும் மலர்மழை இழிந்த என்பவே.                                           55 

 

 

                       பலவகை ஒலி மிகுதல் 

 

               முரசொடு பல்லிய முழக்கெ ழுந்தன  

               அரிசறும் அடியவர் தொகுதி கைகுவித்  

               தரகர வெனுமொலி அண்ட கூடமட்  

               டொருகணம் ஒடுங்குமுன் ஓடிற் றென்பவே.                                            56 

 

 

                               (வேறு)

 

                   ஏழு நிலைகளையுங் கடத்தல் 

 

               முதனிலை முதலா மூவிரு நிலையின்  

                       மூலமா முதலவா தார  

               இதழவிழ் கமலப் பொகுட்டினுள் நின்ற  

                       இலிங்கமோர் ஆறென நின்று  

               நுதல்மிசை இலகு நிட்களம் போல  

                       நுவன்றவே ழாநிலை ஆகும்  

               அதன்மிசை அமலன் அல்லம தேவன்  

                       அமர்ந்தனன் அமரரும் வியப்ப.                                         57 

 

 

                        வெளியிடத்தில் அமருதல் 

 

               உடம்பொடு பொறிநாற் கரணமற்  றுயிரென்  

                       றுரைத்திடப் படும்உபா திகளைக்  

               கடந்துள நிலையிற் சோதியாய் இலங்கக்  

                       கண்டிடு துரியனைப் போல  

               நெடுந்தவி சமைய அமைத்தசெம் மணிப்பொன்  

                       நிலைகளோர் ஏழையும் கடவா  

               இடந்தனி விசும்பென் றல்லமன் இருப்ப  

                       இருந்தனர் யாவரும் கண்டார்.                                          58 

 

 

                      அடியவர் மகிழ்ச்சிக் கூத்து 

 

               ஆடினர் சிலவர் அங்கைகள் கொட்டி  

                       அல்லமன் பெரியதோர் புகழைப்  

               பாடினர் சிலவர் விழிபொழி வெள்ளம்  

                       பாய்வுறக் குவித்தகை தலைமேல்  

               சூடினர் சிலவர் நிலமிசை வீழ்ந்து  

                       தொழுதனச் சிலவர்மெய்ப் புளகம்  

               மூடினர் சிலவர் பரவினர் சிலவர்  

                       முக்கணான் அடியவர் அன்றே.                                          59 

 

 

                       வசவண்ணர் மகிழ்ச்சி 

 

               இந்தியம் விடயங் கரணமெய் என்னும்  

                       யாவையும் காண்கிலன் ஓங்கும்  

               அந்தர அணைமேல் இவர்ந்திருந் தருளும்  

                       அண்ணலைக் கண்டவப் பொழுதே  

               முந்திய பரமா னந்தவா ரிதியுள்  

                       மூழ்கினன் அழுந்தினன் அம்மா  

               தந்திரம் எவற்றும் சிறந்தது சைவ  

                       தந்திரம் எனும்அருள் நந்தி.                                            60 

 

 

                அல்லமர் வசவண்ணரைப் போற்றுதல் 

 

               மண்டலம் அவத்தை குணமபி மானம்  

                       மலமிவை அனைத்தையும் கடந்துள்  

               கண்டிடும் வண்ணம் புறத்துநீ எம்மைக்  

                       காணிய அமைத்தவிச் செய்கை  

               வெண்திரை சுருட்டும் கருங்கடல் உலகில்  

                       வேறுளர் செய்வதன் றென்று  

               தொண்டர்கள் துதிக்கும் வசவனைத் துதித்தான்  

                       சுரரெலாம் துதிக்குமெம் பெருமான்.                                     61 

 

 

                     அல்லமர் வெளி அரியணையில்  

                            அமர்ந்திருத்தல் 

 

               உன்னருள் உளதேற் கமலன்மால் தொழிலும்  

                       ஒருசிறு துரும்புசெய் கிற்கும்  

               என்னநல் வசவன் புகன்றுகை கூப்பி  

                       இணைவிழி புனலுக உருகித்  

               தன்னுணர் கிலனாய் வசமற நிற்பத்  

                       தண்கதிர்ச் செம்மணி குயின்ற  

               பொன்னரி யணைமேல் விசும்புற இருந்தான்  

                       புல்லரும் அல்லம தேவன்.                                                    62 

 

 

இருபத்திரண்டாவது - சூனிய சிங்காதனத்தில் இருந்த கதி முடிந்தது

 

கதி 22 - க்குச் செய்யுள் - 1046

 


 

23. ஆரோகண கதி

[இக் கதிக்கண், அல்லமதேவர் வெளி அரியணையில் அமர்ந்திருத்தலை வசவண்ணர் முதலியோர் பார்த்து மகிழ்கிறார்கள். அங்குள்ள அடியார்கள் இறைவனை வழிபடுதல், பெரியோர்க்குத் தொண்டு செய்தல், இறைவனைப் பாடிப்புகழ்தல், மறைப்பொருளை எண்ணியிருத்தல், இறைவனை உள்ளத்திற் கொண்டிருத்தல், உயிர்க் காற்றை நிறுத்துதல் (யோகஞ் செய்தல்) முதலிய பலவகைச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அல்லமதேவரிடத்திலே முழு உள்ளத்தையுஞ் செலுத்திய வசவண்ணர் அடியார்களைப் போற்றுதலை மறந்திருக்கிறார். வசவண்ணர் தம்மைப் போற்றாமையைக் கண்டு வெகுண்ட அடியார்கள் வேறிடஞ் செல்கிறார்கள். கலியாணபுரி அழகிழந்து காணப்படுகிறது. அடியார்கள் அகன்றுவிட்ட செய்தியை அறிந்த வசவண்ணர் அவர்களுக்காக அடப்பட்ட அடிசில் வீணாக அழிவுறுமே என்று வருந்துகிறார். வசவண்ணர் உள்ளத்துத் துன்பினை உணர்ந்த அல்லமதேவர், தமக்குச் சிறிது உணவிடும்படி வசவண்ணரைக் கேட்கிறார். ஆங்கு ஆக்கிவைத்திருந்த அடிசில் முதலிய உணவுகளையெல்லாம் அல்லமதேவருக்குப் படைக்கிறார். அனைத்தையும் அல்லமதேவர் அயின்றும் அவருடைய பசித்தீ அடங்காமல் மிகுதிப்படுகிற. சென்னவசவர் உனொடு பொருந்தாத இறைவனுக்கு இவ்வாறு உணவிடத் தொடங்கியது தக்கது அன்றென்கிறார். வசவண்ணரும் உண்மையை உணர்ந்து அல்லமதேவரைப் போற்றுகிறார். உண்ணாமற் சென்றுவிட்ட அடியார்களையெல்லாம் உண்பதற்கு அழைத்துவா என்கிறார் அல்லமதேவர். வசவண்ணர் அவ்வாறே சென்று அடியார்களைக் காண்கிறார். அவர்கள், அல்லமதேவர் அணிந்தன அணிந்து, உண்டன உண்டு களித்திருக்கின்றார்கள். அவர்களை வசவண்ணர் உண்பதற்கு அழைக்கின்றார். அவர்கள், ‘நாங்கள் வழக்கப்படி முழுநிறைவாகக் கையும் வாயுந் தொழிற்படாமலே உண்டு மகிழ்ந்தோம்’ என்று கூறிச் சிவயோகி ஒருவனுக்கு உணவளிப்பின் எல்லா உயிர்களுக்கும் மனநிறைவேற்படு மென்றும், அல்லமதேவர்க்குச் செய்யும் வழிபாடுகளெல்லாம் எம்மைச் சேருமென்றும் உரைக்கின்றார்கள். வசவண்ணர் மீண்டுவந்து அல்லம தேவர்க்கு அச்செய்தியை உரைக்கின்றார். அல்லமதேவர் வசவண்ணருக்கு மெய்ப்பொருளை உணர்த்த விரும்புகிறார் என்னும் செய்திகள் கூறப்பெறுகின்றன.]

