logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்


கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிடமகாபாஷ்யகர்த்தராகிய
சிவஞானயோகிகள் அருளிச் செய்த பிரபந்தத்திரட்டு 
இராமநாதபுர சமஸ்தானம்
ம-ள-ள-ஸ்ரீ பொன்னுச்சாமித்தேவரர்களுடைய புத்திரர் 
ம-ள-ள-ஸ்ரீ பாண்டித்துரைத்தேவரவர்கள் விரும்பியவண்ணம்
மதுராபுரிவாசியாகிய இ.இராமசுவாமிப்பிள்ளை என்று
விளங்குகின்ற ஞானசம்பந்தப்பிள்ளையால்
அகப்பட்டபிரதிகள்கொண்டு பரிசோதித்து
சென்னை: இந்து தியாலஜிகல் யந்திரசாலையிலும்
சித்தாந்த வித்தியாநுபாலனயந்திரசாலையிலும்
பதிப்பிக்கப்பட்டது
----

கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

3. அகிலாண்டேசுவரிபதிகம்

கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

செப்பறைப்பதி

பண்டைவினை யாலும்வரு பழவினையி
      னாலுறு பாழ்த்தகன் மத்தி னாலும்
பாழான மாயைப் புணர்ச்சியா லுந்தொலைவில்
      பலபல தநுக்க டூக்கிக்
கொண்டுசுழல் பாவியேன் செய்கின்ற பிழையெலாங்
      குணமெனக் கருதி யெளிதாக்
கோலங்கள் காட்டினெனை யிவ்வள வெடுத்தாண்ட
      குணமேரு வேநி றைந்து
மண்டுமா னந்தவெள் ளத்தையுண் டின்புறவும்
      வைப்பதென் றேவ றிகிலேன்
வானாகி மண்ணாகி மற்றுளவெ லாமாகி
      மறைநான்கு மறியா மலே
அண்டபகி ரண்டப் பரப்புமா யப்புறமு
      மளவற்று நின்று லாவும்
அருண்ஞான வாரியே யாசைமே வியசெல்வ
      வகிலாண்ட மென்னு மரசே.

1

கல்லொத்த நெஞ்சராய் வாழ்வர்சிலர் புவியிற்
      கறங்குசக டென்ன வோடிக்
காலோய்வர் சிலர்மரப் பேய்போல நாடொறுங்
      கதறுவார் சிலர்கு விந்த
வில்லொத்த நுதலினார் போகத்தை நாடியே
      மெலிவர்சிலர் பசையி லாத
வெற்றென்பி னைக்கடித் தலகுபுண் ணாய்க்குருதி
      விழுமதைப் பருகு நாய்போல்
சொல்லற்ற வுலகிலுறு துன்பெலாஞ் சுகமாய்த்
      துடிப்பர்சில ரவர்க ளோடு
துடியாத வண்ணமெனை யிவ்வள வெடுத்திருட்
      டொகையெலா நீக்கி யல்லோ
டல்லொத்த பேரின்ப வெள்ளத் தழுத்தியே
      யசைவற் றிருக்க வைத்த
அருண்ஞான வாரியே யாசைமே வியசெல்வ
      வகிலாண்ட மென்னு மரசே

2

தூலவுட லரவினது தோலென்ன நீங்கவே
      சூக்குமத் தோடு யிரினைத்
துன்பமுறு யாதனா வுடலத் திருத்தியே
      சுடருமெரி வாயி லிடுவார்
மேலதிற் கனலெனச் செம்பினை யுருக்கியே
      விடுவர்விழி தன்னி லூசி
விம்முற விறக்குவார் நரகுதொறும் வெவ்வேறு
      விதமாக வூழி யூழி
காலம தழுத்துவார் தலையெழும் பிடிலுச்சி
      கவிழுற வடிப்ப ரந்தக்
கனலொத்த யமதூதர் கையிலடி யேன்றனைக் 
      காட்டிக் கொடுத்தி டாதே
ஆலமமு துண்டரமரர் தமையாண்ட நீள்கருணை
      யன்னமே யுனைநம் பினேன்
அருண்ஞான வாரியே யாசைமே வியசெல்வ
      வகிலாண்ட மென்னு மரசே

