logo

|

Home >

prayers-for-specific-ailments >

for-success-in-love-and-to-get-married

For Success in Love & To Get Married

தடைபடும் திருமணம் விரைவில் நடைபெற ஆண் பெண் இருபாலரும் ஓத வேண்டிய திருப்பதிகம்

காதல் வெல்ல ஒரு பதிகம்: ஞானசம்பந்தப் பெருமான் திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டரைச் சந்தித்துவிட்டு வரும் வழியில் திருமருகல் என்ற தலத்தில் நிகழ்த்திய அற்புதமிது. அதிகாலைப் போதில் திருமருகல் மாணிக்கவண்ணர் கழல் தொழ தொண்டர் கூட்டத்துடன் ஆலயம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார் ஆளுடைப் பிள்ளையார். ஆலயத்தை அடுத்திருந்த தங்குமடமொன்றில் இளம்பெண்ணொருத்தி ஓலமிட்டழுவதையும், அவளருகே வாலிபன் ஒருவன் உயிரற்று விழுந்து கிடப்பதையும் கண்டிரங்கி நிற்கிறார். அஞ்சேல் என்று அபயக்கரமுயர்த்த அழுகையினூடே அப்பெண் தம் கதையைச் சொல்கிறார்: "ஐயன்மீர், நாங்கள் வைப்பூர் என்னும் ஊரை சேர்ந்தவர். அவ்வூர் வணிகர்தலைவரான தாமன் என்பவர் என் தந்தையார். அவருக்கு என்னுடன் எழுவர் மகளிர். இதோ விழுந்து கிடக்கிறாரே இவரென் மாமன் மகன்தான். என் மூத்த தமக்கையாருக்கு இவரை மணம்முடிக்க வாக்குக் கொடுத்திருந்தார் என் தந்தையார். ஆயினும் எக்காரணம் கொண்டோ  என் உடன்பிறந்தோர் அனைவரையும் வேறிடத்தில் மணம்முடிக்க, நானிவர் நிலைகண்டு மாமன்மகன் மேல் கொண்ட காதலினால் மணந்தால் இவரையே மணப்பேன் என்று உறுதிபூண்டு வீட்டை விட்டுத் தனியளாய்ப் புறப்பட்டு நேற்றிரவு திருமருகல் வந்து சேர்ந்தோம். வந்த இடத்தில் எங்கிருந்தோ திடீரென அரவமொன்று தீண்ட பிணமாகி விழுந்து கிடக்கிறார் என் காதலன். என் செய்வேன் யானினி! என் சிவபெருமானே! என் சுற்றத்தார் போல் பரிவுடன் நிற்கும் அடியோரே! என் செய்வேன் யானினி!" - என்று கதறி அழுகிறார் அப்பெண். பொறுக்குமா அருளாளருக்கு? சேக்கிழார் பெருமான் பாடக் கேட்போம்: சடையானை எவ்வுயிர்க்குந் தாயா னானைச் சங்கரனைச் சசிகண்ட மவுலி யானை, விடையானை வேதியனை வெண்ணீற் றானை விரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற படையானைப் பங்கயத்து மேவி னானும் பாம்பணையில் துயின்றானும் பரவுங் கோலம் உடையானை 'உடையானே தகுமோ யிந்த ஒள்ளிழையாள் உள்மெலிவு' என்றெடுத்துப் பாட பொங்குவிடந் தீர்ந்தெழுந்து நின்றான்; சூழ்ந்த பொருவில்திருத் தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப, அங்கையினை உச்சியின்மேற் குவித்துக் கொண்டங் கருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த நங்கைஅவள் தனைநயந்த நம்பி யொடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம், மங்குல்தழழ் சோலைமலி புகலிவேந்தர் மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார். 'உடையாய் தகுமோயிவள் உள்மெலிவே' என்று உளம்நெகிழப் பதிகம் பாட விடம்தீர்ந்தெழுகிறான் காதலன்.      

முழுப்பதிகம் - சடையா யெனுமால்      

திருச்சிற்றம்பலம்

 

Related Content