thirukkaDavUr kAlasamhAra mUrthy pathikam of sri abirAmi battar
பதினான்குச் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
சுடர்மணிக் குழையும் மலர்க்கரத்(து) உழையும்
தும்பிகள் இடைஇடை நுழையும்
தும்பைமா லிகையும் வம்புவார் சடையும்
துண்டவெண் பிறையு(ம்)முந் நூலும்
நடநபங் கயமும் கிரணகங் கணமும்
நங்கைபங்(கு) அமர்ந்தசுந் தரமும்
நயன(ம்)மூன்(று) உடைய கோலமும் கண்டோர்
நமனையும் காணவல் லவரோ?
கொடிபல தொடுத்த நெடியமா மணிப்பொற்
கோபுரம் *பாரிடம் தொடுத்துக்
கொழுந்துவிட்(டு) எழுந்து வான்நில(வு) எறிப்பக்
கொண்டல்வந்(து) உலவியே நிலவும்
கடிமலர்த் தடமும் சுருதிஓ திடமும்
கன்னிமா மாடமும் சூழ்ந்து
கநவளம் சிறந்த ++கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே! 1
*பாரிடம் = பூதகணம். ++கடவை = திருக்கடவூர்.
யம பயம் அற
தண்டமும் கயிறும் சூலமும் புகைந்த
தழல்உமிழ் கண்களும் வளைந்த
தந்தமும் சிவந்த குஞ்சியும் கரிய
சயிலமே அனையமே நியுமாய்
அண்டிய சமனைக் கண்டுள(ம்) மயங்கி
அறி(வு)அழிந்(து) இருவிழி களும்பஞ்(சு)
அடைந்துவாய் புலர்ந்து மெய்மந்து திடும்போ(து)
அம்பிகை தன்னுடன் வருவாய்!
வண்டுகள் முரன்று முகைகுறுக்(கு) உடைந்து
மதுமழை பொழிந்துதா(து) அளைந்து
மடல்விரிந்(து) அலர்ந்து பொன்நிறம் பொதிந்த
மன்றல்அம் கொன்றைவார் சடையாய்!
கண்டவர் உளமும் கண்ணுமே கவரும்
கநதந வநிதையர் நெருங்கும்
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே! 2
சிவன் அருள் மகிமை
தநபதி நிகராய்ச் செல்வமே பெறினும்
சதமகன் போகமே பெறினும்
தாரணி சுமக்கும் சேடனே நிகராய்த்
தக்கதோர் அறி(வு)எலாம் பெறினும்
அநங்கனை நிகராய் அழகுதான் பெறினும்
அருமறைக் கிழவன்நேர் உறினும்
ஐய!நின் கடைக்கண் அருள்தவ றியபேர்
அம்கைஓ(டு) ஏந்திநின்(று) உழல்வார்;
பநககங் கணத்தாய்! அளப்பரும் குணத்தாய்!
பார்வதி வாமபா கத்தாய்!
பவளநல் நிறத்தாய்! தவளதூ ளிதத்தாய்!
பரிபுரம் அலம்புபொற் பதத்தாய்!
கநகமும் துகிரும் தரளமும் வயிரக்
கலன்களும் நிலம்தொறு(ம்) மிடைந்த
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே! 3
சம்சார துக்கம் அற
தந்தையை மனையை ஒக்கலைத் துணையைத்
தாயைமென் குதலைவாய்ச் சேயைத்
தனத்தையௌ வநத்தை இன்பமோ கனத்தைத்
தையல்நல் லார்பெருந் தனத்தை
அந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி
ஆழ்கடற் படுதுரும்(பு) ஆகி
அலக்கழிந் தேனைப் புலப்படத் திருத்தி
ஆட்கொள நினைத்திலாய்! அன்றோ?
