logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

மாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)

மாலை மூன்று

1. ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி 
2. களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை 
3. திருக்காளத்தி இட்டகாமிய மாலை 


ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி


(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பொற்றா மரைப்பூந் தடமுமரி

பூசித் தரிய பேறுமிகப்
பெற்றா னெனவான் றோரெடுத்துப்

பேசு மமலன் சினகரமும்
அற்றார்க் குதவு மங்கயற்க

ணம்மை திருக்கோ யிலுங்கண்டோர்
உற்றார் பாசப் பிணியறவே

யுடையா ரகில வுலகமுமே. [1]

வையை நதிசூழ் தென்மதுரை

வாழு மமலன் றிருவருளால்
மெய்யை யுறுவீட் டின்பமெலாம்

மேவ லாகும் விழைநெஞ்சே
பொய்யை விழையிற் பயனெவனீ

புகலா யவனைப் பொருந்தாயேல்
வெய்யை பின்னை யுய்யைமிக

வீணே யுடையாய் விளம்பிடிலே. [2]

தாயைப் புணர்ந்து தந்தைதனைத்

தடிந்திட் டோனு மாரியன்றன்
வேயை யுறுதோண் மனைவிழைந்த

வெய்ய பாவி தானுமருள்
மேய கதைநீ கேட்டறிந்தும்

விளங்கு கூட னாயகன்சீர்
தூயை யாக வுரைத்துரைத்துத்

தொழாமை யென்னே சொன்னெஞ்சே. [3]

என்ன வென்ன சொற்றிடினு

மெனக்கு வசமா காதுதிரிந்
தன்ன மென்னத் தனமென்ன

ஆடை யென்ன வாவன்மரீஇத்
துன்ன வென்ன துயருற்றாய்

சோதி மதுரைச் சீர்கேட்கக்
கன்ன மென்ன புண்ணியஞ்செய்

தனவோ வுரைத்தி கடைநெஞ்சே. [4]

மாயா மயமிவ் வுடலமென

மதியா தரிவை மாரைவிழைஇ
நோயா னுடங்கி வருந்தினையால்

நுவலக் கேட்டி மடநெஞ்சே
தாயா யுயிர்க்குத் தண்ணளிசெய்

தாணு வேணு புரத்தலைவன்
தேயா வளமார் தென்மதுரை

சேறி நலங்கள் சேருதற்கே. [5]

கூட னகரி னன்பருக்காக்

குணங்கள் கடந்த வமலனெட்டெட்
டாடல் புரிந்தா னியாவரையு

மாடல் புரிந்தான் அடியவரை
நாடல் புரிந்தான் மடநெஞ்சே

நவிலக் கேட்டி சிறிதேனும்
வாடல் புரியா திருத்தியவன்

மலர்ப்பூந் தாளை வணங்குதியே. [6]

வளமார் மதுரை யரன்சீரை

வாயால் வழுத்தி யவன்பதத்துத்
தளமார் மலரிட் டருச்சித்துத்

தகைசால் துதியாற் றோத்தரித்தே
உளமாங் கவன்பா லுறுத்தினருக்

குறுகண் ணியாது மிலையாமால்
களமார் தீயர்ச் சேர்பாவங்

கலவார் கலப்பார் கவின்றிருவே. [7]

திருவு முருவுந் திறமுமெங்குஞ்

சேருங் கீர்த்தி யோடறிவும்
மருவு மருவார் துயரமிலை

வண்மை யாவு மருவுவரால்
கருவுங் குறியுங் குணமுமுக்

காலங் கடந்தே யருவுருவோ
டருவு முருவுங் கடந்தொளிரு

மமலன் மதுரை யணைந்தவரே. [8]