3

செம்புறு களிம்பென வநாதிமல மூழ்கியிருள்
      சேருமலர் விழியென் னவே
தெளிவற்ற கேவலத் தசைவற் றிருந்துமல
      சேட்டையாற் குழவி குருடர்
தம்பிணியி னாலுற்ற பால்கோலை நோக்கவவை
      தமையளிப் பாரென் னநான்
சார்கன்ம மாயையை விரும்பநீ தந்திடச்
      சகலனாய்ச் சுழல்க றங்கு
பம்பரம தென்னநீள் பிறவிச் சுழிக்குளே
      பட்டுழல் பெரும் பாவியேன்
பாழான மலமற்று வினையற்று மாயையின்
      பற்றுவிட் டெனைய றிந்துன்
அம்பொனடி நீழல்சேர்ந் தானந்த முண்டுநா
      னதுவா யிருப்ப தென்றோ
அருண்ஞானவாரியே யாசைமே வியசெல்வ
      வகிலாண்ட மென்னு மரசே.

4

முன்னைமல மென்னுமொரு பேய்பிடித் திருவினை
      முதிர்ந்தவெறி யரவு சுற்றி
முடியாத பிறவிக் கடற்குள்வீழ்ந் தாசையென
      மூண்டசுழி வந்த மிழ்த்த
மின்னனைய மாதரெனு மகரமீ னொருபுறம்
      விழுங்கவைம் பொறிக ளான
விறல்சுறா வைந்தும்வந் தெங்கணு மிழுக்கநான்
      வீணிலே நைவ தானேன்
பொன்னனைய நின்னடித் தாமரைத் தலமலாற்
      புகலிடம் பிறிது காணேன்
பொய்யனே னாகிலுங் கைவிடா தாளுவாய்
      புவனங்க ளியாவு மீன்ற
அன்னையே பகிரண்ட முகடெலாங் கரைபுரண்
      டப்புறமு மலைத தும்பும்
அருண்ஞான வாரியே யாசைமே வியசெல்வ
      வகிலாண்ட மென்னு மரசே.

5

இசையொத்த பண்களுஞ் சொல்லோடு பொருள்களு
      மிருளினொடு வெளியு நீண்ட
இன்பமொடு துன்பமு நரகொடு சுவர்க்கமு
      மெண்ணுதற் கரிய வான
வசைபெற்ற யோநிபே தங்களும் மவைதம்மின்
      மருவுமுயிர் யாவு மோங்கு
மறைநாலு வர்க்கமு மற்றுமுள கலைகளு
      மலைகட லெலாமு மலையும்
திசையெட்டு மிரவியொடு சோமனுஞ் சமயத்
      திரட்சிகளூ மொருவ ராலும்
தேடரிய புவனகோ டிகளுமதில் வாழ்கின்ற
      தெய்வங்கள் பலவும் யாவும்
அசைவற்ற பரவெளிக் குள்ளே யிருக்குமென்
      றறிவித் தெனைக்க லந்த
அருண்ஞான வாரியே யாசைமே வியசெல்வ
      வகிலாண்ட மென்னு மரசே.

