logo

|

Home >

Scripture >

scripture >

English-Translation

சிவஞான போதம் - தமிழ் உரை & English Translation

(Translation by Socio Religious Guild, Appar Illam, Thirunelveli) 

மங்கல வாழ்த்து

வஞ்சித்துறை

    கல்லால் நிழல்மலைவு 
    இல்லார் அருளிய
    பொல்லார் இணைமலர் 
    நல்லார் புனைவரே

உரை: அருள் வடிவாகிய கல்லால மர நிழலின்கண் எழுந்தருளியிருந்து, தனது மாணவர்க்கு 
மலைவு தீர்த்து அருளிய முதலாசிரியர், மேன்மேலருள் செய்தற்பொருட்டு, சுயம்பு மூர்த்தியாகிய
பிள்ளையாரது அறிவாற்றல், செயலாற்றல் என்ற இரண்டு திருவடிகளை மெய்யன்பர்
தலைமேற்கொள்ளுவர்.

    The good, will crown their heads with the two feet of Lord Ganesa who was begotten by 
the great teacher who sat under the sacred mountain banyan tree and removed the doubts of the
great Nandhi.

                அவையடக்கம்

    தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் 
    எம்மை உடைமை எமைஇகழார் - தம்மை 
    உணரார் உணரார் உடங்கு இயைந்து தம்மில் 
    புணராமை கேளாம் புறன்

உரை: (உடைமைப் பொருளாகிய) தம்மியல்பினை உணர்ந்து தம்மை உடையனாகிய 
தலைவனை உணர்ந்தவர்கள், தமக்கு உடைமையாக எம்மை உடையவர்களாதலின், 
எம்மை அன்பாற் பாராட்டுவாரன்றி இகழமாட்டார். தம்மை உணராதவர்கள் தலைவனையும் 
உணராதவர்களே. அவர்கள் ஒருங்கு சேர்ந்து தம்முள் ஒற்றுமைப்பட மாட்டாராகலான்,
அவர்களது புறங்கூற்று மொழியை யாம் பொருளாகக் கொள்ளாம்.

    Those who know their Lord from the knowledge of themselves (their true nature) 
will not revile me, and my word as I am their own slave. Those who do not know themselves, 
cannot know this, and of course can not agree among themselves. Their abuse I hear not.

பொது அதிகாரம்

பிரமாண இயல்

முதல் சூத்திரம்

        அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் 
        தோற்றிய திதியே ஒடுங்கி மலத்(து) உளதாம்;
        அந்தம் ஆதி என்மனார் புலவர் .

உரை: அவன், அவள், அது என்று பகுக்கப்படும் உலகத் தொகுதி, தோன்றுதல்,
நிலைபெறுதல், ஒடுங்குதல் ஆகிய மூன்று தொழிலுடைமையால், அது ஒருவனால் 
தோற்றுவிக்கப்பட்டு, நிலை பெறுவதேயாம். அது, தான் ஒடுங்குதற்குக் காரணமான
கடவுளாலேயே தோன்றுவது. ஆணவமலம் தீர்ந்து ஒடுங்காமையால், அது ஒடுங்கியதோடு 
நில்லாது மீளவும் உண்டாவது. அதற்கு ஒடுக்கமாய் முடிவைச் செய்யும் அந்தமாகிய 
கடவுளே ஆதியுமாகின்றான் எனத் தருக்க நூலறிந்தோர் கூறுவர்.

    As the seen universe, spoken of as He, She, and It, undergoes three changes 
(origin, development and decay); this must be an entity created by an efficient cause. 
This entity owing to its conjunction with Aanava Mala has to emanate from 'Hara' to 
whom it returns during Dissolution (Samhaaram). Hence the learned say that 'Hara' 
is the first cause.