ஆல வாயி லமர்ந்தருளு

மமல னருளை யன்றிநெஞ்சே
சால வாயின் வேறுதுணை

சாற்றற் குண்டோ வவன்பெயரைக்
கோல வாயி னுரைத்துரைத்துக்

குறித்தே யவன்றாண் மலரிருப்பின்
சீல வாயி னருள்புரிவன்

றீர்ப்பன் றுயர மியாவையுமே. [9]

செல்வக் கூட னகருறையுஞ்

சிவனைப் பணிந்து செழுஞ்சோதி
வில்வத் தளிரோ டிளமதியம்

வேய்ந்த வேணி விகிர்தனே
எல்வத் திரமைந் துடையாயெம்

மீசா வாச விதழியுள்ளாய்
மல்வக் கரையா வெனநிதமும்

வாழ்த்தி வணங்கு மடநெஞ்சே. [10]


2. களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை


[குறிப்பு. ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது]

காப்பு
வெண்பா

பூப்பார் களந்தைப் புரகரே சன்மீதில்
வாய்ப்பா மிரட்டைமணி மாலைக்குக் - காப்பாவார்
பொன்கருத்த ரென்கருத்த ரென்னவரு போரானை
என்கருத்த ரென்கருத்த ரே.

நூல்

அணிகொண்ட தென்களந்தை யாயி னடியேனிப்
பிணிகொண்ட சென்மம் பெறுக - பணியா
மருமாலை யேசத்ய வாசகர்தாட் கிட்டுத்
திருமாலை யேசத் தினம். [1]

தினம்போற்றும் போதகத் துள்ளே தியானமுஞ் செய்யுமன்பர்
மனம்போற் றமிய னுடன்பொருந் தாவஞ்ச நெஞ்சையுமென்
இனம்போற் குறித்ததன் றீதையென் மேலிட் டிடுதிகண்டாய்
கனம்போற்றும் பூங்குழல் பங்கா களந்தையிற் கண்ணுதலே. [2]

கண்ணுதலைப் பொற்களந்தைக் கண்ணுதலைச் சேர்ந்திருந்தும்
கண்ணுதலைக் காணாத காட்சிபோற்-கண்ணுதலை
எட்டியிருந் தேனல்லே னென்பார்கள் வீடுபெற்றால் [3]
எட்டியிருந் தேனாகு மே.

ஆகத்தி லேயொரு பாதியென் னம்மைக் களித்தவடன்
பாகத்தி லேயொன்று கொண்டா யவண்மற்றைப் பாதியுமுன்
தேகத்திற் பாதியுஞ் சேர்ந்தா லிருவருண் டேசிவனே
ஏகத் திராம லிருப்பாய் களந்தையு மென்னெஞ்சுமே. [4]

என்னெஞ்சு கல்லாகு மென்றுமிந்தக் கல்லுமையாள்
பொன்னஞ் சரணம் பொறாதென்றும் - அந்நாள்
இடத்தாளை யம்மிமே லேற்றுகளக் காட்டாய்
இடத்தாளை யஞ்சாதே யின்று. [5]

இன்றொக்க வேண்டினெவ் வாறொக்கு மோவெழில் சேர்களந்தைக்
கோபுரங் குன்றொக்குங் கோபுர மொக்குமக் குன்றதுபோல்
அன்றொக்க வேண்டுமென் னல்வினை தீவினை யாமிரண்டும்
என்றொக்கு மோவினித் தென்களக் காடனை யான்பெறவே. [6]

யான் பிறவி நீந்த வெழிற்களந்தைப் பொற்கோயில்
தான்புணை காண்சத்ய வாசகன்மீ-கான்காண்
அடிப்படங் காட்டு மராப்போலும் பாய்தான்
கொடிப்படங் கம்பமே கூம்பு. [7]

கூம்பாத சிந்தையிற் கொண்டாடு வார்குழம் பாதசெந்தே
னாம்பாக மான தமிழைச் செழுங்கொன்றை யாவணியும்
வேம்பாக நான்சொல் கவிகளைத் தானு மிகவிரும்பிப்
பாம்பா வணிந்து கொளுமே களந்தைப் பரஞ்சுடரே. [8]

