logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

thiruvasaga-kathaigal

திருவாசகத்துள் வந்துள்ள கதைகள் (புராணங்கள்)

(From the Thiruvasagam publication of Socia Religious Guild, Thirunelveli)

1. அடிமுடி தேடியது

    படைப்புக் கடவுளாகிய பிரமனுடைய நாட்கள் ஒவ்வொன்றும், தேவர்கள் ஆண்டில் 12,000 ஆண்டுகள் 
கொண்ட பகற்பொழுதும், அதே அளவுள்ள இராப்பொழுதும் கொண்டதாகும்.  தேவர்கள் ஆண்டு 12,000 என்பது, 
மண்ணுலக ஆண்டு 4,320,000,000க்குச் சமமாகும்.  பிரமனுடைய இராப் பொழுதில், எவ்வகைச் செயலும், 
எவ்வகைத் தோற்றமும் அற்று, எல்லா உலகமும் உயிரும் ஒடுங்கி, ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரே அமைதியே 
நிலவும்; இதை, யாவும் அழிந்த ஊழி எனக் கூறுவர். இத்தகைய இரவு ஒன்றில், பிரமன், அண்டங்களுக்கு எல்லாம் 
முதல்வனும் உயிருமாகி ஆயிரங் கண்களுடன், நீர் உருவம் பெறாத நீர் மேல் ஆயிரம் படங்களையுடைய 
அனந்தன் என்னும் உயர் வெள்ளையணையில் நாராயணன் கண் வளர்வதைக் கண்டு, பெருவியப்பும் மகிழ்வும் 
உடையவனாய், என்றும் உள்ள அப்பொருளைக் கையினால் தொட்டு 'நீ யார்? சொல்' என்றான். செந்தாமரைக் கண்ணன், 
அனந்தலொடு கடைக்கண் சாத்தி, புன்னகை பூத்து "மகனே வருக" எனலும், பிரமன் வெகுண்டு “எண்ணிறந்த 
உலகங்களைத் தோற்றியழித்து யாவைக்கும் மூலமும் உயிருமாய் விளங்கும் என்னை , 'மகன்' என அழைக்கும் 
மடமை ஏன் கொண்டாய்?" எனக் கூறினான். 

    திருமால் “உலகங்களை எல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் நாராயணன் நான் என்பது அறிந்திலையா? 
நான் அன்றோ 'பரம்பொருள்; நீ என் அழியாத் திருமேனியிலிருந்து தோன்றினவன் அன்றோ " எனக் கூற, 
இருவருக்கும் 'யார் பரம்பொருள்' என்பதில் பூசல் தோன்றிப் போராகப் பெருகியது. அப்பொழுது, அண்டங்களை எல்லாம் 
அழிக்க எழுந்தது போல் முதல், நடு, ஈறு இல்லாத ஒரு பேரழற் பிழம்பு தோன்றவே, இருவரும் திகைத்து நின்றனர்.
அண்டம் அனைத்தும் கடந்து நின்ற பேரொளித் தூணமாகிய அனற்பிழம்பின் அடியையும் முடியையும் 
காணும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு, காவதக்கணக்கான நீளமும் அதற்கேற்ற பருமனும் கொண்ட 
நீலமணிக் குன்று போன்ற பன்றி உருவில், நிலத்தை அகழ்ந்து அடியைக் காண திருமாலும், திசையனைத்தும் 
விரிந்த சிறகுகளுடன் தூய வெண்மையான அன்னத்தின் உருவில், விரைந்து பறந்து முடியைக் காண பிரமனும் சென்றனர். 

    ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உழன்றும் காணவியலாது களைத்துக் கையற்றுத் தங்கள் ஆணவம் ஒடுங்கப் 
பெற்றனர். இந்த நிலையில், முன்தோன்றிய அனற்பிழம்பு, சிவலிங்க உருவில் காட்சியளித்து இருவருக்கும் அருள் செய்தது. 
தம் பேதமையால் 'பரமம் யாம் பரமம்' என்ற பிரமன் அரி இருவரும் தம் பதைப்பு ஒடுங்கி, பரம்பொருள் சிவபெருமானே 
என உணர்ந்து வழிபட்டார்கள். பிரமன் முடியைக் கண்டதாகப் பொய் கூறியபடியால், சிவபெருமான், அவனுடைய 
ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிந்து, அவனை நான் முகனாக நிலைக்க அருளினார் .

2. அத்தி உரித்து அது போர்த்தது

    முன்னொரு காலத்தில் யானை வடிவம் கொண்ட கயாசுரன் என்னும் ஓர் அசுரன், நான்முகனை நோக்கித் 
தவம் செய்து அழியாத வலிமை, வாழ்நாள், செல்வம் முதலிய பல வரங்களைப் பெற்று மூன்று உலகங்களிலும் 
சுற்றித் திரிந்து எல்லோருக்கும் துன்பம் செய்து வந்தான், திசைக் காவலர்களை வெருட்டினான். இந்திரன் ஏறிச் 
செல்லும் ஐராவதத்தின் வாலைப் பிடித்துச் சுழற்றி எறிந்து, இந்திரனும் தேவர்களும் புறங்கொடுத்து ஓடச் செய்தான். 
தேவர்களும், முனிவர்களும், மற்றுமுள்ளோரும், பெருநடுக்கம் கொண்டு, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் 
காசிப்பதியில் அடைக்கலம் புகுந்தார்கள். கயாசுரன், தான் பெற்ற வரங்கள் எல்லாம் சிவபெருமான் முன்னம் 
நில்லாது என்பதை அறவே மறந்தும், தன் வெற்றியிலும் வலிமையிலும் செருக்குற்றும் , சிவபெருமான் கோயில் 
கொண்டிருக்கும் திருப்பதியில் அடைக்கலம் புகுந்தவர்களையும் கொன்று சிதைக்கும் கொடிய நோக்கத்துடன் 
யானையின் வடிவு கொண்டு, திருக்கோயிலின் முன்பு சீற்றத்துடன் சென்று இடிபோலப் பெருமுழக்கம் செய்தான். 

    அடியவர்களுக்கு அரணாகிய சிவபெருமான், கண்டார்  நடுங்கும் தோற்றத்துடன், கயாசுரன் முன் 
தோன்றினார். முடிவு நெருங்கியபடியால் சிவபெருமானுடனும் போர் செய்வதற்காகத் துடித்து ஓடினான். 
சிவபெருமான் திருவடியால் உதைக்கப் பெற்றுப் பதைபதைத்துக் கீழே விழுந்தான். அவ்வாறு விழுந்த
கயாசுரனாகிய யானையின் தலையை ஒரு திருவடியாலும், தொடையை மற்றொரு திருவடியாலும்
மிதித்துக்கொண்டு திருக்கைகளின் நகங்களால் முதுகில் கிழித்து நான்கு கால்களும் பக்கங்களில்
பொருந்தும் படி தோலை உரித்தார். இதைக் கண்டு உமையம்மையும் நடுங்கினார். பெருமானின் உக்கிரத் 
திருமேனியின் பேரொளியில் உயிர்களின் கண்கள் பார்வையை இழந்தன. ஒளியின் கொடுமையைக் குறைத்து,
உயிர்களின் கண்ணொளி மயக்கத்தைப் போக்கத் திருவுளங்கொண்டு உரித்த யானைத் தோலைத் 
திருப்புயத்தின் மேல்போர்த்துத் தன் கடுவொளியை மாற்றினார்.  கயாசுரன் அழிந்தது கண்டு மூவுலகும் 
பெருமகிழ்ச்சியடைந்து சிவபெருமான் திருவருளைப் போற்றி வாழ்த்தின.

    "எண் திசையோர் அஞ்சிடுவகை கார்சேர் வரையென்னக் கொண்டெழு 
    கோலமுகில் போல் பெரிய கரிதன்னைப் பண்டுரி செய்தோன்" 

                                (தேவாரம் 1053)

    "வேழம் உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார்" 

                                (தேவாரம் 4870)

    "உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கெய்த ஓர் குஞ்சரத்தை" 
                                (தேவாரம் 4994)

    "உமையவளை அஞ்சநோக்கிக் கலித்து ஆங்கு இரும்பிடி மேல் 
    கைவைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா" 
                                (தேவாரம் 6715)

3.  அத்திக்கு அருளியது

    துருவாச முனிவர், சிவபெருமானை முறைப்படி வழிபாடு செய்யும் பொழுது பெருமான் 
திருமுடியிலிருந்து நறுமணம் மிக்க பொன்னிறத் தாமரை மலர் ஒன்று முனிவர் கையகத்து விழுந்தது; 
அதைப் பன்முறையும் வணங்கிக் கையில் ஏந்திக்கொண்டு பொன்னுலகுக்குச் சென்றார்; அங்கு, இந்திரன், 
பேரார்வத்துடன் தேவர்களும் முனிவர்களும் பல்லாண்டு இசைக்கவும், அரமகளிர் ஆடிப்பாடி சூழ்ந்து 
வரவும், இன்னியம் பல ஒலிக்கவும், சாமரைகள் இரட்டவும் , வெண்கொற்றக்குடை நிழற்றவும், 
ஐராவதத்தின் மேல் அமர்ந்து, உலா வருவதைக் கண்ணுற்றார். 

     உலாப்போந்த வாசவனை வணங்கி வானவர்கள் பல கையுறை வழங்கினர்; முனிவரும் தன்
கையகத்திருந்த பொன்மலரைக் கையுறையாகக் கொடுத்தார். அத் தெய்வமலரின் மாட்சியறிய மாட்டாத
புரந்தரன், அதைப் பொருட்படுத்தாமல் ஒரு கையால் வாங்கித் தான் ஊர்ந்து வந்த ஐராவதத்தின் முடியில் 
வைத்தான்; அந்த வெள்ளையானை, களிப்பு மிகுதியால், அம்மலரைக் கீழே தள்ளிக் காலால் தேய்த்து விட்டது. 
தான் கையுறையாகக் கொடுத்த சிவபெருமான் திருமுடிமேல் சாத்தப் பெற்ற பொற்றாமரைக்கு நேர்ந்த
இழிவையும், ஆகண்டலன் (இந்திரன்) ஆணவத்தையும், நான்கு கொம்பு யானையின் செருக்கையும் கண்டு 
மனங்கொதிப்பேறிய முனிவர், இந்திரனை நோக்கி 

    "ஆயிரங் கண்ணோய் ! 
     வண்டுளருந் தண்டுளாய் மாயோன் இறுமாப்பும்
    புண்டரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும்
    அண்டர் தொழ வாழ் உன் இறுமாப்பும் ஆலாலம்
    உண்டவனைப் பூசித்த பேறென்றுணர்ந்திலையால்"

உன் முடி, மண்ணுலக மன்னன் பாண்டியன் ஒருவனால் சிதறக்கடவது, இந்த வெள்ளையானையும் 
மண்ணுலகத்தில் காட்டானையாகப் பிறந்து அலைந்து உழலக்கடவது" எனச் சாபமிட்டார். ஈரிறு
மருப்பின் சீரிய யானையும் கரியாக மண்ணுலகிற் பிறந்து யானைக் கூட்டங்களுடன் காடுகளிலும் 
மலைகளிலும் அலைந்து கொண்டிருக்கலாயிற்று. இவ்வாறு திரிந்து கொண்டிருக்கும் பொழுது 
ஒரு நாள், கடம்பவனத்துள் நுழைந்து அங்கிருந்த தாமரைக் குளத்தில் நீராடியது. முனிவர் சுடுசொல் 
விடுதலையாகும் காலம் வந்துற்றபடியால் காட்டானை உருவம் நீங்கி, பண்டைய வடிவும் அறிவும் 
பெற்றது. அங்கு சொக்கலிங்க மூர்த்தியாகக் காட்சியளித்த சிவபெருமானை வணங்கி,  தாமரைப் 
பொய்கையிலிருந்து, தன் துதிக்கையால் நன்னீர் கொண்டு வந்து இறைவன் திருமேனிக்குத் 
திருமஞ்சனம் செய்து, தாமரை மலர்களைச் சாத்தி வழிபட்டது. வெள்ளை யானையின் பூசைக்குத் 
திருவுளம் மலர்ந்த சிவபெருமான், வேண்டிய வரங்களைத் தந்து, வானவர் உலகில் முன்புபோலச் 
சீரும் சிறப்பும் பெற்று வானவர் தலைவர் ஊர்தியாகத் திகழும் வண்ணம் திருவருள் செய்தார்.

4. அந்தகனை மாயா வடுச் செய்தது

    அந்தகன் என்னும் அசுரன் ஒருவன் சிவபெருமானை எதிர்த்து அவரது சூலப்படையினால்
அழிவுற்றான் என்னும் பழஞ்செய்தி 

    "காளமேகந்நிறக் காலனோடு அந்தகன் கருடனும்
    நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின்
    நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார் 
    கோளு நாளுந் தீயவேனும் நன்காங் குறிக்கொண்மினே"

                                (தேவாரம் 2763)

    " நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனைச் செற்ற 
    வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமிழலையார்....." 

                                (தேவாரம் 2891)

    "------- தண்வயல் கண்டியூர் உறை வீரட்டன் 
    ---------அமரரானவர் ஏத்த அந்தகன் தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே"

                                (தேவாரம் 3209)

எனத் திருமுறைகளில் காணப்படுகின்றது. 'அந்தகன்' என்பதற்கு 'யமன்' என்றும், 'சனி' என்றும்
பொருள் கூறுவாரும் உண்டு.

5. அந்தணன் ஆகி ஆண்டு கொண்டது

    திருவாதவூரடிகளுக்குச் சிவபெருமான் ஞான குரவனாகத் தோன்றி ஆட்கொண்டதைக் குறிப்பிடுகின்றது.

6.  அந்தரத்து இழிந்து பாலையுள் அமர்ந்தது

    இச்செய்தி, திருப்பெருந்துறையில் சிவபெருமான் எழுந்தருளியதைக் குறிப்பிடுவதாகச் சிலர் கொண்டு 
"தென்பாலைத் திருப்பெருந்துறை" (550) என அடிகளார் குறிப்பிடுவதைத் துணையாகக் கூறுவர். சிலர், 
'அழகனே கழிப்பாலை எம் அண்ணலே' (தேவாரம் 5627)

    "அத்தனை அணியார் கழிப்பாலைஎம் 
    சித்தனைச் சென்று சேருமா செப்புமே"
                        (தேவாரம் 5632)
    " ஐயனே அழகே அனலேந்திய
    கையனே கறைசேர்தரு கண்டனே
     மையுலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் 
    ஐயனே விதியே அருள் என்னுமே"

                        (தேவாரம் 5631)

 என்னும் திருமுறைப் பகுதிகளைத் தொடர்புபடுத்தி, 'பாலை' என்பது “கழிப்பாலை" என்னும் திருப்பதியைக் 
குறிப்பிடுகிறது என்றும், “அணியார்”, “அழகன்”, “அழகு" என வருவன "அழகமர் பாலை', “சுந்தர வேடம்” 
என்பனவற்றோடு இயைபுடையன எனவுங் கூறுவர். சிலர், அடிகளார் காலத்தில் வழக்கிலிருந்த நான்கு 
கயிலாயங்களுள், மேற்குக் கயிலாயத்தை இத்தொடர் குறிப்பிடுகின்றதென்றும், அங்கு, வானத்திலிருந்து 
இழிந்தருளிய சிவலிங்கம் ஒன்று நிலைபெற்றுப் பல சமயத்தாராலும் வணங்கப்பெற்று வந்ததென்றும், 
அத் தெய்வநிலை, இப்போது அரபிய நாட்டில் தெய்வச் சிறப்புற்றுத் திகழும் 'மெக்கம்' என்னும் திருப்பதியாக 
இருக்கக்கூடும் என்றும்,

    'அந்தரத்து இழிந்து வந்து அழகமர் பாலையுள்
    சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்'

என்பன, எல்லா வழியாலும் தங்கள் கொள்கையையே வலியுறுத்துகிறது என்றும், “தன்மை" என்பது 
"தொன்மை" என இருந்திருக்க வேண்டும் என்றும், ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உரிய கருத்துக்களைக்
கூறுகின்றனர்.

7. அயன் தலை கொண்டு செண்டாடியது

    60-ஆவது கதை பார்க்க.

8. அயனை மாயா வடுச் செய்தது

    பிரமனை ஐந்து தலைகளில் ஒன்றைச் சிவபெருமான் கிள்ளி எறிந்ததாகப் பல கதைகள் கூறப்படுகின்றன,
 'அடிமுடிதேடிய' கதையுள் ஒன்று கூறப்பெற்றது. சிவபெருமானினும் தான் உயர்ந்தவனாக எண்ணிப் பிதற்றியமையால், 
பெருமான் அவ்வாறு பிதற்றிய ஐந்தாவது தலையைக் கொய்து எறிந்தார் என்றும்; பிரமன் காமக்குறும்புடன், 
தன்னிடமிருந்து தோன்றிய ஒரு பெண்ணின் அழகைப் பார்த்தமையால், சிவபெருமான், அவ்வாறு பார்த்த 
கண்களையுடைய ஐந்தாவது தலையைத் துணித்தனர் என்றும்; சிவனை, தனக்கு மகனாகப்பிறக்க வேண்டும் 
என்று பிரமன் வரம் கேட்ட போது, அப்பெருமான் இட்ட சாபத்தால், ஐந்தாவது தலை வெடித்து உதிர்ந்தது என்றும், 
பழங்கதைகளில் காணப்பெறுகின்றது.

9.  அரக்கன் தோள் நெரித்தது

    வானினும் நீரினும் செல்லவல்லவர்களும் பல மாயங்களும் கற்றுக் கைதேர்ந்தவர்களுமாகிய 
அரக்கர்களுக்குத் தலைவனாக, இலங்கையைத் தலைமையிடமாக வைத்து மூவுலகங்களையும் ஆட்சி 
செய்துவந்த இராவணன் என்னும் அரக்கன், சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து
பல வரங்களையும் பெற்றுத் தேவர்களும் மூவர்களும் அடிபணியவும் இருசுடரும் ஐம்பெரும்பூதமும்
ஏவல் கேட்கவும் தனக்கு மிக்காரும் ஒத்தாரும் எவ்வுலகத்திலும் இல்லை என இறுமாப்புக் கொண்டு 
திரிந்து வந்தான். ஒரு நாள் அவன் வான் வழியாக விமானத்தில் செல்லும்போது சிவபெருமான் 
கயிலைக் குன்றம் எதிர்ப்பட்டது; பாகன், விமானத்தை நிறுத்தி, கயிலைக்குன்றத்தை வணங்கி 
வலம் செய்து செல்வதே முறை எனக் கூறினான். 

    ஆணவம் தலைக்கேறிய அரக்கன்,  தான் பெற்ற பேறு அனைத்தும் சிவபெருமான் அளித்தவையே 
என்பதை அறவே மறந்து, ஒரு சிறிதும் பணிவு இன்றி, விமானத்தைக் கயிலைக்குன்றுக்கு மேலே செலுத்துமாறு
கட்டளையிட்டான்; விமானம் மேற்செல்லும் ஆற்றலின்றி நின்றுவிடவே, கடுஞ்சினங்கொண்டு 
குறுக்கே நின்ற கயிலாய மலையையே எடுத்து எறிந்து விடுவதாக விமானத்தினின்றும் இறங்கித் 
தன் வீரத்தோள்களால் மலையைப் பெயர்க்கத் தொடங்கினான். மலையும் சிறிது அசைவுற்றது. 
கயிலையில் இறைவனோடு வீற்றிருந்த உமையம்மையும் துணுக்குற்றனர். 

    சிவபெருமான் தன் திருவடியின் சிறு விரலைச் சிறிது அழுத்தினார். ஒரு மலையைத் தூக்கி எழும்
மற்றொரு மலைபோல் கயிலையைத் தோள் கொடுத்துத் தூக்கிய அரக்கனது முடியும் தோளும் நெடுநெடு என 
நெரிபட்டு அரக்கனும் யானைக் காலில் அகப்பட்ட அத்திப்பழம் போல் நசுக்குண்டு கதறினான்.
பல காலம், மலையடியிற் கிடந்த வண்ணமாகவே சிவபெருமானைப் பணிந்து பல இனிய சாம கானப் 
பாடல்களைப் பாடி, விடுதலையடைந்து சிவபெருமான் திருவருளையும், மேலும் பல வரங்களையும் 
பெற்று இலங்கைக்குத் திரும்பினான்.

10. அரியொடு பிரமற்கு அளவறியாமை

    1-ஆவது கதை பார்க்க. அனற் பிழம்பாக நின்ற சிவபெருமான் அடியையும் முடியையும் 
அரியும் பிரமனும் அளந்து காணவியலாது நின்றதைக் குறிப்பிடுவது.

11. அருக்கன் எயிறு பறித்தது

    60-ஆவது கதை பார்க்க.

12. அலரவனும் மாலவனும் அறியாத அழல் உருவம்

    1-ஆவது கதை பார்க்க. அலரவன் - தாமரை மலரிலுள்ள பிரமன். மால் = திருமால்

13. அலைகடல் மீமிசை நடந்தது

    14-ஆவது  கதை பார்க்க.            

14. அலைகடல்வாய் மீன் விசிறியது

    முன்பு ஒரு காலத்தில், சிவபெருமான், வேதங்களின் உண்மைகளை, உமையம்மைக்குச்
சொல்லிக் கொண்டிருந்தார். அம்மை, அவ்வுண்மைகளை உளம்பற்றிக் கேளாது பராமுகமாக இருந்தார்.
சிவபெருமான் வெகுண்டு "நீ உண்மைப் பொருளை உணர்ந்து கொள்வதில் நாட்டமில்லாது இருந்தமையால், 
மண்ணுலகத்தில் வலைச்சேரியில் வலைஞர் மகளாகத் தோன்றக் கடவாய்" எனச் சபித்தனர். அம்மை, 
நடு நடுங்கி “இறைவனே ஒரு கணமேனும் பிரியாது உடன் உறையும் யான் எவ்வாறு பிரிந்திருப்பேன்” 
என அழுதார்; 

    இறைவன் உளமிரங்கி, “என் செய்வது? இனிச் சாபத்தை மாற்ற முடியாது. ஆனால், நீ, 
வலைஞர் குலப் பெண்ணாக வளரும் நாட்களில், நாமே நின்பால் எழுந்தருளித் திருமணம் செய்து 
சாபத்தை நீக்குவோம்" என ஆறுதல் கூறி அனுப்பி விட்டார். அன்னைக்கு நேர்ந்த அலக்கணைக் 
கேள்வியுற்ற பிள்ளைகள் இருவரும், இவ்வளவும் இந்த வேதங்களாலன்றோ நிகழ்ந்தது என வெகுண்டு, 
சிவபெருமான் இருப்பிடம் சென்று அருகிருந்த வேதங்களைப் பறித்துக் கடலில் வீசி எறிந்து விட்டார்கள். 
இச்செயல் கண்டு கடுஞ்சினம் கொண்ட கறைமிடற்று அண்ணல், குறும்பு செய்த தன் மக்களைச் 
சபிக்க முடியாமல் இவர்களை உள்ளே விட்ட வாயிற் காவலனான நந்தி தேவரைச் சினந்து “நீ சுறா மீனாகப் 
பிறந்து கடலில் எறியப்பட்ட வேதங்களைச் சுமந்து திரிவாயாக" எனச் சபித்தனர்.

