logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து

 

கோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து
அரும்பாக்கிழான் மணவில் கூத்தனான காலிங்கராயன்
நரலோகவீரன் திருப்பணிகள்
12ம் நூற்றாண்டின் முற்பகுதி
[=குலோத்துங்க சோழன் >> விக்ரம சோழன்]
[1070-1120 >> 1118-1125]

1. தில்லைத் திருப்பணிகள்


தில்லை சபாநாயகர் கோயிலின் முதல்சுற்று வெளிப்பக்க வடப்புறச் 
சுவரில் கல்வெட்டாகப் பொளிக்கப்பட்ட வெண்பாக்கள் தென்னிந்தியக் 
கல்வெட்டுத் தொகுதி IV # 225 பக்கங்கள் 33-34, A.R.120 of 1888

நேரிசை வெண்பா

(பிழைதிருத்திய பாடங்கள்)

1 - (கொடுங்கை பொன்வேய்ந்தமை) 
எல்லை கடலா இகல்வேந் தரைக்கவர்ந்த 
செல்வமெலாம் தில்லைச்சிற் றம்பலத்துத் - தொல்லைத் 
திருக்கொடுங்கை பொன்வேய்ந்தான் திண்மைக் கலியின் 
தருக்கொடுங்க வேல்கூத்தன் தான்

2 - (அம்பலத்தை செம்பொன்வேய்ந்தமை) 
தில்லையில்பொன் னம்பலத்தைச் செம்பொனால் வேய்ந்துவா 
னெல்லையைப் பொன் னாக்கினான் என்பரால் - ஒல்லை 
வடவேந்தர் செல்வமெலாம் வாங்கவேல் வாங்கும் 
குடைவேந்தன் தொண்டைதார் கோ

3 - (சிற்றம்பலம் பொன்வேய்ந்தமை) 
தென்வேந்தன் கூன்நிமிர்ந்த செந்தமிழர் தென்கோயில் 
பொன்வேய்ந்து திக்கைப் புகழ்வேய்ந்தான் - ஒன்னார்க்கும் 
குற்றம்பல கண்டோன் கோளிழைக்கும் வேல்கூத்தன் 
சிற்றம் பலத்திலே சென்று

4 - (ஆடம்பலம் பொன்வேய்ந்தமை) 
பொன்னம் பலக்கூத்தர் ஆடம் பலம்மணவிற் 
பொன்னம் பலக்கூத்தர் பொன்வேய்ந்தார் - தென்னர் 
மலைமன்னர் ஏனை வடமன்னர் மற்றக் 
குலமன்னர் செல்வமெலாம் கொண்டு

5 - (பேரம்பலம் பொன்வேய்ந்தமை) 
தில்லைச்சிற் றம்பலத்தே பேரம் பலம்தன்னை 
மல்லற் கடற்றானை வாள்கூத்தன் - வில்லவர்தம் 
அம்புசேர் வெஞ்சிலையின் ஆற்றல்றனை மாற்றியகோன் 
செம்பு வேய்வித்தான் தெரிந்து

6 - (பசுநெய் வார்க்க செம்பொற்கலம்) 
ஏனை வடவரசர் இட்டிடைந்த செம்பொனால் 
ஏன லெனதில்லை நாயகற்கு - ஆனெய் 
சொரிகலமா மாமயிலைத் தொண்டையர்கோன் கூத்தன் 
பரிகலமா செய்தமைத்தான் பார்த்து

7 - (படிகள் பொன்தகடு பொதிந்தமை) 
தெள்ளு புனற்தில்லைச் சிற்றம் பலத்தார்க்கு 
தள்ளிஎதி ரம்பலந்தா தன்பாதம் - புள்ளுண்ண 
நற்பயிக்கம் கண்ட நரலோக வீரன்செம் 
பொற்படிக்கம் கண்டான் புரிந்து