 

 

                       நூலாசிரியர் கூறல் 

 

               ஒருவர் உண்ண ஒருவர் பசிகெடார்  

               தரையில் என்னும் தகுமொழி பொய்த்திட  

               அருளின் அல்லமன் ஆரும் பசிகெட  

               விரவி உண்ட மிகுதி விளம்புவாம்.                                                    1 

 

 

                அல்லமதேவர் வெளி அரியணையில்  

                    எழுந்தருளியிருந்த தன்மை 

 

               தண்ணந் திங்களில் தண்ணெனத் தண்கதிர்  

               வண்ணங் குன்றுறா ஞாயிறு வார்சிலைப்  

               பண்ணங் குன்றுறு பான்மையின் ஆதனத்  

               தென்னந் தேவர் இருந்தருள் காலையில்.                                               2 

 

 

                  வசவண்ணர் ஓவியம் போன்று  

                            இருத்தல் 

 

               வசவன் உள்ளம் வயல்புகும் நீரென  

               விசயன் அல்லமன் மேனி வடிவமாய்  

               அசைவி லன்பிறி தொன்றும் அறிந்திலன்  

               இசையும் ஓவியம் என்ன இருந்தனன்.                                          3 

 

 

               சென்னவசவரும் அல்லமதேவரைப்  

                        பார்த்து மகிழ்தல் 

 

               கழும ணித்தவி சென்னும் கலத்திடை  

               அழிவ றத்திகழ அல்லமன் ஆகிய  

               செழிய நற்சுதை சென்ன வசவனும்  

               விழியி னுக்கு விருந்திட் டனனரோ.                                            4 

 

 

                 மோளிகை மாரன் மடிவால மாச்சன்  

                             ஆகியோர் 

 

               முனிவி னைக்கொளும் மோளிகை மாரனும்  

               வினையி னைத்தெறு மெய்ம்மடி வாலனும்  

               தனைநி கர்க்கும் தவிசமர் பூவினை  

               மனமெ னப்படும் வண்டுற விட்டனர்.                                           5 

 

 

               அடியார்கள் பலரும் அல்லமதேவரைக்  

                          சூழ்ந்திருத்தல் 

 

               முன்னி ருந்த முதுக்குறை வாளரும்  

               பின்ன டைந்த பெரியரும் ஆகிய  

               மன்னி ருந்த மணித்தவி சின்புடைத்  

               துன்னி எங்கணும் சூழ்ந்தனர் தொண்டரே.                                       6 

 

               நீறு பூசிக் கண்டியணிந்து ஐந்தெழுத்து  

                         எண்ணுவோர் 

 

               புண்ட ரந்திரு நெற்றியிற் பூசிமெய்க்  

               கண்டி என்னும் கலனணி வார்சிலர்  

               பண்டை நான்மறை யின்பயன் ஆகவே  

               கொண்ட அஞ்செழுத் துங்குறிப் பார்சிலர்.                                               7 

 

 

                  இறைவனைப் பூசை புரிவோர் 

 

               நந்த னந்தரு நாள்மலர் மஞ்சனம்  

               சந்த னஞ்சுடர் தண்புகை யாதிகொண்  

               டிந்தி யங்களெ லாமடங் குள்ளமோ  

               டந்தி வண்ணனை அர்ச்சிப்பர் ஓர்சிலர்.                                         8 

 

 

               பெயரியவர்களுக்குத் தொண்டு செய்பவர் 

 

               தாவில் பூசனை தாம்புரி கிற்பதில்  

               பாவெ லாஞ்சொலப் பட்டிடும் ஐம்புலக்  

               காவல் செய்யும் கருத்துடை யார்தமக்  

               கேவல் செய்தல்நன் றென்றுசெய் வார்சிலர்.                                             9 

 

 

                     இறைவனைப் புகழ்பவர் 

 

               பூச னைத்தொழில் பூண்பதின் எண்மடங்  

               கீச னைத்துதித் தேத்துதல் நன்றென  

               ஊசல் ஒத்த உளமில ராய்ப்புலத்  

               தூசி நிற்பத் துதிப்பவர் ஓர்சிலர்.                                                10 

 

 

                 மெய்ப்பொருளைப் பகர்பவர் 

 

               அங்க லிங்கம் அயிக்கம் இதுவென  

               மங்க லந்தரு மாமறை யின்முடித்  

               தங்கு றுந்தத் துவமசி தன்பொருள்  

               பங்கம் இன்றிப் பகர்பவர் ஓர்சிலர்.                                                     11 

 

 

               மெய்ப்பொருளை ஆசிரியர்பால்  

                         ஆராய்பவர் 

 

               பாசம் ஏது பசுவெனப் பட்டதே  

               தீசன் யார்பதி எவ்வகை ஆருயிர்க்  

               காசு தீர அருளும் அருளுடைத்  

               தேகி காவெனத் தேர்பவர் ஓர்சிலர்.                                                     12 

 

 

                  இறைவனை எண்ணியிருப்பவர் 

 

               புறந்தி னஞ்செயும் பூசையின் நன்றெனச்  

               சிறந்த கஞ்செய் தியானம் மருவி மெய்ம்  

               மறந்தி ருந்த மனஞ்சிவ லிங்கமுற்  

               றிறந்திடு டுந்திறம் எய்தினர் ஓர்சிலர்.                                           13 

 

 

               உயிர்க்காற்றை அடக்கி நிற்பவர் 

 

               ஓடி மீளும் உயிர்நின்றி டாதெனில்  

               நீடு மாமன நிற்பதன் றாதலால்  

               வீடு மேவரி தென்று விதிமுறை  

               நாடி வாயு நலிபவர் ஓர்சிலர்.                                                  14 

 

 

                வசவண்ணரைப்பற்றி அடியார்கள்  

                          எண்ணுதல் 

 

               இனையர் ஆகி இருந்தவக் காலையில்  

               அனையன் ஆகி அல்லமன் தன்னிடை  

               நினைவெ லாமுற நின்று தமதிடை  

               மனமி லாத வசவனைக் கண்டனர்.                                                     15 

 

 

                  அடியார்களுள் பெரியவர் சிறியவர்  

                           இல்லையெனல் 

 

               பெரியவர் சிறியவர் என்னம் பெற்றிமை  

               அரவணி கடவுள்தன் அடியர் தம்முளே  

               தெரிபவன் எவனவன் சிறிய னேஎன  

               விரிவுறு மறையெலாம் விளம்பும் என்பவே.                                            16 

 

 

                இறைவன் அன்பரே தக்கவர் எனல் 

 

               ஆவுரித் திடினும்நீ றணியும் அன்பனம்  

               மாவுரித் தவனென வணங்கத் தக்கவன்  

               பூவுரித் தவன்பதம் புனையப் போற்றுற  

               நாவுரித் தெனமறை நான்கும் ஓதுமால்.                                         17 

 

 

                  வசவண்ணர் அடியார் தொண்டினை  

                            மறந்திருத்தல் 

 

               வந்தவர் வருபவர் வருகின் றார்களாம்  

               அந்தமில் அடியர்மாட் டாற்றும் செய்கையைச்  

               சிந்தனை செய்கிலன் தேசி கன்செயும்  

               இந்திர சாலமுற் றிருந்து நந்தியே.                                                     18 

 

 

                 வசவண்ணர் தம்மைப் போற்றாததற்கு  

                     அடியார்கள் சினந்து கூறுதல் 

 

               பத்தியில் தவறினோன் பாலி ருந்துநாம்  

               துய்த்துடற் சுமப்பதில் துறத்தல் நன்றென  

               மெய்த்தவக் குழாமெலாம் வெகுண்டு போயின  

               அத்தன்நல் தண்டநா யகனை விட்டரோ.                                        19 

 

 

                நகர் அழகு குன்றியிருத்தலை வசவண்ணர்  

                               காணுதல் 

 

               துன்றிய மெய்த்தவர் துறந்து போயபின்  

               மன்றல்செய் மற்றைநாள் மனையை ஒத்தொரு  

               தன்தனி நற்புரம் தனிப்பக் கண்டனன்  

               நன்றறி நற்செயல் நந்தி தேவனே.                                                      20 

 

 

                    அடியார்க்கு ஆக்கிய உணவு  

                வீணாகுமென வசவண்ணர் வருந்துதல் 

 

               வழுவினன் அன்புசெய் வழியை இன்றுநான்  

               குழுவுறும் அடியவர்க் குறித்துச் செய்தவிவ்  

               ஒழிவறும் அடிசிலுண் டொழிந்தி டாதுதீர்ந்  

               தழிவுறு மேயென அகந்த ளர்ந்தனன்.                                           21 

 