பரம்படியாய் நல்லோரும் பாவிகளும் பெற்ற
பிரம்படிபோ லுன்னடியான் பெற்றேன்-நிரம்பும்
குதிரைகளைக் காட்டாய்மா கோமாயு வான
மதுரைகளக் காடாகு மற்று. [9]

மற்றோ ரொருவரைக் கண்டதுண் டோசத்ய வாசகராய்
உற்றோர் கழஞ்செடை வெண்ணெய்க்குத் தாய்க்கொரு கோடிபொய்கள்
சொற்றோருந் தாழை மலர்சாட்சி யென்றுசொன் னோருமல்லால்
கற்றோர்கள் வம்மின்கள் சென்மின்கள் போமின் களந்தையிலே. [10]

களந்தை வரும்விடமுங் கண்ணுதலு மாகக்
களந்தை வருமரனைக் காணான்-வளர்ந்தவொரு
மாலைக்கண் டானென்று சொற்றக்காற் றேசமிரு
மாலைக்கண் டானென்னும் வந்து. [11]

உம்பரை வாழ்வித்த கண்டங்கண் டேமொண் புரமெரித்த
அம்பரை யெற்றிய சூலங்கண்டேமரு ளுங்கொலையும்
நம்பரை பாகற் கிவையாக லாலவர் நாமஞ்சொல்லா
வம்பரை வையுங்க டென்களக் காடரை வாழ்த்துங்களே. [12]

வாழ்நிலைசேர் பொன்னுலகம் வண்களந்தைக் கோபுரத்தின்
ஏழ்நிலைமே லேறினா லேறலாம் - பாழ்மனமே
அன்புன்னைக் காட்ட வரனறிவ தேயருமை
தென்புன்னைக் காட்டனடி சேர். [13]

சேரார் புரஞ்செற்ற சேவக னாருக்கென் றீவினைகள்
ஓரா யிரம்புர மாய்விடு மோவுறை யுங்களக்கா
டாராயு நல்ல பதியான வர்க்கடி யேன்மனந்தான்
கூராரு முட்களக் காடாகு மோவருள் கூட்டுங்கொண்டே. [14]

கொண்டாடு வேன்பணிவேன் கும்பிடுவேன் கைகொட்டிக்
கொண்டாடு வேன்களந்தைக் கொற்றவா-புண்டாவக்
கைச்சிலை யாலடியேன் கல்லா லெறியேனை
நச்சிலை யாலடியே னை. [15]

அடியேற வேண்டுமென் னெஞ்சத்தை யென்றுமெய் தாமலன்றோ
குடியே றிடக்களக் காட்டுக்குள் ளேகுளிர் புன்னைவைத்துக்
கடியேறு தண்புனற் பொற்றா மரைகண்டு கண்ணுதற்கும்
வடியேறு கண்ணிக்கும் பொற்கோயி லுங்கட்டி வைத்தனரே. [16]

வைத்த பொருளு மனையாளு மைந்தருமே
கைத்த பொருளென்று கைவிட்டுப்-பத்திபண்ணும்
ஊரா ரணியரென வுன்னுவார்க் கில்லையே
சோரா ரணியர் துணை. [17]

துணையான நாரி புவியையெல் லாம்பெறுந் தொல்லைவடிக்
கணையா னதுபுவி யெல்லா மெடுத்துண்ணுங் கைச்சிலைக்கல்
அணையாக நின்று புவியினைத் தாங்குமென் றாலினிநாம்
பணையார் களந்தைப் பதியார் செயலையென் பன்னுவதே. [18]

பன்னுமறை யோனேபரமன் முடிதேட
உன்னு மதியா லுனைத்தாங்கும்-அன்னமாய்ச்
சேணங் களந்தையே தேய்ந்தாயே திக்கறியாக்
கோணங் களந்தையோ கூறு. [19]