    சாபம் பெற்ற அம்மையார், பாண்டிய நாட்டில், ஒரு பரதவர் சேரியில், அக்குல மன்னனின் 
மகளாகவும், நந்திதேவர் அச்சேரியை அடுத்த கடலில், உச்சியில் வேதமும் உள்ளத்தில் சிவபெருமான் 
திருவடியும் வீற்றிருக்கும் சுறாமீனாகவும் வாழ்ந்து வந்தார்கள். கடலில் மீன் பிடிக்கும் பரதவர்களுக்கு, 
புதிதாக வந்த சுறா பல இடுக்கண்களைச் செய்து, கடற் பரப்பில் படகோ நாவாயோ ஓடாதபடி 
அச்சம் விளைவித்து வந்தது. வலைவளம் குன்றி, பரதவர்குடி வாட்டம் உறுவதாயிற்று. பரதவர்
மன்னனும், அச்சுறுத்தும் அச்சுறாவினைப் பிடிக்கப் பலவாறு முயன்றும் பயன்படாது போயிற்று. 

    வாட்டமுற்ற வலைஞர் பெருமகன் ஒன்றும் தோன்றாமல், இக்கடலைக் கலக்கித் திரியும் 
குன்றம் போன்ற சுறாவினைப் பிடிப்பவனுக்கே தன் மகளை மணஞ்செய்து கொடுப்பதென உறுதி 
கொண்டிருந்தான். அப்பொழுது, சிவபெருமானே வலிய வலைமகன் உருக்கொண்டு பரதவர் சேரியை 
அணுகி, அவர்கள் வேண்டிய வண்ணம், கடலினுள் சென்று வலை வீசி, எவர்க்கும் பிடிபடாத சுறாமீனைப் 
பிடித்து வலைவாழ்நர் இடுக்கணைப் போக்கினார். பரதவர் மன்னனும் தான் உறுதிகொண்டபடியே, 
தன் மகளை சுறாவினை ஒரே வீச்சில் பிடித்த இளைஞனுக்கு மணம் செய்து கொடுத்தான். உடனே 
அம்மையப்பனாகச் சிவபெருமான் வலைஞர் கோவிற்குக் காட்சி கொடுத்து, உமையும் நந்தியும் 
பெற்ற சாபத்தை விலக்கியருளி முன் நிலையிலே இருக்கத் திருவருள் செய்தார்.

15. அலைநீர் விடம் உண்டது

    முன் ஒரு காலத்தில், தேவர்கள் வலிமை குன்றியும் அசுரர்கள் வலிமை மிக்கும் இருந்தார்கள். 
வலிமை மிக்க அசுரர்கள் தேவர்களைப் பல வழியிலும் துன்புறுத்தி அவர்களுடைய உடைமைகளை 
எல்லாம் சிறுகச் சிறுகக் கவர்ந்து கொண்டார்கள். இந்த நிலை தொடருமானால்
தேவர்கள் அறவே ஒழிந்துவிடுவார்கள் என்ற அச்சம் பிறந்தது. தேவர்கள் அனைவரும் ஒன்று
சேர்ந்து நான்முகனைச் சரண் அடைந்து தாங்கள் வாழ்வதற்கான வழியை வகுத்தருள வேண்டினார்கள்.
பிரமதேவன், எல்லாத் தேவர்களையும் அழைத்துக் கொண்டு திருப்பாற்கடலின் வடகரை வழியாகச் 
சென்று அரவணையில் கண் துயிலும் பெருமானாகிய திருமாலிடம் தேவர்கள் குறையைத் 
தெளிவாகக் கூறி யாவரையும் காத்தருள வேண்டினான். 

    கமலக் கண்ணன் கருணை பொழியும் திருமுகம் மலர்ந்து கடைக்கணித்து "தேவர்களே உங்கள் 
அனைவரையும் காப்பாற்றி வலிமையுடையவராக்கி அசுரர்களைப் புறங்கொடுத்து ஓடச்செய்வன். 
திருப்பாற்கடலிலுள்ள அமிர்தத்தைக் கடைந்து எடுத்து உண்பீர்களானால் மரணமின்மையையும், 
பல செல்வங்களையும் வலிமையையும் பெறுவீர்கள். பாற்கடலிலிருந்து அமுதம் பெறுவதற்கு, மத்தாக 
மந்திர மலையை நாட்டி நாணாக வாசுகியைப் பூட்டித் தக்க வலிமையுடன் இருபுறமும் நின்று கடையவேண்டும். 
ஆனால், இப்போது, தேவர்களாகிய நீவிர் அனைவரும் வலிமையின்றி வாடுகின்றீர்கள்; நீங்கள் அனைவரும் 
கூடினால் ஒரு புறம் தான் நிற்க முடியும், மற்றொரு புறத்திற்கு அசுரர்களை ஆசைகாட்டிச் 
சேர்த்துக்கொள்வீர்களானால், அவர்கள் உழைப்பைப் பெற்றுக்கொண்டு கிடைக்கும் பொருள்களில் 
பங்கில்லாமல் ஏமாற்றிவிடலாம், எல்லா வழியிலும் நான் முன் நின்று உங்களைக் காத்து அமிழ்தம் 
ஈவேன்" என உறுதி கூறினார். 

    தேவர்கள் வாசுகியின் வாற்புறமும், அசுரர்கள் தலைப்புறமுமாக நின்று கடைந்தார்கள்.  வாசுகி 
வலி பொறுக்காமல் நஞ்சைக் கக்கியது; கடலினின்று கொடிய நஞ்சும் வெளிவந்தது; இரண்டும் கூடி 
ஆலாலமாகி அண்டங்களை எல்லாம் அழிப்பது போல் பரந்தது. திருமாலும், பிரமனும், தேவர்களும், 
அசுரர்களும் அஞ்சி, ஓடோடிச் சென்று சிவபெருமானைச் சரண் அடைந்தார்கள். சிவபெருமான் கொடிய 
ஆலகாலவிடத்தைத் தினையளவாகச் சுருக்கி அமுது செய்தருளி வானவரையும் தானவரையும் 
அழியாமற் காத்தார். இறைவன் நஞ்சு உண்டு வானவரை அமுதுண்ணச் செய்த பேரருளை, அந்நஞ்சு, 
இறைவன் திருமிடற்றில் நீலமணிபோல் நின்று உலகுக்குக் காட்டுகின்றது. 

    "நாகந்தான் கயிறாக நளிர்வரை அதற்கு மத்தாகப்
    பாகந் தேவரோடு அசுரர் படுகடல் அளறு எழக்கடைய 
    வேகநஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட
    ஆகம் தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே"

                            (தேவாரம் 2459)

16. ஆகமம் வாங்கியது

    14-ஆவது கதையிற் கண்டபடி உமையம்மையார் சிவபெருமானை மணந்து, தான் ஆகமங்களைக் 
கருத்தூன்றிக் கேளாமையால் வந்த விளைவு என்பதை உணர்ந்து, இறைவனை வேண்டி ஆகமங்களின் 
உண்மையை இறைவன் உரைப்ப அவர் கேட்டுத் தெளிந்தமையையும், கடலில் எறியப்பெற்ற ஆகமங்களை 
நந்திதேவர் சுறாவடிவில் சுமந்து கொண்டிருப்ப, அத்தேவர் சிவபெருமான் வீசிய வலையில் பிடிபட்ட போது 
ஆகமங்களும் அவருடன் வலையிற்பட்டு மீண்டும் நிலவுலகுக்கு வரச் செய்ததையும் குறிப்பிடுகின்றது.

17.  ஆட்டின் தலையை விதிக்குக் கூட்டியது

    60-ஆவது கதையைப் பார்க்க. விதி என்பது பிரமனுடைய பெயர்களுள் ஒன்று. துணைப்
பிரமர்களில் ஒருவனாகிய 'தக்கன்' சிறு விதி எனப் பெறுவான். இங்கு விதி என்பது  துணைப்பிரமர்களுள் 
ஒருவனாகிய தக்கனுக்கே வழங்கப்பெற்றுள்ளது.

18.  ஆலாலம் உண்டது

    15-ஆவது கதையைப் பார்க்க.

19.  ஆலின் கீழ் அறம் உரைத்தது

    சநகர், சநந்தனர், சநாதனர், சநற்குமாரர் என்னும் நான்கு முனிவர்களுக்கும் சிவபெருமான்
ஞானாசிரியனாகக் கல்லாலின் கீழ் வீற்றிருந்து, சரியை, கிரியை, யோகம் என்னும் முதல் மூன்று
பகுதிகளை விளக்கிக் கூறி, நான்காவதாகிய ஞானத்தை, இருந்தபடி இருந்து, மோன முத்திரையினால் 
அருளிச்செய்தார் என்பது பெருவழக்கிலுள்ள வரலாறு. சிவபெருமான், இந்தத் திருக்கோலத்தில் 
தக்ஷணாமூர்த்தி அல்லது தென்முகக்கடவுள் எனப் போற்றப் பெறுவர்.

    கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கமுதல் கற்ற கேள்வி 
    வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய் 
    எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்
    சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்

                                - திருவிளையாடற்புராணம்

    சிவபெருமான் திருவுருவத்தையே ஐம்புலன்களாலும் துய்த்து மனம் இறந்த மாண்பினராய்
எவ்வுயிர்க்கும் தண்மையே பூண்டு ஒழுகும் அறவோர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் 
நான்கின் உண்மைகளையும், முக்கண்ணான், திருவாய் மலர்ந்தருளினான் என்றும் ஐந்தவிந்தடங்கிய 
ஆன்றோர் காட்சியிற்கண்ட உண்மைகள் பொதிந்த முதல் நூல்களின் வழி நின்று இறைவன் தாளினை 
அடைய முயன்றார்க்கு, அவன் திருவருள் காட்டிய நெறியே, ஆலின் நிழலில் அருமறையாகச் 
சொல்லப்பெற்றதென்றும், அறநெறிகளைக் கிளரும் நான்கு வேதங்களை ஆலின் கீழ் அமர்ந்து 
நிமலன் அருளினான் என்றும், நேர்மையான நான்கு மறைகளின் பொருளை உரைத்ததோடு 
திருவருட் பிரகாசமாகிய பேரொளியைச் சேரும் சிறந்த வழிகளையும் அருளினான் என்றும், 
ஆளுடைய பிள்ளையார் கூறுகின்றார். (575. 515. 1411) திருவாதவூரடிகள், ஆலின் கீழ் உரைத்த 
அறம் முதல் நான்கால் அருந்தவர் உலகியற்கையைத் தெரிந்தனர் எனக் கூறுகின்றனர்.
ஆலடி அமர்ந்த தென்முகக் கடவுளை முன்னிலைப் படுத்தித் தாயுமானவர் பாடியுள்ள
'சின்மயானந்தகுரு' என்னும் பகுதி படித்துப் பயன் கொளற்பாலது.

20. இத்திதன்னில் இருமூவர்க்கு அருளியது

    முன்பு ஒரு காலத்தில், திருக்கயிலாயமலையில், உமையவள் உடனிருப்ப, சிவபெருமான் 
போக குருமூர்த்தியாய் எழுந்தருளி, சிவகணத் தலைவர்களுக்கும் முனிவர்களுக்கும், அரிய
மறைப்பொருளை இனிமையாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, முருகக் கடவுளுக்குப் பால் 
கொடுத்த கார்த்திகைப் பெண்களான இயக்கமாதர் அறுவரும், எம்பெருமான் திருவடிக் 
கமலங்களை வணங்கித் தங்களுக்கு அட்டமா சித்தியை உபதேசித்தருள வேண்டினார்கள்.
இறைவன் கருணை கொண்டு உபதேசம் செய்து, உடனிருக்கும் உமையைச் சுட்டிக் காட்டி, 
"இந்த அம்மையை இடைவிடாது வழிபட்டுச் சிந்திப்பீர்களாயின் இச்சித்திகள் அனைத்தும் 
நிலைக்கப் பெறுவீர்கள்” என்று கூறினார். 

    வினை வயத்தால் இயக்கமாதர் உமை வழிபாட்டை மறந்து சித்திகளும் கைவரப் 
பெறாமல் போயினர். அவர்கள் மறந்த குற்றத்திற்காக, சிவபெருமான் சாபத்திற்கு ஆளாகி, 
பாண்டி நாட்டில் பட்டமங்கை என்னும் பதியில் ஒரு ஆலமரத்தின் (இத்தி என்றும் பேசப்படுகிறது) 
கீழ், கற்பாறைகளாகக் கிடக்க வேண்டியதாயிற்று.  பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, 
மதுரையில் எழுந்தருளியுள்ள திருக்கோலத்தில் சிவபெருமான், பாறையாகக் கிடந்த இயக்கமாதர் 
முன் தோன்றி, சாபத்தை விடுதலை செய்து மீண்டும் அட்டமாசித்திகளை
அவர்களுக்கு உபதேசித்தார். இயக்கமாதரும் உபதேசப்படி பயின்று உமையம்மையை வழிபட்டு
வான்வழியாகக் கயிலையை அடைந்தார்கள்.

21. இந்திர ஞாலம் காட்டிய இயல்பு

    வாதவூரடிகளுக்குச் சிவபெருமான் ஞானாசிரியனாகத் தோன்றி இவ்வுலக வாழ்வு
 நிலையாதது என உணர்த்தியதைக் குறிப்பதாகும். இக் கருத்தையே “இந்திர ஞால இடர்ப் பிறவித்துயர்" 
என 635ஆம் செய்யுளிலும் குறிப்பிடுகின்றார். இந்திரசாலம், கனா, கழுதிரம் (கானல் நீர்) என்பன 
உலக நிலையாமைக்கு எடுத்துக்காட்டுகளாக நூலோர் கொண்டனவாகும். இந்திரசாலம் 
தோன்றும் பொழுதே இல்லையாய் வேறாதற்கும், கனா, முற்றும் நிகழ்ச்சியின்றி இடையில் 
மாறுதலுக்கும், கானனீர், ஒரு காரணங்காட்டி அழிவெய்தலுக்கும் உவமையாவன.  "இந்திரஞாலம் 
காட்டிய இயல்பு" என்பதற்கு இறைவன் நரிகளைப் பரிகளாகச் செய்த மாயத்தைக்
குறிப்பிடுவதாகவும் சிலர் கூறினர்.

22. இந்திரனைத் தோள் நெரித்தது

    60-ஆவது கதை பார்க்க.

23. இயக்கிமாரை எண்குணம் செய்தது

    அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், கந்தருவர், இயக்கர்,
விஞ்சையர், பூதர், பிசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசியர், போகபூமியர் என்னும் 
பதினெண் கணத்துள் இயக்கர் என்பர் ஒரு பகுதியினர். அப்பகுதியைச் சேர்ந்த பெண்பாலர்
அறுபத்து நால்வர் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து, தன் வயத்தர் ஆதல், தூய உடம்பினர் ஆதல், 
இயற்கை உணர்வினர் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கல், 
பேரருள் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்னும் எட்டு வகையான பேறுகளையும் பெற்ற
ஒரு பழஞ் செய்தியைக் குறிப்பிடுகின்றது. இந்த வரலாறு ஆந்திரம், கன்னடம், தென்மராடம்
முதலிய நாடுகளில் சில சிற்றூர்களில் வழங்கி வருகிறதன்றும்,  சில கோயில்களில் 
கற்சிலைகளும் காணப்பெறுகின்றது என்றும் கூறுவர்.

குறிப்பு: அட்டமாசித்திகளைப்பற்றி வேறு விளக்கங்களும் உள்ளன. கதை 71-ஐப் பார்க்கவும் .

24. இராவணன் பரிசு அழிந்தது

    9-ஆவது கதையைப் பார்க்க.

25.  இலங்கையில் பந்தணை விரலாட்கு அருளியது

    திருவுத்தரகோசமங்கையில், முன்பு ஒரு காலத்தில், இலந்தையம்பொதுவில் சிவபெருமான் 
அருட்டிருமுன், ஆயிரம் முனிவர், நின்று ஆகமப் பொருளைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கைவேந்தன் இராவணனது கற்பிற்சிறந்த மனைவி மண்டோதரியின் பூசனைக்கு 
அருள் செய்யவேண்டி, சிவபெருமான் இம்முனிவர்களுக்கு உபதேசம் செய்வதை நிறுத்திவிட்டு, 
இலங்கை மன்னன் மனைவிக்கு அவள் வேண்டியபடி குழந்தை உருவத்தில் காட்சியளித்து அருள் 
செய்தார். சிவ வழிபாட்டில் சிறந்தவனாகிய இராவணனும், குழந்தை உருவிற் காட்சியளித்த 
சிவபெருமானைத் தன் மனைவி மண்டோதரியின் கைகளில் இருந்து தூக்கி எடுத்து உச்சிமோந்து 
பேரானந்தம் கொண்டான். மண்டோதரி, தன் கணவனுக்குச் சிவபெருமானைத் தொட்டு எடுத்து 
மார்பில் அணைத்துக்கொள்ளும் நற்பேறு கிடைக்க வேண்டுமென்றே, குழந்தை உருவில் 
காட்சியளிக்க வேண்டினள் போலும். பந்தணை விரலாள் = மண்டோதரி

26. எச்சன் தலையை அரிந்தது

    60-ஆவது கதையைப் பார்க்க

27. எரி மூன்று தேவர்க்கு அருளியது

    மண்ணகத்தில் அந்தணர் ஓம்பும் வேள்வித்தீயின் வகையாகிய ஆகவனீயம் , 
காருகபத்தியம், தக்ஷிணாக்கினி, என்னும் மூன்று எரி(தீ) யையும் தேவர், பிதிரர், முதலியோர் 
அடையுமாறு வகுத்த இறைவனது பேரருள் குறிப்பிடப்பட்டது

28. எரியைக் கரம் தூய்மை செய்தது

    60-ஆவது கதையைப் பார்க்க.

29. ஏகம்பத்தில் இயல்பாய் இருந்தது 

    முன்பு ஒரு காலத்தில் சிவபெருமானும் உமையம்மையும் தலைவன் தலைவி முறையில்
மகிழ்பொங்க விளையாடிக் கொண்டிருக்கும்போது, அம்மை, இறைவன் கண்களை தன் இரு 
கைவிரல்களால் மூடினார். இரு கண்களும் இரு சுடர்களானபடியால் (சூரியன், சந்திரன்) கண்கள்
அம்மை திருக்கரத்தால் புதைபட்டவுடன் உலகம் எங்கும் இருள் பரவியது. உயிர்கள் எல்லாம்
நடுக்குற்றன. யாவும் மயங்கின. இறைவி கரம் நீத்தவுடன் மீண்டும் ஒளி பரவியது. உலகத்தில்
ஒளியை மறைத்து இருளைப் பரவச் செய்தல் தீய செயலானபடியால், அத்தீமையினின்றும் தீர்வு
பெறுதற்கு, அம்மை, காஞ்சிநகரை அடைந்து முறைப்படி முப்பத்திரண்டு அறங்களையும் செய்து
சிவ பூசையை நியமம் தவறாது செய்து கொண்டுவர வேண்டும் என இறைவன் பணித்தார்.
அம்மையாரும் காஞ்சியை அடைந்து எண்நான்கு அறங்களையும் எழில் பெறச் செய்து,

    "ஆனுடைப் பாற்குடம் கோடி அருஞ்சுவை நெய்க்குடம் கோடி 
    தேனுடைப் பொற்குடம் கோடி செழுங்கரும்பு அட்டதண்சாறு 
    தானிறை பொற்குடம் கோடி தயிருடைப் பொற்குடம் கோடி
    வானமிழ்தக் குடம் கோடி"

ஒரு சார் சேடியர் கொணரவும், பல்வகைப்பட்டும் ஒருசாரர் கைஏந்தி நிற்கவும் பல்வகைத் தீபமும்
ஒரு சாரர் ஏந்தி நிற்கவும்.

    " வழுவறு தோற்றமாதி வழுக்கிய பாவத்தீமை
    கழுவநின் பூசை இந்நாட் கடைப்பிடித்து அருளால் செய்கேன்"

என்று சங்கற்பம் செய்து கொண்டு சிவபூசை செய்து வருநாளில், கம்பையாறு பெருகிக் கடல்
புரண்டாற்போல் பரந்து வந்தது. தான் பூசை செய்துவரும் சிவலிங்கத் திருவுருவுக்கு என்ன
நேருமோ என்ற அச்சத்தால் நடுநடுங்கி வேதியின் மேல் தன் வலமுழந்தாளை ஊன்றி இரு
திருக்கரங்களாலும் சிவலிங்கத்தை இறுகத் தழுவிக் கொண்டார். உடனே “சுந்தரம் திகழ்சுடர்        
ஒளி இலிங்கத்தினின்று, முந்து தோன்றினர் மூவருக்கு அறிவருமுதல்வர்” (மூவராலும் அறிவதற்கு
அருமையான சிவபெருமான் உமையம்மை கட்டித் தழுவிய இலிங்கத்தினின்று வெளிப்பட்டார்)
பின்னர் இறைவனும் இறைவியும் திருமணக் கோலத்துடன் அடியவர்க்குக் காட்சியளித்து
மறைந்தனர். இதன்கண் இயல்பான பல நிகழ்ச்சிகள் பொதிந்துள்ளமை காண்க.

30. ஏனக்குருளைக்கு அருளியது

    முன்னொரு காலத்தில் வேளாளர் குலத்திற் பிறந்த சேனைத்தலைவன் ஒருவனுக்குப்
பன்னிரண்டு பிள்ளைகள் பிறந்து சிறப்புற வளர்ந்து வரும்போது, சேனைத்தலைவனும் அவன் 
மனைவியும் இறப்ப, பன்னிரு பிள்ளைகளும் போற்றுவாரின்றி, நாட்டைவிட்டு வேற்று நாட்டுக்குச் 
சென்று காடுகளைத் திருத்தி வயிறு வளர்த்து வந்தார்கள். ஒரு நாள், அந்தக் காட்டில் தவம் செய்துவந்த 
ஒரு முனிவனைப் பார்த்துச் சிரித்து ஏளனம் செய்தார்கள்.  முனிவன் சீற்றம் கொண்டு " நீவிர் 
பன்னிருவரும் பன்றிக்குட்டிகளாகப் பிறந்து, தாயை இழந்து இன்னலுறுவீர்களாக" எனச்  சுடுமொழி         
கூறினான். தங்கள் குற்றத்தை உணர்ந்து முனிவனைப் பணிந்து, சுடுமொழியை விடுவிக்க
மன்றாடிக் கேட்டனர். முனிவனும் இரங்கி "சோமசுந்தரக் கடவுள், உங்களுக்கு நற்கதி அளிப்பார்" 
எனப் பகர்ந்தான். அவ்வாறே பன்னிருவரும் பன்றிக்குட்டிகளாகப் பிறந்தனர்; தாய்ப் பன்றியை, 
அங்கு வேட்டையாடி வந்த அரசன் எய்து கொல்லவே, அக்குட்டிகள் பால் இல்லாமல் துயருற்று 
அழுங்குவனவாயின.  இத்துயர் கண்டு உலகுக்கு எல்லாம் அம்மையப்பராகிய சோமசுந்தரக் கடவுள், 
கேழல் உருவத்துடன் வந்து அப்பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்து வளர்த்தார். அவையும் 
யானைக் கன்றுபோல் ஓங்கி மேட்டைப் பள்ளமாகவும் பள்ளத்தை மேடாகவும் கோட்டால் உழுது திரிந்தன.