 

                  அடியாரிடத்தில் அன்புகொளல்  

                            அரிதெனல் 

 

               சங்கம பத்திசெய் தண்ட நாதனே  

               சங்கம பத்திசெய் தகைமை பூண்டுநான்  

               சங்கம பத்தியில் தவறினேன் என்றால்  

               சங்கம பத்திசெய் தன்மை எண்மையோ.                                        22 

 

 

                  அடியார்பால் அன்பு கொள்வோன்  

                   பிறப்பைக் கெடுப்போன் எனல் 

 

               இழிப்பினும் வெறுப்பினும் இல்லின் உள்ளன  

               அழிப்பினும் உடம்பினை அரிந்து கொல்லினும்  

               பழிப்பறு சங்கம பத்தி செய்பவன்  

               ஒழிப்பது பிறவியென் றுலகம் ஓதுமே.                                          23 

 

 

                  அல்லமர் உணவெலாம் உண்டு  

                  அடியார்பசி போக்க நினைதல் 

 

               இம்முறை சங்கம பத்தி எய்திய  

               எம்முடை நந்திதன் எண்ணம் முற்றுற  

               அம்மடை அடிசிலுண் டலமன் மாதவர்  

               தம்முறு பசியெலாம் தணிப்ப உன்னினான்.                                              24 

 

 

                 அல்லமதேவர் தம் பசிக்குச் சிறிது  

                       உணவிட வேண்டுதல் 

 

               ஒருவன்யான் சிறுபசி உடையன் சிற்றுணா  

               விரைவுற விடுதிநீ வேண்டு மாறுபின்  

               பரிவுள அடியவர் பாற்செய் என்றனன்  

               பொருவறு வசவனை நோக்கிப் போதகன்.                                               25 

 

 

                வசவண்ணர், அல்லமரை அழைத்துச் சென்று  

                         இருக்கையில் அமர்த்தல் 

 

               ஐயனும் முனிவுறா தருளும் வண்ணம்யான்  

               செய்யுநல் வினையென மகிழந்து தேவனைப்  

               பையவுண் மனையிடைப் பணிந்து கொண்டுபோய்ப்  

               பெய்யுமென் மலர்மணிப் பீடத் தேற்றினான்.                                             26 

 

 

                 வசவண்ணர், அல்லமரின் திருவடி  

                            வழிபாடு செய்தல் 

 

               ஏற்றிய அருள்வச வேசன் எம்பிரான்  

               காற்றுணை மலர்களைக் கந்த மஞ்சன  

               நாற்றமென் மலர்நறும் புகைவி ளக்கெனப்  

               போற்றிய இவைகொடு பூசை செய்தனன்.                                               27 

 

 

                  அல்லமருக்கு வசவண்ணர் உணவு  

                               படைத்தல் 

 

               பூசனை செய்தபின் போற்றி நின்றுபொன்  

               பாசனம் அமைத்துமென் பதம்ப டைத்துமேல்  

               யோசனை கைகமழ் கறியும் ஒள்ளிய  

               போசன முறையிடப் புரிந்து நந்தியே.                                           28 

 

 

                    அல்லமர், இட்ட உணவை  

                ஓரிமைப்பொழுதில் உண்டுவிடல் 

 

               அருந்துக எனவடி தொழலும் அக்கலம்  

               திருந்திய அமுதுளோர் அவிழும் சேடியா  

               தருந்தினன் ஓரிமைப் போதின் அல்லமன்  

               பொருந்திய அவரிறும் பூத ராகவே.                                             29 

 

 

                மேலும் படைக்க அலலமர் உண்டமை  

                            கண்டு வியத்தல் 

 

               பின்னரும் அம்முறை பெய்ய ஐயனவ்  

               அன்னமும் அம்முறை அருந்திப் பின்னரும்  

               பின்னரும் அம்முறை பெய்ய உண்டனன்  

               தன்னுளம் வியந்தனன் தண்ட நாயகன்.                                         30 

 

 

                  அல்லமதேவருக்குப் பசி வளருதல் 

 

               சிறுச்சிறி தனமிடும் செய்கை யாலருள்  

               இறைக்கெழில் உதரவெந் நெருப்பெ ழுந்ததால்  

               விறற்கனல் அம்முறை விறகி டக்கனன்  

               றுறப்பெரி தெனவெழுந் தோங்கல் போலவே.                                    31 

 

 

                   சமைத்த உணவெல்லாம் படைக்க  

                    வசவண்ணர் கட்டளை இடுதல் 

 

               எண்ணிய எண்ணியாங் கியற்றும் ஏவலர்  

               அண்ணலும் வருகென அழைத்து நம்மனைப்  

               பண்ணிய பதமெலாம் படைமின் என்றலும்  

               துண்ணென அனமிடும் தொழில்தொ டங்கினார்.                                  32 

 

 

                               (வேறு)

 

             கயிலைமலையைப்போல் உணவைக் குவித்தல் 

 

        அளவறும் அடியர்க் கெல்லாம் ஆக்கிய அடிசிற் குன்றம்  

        கொளவுறு கூடை யொடு கூடைகள் தாக்கக் கொண்டு  

        வளமுறு கயிலைக் குன்றம் பெயர்த்திவண் வைத்த தென்னத்  

        தளவுறழ் அடிசில் எங்கள் தம்பிரான் எதிர்கு வித்தார்.                                            33 

 

 

            பருப்பு நெய் முதலியவைகளைப் படைத்தல் 

 

        பருப்பொரு பொருப்பெ னத்தாம் படைத்தனர் சிலரெ டுத்து  

        விரைப்புது நெய்க விழ்த்து விடுத்தனர் சிலர்ம ணக்கும்  

        பொரிக்கறி பளிதம் பாகு புளிங்கறி பலவும் எல்லாம்  

        நிரைத்தொரு சிலர்சொ ரிந்து நின்றனர் முகில்கள் போல.                                 34 

 

 

           வடை மாங்கனி கரும்பு முதலியவைகளைப்  

                          படைத்தல் 

 

        வடைபடு திகிரி யாக மாங்கனி கவண்கல் லாக  

        உடைபடு கழைக்க ரும்பங் கொண்கதை யாகக் கொண்டு  

        கடையபடு முலகிற் கெல்லாம் காரிய கருத்தன் முன்னர்ப்  

        படைபடை எனச்சொ ரிந்தார் படைமுகத் திளைஞர் போல.                                       35 

 

 

            பால் பழவகை முதலியவைகளைப் படைத்தல் 

 

        குளங்கரை யாக அந்தக் குளத்தினுட் பசுவின் தீம்பால்  

        விளங்குறும் அமுத வேலை விடுத்தென விட்டார் சில்லோர்  

        உளங்கனி மூவர் செய்யுள் ஒத்தமுக் கனியும் ஏனோர்  

        வளங்கெழு தொடர்பு போலும் மற்றைய பழமும் தூர்த்தார்.                                       36 

 

 

          அல்லமதேவர் எல்லாவற்றையும் உண்டு வறிதிருத்தல் 

 

        எண்ணிலர் இடுவ இல்லாம் இனியன இன்னா என்னான்  

        கண்ணிமை ஒடுங்கும் முன்னர்க் கடிதயின் றுதவு றாமல்  

        வண்ணமென் மலர்க்கை வாங்கி வறிதிருந் தனனெங் கோன்தேர்ப்  

        பண்ணவன் பரிக்கு மேடு பள்ளமென் பனவங் குண்டோ.                                  37 

 

 

         உணவு படைத்தோர் இனி உணவில்லை எனல் 

 

        சற்றினும் உண்க என்று தமருப சரியா வண்ணம்  

        சற்றினும் இடுக என்று தம்பிரான் உண்ணா நின்றான்  

        மற்றிது கண்டு நின்றோர் மட்கலம் ஒழிய வேறு  

        பற்றிலை என்று நந்தி திருமுகம் பார்த்துச் சொன்னார்.                                           38 

 

 

        செல்வர்கள் தம் இல்ல உணவைப் படைக்க நினைத்தல் 

 