8 - (ஆராதனையில் ஊது செம்பொற்காளம்) 
இட்டான் எழில்தில்லை எம்மாற் கிசைவிளங்க 
மட்டார் பொழில்மணவில் வாழ்கூத்தன் - ஒட்டாரை 
இன்பமற்ற தீத்தான மேற்றினான் ஈண்டொளிசேர் 
செம்பொற் தனிக்காளம் செய்து

9 - (கர்ப்பூரம் தீபம், உயர்ந்த விளக்கு) 
ஆடும் தனித்தேனுக் கம்பலத்தே கர்ப்பூரம் 
நீடுந் திருவிளக்கு நீடமைத்தான் - கூடா 
ரடிக்கத் திணைநரியும் புள்ளும் . . . 
கடிக்கப் பெருங்கூத்தன் தான்

10 - (திருச்சுற்று விளக்கு ஈடு) 
பொன்னம் பலம்சூழப் பொன்னின் திருவிளக்கால் 
மன்னுந் திருச்சுற்று வந்தமைத்தான் - தென்னவர்தம் 
பூவேறு வார்குழலா ரோடும் பொருப்பேற 
மாவேறு தொண்டையார் மன்

11 - (திருமஞ்சனக்கட்டம்) 
சிற்றம் பலத்தானை ஏற்றினார் தெவ்விடத்துக் 
கொற்றத் தால்வந்த கொழுநெதியால் - பற்றார் 
தருக்கட்ட வஞ்சினவேல் தார்மணவிற் கூத்தன் 
திருக்கட்ட மஞ்சனமும் செய்து

12 - (பாலமுது) 
தொல்லைப் பதித்தில்லைக் கூத்தற்குத் தொண்டையர்கோன் 
எல்லைத் திசைகரிகள் எட்டளவும் - செல்லப்போய்ச் 
சாலமுது பேய்தடிக்க தாறட்டிக்கத்தங்கு தொண்டையர்கோன் 
பாலமுது செய்வித்தான் பரிந்து

13 - (நாழி நாழியாக தேன்) 
ஆடுந் தெளிதேனை ஆயிர நாழிநெய்யால் 
ஆடும் படிகண்டான் அன்றினர்கள் - ஓடந் 
திறங்கண்ட தாளன் சினக்களிற்றான் ஞாலம் 
அறங்கண்ட தொண்டையர்கோன் ஆங்கு

14 - (திருப்பதிகம் ஓத மண்டபம்) 
நட்டப் பெருமான் ஞானங் குழைந்தளித்த 
சிட்டப் பெருமான் திருப்பதியம் - முட்டாமைக் 
கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்தெவ் வேந்தர்கெட 
வாட்போக்கும் தொண்டையர்கோன் மன்

15 - (திருப்பதிகம் ஓதுவித்தமை) 
மல்லக் குலவரையால் நூற்றுக்கால் மண்டபத்தே 
தில்¨ப் பிரானுக்குச் செய்தமைத்தான் - கொல்ல 
மழிவுகண்டான் சேரன் அளப்பரிய ஆற்றற் 
கிழிவுகண்டான் தொண்டையர்கோ னேறு

16 - (திருச்சுற்று மாளிகை) 
தில்லைப் பெரிய திருச்சுற்று மாளிகை 
எல்லைக் குலவரைபோ லீண்டமைத்தான் - தொல்லைநீர் 
மண்மகளைக் தங்கோன் மதிகுடைக்கீழ் வீற்றிருத்தி 
உண்மகிழும் தொண்டையர்கோ னுற்று

17 - (தீர்த்த நீர் குளம் கல்சாத்துவித்தல்) 
புட்கரணி கல்சாத்து வித்தான்பொற் கோயிலின்வாய் 
விக்ரணம் பார்படத்தன் மேல்விதித்து - திக்களவு 
மாநடத்தி கோனடத்தும் வாள்கூத்தன் மண்ணிலறம் 
தானடத்தி நீடுவித்தான் தான்