    பின்னர், திருவருளால் பன்றியாக்கையை விட்டு ஒரு வேளாண் தலைவனுக்குப் பிள்ளைகளாகப்
பிறந்து ஒத்த உருவம், நிறம், அறிவு, குணம் முதலிய வாய்க்கப்பெற்று உலகத்தோர் மதிக்கும் வண்ணம் 
வளர்ந்தனர். இவர்களது அறிவின் மேம்பாட்டைக் கேள்வியுற்ற பாண்டியன், பன்னிருவரையும் அழைத்து, 
அவர்கள் ஒரே தன்மையாய் விளங்குவதைக் கண்டு மந்திரிகளாக அமர்த்தினான். அவர்களும், 
படிப்படியாக அரசாங்கப் பணியில் உயர்ந்து தலமெலாம் அதிசயிப்பச் சாற்றரும் பகை கடந்து 
சிலைபொலி தடக்கை வேந்தைத் திசை விசயஞ் செய்வித்து வரிசை புனை வன்னியராகிச் 
சிலகாலம் மண்மேல் வாழ்ந்து கொன்றைச் சடிலமுடியான் திருவருளால் சிவலோகம் புக்கனர். 
அவர்கள் வாழ்ந்த மலை பன்றிமலை என வழங்கப்பெறுகிறது.

31. ஏனத் தொல்எயிறு அணிந்தது

    தேவர்களுக்குப் பேரிடர் இழைத்துவந்த இரணியாக்ஷன் என்னும் அசுரன் நிலமடந்தையைக் 
கவர்ந்து கீழுலகத்திற்குக் கொண்டுபோய் மறைத்துவைத்துவிட்டான். தேவர்கள் எல்லாம்
நடுங்கினார்கள்.  திருமால் பன்றி உருவம் கொண்டு மலைபோல் வளர்ந்து நொடிப் பொழுதில்
பாதலத்திற் புகுந்து இரணியாக்ஷனைக் கொம்பினால் குத்திக் கொன்று, நிலமகளை மீண்டும் தன்
நிலையில் நிலைக்கச் செய்தார். இந்த அருஞ்செயலால், திருமால், தானே பரம்பொருள் என்று
எண்ணி அகந்தை கொண்டு நிலத்தைத் தன் கொம்புகளால் தோண்டிக் கடலை உடைத்தார்.
சிவபெருமான், திருமாலின் அகந்தை அகல, அவர் கொம்பு ஒன்றைப் பறித்தார். திருமாலும் ,
நல் நினைவு வரப்பெற்றுப் பன்றி உருவத்தைப் போக்கித் தன் மூதுருவத்தோடு சிவபெருமானை
வணங்கினார். திருமாலிடமிருந்து பறித்த எயிற்றை வெற்றி அணிகலனாக மார்பில் பிறை போல்
ஒளிரும் வண்ணம் அணிந்தார்.

32. ஏனப்பின் கானகத்தே நடந்தது

    பாண்டவர் மறைந்துறையும் நாட்களில், அவர்களுள் முதல்வரான தருமர், தம் 
தாயத்தாருடன் போர் செய்துதான் தம் பங்கு நாட்டைப் பெறவேண்டிவரின் என் செய்வது எனக்
கவலை கொண்டிருந்தபோது, இந்திரன், ஒரு முதிய அந்தணன் வடிவில் தோன்றி, அவர்களுள்
அருச்சுனனை ஒத்த வீரர் உலகில் இல்லை என்றும், சிவபெருமானை நேரில் ஒருமுறை அருச்சுனன்
கண்டுவிடின், தெய்வப்படைக்கலங்களைப் பெற்று, தனிவீரனாக நின்று ஒருவனாகவே
துரியோதனன் கூட்டத்தையும் துணைவர்களையும் புறங்காண்பன் என்றும் அறிவுரை வழங்கினான்.
அருச்சுனன் இமய மலைச்சாரல் சென்று கடுந்தவம் புரிந்து சிவவழிபாடு செய்துகொண்டு இருந்தான். 
ஒரு நாள் சிவபூசை செய்து கொண்டிருக்கும் போது அவனைக் கொல்லவருவது போல்
ஒரு பன்றி நெருங்கியது; உண்மையில், பக்தியிலும் வீரமே மிகுந்துள்ள அருச்சுனன், பூசையையும்
மறந்து, வில்லை வளைத்து பன்றியை நோக்கி எய்தான். ஒரே கணையில் பன்றி விழுந்தது.

    ஆனால், அருச்சுனன் கணைபட்ட அதே சமயத்தில், வேறு ஒரு கணையும் அப்பன்றி மேல்
விழுந்தது. அக்கணையை எய்தவன் யாவன் என்று அருச்சுனன் சினந்து நோக்க ஒரு வேடுவன்
அருகில் நின்றான். இருவருக்கும், பன்றியை முதலில் எய்தவர் யார் என்பதில் விவாதம் ஏற்பட்டு
விற்போரும் மற்போரும் நடந்தது. விற்போரில் வெல்லவியலாது அருச்சுனன் மற்போரில் வெல்ல
எண்ணி, வேடனைத் தாளைப்பற்றி புறம்தள்ள எண்ணி இருகையாலும் தாளைப் பிடித்தான்.
வேடுவனைக் காணவில்லை. சிவபெருமான் உமையுடன் காட்சியளித்தார். அருச்சுனன் இறைவன்
திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்னித்தருளவும், தன்னை அவன் திருவடிக்குச் சேர்ப்பிக்கவும் 
படைக்கலங்கள் வேண்டாம் என்றும் விழைந்தான். இறைவன் அதற்கு இசையவில்லை. மீண்டும்
மீண்டும் அருச்சுனன் தனக்குப் படைக்கலங்கள் வேண்டாம் என்றும், அவன் திருவடிக்கீழ்
இருக்கவே பெரிதும் விரும்புவதாகக் குரை இரந்தான். 

    சிவபெருமான் "நீ படைக்கலங்கள் பெற வேண்டித்தான் தவம் இருந்தாய். அதனை 
இப்பொழுது பெற்றுக்கொண்டு செல்வாயாக.  அடுத்த பிறவியில் உன்னை நம் திருவடியில் 
சேர்ப்பித்துக் கொள்வோம்'  எனக்கூறிப் படைக்கலங்களைக் கொடுத்துவிட்டு மறைந்தருளினார். 
அருச்சுனன் அடுத்த பிறவியில் கண்ணப்ப நாயனாராகப் பிறந்து சிவன் சேவடிக்கீழ் இருந்து 
பேரின்ப வாழ்வு எய்தினார்.

33.  ஐயம் புகுந்தது

    முன்பு ஒரு காலத்தில், தாருகாவனத்தில், ஒரு முனிவர் கூட்டம் இருந்தது. அக்கூட்டம்
தெய்வசிந்தனை ஒரு சிறிதும் இன்றி, இம்மை மறுமைப் பேறுகள் அனைத்தையும் 
கன்மத்தினாலேயே பெறலாம் என்ற துணிவுடன், உடல் வருந்த அளவற்ற தவங்களைச் செய்து 
கொண்டும் வேள்விகளைச் செய்து கொண்டும் தெய்வத்தின் அருள் இன்றியே எல்லாம் கைகூடும் 
என்னும் எண்ணங்களை வலியுறுத்திக் கொண்டும் வந்தது. இதனால் உலகுக்குப் பல தீமைகள் 
விளைவனவாயின. தெய்வத் திருவருள் இல்லாமல் எச்செயலும் நிலைபெற்று ஓங்காது என்பதை 
அம்முனிவர் கூட்டம் உணர்ந்து நலனடையவேண்டி, சிவபெருமான், அழகிற் சிறந்த சிறுவயது 
ஆடவன் போன்று உருக்கொண்டு (பிட்சாடனர்) ஆடையின்றி அவ்வனத்துள் நுழைந்து முனிவர் 
மனைவியர் இருக்கும் பகுதியுள் சென்று இனிய இசையைப் பாடிக்கொண்டு ஐயம் ஏற்கத் தொடங்கினர்.

     ஒப்பற்ற ஆடவன் அழகில் தம் சிந்தையைப் பறிகொடுத்து நிறை அழிந்த அம்முனிவர் 
மனைவியர், பிக்ஷாடனமூர்த்தி (ஐயம் ஏற்கும் கோலம்) யாகிய சிவபெருமானைத் தொடர்ந்து சென்று 
காமமயக்கம் கொண்டு கருவுற்று நாற்பத்தெண்ணாயிரம் புதல்வர்களைப் பெற்றனர். 
இவ்வாறே கண்டார் மயங்கும் பெண்ணுருவமாகிய மோகினி வடிவுடன் திருமால் 
முனிவர்களது இருக்கை நோக்கிச் செல்ல, அம்முனிவர்கள் காமவேட்கை மிகுந்து, தவவலி குன்றி 
தங்கள் தங்கள் கன்மங்களை விடுத்து, விளக்கில் விழும் விட்டில்கள் போன்று மோகினியைச் 
சூழ்ந்து கொண்டு பல பலவாறு பிதற்றிக் காமத்தீயால் வெதும்பினார்கள். சிவபெருமானும் 
திருமாலும் மறைந்தவுடன், முனிவர்கள், தாங்களும் தங்கள் மனைவியரும் தவ வலிமையையும்
கற்பு நிலையையும் கைவிட்டு மிக்க இழிந்த நிலையை அடைந்ததைக் கண்டு நாணமும் சீற்றமுங் 
கொண்டு தீயகொள்கையையே பின்பற்றி, தங்களுக்கு இழிவு உண்டாக்கிய சிவபெருமானை         
அழித்து விடுவதாக அறியாமையால் ஆணவம் கொண்டு, பிறர்க்குத் தீங்கிழைக்கும் 
வேள்வியாகிய அபிசார ஹோமம் ஒன்றைச் செய்தார்கள். 

    அந்த வேள்விக் குண்டத்திலிருந்து வலிமை மிக்க கொடிய புலி ஒன்று இடிபோல் 
முழங்கிக்கொண்டு எழுந்தது. முனிவர்கள் அப்புலியை சிவபெருமானைக் கொல்லுமாறு ஏவினார்கள்.
புலி யாவரும் நடுங்குமாறு சிவபெருமான் முன் சென்று முழங்கியது. சிவபெருமான், அப்புலியைப் பிடித்து 
அதன் தோலை உரித்து, ஆடையாக அணிந்து கொண்டார். பின்னர் மான் ஒன்று தோன்றிச் சிவபெருமான்
திருமுன் சென்றது, அதனைத் தன் இடதுகையில் ஏந்திக் கொண்டார். பின்னர், அவ்வேள்வித் தீயினின்றும் 
எழுந்த, பாம்பு, பூதப்படை, வெண்தலை, உடுக்கை முதலியவையெல்லாம் சிவபெருமான் திருமுன் 
சென்றவுடனேயே ஆற்றல் அழிந்தவைகளாய் அவன் திருவருள் பெற்று அணியாய், ஆளாய், கருவியாய்
 அடைக்கலம் புகுந்தன. 

    இவைகளால் தாங்கள் எண்ணிய  தீச்செயல் இயலாமையைக் கண்ட தாருகாவன முனிவர்கள், 
இறுதியாகத் தோன்றிய முயலகன் என்னும் ஒரு பூதத்தையும் வேள்வித் தீயையும் ஏவினார்கள்.  சிவபெருமான் 
வேள்வித்தீயை ஒரு கையில் ஏந்திக்கொண்டு முயலகனைத் திருவடியால் கீழே தள்ளி அவன் முதுகின்மேல்
திருவடியை ஊன்றிக்கொண்டு நடனம் ஆடினார். உலகங்கள் எல்லாம் நடுங்கின. தாருகாவனத்து முனிவர்கள் 
நடுநடுங்கி வீழ்ந்தார்கள். திருமால், நான்முகன், இந்திரன் முதலிய தேவர்களெல்லாம் நடனத்தைக் கண்டு 
மகிழ்ந்தார்கள். உலகமும் உயிர்களும் நடுங்கி அயர்வதைக் கண்ட சிவபெருமான் நடனத்தை நிறுத்தித் 
தன்னை வணங்கிய தேவர்களுக்கெல்லாம் ஆனந்தம் அருளி, தாம் செய்த குற்றத்தை உணர்ந்து 
பொறுத்தருளுமாறு வேண்டிய தாருகாவன முனிவர்களுக்கும் சிவஞானம் கைவரத் திருவருள் செய்தார்.

34. ஐயாறு அதனில் சைவனாகியது

    திருவையாறு என்னும் திருப்பதியில் கோயில் கொண்டருளும் அறம் வளர்த்த நாயகியுடன்
கூடிய ஐயாறப்பரை ஆகமப்படி வழிபாடு செய்து வரும் ஆதிசைவர்களில் ஒருவர், கங்கை நீராடிக் 
காசியம்பதியில் கோயில்கொண்டருளும் சிவபெருமானை வணங்கச் சென்றிருந்தார் .  பல 
ஆண்டுகளாகியும் அவர் திரும்பவில்லை. இதுகண்ட மற்ற ஆதிசைவர்கள், அவருடைய காணி ,
முறை, முதலிய உரிமைகளைத் தங்களுக்குள் பகுத்துக் கொண்டு, அவருடைய இல்லத்தார் 
வருவாயின்றி வாட்டமுறச் செய்தனர். வாட்டமுற்ற அந்த ஆதிசைவருடைய மனைவியார், உற்றார் 
இலார்க்கு உறுதுணையாகும் ஐயாறப்பனுடைய பொற்றாளை வணங்கி முறையிட்டார். 

     அற்றார்க்கும் அலந்தார்க்கும் அடைக்கலம் ஆகிய ஐயாறன், கங்கை நீராடச் சென்ற 
ஆதிசைவருடைய தோற்றத்தில் தோன்றி, அந்த ஆதிசைவருடைய காணி, முறை, முதலிய 
உரிமைகளை மறுமுறையும் பெற்றுத்தானே தன் திருவுருவத்துக்கு வழிபாடியற்றினர். இந்த 
நிலையில் கங்கையாடச் சென்றிருந்த ஆதிசைவர் தம் ஊர் திரும்பினார்; தன் நிலையில் வேறு 
ஒருவர் வழிபாடு செய்துவருவதைக் கண்டு அச்சைவர் தானே என்பதை, மற்ற ஆதிசைவர்களிடம்
விளங்கக் கூறினார், பின்னர், ஒரே தோற்றத்தில் வந்துள்ள இரு ஆதிசைவர்களும், தங்களுள் 
உண்மையான உரிமையுடைய ஆதிசைவர் யாவர் என்பதை மெய்ப்பிப்பதற்காகத் திருக்கோயிலுள் 
புகுந்து, சிவபெருமான் திருவுருவத்தின் முன்பு வரும்போது, ஆதிசைவராக வந்த சிவபெருமான் 
திருவுருவத்தில் மறைந்தனர். இந்த அருட்காட்சியினைக் கண்ட ஆதிசைவர்களும் அடியவர்களும் 
சிவபெருமான் திருவருளைப் போற்றிப் புகழ்ந்து வணங்கினார்கள்.

35. ஓரியூரில் பாலனாகியது

    முன்பு ஒரு காலத்தில், பாண்டிய நாட்டிலுள்ள பெருங்கிராமம் என்னும் ஊரில், குலத்தாலும் 
ஒழுக்கத்தாலும் மிக்க சிவமறையோன் ஒருவன், தன் அருமை மகளாகிய கௌரியை, வேதம்வல்ல 
ஆலவாய் அண்ணலை ஒத்த அழகமைந்த பிரமசாரி ஒருவனைத் தேடித் திருமணம் செய்து 
கொடுக்க எண்ணியிருந்தான்; அப்போது அவன் இல்லத்தில் பிச்சை கொள்ள வந்த ஒரு பாகவத 
பிரமசாரியின் தோற்றத்திலும் வேதநூற் பயிற்சியிலும், பிரமசரிய நெறியிலும் மனம் மகிழ்ந்து,
 தன் மகளை அவனுக்கு, தந்திர நூன்மறைவிதியில் மணஞ்செய்து சடங்கு முடித்து இனிய பல நல்கி 
வழி அனுப்பினான். பிரமசாரியாக பரதேசம் போன பிள்ளை அணிபொலிய மணம் செய்து மாதினொடும்
ஊர் வரக்கண்ட உற்றார் உறவினர் எல்லாம் அவன் பெற்றோரைப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்.

    ஆனால், மணமகனின் தாய், தனக்கு மருகியாக வாய்த்தவள் சைவன் மகள் என்பது கண்டு மனம்
கொதித்தாள். மணம் செய்துகொண்டு வந்த இளையோனும், கௌரிபால் மனம் செல்லாமல் 
இளமையைக் கழித்தான். தான் புகுந்த அகத்தில் பாகவதர்களே அளவிறந்து புசிக்க, நீறு பூசியவர் 
ஒருவரேனும் வராதது கண்ட கௌரி வருந்தினாள். ஒருநாள் கௌரியின் மாமன் மாமி முதலியோர் 
வேற்றூருக்குச் சென்றிருந்தனர். அப்போது, வயது முதிர்ந்த வேதியர் ஒருவர் சைவத் திருக்கோலத்துடன் 
தள்ளாடி நடந்து கௌரியின் இல்லத்தில் பிச்சை கேட்டார். வேற்றூர் சென்ற மாமி அறைக்கதவுகளை 
எல்லாம் அடைத்துப் பூட்டியிருந்த படியால் ஒன்றும் செய்யவியலாது வருந்தினாள் . 

    "அடிகாள் என் செய்வேன் அமுதுபடி புறம்பில்லையே, அறைகள் எல்லாம் அடைத்துள்ளனவே" 
எனக் கலங்கிக் கூறினாள். விருத்த வேதியர் "அணங்கே என் பசி பெரிது, நீ அறையின் அருகே 
செல்வாயேல் கதவம் தானே திறக்கும்" எனக் கூறினார். அவ்வாறே கதவம் திறக்க, வேண்டிய எடுத்து 
விருப்புடை அடிசில் அமைத்து முதிய அந்தணர்க்குப் படைத்தாள்.  விருந்து உண்ட பின் விருத்த வேதியன் 
இளங்குமரனாகத் தோன்றினான். இவ்வமயம், வேற்றூர் சென்றிருந்த மாமன் மாமியர் வீட்டுக்குள் 
நுழைந்தனர். இளங்குமரன் ஒரு பாலகன் உருவம் கொண்டான். இளங்குழந்தை தன் இல்லத்தில் 
தவழுவதைக் கண்ட மாமி வெகுண்டு  "பிறர் குழந்தையை நீ ஏன் சீராட்டிக் காப்பாற்றுகின்றாய்" 
எனக் கடுமொழி கூறி, பாலகனையும் கௌரியையும் தன் வீட்டை விட்டு வெருட்டினாள்.             
குழந்தையும் கௌரியும் மறைந்தனர்.  அனைவரும் காண விண்ணில் சிவபெருமானும் 
உமையம்மையும் தோன்றினர். இது நிகழ்ந்த இடம் ஓரியூர் என எண்ண வேண்டியிருக்கிறது.

36. ஓவிய மங்கையர் தோள் புணர்ந்தது

    14-ஆவது கதையைப் பார்க்க, 'இருங்கடல் வாணற்குத் தீயிற்றோன்றும் ஓவிய மங்கையர் ' 
என்பதனால், கடல் அரசனாகிய செம்படவனுக்கு மகளாகத் தோன்றிய உமையம்மையே எழுது 
பாவையொத்த எழிலுடையார் என்னுங் கருத்துப்பெற ஓவிய மங்கையர் எனக் குறிப்பிடப் 
பெற்றுள்ளதாகக் கருதுகின்றனர்.

37. கங்காளம் தாங்கியது

    தோன்றியவை எல்லாம் அழிந்து சிவபெருமான் ஒருவரே தனித்து நிற்கும் இறுதிக் 
காலத்தில், படைத்தற் கடவுளும் காத்தற் கடவுளுமாகிய அயன் மால் இருவருடைய தவத்தின்
பயனாக அவர்களுடைய எலும்புக் கூடு, சாம்பல், சிகை, தலை முதலியவற்றை அணிந்து அருள்
செய்வார்.

    "பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய் 
    இருங்கடல் மூடி இறக்கும்; இறந்தான் களேபரமும்,
    கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
    வருங்கடல் மீள நின்று எம் இறை நல்வீணை வாசிக்குமே"

                                (தேவாரம் 5214)

38. கங்கையைத் தாங்கியது

1.     கங்கை, இமவானுடைய மூத்த மகளும், உமை, இளைய மகளும் ஆவர். கங்கை வானுலகத்தில் 
பரந்து, விரைந்து, ஆழ்ந்து பேராழிபோல் சுழன்று கொண்டிருந்தது; இதன் வேகத்தை ஒடுக்கிச் 
சிவபெருமான் தன் சடையில் கரந்தனர்.

2.     ஒரு காலத்தில் விளையாட்டாக, சிவபெருமானுடைய திருக்கண்களை உமையம்மையார்
மூடினார், அப்போது அம்மையின் கைவிரல்களில் தோன்றிய வியர்வை, கடல்போலப் பெருகிப் 
பத்துப் பேராறுகளாக (கங்கைகள்) எல்லா உலகங்களிலும் பரவியது. யாவரும் அஞ்சி முறையிடவே, 
சிவபெருமான் அதன் பெருக்கை அடக்கிச் சடையில் அணிந்தார்.

3.     தன் முன்னோர்கள் நற்கதியடையும் வண்ணம், அவர்களது என்பினைக் கங்கையில் 
தோய்க்க வேண்டி, அவ் வான் ஆற்றினை நிலவுலகுக்குக் கொண்டு வரக் கடுந்தவம் இயற்றிய 
பகீரதனது தவத்துக்கு இரங்கிச் சிவபெருமான் தன் சடையில் கங்கையைத் தாங்கி அதன் வேகத்தை 
அடக்கி நிலவுலகிற்கு அளித்தார். 

    " பாயிருங் கங்கையாளைப் படர் சடை வைப்பர் போலும்" 

                                (தேவாரம் 4696)

    " பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணிகண்டு 
     ஆரருள் புரிந்து அலைகொள் கங்கை சடை ஏற்ற அரன்" 

                                (தேவாரம் 3542) 

    'பாங்குடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப் படர் சடைக் கரந்த நீர்க் கங்கை 
    தாங்குதல் தவிர்த்துத் தராதலத்து இழித்த தத்துவன் உறை இடம்' 

                                (தேவாரம் 4113)

39. கடலில் வலைவாணன்

    14-ஆவது கதையைப் பார்க்க.

40. கண்ணப்பர்

    திருக்காளத்தியைச் சூழ்ந்த பகுதி பொத்தப்பி நாடெனப்படும். அந்நாட்டுள் உடுப்பூர் 
என்றதோர் ஊருண்டு. அவ்வூருள், குற்றமே குணமாகக் கொண்டு வாழும் வேடர் தலைவன் 
நாகன் என்பான், தத்தையென்பாளை மணந்து மனையறம் நடத்திவந்தான். இவ்வாறு மனையறம் 
நடத்தி வருகின்ற காலத்துத் தங்களுக்கு மகப்பேறு இல்லாதது கண்டு வருந்தி முருகவேளை 
வழிபட்டுத் தவம் இயற்றி ஓர் ஆண் மகவைப் பெற்றனர். அம்மகவு உடற்கட்டு வாய்ந்து 
திண்ணென்றிருந்தமையால் திண்ணன் என்று பெயரிட்டனர். புண்ணியப் பொருளாயுள்ள ஒப்பற்ற 
உருவுடையிவரைக் கண்ணிமை காப்பது போல் காத்து வளர்த்து வருவாராயினர்.  வேடர் 
குடிக்கேற்ற முறையில் உரிய பருவத்தே இவர்க்கு விற்பயிற்சி செய்து வில்விழா எடுத்துச் சிறப்புச்
செய்தார்கள். ஆண்டுகள் பன்னிரண்டு நிரம்பின. தந்தை நாகனார்க்கும் மூப்புவந்தெய்தியது.