சிந்தைநைந் துருக இன்னிசை படித்துச்
சிலம்(பு)ஒலி ஆரவே நடித்துச்
செழும்புனல் சடைமேல் கரந்தையை முடித்துத்
திருவெணீ(று) உடல்எலாம் வடித்துக்
கந்தைக்கோ வணம்தோல் பொக்கணம் தாங்கிக்
கபாலம்ஒன்(று) ஏந்திநின் றவனே!
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே! 4
தன் சிறுமை கூறல்
வஞ்சகக் கிணறாய்த் துன்பவா ரிதியாய்
வறுமைஎன் பதற்(கு)இருப் பிடமாய்
மறம்பொதி குடிலாய் அசத்திய விதையாய்
மயல்விளை கழனியாய்ப் பாவ
சஞ்சித வடிவாய்ச் *சருச்சரைப் புரமாய்
சங்கட நோய்க்களஞ் சியமாய்த்
தலதடு மாறித் திரியும்என் தனக்(கு)உன்
தண்அளி கிடைக்குமோ? அறியேன்;
நஞ்சம்உண் பகுவாய்ச் சுடிகைமுள் எயிற்று
நகைமணிப் பாந்தள்+அம் சூழ்ந்த
நளிர்இளம் பிறையும் மிளிர்செழுஞ் சடையாய்!
நங்கையர் முழுமதி முகத்தைக்
கஞ்சமென் மலர்கள் கண்டுவாய் ஒடுங்கும்
கந்தம்உந் தியதடம் சூழும்
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே! 5
*சருச்சரை = ஒப்புரவு இன்மை. +அம் = நீர்; கங்கை.
பிறவி வேண்டாம்
பிரமனும் சலிக்கத் தாயர்சஞ் சலிக்கப்
பேதையர் கண்(டு)அசங் கதிக்கப்
பிணிகளும் பகைக்க மூப்புவந்(து) அலைக்கப்
பிந்தொடர்ந்(து) ஆசைசென்(று) இழுக்கத்
தருமனும் வெறுக்க நரகமும் ஒறுக்கத்
தாரணி சுமந்துநொந்(து) இளைக்கச்
சக(டு)எனச் சுழலும் கறங்(கு)எனக் கொடிய
சடலமே எடுக்கநான் இலக்கோ?
+குருமணி இமைக்கும் புதுமலர்த் தடத்தில்
கோட்டிள(ம்) ++மோட்டுமோ மேதிக்
குலங்கள்போய்ப் படிந்து நலம்கிளர் செழும்தேன்
குவளைமென்(று) உழக்கிய தோற்றம்
கரியமா கடலில் புகுந்துநீர் அருந்தும்
காளமே கங்களோ எனலாய்க்
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே! 6
*குறு = நிறம். மணி = முத்து. இமைக்கும் = ஒளிவிடும்.
++மோடு = வயிறு.
லோபியைப் புகழாதே!
மறுகுவெம் சினத்தர் *தெறும்அவ குணத்தர்
வஞ்சகம் பொதிந்தநெஞ் சகத்தர்
வழக்கம்ஒன்(று) இல்லாப் பழக்கரும் மூடர்
மதிஇலாப் பதிதர்பால் அணுகிப்
பொறுமையில் தருமன் நெறியினில் சேடன்
புலமையில் குறியமா முனிவன்
புரந்தரன் எனவும் நிரந்தரம் புகழ்ந்து
பொழு(து)அவம் போக்கினன்; அந்தோ!
வெறிமலர்ப் புரசம் சொரிந்துவண்(டு) இனங்கள்
மிடைந்துமா முகிலினைக் கிழித்து
மேல்இடத்(து) இரவிப் பசும்புர விகளாய்
விளங்கியே விண்தல முகட்டைக்
கறுவிநின்(று) ஓங்கிச் செறியும்ஐந் தருவுள்
கற்பகத் தருவினை ஒப்பாய்!
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே! 7
*தெறும் = தண்டம் செய்யும்; கொல்லும்.