18 - (சுற்று வீதிகளில் விளக்கு, படிமண்டபம்) 
வீதிசூழ் நல்விளக்கும் வீற்றிருக்க மண்டபமும் 
மாதுசூழ் பாகமும் மகிழ்ந்தார்க்கும் - போதுசூழ் 
தில்லைக்கே செய்தான் திசைகளிறு போய்நிற்கும் 
எல்லைக்கே செல்கலிங்க ரேறு

19 - (அம்மைக்கு திருமாளிகை) 
நடங்கவின்கொ ளம்பலத்து நாயகச்செந் தேனின் 
இடங்கவின்கொள் பச்சையிளந் தேனுக் - கடங்கார் 
பருமா ளிகைமேல் பகடுதைத்த கூத்தன் 
திருமாளி கைஅமைத்தான் நன்று

20 - (அம்மை கோயில் திருச்சுற்று) 
எவ்வுலகும் எவ்வுயிருமீன்று மெழிலழியாச் 
செவ்வியாள் கோயில் திருச்சுற்றைப் - பவ்வஞ்சூழ் 
எல்லைவட்டம் தங்கோற் யகல்வித்த வாட்கூத்தன் 
தில்லைவட்டத் தேயமைத்தான் சென்று

21 - (அம்மைக்கு அபிஷேகம்) 
வாளுடைய பொற்பொதுவின் மன்றத்தே நடமாடும் 
ஆளுடைய பாவைக் கபிடேகம் - வேளுடைய 
பொற்பினான் பொன்னம்பலக் கூத்தன் பொங்குகட 
வெற்பினாற் சாத்தினான் வேறு

22 - (அம்மைக்கு பொன்னாடைகள்) 
சேதாம்பல் வாய்மயிற்கு தில்லையந் தேவிக்கும் 
பீதாம்பரஞ் சமைத்தான் பேரொலிநீர் - மோதா 
வலைகின்ற வெல்லை வெல்லை அபயனுக்கே யாக 
மலைகின்ற தொண்டையார் மன்

23 - (அம்மைக்கு அபிஷேக எள்நெய்) 
செல்வித் திருத்தடங்கண் ணாள்நகரித் திலைக்கே 
நல்லமகப்பா லெண்ணெய் நாள்தோறும் - செல்லத்தான் 
கண்டாரும் பயர்கோன் கண்ணகனீர் ஞாலமெல்லாங் 
கொண்டான் தொண்டையர் கோன்

24 - (கொடிமரம்) 
பொன்னுலகு தாம்புலியூர் தொழுவதற்கு . . . 
குன்னிழி கின்ற சொர்க்கமால் - தென்னர் 
. . டா மற்செகுத்த கூத்தன்செம் பொன்னின் 
கொடிபுறஞ் செய்தகு மா (பிழை திருத்தமில்லை)

25 - (வெளிவீதி உலா பரிகலங்கள்) 
ஆதிசெம்பொன் அம்பலத்தி லம்மா னெழுந்தருளும் 
வீதியும்பொன் வேய்ந்தனனாய் மேல்விளங்கும் - சோதிக் 
கொடியுடைதாய்ப் பொன்னால் குறுகவலான் ஒன்றும் 
படியமைத்தான் தொண்டையர்கோன் பார்த்து

26 - (வெளிவீதி உலாவில் குங்கிலிய தூபம்) 
நாயகர் வீதி எழுந்தருளும் நன்நாளால் 
தூய கருவெழு தூபத்தால் - போயளிசேர் 
வான்மறைக்கக் கண்டானிப் பார்மகளை வண்புகழால் 
தான்மறைத்த கூத்தன் சமைத்து

27 - (வெளிவீதி திருவிழா உலாக்கள்) 
பாருமை மொட்பச் செய்வீர் சீரிய 
திருவுருவ மானதிருக் கோலம் - பெருகொளியால் 
காட்டினான் தில்லைக்கே தாசனனாய் வெங்கலியை 
ஓட்டினான் தொண்டையர் கோன்

