பன்னிரு திருமுறைகளில் பல இடங்களில் முருகன் பற்றிய குறிப்பு உள்ளது. அவைகளின் தொகுப்பு இங்கு தரப்படுகிறது.
அருகரொடு புத்தரவ
ரறியாவரன் மலையான்
மருகன்வரும் இடபக்கொடி
யுடையானிடம் மலரார்
கருகுகுழல் மடவார்கடி
குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர்
முதுகுன்றடை வோமே. 1.012.10
சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்
தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே. 1.048.11
தழைமயி லேறவன் தாதையோதான்
மழைபொதி சடையவன் மன்னுகாதிற்
குழையது விலங்கிய கோலமார்பின்
இழையவன் இராமன தீச்சரமே. 1.115.3
நெருப்புரு வெள்விடை மேனியர்
ஏறுவர் நெற்றியின்கண்
மருப்புறு வன்கண்ணர் தாதையைக்
காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை
யார்விறன் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத் தென்புற
வத்தணி புண்ணியரே. 1.117.8
காயச் செவ்விக் காமற்
காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற்
பதித்த பரமேட்டி
மாயச் சூர்அன் றறுத்த
மைந்தன் தாதைதன்
மீயச் சூரே தொழுது
வினையை வீட்டுமே. 2.062.1
வள்ளி முலைதோய் குமரன்
தாதை வான்தோயும்
வெள்ளி மலைபோல் விடையொன்
றுடையான் மேவுமூர்
தெள்ளி வருநீர் அரிசில்
தென்பாற் சிறைவண்டும்
புள்ளும் மலிபூம் பொய்கை
சூழ்ந்த புத்தூரே. 2.063.6
விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம் புகலிவெங்
குருமேற் சோலை
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்வண்
புறவ மண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் கொச்சைகழு
மலமென் றின்ன
இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் பகையெறிவித்
திறைவ னூரே. 2.073.1
காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் கழுமலமாத்
தோணிபுரஞ் சீர்
ஏய்ந்தவெங் குருபுகலி யிந்திரனூர் இருங்கமலத்
தயனூர் இன்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் தராய்கொச்சை
காழி சண்பை
சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம் பகைகெடுத்தோன்
திகழு மூரே. 2.074.6
இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை
யெதிர்நாணி பூண வரையில்
கடும்அயி லம்புகோத்து எயில்3 செற்றுகந்து
அமரர்க் களித்த தலைவன்
மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர்
மனநின்ற மைந்தன் மருவும்
நடமயி லாலநீடு குயில்கூவு சோலை
நறையூரின் நம்ப னவனே. 2.087.2
ஊறினார் ஓசையுள்
ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங்
குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத்
தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந்
தென்குடித் திட்டையே. 3.035.6
பகலொளிசெய் நகமணியை முகைமலரை
நிகழ்சரண வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய்
முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையில்அறு முகஇறையை
மிகஅருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிக
ழலர்பெருகு புகலிநகரே. 3.067.3
உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே
கனல்விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பதும் உன்பணியே
அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே
பிரம புரத்தை யுகந்தனையே. 3.113.1
ஆறுகொ லாமவர்
அங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர்
தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர்
தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை
யாக்கின தாமே. 4.018.6
மாலன மாயன் றன்னை
மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார்
பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் தாதை
இலங்குமேற் றளிய னாரே. 4.043.2
செல்வியைப் பாகங் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்
இலங்குமேற் றளிய னாரே. 4.043.8
குறவிதோள் மணந்த செல்வக்
குமரவேள் தாதை யென்று
நறவிள நறுமென் கூந்தல்
நங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப்
பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி
உணருமா றுணர்த்து வேனே. 4.060.3
உடம்பெனு மனைய கத்துள்
உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி
உயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால்
எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை
கழலடி காண லாமே. 4.075.4
ஆரட்ட தேனும் இரந்துண்
டகமக வன்றிரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்ற
தால்விரி நீர்ப்பரவைச்
சூரட்ட வேலவன் தாதையைச்
சூழ்வய லாரதிகை
வீரட்டத் தானை விரும்பா
வரும்பாவ வேதனையே. 4.104.5
முன்னை யார்மயி
லூர்தி முருகவேள்
தன்னை யாரெனிற்
றானோர் தலைமகன்
என்னை யாளும்
இறையவ னெம்பிரான்
பின்னை யாரவர்
பேரெயி லாளரே. 5.016.7
நங்க டம்பனைப்
பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத்
திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி
யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி
செய்து கிடப்பதே. 5.019.9
சமர சூரபன்
மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற்
கோழம்ப மேவிய
அமரர் கோவினுக்
கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம
தாளுடை யார்களே. 5.064.10
நார ணன்னொடு
நான்முகன் இந்திரன்
வார ணன்கும
ரன்வணங் குங்கழற்
பூர ணன்திருப்
பூவனூர் மேவிய
கார ணன்னெனை
யாளுடைக் காளையே. 5.65.10
அடும்புங் கொன்றையும்
வன்னியும் மத்தமுந்
துடும்பல் செய்சடைத்
தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை
கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர்
உறுதுணை யாகுமே. 5.084.6
வெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை
வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னைப்
புள்ளி வரிநாகம் பூண்டான் றன்னைப்
பொன்பிதிர்ந் தன்ன சடையான் றன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் றன்னை
வாரா வுலகருள வல்லான் றன்னை
எள்க இடுபிச்சை ஏற்பான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6.003.2
முக்கணா போற்றி முதல்வா போற்றி
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்டத் தீசா போற்றி. 6.005.10
அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 6.006.1
கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்
குமரனும் விக்கின விநாய கனும்
பூவாய பீடத்து மேல யனும்
பூமி யளந்தானும் போற்றி சைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி யாடிப்
பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.10
படைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும்
பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும்
உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்று
மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 6.018.4
கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர்பிறைமுடிமேற் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே. 6.023.4
மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென்றெண்ணி
வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை
கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான்
அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப
அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6.042.6
சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்
நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்
நாரணனை இடப்பாகத் தடைத்தார் போலுங்
குமரனையும் மகனாக வுடையார் போலுங்
குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்
அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.053.2
முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 6.65.9
தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்
கயிலாய நாதனையே காண லாமே. 6.070.1
தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்
தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக்
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்
கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை
அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.074.7
காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்
கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்
சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்
பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 6.075.7
கோழிக் கொடியோன்றன் தாதை போலுங்
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வருந் தாமே போலும்
உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும்
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்
அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்குந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. 6.089.2
திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்
திரைகள் வந்து புரள வீசுங்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோற் றட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் தளியு ளீரே. 7.5.2
பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது
பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்
கரும்புவிலின் மலர்வாளிக் காமனுடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன் கருதுமூர் வினவில்
இரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம்
இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்தென் கரைமேற்
கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே. 7.016.9
சேந்தர்தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும்
உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக்
கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள்
சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி
வாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கி
மறிகடலை இடங்கொள்வான் மலையாரம் வாரி
ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 7.038.5
பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை
பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்
சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி
அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமான்
உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 7.038.8
மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
எண்ணிலியுண் பெருவயிறன் கணபதியொன் றறியான்
எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்வீர்
திண்ணெனவென் உடல்விருத்தி தாரீரே யாகில்
திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 7.46.9
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.049.1
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளு மிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.049.2
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
பாவ மொன் றறியார்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங்
கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.049.3
பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்
கட்டி வெட்டன ராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாடொறுங்
கூறை கொள்ளு மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.049.4
தயங்கு தோலை உடுத்த சங்கரா
சாம வேத மோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறி யீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன்
பூண்டி மாநகர் வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.049.5
விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்த ளகங்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.049.6
வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண்
கோவணந் தற்ற யலே
ஓதம் மேவிய ஒற்றி யூரையும்
உத்திரம் நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் ஏது காவல்கொண்
டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.049.7
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
தோள்வ ரிநெடுங் கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையோர்
பாகம் வைத்து கந்தீர்
முடவ ரல்லீர் இடரிலீர் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.049.8
சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்ற லைக லனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர்
பாகம் வைத்து கந்தீர்
மோந்தை யோடு முழக்கறா முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.049.9
முந்தி வானவர் தாந்தொழு முருகன்
பூண்டி மாநகர் வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையோர்
பாகம் வைத்த வனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங் கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர்
ஒன்றுந் தாமி லரே. 7.049.10
திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்
செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 7.058.3
ஒட்டி ஆட்கொண்டு போய்ஒளித் திட்ட
உச்சிப் போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லையிருள் தன்னைப்
பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக்
கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக்
காத லாற்கடல் சூர்தடிந் திட்ட
செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ
ஆரூரானை மறக்கலு மாமே. 7.059.10
ஆத்தம் என்றெனை ஆளுகந் தானை
அமரர் நாதனைக் குமரனைப் பயந்த
வார்த்த யங்கிய முலைமட மானை
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத்
தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங்
கூத்த னைக்குரு மாமணி தன்னைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 7.062.4
திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால்
சிறந்தநம் பிபிறந் தஉயிர்க் கெல்லாம்
அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும்
அமரர் நம்பிகும ரன்முதல் தேவர்
தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி
தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 7.063.2
வேந்த ராயுல காண்டறம் புரிந்து
வீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னைத்
தேய்ந்தி றந்துவெந் துயருழந் திடுமிப்
பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப்
பரமனைக் கடற் சூர்தடிந் திட்ட
சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. 7.064.6
நமர்பிறர் என்ப தறியேன்
நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பன்
தக்கவா றொன்றும் இலாதேன்
குமரன் திருமால் பிரமன்
கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.073.9
கடுவரி மாக்கடலுட்
காய்ந்தவன் தாதையைமுன்
சுடுபொடி மெய்க்கணிந்த
சோதியை வன்றலைவாய்
அடுபுலி ஆடையனை
ஆதியை ஆரூர்புக்
கிடுபலி கொள்ளியைநான்
என்றுகொல் எய்துவதே. 7.083.5
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிநிரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் தன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்கு
ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்துநாமே. 8.திருவா.009.3
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 8.திருவா.014.17
குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங் காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற் றோன்று மவன்வடிவே. 8.கோவை.285
வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்தவி யக்கழல் வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றா னிருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே. 8.கோவை.286
தனதன்நல் தோழா சங்கரா ! சூல
பாணியே! தாணுவே சிவனே !
கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே
கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே குமர விநாயக சனக
அம்பலத்து அமரசே கரனே !
நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே. 9.1.7
உளங்கொள மதுரக் கதிர்விரித்(து) உயிர்மேல்
அருள்சொரி தரும்உமா பதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
மழவிடை மேல்வரு வானை
விளங்கொளி வீழி மிழலைவேந் தேயென்(று)
ஆந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
கைக்கொண்ட கனககற் பகமே. 9.005.11
மாலுலா மனம்தந்(து) என்கையில் சங்கம்
வவ்வினான் மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளும்
குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
என்னும் என் மெல்லியல் இவளே. 9.007.1
இவளைவா ரிளமென் கொங்கைபீர் பொங்க
எழில் கவர்ந் தான்இளங் காளை
கவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க்
கனகக்குன் றெனவரும் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையானைக்கும்
குழகன்நல் அழகன்நங் கோவே. 9.007.2
கோவினைப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன்
காவல்நற் சேனையென் னக்காப் பவன்என்
பொன்னை மேகலை கவர்வானே
தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயில் ஊரும்
சுப்பிர மண்ணியன் தானே. 9.007.3
தானவர் பொருது வானவர் சேனை
மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்
மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை
மறைநிறை சட்டறம் வளரத்
தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கோனமர் கூத்தன் குலவிளங் களிறென்
கொடிக்கிடர் பயப்பதுங் குணமே ! 9.007.4
குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை
படுமிடர் குறிக்கொளாத(து) அழகோ
மணமணி மறையோர் வானவர் வையம்
உய்யமற்(று) அடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
கணபதி பின்னிளங் கிளையே. 9.007.5
கிளையிளங் சேயக் கிரிதனை கீண்ட
ஆண்டகை கேடில்வேற் செல்வன்
வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை
கார்நிற மால்திரு மருகன்
திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
முளையிளங் களி(று)என் மொய்குழற் சிறுமிக்(கு)
அருளுங்கொல் முருகவேள் பரிந்தே. 9.007.6
பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
சுந்தரத்(து) அரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
மையல்கொண்(டு) ஐயறும் வகையே. 9.007.7
வகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞை
வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் பரம்பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என்
துடியிடை மடல்தொடங் கினளே. 9.007.8
தொடங்கினள் மடலென்(று) அணிமுடித் தொங்கல்
புறஇதழ் ஆகிலும் அருளான்
இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
மறத்தொழில் வார்த்தையும் உடையன்
திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து)
அறுமுகத்(து) அமுதினை மருண்டே. 9.007.9
மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்
பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்
வெருண்டமான் விழியார்க்(கு) அருள்செயா விடுமே
விடலையே எவர்க்கும் மெய் அன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்
கண்ணுடைக் கோமளக் கொழுந்தே. 9.007.10
கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்
தூய்மொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரள் சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்தசொல் இவைசுவா மியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலா மனமே. 9.007.11
திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
மலையுடை அரையர்தம் பாவை
தருமலி வளனாம் சிவபுரன் தோழன்
தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல்முன்று ஏழுகைத் தலம்ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 9.015.5
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே. 10.02.20.1
எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்
மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே. 10.04.04.12
….