        உண்விளை யாடல் செய்யும் ஒருவனைக் கண்டு வேள்மேல்  

        கண்விளை யாடு நெற்றிக் கடவுள்மெய் யடியார் எல்லாம்  

        விண்விளை யாடும் சோலை வியனகர் இடத்திற் செல்வப்  

        பெண்விளை யாடும் தம்மிற் பேரனம் இடுதற் கெண்ணி.                                  39 

 

 

          உணவை வண்டிகளில் கொண்டுவந்து படைத்தல் 

 

        பாண்டில்மேல் ஏற்றி வந்தும் பானையிற் சுமந்து வந்தும்  

        வேண்டிய பாகம் உற்று வேறுவே றாய அன்னம்  

        ஆண்தகைக் குரவன் உண்ண அளவிலர் சொரிந்து யர்த்தார்  

        ஊண்தழல் வெறுக்கும் வண்ணம் ஊட்டுவம் என்பார் போல.                                      40 

 

 

         பலவகைப் பொருள்களையும் மலைபோற் குவித்தல் 

 

        மலையென அமல ஞான வாரிமுன் சொரிந்து யர்ப்பார்  

        இலைமலர் பசுங்காய் கந்தம் இளஞ்செழுந் தண்டாற் செய்த  

        உலையமை பல்கா யம்பெய் ஒண்கறி அமுது வேறு  

        பலபல முறைம யங்கப் படைப்பர்வல் விரைந்து வந்து.                                  41 

 

 

                       படைப்பவர் பலர் 

 

        குய்கமழ் கறிகள் இட்டுக் குவிப்பவர் சிலரெ டுத்து  

        நெய்கவிழ் கையர் ஆகி நிற்பவர் சிலர்நி ரம்பப்  

        பெய்கவிழ் சொரியென் றான்பால் பெய்பவர் சிலர்அ ளைந்த  

        கைகமழ் தயிர்குடத்தால் கவிழ்ப்பவர் சிலரங் கம்மா.                                            42 

 

 

          உணவு படைப்பவர்களின் பலவகைத் தொழில் 

 

        இட்டவர் மறிய அன்னம் இடுதற்கு விரைந்து செல்வார்  

        முட்டுவர் எதிர்ந டந்து மூரல்கை வாங்கி வாங்கிக்  

        கொட்டுவர் அடிசில் தந்த கூடைகள் கவிழ்த்தெ றிந்து  

        தட்டுவர் அனம்ப டைக்கும் தம்பிரான் அடியர் அன்றே.                                   43 

 

 

         சமைக்கப் பெறாதவைகளையும் படைக்க எண்ணுதல் 

 

        இன்னணம் படைத்த எல்லாம் இமைப்பினில் அயின்று சைவ  

        மன்னவன் வயிற்றின் வெந்தீ வளர்த்தினிர் நீயிர் எல்லாம்  

        என்னநல் வசவ தேவன் இருந்தபல் பண்டங் கொண்டு  

        முன்னவன் பசியை ஆற்ற முன்னிமற் றிதனைச் செய்தான்.                                      44 

 

 

           அவரை, பயறு, எள்ளு, அரிசி முதலியவற்றைப்  

                          படைப்பித்தல் 

 

        அவரையும் பயறும் எள்ளும் அரிசியும் அவலுங் கொள்ளும்  

        துவரையும் கடலை யுஞ்செஞ் சோளமும் செல்லும் புல்லும்  

        குவரையும் கயிலை யும்பொற் குன்றமும் போல ஞாலத்  

        தெவரையுங் களிப்புச் செய்ய எங்கணும் குவிப்பித் தானால்.                                      45 

 

 

           எல்லாம் உண்டு வசவண்ணர் மனத்தால் படைத்த  

                       உணவையும் உண்ணல் 

 

        குன்றெனக் குவித்த எல்லாம் கொள்ளெனக் கொண்டு நம்பன்  

        மென்றரைக் கணத்துள் இன்னும் மெல்வன கொணர்மின் என்ன  

        வன்றிறல் தண்ட நாதன் மனத்தினால் அவையி யற்றி  

        நின்றிடத் தம்பி ரானும் நினைவினால் அவைய யின்றான்.                                       46 

 

 

         உணவு படைத்தல், உண்டல் இவற்றில் இருவரும் ஒத்தனர்  

                               எனல் 

 

        நோக்கினால் அளித்த எல்லாம் நோக்கினால் தொலைத்தான் நந்தி  

        வாக்கினால் அளித்த எல்லாம் வாக்கினால் வள்ளல் உண்டு  

        போக்கினான் இடுதல் உண்ணல் என்னுமிப் போரின் கண்ணே  

        தூக்கினால் இருவர் தாமும் தோல்வியுற் றுடைந்தார் இல்லை.                                   47 

 

 

           இருவர் செயலையுங்கண்டு அடியார் வியந்து  

                       போற்றுதல் 

 

        படைத்திடும் தொழில்மு யன்ற பத்தன தியல்பும் அன்ன  

        துடைத்திடும் தொழிலின் நின்ற தூயவன் இயலும் நோக்கி  

        அடுத்தநற் பத்தர் எல்லாம் அனையவர் இருவர் சீரும்  

        எடுத்துரைத் துளம்வி யப்புற் றிறைஞ்சினர் ஒருங்கு மாதோ.                                      48 

 

 

          படைத்தற்கும் துடைத்தற்கும் வல்லோர் அல்லமரே  

                               எனல் 

 

        இடுதற்கு வல்லான் நந்தி இடும்பொருள் எவற்றை யுங்கை  

        தொடுதற்கு வல்லான் இந்தத் தூயவன் என்பர் இவ்வா  

        றிடுதற்கு வல்லார் இல்லை யென்பரிவ் வாறு நாங்கை  

        தொடுதற்கு வல்லார் தம்மைச் சொல்லவும் கேளேம் என்பார்.                                     49 

 

 

           அல்லமர் உயிருக்குள் நிற்பவரெனச் சென்னவசவர்  

                            கூறுதல் 

 

        கண்ணப்பன் அன்பி னானே கறியென அமைத்த ஊனை  

        உண்ணப்பன் ஊனின் வேறாம் உயிருள்நின் றமைவன் என்று  

        வண்ணப்பொன் அனைய சென்ன வசவதே சிகன்வ ணங்கி  

        விண்ணப்பம் செய்தான் துங்க விடைமுகம் கரந்தா னோடு.                                       50 

 

 

                               (வேறு)

 

              மடிவாலமாச்சி தேவரும் அவ்வாறே கூறுதல் 

 

        சென்ன வசவன் சொல்லியவச் செயலே செய்யும் செயல்என்று  

        மன்னும் அருளின் மடிவால மாச்சி தேவன் வந்துரைப்ப  

        என்னை உடையா னும்மொழியே எனது மனதைத் தேற்றுமது  

        பின்னை உளதோ கதகமலாற் பெருநீர் தெளிதற் கென்றுரைத்து.                                   51 

 

 

                வசவண்ணர், அல்லமரை வணங்குதல் 

 

        பொறிகள் கரணம் பூதங்கள் புலன்கள் மற்றும் பல்வகைய  

        கறிக ளாக ஆருயிரே கலந்துண் பதமா நீயுண்ணப்  

        பெறுக திலன்யான் எனநின்று பிறவிப் பிணிதீர் மருத்துவன்தன்  

        நறிய மலர்மெல் அடிபணிந்தான் நமையா ளுடைய அருள்நந்தி.                           52 

 

 

          அல்லமர் நினது அன்பினைக் காணவே வந்தேன் எனல் 

 

        வசவன் நிலைகண் டருள்ஞான வள்ளல் அல்ல மப்பெயரான்  

        பசியின் வந்தேன் அலன்பொருட்குப் படர்கா மக்கு வந்திலன்யான்  

        கசியும் நினது மனத்தன்பு காண வந்தேன் என்றேத்தி  

        இசையின் மலியும் அரனடியார் யாரும் மகிழ எடுத்தணைத்தான்.                          53 

 

 

             வசவண்ணர் தம்மைத் தாழ்த்திப் பேசி முன்நிற்றல் 

 

        கண்போல் உயிர்கள் கண்டறியக் கதிர்போல் காட்டும் பெருமானே  

        உண்போன் யானா ஊட்டுமுனக் கூட்டு வேனென் றெழுந்தமையால்  

        எண்போ தென்போற் பேதைமையார் இல்லை இல்லை யென்றனன்பின்  

        பண்போ டமலன் எதிர்நின்றான் பத்தி வடிவம் ஆயினான்.                                54 