கூற்றும் பயந்து களந்தைக் குழந்தைக்கு மேமுகமன்
சாற்றும் படிவென்ற தாளாரு மாவுடைத் தாயருமே
மாற்றும் பிறவிப் பணிகட்கெல் லாமலை மேன்மருந்தாய்
ஆற்றும் பிடகரு மாயிருப் பார்க ளணித்துவந்தே. [20]


திருக்காளத்தி இட்டகாமிய மாலை

காப்பு
(நேரிசை வெண்பா)

தேமிகுகா ளத்திச் சிவக்கொழுந்தைப் போற்றுமிட்ட
காமிய மாலைக் கலித்துறைக்கு-நேமிபுகழ்
தாளத் தடைவுகொள்பா தாளக் கணபதிதாள்
மேளத் துடன்றுணையா மே.

நூல் 
(கட்டளைக் கலித்துறை)

திருமான் மலரயன் றேடுமெம் மானன்பர் தேக்கவின்பம்
தருமா நடம்புரி பெம்மான் கயிலைத் தலத்தன்றக்கன்
மருமான்வில் வேடர்தங் கோமா னிடுங்கண் வலையிற்சிக்கும்
பெருமா னிடத்திற் சிறுமானொ ரானையைப் பெற்றதுவே. [1]

தமரக் கடலைக் கடைந்த முகுந்தன் றனக்குமெய்க்கே
பமரக்கண் ணாயிரத் தாற்குமெட் டாது பனிக்கதிர்வேற்
குமரக் கடம்பன்முன் னத்தியை யீன்ற கொடியையுங்கொண்
டமரர்க் கரசொரு கல்லா லடியி லமர்ந்ததுவே. [2]

தருமந் தவஞ்சற் றறியாத வேடுவன் றன்செருப்பு
மருமுந்து வேணிக் கணிமா மலரவன் வாயுதகத்
திருமஞ் சனக்குடம் பல்லா லவன்மென்று தின்றதசை
அருமந்த போனக மன்றோநங் காளத்தி யப்பருக்கே. [3]

ஆகாச மாநட்ட மாடீ பரிந்துமை யாளுறைந்த
பாகா செகத்திற் பிறவாம லுக்குன் பதந்தருவாய்
வாகா தவரு மரற்றமால் யானை வதைத்ததன்றோல்
ஏகாச மிட்ட சொருபாதென் காளத்தி யீச்சுரனே. [4]

மச்சிட்ட வீடு சுடலைபன் மாலை மலரவன்கம்
நச்சிட்ட மாகிய கற்பம்வெம் பேய்படை நன்றுதின்ற
உச்சிட்டம் போனக மென்பா பரண முடைபுலித்தோல்
அச்சிட்டர் போற்றுங் கயிலையிற் காளத்தி யப்பருக்கே. [5]

அணியேன்வெண் ணீறு துதியேனின் னாமமெய் யன்பினுன்றாள்
பணியேனின் றொண்ட ருடனணு கேன்பெரும் பாவஞ்செய்த
திணியேன் றவமிலி யானாலுங் காத்தரு டெய்வசிகா
மணியே சிவக்கொழுந் தேகயி லாய மலைக்கொழுந்தே. [6]

போதுசெய் வேன்மனம் புன்மைசெய் வேனம்பிப் போந்தவர்க்குச்
சூதுசெய் வேனுந்தி தான்வளர்க் கைக்குத் தொடங்கிப்பல
தீதுசெய் வேனென் பெரும்பாவந் தானின்று தீருகைக்கிங்
கேதுசெய் வேனிறை வாதிருக் காளத்தி யீச்சுரனே. [7]

அங்கணத் தாரெழுந் தற்புதத் தாமரை யாதரிப்போர்
வங்கணத் தாலெனை யஞ்சலென் பாய்மத னைச்செயித்த
செங்கணத் தாரத்ன மிட்டிமை யாநிற்குஞ் சித்ரபணிக்
கங்கணத் தாய்பொன் முகரிக்கல் லாலடிக் காளத்தியே. [8]