28 - (சந்தனம்?) 
என்றும்சிற் றம்பலத் தெங்கோமா நந்தீசன் 
கெடைமுலகே தகச் சாந்தமைத்தான் - கல்லுவந் 
துயினக்கொளவீர் கொள்வென்னல் வெல்களர்களிரி 
வரித் திருத் தொண்டையர்கோன் வென்று (பிழை திருத்தமில்லை)

29 - (கணங்களுக்கு திருவமுது) 
மன்றுதிகழ் தில்லைக்கே மாணிக்க மரசகணம் 
துன்றுபொழில் மணவில் தொண்டைமான் - என்றும் 
இருந்துண்ணக் கண்டான் இகல்வேந்தர் ஆகம் 
பருந்துண்ணக் கண்டான் பரிந்து

30 - (வெளி வீதிகளில் திருமடங்கள்) 
தில்லை தியாகவலி விண்சிற் பஞ்சமினி 
எல்லை நிலங்கொண்டி றையிழிச்சி - தில்லை 
மறைமுடிப்பார் வீதி மடஞ்சமைத்தான் மண்ணோர் 
குறைமுடிப்பார் தொண்டையர் கோ

31 - (அணிசெய் முத்து மாலைகள்) 
என்றும் பெறுதலில் ஏறா யெழிற்புலியூர் 
மன்றில் நடனுக்கு மாமுத்தக் - குன்று 
கொடுத்தருளி மண்ணிற் கொடுங்கலி வாராமே 
தடுத்தான்தொண் டையர்கோன் தான்

32 - (திருமுறைகள் செப்பேட்டில் பதிவு) 
முத்திறத்தா ரீசர் முதற்திறத்தைப் பாடியவா 
றொத்தமைந்த செப்பேட்டி னுள்ளினெழு - தித்துலக்கி 
லெல்லைக் குரிவா யிசையெழுதி னான்கூத்தன் 
தில்லைச் சிற்றம்பலத்தே சென்று

33 - (நந்தவனச் சுற்று) 
தில்லை வளரும் தெளிதே னொளிதழைப்ப 
நல்லதிரு நந்தா வனஞ்சமைத்தான் - வில்லத்திருக் 
கோட்டங்கொள் வாழ்வேந்தர் கொற்றக் களியானை 
யீட்டங்கொள் காலிங்க ரேறு

34 - (அம்மைக் கோயில் பெரியமாட கோபுரம்) 
நூறாயிரமுக மாங்கமைதான் நோன்சி னத்தின் 
மாறாக வெல்களிற்று வாட் கூத்தன் - கூறாளும் 
வல்லிச் சிறுகிடைக்கு வான்வளர மாடஞ்செய் 
தில்லைச் சிற்றம்பலத்தே சென்று

35 - (மாசிக்கடலாட்டுவிழா மண்டபம், நல்ல சாலை) 
மாசிக்கடலாடி வீற்றீருக்க மண்டபமும் 
பேசற்ற வற்றைப் பெருவழியும் - யீசற்கு 
தென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன் திசையனைத்தும் 
மன்புலியா ணைநடக்க வைத்து

36 - (ஆயிரம் பால்பசுநிரை) 
ஓங்கியபொன் னம்பலத்தார்க் கோரா யிரஞ்சுரவி 
ஆங்களித்தா னேற்றெதிர்ந்தா ராயிழையார் - தங்கா 
தொருக்கி யுடலாவி உயிர்நாட் போக்கி 
இருக்கவென்ற தொண்டைய ரேறு

37 - (சுடலையமர்ந்தார் கோயில் கற்றளி) 
தொல்லோர்வாழ் தில்லைச் சுடலையமர்ந் தார்கோயில் 
கல்லால் எடுத்தமைத்தான் காசினியிற் - தொல்லை 
மறம்வளர்க்க வெங்கலியை மாற்றி வழுவாம 
லறம்வளர்க்க காலிங்க னாய்ந்து

