logo

|

Home >

saiva-siddhanta >

unmaineri-vilakkam

உண்மை நெறி விளக்கம்

சீகாழி தத்துவநாதர் (உமாபதி சிவம்)

(காலம் : கி.பி.1350)


1.
மண்முதற் சிவம தீறாய் வடிவுகாண் பதுவே ரூபம்
மண்முதற் சிவம தீறாய் மலஞ்சட மென்றல் காட்சி
மண்முதற் சிவம தீறாய் வகையதிற் றானி லாது
கண்ணுத லருளால் நீங்கல் சுத்தியாய்க் கருதலாமே

2.
பாயிரு ணீங்கிஞானந் தனைக்காண்ட லான்ம ரூபம்
நீயுநின் செயலொன் றின்றி நிற்றலே தரிச னந்தான்
போயிவன் தன்மை கெட்டுப் பொருளிற்போயங்குத் தோன்றா
தாயிடி லான்ம சுத்தி யருணூலின் விதித்த வாறே.

3.
எவ்வடி வுகளுந் தானா யெழிற்பரை வடிவ தாகிக்
கௌவிய மலத்தான் மாவைக் கருதியே யொடுக்கியாக்கிப்
பௌவம்விண் டகலப் பண்ணிப் பாரிப்பானொருவனென்று
செவ்வையேயுயிரிற் காண்டல் சிவரூபமாகுமன்றே.

4.
பரையுயிரில் யானெனதென் றறநின்ற தடியாம்
பார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்
உரையிறந்த சுகமதுவே முடியாகு மென்றிவ்
உண்மையினை மிகத்தெளிந்து பொருள்வேறொன்றின்றித்

தரைமுதலிற் போகாது தன்னிலைநில் லாது
தற்பரையி னின்றழுந்தா தற்புதமே யாகித்
தெரிவரிய பரமாநந் தத்திற் சேர்தல்
சிவனுண்மைத் தரிசனமாச் செப்பு நூலே.

5.
எப்பொருள்வந் துற்றிடினு மப்பொருளைப் பார்த்தங்
கெய்துமுயிர் தனைக்கண்டிங் கவ்வுயிர்க்கு மேலா
மொப்பிலருள் கண்டுசிவத் துண்மை கண்டிங்
குற்றதெல்லா மதனாலே பற்றி நோக்கித்
தப்பினைச்செய் வதுமதுவே நினைப்புமது தானே
தருமுணர்வும் புசிப்புமது தானே யாகும்
எப்பொருளு மசைவில்லை யெனவந்தப் பொருளோ
டிசைவதுவே சிவயோக மெனுமிறைவன் மொழியே.

6.
பாதகங்கள் செய்திடினுங் கொலைகளவு கள்ளுப்
பயின்றிடினு நெறியல்லா நெறிபயிற்றி வரினுஞ்
சாதிநெறி தப்பிடினுந் தவறுகள்வந் திடினுந்
தனக்கெனவோர் செயலற்றுத் தானதுவாய் நிற்கின்
நாதனவ நுடலுயிரா யுண்டுறங்கி நடந்து
நானாபோ கங்களையுந் தானாகச் செய்து
பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போகமெனப் பேசுநெறி யிதுவே.
 

பாயிரம்

எண்ணும் அருள்நூல் எளிதின் அறிவாருக்(கு)
உணமை நெறிவிளக்கம் ஓதினான் - வண்ணமிலாத்
தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்
நண்பாய தத்துவநா தன்.

முற்றும்



This page was first put up on June 27, 2001


Back to Potrippaqrodai Page
Back to Siddhanta Sathira Page

Related Content

Saiva Siddhanta Lectures

வினா வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, சிவப்பிரகாசம்

போற்றிப் பஃறொடை

Saiva Siddhantha - Old Home Page