 

 

          அடியார்கள் மிக்க மகிழ்வுடன் யாரைப் புகழ்வதெனக்  

                               கூறல் 

 

        செம்மை நெறியான் அருணந்தி தேவன் தனைப் புகழ்வமோ  

        பொய்ம்மை தீரும் அல்லமனைப் புகழ்வ மோவிங் கன்றியிவர்  

        தம்மை விழியாற் காண்பதற்குத் தவஞ்செய் துடலம் இதுபெற்ற  

        எம்மை யாமே புகழ்வமோ எனநின் றனர்தம் பிரானடியார்.                                       55 

 

 

         வசவண்ணர் அடியார்களை உண்பதற்கு அழைக்கச் செல்லுதல் 

 

        பரிந்த நந்தி முகநோக்கிப் பசித்தார் என்று நீதளரப்  

        பிரிந்த அந்த அடியர்தமைப் பிறங்கல் அனைய நின்மாடத்  

        தருந்த வணங்கிக் கொணர்தியென அறிவா னந்த மயன்கூற  

        விரைந்து விடைகொண் டெழுந்தன்பு வெள்ளஞ் சென்ற தவரிடத்தில்.                             56 

 

 

         தாம் அல்லமருக்காற்றும் வழிபாட்டை அடியார்பால் காணல் 

 

        சென் வசவன் அருட்குரவன் திருமே னியிற்றான் அங்கணிந்த  

        மன்றல் மலரும் சந்தனமும் வடிவின் திகழ மடிநிமிர்ந்து  

        தின்றல் முதல கறிமணக்கத் தேக்கு விடுத்து முகமலர்ந்து  

        கொன்றை கமழ்வே ணியனடியார் குழாங்கள் இருப்பக் கண்டனனால்.                              57 

 

 

         அடியார்களை உண்ண அழைக்க அவர்கள் உண்டேம் எனல் 

 

        கண்ட நந்தி அடிபணிந்து கடையேன் செய்த பிழையெல்லாம்  

        உண்டு பொறுமின் வருகவென உள்ளங் களிப்புற் றாங்கிருந்த  

        தொண்டர் வசவ நின்பெருமை சொல்ல எளிதோ வயிறாரப்  

        பண்டு போல வாய்கைதொழிற் படாமல் அயின்றேம் இன்றென்று.                         58 

 

 

           அடியார்கள் உணவிட்ட நின்புகழ் பெரிய தெனல் 

 

        தேவர் உண்ண அவியுணவு செந்தீ முகத்தில் இடுதல்போல்  

        ஓவில் யாங்கள் எவ்லேமும் உண்ண அடிசில் அல்லமன்தன்  

        நாவின் மருவ விடுநினை யோர்நாவோ புகழும் தரத்ததென  

        ஆவி அனைய நந்திசீர் அமலன் அடியார் புகன்றேத்தி.                                    59 

 

 

          சிவயோகி உண்பது எல்லாவுயிரும் உண்ணல் ஒக்கும்  

                               எனல் 

 

        உலகில் ஒருவன் சிவயோகி உண்ட தம்ம சராசரமாம்  

        அலகில் உயிர்கள் எலாமுண்ட தாகும் என்ன மறைகூறும்  

        இலகும் உரையைக் காட்சியான் இன்றிங் குணர உணர்த்தினான்  

        கலக வினைகள் தீர்க்குமருட் கண்ணன் திகழல் லமதேவன்.                                      60 

 

 

         அல்லமருக்குச் செய்தன யாவும் எமக்குச் செய்தன ஆகும்  

                               எனல் 

 

        ஆத லாலவ் வல்லமனை அருத்தல் எம்மை எலாமருத்தல்  

        பாதம் அவனைப் பணிதலெமைப் பணிதல் ஆகும் எஞ்ஞான்றும்  

        பேதம் இல்லை நல்வசவப் பெயரோய் செல்க என்னமலை  

        மாது தழுவக் குழைந்ததோள் வள்ளல் அடியார் தமைவணங்கி.                                   61 

 

 

         வசவண்ணர், அல்லமரிடம் அடியார் நிலைபற்றிக் கூறுதல் 

 

        மீண்டு நந்தி அல்லமனார் மென்பூங் கமல அடியிறைஞ்சி  

        ஆண்ட பெருமான் அடியார்கள் அன்னை உண்ட உணவுகரு  

        ஈண்டு மகவும் உண்ணல்போல் எந்தை உண்ட எலாமுண்டு  

        பூண்ட மகிழ்வோ டிருந்தனர்நீ புனைந்த மலரும் புனைந்தென்றான்.                                62 

 

 

          அல்லமர் எங்கும் நிறைந்தவரெனப் பெரியோர்  

                            மகிழ்தல் 

 

        மாறன் அடித்த அடிபட்ட மன்னும் உயிரின் திறமெல்லாம்  

        ஈறில் புகழ்க்கங் கணவசவன் இட்ட அடிசில் உண்டுபசி  

        ஆறி யிருந்த ஆதலினால் அல்ல மன்பூ ரணமென்னக்  

        கூறு மொழிமெய் மெய்யென்று கூறி உலகங் களித்ததால்.                                        63 

 

 

            அல்லமர், வசவண்ணர்க்கு மெய்ப்பொருளை உணர்த்த  

                             எண்ணுதல் 

 

        இவ்வா றருந்தி அமைதிபெறும் எங்கள் பரம யோகிதான்  

        தெவ்வா கியவைம் புலன்வென்ற திறல்கூர் வசவன் தனைமகிழ்ந்து  

        சைவா கமமும் நான்மறையுஞ் சாற்றும் பொருளை உணர்த்துதற்குச்  

        செவ்வாய் மலரத் திருவுள்ளஞ் செய்து தனிவீற் றிருந்தனனால்.                                   64 

 

 

இருபத்து மூன்றாவது - ஆரோகண கதி முடிந்தது

  

கதி 23 - க்குச் செய்யுள் - 1110

 


 

24. மனோலய கதி.

[இக் கதிக்கண், வசவண்ணர் தமக்கு அருள் செய்யுமாறு அல்லமதேவரை வேண்டுதலும், அல்லமதேவர் வசவண்ணரை நோக்கி, நான், எனது என்னும் பற்றை நீக்க வேண்டும். இருவினையற்றால் பிறப்பும் இறப்பும் இல்லை. விரிந்த மன முடையவனைப் பிறவி விடாது தொடரும். குவிந்த மன முடையவனைப் பிறவி தொடராது. உளளத்தின்கண் அவாவற்றிருத்தலே உயர்வுக்கெல்லாம் காரணமாம். நானே சிவமென்றுணர்ந்தவன் சிவமேயாவன். தன்னைச் சிவமாகக் காணாதவனைப் பிறப்பு விடாது. உள்ளத் தூய்மை யுடையவருக்குத் தாமே சிவமென்னும் மெய்ம்மை எளிதில் தோன்றும் என்பன முதலிய அறவுரைகளைக் கூறி, அருள் புரியுஞ்செய்தி கூறப்பெறுகின்றன.]