    இந்நிலையில், வன விலங்குகள் பயிர்களை அழிக்கின்றன. அவற்றைத் தொலைக்க
வேண்டுமென்று நாகன்பால்வேடர்கள் வந்து முறையிட்டனர்; நாகன், "முன்போல் என்னால் 
வேட்டமேற்சேறல் இயலாது மூப்பு வந்தெய்தியது;  ஆதலால் என்மகனை நுங்கட்குத் தலைவனாகக் 
கொள்மின்" என்றான். அவர்களும் அங்ஙனமே திண்ணணைத் தலைவனாக ஏற்றனர். பின்னர் 
தேவராட்டியை அழைத்துக் கன்னி வேட்டைக்குச் செல்லும் திண்ணனார்க்கு ஆசிகூறச் செய்தனர். 
அவளும் "நல்ல குறிகள் தோன்றுகின்றன. நின்னளவிலும் மேம்பட்டு வாழ்வான்” என்று வாழ்த்திச் சென்றாள்.

    தெய்வம் வாழ்த்திச் சென்றபின், தாதை மகனை அருகழைத்துத் தன்னிலை கூறி "  நீ வேட்டமேற் 
சென்று வெற்றி பெற்றுவருக" என வாழ்த்தினான். சுரிகை உடைதோல் இவற்றைக் கொடுத்தான். 
தந்தை நிலைகண்டு திண்ணனார் சுரிகை, உடைத்தோல் இவைகளைத் தான் ஏற்றுக்கொண்டார். 
வேட்டைக்குரிய வேடம் தாங்கினார். அரியேறன்ன திண்ணனார், தந்தை தாள் பணிந்து 
வெளிப்போந்து வேடரோடு சேர்ந்து புறப்பட்டார். வேட்டை நாய்கள் சூழ்ந்தன. கொற்றவை 
வில்லின் மேனின்றாள்.  வெற்றிக்குக் குறையே இல்லை. வேடர்கள் சூழக் காடு சென்று 
புதர்ப் பகுதிகளை வலையால் வளைத்துக்கட்டி, புதர்களில் மறைந்த விலங்குகளை 
நாய்களைக் கொண்டு உசுப்பினர். வெளி ஏறியவற்றைக் கொன்றனர். கொன்றாராயினும், அவர்கள் 
அறவேட்டையே  ஆடினர். எவ்வாறெனின், யானைக்கன்றுகள், வேறு சில இளங்கன்றுகள், குட்டிகள், 
அடிதளர்ந்து  செல்லும் கருவுற்ற பெண் விலங்குகள் இவற்றைக் கொலைபுரியார்; ஆதலால், 
இவர்கள்  வேட்டையில் அறம் எவ்வளவுதூரம் நிலைபெற்றது என்பதனை அறியலாம்.

    இவ்வாறு வேட்டையாடி வருகையில் மிகப் பெரிய பன்றி ஒன்றினைக் கண்ணுற்று, அதை 
வேட்டையாடுவதற்கு அதனை நோக்கி ஓடினார்கள் வேடுவர்கள். பன்றியும் ஓட ஆரம்பித்தது. 
திண்ணன், நாணன், காடன் ஆகிய மூவரும் வெகு வேகமாகப் பன்றியைப் பின்தொடர்ந்து
ஓடினார்கள். மற்ற வேடர்கள் பின்தங்கிய பின்னரும், இம்மூவரும் நெடுந்தூரம் ஓடி, இறுதியாக
திண்ணனார் அம்பினால் அந்தப் பன்றிக் கீழே விழுந்து சாய்ந்தது.

    இவ்வாறு நீண்ட வழிச் சென்றதன் பின், "வேட்டமேல் நீண்ட தொலை வந்துவிட்டோம்
அதனால் இளைத்தோம், பசிவந்துற்றது. நீ தொலைத்த பன்றித் தசையைக் காய்ச்சித்தின்று 
வேட்டமேற் சொல்வோம்" என்றான் நாணன். திண்ணனார் 'முதலில் நமது நீர்வேட்கையைத் 
தணிப்போம். நீர் எங்குள்ளது?' என்றான். 'இம்மலைக்கப்பால் பொன்முகலி என்று ஓர் நதி உண்டு 
அங்கு போகலாம்' என நாணன்கூற மூவரும் நதிக்கரை சென்று தங்கள் தாகத்தைத் தணித்தனர்.
அப்பொழுது மணி ஓசை ஒன்று கேட்டது. திண்ணனார் மணியோசையின் விபரம் பற்றிக் கேட்க 
நாணன் 'மலை உச்சியில் குடுமித் தேவர் ஆலயம் உள்ளது. உன் தந்தையுடன் நான் அங்கு 
சென்றதுண்டு' எனக் கூறினான். 

    அப்படியானால் நாமும் அங்கு சென்று கும்பிட்டு வருவோம் என்று திண்ணன் சொல்ல 
நாணனும் சம்மதித்தான். பின்னர், காடனைப் பார்த்துத் திண்ணன் " நாங்கள் இருவரும் குடுமித்தேவரைக் 
கும்பிட்டுத் திரும்பும்முன் நீ தீக்கடைக்கோலால் தீ உண்டுபண்ணி வேட்டையாடிக் கொணர்ந்த
பன்றியின் தசையைப் பக்குவமாகச் சுட்டு வை' எனக் கூறிவிட்டு நாணனுடன் மலைமேல் ஏறிச் 
சென்றான். மலைமீது ஏறும்பொழுதே திண்ணனார்க்கு பல நல்ல சகுனங்கள் தோன்றின. 
உடம்பில் இருந்தும் உள்ளத்தில் இருந்தும் பாரங்கள் குறைந்து வருவதை உணர்ந்தான். 

    முன் செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான அன்பினை எடுத்துக்காட்ட, நாணனும் 
அன்பும் முந்தத் தான் பின் சென்றார். சென்றவர், மலைமேல் குடுமித்தேவரைக் 
(காளத்தியப்பர் என்ற சிவலிங்கம்) கண்டார்; தழுவினார்; பெருமூச்செறிந்தார்; மயிர்க் கூச்செறிந்தன. 
கைச்சிலை விழுவதோராது, "இங்கு இவ்விடத்தைப் பூவோடு பச்சிலை பறித்திட்டு நீர் வார்த்தார் யாவரோ?"
என்றார். அருகிருந்த நாணன் "ஒரு சிவாச்சாரியார் இவ்வாறு செய்து வருகின்றார்" என்றான். 
குடுமித் தேவர் தனியாக இருப்பதாக எண்ணினார். "ஊன் இடுவாரில்லை, யானே சென்று கொணர்வேன்” 
என்று சென்றார். 

    சென்றவர், முன் குறித்த இடத்துச் சென்றார். காடன் என்பார் "நுங்கள் குறிப்பின்படி இறைச்சியைப் 
பக்குவப்படுத்தினேன். தேவர் தாழ்த்ததென்” என்றான் உடனே நாணன் "திண்ணனார் மலையில் தேவரை 
அணைத்துக்கொண்டு தேவர்க்கு ஆட்பட்டார், அவர் தின்ன இறைச்சி கொணர வந்துள்ளார்"  என்றான். 
கேட்ட காடன் "என் செய்தாய் திண்ணா? நீ தான் மால் கொண்டாய்; ஏன்? ” என்றான்.  அவன் கூறியதனைச் 
செவியேற்காமல், கோலில் இறைச்சி கோத்துக் காய்ச்சியதை வாயிலிட்டு அதுக்கிப் பார்த்துப் 
பக்குவப்பட்டவற்றை இலையில் வைத்தெடுத்துக் கொண்டார். மருங்கு நின்ற வேடர் இவர் கடவுள்
மயக்குற்றார். திருத்த இயலாதென்று கைவிட்டுப் போயினார்.

    கானவர் போனபின், பக்குவப்படுத்தப்பட்ட ஊனைக் கையில் ஏந்தி, திருமஞ்சனமாட்ட 
ஆற்று நீரை வாயில் முகந்து, பூக்களைப் பறித்துத் தலைமேலிட்டுக் கொண்டு குடுமித் தேவர்க்கு
மிகப் பசியுண்டாயிருக்கும் என்று விரைந்தார். விரைந்து வந்தவர் இறைவன் முடி மீதுள்ள மலரைச்
செருப்புக் காலால் தள்ளி வாயினீரால் மஞ்சனமாட்டி மலரை முடிமேலிட்டார். தான் கொண்டு வந்த
 இறைச்சி உணவு செய்யப்பெற்ற முறையெல்லாம் சொல்லி இறைவன் முன் படைத்து “அமுது 
செய்தருள்க" என்றார். இந்நிலையில் பொழுது சாய்ந்தது.  மலைமேல் குடுமித்தேவர்க்கு என்ன
தீங்கு நேரிடுமோ என்று வில்லை யூன்றிய கையோடும் வெய்துயிர்ப்போடும் இரவு முழுதும் காத்து
நின்றார். நின்றவர், மறுநாள், உணவுக்காக வேண்டிய இறைச்சி கொணரச் சென்றார்.

    இப்பால், நாள்தோறும் வழிபாடு செய்யும் சிவகோசரியார் என்னும் சிவாச்சாரியார் 
அங்கு வந்தார். இறைச்சி முதலியன சிதறிக் கிடப்பதனைக் கண்டார். யார் இது செய்தார் என்று 
வருந்தினார். பின் திருவலகால் அவற்றை மாற்றினார்.  நீராடித் தூய பொருள் கொண்டு 
பூசனை முடித்து வீடு திரும்பினார்.

    அவர் சென்ற பின், திண்ணனார் நல்லிறைச்சிகளை முன்போல் பக்குவப்படுத்தி இலையில் 
கொணர்ந்தார். கொணர்ந்தவர், மாற்றான் செய்து சென்ற பூசனையை முன்பு போல் அகற்றினார். 
வழிபாடு செய்தார். "இவ்வூன் முன்னைய வூனின் நன்று, அமுது செய்தருள்க" எனப் படைத்தார்.
இவ்வாறே பூசனை முடித்து வந்தார். இப்பால் திண்ணனாரைக் காட்டுள் விட்டுப் போன வேடர்கள் 
நாகனிடம் செய்தி அறிவித்தனர். பிறகு வேடர்கள் திண்ணனாரிடம் வந்து நாகன் செய்தி 
அறிவித்து அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். பக்குவப்பட்ட ஆன்மாவாதலால், வாரார் எனக்
கைவிட்டுச் சென்றார்கள். இறைவன் அருள் நோக்கால் இரும்பு பொன்னானாற் போல இருவினையும் 
மும்மலமும் அற்று அன்புப் பிழம்பானார்.

    அந்நிலையில் சிவகோசரியார் பூசனை செய்து முடித்த பின்பு 'இறைவா! இது செய்தார் 
யாரோ? அறியேன். நீயே அதனைப் போக்கி அருள வேண்டும்' என்று வேண்டினார். அன்றிரவு 
அவர் கனவில் இறைவன் தோன்றி, "இதனைச் செய்பவன் வேடுவனென்று நினையேல். அவன் 
வடிவெல்லாம் நம் பக்கல் அன்பு; அவன் அறிவு நம்மை அறியும் அறிவு;  செயலெல்லாம் நமக்கு 
இனியவாம் என்பவற்றை நீ அறிவாய்; ஆதலால் நினக்கு அவன் செயல் காட்டுகின்றேன், நீ 
ஒளித்திருந்தறி, மனக்கவலை யொழி" என்றான். சிவகோசரியார், கனவு நீங்கி மறுநாள் வந்து 
வழக்கம்போல வழிபாடு இயற்றி ஒருபால் மறைந்து நின்றார்.

    இவ்வாறு வழிபாடியற்றிவரும் ஆறாம் நாள்;  திண்ணனார் வேட்டையாடி வழக்கம்போல்
பக்குவப்படுத்திய உணவோடு விரைந்து செல்வாராயினார். வழியில் தீயசகுனங்கள் நிகழ்ந்தன.
கண்டவர், இறைவனுக்கு என்ன நேர்ந்ததோ? என்று புழுங்கிய மனத்தோடு அடைந்தார். அடைந்தவர்
முன் காளத்தி அண்ணலார் திண்ணனார்க்குப் பரிவுகாட்ட ஒரு கண்ணில் குருதி பெருக இருந்தனர்.         
வந்தவர், குருதிகண்டார், நடுங்கினார், கைப்பொருள்கள் சிதறின, பூமியில் விழுந்தார். 
எழுந்து,  இது செய்தார் யார்? என்று வில்லுங் கையுமாகத் திரிந்தார். பகைவர் எவரையும் காணவில்லை. 
அண்ணலாரை நெருங்கி "ஐயகோ இந்நோய் எதனால் தீருமோ" என ஏங்கினார். 

    பச்சிலை கொணர்ந்து பிழிந்து கண்ணில் விட்டார்; புண்ணீர் குறையவில்லை. ஊனுக்கு ஊனிடல் 
என்ற உரையை உணர்ந்தார், மகிழ்ச்சி பொங்கியது, தன் கையம்பால் தன் கண்ணைப் பெயர்த்தெடுப்பேன் 
என்று தம் இடக்கண்ணை அம்பால் பெயர்த்து வலக் கண்ணில் அப்பினார். குருதிநின்றது கண்டார், மகிழ்ந்தார்,
குதித்தார்; இறைவன் செயல் அவ்வளவோடு இல்லை. அன்பின் அளவைக்காட்ட இடக்கண்ணில் குருதிபெருகச் 
செய்தார்.  அது கண்ட திண்ணனார், "இதற்கஞ்சேன். மருந்து கைகண்டேன் குருதி ஒழிப்பேன்" என்று தம் 
இடக்காலை இறைவன் கண்ணிலூன்றித் தம் வலக் கண்ணில் அம்பை யூன்றினார். அவ்வளவில், அது பொறாத 
காளத்தி நாதர் பெயர்க்கும் திண்ணனார் கையைப் பிடித்து, "நில்லு கண்ணப்ப; நில்லு கண்ணப்ப;
என் அன்புடைத் தோன்றல்; நில்லு கண்ணப்ப" என்று மும்முறை வானில் குரல் எழுந்தது.

    இச்செயலை மறைந்திருந்த முனிவர் கண்டார். இறைவன் தன் கையால் பிடித்து 
"என் வலப் பக்கத்திருப்பாய்” என்று அருள் புரிந்தான். இதிலிருந்து திண்ணனார்க்குக் கண்ணப்பர் 
என்று பெயராயிற்று.  மணிவாசகர் கண்ணப்பர் அன்பைச் சிறப்பித்துக் "கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்" எனப் போற்றுகின்றார். 

41. கதிரோன் பல் தகர்த்தது

    60-ஆவது கதையைப் பார்க்க.

42. கருங்குருவிக்கு அருளியது

    பறவைகளில் வலிமையற்றதாக, கருங்குருவி, காக்கைக்கு அஞ்சி மரம் செறிந்த ஒரு 
காட்டில் வாழ்ந்து வந்தது. காக்கைகளால் பலகாலும் தாக்கப்பெற்றுக் குருதி வடிகின்ற தலையுடன் 
செய்வதறியாது திகைத்து இடருற்று நின்ற நிலையில் வழிப்போக்கர் ஒருவரால், மதுரையிற் கோயில்
கொண்டெழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுளது அருளால் எவ்வகைப் பகையையும் வெல்லலாம் 
என்பது தெரிந்து சொக்கனை இடைவிடாது வணங்கி அவன் அருளால் 'மிருத்திஞ்சய ' 
மந்திரத்தை உபதேசிக்கப் பெற்று, அந்த மூவெழுத்து மறைமொழியின் வன்மையால் எல்லாப்
பகையையும் வென்று வலியன் என்னும் பெயர் பெற்றது. இந்த அரிய மந்திரத்தைத் , தன்
சாதிக்கெல்லாம் உபதேசித்துத் தன் இனத்தை வலிமையுடையதாகவும் சிவபெருமான் 
திருவடிக்குத் தொண்டு பூண்பதாகவும் செய்தது.

43. கழுமலம் அதனில் காட்சி கொடுத்தது

    கழுமலம் என்ற பெயர் சீகாழிக்கு உண்டு; வேறு இப்பெயர் கொண்ட பழம்பதிகளும் இருக்கக்கூடும். 
கழுமங்கலம் என இப்போது சில ஊர்கள் வழங்கப்பெருகின்றன. ஒருக்கால்  கழுமலம் என்பதே மருவி 
வழங்கப்பெறுகிறதா என்பதும் கருதத்தக்கது. கழுமலம் என்பதை, சீகாழி எனக் கொள்ளின் 
சைவ சமய முதல்வர் மூவருள் முதலாமவராகிய திருஞானசம்பந்தப் பெருமானுக்கு, காழிப்பதியில் 
சிவபெருமான் அம்மையப்பராகக் காட்சியருளி ஞானப்பால் ஊட்டிய  நிகழ்ச்சியே முற்பட நினைவுக்கு வருகின்றது.

    சோழநாட்டின் பழைய ஊர்களில் ஒன்றாகிய சீகாழியில், வேத நெறி தழைத்து ஓங்குதற்குக் 
காரணமாகிய ஆகமத்துறை வழியே வாழ்ந்துவந்த அந்தணமரபில் கவுணியர் குடியில் சிவபாத இருதயருக்கும்,
பகவதி அம்மையாருக்கும் திருக்குமரனாகத் திருஞான சம்பந்தப் பிள்ளையார் தோன்றினார்.  இவர் மூன்றுவயதுள்ள 
குழந்தையாக இருக்கும்போது, ஒருநாள், தன் தந்தையாரோடு திருக்குளத்துக்குச் செல்லவேண்டும் 
என்று பிடிவாதம் செய்ய, தந்தையார் உடன் அழைத்துச் சென்று, குழந்தையைத் திருக்குளத்தின் கரையில் 
உட்காரவைத்துவிட்டு, குளத்தில் இறங்கிச் சைவ மறைமொழிகளை ஓதிக்கொண்டு (அகமர்ஷண மந்திரம்) 
தண்ணீருள் முழுகி நீராடுவாராயினார்; 

    தமது தந்தையைக் காணாத குழந்தை பல திசைகளிலும் பார்த்து அழுது கடைசியாகத் திருத்தோணியப்பர் 
கோயில் விமானத்தைப் பார்த்து “அம்மே அப்பா" என அழத் தொடங்கியது . உடனே தோணியப்பர் உமையுடன் 
இடப வாகனத்தில் ஏறி, அழுகின்ற  குழந்தைமுன் தோன்றினார். உமையம்மை ஒரு பொற் கிண்ணத்திற் 
சிவஞானப்பாலை அழுகின்ற குழந்தைக்கு ஊட்டியருளினார். ஞானப்பாலை உண்ட தெய்வக்குழந்தை 
'சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம், 
உவமையிலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம்' எனும் ஞானம் அனைத்தையும் பெற்றுத்
திருஞானசம்பந்தனாகத் திகழ்ந்தது.  நீராடிவந்த தந்தை, பால்வடியும் உதடுகளுடன் குளக்கரையில் 
உட்கார்ந்திருக்கும் குழந்தையைப் பார்த்து "யார் கொடுத்த பாலை நீ அருந்தினை? பிறர் கொடுத்ததை 
அருந்தலாமா? பால் கொடுத்தவர் யாவர்?" என வெகுண்டு வினவினார். உடனே ஞானசம்பந்தப் பிள்ளையார் 
கோயிலின் விமானத்தைச் சுட்டிக் காட்டி அங்கு காட்சியளித்த  சிவபெருமான் தோற்றத்தைத் தந்தையார் 
உணரும் வண்ணம், "எனக்குப் பால்கொடுத்தவன்

    "தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி 
    காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர்கள்வன்
    ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
    பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே ! " 

எனக் கூறினார். தந்தையார் பேரானந்தம் உற்றார். இந்த நிகழ்ச்சியை ஞானசம்பந்தப் பெருமானாரே,

    "போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத் 
    தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
    காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் 
    பேதையாளவளொடும் பெருந்தகை யிருந்ததே"

                        (தேவாரம் 3053)

எனத் திருவாய் மலர்ந்துள்ளார்.

44. கன்றால் விள வெறிந்தது

    மிகப் பழங்காலத்தில், வட மதுரையில் கம்சன் என்ற ஒரு கொடுங்கோலன் அரசு செலுத்தி 
வந்தான். அவனுக்குத் தேவகி என்ற ஒரு தங்கை உண்டு. அவளை வசுதேவர் என்ற பெரியார் 
மணந்து கொண்டு இல்லறம் நடத்தி வந்தார். இல்லறக் கிழமை பூண்ட தேவகி அம்மையார்க்குக் 
குழந்தைகள் பிறந்தன. "நின் தங்கைக்குப் பிறக்கின்ற குழந்தையால் நினக்கு முடிவேற்படும்" 
என்று கணிதமாக்கள் கம்சனுக்குக் கூறியிருந்தனர். ஆதலால் அவன் தன் தங்கைக்குப் பிறக்கும் 
ஒவ்வொரு குழந்தையையும் கொண்டுவரச் செய்து வெட்டி விடுவது வழக்கமாக இருந்தது.
இக்கொடுஞ் செயலைப் பொறுக்காத தாய் தந்தையர் துன்பக் கடலுள் மூழ்கி இருந்தார்கள் 
என்பது சொல்ல வேண்டுவதின்று.

    இந்நிலையில் ஏழாவது கருவுற்றாள் தேவகி. அது கண்ட கம்சன் இருவரையும்
சிறையிலிட்டான்.  திருவருள் வேறாயிற்று.  இவளுற்ற கருவை ஆய்ப்பாடி அசோதை வயிற்றிலிட்டான் 
இறைவன். மறுபடியும் எட்டாவதாகக் கருவுற்றாள் தேவகி. அங்கு ஆய்ப்பாடியில் அசோதைக்குப் பலராமனும் 
ஒரு மாயைப் பெண்ணும் பிறந்தனர்; இங்கு, அந்நேரத்தில் தேவகி வயிற்றில் கண்ணன் பிறந்தான்.
பிறந்த குழந்தையை வசுதேவர் தளைகளைந்து இரவில் ஆய்ப்பாடிக்கு எடுத்துச்சென்றார். 
சென்றவர் தங் குழந்தையாகிய கண்ணனை அங்கு விட்டுவிட்டு மாயைப் பெண் குழந்தையை 
அங்கு நின்றும் எடுத்து வந்து தேவகியிடம் விட்டார். இவ்வளவும் இரவில் நிகழ்ந்தது. பொழுது புலர்ந்தது. 
அறிந்தான் செய்தி கம்சன்; குழந்தையை எடுத்து வரச் செய்தான்; வழக்கம் போல் வானில் விட்டெறிந்து 
வெட்டச் செய்தான். விட்டெறியப்பட்ட குழந்தை “நின்னைக் கொல்பவன் ஆய்ப்பாடியில் சென்று 
வளர்கின்றான்; என்னைக் கொல்ல நீ யார்?" என்று கூறி மாயமாய் மறைந்தது.