பெருக்க மலக்குடி லைப்பேணி யேயுழல் பித்தனென்கை
சுருக்க மனம்பொறுத் தானாலு மென்மிடி தூளெழப்பார்
மருக்கம லத்துறை வேதற்கெட் டாத வடிவினனே
எருக்க மலர்ச்சடை யாய்திருக் காளத்தி யீச்சுரனே. [9]

பெண்ணப்பன் வேள்வி தனிலே யுகந்து பெருகப்பிடித்
துண்ணப் புகுந்த சுரரையெல் லாந்துரந் தோடச்செய்தாய்
விண்ணப்ப மொன்றுண்டு கேளடி யேன்மெய்ப் பிணிகளைவாய்
கண்ணப்ப னெச்சி லுகந்தவ னேதிருக் காளத்தியே. [10]

துறைவாரி நஞ்சண்ட கோளத்தை முட்டத் தொடங்கியநாள்
நிறைவா னவர்களுந் தாமிற வாமன்முன் னின்றதுபோற்
பிறைவார் சடைமுடிப் பிஞ்ஞக னேயென் பிணிதொலைப்பாய்
இறைவா வுனைநம்பி னேன்றிருக் காளத்தி யீச்சுரனே. [11]

பாலிலுவண்டான சுடைமட்கி நஞ்சம் பரந்ததுபோல்
வாலிப ரூபஞ்சிங் காரத்தின் றீமை மயக்கிடவென்
மேலினில் வந்திடும் பொல்லாப் பிணிதனின் மீட்டருள்வாய்
சேலுகள் வாவி செறிகயி லாயச் சிவக்கொழுந்தே. [12]

நெருப்புக் குகையைப் புழுமொய்க்கு மோவிந்த நீணிலமேல்
இருப்புக் கபாடத்தைச் செல்லெய்து மோவிமை யோர்க்கரசே
விருப்புற்றுன் றாளைத் தியானித்த பேர்க்கு மிடிவருமோ
செருப்புச் சடையண்ண லேகயி லாயச் சிவக்கொழுந்தே. [13]

நொச்சியுங் கொன்றையுஞ் சூழ்சடை யாயென்னை நோவுசெய்யும்
மெய்ச்சிலு கான பிணிதொலைப் பாயன்று வேடனிட்ட
எச்சிலுந் தின்று பசியுங் கெடாம லிருந்தென்மனக்
குச்சி லுறைபவ னேகயி லாயச் சிவக்கொழுந்தே. [14]

சிந்தை வியாகுலந் தந்தடி யேன்மெய்யிற் றீங்குசெய்யும்
இந்த வியாதி தனைக்களை வாயியற் சுந்தரனா
கந்தவி யாமற் பரவைக்குத் தூதுசெல் காரணனே
தந்த வியாளப் பணியாய்கை லாயச் சதாசிவனே. [15]

எலிதான் கலக்கண்ணி னீர்களிற் பூனை யிரங்குமதோ
கிலிதான் பிடித்து மனமே தியங்கிப்பற் கெஞ்சியிட்டால்
வலிதாய பாவம் விடுமோதென் காளத்தி வானவனம் 
புலிதாழ் சடையன் கடாட்சமுண் டாயிடிற் போய்விடுமே. [16]

மேலடி வைக்குஞ் சினமாறன் றன்சுர மீட்டகதை
போலடி யேன்மெய்ப் பிணிகளை வாயண்டர் போற்றநெடு
மாலடி தேட வயன்முடி தேட மறைந்தொருகல்
லாலடி தேடி யமர்தரு காளத்தி யாண்டவனே. [17]