 

 

                       நூலாசிரியர் கூறல் 

         

               மயங்குதல் இன்றி மனோலயம் எய்தில்  

               சயந்தரு முத்தி தலைப்படும் என்று  

               நயந்தரும் அல்லம நாதன் விளங்க  

               இயம்பிய வண்ணம் இயம்புதும் அன்றே.                                        1 

 

 

                அல்லமதேவர் வசவண்ணர்க்குத்  

                   திருவருள்புரியக் கருதுதல் 

 

               பத்தர்கள் தங்கள் பசிக்குணும் ஐயன்  

               தத்துவ நல்கு கருத்தொடு தங்க  

               அத்தலை அன்பொ டகங்குழை கின்ற  

               வித்தக நந்தி விளம்புவன் அன்றே.                                                     2 

 

 

               வசவண்ணர் தமக்கு அருள்செய்யுமாறு  

                       அல்லமரை வேண்டுதல் 

 

               விருப்பு வெறுப்புரு வாம்விட யத்தோ  

               டிருக்கும் மயற்சகம் என்பதி லாமல்  

               பரப்பிர மத்தியல் பார்ப்ப தெனக்குத்  

               தெரித்தருள் என்றுரை செய்து துதித்தான்.                                               3 

 

 

                     அல்லமதேவர் கூறுதல் 

 

               அண்ணலும் ஆர்வம் அடைந்தருள் நந்தி  

               மண்ணுல கோர்தனை மாறுபு ஞானக்  

               கண்ணுறு மாறு கடாவினன் என்று  

               புண்ணிய னோடு புகன்றிடு கின்றான்.                                           4 

 

 

                   யான் எனது என்னும் பற்று  

                   அறுதல் வேண்டும் எனல் 

 

               யானென தென்ப திருந்திடு காறும்  

               ஞானம் உறானது நண்ணிலன் ஆகில்  

               தானிலை யாத சகந்திகழ் கிற்கும்  

               தீனம் இலாத சிவந்திக ழாதே.                                                 5 

 

 

                  கருத்துப் பிரமத்தை யடைந்தால்  

                       அகந்தையறும் எனல் 

 

               கறங்கெனு மாறுழல் கின்ற கருத்துப்  

               பிறந்திற வாத பெரும்பிர மத்தில்  

               இறந்திடில் யானென தென்னும் அகந்தை  

               மறைந்திடும் அன்றி மறைந்திடு மோதான்.                                              6 

 

 

               பற்றுமிக்க உள்ளத்தோடு வீடுபேற்றை  

                    விரும்புதல் பயனின்றெனல் 

 

               யானிது செய்வல் எனக்கிது செய்வர்  

               ஏனையர் என்ன இருந்த கருத்தான்  

               மேனிகழ் முத்தி விரும்பல் இருட்டால்  

               பானுவை மேவுறு பற்றை நிகர்க்கும்.                                           7 

 

 

                  இருவினைகளும் அற்றால் பிறப்பு  

                           இல்லை எனல் 

 

               இருவினை தாம்வரும் யானென லாலவ்  

               இருவினை யால்வரும் இன்பொடு துன்பம்  

               இருவினை யானெனல் இன்றெனில் இல்லை  

               இருவினை இல்லெனில் இல்லை பிறப்பே.                                              8 

 

 

                  மனத்தை அடக்கியவன் நிலத்தில்  

                           பிறவான் எனல் 

 

               மனத்தை அடக்க மனந்துணை ஆகும்  

               பினைத்துணை இன்றது பெற்றனன் ஆயின்  

               தனிச்சிவ மேயொரு தானென வாழ்வன்  

               நினைத்து மறந்து நிலத்துழ லானே.                                                    9 

 

 

                    மனத்தை அடக்கியவன்  

                  வீடுபேறெய்துவான் எனல் 

 

               வாரணம் ஆகும் மனத்தை அடக்கிற்  

               காரண மாயை களைந்தொழி யாத  

               பூரண மாகிய போதம் அடைந்திட்  

               டாரணம் ஓதும் அரும்பொருள் ஆவான்.                                        10 

 

 

                          (வேறு)

 

          விரிந்த மனமுடையவனைப் பிறவி விடாது; குவிந்த  

                மனமுடையவனைப் பிறவி தொடராது 

 

        விரிந்த நெஞ்சம் கருவியாம் விடயம் உணர விரியாமல்  

        ஒருங்கு நெஞ்சம் கருவியாம் தன்னை உணர ஒருங்காமல்  

        விரிந்த நெஞ்சம் உடையவனை விடாது பிறவி என்றுணர்க  

        ஒருங்கு நெஞ்சம் உடையானை உறாது பிறப்பென் றுணர்கவே.                                   11 

 

 

                 மனத் தூய்மையின் மாண்பு 

 

        அந்தக் கரண சுத்தியே அறிவை அறிதற்  சாதனமவ்  

        வந்தக் கரண சுத்திதனக் கறையும் கருமம் ஆரணங்கள்  

        அந்தக் கரண சுத்திதான் ஆவ தவாவற் றிடுதலே  

        அந்தக் கரண சுத்தியினால் அடைவன் பிண்டப் பெயரன்றே.                                      12 

 

 

            அவாவறுத்தலே அரும்பொருளெய்தக் காரணம் எனல் 

 

        ஆசை அறுதல் வீட்டின்பம் நேரே அடையக் காரணமாம்  

        ஆசை அறுதல் அலதில்லைப் பலநூல் அனைத்தும் ஆய்ந்திடினும்  

        ஆசை அறுவோன் சிவனாதல் திண்ணம் எனநன் றறிந்திருந்தும்  

        ஆசை உறுதல் என்கொண்டோ அந்தோ மனிதர் அறியேமே.                                      13 

 

 

          அழுக்கற்ற நெஞ்சில் இழுக்கற்ற பொருள் தோன்று  

                               மெனல் 

 

        ஆசு தீர்ந்த மனத்தினிடை அன்றி உணர்வு தோன்றாது  

        மாசு தீர்ந்த ஆடியிடை அன்றி வதனம் தோன்றுமோ  

        பாச நீங்கு பரஞ்சுடரை நினைக்கும் நினைவாற் பற்றுமனம்  

        காச நீங்கு கண்போலத் தன்னைக் காரண விளங்குமாம்.                                  14 

 

 

           நானே சிவமென்று எண்ணியவன் சிவமே யாவன் எனல் 

 

        வானம் அல்லேன் வளியல்லேன் அழல்நீர் அல்லேன் மண்அல்லேன்  

        ஞானம் அல்லேன் வினையல்லேன் நானே சிவமென் றெண்ணினோன்  

        ஊனம் இல்லா ஒருசிவமே ஆவன் இவ்வா றுன்னாதான்  

        ஈனம் எல்லாம் உடையஉடம் பெடுத்துச் சுழலும் எஞ்ஞான்றும்.                           15 

 

 

         தன்னைச் சிவம் என உணரானுக்குப் பிறப்பே துணை எனல் 

 

        தன்னைச் சிவமென் றறிந்தவனே அறிந்தான் தன்னை உண்மையாத்  

        தன்னைச் சிவமென் றறியாதான் அறியான் என்றும் தன்னுண்மை  

        தன்னைச் சிவமென் றென்றறிவன் அன்றே பாசம் தனைநீப்பன்  

        தன்னைச் சிவமென் றறியாதான் தனக்குப் பிறப்பே துணையாகும்.                         16 

 

 

          இறைவனோடு தன்னை வேறுபாடறக் காணல் வேண்டும்  

                               எனல் 

 

        தன்னைப் பேத மாய்க்காண்கை சகத்திற் காணப் பட்டதாம்  

        தன்னைப் பேதம்அறச் சிவமென் றறிவோன் ஞானி தானொருவன்  

        என்னக் கருதி மறையதுநீ ஆனாய் என்ன அத்துவிதம்  

        தன்னைப் புகலும் கண்டதனைச் சாற்றல் மறையின் கருத்தன்றே.                          17 

 

 

           மனத்தூய்மை உடையார்க்கு உண்மை தோன்றும் எனல் 

 

        தூய்தா கியநெஞ் சுடையார்க்குத் தாமே சிவமாத் தோன்றுமால்  

        தீதா கியநெஞ் சுடையார்க்குத் தெளிய அபேதம் மிகலின்றி  

        வேதா கமங்கள் விளம்பிடினும் விளங்கா தென்றும் வேறென்னும்  

        வாதால் அழிவர் அவர்மாயை மயக்க மயங்கு மதியினார்.                                18 

 

 

        மெய்ப்பொருள் கண்ட மேலோனை அனைவரும் போற்றுவர்  

                               எனல் 

 

        நெஞ்சம் சோகம் பாவனையில் நிற்க நிறுத்தி விடயங்கள்  

        அஞ்சும் துறவாத் துறந்தசிவ யோகி ஒருவன் அடியிணையில்  

        துஞ்சும் திருமால் முதலமரர் உள்ளம் அவனைத் துதித்திறைஞ்சா  

        தெஞ்சும் தவமா முனிவரிலை எனநான் மறையும் இயம்புமால்.                                  19 

 

 

           வசவண்ணர் முதலியோர் அல்லமதேவரைப் பணிதல் 

 

        என்று கருணை பொழிவிழியெம் கோமான் உண்மை இனிதியம்ப  

        நின்ற வசவ ராயனுளம் அழல்சேர் மெழுகின் நெக்குருகிச்  

        சென்று குரவன் அடிபணிந்தான் சென்ன வசவன் முதலாகத்  

        துன்று சரணர் உய்ந்தனம்யாம் என்று துதித்துத் தொழுதனரால்.                                   20 

 

 

            அல்லமதேவர் பக்குவமுள்ளோர்க்கு அருள்புரிதல் 

         

               இவ்வா றருளால் தனைஉணர்த்தி  

                       இருந்த ஞான இயல்வீரன்  

               சைவா சிரியன் அல்லமனித்  

                       தரையிற் பருவம் தலைசிறப்ப  

               உய்வான் நினைந்து தனைநோக்கி  

                       உற்ற உடியார்க் குபதேசம்  

               செய்வான் இயன்ற வடிவொடு சென்  

                       றருள்செய் செயல்செய் துலாவினான்.                                   21 

 

 

இருபத்துநான்காவது - மனோலய கதி முடிந்தது

  

கதி 24 - க்குச் செய்யுள் - 1131

 


 

25. மான்மிய கதி.