    இந்நிலையில் ஆய்ப்பாடியில் நந்தகோபன் மனையில் அசோதையின் இளஞ் சிங்கமாக
வளர்ந்து வந்தான் கண்ணன்.  அவன் இளமையிற் செய்த அருஞ்செயல்கள் மிகப்பல. இங்ஙனம் இவனது 
அருஞ்செயல்களைக் கேள்வியுற்ற கம்சன் "நம்மைக் கொல்ல ஆய்ப்பாடியில் வளர்கின்றவன் இவனேயாம்" 
இவனை எங்ஙனமாவது கொன்றுவிட வேண்டுமென்ற முடிவிற்கு வந்தான். அதற்கான சூழ்ச்சிகள் 
பல செய்தான். அவற்றுள் ஒன்று கன்றால் விள வெறிந்தது. அஃதாவது: கம்சன் ஓர் அசுரனை அழைத்து, 
"நீ போய் கண்ணன் கன்று காலிகளோடு வரும் வழியில் விளாமரமாக முளைத்திரு. அவன் அப்பக்கம் 
வரும்போது அவன் மீது சாய்ந்து அவனைக் கொன்றுவிடு" என்றான். வேறொரு அசுரனை விளித்து 
“நீ போய்க் கண்ணன் மேய்க்கும் கன்று காலிகளோடு ஒன்றாக இருந்து சமயம் பார்த்து முட்டியோ 
உதைத்தோ கொன்றுவிடு" என்று கட்டளையிட்டான்.

    கம்சன் ஆணையேற்ற இருவரும் ஆணை வண்ணம் உருவு கொண்டனர். புதிய மரம் 
வழியில் முளைத்திருப்பதும் புதிய கன்றொன்று காலிகளோடு சேர்ந்திருப்பதும் புதுமையாக 
இருந்தது கண்ணனுக்கு. உற்றுணர்ந்த கண்ணன் இதுவும் அம்மான் கம்சன் சூழ்ச்சியேயென்று 
சிந்தையுட் கொண்டான். முன் பன்முறை அவன் சூழ்ச்சி கண்டு தெளிந்துள்ளவன் ஆதலால் 
வியப்புத் தோன்றவில்லை. காலத்தை எதிர் நோக்கினான் கண்ணன். வழக்கம் போல் கன்று 
காலிகளோடு அவ்வழியே வந்தான். புதுக்கன்று புதுமரத்தை அண்மியது; காலம் நேர்ந்ததென்று 
கருத்துட் கொண்டவன், கன்றைத் தூக்கி விளவின் மேல் எறிந்தான். எறிந்த அளவில் மரம்
முறிந்து காய்கனி சிதற வீழ்ந்தது. கன்றும் உயிர் துறந்தது. ஒரு கல்லால் இரு மாங்காய் என்றாங்கு 
ஒரு செயலால் இரு காரியம் நிகழ்ந்தன. இறந்த உயிர் ஒளி வடிவுடையனவாய்க் கண்ணனை 
வாழ்த்தி விண்ணிற் சென்றன. கம்சன் வஞ்சம் ஈடேறவில்லை. இதனையே "கன்று குணிலாக் 
கனியுகுத்த மாயவன்" என்றும், “கஞ்சனார் வஞ்சங் கடந்தான்" என்றும் இளங்கோவடிகள் 
தம் வாயாரப் புகழ்ந்துள்ளார்.

45. காட்டகத்து வேடன்

    முன்பு ஒரு காலத்தில் பாண்டிய மன்னர்களுள் ஒருவன் 'உற்ற காலத்தில் தெய்வம் அலாது 
இலை உதவி' எனக் கற்றவர் சொல்லும் நெறியினைக் கடைப்பிடித்து, ஆலவாய் அண்ணல் அடிகளுக்கே 
பற்றுடையவனாக நின்று, படைப் பெருக்கத்தை நிந்தித்துத் தன் நாட்டிற்கு வேண்டிய அளவு சேனையை 
மட்டும் வைத்துக் கொண்டு, தன் கீழ் வாழும் குடிகளுக்குத் தெய்வப்பற்றும் அறநெறி ஒழுக்கமும் ஓங்கும் 
வழியில் அரசு செலுத்தி வந்தான். அதே காலத்தில், சோழ மன்னர்களுள் ஒருவன், படையைப் பெருக்கிப்
பிறநாடுகளையும் தன் ஆட்சியில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். பாண்டியனின் 
படைமெலிவு, சோழனைப் பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கத் தூண்டிற்று; படை வலுவால் சோழன் 
தன்னிலும் மிக்கான் என்று உணர்ந்த பாண்டியன், தெய்வத் திருவருள் துணை கொண்டு சோழன் படையை 
எதிர்த்தான்; அளவில் சிறியதாகிய பாண்டியன் சேனை, சோழனது பெரும்படையினும் ஆற்றலுடையதாகிச் 
சோழன் சேனையைக் களத்தை விட்டுப் புறங்கொடுத்து ஓடச் செய்தது. 

    இது கண்டு மனம் பொறாத சோழன், தானே குதிரைமேல் ஏறிச் சேனையைச் செலுத்தத் 
தொடங்கினான். அப்போது, சோழன் முன்னர், காட்டில் திரிகின்ற வேடன் ஒருவன் குதிரையின் மீது ஏறி வந்து        
“நான் ஓர் வேட்டுவப் பரியாள்; என்னொடு போர் செய்யவல்லையோ?" எனக் கூறித் தன் கையிலிருந்த 
வேலைச் சோழன் மீது எறிந்தான்; சோழன் மிகவும் வெகுண்டு "இவ்வேடனைக் குதிரையுடன் பிடித்துக் 
கொணர்வேன்” என வஞ்சினமுரைத்துத் தன் பரியை அவன் பக்கம் செலுத்தவே, வேடன் புறங் கொடுத்து 
ஓடுபவன் போல் விரைந்து தன் குதிரையைச் செலுத்தினான். சோழனும் அவனை விரைந்து தொடர்ந்தான். 
புறங்கொடுத்தோடும் வேடன் குதிரையோடு வழியிலிருந்த ஓர் ஆழமான நீர் நிலையில் இறங்கி மறைந்தான்; 
பின் தொடர்ந்த சோழனும் நீர் நிலையில் குதிரையோடு இறங்கி நீரில் மூழ்கி இறந்தான். சோழர் படையும் 
கலங்கி நாட்டை விட்டு ஓடியது. இவ்வாறு காட்டகத்து வேடனாகத் தோன்றிப் பாண்டியனைக் காப்பாற்றியவன் 
சோமசுந்தரக் கடவுளே என்பது தெரிந்து மக்கள் எல்லாம் போற்றினார்கள்.

46. காமன் உடலைத் தூய்மை செய்தது

    ஒரு காலத்தில் சிவபெருமான் யோக நிலையிலிருந்தார். அப்போது உலகங்களும் 
உயிர்களும் எவ்வித அசைவும் அற்று அமைதியாக நின்றன. உலக இயக்கம் ஒடுங்கியதைக் கண்ட 
பிரமன், சிவபெருமான் யோக நிலையை விட்டுச் சக்தியோடு கூடினல்லால் உலகம் இயங்காதென்பதை 
உணர்ந்து, சிவபெருமானுடைய யோகநிலையைக் கலைக்கும் வண்ணம் காமனை வேண்டினான். 
எம்பெருமானை அணுகுவதற்குக் காமன் அஞ்சி மறுத்தான் எனினும் தேவர்கள் எல்லாம் ஒருசேர 
வேண்டியமையால், துணிந்து, ஐங்கணையோடும், வில்லோடும், இரதி தேவியோடும், அலையற்ற 
கடல்போல் யோகத்தில் ஆழ்ந்திருந்த அருட்கடலாம் சிவபெருமான் முன்சென்று, பலவாறு கலங்கி,
முடிவாகத் தான் இறுதி எய்தினும் உலகுக்கு ஒரு நன்மையைச் செய்வதே உயர்ந்தது எனும் 
கொள்கையைப் பின்பற்றி, இறைவன் யோக நிலையைக் கலைக்கும் நோக்கத்தில் மலர்க் கணைகளைத் 
தூவினான். சிவபெருமான் சிறிது தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். உடனே காமன் எரிந்து 
சாம்பராயினான். சிவபெருமான் மறுபடியும் யோகத்திலே அமர்ந்துவிட்டார். 
கணவன் எரிந்து பொடியானதைக் கண்ட இரதி ,

    "செம்பதுமைத் திருக்குமரா !  தமியேனுக்கு ஆருயிரே !  திருமால் மைந்தா !
    சம்பரனுக் கொருபகைவா !  கன்னல் வரிச் சிலைபிடித்த தடக்கை வீரா !
    அம்பவளக் குன்றனைய சிவன் விழியால் வெந்துடலம் அழிவுற்றாயே! 
    உம்பர்கள் தம் விழி எல்லாம் உறங்கிற்றோ ? அயனாரும் உவப்புற்றாரோ ?
    நேயமொடு மறைபயிலுந் திசைமுகனைப் புரந்தரனை நின்னைத்தந்த
    மாயவனை முனிவர்களை யாவரையும் நின் கணையால் மருட்டி வென்றாய்? 
    ஆயதுபோல் மதிமுடித்த பரமனையும் நினைந்திவ்வா றழிவுற்றாயே !
    தீயழலின் விளக்கத்திற் படுகின்ற பதங்கத்தின் செயலிதன்றோ ?" 

எனப் பலவாறு புலம்பி, கண்ணுதலின் அருளால் அவனை உயிர்ப்பித்தாள்; காமனும் உடலம் 
இல்லாதவனாக நிலையுற்றான்.

47. காலன் உயிரைத் தூய்மை செய்தது

    மிகமிகப் பழங்காலத்தில், மிருகண்டு முனிவரும் அவருடைய மனைவி மருத்துவதியும் 
சிவபெருமானை நோக்கித் தவங்கிடந்து எல்லா நற்குணங்களும் வாய்க்கப் பெற்றதும், பேரழகு
வாய்ந்ததும் சிவனடி மறவாத சிந்தையுடையதுமான ஒரு ஆண்மகவைப் பெற்றனர். அம்மகவு 
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது; நாட்கள் ஆக, ஆக, பெற்றோர்
கவலையுற்றனர். அவர்கள் கவலைக்குக் காரணம் யாது என வினவிய சிறுவன் மார்க்கண்டேயன் 
தன் வாழ்நாள் பதினாறு ஆண்டுகளே எனத் தெரிந்து கொண்டான். சிவபெருமான் திருவருளால் 
இயலாததொன்றில்லை என்பது நன்கு தெரிந்த மார்க்கண்டேயன், தன் பெற்றோரைக் 
கவலையுறாவண்ணம் தேற்றித் தவத்தால் காலனையும் வெல்வேன் என்று சிவபெருமானை 
இடைவிடாது போற்றித் தவம் செய்து காலன் கைக்கு அகப்படாத வரத்தைப் பெற்றான்.

     பதினாறு ஆண்டு நிரம்பியதும், மார்க்கண்டேயன் உயிரைக் கொள்ள, எமனுடைய பணியாளர்கள் 
அணுகினார்கள்; ஆனால் அவனுடைய தவத்தின் ஆற்றலால் எவரும் நெருங்க முடியவில்லை . பின்னர் எமன், 
எருமைக் கடாவில் ஏறி, செம்மயிரும் காருடலும் எரிவிழியும் உடையவனாய், பாசமும் தண்டமும் சூலமும் ஏந்தி, 
தன் வீரர்கள் சூழ மார்க்கண்டனை அணுகி அழைத்தான். அச்சிறுவன் காலனைப் பொருட்படுத்தாது 
சிவபெருமான் திருவடிகளைப் பற்றிக்கொண்டான். காலன் வெகுண்டு தன் பாசத்தை வீசினான். 
தன்பால் புக்கவனைப் பாசத்தால் ஈர்க்க முயன்ற காலனை சிவபெருமான் தன் இடதுகாலால் உதைத்துத் 
தள்ளினார். எமன் கீழே மலைபோல் விழுந்து உயிர் துறந்தான். எருமைக் கடாவும், உடன்வந்த பரிவாரங்களும் 
உடனே மாண்டன. மார்க்கண்டேயர் இறவா வரம் பெற்றார்.

48. காலனைக் காலால் உதைத்தது

    47-ஆவது கதையைப் பார்க்க.

49. கிராதவேடம் கொண்டது

    32-ஆவது கதையைப் பார்க்க

50. குதிரை கொண்டு அருளியது

    பாண்டிய நாட்டில், அதன் தலைநகருக்கு அண்மையிலுள்ள திருவாதவூரில் ஓர் பெரியார் 
தோன்றினார்; இவர் இளமையிலேயே கல்வி, அறிவு, ஒழுக்கம் முதலிய நிரம்பப் பெற்றும் திறம்பெற 
எதையும் கொண்டு செலுத்தவல்லராயும் இருந்தபடியால், பாண்டிய மன்னன், இவரைத் தன் 
அமைச்சராக அமர்த்தி எல்லா ஏற்றங்களும் அளித்திருந்தான். அரண்மனையிலும், சேனையிலும்
குதிரைகள் குறைவாக இருந்தமையில், தகுதி வாய்ந்த குதிரைகள் வாங்கி வருமாறு 
பெரும்பொருளுடன் இவ் அமைச்சரை அருகிலுள்ள துறைமுகப் பட்டினத்துக்கு, அரசன் அனுப்பினான்.
செல்லும் வழியில், ஒரு பூம்பொழிலில், ஒரு ஞானகுரவன் பல அடியவர்களுக்குச் சிவஞானத்தை 
வழங்கி வருவதைக் கண்டு, தான் மேற்கொண்ட பணியை மறந்து, அந்த ஞானகுரவன் திருவடிக்குத் 
தொண்டாகித் தான் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருளனைத்தையும் தன் ஞானகுரவன்
 ஆணைப்படி சைவத் திருப்பணிகளில் செலவிடத் தொடங்கினார். உடன் வந்தோர், எவ்வளவோ தடுத்தும் 
அவர் மாறவில்லை ; அவர்களும் பாண்டியனிடம் சென்று நிகழ்ந்ததை அறிவித்தார்கள்.

     பாண்டியன் சீற்றங்கொண்டு, அவரை உடனே மதுரைக்கு வரும்படி ஓலை போக்கினான்;
அவரும், மன்னவன் கட்டளையைத் தன் ஞானகுரவனிடம் விண்ணப்பித்தார்.  ஞானகுரவனாக 
எழுந்தருளியிருந்த சிவபெருமான் " அஞ்சாதே, மதுரைக்குச் செல், 'குதிரைகள் ஆவணி மூலத்தன்று 
மதுரைக்கு வருவனவாகும்' என மன்னவனுக்குக் கூறு" எனத் திருவாய் மலர்ந்தருளினார். அவ்வாறே 
அவரும் சென்று தெரிவிக்க பாண்டியனும் ஒருவாறு அமைதி கொண்டு இருந்தான். ஆனால், ஆவணி 
மூலத்துக்குச் சில நாள் முன்வரையிலும் குதிரைகள் வரக்கூடிய குறிகள் ஒன்றும் காணாதது கொண்டு 
ஐயுற்ற மன்னன் அவரைச் சிறையிலிட்டான்; காவலாளர்கள் துன்புறுத்துவது பொறாத அமைச்சர் 
உளம் கலங்கி

    " மின்னும் புகழா அருளாளா மெய்யே மனிதர்போல் வந்து இங்கு
    என் நெஞ்சு உருக்கி உரைத்த உரை தப்பாது என வந்துயான் உரைத்தேன் 
    மன்னன் காண்பான் விழிகுழிய வழியை நோக்கியிரா நின்றான் 
    துன்னும் புரவி கொடு விரைவில் தோன்றாய் தோன்றாய் தோன்றாயே" 

     'ஊரார் உனைச்சிரிப்பது ஓராய் என்று உன் அடிமைக்கு 
    ஆராய் அடியேன் அயர்வேன் அஃதறிந்தும் 
    வாராய் அரசன் தமர் இழைக்கும் வன்கண்நோய் 
    பாராய் உன் தன்மை இதுவோ பரமேட்டி'

எனப் பலவாறு முறையிட்டார். 

    இம்முறையீட்டொலி கேட்ட சிவபெருமான், கணநாதர்களை அழைத்து 'குறிப்பிட்ட நாள் 
தவறாமல் பாண்டியனுக்குக் குதிரைகளைச் சேர்ப்பிக்க வேண்டும், நீவிர் அனைவரும் குதிரைச் 
சேவகர்களாகி, காட்டிலுள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக மாற்றி ஏறிச் செல்லுங்கள், 
நாமும் குதிரைகள் வணிகர் தலைவனாகத் தோற்றம் கொண்டு பின்னர் வருகின்றோம்' எனக் கூறினார் .
சிவகணநாதர்களும் நரிகளை எல்லாம் உத்தம இலக்கணம் வாய்ந்த குதிரைகளாக மாற்றி ஏறிச் 
சென்றார்கள். சிவபெருமானும் குதிரைவணிகனாக வேதமாகிய குதிரையின் மீதேறி நடுவண் சென்றார். 
குதிரைகள் வெள்ளம்போல் மதுரையை அடைந்தன; பாண்டியன் மிகமகிழ்ந்து அமைச்சரைச் 
சிறையினின்றும் விடுவித்து, குதிரைகளை ஏற்றுத் தன் பந்தியில் சேர்ப்பித்தான். 

    குதிரை கொண்டு வந்த வணிகர் தலைவரது தோற்றம் பாண்டியனது உள்ளத்தைக் கவர்ந்தது.
அவ்வணிகர் தலைவனும், தான் ஒரு பெரும் குதிரை வீரன் என்பதை மெய்ப்பிக்க,  தான் ஏறிவந்த குதிரையை, 
மல்லகதி, மயூர கதி, வானரகதி, வல்லியகதி, சரகதி என்னும் ஐந்து கதிகளும், பதினெண்வகை 
சாரிவிகற்பங்களும் தோன்றச் செலுத்திக் காட்டினார். மன்னனும் குதிரை வணிகர் தலைவருக்குப் 
பரிசாகப் பொன்னாடை அளித்தான், வணிகர் அதைத் தன் கைச் செண்டால் வாங்கி அணிந்து கொண்டார், 
பின்னர் யாவரும் மகிழ்ந்து அவரவர் இருப்பிடம் சென்றார்கள். இந்த அமைச்சர் வாதவூரிற் பிறந்தமையால் 
வாதவூரர் எனவும் பாண்டியனுடைய அமைச்சர் என்ற நிலையில் தென்னவன் பிரமராயன் 
எனவும் வழங்கப் பெறுவார்.

51. கேழலாய்ப் பால் கொடுத்தது

    30-ஆவது கதையைப் பார்க்க

52. கேவேடராகிக் கெளிறு படுத்தது

    14-ஆவது கதையைப் பார்க்க

53. சக்கரம் மாற்கு அருளியது

    திருமால், தன்னால் வெல்லமுடியாத சலந்தரனைத் தடிந்த சக்கரத்தைப் (கதை 56 பார்க்க) 
பெறுவதற்குச் சிவபெருமானை, நாள் ஒன்றுக்கு ஆயிரம் தாமரைமலர்களைக் கொண்டு வழிபட்டு 
வந்தார். ஒரு நாள் ஒரு தாமரை மலர் குறைந்தது; மலர் எண்ணிக்கை குறையாதிருக்கும் வண்ணம் 
தன் கண்ணைத் தோண்டி மலராகச் சாத்திக் குறையை நிரப்பினார். சிவபெருமான் உவந்து 
சக்கரப் படையை அருளினார்.

    'நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு 
    ஏற்றுழி யொருநாள் ஒன்று குறையக் கண் நிறையவிட்ட         
    ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்திழிச்சுங் கோயில்
    வீற்றிருந்தளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.'

                            (தேவாரம் 4784)

    'திகழு மாலவன் ஆயிர மலரா லேத்துவானொரு நீண் மலர் குறையைப்
    புகழினாலவன் கண்ணிடந்திடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன் 
    திகழு நின்றிருப் பாதங்கள் பரவித் தேவதேவ நின் திறம்பல பிதற்றி 
    அகழும் வல்வினைக் கஞ்சி வந்தடைந்தேன் ஆவடு துறையாதி யெம்மானே..'

                                (தேவாரம் 7898)

54. சங்கம் கவர்ந்தது

    தாருகாவனத்து இருடிகளது மனைவிமார்கள், கற்புக்கு நிகராவார் தம்போல்வார் 
இல்லென்று செருக்குற்றிருந்தனர். இதனை உணர்ந்த இறைவன் இவர்களது செருக்கை ஒழிக்க 
எண்ணி பிட்சாடனர் வடிவங்கொண்டு தாருகாவனத்துக்கு எழுந்தருளினார். இவர் வருகின்ற 
கோலத்தைக் கண்ட இருடிகளது மனைவிமார்கள் அவரது பேரழகில் ஈடுபட்டுப் பிச்சை 
இடுதலோடு நிறையழிந்து தம் கை வளையல்களையும் கலத்தில் சொரிந்தனர். இதனை அறிந்த 
முனிவர்கள் தம் மனைவிமார் நிறையழிந்தமை கண்டு வெறுத்து, "நீவிர் நும் கற்புநிலையில் 
தவறியதால், மதுரையில் வணிகப் பெண்களாய்ப் பிறந்திடுக" என்ன, அவர்களும் எம் சாபம் 
நீங்குவது எப்போது என்றனர். அதற்கு, ஆலவாயண்ணல் நும் கையைத் தீண்டும்போது விலகும் என்றனர்.

    சாபத்தை ஏற்ற அம்முனிவர் மனைவிமார், மதுரையில், வணிகர் மகளிராய்த் தோன்றி 
வளர்ந்து மங்கைப் பருவம் அடைந்தனர். ஆலவாய் அண்ணலும் இவர்கள் சாபத்தைப் போக்க
வளையல் விற்கும் ஒரு வணிகராகி மதுரைப் பெருந் தெருவை அடைந்தார். மறை பகர்ந்த வாயால் 
"வளையலோஓஓ வளையல்" என்றார். இவ்வளையல் ஒலி கேட்ட மங்கையர்கள் உள்ளிருந்து 
வெளிப்போந்து கண்டனர்.  இவரது பேரழகில் ஈடுபட்டுச் சுழன்ற மனமுடையராய் நெருங்கி மொய்த்தனர்.

    நெருங்கிய மங்கைமார், “வணிகரே! எம் கைகட்கு ஏற்ற அழகிய வளை இடுமின்” என்று 
தம் காந்தள் கைகளை நீட்டினர். அண்ணலும் கைம்மலர் பற்றினார், கண்மலர் உள்ளங்கவர 
வளையலும் அணிந்தனர். பின்னரும், இறைவர் கை தம் கைமேல் படவேண்டுமென்று எண்ணினர்;
தம் கைவளையலை உடைத்தனர்; கைகளை நீட்டினர். இறைவரும் வளையலை இட்டனர். பல
முறை இந்நிகழ்ச்சி நிகழ்ந்தன.

    இந்நிலையில் வணிகரை நோக்கி, "வணிக நல்லீரே! இதுகாறும் இவ்வளை போன்ற 
வளையலைக் கண்டிலோம், இவைகள் எம்மை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தின, நாளையும் வருவீராக,
இவ்வளைக்குரிய பொருளைப் பெற்றுக்கொள்வீராக” என்றனர். “வாள்விழியீர் நாளைப் 
பெற்றுக்கொள்வோம்” என்று யாவரும் வியக்கும் வண்ணம் விண்ணிழி விமானத்துக்குள் சென்று 
சிவலிங்கத்தோடு கலந்தருளினார். இவ்வாறு வந்தவர் மங்கை பங்கனே என்று இன்ப
வெள்ளத்தழுந்தி இன்புற்றனர்.

