logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

puranam-panri-kombu-anindhadhu

புராணம் - ஏனமுளைக்கோடு (பன்றிக்கொம்பு) அணிந்தது

(வராஹ சம்ஹார மூர்த்தி )

    முன்னொரு காலத்தில் இரணியாட்சன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் தேவர்களுக்குச் சொல்லொணாத் துன்பம் அளித்து வந்தான். ஒரு நாள் அவன் இப்பூவுலகினைத் தனது வயிற்றில் மறைத்து வைத்துக் கொண்டு பாதாளத்திற்குச் சென்றான். அது கண்டு உலகெல்லாம் நடுங்கின. தேவர்கள் பயந்தனர். உடனே திருமால் பிரம தேவனின் மூக்கில் ஒரு பன்றியாகத் தோன்றினார். மிக்க ஆரவாரத்தோடு வளர்ந்து, விரைவில் பாதாளத்துக்குச் சென்றார். ஆண்டு இருந்த இரணியாட்சனைத் தமது கொம்பினால் குத்திக் கொன்றார். நில உலகம் பழையபடி சரியாக நிற்குமாறு செய்தார்.

    இச்செயலைச் செய்த திருமால் மிக்க கர்வங்கொண்டார். "தாமே பரம்பொருள்' என்று எண்ணி மயங்கினார். அறிவிழந்து, பூமியைத் தமது கொம்பினால் கிண்டி, கடலை உடைத்தார். இதனைக் கண்ட சிவபெருமான் திருமாலின்  அகந்தையினை அடக்க எண்ணினார். உடனே அவர் அங்கு வந்து திருமாலாகிய பன்றியின் ஒரு கொம்பினைத் தமது திருக்கரத்தினால் பிடுங்கினார். உடனே திருமாலுக்குத் தன் உண்மை உணர்வு ஏற்பட்டது. தனது பழைய உருவங் கொண்டு, சிவபிரானைத் துதித்து வணங்கினார். உடனே பிரானார் மறைந்தார். இவ்வாறு திருமாலிடம் பிடுங்கிய பன்றிக் கொம்பினையே அவரது பிரார்த்தனையின்படியே சிவபிரான் அணிந்து கொண்டார். இவ்வரலாறுகள் யாவும் ஸ்காந்த மஹாபுராணம், சங்கரஸம்ஹிதை, சிவரஹஸ்ய கண்டம், தக்ஷகாண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
 

Related Content

வராஹஸம்ஹார மூர்த்தி