இரண்டாம் சூத்திரம்

        அவையே தானே ஆய் இரு வினையிற் 
        போக்கு வரவு புரிய, ஆணையின் 
        நீக்கமின்றி நிற்கும் அன்றே

உரை:  இறைவன் கலப்பினால் உயிர்களேயாயும், தன்னியல்பால் தானேயாயும், உயிர்களுடன் 
நின்று அறிவித்தலால், உடனாயும் நின்று, கட்டளை என்ற தனது ஞானசத்தியால் 
இருவினைப் பயனுக்கேற்ப இறத்தல் பிறத்தல்களை உயிர்கள் மேற்கொள்ளும்படி, 
அந்த ஞான சத்தியோடு பிரிவில்லாது நிற்பன்.

    He is one with the souls (Abetham). He is different from them (Betham). 
He is one and different from them (Bethabetham). He stands in Samavaya union 
with his Gnana Sakti and causes the souls to undergo the processes of 
evolution (births) and return (Samhaaram) by inducing their good and bad acts (Karma).

மூன்றாம் சூத்திரம்

        உளது இலது என்றலின், எனது உடலென்றலின், 
        ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில் 
        உண்டிவினை யின்மையின், உணர்த்த உணர்தலின் 
        மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா

உரை: நான் இதுவல்ல, அதுவல்ல என்று கூறுவதொன்று உண்டாகலானும், எனது உடல் என
உடலைக் கூறுவதொன்று உண்டாகலானும் ஐம்பொறியினையும் அவற்றின் நீக்கத்தையும் 
அறியும் அறிவுடையது ஒன்று இருத்தலானும், துயின்றபோது, உணவு, செயல், இல்லாதது 
ஒன்று இருத்தலானும், ஒன்றை உணரச் செய்யுங்காலை, உணர்வதொன்றி இருத்தலானும், 
மாயையால் ஆகிய கருவியாகிய உடம்பினுள், உயிரென்பது உடம்பின் வேறாய் உள்ளது.

    It rejects every portion of the body as not being itself; it says my body;
it is conscious of dreams; it exists in sleep without feeling pleasure or pain or 
movements; it knows from others; This is the soul which exists in the body 
formed as a machine from Maayaa.

இலக்கண இயல்

நான்காம் சூத்திரம் 

        அந்தக்கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை
        சந்தித்த(து) ஆன்மாச் சகசமலத்(து) உணராது 
        அமைச்(சு) அர(சு) ஏய்ப்பநின்(று) அஞ்சு அவத்தைத்தே.

உரை: ஆன்மா, அகக்கருவிகளாய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் அவைகளில் 
ஒன்று அன்று; அரசனுக்கு அமைச்சன் போல அவற்றைத் துணையாகக் கொண்டுளது ஆன்மா. 
தன்னோடு எப்போதும் உள்ள ஆணவ மலத்தினால் பொருள்களைத் தானே அறியமாட்டா. 
அவற்றின் துணைகொண்டு அறிந்து ஐந்து வகையான உணர்வு எல்லைகளை உடையது ஆன்மா.

     The soul is not one of the four Anthakarana. It is not conscious when it is in 
conjunction with Aanavamala. It becomes conscious only when it meets the Anthakarana, 
just as a king understands through his ministers. The relation of the soul to the 
five Avastha is also similar.

ஐந்தாம் சூத்திரம்

        விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்(கு)
        அளந்தறிந்து அறியா ஆங்கவை போலத் 
        தாம்தம் உணர்வின் தமிஅருள்;
        காந்தங் கண்ட பசாசத் தவையே

உரை: மேலே கூறிய உயிராலே, மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து பொறிகளும் 
தத்தம் விடயங்களை அளவிட்டறிந்தாலும் தம்மையும் தம்மைச் செலுத்தும் உயிரையும் 
அறிய மாட்டா. அப்பொறிகள்போல, உயிர்களும் தம்மையும் தமது அறிவிற்கு விளக்கந்
தருபவனாகிய தனி முதல்வனது திருவருட் சத்தியையும் அறிய மாட்டா. உயிர்கள் 
முதல்வனால் அறிதல், காந்தத்தின்முன் வைத்த இரும்பு போல முதல்வன்
சந்நிதிமாத்திரையில் நிகழும். ஆதலால் முதல்வன் விகாரப்படான்.