கோழைச் சவலை யடியேனைக் காத்தருள் குற்றமிலா
மாழைச் சயிலத் தனுவுடை யாயுன்னை வாழ்த்தப்பொறா
மோழைச் சமணைக் கழுவேற் றினாற்கு முலைகொடுத்த
ஏழைச்சி பங்கின னேதிருக் காளத்தி யீச்சுரனே. [18]

நாவுக் குருசி தனைத்தேடிப் பல்லுயிர் நாடியந்த
ஆவுக்குத் தீங்குசெய் யும்பஞ்ச பாதக னாமென்றனைக்
கோவித்துக் கீழ்நர கிற்படுத் தாமற் குறித்தருள்வாய்
காவித் தடவயல் சூழ்கயி லாபுரிக் காளத்தியே. [19]

மாரக் கடம்பனைப் பெற்றகண் ணாவுனை வாழ்த்துமென்மேற்
கோரப் பிணிகெடப் பார்த்தருள் வாய்நின்சொற் குற்றமென்ற
கீரற்கு நின்சொரு பங்காட்ட வேண்டிக்கிளைத்தெழுந்த
ஈரச் சடாமுடி யாய்திருக் காளத்தி யீச்சுரனே. [20]

நின்பணி தன்னின் முயலேனின் னாம நினைந்தருள்வார்
முன்பணி யேன்றிரு நீறணி யேன்வஞ்ச மூர்க்கனியான்
மின்பணி தொண்டர் தலைமண்டை கொண்டது மீட்டதுபோல்
என்பிணி யைக்களை வாய்திருக் காளத்தி யீச்சுரனே. [21]

வீணுந் தகைமையு மேம்பாடுங் கற்று மிகவுழன்று
சாணுந்தி பேணித் திரிதனன் றோசெஞ் சடாமுடியும்
பூணுமுந் நூலுந் திருமார்புந் தூக்கிய பொற்பதமும்
காணும் பதந்தரு வாய்கயி லாபுரிக் காளத்தியே. [22]

தூற்று மருந்தும்பொய் சோலை மருந்தும்பொய் சூழ்கடலில்
ஏற்று மருந்தும்பொய் மானிடர் காளஞ் செழுத்தையன்பாற்
சாற்று மருந்தவ மில்லாத வன்மெய் தனிற்பிணியை
மாற்று மருந்துதென் கைலாய மேய மலைமருந்தே. [23]

பணிக்கு மருந்து கருட னலாதில்லை பாரிலிருள்
அணிக்கு மருந்து தவனன லாதில்லை யானபசி
தணிக்கு மருந்தன்ன தானமல் லாதில்லை சாற்றுகிலென்
பிணிக்கு மருந்து கயிலாய ரன்றிப் பிறரில்லையே. [24]

நெஞ்சடை யாமுன் னினைவழி யாமுன் னெடும்புலன்கள்
அஞ்சடை யாமுன் னறிவழி யாமு னயர்ந்துகண்கள்
பஞ்சடை யாமுன் னடியேனைக் காத்துன் பதந்தருவாய்
செஞ்சடை யாய்பர மாகயி லாயச் சிவக்கொழுந்தே. [25]

தீக்கிரை யாயெறும் புக்கிரை யாய்மண் டினற்கிரையாய்
நாய்க்கிரை யாய்வன் னரிக்கிரை யாயுட னான்சுமந்தேன்
வாய்க்கிரை தேடி வருந்தாம லாண்மன் மதனையுங்கட்
டீக்கிரை யாக்கிய தேவே கயிலைச் சிவக்கொழுந்தே. [26]

குச்சித்த னன்னெறி யில்லாத வன்வெய்ய கோபனின்பால்
மெய்ச்சித்த மற்றவ னானாலுங் காத்தருள் வேதப்பிரான்
உச்சித் தலைகொய் தவனேகண் ணப்ப னுமிழ்ந்ததசை
இச்சித் தமுதுசெய் தோனேதென் காளத்தி யீச்சுரனே. [27]