பக்தி பூஜை
நெஞ்சகம் குழைந்து பணிவிடைக்(கு) இசைந்து
நீறொடு கண்டிகை புனைந்து
நிலவுபொற் கோயில் அதைவலம் புரிந்து
நெகிழு(ம்)முன் நாள்மலய் எடுத்து
வஞ்சமா மயக்கில் மயங்கும்ஐம் புலனாம்
மாற்றலர் வலிமையைக் கவர்ந்(து)உன்
மலர்ப்பதத்(து) இருத்தி அலக்கணைத் துரத்தி
மதிமிகு வாழ்வளித் திடும்"ஓம்
ஜும் ஸ:"* எனும்நல் தூயமூன்(று) எழுத்தை
சுகிதமாய்க் கொண்(டு)அருச் சனைசெய்
தொண்டர்கள் உறவைக் கொண்டுனைப் பணியச்
+சுணக்கனாம் எனக்(கு)அருள் புரிவாய்!
கஞ்ஜமென் மலய்மீ(து) அஞ்ஜ(ம்)மெய் பசக்கக்
கார்மயில் ++ஒகரமாய் நடிக்கும்
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே! 8
*'ஓம் ஜும் ஸ:' = இது, 'ம்ருத்யுஞ்ஜய' மந்திரம்.
+சுணக்கன் = நாய் போல் திரிகின்றவன்; நீசன்.
++'ஓ' கரம் ஆய் = 'ஓ' என்னும் எழுத்துப் போல் (தோகை விரித்து)
பரத்தையர் பாசம் அற
மைக்கயல் விழியால் மயக்கிஉள் உருக்கி
மஞ்சளால் முகத்தினை மினுக்கி
மணிநகை பெருக்கி ஆசைஉண் டாக்கி
வளர்இள முலைத்துகில் இறுக்கிப்
பக்கல்வந்(து) அமர்ந்து மென்மொழி பகர்ந்து
பரவசம் போலமேல் வுழுந்து
படி(று)உளம் உணர்ந்தே அசத்தியம் உரைத்துப்
பறித்திடக் குறித்தபா வையர்க்காய்த்
துக்கசா கரத்தில் அழுந்திநாள் தோறும்
தோதகப் பட்டபா தகனைத்
துய்யசெங் கமலச் செய்யதாள் இணைக்கே
தொண்டுகொண் டால்குறை உறுமோ?
கைக்கழங் காடும் திறத்தினை நிகராய்க்
கமலமென் மலர்மிசை அறுகாற்
களிபாளி சுழலும் கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே! 9
சிவ மானச பூஜை
செயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த்
திரிதலே வலம்புரி தலுமாய்ச்
சிந்தையின் நினைவே தியானமாய், உண்டு
தெவிட்டல்நி வேதனச் சிறப்பாய்த்
துயிறல்வந் தனையாய்த் திருவுளத்(து) உவந்து
துள்ளுவெள் விடையின்மேல் ஏறித்
தொண்டரும் விசும்பில் அண்டரும் காணத்
தோகையோ(டு) எனக்குவந்(து) அருள்வாய்!