குமரன் தாதை
குளிர்சடை இறைவன்
…. 11.008.19
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப்
பண்டிருந்த யாழ் முரலப் பைம்பொழில்வாய்க் - கண்டிருந்த
மாமயில்கள் ஆடி மருங்கு வரும் ஈங்கோயே
பூமயிலி தாதை பொருப்பு. 11.011.10
சாரற் குறத்தியர்கள்
தண்மருப்பால் வெண்பிண்டி
சேரத் தருக்கி
மதுக்கலந்து - வீரத்
தமர்இனிதா உண்ணுஞ்சீர்
ஈங்கோயே இன்பக்
குமரன்முது தாதையார் குன்று. 11.011.40
….நன்றி இல்லா
முந்நீர்ச் சூர்மாக்
கொன்றங் கிருவரை
எறிந்த ஒருவன் (35)
தாதை
….11.013
…விடைகாவல் (30)
தானவர்கட் காற்றாது
தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட
மயிலூரும் - கோனவனைக்
சேனா பதியாகச்
செம்பொன் முடிகவித்து
வானாள வைத்த
வரம்போற்றி
…11.017
1. திருப்பரங்குன்றம்
உலகம் உவப்ப
வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு
கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்குஞ்
சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய
மதனுடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த
செல்உறழ் தடக்கை (5)
மறுவில் கற்பின்
வாணுதல் கணவன்
கார்கோள் முகந்த
கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில்
வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய
தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய
பராஅரை மராஅத்து (10)
உருள்பூந் தண்டார்
புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த
சேணுயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய
ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய
நுசுப்பிற் பணைத்தோள்
கோபத் தன்ன
தோயாப் பூந்துகில் (15)
பல்காசு நிரைத்த
சில்காழ் அல்குல்
கைபுனைந் தியற்றாக்
கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய
பொலம்புனை அவிரிழைச்
சேண்இகந்து விளங்குஞ்
செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த
இணையீர் ஓதிச் (20)
செங்கால் வெட்சிச்
சீறிதழ் இடையிடுபு
பைந்தாள் குவளைத்
தூஇதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு
வலம்புரி வயின்வைத்துத்
திலகம் தைஇய
தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய்
தாழமண் ணுறுத்துத் (25)
துவர முடித்த
துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகம்
செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ மருதின்
ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு
கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல்
வளைஇத் துணைத்தக (30)
வண்காது நிறைந்த
பிண்டி ஒண்தளிர்
நுண்புண் ஆகந்
திளைப்பத் திண்காழ்
நறுங்குற டுரிஞ்சிய
பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர்
கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக்
கொட்டி விரிமலர் (35)
வேங்கை நுண்தா
தப்பிக் காண்வர
வெள்ளில் குறுமுறி
கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய
வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென்
றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம்
சிலம்பப் பாடிச் (40)
சூரர மகளிர்
ஆடும் சோலை
மந்தியும் அறியா
மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச்
சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி
மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல்
கலங்கஉள் புக்குச் (45)
சூர்முதல் தடிந்த
சுடர்இலை நெடுவேல்
உலறிய கதுப்பிற்
பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண்
சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு
கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும்
காதின் பிணர்மோட்டு (50)
உருகெழு செலவின்
அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய
கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட் டுண்ட
கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின்
ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம்
பாடித்தோள் பெயரா (55)
நிணந்தின் வாயள்
துணங்கை தூங்க
இருபேர் உருவின்
ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின்
அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம்
அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த
மறுவில் கொற்றத்து (60)
எய்யா நல்லிசைச்
செவ்வேல் சேஎய்
சேவடி படரும்
செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப்
புலம்பிரிந் துறையும்
செலவுநீ நயந்தனை
ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்து
இன்நசை வாய்ப்ப (65)
இன்னே பெறுதிநீ
முன்னிய வினையே
செருப் புகன் றெடுத்த
சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு
பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த
போர்அரு வாயில்
திருவீற் றிருந்த
தீதுதீர் நியமத்து (70)
மாடமலி மறுகில்
கூடல் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல்
விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத்
துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல்
ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த
காமர் சுனைமலர் (75)
அஞ்சிறை வண்டின்
அரிக்கணம் ஒலிக்கும்
குன் றமர்ந் துறைதலும் உரியன்,
அதா அன்று 11.018.1
2. திருச்சீரலைவாய்
வைந்நுதி பொருத
வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை
ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும்
மருங்கின் கடுநடைக் (80)
கூற்றத் தன்ன
மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன
வேழமேல் கொண்டு
ஐவேறு உருவின்
செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய
முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின்
சென்னிப் பொற்ப (85)
நகைதாழ்பு துயல்வரூஉம்
வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை
வாண்மதி கவைஇ
அகலா மீனின்
அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத்
தந்தொழில் முடிமார்
மனன்நேர் பெழுதரு