55. சந்திரனைத் தேய்த்தருளியது

    60-ஆவது கதையைப் பார்க்க.

56. சலந்தரனைத் தடிந்தது

    வழக்கமாக நாள்தோறும் சிவபெருமானைக் கண்டு வணங்கும் இந்திரன், ஒருநாள் 
இறுமாப்புடன் கைலைக்குச் சென்றான். இதனை அறிந்த சிவபெருமான் ஒரு பூதவடிவாய் அவன் 
எதிரில் தோன்றினார். நம் தரிசனத்திற்கு இடையூறாய் வாயிலில் இப்பூதம் நிற்கின்றது என 
இந்திரன் சீற்றங்கொண்டு தன் வச்சிரப்படையால் அப்பூதத்தைத் தாக்கினான், உடனே பூத வடிவம்
உருத்திர வடிவமாயிற்று. இதனைக் கண்ட இந்திரன் அஞ்சித் தான் உய்யுமாறு வேண்டினான்.
சிவபெருமான் அவன்பால் கருணைகாட்டித் தம்பால் எழுந்த சினத்தைக் கடலில் எறிந்தார். அது
ஒரு குழந்தை வடிவமாயிற்று. அக்குழந்தையைக் கடல் அரசனாகிய வருணன் வளர்த்தான்.        
ஒருநாள் அக்குழந்தை அழுத ஒலியை நான்முகன் கேட்டுக் கடலை அடைந்து, "இவ்வொலி யாது? ” 
என்று வருணனிடம் கேட்டான். வருணன் குழந்தையை நான்முகனிடம் கொடுக்க  அதனைத் தன் 
இருகைகளாலும் வாங்கி மார்போடணைத்தான். அக்குழந்தை நான்முகனின் தாடியைப் பற்றி 
இழுத்து வருத்தியது. சலத்தால் தாங்கப் பெற்றதனால் சலந்தரன் என்று அக்குழந்தைக்குப் பெயரிட்டனர்.

    இவன் தவ வலியால் பல வரங்களைப் பெற்றுத் தேவர் முதலியோரைத் துன்புறுத்தி வந்தான்.
இவன் சாலாந்தரம் என்னும் ஒரு நகரை அமைத்து அரசு புரிந்து வந்தான். இவன் விருந்தை என்பவளை 
மணந்து கொண்டு யாவரும் அஞ்சும்படி சகல செல்வங்களுடன் பலநாள் இன்புற்றிருந்தான். ஒருநாள் 
இவனுக்கு அஞ்சி மேரு மலையில் ஒளிந்து கொண்டிருந்த தேவர்களை அழிக்க அங்கே சென்றான். 
அதனை அறிந்த தேவர்கள் திருமாலிடம் சென்று தங்களைக் காத்தருள வேண்டினார்கள். 
திருமாலும் அவர்கள் வேண்டுகோட்கிணங்கிச், சலந்தரனுடன் பல ஆண்டுகள் போர் புரிந்தும் 
அவனை வெல்ல இயலாது சென்றார். அப்போது தேவர்கள் கைலையை அடைந்து திருநந்தி தேவரின் 
அனுமதிபெற்றுச் சிவபெருமானை வணங்கிச் சலந்தரனால் தங்களுக்கு நேர்ந்த துன்பத்தைக் கூறிக் 
காத்தருளுமாறு வேண்டினார்கள். சிவபெருமானும் காத்தருள்வதாகக் கூறினார்.

    திருமாலிடம் வெற்றி பெற்ற சலந்தரன், தேவர்களை எங்கும் காணாதவனாய், அவர்கள் 
கயிலை மலையை அடைந்தார்கள் என்பது அறிந்து அவர்களை அழிக்கச் சேனைகளுடன் கயிலைக்குப் 
புறப்பட்டான். சிவபெருமானது பெருமையை அறிந்த அவன் மனைவி விருந்தை எவ்வளவோ தடுத்தும் 
அவன் கேட்கவில்லை.  கைலைக்குச் செல்லும் வழியில் சிவபெருமான் ஒரு முதிய அந்தணனாய்த் 
தண்டூன்றி அவன் எதிரே தோன்றி, "நீ யார் ? எங்கு செல்கின்றாய்? "  என்றனன்.  அதற்கு 
"பூவுலகத்திலுள்ளேன், சலந்தரன் என்னும் பெயரை உடையேன். தேவர்களையும் சிவபெருமானையும் 
வெல்ல இங்கு வந்தேன்" என்றான். உன்னால் அவர்களை வெல்வது அரிது, ஆயினும் நான் கிழிக்கும் 
இவ்வளவு பூமியைப் பேர்த்து எடுக்கவல்லையேல் உன்னால் கூடும் எனக் கூறித் தன் திருவடியினால் 
பூமியில் வட்டமாகக் கிழித்தார். சலந்தரன் அதனைப் பேர்த்துத் தூக்கித் தலையில் இட, 
அதுவே சக்கரப் படையாக அவனது உடலை இருகூறாகக் கிழித்து அவனை அறவே அழித்தது.

     "பிலந்தரு வாயினொடு பெரிதும் வலிமிக்குடைய
     சலந்தரன் ஆகம் இரு பிளவாக்கிய சக்கரம் முன் 
    நிலந்தரு மாமகள்கோன் நெடுமாற்கு அருள் செய்த பிரான்
    நலந்தரு நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே" 
                            (தேவாரம் 8223)

57. சேவகன் ஆகியது

    முன் ஒரு காலத்தில் பாண்டியன் ஒருவன், புத்தம் சமணம் முதலிய புறச் சமயங்களைக் 
களைந்து வேதநெறியும் சிவாகமத்துறையும் நிலைபெற்று வருமாறு ஆட்சி செலுத்தி வந்தான்.
அப்போது காஞ்சியிலிருந்து அரசு செலுத்தி வந்த சமண சமயத்தைச் சார்ந்த மன்னன், இந்தப் 
பாண்டியனை வென்று பாண்டிய நாட்டைத் தன் ஆட்சியில் கொண்டுவரப் பலவாறு முயன்றான்.
தன் முயற்சி ஒன்றும் நிறைவேறாதது கண்டு சமண முனிவர்களைக் கொண்டு ஒரு அபிசார வேள்வி 
செய்து அதன் மூலமாகப் பாண்டியனைக் கொன்று நாட்டைக் கைப்பற்ற எண்ணினான்.  முனிவர்கள் 
செய்த அபிசார வேள்விக் குண்டத்திலிருந்து நீலமலை போலவும், இயமன் போலவும் 
ஒரு யானை எழுந்தது; முனிவர்கள், பாண்டியனையும் அவன் நாட்டையும் அழிக்குமாறு அந்த 
யானையை ஏவினார்கள். 

    நிலவுலகம் பிளக்குமாறு இடிபோல் பிளிறிக்கொண்டு கண்களினின்றும் வடவைக் கனல் 
சிந்த ஊழிக்காற்றுப் போல் காற்று எழ, காதுகளை வீசிக்கொண்டு, குன்றுகளைத் துதிக்கையால் 
பற்றிச் சுழற்றிக்கொண்டு மதுரையை நெருங்கியது. யாவரும் கலங்கினர் . பாண்டியன் சோமசுந்தரக் 
கடவுளிடம் சென்று முறையிட்டான். சிவபெருமான், மதிமுடி மறைத்து மயில்தோகை அணிந்து, 
உடைவாள் கட்டி, தோளிலே நீண்ட வில்லை மாட்டிச் சேவகனாகத் தோன்றிக் கீழ்த்திசை 
மதில் மேலுள்ள மண்டபமாகிய அட்டாலை மண்டபத்திலே நின்று, அபிசார வேள்வி யானை 
மதுரையை நோக்கி வரும்போது, அதன் மத்தகத்தைக் குறிவைத்து அம்பை விடுத்தார். 
மத்தகம் கிழிபட்டது; யானை மேகம்போல் முழங்கி நிலத்தில் விழுந்திறந்தது. 

     யானையைத் தொடர்ந்து வந்த சமண முனிவர்களும், காஞ்சி மன்னனின் வீரர்களும் 
திசை தடுமாறி ஓடினார்கள். யானை இறந்து விழுந்து கிடந்ததும், பெருமிதமாக அட்டாலைச் 
சேவகன் நிற்பதும், பாண்டியன் பணிவுடன் அருகில் திருவடிபற்றி வணங்குவதும், 
மார்க்கண்டருக்காக மறலியை உதைத்துத் தள்ளிய காட்சிபோல் தோன்றிற்று.

    புகைபடக் கரித்தோல் போர்த்த புண்ணிய மூர்த்தி தாளால்
    உதைபடக் கிடந்த கூற்றம் ஒத்தது மத்தயானை;
    சுதைபடு மதிக்கோ வேந்தன் தொழுகுலச் சிறுவன் ஒத்தான்;
    புதைபடும் அமணர் காலபடரெனப் படரிற் பட்டார்.

58. சோதி தோன்றிய தொன்மை

    1-ஆவது கதையைப் பார்க்க.

59. சோமன் கலையைத் தூய்மை செய்தது

    60-ஆவது கதையைப் பார்க்க.

60. தக்கன் வேள்வி

    நான்முகனின் பத்துப் புதல்வர்களில் மூத்தவனும், அறிவு ஆற்றல்களில் மிக்கவனுமாகிய
தக்கன், தன் தந்தையின் அறிவுரைகளால், சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைத் தெரிந்து, 
மானசவாவிக் கரையில் அமர்ந்து, அப்பெருமானையே தன் நெஞ்சக் கமலத்துள் இருத்திப் பல         
ஆண்டுகள் தவம் செய்து பெறுதற்கரிய தலைசிறந்த வரங்கள் பலவற்றைப் பெற்றான். அவன் 
பெற்ற வரங்கள் எல்லாம் தேவரின் மேலாய வரங்களைப் பெற்றுத் தன் ஆணை எல்லா 
உலகங்களிலும் சென்று பல மக்களுடன் வாழ்வதையே முடிவாகக் கொண்டனவேயாம்; அவன் 
வீடு பேற்றை விரும்பவில்லை. சிவபெருமான் அருளிய வரங்களின் வலிமையால் தேவரும் அசுரரும்
வழிபடவும், நான்முகன் முதலானோர் தன் சொல்வழி நிற்பவும் தக்ஷபுரியைத் தலைநகராகக் கொண்டு 
ஆட்சி செய்து வந்தான். 

    வேதவல்லி என்னும் கற்பிற்சிறந்த பேரழகியை மணந்து ஆயிரக்கணக்கான புதல்வர்களைப் 
பெற்றான்; இப்புதல்வர்கள் எல்லாம் இவன் போல் இம்மை வளத்தில் ஈடுபடாது, நாரத முனிவன் 
நல்லுரையால் வீடுபேற்றை விரும்பித் தவம் செய்து சிவபெருமான் திருவருளால் வீடுபெற்றனர். 
பின்னர் இருபத்து மூன்று பெண்களைப் பெற்று அவர்கள் வழியாகத் தன் கிளையை அளவுக்கு மேல் 
பெருக்கமுறச் செய்தான்; பின்னும் விண்மீன் கூட்டமாகிய இருபத்தேழு பெண்களைப் பெற்று, 
அவர்களைச் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். சந்திரன், பேரழகோடு விளங்கிய 
கார்த்திகையையும் உரோகிணியையும் பெரிதும் காதலித்து மற்றவர்களைப் புறக்கணித்தான்;

     புறக்கணிக்கப்பட்ட பெண்கள், தங்கள் தந்தையிடம் முறையிட, சந்திரன் கலைகள் யாவும் 
தேய்ந்து பொலிவு ஒழிக எனச் சாபமிட்டான். இந்தச் சாபத்தால் கலைகள் குறையப்பெற்ற சந்திரன்         
சிவபெருமானை நோக்கித் தவங்கிடந்து கலைகள் ஒவ்வொன்றாய் நிறையப்பெற்றான். 
தக்கன் சுடுமொழியின் வண்ணம் நாளும் நாளும் குறைவதும் சிவபெருமான் திருவருள் வண்ணம் 
பின்னர் நாளும் நாளும் நிறைவதுமாக மாறி மாறிக் குறைந்தும் வளர்ந்தும், சந்திரன் 
நிலைபெறுவானாயினன்.

    தன் சுடுமொழியை மாற்றியதால், தக்கனுக்குச் சிவபெருமானிடத்துப் பகைமை பிறந்து 
வளர்வதாயிற்று. புலகர் என்னும் முனிவர் நல்லுரைகளாலும் சிவபெருமானும் தனக்கு மருகனாக 
வருவார் என்ற வரத்தின் நினைவாலும் பகைமை தணிந்து அரசு செலுத்தி வந்தான். சிவபெருமான் 
அளித்த வரத்தின் பயனாக, உமாதேவி, தக்கனுக்கு மகளாய்த் தோன்றி, சிவபெருமானை அடையத் 
தவம் செய்தார். சிவபெருமானும் தோன்றினார்.  தக்கன் தன் மகளாரின் திருமணத்தைப் 
பேரார்வத்துடன் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கும்போது, மாயமாகச் சிவபெருமான் யாவரும்
அறியாது தனித்து தவக்கோலத்துடன் வந்து உமையம்மையை இடது பாகத்தமர்த்திக் கயிலைக்குச் 
சென்றுவிட்டார். சிவபெருமான் இவ்வாறு செய்தது தக்கனுக்குப் பெரும் சினத்தை உண்டாக்கி விட்டது. 
தக்கன், தன் மகளைக் காணக் கயிலைக்குச் சென்றான்; அவனை, சிவபெருமான் அம்மையொடு 
அமர்ந்திருக்கும் திருக்கோயிலுட் புகாவண்ணம் பூதகணங்கள் தடுத்துவிட்டன. அடங்காச் 
சினத்தனாகத் தக்கன் திரும்பினான்.

    சிவபெருமானுக்கு அவிப்பாகம் கொடாமல் அவரை இழிவுபடுத்த வேண்டும் என்ற
எண்ணத்துடன், தக்கன் ஒரு பெருவேள்வி இயற்றினான்; அவன் தவவலிமைக்கு அஞ்சித் 
தேவர்கள் எல்லாம் வந்தனர், அவுணர்களும் வந்தனர், ஆனால் அகத்தியர், சனகாதி முனிவர்கள் 
முதலிய மெய்ப்பொருள் உணர்ந்த மேலோர் வரவில்லை. தக்கன் செயல் தகாதது எனத் ததீசி முனிவர் 
பலவாறு எடுத்துரைத்தும் அவன் கேட்கவில்லை. சிவபெருமான் திருப்பெயர்களைத் தாங்கியுள்ள 
தெய்வங்களையும் எம்பெருமானையும் ஒன்று எனக் கருதும் மயக்கத்தையும், அவன் அருளால் 
படைத்தல், காத்தல் செய்யும் முதல்வர்களை அவனோடு ஒத்தவர் எனக்கொள்ளும் அறியாமையையும்
தவிர்த்துச் சிவபெருமானே பரம்பொருள் எனக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாக
முனிவர் கூறியும் தக்கன் தெளியவில்லை.

    தக்கன் வேள்வியைத் தொடங்கிவிட்டான். அவன் கட்டளைப்படி காமதேனு, பலவகை
இனிய உணவுகளைக் கொண்டு குவித்து எல்லோருக்கும் படைத்தது. சிந்தாமணியும் சங்கநிதியும், 
பதுமநிதியும், ஐந்தருக்களும் பலவகை மணிகளையும், ஆடைகளையும் அணிகளையும் யாவர்க்கும் 
வழங்கின. தேவர்கள், முனிவர்கள், அந்தணர் யாவரும் மனமார வாயாரப் பலவகை உணவுகளையும் 
உண்டு களித்துப் பாராட்டினார்கள். எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியின் பேரொலியாகவே இருந்தது.
திருமாலுடைய கருடனும், நான்முகனது அன்னமும், வாசவனது ஐராவதமும், அங்கியங் கடவுளது 
ஆட்டுக்கிடாவும், இயமனுடைய எருமைக்கடாவும் கதிரவனது குதிரைகளும் ஒருபால் நின்று ஒலித்தன. 
அரம்பையர் இசை, ஒருபால் முழங்கின. எங்கும் ஒரே ஆரவாரமாக இருந்தது.

    வேள்வி தொடங்கிற்று; அவரவர்க்குரிய பகுதி வேலைகளை அவரவர் செய்தனர். தக்கன் 
ஆகுதி செய்யப்பெறும் தேவர்களை நினைத்து அவிகளை அமுதுபோல் ஊட்டிக்கொண்டிருந்தான். 
இந்த நிலையில், தக்கன் தன்னை அழையாதிருந்தும், உமாதேவியார் கயிலையிலிருந்து, தக்கனது 
வேள்விச்சாலைக்கு வந்து சிவபெருமானையும் தன்னையும் அழையாதது பெருங்குற்றம் என்பதைத்
தக்கனுக்குக் கூறினார். தக்கன் தன் மகளாகிய உமையம்மையிடம் சிவபெருமானை இழித்துக் 
கூறியதோடு அம்மையையும் இகழ்ந்தான். உமையும், வேள்விச்சாலையை விடுத்துக் கயிலைக்கு 
மீண்டனர். ஈதெல்லாம் அறிந்த சிவபெருமான் தக்கன் வேள்வியை அழிக்கத் திருவுளங் கொண்டார். 
வீரபத்திரக் கடவுளும் பத்திரகாளியும், இருவர் கண்களிலிருந்தும் தோன்றி இறைவன் ஆணையைத் 
தலைமேல் கொண்டு வேள்விச்சாலைக்குச் சென்றனர். இருவர் தோற்றத்தையும் கண்டு தேவர்கள் 
எல்லாம் நடுங்கினர். இறுதிக் காலம் வந்து விட்டது என ஏங்கினர்.

    வீரபத்திரர், சிவபெருமானுக்கு உரிய அவியைக் கேட்டார்; தக்கன் மறுத்தான்; கூடியிருந்த
தேவர்களைப் பார்த்தார் வீரபத்திரர், "முறையற்றவன் வேள்விக்கு நீவிரும் துணையாக வந்துள்ளீரோ" 
எனச் சீறினார்; தண்டத்தினால் திருமாலின் மார்பில் அடித்தார்; அவர் கீழே விழுந்தார், பிரமனை 
ஒரு கையால் தலையில் குட்டி வீழ்த்தினார்; அருகிலிருந்த அவன் மனைவியின் மூக்கை அரிந்தார். 
தேவர்களெல்லாம் ஒளிந்து கொள்ள இடம் தேடிப் பல வழியாலும் ஓடினார்கள். சந்திரனைப் பிடித்துத் 
தள்ளிக் காலால் தேய்த்தார், சூரியனைக் கன்னத்தில் அடித்துப் பற்களை உதிர்த்தார்; பகன் என்னும் 
சூரியனது கண்களைப் பிடுங்கினார். இயமனைத் தலையை வெட்டினார். குயிலுருக் கொண்டு 
ஓடிய இந்திரனைப் பிடித்து வெட்டி வீழ்த்தினார். 

    அக்கினி தேவனின் கைகளையும் நாக்குகளையும் துணித்தார். அவன் மனைவியாகிய 
சுவாகாதேவியின்  மூக்கைக் கிள்ளி எறிந்தார். நிருதியைத் தடியால் அடித்து வீழ்த்தினார். வருணனையும்
வாயுவையும் எழுவாலும் மழுவாலும் தாக்கினார். குபேரனைச் சூலத்தால் குத்திக் கொன்றார். 
அசுரர் தலைவன் தலையை ஒரு கணையால் எய்தார். மான் உருக்கொண்டு ஓடிய வேள்வித் 
தெய்வத்தின் தலையைக் கணையால் அறுத்தார்; தன்னை வணங்கிய உருத்திரர்களை மன்னித்து 
வழி காட்டினார். மனம் கலங்கித் தக்கன் நின்றான்; அவன் தலையை வெட்டி அக்கினி தேவனை 
உண்ணச் செய்தார். 

    தக்கன் மனைவி, மகள் முதலிய பெண்டிர்களைப் பத்திரகாளி தண்டித்தார்.  வேள்விச்சாலை 
அழிந்தது. அனைவரும் மாண்டனர்.  சிவபெருமான் உமையுடன் வேள்விச்சாலைக்கு எழுந்தருளினார். 
திருமாலும் நான்முகனும் வணங்கி நின்றனர். உமையம்மை மாண்டவர்களை உய்வித்தருள வேண்டினார்; 
யாவரும் உயிர் பெற்றனர். தக்கனுடைய தலையை முன்னமே தீக்கடவுள் உண்டுவிட்டமையின், 
ஒரு ஆட்டுத் தலையைத் தக்கனுக்குத் தலையாக வைத்து உயிர்ப்பித்தனர். அவனும் தன் குற்றத்திற்கு         
வருந்திச் சிவபெருமானை வணங்கித் திருவருட்கு இலக்கானான்.


    "மலைமகள் தனை இகழ்வது செய்த மதியறு சிறுமனவனதுயர் 
    தலையினொ டழலுரு வனகரமற முனிவு செய்தவனுறைபதி
    கலை நிலவிய புலவர்களிடர்களை தருகொடை பயில்பவர் மிகு 
    சிலை மலி மதிள் புடை தழுவிய திகழ்பொழில் வளர் திருமிழலையே"

                                (தேவாரம் 208)

    "சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன்னியங்கு 
    பருதியான் பல்லுமிறுத்தவர்க்கருளும் பரமனார் பயின்றினி திருக்கை 
    விருதினான் மறையும் அங்கமோராறும் வேள்வியும் வேட்டவர் ஞானம் 
    கருதினாருலகிற் கருத்துடையார்சேர் கழுமல நகரெனலாமே"

                                (தேவாரம் 4072)

    "எச்சன் நிணத்தலை கொண்டார் பகன் கண் கொண்டார்
     இரவிகளிலொருவன்பல் இறுத்துக்கொண்டார்
    மெச்சன் வியாத்திரன் தலையும் வேறாக் கொண்டார் 
    விறலங்கி கரங்கொண்டார் வேள்விகாத்து
    உச்ச நமன் தாளறுத்தார் சந்திரனையுதைத்தார்
    உணர்விலாத்தக்கன்றன் வேள்வியெல்லாம்
    அச்சமெழ அழித்துக் கொண்டருளுஞ் செய்தார் 
    அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே"
                                (தேவாரம் 7191)

61. தண்ணீர்ப் பந்தல் வைத்தது

    மதுரையில் இராசேந்திர பாண்டியன் அரசு செலுத்தும் நாளில், காடு வெட்டிய சோழன் 
சோமசுந்தரக் கடவுளை யாவரும் அறிய, வந்து வந்து வணங்கிப் போக விரும்பினான். அதனால்
பாண்டியனுக்குச் சில கையுறைப் பொருள்கள் அனுப்பி அவனுடைய நட்பைப் பெற்றான். பின் 
தன் மகளையும் இராசேந்திரப் பாண்டியனுக்கு மணம் செய்து கொடுக்க உடன்பட்டான். 
இராசேந்திர பாண்டியனின் தம்பியாகிய இராசசிம்மன் அதனை அறிந்தான்; தன் மூத்தோனுக்குப் 
பேசப்பட்ட சோழன் மகளைத் தானே மணம் செய்து கொள்ள விரும்பினான். அண்ணனை வஞ்சித்துக் 
காஞ்சி நகரை அடைந்தான், அதுகேட்ட சோழன் அவனை எதிர்கொண்டு அழைத்து இராசேந்திரனுக்கு 
என்று வரையறுத்திருந்த தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.