வயல்வரம்(பு) உறைந்த கடைசியர் முகத்தை
மதியம்என்(று) அதிசய(ம்) மிகுந்து
வரும்பகல் இடத்தும் இரவினும் குவளை
வாய்ஒடுங் காமலே விளங்கும்
கயல்நெடுந் தடமும் கமுகமும் கமுகைக்
காட்டிய கன்னலும் பொதிந்த
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே! 10
- கால சம்ஹாரமூர்த்தி பதிகம்-I முற்றிற்று -
திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - II
பதினான்குச் சீர் கொண்ட வண்ண விருத்தம்
சிவன் அடியர் துர்க்குணம் பெறார்
அந்த ரத்(து)அமரர் மந்த ரத்தைஒலி
அலைக டற்றலைநி றுத்திநின்(று)
அழலு றக்கடைய அமுத(ம்) முற்றடைய
அதன்இ டத்துவிடம் உண்ணல்ஆர்
கந்த ரத்திடைக றுப்பி னார்கவுரி
கண்க ளித்திடும்உ றுப்பினார்
கால காலகட வூரர் கோலம்அது
கண்டு தண்டன்இட வல்லபேர்
பந்தம்ஆசைஅவ மாண(ம்) நிந்தனை
பழிப்(பு)அ சத்திய(ம்)ம னப்பயம்
படிறு வஞ்சனைஅ னர்த்த(ம்) மால்கொடுமை
பாப(ம்) மீறுகொலை சஞ்சலம்
தொந்த(ம்) மோகம்அவி வேகம் மாசுசதி
துயர(ம்) மூட(ம்)முழு வயிரம்நீள்
தோத கம்*குடிலம் அவகு ணம்தவறு
சோக மும்தவிரு வார்களே. 1
*குடிலம் = வஞ்சகம்
சிவன் அடியர் சர்வ போகமும் பெறுவர்
வெங்க யத்(து)உரியர் பங்க யர்க்(கு)அரியர்
வேத வாம்பரியர் தீதிலர்
*வீதர் +வெம்சுகர்வி நோதர் #கஞ்சுகியர்
வெற்றி மால்மகிழும் xஅத்தனார்
கங்க ணத்தர்சிவ வெங்க ணத்தவர்
**களத்தி சைந்தபெரு நிர்த்தநர்
கால காலகட வூரர் கோலம்அது
கண்டு தண்டன்இட வல்லபேர்
திங்கள் வெண்குடைக விப்ப மும்முரசு
சென்று சென்(று)எதிர்ஒ லிப்பஎண்
திசைபு ரக்கு(ம்)ம(ன்)னர் கர(ம்)மு கிழ்ப்பைகல்
தெவ்வ ரும்திறைஅ ளப்பமேல்
மங்கை மார்கவரி கால்அ சைப்பநெடு
மகர தோரணவ ளப்பமாய்
மத்த யானைமிசை வெற்றி யாளர்என
வைய கம்தனில்இ ருப்பரே. 2
*வீதர் = சாந்தர் (வீதர் = சாந்தம்). +வெம் = விரும்பத் தக்க. சுகர் = இன்ப மயமானவர்.
#கஞ்சுகியர் = பாம்பு அணிந்தவர். xஅத்தன் = அர்த்தன்; பாதியன். **களம் = சபை.
அடியார்கள் ருத்ர சாரூபம் பெறுவார்கள்
திருகு வெள்எயிறு வரிநெ டுங்கயிறு
செய்ய குஞ்சியொடு நஞ்(சு)எனச்
சீறு கோபமுடன் ஏறு தீபவிழி
தெறும்இ டிக்குரல்மு ழக்கியே
கரு(ம்)ம லைக்குநிகர் எருமை யிற்பெரிய
கால்ம லைக்குவடு போல்வரும்
கால காலகட வூரர் கோலம்அது
கண்டு தண்டன்இட வல்லபேர்
பொரு(ம்)ம ழுப்படைஇ லங்கு செஞ்சடை
பொருந்து வெள்விடைதி ருந்துவெண்
பூதி ஆகம்ஒரு தோகை பாகம்அழல்
பொங்கு நாகமணி கங்கணம்
பெருகு கங்கைநதி முடிவி ளங்கிவதி
பிஞ்சு மாமதிகொ ழுந்தழல்
பெய்த பெற்றிபெறும் ஒற்ற நெற்றிவிழி
பெற்(று)இ ருப்பர்அடை யாளமே. 3
அடியார்கள் பெறும் மேலான பதவிகள்
*பெண்இ டும்(பு)அரிபு ரத்தி னார்ஒலி
பிறந்தி டும்பரிபு ரத்தினார்
பிறைமு டிக்குள்அணி கங்கை யார்மறைசொல்
பிரமன் ஒற்றஅணி oகங்கையார்
கண்இ சைந்த(து)ஒரு மூன்றி னார்உரிய
கயிலை தாழxநக மூன்றினார்
கால காலகட வூரர் கோலம்அது
கண்டு தண்டன்இட வல்லபேர்
மண்அ ளந்தசர ணர்க்கு(ம்) மென்முளரி
மாலை ஆபரண ருக்கும்ஓர்
வச்சி ரத்(து)இறைவ ருக்கும் எண்திகிரி
++மாதி ரத்துறைவ ருக்கு(ம்)மேல்
விண்ண வர்க்கு(ம்)மிகு பண்ண வர்க்கும்உயர்
வித்த கர்க்கு(ம்)மதி ஒத்துவாழ்
மெய்த்த வத்துநிலை பெற்ற வர்க்கும்அவர்
மேல்இ ருப்பர்அடை யாளமே. 4
*பெண் = பார்வதியின். இடும்ப்பு அரி = துன்பம் துடைத்த. புரத்தினார் =
(இடப்பாக) சரீரம் உடையவர். oகம் = தலை; கபாலம். கையார் = கரத்தினார்.
