அன்பர்களே,
மெய்கண்டார் தமது சிவஞானபோதத்தை அருளிய காலந்தொடங்கி, தமிழ தத்துவச் சிந்தனை அதன்அடிப்படையிலேயே
வளர்ந்துள்ளது. பண்டைய சிவஞானிகள் அதனை ஆழக்கற்று ஏனையோரும் புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு
சூத்திரத்தின் உட்பொருளை சூரணித்து எளிய முறையில் விளக்கிச் செல்ல அதுவே சூர்ணிக்கொத்துஎன்று பெயர்பெற்று
மூலநூலொடு உடன் வைத்து படிக்கப்படுவதும் ஆயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டு நல்லசாமிப் பிள்ளை,வசனலங்காரதீபம்
எழுதிய ஈழத்து செந்திநாதையர், தெளிவுரை எழுதிய கிருபானந்த வாரியார் ஆகியோருக்கும் இன்னும்பலருக்கும் மிகவும்
பயன்பட்டதாய் இந்த சூர்ணிக்கொத்து விளங்கியுள்ளதை காணமுடிகின்றது. அன்பர்களுக்கு அதனை வழங்குவதில்மகிழ்ச்சி
அடைகின்றேன்.
அன்பன் கி.லோகநாதன்
----------------------------
சூர்ணிக்கொத்து
பொதுவதிகாரம்: பிரமாணவியல்
முதல் சூத்திரம்
1. சகம் பிறப்பு இருப்பு இறப்பாகிய முத்தொழிலையுடையது
2. அது அரனாலே உடையது
3. மற்ற இருவரும் முத்தொழில் படுவர்கள்
இரண்டாம் சூத்திரம்
1. அரன் உயிர்களின் இரண்டற நிற்பன்
2. உயிர்களுக்குக் கன்மப்பலனை அரனே கொடுப்பன்
3.உயிர்கள் அச்சு மாறியே பிறக்கும்.
4. அரன் சருவ வியாபகன்.
மூன்றாம் சூத்திரம்
1. இல்லை என்கிற அறிவுடனே செல்லுகையினாலே அறி உயிர் உண்டு.
2. எனது உடல் என்று பொருட்பிறிதின் கிழமையாகச் சொல்லுகையினாலே, உடற்கு வேறாய் உயிர்உண்டு.
3. ஐந்தையும் ஒருவனே அறிதலின், ஒவ்வொன்றை மாத்திரம் அறிகிற ஐந்திற்கும் வேறாய் உயிர்உண்டு.
4. கனவுடலை விட்டு நனவுடலிலே வருகையினாலே அக் கனவுடற்கு வேறாய் உயிர் உண்டு.
5. நித்திரையிலும் பிராணவாயுத் தொழில் பண்ணவும் சரீரத்துக்குப் புசிப்பும் தொழிலும் இல்லாதபடியினாலே,பிராண வாயுவுக்கு
வேறாய் உயிர் உண்டு.
6. மறந்து மறந்து நினைக்கிறபடியினாலே மறவாமல் இருக்கிற அரனுக்கு வேறாய் உயிர் உண்டு.
7. எல்லாத் தத்துவங்களுக்கும் வேறு வேறு பெயர் இருக்கையினாலே, அந்தந்தத் தத்துவங்களுக்கு வேறாய்உயிர் உண்டு.
பொதுவதிகாரம்: இலக்கணவியல்
நான்காம் சூத்திரம்.
1. அந்தக்கரணங்களுக்கு உயிர் உட்கூடினாலன்றித் தொழில் இல்லாதபடியினாலே, அந்தக்கரணங்களுக்குவேறாய் உயிர்
உண்டு.
2. மலமறைப்பால் உயிருக்கு அறிவு இல்லை
3. உயிர் மூன்று அவத்தைப்படும்.
ஐந்தாம் சூத்திரம்
1. உயிராலே தத்துவங்கள் எல்லாம் தொழில் செய்யும்.
2. அரனாலே உயிர்களெல்லாம் அறியும்.
ஆறாம் சூத்திரம்.
1. உயிர் அறிவினாலே அறியப்பட்டதெல்லாம் அழியும்.
2. அப்பிரமேயமாக அறியப்பட்டவனே அரன்.
உண்மை அதிகாரம்: சாதனவியல்
ஏழாம் சூத்திரம்.
1. அரன் பாசத்தை அனுபவியான்.
2. பாசம் அரனை அனுபவியாது.
3. உயிர் அவ் அரனை அடையும்; அனுபவிக்கும்.
எட்டாம் சூத்திரம்.
1. உயிருக்கு நல்லறிவு தவத்தினாலேயே வரும்.
2. உயிருக்குச் சற்குருவாய் வருவது அரனே.
3. உயிர் பஞ்சேந்திரியங்களைப் பற்றுகையினாலே தன்னையும் அறியமாட்டாது.
4. உயிர் பஞ்சேந்திரியங்களிலே பற்றற்றால் தன்னையும் அறியும்.
ஒன்பதாம் சூத்திரம்.
1. உயிர் அரன் ஞானத்தினாலேயே அரனைக் காணும்.
2. உயிர் பாசத்திலே பற்றற்றால், அரன் வெளிப்படுவன்.
3. பஞ்சாட்சரசெபம் பண்ணினல் வாசனாமலம் போம்.
உண்மை அதிகாரம்: பயனியல்
பத்தாம் சூத்திரம்.
1. அரனுடன் ஒன்றாகி நில்.
2. உன்தொழிலெல்லாம் அரன் பணி என்று கொள்.
பதினொன்றாம் சூத்திரம்.
1. ஞானிக்கு வருகிற விடயங்களை அரனே அனுபவிப்பன்.
2. அரனை மறவாமல் அன்பு இருந்தால் அவனிடத்திலே ஐக்கியமாய்ப் போவன்.
பன்னிரண்டாம் சூத்திரம்.
1. மும்மலங்களையும் களைக.
2. சிவஞானிகளுடனே கூடுக.
3. சிவஞானிகளையும் சிவலிங்கத்தையும் சிவனெனவே தேறி வழிபடுக.
4. வழிபடாமையை ஒழிக.
ஆகச் சூத்திரம் 12க்கு சூர்ணிக்கொத்து 39
(முற்றும்)