வாள்நிற முகனே (90)
மாயிருள் ஞாலம்
மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்
றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த
அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத்
தன்றே ஒருமுகம்
மந்திர விதியின்
மரபுளி வழாஅ (95)
அந்தணர் வேள்வியோர்க்
கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை
ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக்
கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச்
செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு
களம்வேட்டன்றே ஒருமுகம் (100)
குறவர் மடமகள்
கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந்
தன்றே ஆங்குஅம்
மூவிரு முகனும்
முறைநவின் றொழுகலின்
ஆரந் தாழ்ந்த
அம்பகட்டு மார்பில்
செம்பொறி வாங்கிய
மொய்ம்பின் சுடர்விடுபு (105)
வண்புகழ் நிறைந்து
வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின்
ஐயர்க் கேந்தியது
ஒருகை உக்கம்
சேர்த்தியது ஒருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை
அசைஇயது ஒருகை
அங்குசம் கடாவ
ஒருகை இருகை (110)
ஐயிரு வட்டமொ டெஃகுவலம்
திரிப்ப ஒருகை
மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்
கொட்ப ஒருகை
பாடின் படுமணி
இரட்ட ஒருகை (115)
நீல்நிற விசும்பின் மலிதுளி
பொழிய ஒருகை
வான்அர மகளிர்க்கு வதுவை
சூட்ட ஆங்குஅப்
பன்னிரு கையும்
பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியம்
கறங்கத் திண்காழ்
வயிரெழுந் திசைப்ப
வால்வளை நரல (120)
உரம்தலைக் கொண்ட
உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை
வெல்கொடி அகவ
விசும் பாறாக
விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த
ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே,
அதா அன்று (120) 11.018.2
3. திருவாவினன்குடி
சீரை தைஇய
உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும்
வால்நரை முடியினர்
மாசற இமைக்கும்
உருவினர் மானின்
உரிவை தைஇய
ஊன்கெடு மார்பின்
என்பெழுந் தியங்கும்
யாக்கையர் நன்பகல் (130)
பலவுடன் கழிந்த
உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய
மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா
அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய
தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த
காட்சியர் இடும்பை (135)
யாவதும் அறியா
இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி
முனிவர் முன்புகப்
புகைமுகந் தன்ன
மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த
தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த
செய்வுறு திவவின் (140)
நல்லியாழ் நவின்ற
நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர்
இன்னரம் புளர
நோயின் றியன்ற
யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும்
மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும்
திதலையர் இன்னகைப் (145)
பருமம் தாங்கிய
பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிரொடு
மறுவின்றி விளங்கக்
கடுவோ டொடுங்கிய
தூம்புடை வாலெயிற்று
அழலென உயிர்க்கும்
அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும்
பல்வரிக் கொடுஞ்சிறைப் (150)
புள்ளணி நீள்கொடிச்
செல்வனும் வெள்ளேறு
வலவயின் உயரிய
பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும்
இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய
முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய
நாட்டத்து நூறுபல் (155)
வேள்வி முற்றிய
வென்றடு கொற்றத்து
ஈரிரண் டேந்திய
மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை
உயர்த்த யானை
எருத்தம் ஏறிய
திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து
நன்னகர் நிலைஇய (160)
உலகங் காக்கும்
ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவருந்
தலைவர் ஆக
ஏமுறு ஞாலந்
தன்னில் தோன்றித்
தாமரை பயந்த
தாவில் ஊழி
நான்முக ஒருவற்
சுட்டிக் காண்வரப் (165)
பகலில் தோன்றும்
இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப்
பதினொரு மூவரொடு
ஒன்பதிற் றிரட்டி
உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன
தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன
செலவினர் வளியிடைத் (170)
தீயெழுந் தன்ன
திறலினர் தீப்பட
உருமிடித் தன்ன
குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில்தம்
பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர்
வந்துடன் காணத்
தாவில் கொள்கை
மடந்தையொடு சில்நாள் (175)
ஆவினன்குடி அசைதலும் உரியன்,
அதா அன்று 11.018.3
4. திருவேரகம்
இருமூன்று எய்திய
இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய
பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி
இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய
அறன்நவில் கொள்கை (180)
மூன்றுவகைக் குறித்த
முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர்
பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட
மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம்
புலர உடீஇ
உச்சிக் கூப்பிய
கையினர் தற்புகழ்ந்து (185)
ஆறெழுத் தடக்கிய
அருமறைக் கேள்வி
நாவியல் மருங்கின்
நவிலப் பாடி,
விரையுறு நறுமலர்
ஏந்திப் பெரிதுவந்து
ஏரகத் துறைதலும் உரியன்,
அதா அன்று 11.018.4
5. குன்றுதோறாடல்
பைங்கொடி நறைக்காய்
இடையிடுபு வேலன் (190)
அம்பொதிப் புட்டில்
விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந்
தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த
கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில்
கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த
தேக்கள் தேறல் (195)
குன்றகச் சிறுகுடிக்
கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக்
குரவை அயர
விரலுளர்ப்ப அவிழ்ந்த
வேறுபடு நறுங்கால்
குண்டுசுனை பூத்த
வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை
அணைத்த கூந்தல் (200)
முடித்த குல்லை
இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த
வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த
பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல்
திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன
மடநடை மகளிரொடு (205)
செய்யன் சிவந்த
ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர்
துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன்
செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன்
குறும்பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன்
புகரில் சேவல்அம் (210)
கொடியன் நெடியன்
தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன
இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட
நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய
நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின்
இயல ஏந்தி (215)
மென்தோள் பல்பிணை
தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன்
பண்பே, அதாஅன்று 11.018.5
6. பழமுதிர்சோலை
சிறுதினை மலரொடு
விரைஇ மறிஅறுத்து
வாரணக் கொடியொடு
வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட
சீர்கெழு விழவினும் (220)
ஆர்வலர் ஏத்த
மேவரு நிலையினும்
வேலன் தைஇய
வெறிஅயர் களனும்
காடும் காவும்
கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும்
வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும்
புதுப்பூங் கடம்பும் (225)
மன்றமும் பொதியிலுங்
கந்துடை நிலையினும்
மாண்டலைக் கொடியொடு
மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி
அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக்
கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின்
இரண்டுடன் உடீஇச் (230)
செந்நூல் யாத்து
வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய
மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய
தூவெள் அரிசி
சில்பலிச் செய்து
பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு மஞ்சளொடு
நறுவிரை தெளித்துப் (235)
பெருந்தண் கணவீரம்
நறுந்தண் மாலை
துணைஅற அறுத்துத்
தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின்
நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக்
குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியோடு
இன்னியம் கறங்க (240)
உருவப் பல்பூத்
தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை
பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து
முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த
உருகெழு வியன்நகர்
ஆடுகளம் சிலம்பப்
பாடிப் பலவுடன் (245)
கோடுவாய் வைத்துக்
கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப்
பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு
எய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும்
அறிந்த வாறே
யாண்டாண் டாயினும்
ஆகக் காண்தக (250)
முந்துநீ கண்டுழி
முகனமர்ந் தேத்திக்
கைதொழுஉப் பரவிக்
கால்உற வணங்கி
நெடும்பெரும் சிமயத்து
நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன்
அங்கை ஏற்ப
அறுவர் பயந்த
ஆறமர் செல்வ (255)
ஆல்கெழு கடவுட்
புதல்வ மால்வரை
மலைமகள் மகனே
மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க்
கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற்
பழையோள் குழவி
வானோர் வணங்குவில்
தானைத் தலைவ (260)
மாலை மார்ப
நூலறி புலவ
செருவில் ஒருவ
பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை
அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ
மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச்
சால்பெருஞ் செல்வ (265)
குன்றங் கொன்ற
குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக்
குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப்
புலவர் ஏறே
அரும்பெறல் மரபிற்
பெரும்பெயர் முருக
நசையுநர்க் கார்த்தும்
இசைபே ராள (270)
அலர்ந்தோர்க் களிக்கும்
பொலம்பூண் சேஎய்
மண்டமர் கடந்தநின்
வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கும்
உருகெழு நெடுவேள்
பெரியோர் ஏத்தும்
பெரும்பெயர் இயவுள்
சூர்மருங் கறுத்த
மொய்ம்பின் மதவலி (275)
போர்மிகு பொருந
குரிசில் எனப்பல
யான்அறி அளவையின்
ஏத்தி ஆனாது
நின்னளந் தறிதல்
மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி
வந்தனன் நின்னொடு
புரையுநர் இல்லாப்
புலமையோய் எனக் (280)
குறித்தது மொழியா
அளவையில் குறித்துடன்
வேறுபல் உருவில்
குறும்பல் கூளியர்
சாறயர் களத்து
வீறுபெறத் தோன்றி
அளியன் தானே
முதுவாய் இரவலன்
வந்தோன் பெருமநின்
வண்புகழ் நயந்தென (285)
இனியவும் நல்லவும்
நனிபல ஏத்தித்
தெய்வம் சான்ற
திறல்விளங் குருவின்
வான்தோய் நிவப்பின்
தான்வந்து எய்தி
அணங்குசால் உயர்நிலை
தழீஇப் பண்டைத்தன்
மணம்கமழ் தெய்வத்து
இளநலம் காட்டி (290)
அஞ்சல் ஓம்புமதி
அறிவல்நின் வரவென
அன்புடை நன்மொழி
அளைஇ விளிவின்று
இருள்நிற முந்நீர்
வளைஇய உலகத்து
ஒருநீ ஆகத்
தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில்
நல்குமதி பலவுடன் (295)
வேறுபல் துகிலின்
நுடங்கி அகில்சுமந்து
ஆரம் முழுமுதல்
உருட்டி வேரல்
பூவுடை அலங்குசினை
புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப்
பரிதியில் தொடுத்த
தண்கமழ் அலர்இறால்
சிதைய நன்பல (300)
ஆசினி முதுசுளை
கலாவ மீமிசை
நாக நறுமலர்
உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை
பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப
வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு
தழீஇத் தத்துற்று (305)
நன்பொன் மணிநிறம்
கிளரப் பொன்கொழியா
வாழை முழுமுதல்
துமியத் தாழை
இளநீர் விழுக்குலை
உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர்
சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை
பலவுடன் வெரீஇக் (310)
கோழி வயப்பெடை
