logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை

களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை 
[குறிப்பு. ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது]

காப்பு
வெண்பா

பூப்பார் களந்தைப் புரகரே சன்மீதில்
வாய்ப்பா மிரட்டைமணி மாலைக்குக் - காப்பாவார்
பொன்கருத்த ரென்கருத்த ரென்னவரு போரானை
என்கருத்த ரென்கருத்த ரே.

நூல்

அணிகொண்ட தென்களந்தை யாயி னடியேனிப்
பிணிகொண்ட சென்மம் பெறுக - பணியா
மருமாலை யேசத்ய வாசகர்தாட் கிட்டுத்
திருமாலை யேசத் தினம். [1]

தினம்போற்றும் போதகத் துள்ளே தியானமுஞ் செய்யுமன்பர்
மனம்போற் றமிய னுடன்பொருந் தாவஞ்ச நெஞ்சையுமென்
இனம்போற் குறித்ததன் றீதையென் மேலிட் டிடுதிகண்டாய்
கனம்போற்றும் பூங்குழல் பங்கா களந்தையிற் கண்ணுதலே. [2]

கண்ணுதலைப் பொற்களந்தைக் கண்ணுதலைச் சேர்ந்திருந்தும்
கண்ணுதலைக் காணாத காட்சிபோற்-கண்ணுதலை
எட்டியிருந் தேனல்லே னென்பார்கள் வீடுபெற்றால் [3]
எட்டியிருந் தேனாகு மே.

ஆகத்தி லேயொரு பாதியென் னம்மைக் களித்தவடன்
பாகத்தி லேயொன்று கொண்டா யவண்மற்றைப் பாதியுமுன்
தேகத்திற் பாதியுஞ் சேர்ந்தா லிருவருண் டேசிவனே
ஏகத் திராம லிருப்பாய் களந்தையு மென்னெஞ்சுமே. [4]

என்னெஞ்சு கல்லாகு மென்றுமிந்தக் கல்லுமையாள்
பொன்னஞ் சரணம் பொறாதென்றும் - அந்நாள்
இடத்தாளை யம்மிமே லேற்றுகளக் காட்டாய்
இடத்தாளை யஞ்சாதே யின்று. [5]

இன்றொக்க வேண்டினெவ் வாறொக்கு மோவெழில் சேர்களந்தைக்
கோபுரங் குன்றொக்குங் கோபுர மொக்குமக் குன்றதுபோல்
அன்றொக்க வேண்டுமென் னல்வினை தீவினை யாமிரண்டும்
என்றொக்கு மோவினித் தென்களக் காடனை யான்பெறவே. [6]

யான் பிறவி நீந்த வெழிற்களந்தைப் பொற்கோயில்
தான்புணை காண்சத்ய வாசகன்மீ-கான்காண்
அடிப்படங் காட்டு மராப்போலும் பாய்தான்
கொடிப்படங் கம்பமே கூம்பு. [7]

கூம்பாத சிந்தையிற் கொண்டாடு வார்குழம் பாதசெந்தே
னாம்பாக மான தமிழைச் செழுங்கொன்றை யாவணியும்
வேம்பாக நான்சொல் கவிகளைத் தானு மிகவிரும்பிப்
பாம்பா வணிந்து கொளுமே களந்தைப் பரஞ்சுடரே. [8]

பரம்படியாய் நல்லோரும் பாவிகளும் பெற்ற
பிரம்படிபோ லுன்னடியான் பெற்றேன்-நிரம்பும்
குதிரைகளைக் காட்டாய்மா கோமாயு வான
மதுரைகளக் காடாகு மற்று. [9]

மற்றோ ரொருவரைக் கண்டதுண் டோசத்ய வாசகராய்
உற்றோர் கழஞ்செடை வெண்ணெய்க்குத் தாய்க்கொரு கோடிபொய்கள்
சொற்றோருந் தாழை மலர்சாட்சி யென்றுசொன் னோருமல்லால்
கற்றோர்கள் வம்மின்கள் சென்மின்கள் போமின் களந்தையிலே. [10]

களந்தை வரும்விடமுங் கண்ணுதலு மாகக்
களந்தை வருமரனைக் காணான்-வளர்ந்தவொரு
மாலைக்கண் டானென்று சொற்றக்காற் றேசமிரு
மாலைக்கண் டானென்னும் வந்து. [11]

உம்பரை வாழ்வித்த கண்டங்கண் டேமொண் புரமெரித்த
அம்பரை யெற்றிய சூலங்கண்டேமரு ளுங்கொலையும்
நம்பரை பாகற் கிவையாக லாலவர் நாமஞ்சொல்லா
வம்பரை வையுங்க டென்களக் காடரை வாழ்த்துங்களே. [12]

வாழ்நிலைசேர் பொன்னுலகம் வண்களந்தைக் கோபுரத்தின்
ஏழ்நிலைமே லேறினா லேறலாம் - பாழ்மனமே
அன்புன்னைக் காட்ட வரனறிவ தேயருமை
தென்புன்னைக் காட்டனடி சேர். [13]

சேரார் புரஞ்செற்ற சேவக னாருக்கென் றீவினைகள்
ஓரா யிரம்புர மாய்விடு மோவுறை யுங்களக்கா
டாராயு நல்ல பதியான வர்க்கடி யேன்மனந்தான்
கூராரு முட்களக் காடாகு மோவருள் கூட்டுங்கொண்டே. [14]

கொண்டாடு வேன்பணிவேன் கும்பிடுவேன் கைகொட்டிக்
கொண்டாடு வேன்களந்தைக் கொற்றவா-புண்டாவக்
கைச்சிலை யாலடியேன் கல்லா லெறியேனை
நச்சிலை யாலடியே னை. [15]

அடியேற வேண்டுமென் னெஞ்சத்தை யென்றுமெய் தாமலன்றோ
குடியே றிடக்களக் காட்டுக்குள் ளேகுளிர் புன்னைவைத்துக்
கடியேறு தண்புனற் பொற்றா மரைகண்டு கண்ணுதற்கும்
வடியேறு கண்ணிக்கும் பொற்கோயி லுங்கட்டி வைத்தனரே. [16]

வைத்த பொருளு மனையாளு மைந்தருமே
கைத்த பொருளென்று கைவிட்டுப்-பத்திபண்ணும்
ஊரா ரணியரென வுன்னுவார்க் கில்லையே
சோரா ரணியர் துணை. [17]

துணையான நாரி புவியையெல் லாம்பெறுந் தொல்லைவடிக்
கணையா னதுபுவி யெல்லா மெடுத்துண்ணுங் கைச்சிலைக்கல்
அணையாக நின்று புவியினைத் தாங்குமென் றாலினிநாம்
பணையார் களந்தைப் பதியார் செயலையென் பன்னுவதே. [18]

பன்னுமறை யோனேபரமன் முடிதேட
உன்னு மதியா லுனைத்தாங்கும்-அன்னமாய்ச்
சேணங் களந்தையே தேய்ந்தாயே திக்கறியாக்
கோணங் களந்தையோ கூறு. [19]

கூற்றும் பயந்து களந்தைக் குழந்தைக்கு மேமுகமன்
சாற்றும் படிவென்ற தாளாரு மாவுடைத் தாயருமே
மாற்றும் பிறவிப் பணிகட்கெல் லாமலை மேன்மருந்தாய்
ஆற்றும் பிடகரு மாயிருப் பார்க ளணித்துவந்தே. [20]

Related Content