6

நீயுள்ள தென்றன்று நானுமுள னன்றுமுத
      னீங்காம லென்னி டத்தின்
நேசம்வைத் தேநீ யிருக்கநான் மலமாகி
      நின்றதே துடலெ னக்கங்
கேயுமுறை யெங்ஙனே வினைகடரு மெனிலவைக
      ளேறிடா தநுவி லாமல்
எட்டாத கேவல மிருப்பமே லவைகன்ம
      மாகாவ விச்சை கண்டு 
காயம தளிப்பதெனி லின்புதுன் புறமுண்டு
      கன்மமே திதனை யருள்வாய்
ககனமுக டுங்கடந் தளவில் புவனங்களுங்
      கரைபுரண் டெங்கு மோங்க
ஆயுமறை காணா தகண்டமாய் நின்றதிரு
      வக்கினீ சுரர்ம ருவுநீள்
அருண்ஞான வாரியே யாசைமே வியசெல்வ
      வகிலாண்ட மென்னு மரசே.

7

உடலத்தி லின்றெனக் கொழியாத விச்சைதா
      னுற்றதே துன்ற னாலே
உற்றதே னீதநு வளித்திடும் போதெலா
      முறவேண்டு மென்ற னியல்பேல்
கடலொத்த பிறவிதனி லெந்நாளு மவ்விச்சை
      கட்டுற்று நிற்க வேண்டும்
கடியமல சத்திசற் றகலவரு மெனிலவை
      கழித்ததார் நீக ழிக்கில்
கெடலுற்ற வெல்லா வுயிர்க்குநீக் குவையாங்
      கெடுத்தாலு மம்ம வந்தான்
கெட்டாலு முனைவந்து கிட்டிவழி படுவதென்
      கேடிலா விவைய ருளுவாய்
அடலுற்ற திரிபுர மடங்கலு மெரித்ததிரு
      வக்கினீ சுரரை மருவும்
அருண்ஞான வாரியே யாசைமே வியசெல்வ
      வகிலாண்ட மென்னு மரசே.

8

மங்கையர்க ளின்பமே முத்தியென் றுங்கந்த
      மடிவதே முத்தி யென்றும்
வருமுக் குணங்கெடுதன் முத்திவினை மாய்வதே
      வளர்முத்தி மூன்று மலமும்
பங்கமுற லேமுத்தி யென்றுநித் தியதேகம்
      பற்றுவது முத்தி யென்றும்
பலவும் பகுத்தறிதன் முத்தியுயிர் கெடுவதே
      படர்முத்தி சித்தி களெலாம்
தங்குவது முத்திபா டாணமொத் திடுவதே
      தகுமுத்தி யென்று முயிர்கள்
தடுமாற மலமறுத் தகலாத திருவடித்
      தாமரையென் முடியி லூன்றி
அங்கமுயிர் பொருளெலாங் கைக்கொண்டு நாயினேற்
      காநந்த முத்தி தந்த
அருண்ஞான வாரியே யாசைமே வியசெல்வ
      வகிலாண்ட மென்னு மரசே.

9

பூதமே யென்றும்வரு பொறியென்று மனமாதி
      பொருளென்று நீள்க லாதி
பொருளென்று முயர்சுத்த மாயைபொரு ளென்றுமிப்
      புவியிற் சிருட்டி செய்யும்
நாதர்பொரு ளென்றுமர வணையிற் றுயின்றவொரு
      நாரணன் பொருள தென்றும்
நானாவி தங்குளறி னோர்குருடர் பலர்கூடி
      நாடியொளி தேடு மாபோல்
பேதமுறு பிறவியிற் சுழல்வதல் லாலுண்மை
      பெற்றிடுவ துண்டோசொ லாய்
பின்னுமுன் னும்பக்க மேல்கீழு மாயண்ட
      பித்திக ளுடைத்து மண்டி
ஆதிநடு வந்தமு மிலாமலடி நாயேனை
      யகலாம லாண்டு கொண்ட
அருண்ஞான வாரியே யாசைமே வியசெல்வ
      வகிலாண்ட மென்னு மரசே.

10

அகிலாண்டேசுவரிபதிகமுடிந்தது.
மெய்கண்டதேவர் திருவடி வாழ்க.
சிவஞான யோகிகள் திருவடி வாழ்க.

 

Related Content