    பிறகு காடு வெட்டியசோழன், பாண்டிய நாட்டு அரசுரிமையைத் தன் மருமகனுக்கு ஆக்க
விரும்பி இராசேந்திர பாண்டியனைப் பிடிக்கக் கருதினான். இராச சிம்மனோடு சேனைகள் சூழப்
புறப்பட்டுச் சென்று மதுரைக்குச் சமீபத்தில் தங்கிப் பாடி வீடு அமைத்தான். இச்செய்தியை 
இராசேந்திர பாண்டியன் ஒற்றர்கள் மூலம் அறிந்தான். உடனே திருக்கோயிலை அடைந்து 
சோமசுந்தரக் கடவுளை வணங்கி, "பெருமானே! நள்ளிரவில் தனியனாய் வந்து உமது திருவடியைப்
பணிந்து சென்ற காடு வெட்டிய சோழன், பல வரிசைகள் விடுத்து என் நட்பைப் பெற்றான்; 
இன்று தமியேனுக்கு எதிராகப் படை எடுத்து வந்துள்ளான்; காத்தருள வேண்டும்" என்று குறையிரந்து 
வேண்டினான். அப்போது “பாண்டியனே! நாளை உன் சேனையுடன் சென்று பகைவனோடு 
எதிர்த்துப் போரிடுக, வெற்றி உன்னுடையதாகச் செய்வோம்" என்று விண்ணினின்றும் ஒரு வாக்கு 
எழுந்தது. அதனைக் கேட்ட பாண்டியன் மகிழ்ச்சியுற்றுச் சோமசுந்தரக் கடவுளை வணங்கி 
விடைபெற்றுத் தன் இருக்கையை அடைந்தான்.

    மறுநாள், பாண்டியன், தன் சேனைகளுடன் சென்று சோழனொடு போர் புரிந்தான்.
பாண்டியனது சிறு சேனை போருக் காற்றாது வருந்தியது. அப்போது சோமசுந்தரக் கடவுளின் 
திருவருளால், பாண்டியன் படைகள் சோழன் படைமுன், ஒன்று, பலவாக உருக்கொண்டு
தோன்றின. இரு படைகளும் சலியாது சூரியன் உச்சிவரும் வரை போர் புரிந்தன. அப்போது 
சூரியன் ஊழித் தீயே போல் காய்ந்தது; அவ்வெம்மையின் கொடுமை ஆற்றாது மரங்கள் 
எல்லாம் கரிந்து போயின; ஆறுகளில் நீர் சிறிதும் இன்றி வறண்டது; படைகள், நிற்பதற்குக் 
கூட நிழல் இன்றி வருந்தின. 

    இவ்வாறு வெப்பத்தால் வருந்தும் சமயத்தில், கருணைக் கடலாகிய சோமசுந்தரக் கடவுள்
பாண்டியன் படையின் நடுவே, நான்மறைகளும் கால்களாகப் பொருந்தத் தண்ணீர்ப்பந்தல் வைத்து, 
தவக்கோலம் பூண்டு, கங்கை நீர் நிரப்பிய ஒரு கெண்டியை ஏந்தி ஒருவருக்கு ஒன்றாய் பலருக்குப் பலவாய் 
உள்ள துவாரத்தினால் தண்ணீர் வார்த்து தாகத்தைத் தணித்தருளினார். பாண்டியன் படை வீரர்கள் 
சிவபெருமான் வைத்தருளிய தண்ணீர்ப்பந்தலை அடைந்து தண்ணீர் குடித்து இளைப்பு நீங்கினர். 
அதனால் மீண்டும் வலிமை பெற்று சோழன் மேல் போருக்குச் சென்று வெற்றி பெற்றனர். 
சோழனையும் இராசசிம்மனையும் பிடித்து இராசேந்திர பாண்டியன் முன் நிறுத்தினர். அவர்களைப் 
பாண்டியன் சோமசுந்தரக் கடவுள் திருமுன் விடுத்து, “பெருமானே! உமது திருவுளம் யாது?" என்ன, 
"பாண்டியனே! உன் கருத்துக்கிசைந்ததைச் செய்யக் கடவை” என்று ஒரு வாக்கு விண்ணின்றும் எழுந்தது. 
அதனைக் கேட்ட பாண்டியன் காடு வெட்டிய சோழனை விடுவித்து தன் தம்பியாகிய இராச சிம்மனை 
வேறாக விலக்கி விட்டான். பிறகு பலவளங்களும் சிறக்க வாழ்ந்து வந்தான்.

62. அறக்கடவுளும் திருமாலும் இடபமாய்த் தாங்கியது

    எல்லா உலகங்களும் உயிர்களும் முடிவடைகின்ற கடையூழியில், செந்தீ பரவி 
எஞ்சியவற்றையும் உண்டு தூய்மை செய்யும். அப்போது சிவபெருமான், உமைகாண ஊழிக் கூத்து 
ஆடி மகிழ்வர். இத்தகைய கடையூழி ஒன்றில், எங்கும் செந்தீ பரந்து வரும்போது, அறக்கடவுள் 
தான் அழிந்து விடுவமோ என்று அஞ்சி எருது வடிவமாகச் சிவபெருமானை அணுகித் தன் 
நிலையை எடுத்துரைத்தான். சிவபெருமான், அறக்கடவுளுக்கு இறவாத தன்மை அருளி 
ஆற்றலையும் கொடுத்துத் தனக்கு ஊர்தியாக இருக்கும் சிறப்பையும் அளித்தார். அது முதல் 
அறக்கடவுள் வலிமை கொண்டு சிவனுக்கு இடப ஊர்தியாகவும் ஏனையோர்க்குத் தலைவனாகவும் 
திகழ்கின்றான். முப்புரங்களைச் சிவபெருமான் கனல் எழ விழித்து அழித்த போது, திருமால்
இடபமாகச் சிவபெருமானைத் தாங்கினார்.

63. திருமால் பன்றியாய்த் தேடியது

    1-ஆவது கதையைப் பார்க்க.

64. தேவர்களை ஓட்டுகந்தது

    60-ஆவது கதையைப் பார்க்க.

65. நஞ்சு அமுது செய்தருளியது

    15-ஆவது கதையைப் பார்க்க.

66.  நட்டம் பயின்றது

    உலகம் எல்லாம் தோன்றுவதும், நிலை நிற்பதும், அழிவதும், மயக்கமுறுதலும், அருள் 
பெறுதலும், சிவபெருமான், தில்லையம்பலத்தும், ஒவ்வொரு உயிர்களின் உள்ளக் கருவிலும்
ஆடுகின்ற ஆட்டத்தாலே தான் ஆகின்றன என்பது அறிஞர் கொள்கை. எல்லாம் ஒடுங்கிய
பேரூழியின் முடிவாகிய ஈமக்காட்டிலும் அவர் கூத்தாடுகின்றார். இவருடைய திருக்கூத்தை, நடம்
என்றும் நட்டம் என்றும் நடனம் என்றும் கூறுகின்றோம். இறைவி ஒரு காலத்தில் காளியாக நின்று
கூத்து ஆடினார்; அக்கூத்து கொடுங்கூத்தாய் வளர்ந்து உலகத்தை நடுங்கச் செய்தது. உலகம் 
எல்லாம் காளியின் கூத்துக்கு உணவாகிவிடுமோ என்ற அச்சம் தோன்றியது. அப்போது 
சிவபெருமான் ஆனந்தக்கூத்தனாய் நட்டம் பயின்று காளியின் கொடுங்கூத்தை ஒடுங்கச் செய்தார்.

    "காலதிற் கழல்களார்ப்பக் கனலெரிகையில் வீசி
    ஞாலமுங் குழியநின்று நட்டமதாடுகின்ற 
    மேலவர் முகடுதோய விரிசடை திசைகள்பாய
    மாலொரு பாகமாக மகிழ்ந்த நெய்த்தானனாரே"

                            (தேவாரம் 4528)


67. நந்தம்பாடியில் நான்மறையோன்

    ஒரு காலத்தில், தங்கள் மரபுக்குரிய வேதம் ஓதுதலைக் கைவிட்டுப் பார்ப்பார் யாரும் 
ஒருமை நெஞ்சகமும் முன்னை இருபிறப்பு ஒழுங்கும் ஒங்கும் பெருமை முத்தழலும் நான்கு 
ஆச்சிரமும் பீடு இலங்கும் அரியபால் வேள்வி ஐந்தும் ஆதிநூல் அங்கம் ஆறும் தரும 
ஏழிசையும் மற்றும் தவிர்ந்து இழிதொழிலில் சார்ந்தார்.

    எங்கேனும் சிலர் வேதங்களை ஓதி வந்தாலும், அவற்றின் பொருளை உணராதவராய்
இருந்தனர். பொருள் உணர்ந்தார் ஒருவர் இருவர் இருந்தாலும், அழுக்காறு உடையவர்களாய்ப் 
பிறர்க்கு உதவாதவர்களாய் இருந்தனர். அப்போது முனிவர் சிலர் சிவபிரானை வேண்ட, அவர் 
வேதத்தையும் அதன் பொருளையும், திருவாலவாயில் எழுந்தருளி முனிவர்களுக்கு விளக்கிக் கூறி 
மறைந்தார்.  திருவிளையாடற்புராணத்தில் 'வேதம் உணர்த்திய திருவிளையாடலில்' இது 
திருவாலவாயில் நிகழ்ந்ததாகப் பேசப் படுகின்றது. திருவாதவூரடிகள் காலத்தில், இந்நிகழ்ச்சி, 
கடற்கரை ஊர்கள் ஒன்றிலோ, பாடி வீட்டிலோ நிகழ்ந்ததாக வழங்கப் பெற்றிருத்தலும் கூடும்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள கடற்கரை ஊர்கள் சில வேதத்தோடு தொடர்புடைய பெயர்களுள்ளனவாக
இருக்கின்றன "நால்வேதபுரி", 'திருமறைக்காடு' என்பன எடுத்துக் காட்டுகளாகும். 'நந்தம்பாடி' 
என்பது ஏதேனும் ஓர் ஊரின் பெயராக இருக்கக்கூடுமா அல்லது மதுரையம்பதியின் பகுதி ஒன்றை 
அடிகள் இவ்வாறு குறித்திருக்கக்கூடுமோ என்பதும் கருதற்பாலது.

    "மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரி வளைக்கை மடமானி 
     பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாள் தோறும் பரவப்
    பொங்கழலுருவன் பூதநாயகன் நால்வேதமும் பொருள்களும் அருளி 
    அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே" 

                                (தேவாரம் 4090)

68. நரி பரியாக்கியது

    50-ஆவது கதையைப் பார்க்க.

69. நாமகள் நாசியைத் தூய்மை செய்தது

    60- ஆவது கதையைப் பார்க்க.

70. பஞ்சப்பள்ளியில் பான்மொழியோடு இருந்தது

    
    பஞ்சப்பள்ளி என்பது ஒரு ஊரின் பெயராகவோ, அழகு, தண்மை, மென்மை, நறுமணம்
வெண்மை என்னும் ஐவகைத் தன்மையமைந்த படுக்கையாகவோ கருதவேண்டி இருக்கிறது. 
ஊரின் பெயராயின் அங்கு நிகழ்ந்ததொரு தெய்வ நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதாகும். பள்ளியைக் 
குறிப்பதாயின் சிவபெருமான் சௌந்திர மாறனாகத் தடாதகைப் பிராட்டியாரை மணந்து அரசு 
செலுத்திய நாட்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். தெளிவாகக் கூறுவதற்கில்லை.

71. பட்டமங்கையில் அட்டமாசித்தி அருளியது

    முன்னொரு காலத்தில் திருக்கயிலாய மலையில் கல்லால நீழலின் கீழ்ச்சிவபெருமான் 
குருமூர்த்தியாய் வீற்றிருந்து, சிவகணத்தலைவர்க்கும் சனகர் முதலிய முனிவர் நால்வர்க்கும் 
சிவகதையினை திருவாய் மலர்ந்தருளிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திகைப் பெண்களான 
இயக்க மாதர் அறுவரும் சைவத்தவ வேடம் பூண்டு சிவபெருமான் திருமுன் வந்து வணங்கி,
பெருமானே! அடியேங்கட்கு அட்டமாசித்தியை உபதேசித்தருளும்" என்று வேண்டினர். அது
கேட்ட பெருமான், "நீங்கள், உமாதேவியை உள்ளத்தில் தியானித்துச் சிந்திப்பீர்களாயின், 
அவள் உங்கள் வினைகளைப் போக்கி, அட்டமாசித்திகளையும் தந்தருள்வாள்" என்று கூறி 
அட்டமாசித்திகளின் கருப்பொருளை மட்டும் விளக்கி அருளினார்.

    பின்னர், அவ்வியக்கியர் அறுவரும் முன்னை ஊழ்வலியால் உமாதேவியைச் சிந்தியாமல் 
சிவபெருமான் அருளிய அட்டமாசித்திகளின் கருப்பொருளை மறந்து விட்டனர். சிவபெருமானும் 
அவர்களைச் சினந்து, “நீங்கள் பட்டமங்கையில் உள்ள ஆலமரத்தின் அடியிலே கற்பாறையாய்க் 
கிடக்கக் கடவீர்கள்" என்று சபித்தார். இயக்கிமார்கள் மனந்தளர்ந்து வணங்கி, “பெருமானே !         
இச்சாபத்தை நீக்கி அருள வேண்டும்" என்று குரை இரந்தனர். சிவபெருமான், "ஆயிரம் 
ஆண்டுகள் கற்பாறையாய்க் கிடந்தால், அதன்மேல் யாம் மதுரையினின்றும் போந்து உங்கள் 
சாபத்தைப் போக்கி அருள் செய்வோம்" என்றார். இயக்கிமார்கள் அறுவரும் பட்டமங்கையில் 
ஆலமரத்தின் அடியில் கற்பாறையாகிக் கிடந்தனர். ஆயிரம் ஆண்டுகள் கழிந்தபின், மதுரையில் 
எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள், ஒரு ஞானாசாரிய வடிவங் கொண்டு பட்டமங்கையில் 
கற்பாறையாய்க் கிடக்கும் இடம் சென்று அருள் நோக்கம் செய்தருளினார். உடனே அவர்கள் 
அறுவரும் பழைய வடிவம் பெற்று அப்பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். 
சிவபெருமான் அவர்கள் சிரமீது தம் கையை வைத்து அட்டமாசித்திகளையும் உபதேசிப்பராயினார்.

    "சித்திகள், அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம்
என எட்டு வகைப்படும். இவை ஞானிகளின் விளையாட்டு வகையாகும். அவற்றுள், மிக நுண்ணிய 
உயிர்கள்தோறும் தான் மிகச் சிறிய பரம அணுவாய்ச் சென்று தங்கும் நுண்மை அணிமா. 
மண்தத்துவ முதல் சிவதத்துவம் ஈறாக உள்ள முப்பத்தாறு தத்துவங்களின் உள்ளும் புறமும் 
நீங்காது நிறைந்திருக்கும் பெருமை மகிமா.  மலையின் பாரத்தைப் போலக்கனமாக இருக்கும் 
யோகியை எடுத்தால் இலேசாகக் கனமற்று இருப்பது இலகிமா. இலேசான அணுவைப்போல் 
மெலிந்திருக்கும் யோகியை எடுத்தால் மலையின் பாரத்தைப் போல் கனமாக இருப்பது கரிமா,             

    பாதலத்திலுள்ள ஒருவன் பிரமலோகத்தில் புகுதலும் மீண்டும் பாதலத்தை அடைதலும் பிராத்தி. 
வேறு உடலில் புகுதலும் ஆகாயத்தில் சஞ்சரித்தலும் தான் விரும்பிய இன்பங்கள் அனைத்தும் 
தான் இருக்கும் இடத்தில் நினைத்த வண்ணம் வரச் செய்தலும் பிராகாமியம். சூரியன் தனது 
ஒளியால் எல்லாவற்றையும் விளங்கச் செய்தல் போல உலகிலுள்ள பொருள்களனைத்தையும், 
மூன்று காலங்களையும், விண்ணுலகப் பொருள்களையும் தன் உடம்பின் ஒளியினால் விளங்கச் 
செய்து தான் இருந்த இடத்திலிருந்து அறிதலும் பிராகாமியம் ஆகும் என்பர்.

    ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் தன் இச்சையின்படி இயற்றி, சூரியன்
முதல் ஒன்பது கோள்களும் ஏவல் கேட்ப இருப்பது ஈசத்துவமாகும். அவுணர், பறவை, விலங்கு, பூதம், மனிதர் 
முதலிய பலவகை உயிர்களையும், இந்திரன் முதலிய திக்குப்பாலர் எண்மரையும் தன் வசமாகச் செய்து 
கொள்வது வசித்துவமாகும்." என்று சிவபெருமான் இயக்கியர் அறுவர்க்கும் அட்டமாசித்திகளை விளங்க 
அறிவித்தருளினார். இயக்கிமார் அறுவரும் பெருமான் உபதேசித்தருளிய அட்டமாசித்திகளை 
உமாதேவியைத் தியானம் செய்து நன்கு பயின்றபின் கயிலையை அடைந்தனர்.

குறிப்பு: அட்டமாசித்திகளைப் பற்றி வேறுவிதமான விளக்கங்களும் உள்ளன. கதை 23-ஐப் பார்க்கவும்.

72. பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளியது

    மதுரையில் வரகுண பாண்டியன் அரசு செலுத்திவரும் நாளில் பாணபத்திரன் என்னும் ஒரு
யாழ்ப்பாணன், பாண்டியன் சபையில் யாழ் வாசித்து வருவது வழக்கம். ஒரு நாள், "நமக்கு இனி 
அறிவாய் இருப்பது சோம சுந்தரக் கடவுளே" என்று கருதி அன்று முதல் சோமசுந்தரக் கடவுளின் 
திருக்கோயிலில் மூன்று காலமும் இசை பாடும் நியமம் பூண்டான். இறைவன் திருமுன்
பாடுதலேயன்றி வேறு தொழில் இன்மையால் வறுமையினை அடைந்தான். அதனைப் பொறாத 
சோமசுந்தரக் கடவுள், ஒவ்வொரு நாளும் சிறிது பொருள் அளிக்க அதனைப் பாணபத்திரன்
பெற்றுச் சென்று யாவர்க்கும் கொடுத்து கவலை இன்றி வாழ்ந்து வந்தான் . 

    இவ்வாறு நாள்தோறும் கொடுத்தருளிய பெருமான் சில காலம் சென்ற பின் ஒன்றும்
கொடாது ஒழிந்தார். பாணபத்திரன் வறுமையால் துன்பமுற்றான். ஒரு நாள் சோமசுந்தரக் கடவுள் 
அப்பாணபத்திரன் கனவில் தோன்றி, "அன்பனே! இதுவரை பாண்டியனது பொருளைக் கவர்ந்து 
கொடுத்தருளினோம். எம்மிடம் அன்பு வைத்துள்ள பாண்டியன் அறியின் வேறாக நினைத்து விடுவான்.
உன்னைப் போலவே நம்மிடம் அன்பு கொண்டுள்ள சேரமானுக்கு ஓலை எழுதித் தருவோம். 
அங்கு செல்லக்கடவை” என்று கூறியருளி “மதிமலி புரிசை மாடக்கூடல்" என்னும் திருமுகப் பாசுரம் 
ஒன்று எழுதிக் கொடுத்து மறைந்தார். பாணபத்திரன் விழித்தெழுந்து அதனைக் கண்டு மகிழ்ந்தான்.

    பிறகு பாணபத்திரன் தான் பெற்ற திருமுகத்தோடு இறைவனை வணங்கி, மலைநாட்டு 
திருவஞ்சைக் களத்தை அடைந்தான். அந்நகரில் உள்ள ஒரு தண்ணீர்ப் பந்தலில் தங்கினான்.
சோம சுந்தரக் கடவுள் அன்றிரவு சேரமான் கனவில் தோன்றி, "மன்னனே! பாணபத்திரன் நம் 
அடியவன். அவன் உன்னைக் காண நம் திருமுகம் பெற்று வந்திருக்கிறான். அவனுக்கு அரிய 
பொருளைக் கொடுத்து விரைந்தனுப்புக"  என்று கூறி மறைந்தார். சேரமான் விழித்தெழுந்து 
அமைச்சரிடம் கூறி பாணபத்திரரைத் தேடிக் கண்டு வர ஏவலாளரை அனுப்பினான். அவர்களும் 
சென்று தேடி தண்ணீர்ப் பந்தலில் தங்கி இருக்கக் கண்டு அதனை அரசனுக்குத் தெரிவித்தனர்.
உடனே சேரமான் நாயனார் சென்று பாணபத்திரனை எதிர்கொண்டு வணங்கி திருமுகத்தை 
முறைப்படி வாங்கி வணங்கிக் கண்ணுற்றார் அதில், “மாடங்கள் நிறைந்த மதுரையில் 
எழுந்தருளியுள்ள சிவனாகிய யாம் எழுதி அனுப்பும் செய்தி. நீருண்ட மேகத்தைப் போல 
புலவர்களுக்கு வரையாது அளிக்கும் சேரமான் காண்க; இத்திருமுகம் கொண்டு வரும் 
பாணபத்திரன் நின்போல் எம்மிடம் அன்புடையவன். அவன் நின்னைக் காண வருகின்றான்.
அவனுக்குப் பெருநிதி கொடுத்தனுப்புவது"  என்று சோமசுந்தரக் கடவுள் வரைந்தருளிய 
செய்தியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். 

    சோமசுந்தரக் கடவுள் (திரு ஆலவாயுடையார்) பாணபத்திரர் மூலமாக சேரமான் பெருமாள்
நாயனார்க்கு எழுதிக் கொடுத்த 'திருமுகப் பாசுரம்'

    "மதிமலி புரிசை மாடக்கூடல்                        
    பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற(கு) 
    அன்னம் பயில் பொழில் ஆலவாயின் 
    மன்னிய சிவன் யான் மொழிதரு மாற்றம்
    பருவக் கொண் மூப்படி எனப் பாவலர்க்கு 
    ஒருமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ் 
    குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் 
    செருமா உகைக்கும் சேரலன் காண்க 
    பண்பால் யாழ்பயில் பாணபத்திரன் 
    தன்போல் என்பால் அன்பன்; தன்பால் 
    காண்பது கருதிப் போந்தனன்;
    மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே"

    பிறகு, சேரமான் நாயனார் பாணபத்திரனுக்கு அமுது செய்வித்து முறைப்படி உபசரித்தார்.
'வரவிடுப்பது' என்ற கட்டளையால் சேரமான் தம் கருவூலத்தைக் காட்டி " இப்பொருளை எல்லாம்             
நீரே கைக்கொண்டுபோம்" என்று கூற, பாணபத்திரன் சேரமானை வணங்கி, தனக்கு வேண்டிய 
அளவு பொருளைப் பெற்றுக் கொண்டு அவரிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். பாணபத்திரன் 
மதுரையை அடைந்து சோமசுந்தரக் கடவுளை வணங்கினான். பிறகு, தான் கொணர்ந்த 
பொருள்கள் அனைத்தையும் யாவர்க்கும் வேண்டுவன வழங்கி மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான்.