நேர்ந்தாரை வாழ்வித்து நேராரைத் தாழ்விக்கு நின்மலனே
பூந்தாரை யிந்து முடித்தவ னேயுனைப் போற்றிவந்து
சேர்ந்தேனை வாழ்வித்தென் மெய்யிற் பிணிதனைத் தீர்த்தருள்வாய்
சார்ந்தாரைக் காப்பவ னேகயி லாபுரிச் சங்கரனே. [28]

அப்புரத் தத்தசை யென்பாற் சமைத்தவென் னாகத்துற்ற
துப்புரத் தைக்குலைக் கும்பிணி தீர்த்தருள் சோபனனீ
செப்புரத் திற்பெண் ணழுத்துங் கணையுஞ் சிலையுங்கொண்டு
முப்புரத் தைச்செற்ற காளத்தி யீச முழுமுதலே. [29]

நாகரை யாகத்திற் பூண்டவ னேயந்த நாட்புரத்தைச்
சேகரை யாடலிற் செற்றவ னேமலர்த் தேமுதலாம்
மாகரை யாளும் பரனேயென் மெய்ப்பிணி மாற்றிவலி
யேகரை யாமல்வைப் பாய்திருக் காளத்தி யீச்சுரனே. [30]

கூற்ற நமனை யுதைத்தவ னேவெங் கொடியபுலித்
தோற்றங் கரையுள்ள சோதியென் னோவைத் தொலைத்தருள்வாய்
போற்று நரையுகந் தாள்பவ னேதெய்வப் பொன்முகரி
யாற்றங் கரையி லமர்ந்தருள் காளத்தி யற்புதனே. [31]

32, 33, 34 (காணவில்லை) **********

வெங்களை மூடி முளைதனில் வாடுமென் மெய்ப்பிணிநீத்
தங்களைந் தேயெனை யாண்டருள் வாய்கொன்றைத் தாரினை
யும்திங்க ளையுமர வங்களை யுந்திருத் தார்களையும்
கங்களை யுங்கட்டு செஞ்சடை யாய்திருக் காளத்தியே. [35]

பல்லாலொர் மாத்தசை மென்றிட்ட வற்குன் பதமளித்தாய்
வில்லா லசுரரைச் செற்றா யெனது மிடிதொலைப்பாய்
சொல்லா லமரர் துதிக்குங் கயிலைச் சுடர்க்கொழுந்தே
கல்லான் மரத்தி னிழலுறை வாய்திருக் காளத்தியே. [36]

பெரும்புனல் கொன்றை சிறுபிறை சூடிய பிஞ்ஞகனே
இரும்பனைப் பித்தளை யாகாமற் காத்தரு ளேமனென்னும்
துரும்பனைத் தூணி லவதரித் தேசெற்ற சோதிபெற்ற
கரும்பனை வெம்பொடி செய்தவ னேதிருக் காளத்தியே. [37]

அருமந்த வாலிப மெல்லா நடுங்கவென் னாகந்தன்னில்
வருமந்த மான பிணிதொலைப் பாய்நச்சு வாயரவம்
தருமந்த மாணிக்கந் தன்னைக்கை யாலள்ளித் தன்கதிராற்
கருமந்தி செம்மந்தி யாகுங் கயிலையிற் காளத்தியே. [38]

நேமியன் றன்னைக் கலையாக்கி யிந்தை நிலத்தரைத்துத்
தோமிய றக்கன் றலைவெட்டிப் பாரதி துண்டங்கொய்து
மாமிதன் காதை யரிந்தவ னேயென் மனத்துக்கிட்ட
காமியந் தந்தருள் வாய்கயி லாபுரிக் காளத்தியே. [39]

காமத் தளவின் முயல்பஞ்சு பாதகன் கள்வன்செயும்
தோமத் தனையு மிடியத் தனையுந் தொலைத்தருள்வாய்
சேமத்தைச் சேர்சடைப் பாகீ ரதிபொங்கிச் சிந்தச்சிந்த
ஈமத் திருநடஞ் செய்பவ னேயேழிற் காளத்தியே. [40]