    The senses while perceiving the object can not perceive themselves or 
the soul; and they are perceived by soul. Similarly, the soul while perceiving 
can not perceive itself (while thinking can not think the thought) and God. 
It is moved by the Arul Sakti of God, as the magnet moves the iron, 
while Himself remains unmovable or unchangeable.

ஆறாம் சூத்திரம்

        உணருரு அசத்தெனின், உணரா தின்மையின்,
        இருதிறன் அல்லது சிவசத் தாமென 
        இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே.

உரை: இறைவன் அறியப்படும் இயல்பினன் எனின் உலகப் பொருள் போல நிலையிலாப்
பொருள் ஆவான். அவன் எவ்வாற்றாலும் அறியப்படாதவன் எனின், அவன் சூனியம் ஆவான். 
ஆதலின் இரண்டு தன்மையும் இன்றி உயிர் அறிவால் அறியப்படாமையும்,
பதியறிவால் அறியப்படுதலுமாகிய இரண்டு வகையானும் இறைவன் சித்தாகிய சத்தாய் 
உள்ளவன் எனக்கூறுவர் மெய்யில் நிலைபெற்று உயர்ந்தோர்.

    That which is perceived by the senses is Asat (changeable). That which is 
not so perceived does not exist. God is neither the one nor the other; and hence 
called Civa Sat or Chit Sat by the wise; Chit or Civa when not understood by the 
human intelligence and Sat when perceived with divine wisdom.

உண்மை அதிகாரம்

சாதன இயல் 

ஏழாம் சூத்திரம்

        யாவையும் சூனியம் சத்(து)எதிர் ஆகலின் ,
        சத்தே அறியா(து); அசத்தில(து) அறியா(து); 
        இருதிறன் அறிவுள(து) இரண்டலா ஆன்மா.

உரை: அசத்தாகிய உலகப் பொருள் எல்லாம் சத்தாகிய சிவத்தின்முன் பாழாம் ஆகலின்,
சத்து அசத்தை அறிதல் செய்யாது. அசத்தாகிய உலகம் அறிவிலதாகலின் ஒன்றையும்
அறியும் தன்மை உடையது அன்று. சத்தையும் அசத்தையும் அறியும் இருவகைத் தன்மை
உடையதாய்ச் சத்தேயாகவும் அசத்தேயாகவும் இல்லாத சதசத்தாகி உயிர் உளது என அறிக.

    In the presence of Sat, every thing else (Cosmos-Asat) is Sunyam (சூனியம்) 
(is not apparent). Hence Sat cannot perceive Asat. As Asat does not have intelligence 
it cannot perceive Sat. That, which perceives both, cannot be either of them. 
This is the Soul called Satasat (சதசத்து).

எட்டாம் சூத்திரம்

        ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் 
        தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்(டு) 
        அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

உரை: உயிர்களது தவ மிகுதியால், அவற்றிற்கு உள் நின்றுணர்த்திய முதல்வன் குருவடிவாய் 
எழுந்தருளி வந்து, நீ ஐம்பொறிகளாகிய வேடருள் அகப்பட்டு வளர்ந்து நின் பெருந்தன்மையை 
மறந்தாய் என்று உண்மை யறிவிக்க அறிந்து ஐம்புல வேடரை விட்டு நீங்கி, இறைவனோடு 
அந்நியமாகாத தன்மையில் நிலைபெற்று அவன் திருவடிகளை அணையும் என்றவாறு.

    The Lord appearing as Guru to the Soul which has advanced in Tapas 
(Virtue and knowledge) instructs him that he has wasted himself by living among 
the savages of the five senses; and on this, the soul, understanding its real nature, 
leaves its former associates, and not being different from Him, become united to His Feet.

ஒன்பதாம் சூத்திரம்

        ஊனக்கண் பாசம் உணராப் பதியை 
        ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி ; 
        உராத் துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் 
        தண்ணிழலாம் பதி: விதி யெண்ணும் அஞ்செழுத்தே

உரை: குறைவான அறிவாகிய பாசஞானத்தால் அறியப்படாத முதல்வனை அவனது திருவடி
ஞானமாகிய கண்ணினால், அறிவின்கண்ணே ஆய்ந்தறிக. ஒருவரும் ஏறிச்செலுத்தாத 
விரைவுடைய பேய்த்தேராகிய கானல் போலப்  பாசக்கூட்டம் நீங்கியொழிய இறைஞானமானது 
பிறவித்துயராகிய வெப்பத்திற்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும். அக்காட்சி 
சலியாமைப் பொருட்டு, அப்பொருள் பயக்குந் திருவைந்தெழுத்தை விதிப்படி தியானிக்க.