xநகம் ஊன்றினார் எனப் பிரிக்க. ++மாதிரம் = திசை.
அடியவர்கள் மிக நல்லவர்கள்
உரக குண்டலர்நெ ருங்கி விண்(டு)அலர்
உறைந்த வண்டுமுரல் கொங்கையார்
உத்த ரீகமலர் ஒப்(பு)இ லாதxசிலை
ஒத்த நெற்றிமலை மங்கயார்
கரக பாலர்திரி சூலர் நீலமணி
கண்டர் +புண்டரிக ஆடையார்
கால காலகட வூரர் கோலம்அது
கண்டு தண்டன்இட வல்லபேர்
விரகம் ஆனதில்உ ணங்கி டார்;உலகை
வேண்டி ஈனரைவ ணங்கிடார்;
வெகுளி ஆனதுசெ றிந்தி டார்; உடலம்
வேத நைப்படஅ றிந்திடார்;
நரகம் எனப்(து)இனி எய்தி டார்;கருமம்
நல்ல(து) அல்ல(து)அவர் செய்திடார்;
நமன்இ ருந்ததிசை கண்டி டார்;இறுதி
நாளு மே*பருதி ஆவரே. 5
xசிலை = மலை; வில். (இடை நிலைத் தீவகம்).
+புண்டரிக ஆடை = புலித்தோல் உடை. *பருதி = ஒளி.
திருக்கடவூர் ஸ்தல புராணம்
துலைநி றுக்கும்ஒரு 1வணிக நுக்கு(ம்)2மது
சூத நுக்கு(ம்)மநு நீத்சேர்
தொல்பு விக்3கரச நுக்கு(ம்) மிக்கதமிழ்
சொல்லு(ம்) ஓர்4புலவ நுக்கு(ம்)மெய்க்
5கலைய நுக்கு(ம்)6மதி 7நடுவ நுக்கு(ம்)8முநி
காத லற்கும்இனி(து) அருள்செயும்
கால காலகடவூர் மேவிவளர்
கயிலை போலவரு(ம்) மயில்அனார்
முலைஅ ரும்பிவரு 9வனஜ மேஇனிய
மொழியும் இன்பமுறு 10பனசமே
முத்தை ஒத்தமணி 11மூர லேஅணிகள்
மொய்த்த தோள்கள்இள 12வேரலே
சிலைஇ ரண்(டு)அனைய புருவ மேஇரதி
தேவி ஒத்த(து)அவர் உருவமே
திருமி டற்றழகு சங்க மேஅமுது
சிந்து(ம்) 13மானடொபு ஜங்கமே. 6
1. வணிகன் - ரத்நாகரன்; இவன் விசாலாந்த்ரம் என்னும் நகரத்து வைச்யன்.
விரக்தனாய்த் தல யாத்திரை செய்து வருகையில் திருக்கடவூரைத் தரிசித்து, மூன்று
நாட்கள் தங்கிப், பின் நான்காம் நாள் இறந்த போது, தேவ விமானத்தில் ஏறித்
துறக்கம் புகுந்தவன்; இது திருக்கடவூர் (வடமொழி)த் தல புராண வரலாறு.