38 - (தில்லை நகர்க்கு குடிநீர் ஏரி மதகு) 
தில்லைமூ வாயிரவர் தங்கள் திருவளர 
எல்லையின் பேரேரிக் கெழில்மதகு - கல்லினாற் 
தானமைத்தான் தேர்வேந்தர்க் கெல்லாம் தலம்தவிர 
வானமைத்த தொண்டையார் மன்

தில்லைப்பணிகள் வெண்பாக்கள் முற்றிற்று


2. திருவதிகை வீரட்டானத் திருப்பணிகள்

திருஅதிகை வீரட்டானர்கோயில் புரமெரித்தான் திருமேனிமுன் 
அமைந்த அலங்கார மண்டபத்து தூண்களில் பொளித்துள்ளவை 
S.I.E. Annual Report, 369 of 1921

நேரிசை வெண்பா

(பிழைதிருத்திய பாடங்கள்)

1 - (பொன் தோரணவாயில், பட்டிகை அணிவகைகள்) 
பொன்மகர தோரணமும் பூணனியும் பட்டிகையும் 
தென்னதிகை நாயகர்க்குச் செய்தமைத்தான் - மன்னவர்கள் 
தன்கடைவாய் நில்லாதார் தாள்வரைவாய் நின்றுணங்க 
மின்கடைவேற் காலிங்கர் வேந்து

2 - (புரமெரி போர் விழா சதுக்கம்) 
மின்னிலங்கு போர்சதுக்க மேகடம்ப மென்னிவற்றைத் 
தென்னதிகை நாயகர்க்குச் சேர்த்தினான் - தென்னவர்தம் 
தோணோக்கும் வென்றி துரந்தே சுரநோக்க 
வாணோக்குங் காலிங்கர் மன்

3 - (அம்மை, அப்பர் ஆட்டிற்கு, ஆயிர நாழி நெய்) 
வில்லில் வெயிலனைய வீரட்டர் தந்திருநாள் 
நல்லநெயீரைஞ்ஞூற்று நாழியால் - வல்லி 
யுடநாடக் கண்டான்தன்னொன்னலார்க்குக் கண்க 
ளிடனாடச் செல் கூத்த னீண்டு

4 - (மாளிகை. மண்டபம்) 
மண்டமும் மாளிகையும் வாழதிகை வீரட்டர்க் 
கெண்டிசையு மேத்த வெடுத்தமைத்தான் - விண்டவர்கள் 
நாள்வாங்க சேயிழையார் நாண்வாங்க நற்றடக்கை 
வாள்வாங்குங் காளிங்கர் மன்

5 - (நூற்றுக்கால் மண்டபம்) 
மன்னொளிசேர் நூற்றுக்கால் மண்டபத்தை மால்வரையால் 
மன்னதிகை நாயகர்க்கு வந்தமைத்தான் - மன்னர் 
இசைகொடாதோட இகல்கொண்டாங் கெட்டுத் 
திசைகொடாக் கூத்தன் தெரிந்து

6 - (மடைப்பள்ளி) 
மன்னுதிரு வீரட்டார் கோயில் மடைப்பள்ளி 
தன்னைத் தடஞ்சிலையா லேசமைத்தான் - தென்னர் 
குடமலைநா டெறிந்து கொண்டவேற் கூத்தன் 
கடமலையால் யானையான் கண்டு

7 - (உண்ணாழி, சுற்று புதிப்பித்தமை) 
அதிகை அரனுக் கருவரையாற் செய்தான் 
மதுகை நெடுங்குடைக்கீழ் மன்னர் - பதிகள் 
உரியதிருச் சுற்றும் உடன்கவர்ந்த கூத்தன் 
பெரிய திருச்சுற்றைப் பெயார்த்து

8 - (அறச்சாலை, காமக்கோட்டம்) 
அருமறைமா தாவின் அறக்காமக் கோட்டம் 
திருவதிகைக் கேயமையச் செய்து - பெருவிபவம் 
கண்டான் எதிர்ந்தா ரவியத்தன் கைவேலைக் 
கொண்டான்நம் தொண்டையார் கோ