[இக் கதிக்கண், கயிலைமலையில் இறைவியானவள் இறைவனைப் பார்த்து, ‘நிலவுலகிற்குச் சென்ற நந்திதேவர் சிவகணங்கள் என்னுடைய நற்கலை ஆகியோர் யாது செய்கின்றனர்?’ என்று கேட்கிறாள். சிவபிரான், பலரும் பலவிடங்களிற் சென்று தங்கியிருப்பதையும், அல்லமதேவர் உலகில் வீரசைவத்தை வளர்ப்பதையும் கூறுகிறார். இறைவியானவள் வீரசைவம் எதனாற் சிறந்தது என்று கேட்கிறாள். அதற்கு இறைவன் பதிலளிக்கிறார். இறைவி உண்மையை உணர்ந்தேன் என்று இறைவனைப் பணிகிறாள். ‘நிலவுலகில் அல்லமதேவர் வேறுபாடு கருதாது அனைவருக்கும் அருள் புரிந்திருக்கிறார் என்னுஞ் செய்திகளும், நூய் செய்யப்பெற்ற காலம், நூற்பயன், வாழ்த்துரை’ ஆகியவைகளும் கூறப்பெறுகின்றன.]

 

 

                          நூலாசிரியர் கூறல் 

 

               வியனில மேவிய விழுமி யோர்க்கெலாம்  

               செயிரறும் அல்லமன் செய்த நன்றியைக்  

               கயிலையில் நுதல்விழிக் கடவுள் தன்புடை  

               மயிலிய லொடுசொலு மாறு கூறுவாம்.                                         1 

 

 

                அல்லமதேவர் ஞாலத்துள்ளார்க்கெலாம்  

                          நல்லருள் புரிதல் 

 

               ஆயிடை அருள் நந்திஆதி மாதவர்  

               நேயமோ டமர்வுற நிறுவி அல்லமர்  

               மாயிரு ஞாமேல் மானி டர்க்கெலாம்  

               போயருள் செயும்தொழில் பூண்டு வானரோ.                                             2 

 

 

                  கயிலையில் இறைவி சிவபிரானைப்  

                           பார்த்துக் கேட்டல் 

 

               இன்னணம் அல்லமன் இருநி லத்துறத்  

               தன்னிகர் கயிலையிற் சிங்கம் தாங்கிய  

               பொன்னணை மிசையமர் புராரி தன்னொடு  

               மின்னணி முலையுமை விளம்பல் மேயினாள்.                                  3 

 

 

                நிலவுலகிற்குச் சென்ற நந்தி முதலியோர்  

                         செய்தது என்னவெனல் 

 

               அல்லமன் அருள்பெறற் கடைந்த நந்தியோ  

               டெல்லையி னின்கணம் எனது நற்கலை  

               மெல்லியல் நிலமிசை மேவிச் செய்ததென்  

               சொல்லுதி எனஉமை இறைவன் சொல்லினான்.                                  4 

 

 

                       நந்திதேவர் வசவண்ணர் என்னும்  

               பெயர்கொண்டு அடியார்களைப் போற்றினார் எனல் 

 

               நந்திநல் வசவனாம் நாமங் கொண்டமர்ந்  

               தந்தமில் எம்மடி யவரை ஆமெனப்  

               புந்திசெய் தவர்விழை பொருள ளித்தமண்  

               சிந்திய நிலமிசைச் சிறப்புற் றானரோ.                                          5 

 

 

                  அக்கமாதேவி ஆசிரியனைத் தேடிச்  

                          சென்றாள் எனல் 

 

               அறஞ்செயும் நின்கலை ஆகும் மங்கைபோய்ச்  

               சிறந்துள உலகின்மா தேவிப் பேர்பெறீஇ  

               மறஞ்செயும் மதன்வலி மாள மாய்த்தெலாம்  

               துறந்தனள் குரவனைத் துருவிப் போயினாள்.                                            6 

 

 

                  சிவகணங்கள் பலவிடங்களிலும்  

                       தங்கினார்கள் எனல் 

 

               நண்ணிய நங்கண நாதர் தாமுமக்  

               கண்ணகன் ஞாலமுற் றெம்மைக் காணிய  

               வண்ணநல் வினைகள்பல் வகைபு ரிந்தவர்  

               எண்ணிய பலநகர் இடத்து வைகினார்.                                          7 

 

 

                அல்லமதேவர் வீரசைவத்தை உலகில்  

                       விளக்கினார் எனல் 

 

               அளக்கரும் விரதராய் அவரி ருந்திடத்  

               துளக்கமில் நிலையுடைத் தூயன் அல்லமன்  

               கொளக்குறை படாதபே ரின்பம் கூட்டுண  

               விளக்கினன் உலகினில் வீர சைவமே.                                          8 

 

 

                               (வேறு)

 

         அல்லமதேவர் வீரசைவத்தில் மக விருப்புடையர்  

                               எனல் 

 

        எவ்வகைச் சமயத் திற்கும் இறைவனே எனினும் நேயம்  

        சைவநற் சமயத் துற்றான் சைவத்தும் வீர சைவத்  

        தவ்வவர் பிறவி நீக்கும் அல்லமன் விருப்பம் உள்ளான்  

        மைவரிக் கயல்நெ டுங்கண் மடவரால் என்றான் வள்ளல்.                                9 

 

 

          வீரசைவம் எதனால் உயர்ந்தது என்று இறைவி  

                          கேட்டல் 

 

        சமயமெவ் வகையி னுந்தான் சைவமேல் ஆய தென்கொல்  

        அமையுநல் வீர சைவம் அதனினும் சிறந்த தென்கொல்  

        இமையவர் பரவும் முக்கன் எம்பிரான் அருள்செய் என்ன  

        உமையவள் வினவ வேழம் உரித்தவன் விளம்பும் அன்றே.                                      10 

 

 

           வீரசைவம் உயர்ந்ததற்குக் காரணம் கூறுதல் 

 

        உரைக்குமெச் சமயத் திற்கும் உத்தர பாகம் சைவம்  

        தரிக்குமச் சைவத் திற்குத் தரமென வீர சைவம்  

        தெரிக்குநற் காமி காதி சிரத்தினில் திகழும் கண்டாய்  

        அரிக்குரற் சிலம்ப ரற்றும் அடிமலர்த் தடங்கண் நல்லாய்.                                 11 

 

 

         வீரசைவத்தை மேற்கொண்ட பின்னரே வீடுபேறு  

                       அடைவன் என்றல் 

 

        புறந்தரு சமயம் புக்குப் புறமலாச் சமயத் தெய்தி  

        அறந்திகழ் சைவ முற்றாங் கதிற்சரி தாதி ஆற்றிச்  

        சிறந்துள வீர சைவம் சேர்ந்தபின் வீடு நண்ணும்  

        நறுந்தளிர் கவற்று மேனி நனைமலர் வல்லி அன்னாய்.                                   12 

 

 

           அருமறை முடிவும் ஆகம முடிவும் வீரசைவத்தில்  

                               ஒத்திருத்தல் 

 