மேலும், புறாவின் எடைக்கு சமமாகத் தன் உடலின் தசையை எடுத்துத் தராசில்
நிறுத்துப் பருந்துக்குக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியையும் "துலை.... வணிகன்"
என்னும் தொடர் குறிக்கலாம்; அம்ருத லிங்கத்தைச் சிபிச் சக்கரவர்த்தி வழிபட்டதாகத்
தல புராணம் கூறுகிறது; தவிரக் குங்கிலியக் கலயரிடத்தில் தாலியைப் பெற்று
அதன் விலைக்கு உரிய குங்கிலியத்தை விற்ற வியாபாரியையும், சிவனடியார்
தந்த கோவணத்தின் எடைக்குத் தன் உடைமைகளை எல்லாம் கொடுத்தும் போதாத
நிலையில் தானும் மனைவி, மைந்தனுடன் தராசுத் தட்டில் ஏறித், தன்னையும்
தந்த வணிகரான அமர்நீதி நாயனாரையும் பொதுவாகக் குறிக்கலாம்.
2. மதுசூதன் - திருமால். 3. அரசன் - தல புராணத்தில் குறிக்கப் பெற்றுள்ள
ஹேம கிரீடன், ரத்ன கைடன், பிரமதி ராஜன், சந்த்ர பூஷணன், சிபி என்னும்
மன்னர்களுள் எவரேனும் ஒருவரைக் குறிக்கலாம். 4. புலவன் - காரிக் கோவை
பாடிய காரி நாயனார்; திருக்கடவூர் உய்ய வந்த தேவ நாயனார் எனினுமாம்.
5. கலையன் - குங்கிலியக் கலயர். 6. மதி - சந்திரன். 7. நடுவன் - யமன்.
8. முனி காதலன் - ம்ருகண்டு முனிவரின் மகனாம் மார்க்கண்டேயன்.
9. வனஜம் - தாமரை. 10. பனசம் - பலாப் பழம். 11. மூரல் - புன்சிரிப்பு.
12. வேரல் - மூங்கில். 13. மான் அடி - மான் குளப்படி; புஜங்கம் - பாம்பு(ப்படம்);
இவை இரண்டும் அல்குலுக்கு உவமை.
சிவனுக்கும் பெண்டிர்க்கும் சிலேஷை
விதிசி ரத்தைஅரி பழியர் அஞ்சுகணை
வேள்உ ரத்தைஎரி விழியர்மா
மேரு விற்கையினர் நேர்க டுக்கையினர்
வேள்வி யிற்பணியும் வள்ளலார்
கதிர வன்தனது தந்தம் அம்புவியில்
உதிர வன்பொடுபு டைத்திடும்
கால காலட வூரர் மேவிவளர்
கயிலை போலவரு(ம்) மயில்அனார்
மதியில் நஞ்சமும்இ ருக்கு மோ?கரிய
மஞ்சு மாலிகைக றுக்குமே?
வாள்அ ராஅமுதம் ஊறு மோ?கனக
வரையி லேபுளக(ம்) மீறுமோ?
*விதிர்க லன்பதி ருத்து மோ?இடையில்
விலகு(ம்) மேகலைபொ ருத்துமோ?
விளங்கு தோட்+கழையி யக்கு மோ?இனிமை
விண்ட சொற்++கழைவி ளக்குமே. 7
*விதிர் - சிதறிய. +கழை - மூங்கில். ++கழை - கரும்பு.