    The soul, on perceiving in itself with the eye of Gnanam, the Lord who cannot be 
perceived by the human intellect or senses, and on giving up the world (Pasa) by knowing it 
to be false as a mirage, will find its rest in the Lord. Let the soul contemplate 
Sri Panchatchara (ஸ்ரீ பஞ்சாட்சரம் - சிவாய நம) according to Law.

பயன் இயல்

பத்தாம் சூத்திரம்

        அவனே தானே ஆகிய அந்நெறி 
        ஏக னாகி இறைபணி நிற்க ;
        மலமாயை தன்னொடு வல்வினை யின்றே.

உரை: உயிர்கள் கட்டுற்ற காலத்திலே, இறைவன் உயிரோடு அத்துவிதமாய்க் கலந்து நின்ற
அம்முறையே, உயிர் முதல்வனோடு ஒற்றித்து நின்று தானென வேறு காணப்படுமாறு 
இல்லாமல், இறைவன் இறைவன் கட்டளையில் வழுவாது நிற்கவே, ஆணவமலம், மாயை 
என்பவற்றோடு, கொடிய வினையும் இல்லையாய் ஒழியும்.

    As the Lord becomes one with the Soul in human condition, so let the Soul 
become one with Him and perceive all its action to be His. Then will it lose all its 
Mala, Maayaa and Karma.

பதினோராம் சூத்திரம்

        காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போற் 
        காணஉள் ளத்தைக் கண்டு காட்டலின் 
        அயரா அன்பின் அரன்கழல் செலுமே

உரை: காட்டக் காணும் இயல்புடைய கண்ணுக்கு உருவத்தைக் காட்டித் தானும் காண்கின்ற 
உயிர்போல, உயிர் பொருள்களை அறியும்படி முதல்வன் அதனோடு இயைந்து நின்று 
அறிவித்து அறிந்து வருதலால், அந்த உபகாரத்தை மறவாது கடைபிடித்துச் செய்யும் 
அன்பாலே, முதல்வன் திருவடியாகிய சிவானந்த அனுபவத்தை எய்தும்.

    As the soul enables the eye to see and itself sees, so Hara enables the soul 
to know and itself knows. And this Adwaitha knowledge and undying Love will unite it 
to His Feet.

பன்னிரண்டாம் சூத்திரம்

        செம்மலர் நோன் தாள் சேரல் ஒட்டா
        அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
        மால் அற நேய(ம்) மலிந்தவர் வேடமு(ம்) 
        ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே.

உரை: சீவன்முத்தன் உடம்பில் வீடெய்தியவன் செந்தாமரை மலர்போல விரிந்து விளங்கிய
முதல்வனது வலிய திருவடிகளை அணைய வொட்டாது மறத்தலைச் செய்விக்கும் மும்மல 
அழுக்கை ஞானநீரால் கழுவி, மறவா அன்பு செய்யும் அறிஞரோடு கலந்து மலமயக்கம் நீங்க,
அன்புமிக்க அவரது திருவேடத்தையும் சிவன்கோயிலையும் முதல்வன் எனவே கண்டு வழிபடுவன்.

    Let the Jivatmaa after washing off its Mala which separates it from the strong 
Lotus Feet of the Lord and mixing in the society of Bhaktas (Jivan Muktas) whose soul 
abound with love, having lost dark ignorance, Contemplate their Forms as well the Forms
in the temples as His Form.

        ஸ்ரீமெய்கண்ட தேவ நாயனார் திருவடி வாழ்க .

Related Content

An Interpretative Translation of the Twelve Sutras of the Si

Sivagnanabhotham - H.A. Popley