இரியக் கேழலொடு
இரும்பனை வெளிற்றின்
புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக்
குடாஅடி உளியம்
பெருங்கல் விடர்அளைச்
செறியக் கருங்கோட்டு
ஆமா நல்லேறு
சிலைப்பச் சேண்நின்று (315)
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை
மலைகிழ வோனே. 11.018.6
குன்றம் எறிந்தாய்
குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப்
பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய்
ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை. 11.018.7
குன்றம் எறிந்ததுவும்
குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர்
தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும்
கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். 11.018.8
வீரவேல் தாரைவேல்
விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள்
திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல்
சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை. 11.018.9
இன்னம் ஒருகால்
எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த
கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம்
பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். 11.018.10
உன்னை ஒழிய
ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான்
பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர்
கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே. 11.018.11
அஞ்சு முகந்தோன்றில்
ஆறு முகந்தோன்றும்
வெஞ்ச மரில்அஞ்சல்என
வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின்
இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன். 11.018.12
முருகனே செந்தில்
முதல்வனே மாயோன்
மருகனே ஈசன்
மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய
தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். 11.018.13
காக்கக் கடவியநீ
காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம்
அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா
கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. 11.018.14
பரங்குன்றிற் பன்னிருகைக்
கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக்
கண்டு - சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே
அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 11.018.15
நக்கீரர் தாமுரைத்த
நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும்
சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து
மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும். 11.018.16
கொண்ட பலிநுமக்கும்
கொய்தார் குமரர்க்கும்
புண்டரிக மாதினுக்கும்
போதுமே- மண்டி
உயிரிழந்தார் சேர்புறங்காட்
டோரிவாய் ஈர்ப்ப
மயிரிழந்த வெண்டலைவாய் வந்து. 11.022.19
கொண்டற் கார்எயிற்றுச் செம்மருப் பிறாலின்
புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி
வரையோன் மருக புனலாள் கொழுந
இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின்
நீறாடு பொலங்கழல் பரவ
வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே. 11.025.13
வேந்துக்க மாக்கடற் சூரன்முன்
னாள்பட வென்றிகொண்ட
சேந்தற்குத் தாதையிவ் வையம்
அளந்ததெய் வத்திகிரி
ஏந்தற்கு மைத்துனத் தோழன்இன்
தேன்மொழி வள்ளியென்னும்
கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம்
மால்விடைக் கொற்றவனே. 11.025.18
சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல்
சேய்மூ வுலகம் வலம்வர வேயக்
கொன்றையம் படலை துன்றுசடைக் கிடந்த
ஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி
அள்ளல் தீஞ்சுவை அருந்திய
வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே. 11.026.13
….பூவலர் குடுமிச்
சேவலம் பதாகை
மலைதுளை படுத்த
கொலைகெழு கூர்வேல்
அமரர்த் தாங்கும்
குமரன் தாதை
…. 11.029.16
….கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண்
மலையாள் கொழுந
……………… 11.029.19
பரவித் தனைநினை யக்கச்சி
ஏகம்பர் பண்ணும்மையல்
வரவித் தனையுள்ள தெங்கறிந்
தேன் முன் அவர்மகனார்
புரவித் தனையடிக் கக்கொடி
தாய்விடி யாஇரவில்
அரவித் தனையுங்கொண் டார்மட
வார்முன்றில் ஆட்டிடவே. 11.030.49
கொம்பனைய வள்ளி
கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை
நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும்
தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு. 11.032.3
மலஞ்செய்த வல்வினை நோக்கி
உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு
முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன்
தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி
றேஉன்னை வாழ்த்துவனே. 11.032.8
ஏறிய சீர்வீ ரணக்குடி
ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும்
முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி
னுக்கிளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழு நாரைப்
பதியுள் விநாயகனே. 11.032.14
அமரா அமரர் தொழுஞ்சரண்
நாரைப் பதிஅமர்ந்த
குமரா குமரற்கு முன்னவ
னேகொடித் தேர்அவுணர்
தமரா சறுத்தவன் தன்னுழைத்
தோன்றின னேஎனநின்
றமரா மனத்தவர் ஆழ்நர
கத்தில் அழுந்துவரே. 11.032.18
சத்தித் தடக்கைக் குமரன்நல்
தாதைதன் தானம்எல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா
மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மைநன் தாள்அரற்
காய்ஐயம் ஏற்றலென்னும்
பத்திக் கடல்ஐ யடிகளா
கின்றநம் பல்லவனே. 11.034.57
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக்
குயிர்அன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவிஅவி
நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண்
டியினில் பராபரத்தேன்
மடுத்தான் அவனென்பர் வன்தொண்ட
னாகின்ற மாதவனே. 11.034.64
முன்னே வந்து எதிர் தோன்றும்
முருகனோ? பெருகு ஒளியால்
தன் னேரில் மாரனோ? தார்
மார்பின் விஞ் சையனோ?