கயிலையும் பெண்டிரும்
இகல்அ றிந்துவரு பகையி நார்புரம்
எரித்தி டும்கொடிய நகையினார்
எரிம ழுப்படைவ லத்தி நார்முடியில்
ஏறு(ம்) மீறியஜ லத்தினார்
ககன மண்டலமும் உருவி நின்றுவிதி
காணொ ணாதஒரு தாணுவார்
கால காலகட வூரர் மேவிவளர்
கயிலை போலவரு(ம்) மயில்அனார்
முகம திக்(கு)உவமை புகலு வார்அளிகள்
மொய்கு ழற்(கு)உவமை நுவலுவார்
முலையி னுக்(கு)உவமை பகரு வார்இனிய
மொழியி னுக்(கு)உவமை மொழிகுவார்
நகையி னுக்(கு)உவமை கூறு வார்சரண
நடையி னுக்(கு)உவமை பேசுவார்
நயம்அ றிந்(து)இளமை சொல்லு வார்எவரும்
xநடு(வு)அ றிந்தவர்கள் இல்லையே. 8
xநடு(வு) - இடை; நியாயம்.
முகில் விடு தூது
சிறைஅ(ன்)னத்தரெழு நறைவ நத்த்டர்இவர்
தின(ம்)ம நத்திடைதி யானமே
செய்து தங்கள்வரம் எய்து தற்(கு)உரிய
தேவ தேவர்பரி பூரணர்
கறைமி டற்(று)அரையர் அறைக டற்கரையர்
கதித ரும்குரவர் வெருவிலார்
கால காலகட வூரர் கோலம்அது
கண்டு கைதொழுது கொண்டல்காள்!
எறிதி ரைப்பறைமு ழக்கி அம்கைதனில்
இக்கு வார்சிலைவ ணக்கிநீள்
இருத லைக்கும்அளி நாண்இ றுக்கிமுன்
எழுந்து மீசையை முறுக்கிவேள்
வெறிம லர்க்கணைஎ டுத்த தும்கொடிய
வேக மாய்அதுதொ டுத்ததும்
மெய்யி னிற்படவி டுத்த தும்செவியில்
விண்டு விண்டுசொல வேணுமே. 9
வணு விடு தூது
குயில்மொ ழிப்புணர்மு லைக்க ரும்கண்ஒரு
கோதை பாதிஉறை ஜோதியார்
கொக்க ரித்துவரு தக்க னாருயிர்
குறைத்(து)எ ழுந்திடு(ம்)ம றத்தினார்
கயிலை நாதர்கண நாதர் பூதிஅணி
காய நாயகமும் ஆயினார்
கால காலகட வூரர் கோலம்அது
கண்டு கைதொழுது வண்டுகொள்!
அயிலி னும்கொடிய அம்பி னால் மதுர
ஆர வாரம்இசை வேயினால்
அந்த ரம்தனில்அ சைந்து நின்(று)அடரும்
அம்பு லிக்கொடிய தீயினால்
துயில்து றந்துமெய்ம றந்து வாடிமிகு
சோக மோகம்பி றந்துளம்
தோத கப்படவும் நான்அ கப்படுதல்
சொல்லு வீர்!மதனை வெல்லவே. 10
- கால சம்ஹாரமூர்த்தி பதிகம்-II முற்றிற்று -
திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம்* - III (பின்முடுகு)
வெண்பாச் சந்தக் கதம்பம்
வெண்டளை - தனத்தனத்தத் (சந்தம்)
என்று தொழுவேன்? எளியேன்; அளிமுரலும்
கொன்றைஅணி தென்கடவூர்க் கோமானஏ! - துன்றும்
கனற்பொறிக்கட் பகட்டில்உற்றுக் கறுத்ததெற்குத் திசைக்குள்உக்ரத்
தனைச்சினத்திட்(டு) உதைத்தபத்மத் தாள். 1
வெண்டளை - தனத்தனத்தம் (சந்தம்)
தொண்டருடன் கூடித் துதித்(து)இரண்டு கண்ஆரக்
கண்டுதொழு வேனோ? கடவூரா! - பண்(டு)ஓர்
அமு(து)இருக்கும் சிறுகடத்(து)அன்(ற்) அவதரித்(து) அன்பரைமருட்டும்
சமனைஏற்றும் பரிபுரச்செந் தாள். 2
வெண்டளை - தந்ததத்தம் (சந்தம்)
பற்றி பணிந்து பரவ வரம்தருவாய்!
