logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

puranam-iraivan-mathi-chudiyathu-chandrashekarar

புராணம் - இறைவன் மதிசூடியது  (சந்திரசேகரர்)

(சந்திரசேகரர்)


    பிரமதேவனுடைய புத்திரர்களில் மிகவும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவன் தக்ஷன். அவன் தந்தையிடமிருந்து சிவபெருமானே முழுமுதற் கடவுள் என ஐயம் திரிபற உபதேசிக்கப் பெற்று அவரைத் தவத்தினால் திருப்தி செய்து எல்லாத் தேவர்களுக்கும் தலைமையையும், ஸகல உலகங்களுக்கும் ஆதிபத்யமும், தான் சிவபெருமானைத்தவிர வேறு எவரையும் வணங்காமையும், சிவபிரானைப் போற்றும் அனைவரும் தன்னையும் வணங்கல் வேண்டும் என எல்லையிலாப் பெரும் வரங்கள் பெற்றான். மேலும் இறைவனின் இடம்பிரியாத் தேவி தனது பெண்ணாகத் தோன்றவும் இறைவன் அவளை மணந்து தனக்கு மருகனாக வேண்டுமெனவும் வரம்  பெற்றான்.

    பின்னர் தக்ஷன் தக்ஷமாபுரி என்னும் நகரினை அமைத்துக்கொண்டு அங்கு தேவர்களையெல்லாம் ஏவல்கொண்டு முடி சூட்டிக் கொண்டு மகிழ்ந்தான். வேதவல்லி என்பாளை மணந்து கொண்டு ஆயிரம் புதல்வர்களைப் பெற்றான். இவர்களனைவரும் நாரதர் சொற்படி படைப்புத் தொழிலை வெறுத்துத் தவம்புரிந்து முத்திப்பேறு அடைந்தனர். மறுபடியும் தக்ஷன் ஆயிரம் புதல்வர்களைப் பெற்றான். அவர்களும் அங்ஙனமே நாரதன் சொற்படி நடந்து முத்தியடைந்தனர். பின்னர் தக்ஷன் கோபங்கொண்டு நாரதரைச் சபித்து விட்டு, இனிமேல் புத்திரர்களைப் பெறாது பெண்களைப் பெறுவேன் என்று இருபத்திமூன்று பெண்களைப் பெற்றான்.  அவர்களில் முதல் பதின்மூன்று பெண்களை தருமராஜனுக்கும், மற்றைய பத்து பெண்களை முறையே பிருகு,மரீசி,புலஸ்தியர், அங்கிரஸ், புலகர், வசிட்டர், அத்திரி, அக்கினி, கிரது,பிதரா ஆகியோருக்கும் மணம் புரிவித்தான்.

    மீண்டும் தக்ஷன் அசுவனி முதல் ரேவதி வரையுள்ள மின்னும் நக்ஷத்திரக் கூட்டத்து இருபத்தேழு பெண்களைப் பெற்றெடுத்தான், அவர்களைச் சந்திரனுக்குத் திருமணம் செய்து  கொடுத்தான். தன்பெண்களைச் சந்திரனோடு கூட்டியனுப்பும்போது அவர்கள் இருபத்தேழு பேரிடத்தும் ஒரே விதமான அன்பு வைத்து நடத்தவேண்டும் என்று கூறி அனுப்பினான். சிலகாலம் சென்றபின் சந்திரன் அவ்விருபத்தேழுபெண்களில் பேரழகோடு மின்னிப் பொலிந்த கார்த்திகை, ரோகிணி ஆகியோரைப் பெரிதும் காதலித்து மற்றைய மனைவியரை வெறுத்துத் திரிந்தான். மற்றப் பெண்கள் அதனால் வருந்தித் தமது தந்தையிடம் முறையிட அவனும் கோபித்துச் சந்திரனுடைய கலைகள் தேய்ந்து பொலிவழிந்து போகுமாறு கடுஞ்சாபம் கூறினான்.

    பொய் பேசுபவனுடைய புகழ் குறைவது போலச் சந்திரனின் கலைகள் தக்ஷனின் சாபத்தால் தினம் ஒன்றாகக் குறைந்து வந்தன. பதினைந்து நாட்கள் கழிந்ததும் ஒருகலை மட்டும் எஞ்சியது. தனது நண்பனான இந்திரனையடைந்து இதற்குத் தீர்வு காணும் வழியை வேண்டினான். இந்திரனும் பிரமதேவனைச் சரணடைந்து அவரால் சாபத்தினின்றும் விடுதலை பெற ஆலோசனை கூறினான். பிரமதேவனையண்டிய போது அவரும் இது தம்மால் ஆகாத காரியமாகையால் மஹேச்வரரைச் சரணமடைந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று கூறி விட்டார். 

    சந்திரனும் கைலாயமடைந்து சிவபெருமானைப் பணிந்து  துதித்தான். பார்வதிபதியான மஹேச்வரர் சந்திரன் நிலைக்கு இரங்கி அவனுக்கு அஞ்சேல் என அபயமளித்து மீதமாய் உள்ள ஒரு கலையினைத் தமது திருமுடியில் ஆபரணமாகத் தரித்துக் கொண்டார். "ஓ சந்திரா! என்னுடைய தலையில் தரித்துக் கொள்ளப்பட்டதால் இவ்வொரு கலைமட்டும் என்றும் அழியாது. மற்றைய பதினைந்து கலைகளும் தினமும் ஒன்றாக  உன்னை வந்தடையும். பிறகு தினமும் ஒன்றாகத் தேய்ந்து கடைசியில் ஒருகலைமட்டும் மிஞ்சும். இவ்வாறே எக்காலமும் நிகழும்" என அருளிச் செய்தார். சங்கரனின் திருவருள் பெற்ற சந்திரன் முன்போல் அழகுடன் வானுலகில் சஞ்சரித்து வந்தான். அவனுடைய கலைகள் ஒரு நாளைக்கு  ஒன்றாக வளர்வதும், அதே முறையில் தேய்வதுமாக இருந்தன.

    எவராலும் காக்கப்பட முடியாத நிலையில் இருந்த சந்திரன் மீது கருணை கொண்டார், அக்கருணையைச் செயலிலும் காட்டி அவனை இரக்ஷித்தார் பரமேச்வரன். எனவே இந்த வரலாறு இறைவனது பெருங்கருணையையும்,பேராற்றலையும் காட்டுகிறது. இங்ஙனம் சந்திரனின் 
ஒரு கலையினைத் தரித்துக் கொண்ட காரணத்தினால் பிரபுவான பரமேச்வரர் சந்திரசேகரன்,  சந்திரமவுளி, ராஜசேகரன் (ராஜா என்னும் சொல் சந்திரனையும் குறிக்கும்), சசிகண்ட மவுளியன், 
சசிதரன், மதிசூடி, பிறையணிந்த பெருமான், பிறைசூடி எனப் பற்பல பெயர்களைப் பெற்றார். 
இப்பெயர்களின் விரிவையெல்லாம் திருமுறைப் பதிகங்களிலும் மற்றைய அருளாசிரியர்களின் தோத்திரப் பாடல்களிலும் காணலாம்.

Related Content