        அருமறை முடிவும் சீர்சால் ஆகம முடிவும் ஒத்துப்  

        பொருமறம் இலாமல் முற்றும் பொருளினை விளங்கக் காட்டித்  

        தருமுறை அதனால் வீர சைவமே தலைமைத் தாமிவ்  

        விருமறு வறுநன் னூலும் இதிற்பிர மாணம் ஆகும்.                                             13 

 

 

         தூய்மைவழி வீரசைவத்தன்றி வேறெங்கும் இல்லை  

                               எனல் 

 

        ஒன்றொரு விடயம் தன்னில் உறுசுவை நிறைவென் றாக்கி  

        என்றுமெம் முகத்த ளித்திட் டெம்பிர சாதங் கொண்டு  

        துன்றுறு கரும முன்னாத் தூய்மையிவ் வீர சைவத்  

        தன்றிவே றொருமார்க்கத்தின் அடுக்குமோ வடுக்கண் மாதே.                                      14 

 

 

         அல்லமர், வீரசைவத்தை உலகில் வளர்த்தார் எனல் 

 

        ஆதலால் வீர சைவத் தறிவினை அறியச் செய்தான்  

        மாதர்மா தேவி யாமுன் வண்கலை மாதி னுக்கும்  

        மேதையாம் வசவ னாதி மெய்யடி யவர்க்கும் ஞான  

        போதகா சிரியன் என்னும் பொருவிலல் லமன்வேற் கண்ணாய்.                                   15 

 

 

        அடியார்கள் பக்குவங்கண்டு அல்லமர் அருள்புரிந்தார் எனல் 

 

        பருவபே தத்தாற் பேதப் படும்பொருள் பருவங் கண்டு  

        திரிவின்மா முனிவர் யோகர் சித்தர்கள் முதலா னோர்க்குப்  

        பொருவிலா அல்ல மப்பேர்ப் புண்ணியன் புகன்றாட் கொண்டான்  

        குரவவார் குழல்ம டந்தாய் என்றனன் குன்ற வில்லி.                                            16 

 

 

        அல்லமதேவர் மாயையைக் கடந்தார்; நான் உன் திருவாக்கால்  

            தெளிந்தேன் என்று இறைவி இறைவனைப் பணிதல் 

 

        அம்மைஉள் மகிழ்வு பொங்க அல்லமன் பெருமை கேளா  

        மம்மர்செய் துளங்க லக்கு மாயையைக் கடந்தான் என்றன்  

        மெய்ம்மைநின் பவள வாயால் விளம்ப நான் அறிந்தேன் என்று  

        மும்மதில் வலிதொ லைத்த முக்கணா யகனைத் தாழ்ந்தாள்.                                     17 

 

 

         அல்லமதேவர் வீடுபேறளிக்கும் தொழிலில் நிற்றல் 

 

        அங்குமை மாதி னோடும் அல்லமன் பெருமை கூறித்  

        திங்கள்வெண் முகிழ்பு னைந்த செஞ்சடைப் பரமன் மேவ  

        இங்கருள் மேகம் என்னும் இணையிலெங் குருகு கேசன்  

        மங்கல முத்தி யின்பம் வழங்குமத் தொழிலில் நின்றான்.                                 18 

 

 

          வேறுபாடின்றி அல்லமர் அனைவர்க்கும் வீடுபே  

                            றளித்தல் 

 

        மூத்தவர் இளைஞர் நோயர் முகிழமுலை மாதர் நல்ல  

        தீத்தொழி லாளர் பொல்லாத் தீத்தொழி லாளர் என்றும்  

        பார்த்திலன் யாவர் மாட்டும் பரிந்தருள் மாரி பெய்து  

        காத்தனன் அமல ஞான காரணன் குருகு கேசன்.                                         19 

 

 

           அல்லமதேவர் மாதவர் உள்ளந்தோறும் வாழ்தல் 

 

        இன்னவா றருளி னானே இவருற விவர்வே றென்னா  

        அன்னைபோல் உயிர்கட் கெல்லாம் ஆரருள் ஒருங்கு செய்தே  

        னுன்னையா ளெனக்கொண் டாளும் இணையடிக் குருகு கேசன்  

        மன்னுமா தவர்கள் நெஞ்ச மலர்தொறும் வாழா நின்றான்.                                        20 

 

 

        இந்நூலினைப் படிப்போரும் கேட்போரும் அறம், பொருள், 

        இன்பம், வீடு என்னும் நாற்பெரும் பேற்றினையும் எய்துவர் 

 

        எல்லொளி இரவி போல இருள்மலம் இரித்தி லங்கும்  

        அல்லமன் சரிதம் ஓதில் அறம்பொருள் இன்பம் வீடாம்  

        நல்லன பயனோர் நான்கும் நண்ணுவன் இதனைக் கேட்க  

        வல்லநல் வினையி னானும் மற்றவை மருவி வாழ்வன்.                                21 

 

 

          அறிவு, மக்கட்பேறு, செல்வப் பேறு, நிலை பேறு  

                       முதலியன உண்டாதல் 

 

        மதியிலார் மதிஞர் ஆவர் மகவிலார் மகவு யிர்ப்பர்  

        நிதியிலார் நிதிப டைப்பர் நிலையிலார் நிலைத்து வாழ்வர்  

        பதியிலார் பதிகி டைப்பர் பழுதிலிவ் விருபத் தைந்து  

        கதியினால் நிரம்பு காதை கற்றவர் கூறக் கேட்பின்.                                              22 

 

 

                  நூல் செய்யப்பெற்ற காலம் 

 

        பார்கெழு சகாத்த மூவைஞ் ஞூற்றெழு பானான் காவ  

        தாகிய கரநா மங்கொள் ஆண்டுறு விடைஞா யிற்றில்  

        சீர்கெழும் அல்ல மன்றன் திருவிளை யாடற் காதை  

        கார்கெழு மிடற்றெங் கோமான் கருணைகொண் டியம்பினானே.                                    23 

 

         இந்நூலைப் படிப்பவர் இறைவனேயாவர் என்றல் 

 

        மாசறும் அல்ல மப்பேர் வள்ளல்தன் சரிதம் தன்னின்  

        ஆசறுஞ் செய்யுள் எல்லாம் அன்புடன் படிப்பார் தம்மை  

        ஏசறு மனிதர் என்ன இசைப்பதோ கரித்தோல் போர்த்த  

        ஈசனென் பதுவே அன்றி ஏதுமற் றேது அம்மா.                                          24 

 

 

            நல்வினையாளர் முதலியோர் வாழ்த்து 

 

        புண்ணியர் உலகில் வாழ்க புலஞ்செறு நோன்பு வாழ்க  

        பெண்ணொரு பாகன் பூசை பேணிவாழ அடியர் வாழ்க  

        கண்ணுதல் ஒருவன் சார்ந்த கற்புடைச் சைவம் வாழ்க  

        அண்ணலல் லமன்சீர் கேட்கும் ஆதர வாளர் வாழ்க.                                             25 

 

        பொருவரும் பூதி வாழக பூதியை அணிவோர் வாழ்க  

        திருவளர் கண்டி வாழ்க சிறந்தஅஞ் செழுத்தும் வாழ்க  

        குருவருள் வாழ்க மெய்யைக் கூறுநா வோர்கள் வாழ்க  

        வெருவரும் பிறவி தீர்க்கும் வித்தகர் வாழ்க வாழ்க.                                            26 

 

        அல்லமன் சரிதச் செய்யுள் அதனிலோர் செய்யுள் கற்க  

        வல்லவர் அருத்தம் ஓத வல்லவர் வரைய வல்லோர்  

        செல்வமீ தென்ன அன்பாற் செவிப்புலன் நிறைக்க வல்லோர்  

        வல்லவ ரும்பூ மீதில் என்றும்வாழ்ந் திடுக அன்றே.                                             27 

 

 

இருபத்தைந்தாவது - மான்மிய கதி முடிந்தது

கதி 25 - க்குச் செய்யுள் - 1158

 

- பிரபுலிங்க லீலை முற்றிற்று -
-----

 

 

Related Content

Eclectic Vedantism By The Rev. Thomas Foulkes

The Virasaiva Religion

இட்டலிங்க அபிடேக மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

இட்டலிங்க அகவல் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

குறுங்கழிநெடில் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்