கற்றை சடையாய்! கடவூரா! - வெற்றிநெடும்
கொண்டல்ஒக்கும் கண்டசத்தம் கொண்(டு)எதிர்த்(து)அங் கண்கறுக்கும்
சண்டனைக்கண்(டு) அன்(று)உதைக்கும் தாள். 3
வெண்டளை - தான தானா (சந்தம்)
மேகம் எழுந்ததுபோல் மேல்எழுந்த காலனைக்கண்(டு)
ஆகம் தளர்த்துநெஞ்சம் அஞ்சாமுள் - மாகடவூர்ப்
பூத நாதா! வேத கீதா! பூவி தாதா தேடு பாதா!
மாது பாகா! கால காலா வா! 4
வெண்டளை - தானன தானா (சந்தம்)
அன்(று)அயன்மால் காணா அடிமுடியைக் காண்பதற்குத்
தெந்திசைக்கோன் என்னதவம் செய்தானோ? - வென்றிதிகழ்
ஆடர வாளா! நீ(று)அணி தோளா! ஆதிரை நாளா! மாதும ணாளா!
தோடணி காதா! மாகடவூரா! சொல்! 5
வெண்டளை - த்ந்ததனத் (சந்தம்)
ஆற்றுமோ? நெஞ்சத்(து) அடங்குமோ? கொண்டமையல்
கூற்(று)உதைத்த தென்கடவூர்க் கோமானே! - மாற்(று) உயர்பொற்
கும்பமுலைத் திங்கள்நுதற் கொந்(து)அளகப் பெண்கொடி மெய்க்(கு)
அம்புதொடுத்(து) அங்கஜன்விட் டால். 6
வெண்டளை - தந்தன தந்தம் (சந்தம்)
தென்றல் உலவும் திருக்கடவூர் எம்பெருமான்
மன்றல் செறிந்தே மதுஊ(று)உன் - கொன்றைக்க்
பொன்பர வும்திண் கொங்கைஇ ரண்டும் புண்பட உந்(து) இன்(பு) அன்புதி ரண்டும்
தும்ப(ம்)மி குந்(து)என் பெண்கொடி நெஞ்(சு)அஞ் சும். 7
வெண்டளை - தான தந்தா (சந்தம்)
சுடுமோ? இளம்தென்றல்; தோகையின்மேல் அம்பு
படுமோ? மெய் வாதைப் படுமோ? - கடவூரா!
நீர்அ ணங்கார் வேணி நம்பா! நீல கண்டா! மேனி யின்பால்
ஆர்அ ணங்கார் கால சங்கா ரா! 8
*இப்பதிகத்தில் 3, 6, 8 ஆகிய எண்கள் உள்ள பாக்கள் வெண்டளை பிறழாத
பின்முடுகு வெண்பாக்காளாகவே உள்ளன.
வெண்டளை - தனந்த தந்தம் (சந்தம்)
பாலனுக்கா அன்று பக(டு)ஏறி வந்(து)எதிர்த்த
காலனுக்குக் காலா! கடவூரா! - மேலோர்
கரும்பு கொண்(டு)அங்(கு) எதிர்ந்து நின்(று)அங் கஜன் பொரும்செஞ் சரங்கள் கண்(டு)உண்
மருண்டு நெஞ்சம் கலங்கும் என்றன் மான். 9
வெண்டளை - தனன தந்தம் (சந்தம்)
நீதிநெறி வேதியர்கள் நீங்கா மறைபயிலும்
ஆதிகட வூரில்உறை அம்மானைப் - பாதம்
பரவி அங்கம் புளகுகொண்(டு)எண் படவணங்கும் பொழுது நெஞ்சம்
கரவு துஞ்சும் சமனும் அஞ்சும் காண்! 10
- கால சம்ஹாரமூர்த்தி (பின்முடுகுப்) பதிகம்-III முற்றிற்று -