நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க!! விழியொளி பெற வேண்டிப் பாடும் பதிகம் வன்றொண்டர் சுந்தரர் சாரூப முக்தியெனும் சஹமார்க்கத்தைச் சுட்ட வந்த திருஅவதாரம். மீண்டுவாரா சன்மார்க்கமெனும் பரமுக்திக்கு முந்தைய சஹமார்க்கத்தில் யோகமும் உண்டு; போகமும் உண்டு. போகத்தின் உச்சத்தையும் உணர்த்தும் பொருட்டு அவருடன் கயிலையிலிருந்து இறங்கி வந்தவரே அவர்தம் துணைவியரான பரவையாரும், சங்கிலியாரும். தம்பிரான் தோழரென்று வழங்கப் பட்டாலும் இந்த இரண்டு பெண்டிரிடை அலைக்கழித்து இறுதியில், 'வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம், பாழ்போவது பிறவிக்கடல்' (78-1) என்று அவரை நிலையா உலகவாழ்வை உணர்த்தி ஆட்கொள்ளும்வரை இறைவன் அவருக்கு வைத்த சோதனைகள் பல. அதில் ஒரு சோதனையைப் பார்ப்போம். திருவொற்றியூரில் சங்கிலியாரைப் பிரிந்து போகேன் என்று திருமுன்னிலையில் சத்தியம் செய்து கொடுத்த சில நாள்களிலேயே ஆரூருக்குத் திரும்பும் அவா வந்து விட்டது சுந்தரருக்கு. சங்கிலியாருக்குக் கொடுத்த வாக்கை மீறி ஊரெல்லையைக் கடந்தவுடன் அவருக்குப் பார்வை பறிபோய் விட்டது. அழுது புலம்பிய வண்ணம் வடதிருமுல்லைவாயில் பதி தொழுது வன்பாக்கத்தில் இறையருளால் ஊன்றுகோல் பெற்று, ஆலங்காடு வழியே காமக்கோட்டத்து (காஞ்சி மாநகர்) கச்சி ஏகம்பனைச் சென்றடைகிறார். கண்பார்வை மீண்டும் பெறவேண்டி அத்தலத்தில் எழுந்ததே இப்பதிகம் - ஆலந் தானுகந் தமுதுசெய்
அருட்பதிகம் இதைப்பாட திருவருளால் இடதுகண்ணில் பார்வை பெறுகிறார் சுந்தரர். காஞ்சி காமக்கண்ணியார் ஆளும் தலமல்லவா? அவள் ஆளும் இடப்புறத்தில் அவளருளால் முதலில் ஒளிபெற வலதுகண்ணிலும் பார்வை திரும்புவது ஆருர் சென்றடைந்தபின். கண்பார்வைக்குறை கொண்ட அன்பரெல்லாம் இந்தப் பதிகத்தை நாளும் ஓதி நலம் பெறலாம். திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்