குலைமதி யென்றுளம் பேணேன் விரகக் கொடுமையிற்பட்
டலைமதி கேட னெனினு மடியனை யாண்டருள்வாய்
விலைமதி யாத கழையீன்ற முத்தம் வெயிலைத்தள்ளிக்
கலைமதி காட்டுங் கயிலாய மாமலைக் காளத்தியே. [41]

புழைக்கை மலைவெங் கராவாயிற் பட்டுப் புராதனவென்
றழைக்கும் பொழுதரி காத்தது போலெனை யஞ்சலென்பாய்
உழைக்கண் பிதுங்கப் புலிதண்டை மோத வுறவினர்போல்
கழைக்கண்கள் முத்துதிர்க் குங்கயி லாபுரிக் காளத்தியே. [42]

பண்ணிடந் தான்செவி யாகிடப் பாணர்ப் பரித்தவனே
பெண்ணிடந் தான்வைத்த பிஞ்ஞக னேயென் பிணிதொலைப்பாய்
மண்ணிடந் தானயன் காணாத நின்றன் வடிவையெல்லாம் 
கண்ணிடந் தானுக் கிருப்பாக நல்கிய காளத்தியே. [43]

அல்விளக் குந்திங்க ளங்கமுந் தேயச்செல் லாதவதனார்
பல்விழக் கண்டவ னேயெனை யாண்டருள் பைந்தொடியார்
இல்விளக் கப்புது மாலைக்கு நாகங்க ளீன்றுவைத்த
கல்விளக் கேற்றுங் கயிலாய மாமலைக் காளத்தியே. [44]

சிலம்பார்க்கத் தூது நடந்தவ னேயென்றன் சிந்தைவியா
குலம்பாற்றி மெய்யிற் பிணிகளை வாய்பெருங் கோலவெண்ணித்
திலம்பார்த் தெடுத்தரி பற்காட்டுங் கொள்கை சிறுபடிமக்
கலம்பார்ப்ப தொக்குங் கயிலாய மாமலைக் காளத்தியே. [45]

செல்வைத்த புற்றிற் பணிவந்த தென்னமெய் தேம்பச்சொட்டைச்
சொல்வைத் துறையும் பிணிதொலைப் பாய்புனஞ் சூழ்கிளியை
வில்வைத்த நன்னுதல் வேடிச் சியர்கவண் மீதுரத்னக்
கல்வைத்து வீசுங் கயிலாய மாமலைக் காளத்தியே. [46]

நண்டா னதுகட்டும் வானரம் போல நடுங்கியுள்ளம்
திண்டாட வந்தெனைச் சாதிக்கு மெய்ப்பிணி தீர்த்தருள்வாய்
அண்டாத மாலயன் றான்முத லான வமரர்குழாம்
கண்டா தரிக்குங் கயிலாய மாமலைக் காளத்தியே. [47]

மிடிக்கே யலுத்து மெலிகின்ற பாதகன் மீண்டுமிந்தக்
கடிக்கே யிளைத்துமெய் நோவாமற் காமின் கனத்தனத்தார்
மடிக்கே கிடத்த வுழல்கின்ற மாயன் வணங்கக்கல்லால்
அடிக்கே யுறைந்த பரனேதென் காளத்தி யற்புதனே. [48]

நிரைப்பண் ணளியிசை மேவிய பூங்குழ னேரிழைமா
தரைப்பின் றொடர்ந்து துயர்படு வேனெனைத் தாங்கியருள்
திரைப்பெண்ணைத் தாங்கு சடையாய் திருவுந்திப் பொன்முகரிக்
கரைப்புண்ணி யாபர மாகயி லாபுரிக் காளத்தியே. [49]


·  This file was last revised on 15 Feb 2003 

Related Content