logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

puranam-mandaiyottai-endhiyadhu-bhairavar

புராணம் - மண்டையோட்டை ஏந்தியது (பைரவர்)

(பைரவ மூர்த்தி)

     இனி 'வற்றலோடு கலனாப்பலி தேர்ந்து' என்பதிலுள்ள  வரலாற்றினைப் பார்ப்போம். முன்னொரு சமயம் பிரம்ம தேவனும் திருமாலும் மேருமலையில் இருந்தபோது, முனிவர்கள் அங்கு வந்து வணங்கி, "மும்மூர்த்திகளில் முதன்மையானவரும், உயிர்க்குயிரானவரும் அநாதியாயுமுள்ளவர் யார்?" என வினவினர். அப்போது பெருமானின் மாயவலையில் அகப்பட்ட பிரமதேவன், 'நானே பரம்பொருள்" என்று உரைத்தான். அப்போது திருமால், நானே உன்னைத் தோன்றச் செய்தேன். ஆதலால் நானே உன்னைவிட உயர்ந்தவன் பரம்பொருள் என்று உரைத்தார். அதனால் இருவரும் கோபங்கொண்டு தம்முள் தர்க்கம் புரிந்தனர். அது கண்ட முனிவர்கள், ( "இது நம்மால் உண்டாகியது" எனக் கருதி அவ்விடம் விட்டு நீங்கினர். திருமாலும் பிரம தேவனும் மேலும் போர் செய்தனர். அப்போது வேதமும் பிரணவமும் வேற்றுருவுடன் அங்கு வந்து, "சிவபெருமானே பரம்பொருள்; நீங்கள் புரியும் வாதங்களை விலக்குவீராக" என்று கூறின. அதனை மதியாமல் அவர்கள் மேலும் போர் புரிந்தனர். அப்போது பெருமான் அவர்களது போரினை நிறுத்தத் திருவுளங்கொண்டு, சோதிவடிவாய் அங்கே தோன்றினார். அது கண்ட பிரமனும் திருமாலும் 'இச்சோதி யாது?' என மயங்கினர். அப்போது உமாதேவியாரோடு சிவபெருமான் அச்சோதியில் தோன்ற அது கண்டு திருமால் எம்பெருமான் தோன்றியுள்ளார் என்று உணர்ந்து மயக்கம் நீங்கி அவரை வணங்கிப் போற்றினார். ஆனால் பிரம்ம தேவரோவெனில் மயக்கம் நீங்கப் பெறாமல் சிவபெருமானைத் தனது உச்சியிலுள்ள ஐந்தாவது தலையின் வாயினால் அவரை இகழ்ந்து பேசினான்.

    பிரம்மதேவரின் ஆணவத்தையும் தேவர் முனிவர் ஆகியோரின் இறுமாப்பையும் நீக்கத் திருவுளங்கொண்ட பெருமான் வைரவக் கடவுளைப் படைத்தார். நீலநிற மேனியும், திருவடியில் 
சிலம்புகள் ஒலிக்கவும், திருக்கைகளில் சூலமும், மழுவும், பாசமும், உடுக்கையும் ஏந்தி, கோரைப் பற்களும், மூன்று திருக்கண்களும், சடையும் கொண்டுத் தோன்றிய வைரவக்கடவுளை நோக்கிப் பெருமான் பின்வருமாறு கூறினார்.

    "பிரம்மதேவன் உச்சித்தலையால் நம்மை இகழ்ந்தான். அதனைக் கிள்ளிக் கையில் ஏந்தி அவனுக்கு உயிரைக் கொடுப்பாயாக. தற்புகழ்ச்சி கொள்ளும் முனிவர்கள், தேவர்கள் ஆகியோரின் இரத்தத்தைப் பிச்சை ஏற்பாயாக. பின் அவர்கட்கு உயிரைக் கொடுத்து, கர்வத்தை அடக்கி விட்டுப் பின்னர் வைரவ புவனபதத்தில் இருந்து கொண்டு தேவர், முனிவர் ஆகியோரின் துன்பத்தைப் போக்குவாயாக!" என்றருளிச் செய்து மறைந்தருளினார். சோதியும் மறைந்தது. திருமாலும் தம் வைகுண்டம் அடைந்தார்.