9 - (செம்பொனால் வேய்ந்தமை) 
தென்னதிகை வீரட்டம் செம்பொனால் வேய்ந்திமையோர் 
பொன்னுலகை மீளப் புதுக்கினான் மன்னுணங்கு 
முற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த 
கொற்றத்தான் தொண்டையார் கோ

10 - (கற்பக வனம் ஒத்த நந்தவனம்) 
வானத் தருவின் வளம்சிறந்த நந்தவனம் 
ஞானத் தொளியதிகைத் நாயகர்க்குத் - தானமைத்தான் 
மாறுபடுத்தாருடலம் வன்பேயட பகிர்ந்துண்ணக் 
கூறுபடுத்தான் கலிங்கர் கோ

11 - (அதிகை ஊருக்கு வளநீர் ஏரிக்கரை) 
எண்ணில் வயல்விளைக்கும் பேரேரி யீண்டதிகை 
அண்ணல் திருவிளங்க ஆங்கமைத்தான் - மண்முழுதும் 
தன்கோன் குடைநிழற்கீழ் தங்குவித்த வேற்கூத்தன் 
எங்கோன் மணவிலா ரேறு

12 - (5000 பாக்கு மர வனம்) 
ஐயருப தாயிரமாம் பூகம் அதிகையிலே 
மைவிரவு கண்டார்க்கு வந்தமைத்தான் - வெய்யகலி 
போக்கினான் மண்ணைப் பொதுநீக்கி தங்கோனுக் 
காக்கினான்தொண் டையார்கோ னாங்கு

13 - (500 பால் பசு) 
அராப்புனையும் நம்மதிகை வீரட்டா னர்க்குக் 
குராற்பசுவைஞ் ஞூறு கொடுத்தான் - பொராப்புரஞ்சாய் 
கண்டருக்கு தான்கொடுத்த காலிங்கன் காசினுக்கு 
தண்டருப்போல் நின்றளிப்பான் தான்

14 - (புது ஊரும் ஏரியும் ) 
வாரிவளம் சுரக்க வானதிகை நாயகருக்குக் 
கேரியு மூரும் இசைந்தமைத்தான் - போரிற் 
கொ¨லாடு வெஞ்சின வேற்கூத்தன் குறுகார் 
மலைநாடுகொண்டபிரான் வந்து

15 - (மலர் பூக்கும் செல்வழிகள்) 
அம்மான் அதிகையிலே அம்பொற் தடமிரண்டும் 
செம்மா மலரிகச் செய்தமைத்தான் - கைம்மாவின் 
ஏட்டநின்ற வெம்பரிமாக் கண்டருளென் றீண்டரசர் 
காட்டநின்ற வேற்கூத்தன் கண்டு

16 - (நல்லூர் ஏரிப்பணி) 
அருளா கரநல்லூர் ஆங்கமைந்த ஏரி 
இருளார் களத்ததிகை ஈசன் - அருளாரச் 
சென்றமைத்தான் தென்னாடன் சாலேற்றின் திண்செருக்கை 
அன்றமைத்தான் தொண்டையர்கோன் ஆங்கு

17 - (வரிகளில்லா தேவதானமாக்கல்) 
போதியி னீழற் புனிதற் கிறையிலிசெய் 
தாதி அதிகையின்வாய் ஆங்கமைத்தான் - மாதர்முலை 
நீடுழக்காண் ஆகத்து நேரலரைத் தன்யானை 
கோடுழக்காண் கூத்தன் குறித்து

18 - (அம்மைக்கு முத்துமாலைகள்) 
மாசயிலத் தம்மைக்கு வாழதிகை வீரட்டத் 
தீசன் இடமருங்கில் ஏந்திழைக்கு - மாசில் 
முடிமுதலா முற்றணிகள் சாத்தினான் வேளான் 
குடிமுதலான் தொண்டையர் கோன்