வரகுண பாண்டியன் வரலாறு

    வரகுண பாண்டியன் சிறந்த சிவபக்தன். வேப்பம் பழங்களைச் சிவலிங்கம் எனக் கருதி 
வழிபட்டவன். தவளைகள் ஒலியை வேத பாராயணமாக எண்ணிப் பரிசில் வழங்கியவன்.
இடைமருதூர் கோவிலில் கிடந்த நாய்க்கூட்டத்தை தானே எடுத்துத் துப்புரவு செய்தவன்.            
இத்தகைய அன்பன் திருமணம் புரிந்து கொண்டான். மண அறையை விட்டு எழுந்ததும், 
தன் மனைவி மிக்க அழகியாக இருப்பதை எண்ணிச் சிறந்த பொருள்கள் சிவபெருமானுக்கு 
உரியன ஆயிற்றே, ஆதலால் இவளை மகாலிங்க மூர்த்தியினிடமே அனுப்பி விடுவோம் என்று         
எண்ணினான். திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றான். மகாலிங்க மூர்த்தியை ஏற்றுக்
கொள்ளும் வண்ணம் வேண்டினான். பெருமானும் தமது சிவலிங்கத் திருமேனியில் அவள் மறைய
இடம் தந்து கருணைபாலித்தார். அரசன் மகிழ்ந்து அரண்மனைக்குச் சென்றான். மறுநாள் 
விடியற்காலை, அருச்சகர் வழிபாட்டிற்காக வந்தபோது, சிவலிங்கத் திருமேனியில் பெண்ணின் 
வலக்கை மட்டும் தொங்கிக் கொண்டு இருந்ததைக் கண்டு அதிசயமுற்று, அரசனிடம் தெரிவித்தார். 
அரசனும் திருக்கோவில் சென்று, கண்டு, என்ன குறையோ என்று வருந்திக் கண்ணீர் சொரிந்தான். 
இறைவன் அசரீரியாக “திருமணக் காலத்தில் இக்கை உன்னால் தீண்டப்பெற்றது; மற்றும் 
அதனை விட்டு வைத்து உன் அன்பை உலகவர் உணர்ந்து ஈடேறவும் ' பெரிய அன்பின் வரகுண தேவன்' 
என உன்னைப் பாராட்டுவதற்காகவும் விட்டு வைத்தோம்"  என்று கூறி அருளினார்.

73. பதஞ்சலிக்கு அருளியது

    தாருகாவன முனிவர்களுடைய ஆணவத்தை அழித்து சிவபெருமான், அம்முனிவர்கள் 
ஏவிய முயலகன் மீது திருவடியை ஊன்றித் திருநடஞ்செய்த ஆனந்தக் காட்சியில் முழுகித்
திளைத்த ஆதிசேடன், மறுமுறையும் அவ்வருட் காட்சியைக் காணவேண்டும் என்ற தன் தணியா 
வேட்கையைத் திருமாலிடம் விண்ணப்பித்தான். அவ்விண்ணப்பத்திற்கு இரங்கித் திருமால்        
ஆதிசேடனுக்கு விடைகொடுத்தார். ஆதிசேடன், சுடர்மணிகள் இமைக்கும் தன் ஆயிரம் முடிகளுடனும் 
கயிலையில் வடபால் சென்று, சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இயற்றினான். இவன் 
கடுந்தவத்தைக் கலைக்கப் பிரமன் எதிர்வந்து பல நற்பேறுகளை வழங்கினான். ஆதிசேடனோ, 
எத்தேவரையும், எப்பேற்றையும் சிறிதும் பொருட்படுத்தாது, சிவபெருமானது ஆனந்தக் கூத்தைக் 
காண வேண்டும் என்ற ஒரே உறுதியில் நிலைபெற்றுக் கடுந்தவத்தை மேலும் மேலும் 
கடுமையாக்கி நின்றான். 

    அவன் உறுதியை வியந்த சிவபெருமான், பெண்ணொரு பாகனாக அண்ணல் ஆன்மீது 
தோன்றி ஆதிசேடனுக்குக் காட்சியளித்து "எவரும் கண்டு அஞ்சும் இப் பேருருவினை மாற்றிக் கொண்டு, 
தில்லைக்குச் சென்று, அங்கு புலிக்கால் முனிவன் அமைத்துள்ள துறவோர் இருக்கையுள் அமர்ந்து,
அங்கு நிலைபெற்றுள்ள சிவலிங்கத்தை புலிக்கால் முனிவனுடன் வழிபட்டு வருக; யாம் 
அத்திருப்பதிக்கண் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து 
அருட்செயல்களையும் இடைவிடாது இயற்றும் ஆனந்தக் கூத்தினை, யாவரும் காண 
அம்பலத்தில் ஆடி, நினக்கும் புலிக்கால் முனிவருக்கும், ஏனை அடியவர்களுக்கும்
அருள் செய்வோம்" எனத்திருவாய் மலர்ந்து மறைந்தார்.  அவ்வாறே ஆதிசேடனும் தன் 
பேருருவினையும் ஆயிரம் மணிமுடிகளையும் துறந்து பதஞ்சலி என்னும் நாமம் பூண்டு
சிவபெருமானது அடியானாகத் தில்லையை அடைந்து ஆனந்தக் கூத்தினைக் கண்டு            
பேரானந்தம் உறுவானாயினன்.

    மதுரையில் இறைவன் திருமணம் காணச்சென்ற பதஞ்சலி முனிவர், இறைவனது 
தில்லையம்பலத் திருக்கூத்தைக் கண்டு வணங்கியே உண்ணும் நியமம் உடையவராகையால்,
திருமண விருந்தில் உண்ணாது விடைபெற்றார். சிவபெருமான் அவருக்காக வேண்டித்
தில்லையில் ஆடும் திருக்கூத்தை வெள்ளியம்பலத்தில் ஆடித்திருவருள் செய்தார்.

74. பரிப்பாகன்

    50- ஆவது கதையைப் பார்க்க. 

75. பாண்டியற்குப் பரகதி அருளியது

    சிவபெருமான் தடாதகைப் பிராட்டியாரை மணந்து சுந்தர பாண்டியனாக வீற்றிருக்கும்போது,
பிராட்டியாரின் தாயாகிய காஞ்சனமாலை, கடலாடவேண்டும் என்று விரும்ப, பெருமான் ஒரு கடலன்றி 
எழுகடலையும் மதுரைக்கு வரவழைத்தார். கணவனோடு கடலாடுதலே தலைசிறந்தது என்பதை 
நன்குணர்ந்த காஞ்சனமாலையைத் தன் கணவன் இல்லாத குறை வருத்தியது. இஃதறிந்த எம்பெருமான், 
இந்திரனோடு ஒரு சேர தேவலோகத்தில் வீற்றிருந்த மலையத்துவச பாண்டியனை மதுரையம்பதிக்கு 
வருமாறு பணித்தனர். விண்சென்ற மலையத்துவசன் மீண்டும் மண்ணுலகில் வரக்கண்ட மக்கள் 
எல்லோரும் மகிழ்ந்தனர். காஞ்சனமாலையும் மங்கலக்கோலம் பூண்டு மலையத்துவசனோடு         
எழுகடலும் ஆடினாள். 

    கடலாடிய பின்னர் இறைவன் திருவருளால் பாசம் ஒழிந்தவர்களாய் அம்மையப்பரது 
திருஉருவமாகிய சிவசாரூப வடிவை மண்ணுலகம் எல்லாம் மகிழ்ந்து வணங்குமாறு பெற்று 
சிவலோகத்திலிருந்து இழிந்து வந்துள்ள ஒரு தெய்வ விமானத்தில் ஏறிவீற்றிருந்தனர். 
அவ்விமானம், இவர்களை ஏற்று, பூலோகத்தினின்றும் நீங்கி, இரவியும், மதியும் நிலவும் 
புவலோகத்தையும், இந்திரன் வாழும் சுவலோகத்தையும், இருடிகள் சித்தர்கள் வசிக்கும் 
மகலோகத்தையும், பிதிரர் முதலியோரது சனலோகத்தையும், சனகர் முதலியோர் தவம் செய்யும் 
தவலோகத்தையும், பிரமனது சத்தியலோகத்தையும், திருமாலுடைய வைகுந்தமாகிய 
நவ லோகத்தையும் கடந்து, சிவலோகத்தில் கொண்டு உய்த்தது. பாண்டியனும் அவன் மனைவியும்
எல்லா உலகங்களுக்கும் மேலாய சிவலோகம் சென்று சேர்ந்தனர். அங்கு அவர்கள் பேரின்பம் 
நுகர்ந்து கொண்டு வீற்றிருப்பாராயினர் . 

76. பாதகமே சோறு பற்றியது

 

    பொன்னிநதி பொய்யாதளிக்கும் புனல் நாட்டில் மண்ணி நதியின் தென்கரையில், 
சேய்ஞலூர் என்னும் மூதூர் உளது. அவ்வூரில், மறையோர்கள், செல்வச் சிறப்புடனும் அறு 
தொழிலின் மெய்ம்மை ஒழுக்கம் குன்றாமலும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் காசிபகோத்திர 
மரபில் எச்சதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன், சுற்றம் விரும்பும் பவித்திரை என்பாளை 
மணந்து, சிறப்புடன் இல்லறம் நடத்தி வந்தான். இவர்களுக்கு, நல்வினைப் பயனால் ஓர் ஆண்மகவு 
பிறந்தது. அம்மகவுக்கு விசாரசருமன் எனப் பெயரிட்டனர். அம்மகவும் முந்தை அறிவின் 
தொடர்ச்சியினால், தம்மரபிற்குரிய எல்லாக் கலைகளும் உரிய காலத்தே பயின்று அறிவு நிரம்பப் 
பெற்றது. ஆண்டு ஏழு நிரம்பியபின் பெற்றோர்கள் அவருக்கு உபநயனம் செய்து முடித்தனர். அவர்
பிறகலைகள் எல்லாம் பயின்றுவருநாளில் எல்லாக் கலைகட்கும் பொருளாய் இருப்பது இறைவன் 
கழலே என உணர்ந்து இறைவன்பால் ஆராத காதல் கொண்டு திகழ்ந்து வந்தார்.

    ஒருநாள் அவர், மாட்டுக் கிடையுடன் சென்றார். அப்போது மாடுமேய்க்கும் இடையனை, 
ஒரு பசு, தன் கொம்பால் குத்த அவன் அதனைக் கோல்கொண்டு அடித்தான். அதனைக் கண்டு 
வெகுண்டு ஆவின் பெருமையை ஆயற்கு எடுத்து உரைத்தார். இறைவன் திருமுடிமேல் ஆடி 
அருளுதற்கு திருமஞ்சனம் ஐந்தும் அளிப்பது ஆவே யாகும் என உணர்ந்தார், அங்கு நின்ற 
ஆயனை நோக்கி, "இனி நிரை மேய்ப்பொழிக நீ;  யானே இந்நிரை மேய்ப்பன்". என்றார், 
இடை மகனும் அஞ்சி நிரையை விட்டகன்றான். அவர் நாள்தோறும் நிரையை, புல் நிறைந்த
இடங்களில் மேய்த்து, தண்ணீர் ஊட்டி, நிழலில் அமரச் செய்து, பால் உதவும் காலத்து உடையோர் 
இல்லந்தோறும் உய்த்து வந்தார், முன்னையினும் நிரை பல்கி பால் அதிகம் சுரப்பதைக் கண்ட 
மறையாளர்கள் மனம் மகிழ்ந்தனர்.

    இவ்வாறு நிரை மேய்த்து வருங்கால் மண்ணி நதியில் ஆற்றிடைக் குறையில், 
ஓர் ஆத்தி மரத்தின் கீழ், சிவபெருமான் திருமேனி மணலால் ஆக்கி, சிவாலயமும் கோபுரமும் வகுத்து 
அமைத்தார். ஆத்தி மலரும் செழுந்தளிரும் கொய்து பூங்கூடையினில் கொணர்ந்து, குடம் நிறைய 
பசுக்களின் பாலைக் கறந்து தாம் ஆக்கிய இறைவன் திருமேனிக்கு திருமஞ்சனமாட்டி மலரால்
அருச்சித்து வந்தார். ஒரு நாள் இதனைக் கண்ட அயலான் ஒருவன் மறையவர்களிடம் சென்று
நடந்ததைக் கூறினான். அதுகேட்ட மறையோர்கள் சபைகூட்டி அச்சிறுவனின் தந்தையாகிய 
எச்சதத்தனை அழைத்து, "உன் மகன் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்களை எல்லாம் மேய்ப்பான் போல 
ஓட்டிச் சென்று பாலைக் கறந்து மணலில் உகுத்து வருகின்றான்" என்றார்கள். இதனை அறியாத 
எச்சதத்தன், “அவ்வாறு நடக்குமாயின் குற்றம் என்னுடையதே" என்று அச்சத்தோடு கூறினான். 
அன்றிரவு முழுதும் "நம் குடிக்குப் பழி வந்ததே" என்று கவன்று உறங்காதிருந்தான்.

    மறுநாள் மகன் ஆக்களை எல்லாம் ஓட்டிச் சென்ற பின் அவன் அறியாது சென்று மறைந்து 
இருந்து நடப்பனவற்றை எல்லாம் கண்டான். அச்சிறுவன் வழக்கம்போல் இறைவன் திருமேனியை
மணலால் அமைத்து மலரால் அருச்சனை செய்வதைக் கண்டு அம்மறையவன் வெகுண்டு,
தன் கையில் உள்ள தண்டால் தன் மகன் முதுகில் புடைத்தான். இவ்வாறு பலகாலும் அடிக்க 
அச்சிறுவன் திருமஞ்சனமாட்டும் ஆர்வத்தால் பொறுத்திருந்தான். அதுகண்டு தந்தையார் 
வெகுண்டு திருமஞ்சனக் குடப்பாலை காலால் இடறிச் சிந்தினார். 

    இதனைக் கண்ட சிறுவன், தன் தந்தை என்று அறிந்தும், அத்தந்தையின் தாள்கள் சிந்தும்படி 
மருங்கு கிடந்த கோலை எடுத்து எறிந்தான். அது மழுவாகி மறையவன் தாளைத் துணிக்க, மறையவனும் 
மண்மேல் வீழ்ந்தான். இதனை உணர்ந்த சிவபெருமான் வெளித்தோன்றி, "நம் பொருட்டால் தந்தை விழ 
எறிந்தாய்.  அடுத்த தாதை இனி உனக்கு நாம்" என்று கூறி, தொண்டர்கட்கு அதிபனாக்கி சண்டேசர் என்ற 
பதத்தைக் கொடுத்தருளினார்.  தேவர்கள் மலர்மாரி பொழிய கணநாதர் பாடி ஆட தாதை தாள் தடிந்த 
அம்மறைச் சிறுவர் சிவனார் மகன் ஆயினார்.

77. பாம்பை அணியாகக் கொண்டது

    கருடனும் பாம்பும் ஒரு தந்தையின் இரு மனைவியரின் மக்கள்;  இவர்களுக்குள் 
பல காரணங்களால் பகைமை ஏற்பட்டு கருடன் பாம்புகளைத் துன்புறுத்துவதாயிற்று; அவ்வாறு 
துன்புறுத்தப் பெற்ற பாம்புகள், கருடனுக்கு அஞ்சி, சிவபெருமானிடம் அடைக்கலம் புக்கன. அவர், 
அவற்றை அணிகளாக அணிந்துகொண்டார். பின்னர், தாருகாவன முனிவர் வேள்வியிலிருந்து 
தன்பால் சினந்து வந்த பாம்புகளையும் இவற்றோடு சேர்த்து அணியாகக் கொண்டார் . மலையரையன் 
மகளாரைத் திருமணம் செய்து கொள்ளச் சென்றபோது தான் கொண்ட மணமகன் கோலத்திற்கேற்ப
இப்பாம்புகளைத் தலைசிறந்த அணிகளாக மாற்றிச் சென்றார்.

78. பாலகனாகிய பரிசு

    35-ஆவது கதையைப் பார்க்க.

79. பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தது

    காமதேனு என்னும் தெய்வீகப் பசுவின் பாலை அருந்தி அதன் சுவையை நன்கு தெரிந்த
வியாக்கரபாத முனிவரின் குழந்தையாகிய உபமன்யு, சுவைமிக்க பால் வேண்டும் என்று 
சிவபெருமானை நோக்கி அழுதது. சிவபெருமான் பாற்கடலையே அவருக்கு அருளினார்.

80. பிட்டு அமுது செய்தருளியது
-----------------------------

    மாணிக்கவாசகர் வரலாறு பார்க்க.

81. பிறையை அணிந்தது

    தக்கனுக்குப் பல பெண்கள் பலகாலங்களில் பிறந்திருந்தார்கள்; அவர்களுள், ஒருகாலத்துத் 
தோன்றிய இருபத்தெழுவரைத் தக்கன், சந்திரனுக்கு மனைவியராக மணம் செய்து கொடுத்திருந்தான்; 
சந்திரன் இரு பெண்களிடம் மட்டும் மிகவும் காதலுடையவனாய், ஏனையோரைப் புறக்கணித்திருந்தான். 
தன் பெண்கள் எல்லோரையும் ஒரேபடியாக ஏற்று வாழாமல், இருவரிடம் மட்டும் பேரன்பும் ஏனையோர் 
அனைவரிடமும் புறக்கணிப்பும் கொண்டிருந்தமைக்குத் தக்கன் பொறாமல் சந்திரனுடைய கலைகள் 
அனைத்தும் தேய்ந்து ஒழியுமாறு வெகுண்டு உரைத்தான். அவ்வாறே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு 
கலையாகத் தேய்ந்தது; ஒரே ஒரு கலை மட்டும் எஞ்சியிருந்தது. சந்திரன் சிவபெருமானைப் புகல் அடைந்து 
வணங்கினான். தாழ்ந்தோரை உயர்த்தும் தாழ் சடையோன், ஒற்றைக்கலையனாக நின்ற சந்திரனைத்
தன் தலைக்கு அணியாக அணிந்தான். இறைவன் அருள் பெற்றவுடனே மீண்டும் கலைகள் வளரத் தொடங்கின. 
இங்கு குறிப்பிடுவது சிவபெருமான் தலையில் அணிந்த ஒரு கலையோடு நின்ற சந்திரனாகிய பிறை.

82. புலித்தோல் அணிந்தது

     33- ஆவது கதையைப் பார்க்க.

83. புலிமுலை புல்வாய்க்கு அருளியது

    தென்பாண்டி நாட்டில், ஒரு கடப்பங்காட்டில், ஒரு பெண்மான் கூட்டத்தை விட்டுத் தனியாகத் 
தங்கியிருந்தது. அது மேயும்போதும் தண்ணீர் குடிக்கும்போதும், தன் குட்டிகளைப் புதரில் மறைத்து 
வைத்துச் செல்லுவது வழக்கம்; ஒரு நாள், நீர்த்துறையில் தண்ணீர் குடிக்கும்போது, ஒரு வேடன் 
அந்தப் பெண்மானை அம்பால் எய்து கொன்றுவிட்டான்.  நெடுநாழிவரைத் தாய் மானிடம் பால் 
குடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த சிறு மான் குட்டிகள், தாயைக் காணாது உணவாகிய 
பால் பெறுதற்கு எவ்வித வழியும் இல்லாதனவாய் இடர்ப்பட்டன. கன்றுகளின் துன்பத்தைக் கண்ட 
சிவபெருமான், அக்காட்டிலிருந்த ஒரு பெண்புலியை அம் மான் கன்றுகளுக்குப் பால் கொடுக்கும்படிக் 
கட்டளையிட்டார்; அவ்வாறே அப்பெண்  புலியும் கன்றுகளுக்குப் பால் கொடுத்துப் பாதுகாத்து வளர்த்தது.

84.  மண்சுமந்து அருளியது

    மாணிக்கவாசகர் வரலாறு பார்க்க.

85. மலைமகளை ஒரு பாகம் வைத்தது

    இமயமலைத் தெய்வமாகிய மலையரசனின் தவத்துக்கு இரங்கி உமையம்மையார் அவன் 
மகளாகப் பிறந்தார். சிவபெருமானை நோக்கி நோன்பு நோற்று அப்பெருமானால் விதிப்படி மணம் 
செய்து கொள்ளப் பெற்று, உலகியல் இடையறாது நடைபெறும் வண்ணம் எப்போதும் அப்பெருமானுடைய 
இடப்பாகத்தில் வீற்றிருப்பாராயினார்.

86. முப்புரம் எரித்தது

    வானத்தில் பறக்கும் வலிமைபெற்ற பொன், வெள்ளி, இரும்புகளாலாகிய கோட்டைகளை 
உடையவர்களான மூன்று அரக்கர்கள் எப்போதும், தேவர்களுக்குப் பெருந்துயர் விளைத்து வந்தனர்.    
தேவர்கள் எல்லோரும் தேராகவும் தேரின் பகுதிகளாகவும், படைக்கலமாகவும், படைக்கலப்        
பகுதிகளாகவும் மாறி, சிவபெருமானைத் தேரில் வீற்றருளச் செய்து அந்த அசுரர்களுடன்
போருக்குப் புறப்பட்டனர். அசுரர்கள் எதிர்ப்பட்ட அளவில், தேவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் 
தங்கள் தனிப்பட்ட வலியினாலும், அனைவரும் ஒன்று சேர்ந்துள்ள ஆற்றலினாலும் முப்புர அசுரர்கள் 
வீழ்ச்சியடைவார்கள் எனத் தருக்கி நின்றார்கள். இது உணர்ந்த சிவபெருமான்                 
புன்னகை பூத்தார்; முப்புரங்களும் எரிந்து ஒழிந்தன.

87. யானைக்கு அருள் செய்தது

    3-ஆவது கதையைப் பார்க்க.

88. யானைத்தோல் போர்த்தது

    2-ஆவது கதையைப் பார்க்க.

89. மண்டோதரிக்கு அருளியது

    25-ஆவது கதையைப் பார்க்க.

90. வீரபத்திரரால் தேவர்கள் புண்பட்டது

    60-ஆவது கதையைப் பார்க்க.

91.  தாருகாவனத்தில் பிட்சாடனர்

    33- ஆவது கதையைப் பார்க்க.

92. வேடுவன் ஆனது

    45- ஆவது கதையைப் பார்க்க.

93 . வேலம்புத்தூரில் விட்டேறு அருளியது

    தமிழின் இனிமையை இடைவிடாது துய்ப்பதற்காக ஒரு காலத்து, தமர நீர்ப் புவனம் முழுதும் 
ஒருங்கு ஈன்ற அன்னை, தடாதகைப் பிராட்டி என்ற பெயருடனும், தனி முதலாகிய சிவபெருமான் 
சௌந்திரபாண்டியன் என்ற பெயருடனும், குமரவேள், உக்கிர குமார பாண்டியன் என்ற பெயருடனும், 
தென்பாண்டி நாட்டுத் திருவாலவாயில் தென்னவர் குல முன்னவராய்த் தோன்றியருளி ஆட்சி செய்தனர். 
அக்காலத்தில், வேலம்புத்தூர் என்ற ஊரில், சிவபெருமான் உக்கிரகுமாருக்கு, வேல், வளை, செண்டு 
என்னும் படைக்கலங்களைக் கொடுத்தருளினர். தாய் தந்தை தனயன் மூவரும் தமிழ்ச்சுவையைப் பருகித் 
தமிழ் நாட்டைக் காத்துத் தெய்வத் திருப்பதியாய்த் திகழ்வித்து அருளினர்.

                
                திருச்சிற்றம்பலம்

Related Content