    வைரவக்கடவுள் பிரமரின் உச்சியிலுள்ள ஐந்தாவது தலையைக் கிள்ளினார்.  அப்போது இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர, பிரம்மதேவன் கீழே வீழ்ந்து இறந்தார், வைரவக் கடவுள் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து பிரமதேவனுக்கு மீண்டும் உயிரைக் கொடுத்தார் . (அது முதல் பிரம்மனுக்கு நான்முகன் என்ற பெயர் ஏற்பட்டது) உயிர்பெற்று எழுந்த நான்முகன் 
நல்லுணர்வு கொண்டு வைரவக் கடவுளை வணங்கி "பெருமானே! நான் சிவபெருமானுக்கு பெருங் குற்றங்கள் பல புரிந்தேன்; அதன் பயனையும் அடைந்தேன். பெருமானை இகழ்ந்து 
பேசிய என் உச்சித்தலை தூய்மை பெறவும், அதனைப் பார்க்கும் போதெல்லாம் அடியேனின் மாயை நீங்கவும் இதனைத் தேவரீர் உமது திருக்கையினில் ஏந்தி அருள் புரிக!" என்று கூறித் 
துதித்தார். வைரவக்கடவுளும் அவ்வாறே அருள் புரிந்தார்.

    மீண்டும் வைரவக்கடவுள் காலவேகன், அக்னிமுகன், சோமகன், ஆலகாலன், அதிபலன் ஆகிய பல பூதசேனைகளைப் படைத்தார். பூதகணங்கள் தம்மைப் புடை சூழ்ந்து வர,கர்வம் கொண்ட முனிவர்கள் வாழும் இடங்களும், பின் தேவர்கள் வாழுமிடமும் சென்று, அவர்கள் உடலின் இரத்தத்தைப் பிச்சையாக ஏற்றுப் பின்னர் அவர்களை உயிர்ப்பித்தருளினார். பின்னர் 
வைரவக்கடவுள் திருமால் வாழும் வைகுண்டம் அடைந்தார். விஷ்வக்சேனன் என்ற திருமாலின் காவலன் பூதகணங்களைத் தடுத்துப் போரிட, வைரவக்கடவுள் அவனைத் தம் சூலத்தில் கோத்து, உள்ளே சென்றார். 

    திருமால் தன் தேவிமார்களுடன் வந்து வரவேற்று வணங்கி உபசரித்து, "தேவரீர் இங்கு எழுந்தருளியது யாது காரணம் பற்றியோ ?" என வினவினார். வைரவக்கடவுள், இரத்த பிட்சைக்கு 
வந்தோம். உன் தலையில் உள்ள இரத்தத்தைக் கொடுப்பாயாக! என்றார், அங்ஙனமே திருமால் தன் நெற்றி நரம்பைக்கீறி, அதனால் வெளிப்பட்ட இரத்தத்தைப் பிக்ஷாபாத்திரத்தில் சொரிந்தார். இவ்வாறு பதினாயிரம் ஆண்டு இரத்தத்தைச் சொரிந்தாராயினும் பிரமகபாலம் நிறையாதது கண்டு தம் வலிமை இழந்து கீழே வீழ்ந்தார். அது கண்ட திருமாலின் தேவியர் வைரவக்கடவுளை வணங்கித் திருமாலை உயிர்ப்பிக்குமாறு வேண்டித் துதிக்க, வைரவக் கடவுளும் திருமாலுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அருள் புரிந்தார். பின்னர் திருமால் விஷ்வக்சேனனையும் உயிர்ப்பிக்குமாறு வேண்ட, அவ்வாறே செய்து, பின் தன் புவனத்தை அடைந்து வீற்றிருந்தார். 

    இம்மாதிரி நான்முகனின் மண்டையோட்டில் இரத்த பிட்சை ஏற்றது வைரவக்கடவுளேயாயினும், அவர் அறுபத்தி நான்கு சிவமூர்த்தங்களுள் ஒன்றாகையால் சிவபெருமானே அம்மாதிரி மண்டையோட்டில் பலி ஏற்றதாகக் கூறுவது வழக்கம்.
 

Related Content

பைரவ மூர்த்தி

ஆபதோத்தாரண மூர்த்தி

வடுக மூர்த்தி

க்ஷேத்திரபாலக மூர்த்தி

ப்ரம்மசிரச்சேத மூர்த்தி