19 - (செம்பால் அழகிய பரிகலங்கள்) 
ஆற்றற் படைவேந்தர் ஆற்றா தழிந்திட்ட 
மாற்றற்ற செம்பொனால் வாழதிகை - ஏற்றுக் 
கொடியார்க்குக் கோலப் பரிகலமாச் செய்தான் 
படியார்கடகும் சீர்கூத்தன் பார்த்து

20 - (பாவைஏந்து கைவிளக்கு) 
அண்ணல் அதிகையாற்கு கையிரண்டு நல்விளக்கு 
மண்ணின் வறுமைகெட வந்துதித்துக் - கண்ணகன்ற 
ஞாலத் தறஞ்செய் நரலோக வீரன்பொற் 
சீலத்தினா லமைத்தான் சென்று

21 - (வீரட்ட திருநடன அரங்கு) 
நீடும் அதிகையோன் நித்தன் பெருங்கூத்தை 
ஆடும் அரங்கத் தமைத்தான் அன்றினார் - நாடு 
பரியெழுப்புந் தூளிபகல் மறைப்பச் சென்றாங் 
கெரியெழுப்புந் தொண்டையா ரேறு

22 - (திருநாவுக்கரசு நாயனார்க்கு தனிக்கோயில்) 
ஈசன் அதிகையில்வா கீச னெழுந்தருள 
மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல் 
விளைவித்த வேணாடும் வெற்பனைத்தும் செந்தீ 
வளைவித்தான் தொண்டையார் மன்

23 - (வேள்வி மண்டபம்) 
நல்யாக மண்டபத்தைச் செய்தான் நரபதியர் 
பல்யானையோ டுணங்கப் பாவலர்க ளெல்லாம் 
புகுங்குடையான் தொண்டையர் கோன்பொன் மழையோடொக்கத் 
தகுங்கெடையான் தானதிகை சார்ந்து

24 - (அம்மை 32 அறங்கள் செய்ய செலவு) 
அண்ணல் அதிகையான் ஆகம் பிரியாத 
பெண்ணினலாள் எண்ணான்கு பேரறமும் - எண்ணியவை 
நாணாள் செலவமைத்தான் நண்ணா வயவேந்தர் 
வாளாண் கவர்கூத்தன் வந்து

25 - (உயர்ந்த கோபும்) 
ஆடல் அமர்ந்தபிரான் ஆங்கதிகை வீரட்டம் 
நீடுவதோர் கோயில் நினைந்தமைத்தான் - கோடிக் 
குறித்தாருடல் பருந்து கூட்டுண்ணக் காட்டி 
மறித்தான்நம் தொண்டையார் மன்

திருவதிகை வீரட்டானத் திருப்பணிகள் 
வெண்பாக்கள் முற்றிற்று
- - - - -

இவ்வெண்பாக் கொத்துப் பாடல்கள் கோவில் கற்சுவர்களிலினின்று தொல்லியல் துறையினர் படி எடுத்த கல்வெட்டு தொகுதிகளில் காணப் படுபவையினின்று, சில, ஓர் தனி நூலென மதிக்கத்தக்க அளவினதான வெண்பா ஈட்டங்கள் மட்டும் ஈங்கு தொகுக்கப்பட்டன. பல்வகை யாப்பிலமைந்த நூற்றுக்கணக்கான தனிப்பாடல்கள் பல்வேறு இடங்களில், பற்பல காலத்தன உள்ளன. பேரறிஞர் மு ராகவையங்கார் அவர்கள் இவற்றை 'பெருந்தொகை' என தொகுத்துள்ளார். 'சாசன செய்யுள் மஞ்சரி' எனும் பெயரிலும் பேரறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள் சிலவற்றைத் தொகுத்துள்ளார். 
- நூ த லோகசுந்தரமுதலி

Related Content

Thiruvasagam Part-1 - Romanized version

Sundaramurthy Swamigal - Thevaram - Thiruvenpakkam

கடம்பர் உலா

Thiruvempavai

The Holy Cave Of Amarnath (By a Pilgrim)