மின் நேர் செஞ் சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ?
என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார். 12.006.144
பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு
இனிப் புதல்வர் பேறே
அரியது என்று எவரும்
கூற அதற்படு காதலாலே
முருகலர் அலங்கல் செவ்வேள்
முருகவேள் முன்றில் சென்று
பரவுதல் செய்து நாளும் பராய்க்
கடன் நெறியில் நிற்பார். 12.016.10
வாரணச் சேவலோடும் வரிமயிற்
குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச்
சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி
குரவை தூங்கப்
பேரணங்கு ஆடல் செய்து
பெருவிழா எடுத்த பின்றை. 12.016.11
பயில் வடுப் பொலிந்த யாக்கை
வேடர்தம் பதியாம் நாகற்கு
எயிலுடைப் புரங்கள் செற்ற
எந்தையார் மைந்தர் ஆன
மயிலுடைக் கொற்ற ஊர்தி
வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடைத் தடக்கை வென்றி
அண்ணலார் அருளினாலே. 12.016.12
“வேடர் தம் கோமான் நாகன் வென்றி வேள் அருளால் பெற்ற
சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான்” என்று
ஆடியல் துடியும் சாற்றி அறைந்தபேர் ஓசை கேட்டு
மாடுஉயர் மலைகள் ஆளும் மறக்குலத் தலைவர் எல்லாம் 12.016.29
அஞ்சு வான் கரத்தாறு இழி மதத்தோர்
ஆனை நிற்கவும் அரை இருள் திரியும்
மஞ்சு நீள்வது போலும் மா மேனி
மலர்ப் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப
நஞ்சு பில்கு எயிற்று அரவ வெற்றரையின்
நாம மூன்றிலைப் படை உடைப் பிள்ளை
எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம்
எறிந்த வேலவன் காக்கவும் இசையும். 12.025.81
பூந்தண் பொன்னி எந் நாளும் பொய்யாது
அளிக்கும் புனல் நாட்டு
வாய்ந்த மண்ணித் தென் கரையில்
மன்ன முன் நாள் வரை கிழிய
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி
இமையோர் இகல் வெம் பகை கடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர்
மூதூர் செல்வச் சேய்ஞலூர். 12.026.1
செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழும்
கஞ்சுகத்துப் பயிரவர் யாம்
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது
எங்கே எனத் தேடி
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த
அவர் தாம் மலை பயந்த
தைய லோடும் சரவணத்துத்
தனயரோடும் தாம் அணைவார். 12.042.84
ஆரூரர் அவர் தமக்கு விடை
அருளி அங்கு அன்று
காரூரும் மலைநாடு கடந்து
அருளிக் கல் சுரமும்
நீரூரும் கான் யாரும்
நெடும் கானும் பலகழிய
சீரூரும் திருமுருகன்
பூண்டி வழிச்செல்கின்றார். 12.043.164
திரு முருகன் பூண்டி அயல்
செல்கின்ற போழ்தின் கண்
பொருவிடையார் நம்பிக்குத்
தாமே பொன் கொடுப்பதலால்
ஒருவர் கொடுப்பக் கொள்ள
ஒண்ணாமைக்கு அதுவாங்கிப்
பெருகருளால் தாம் கொடுக்கப்
பெறுவதற்கோ அது அறியோம். 12.043.165
ஆரூரர் தம்பால் அவ்வேடுவர்
சென்று அணையாதே
நீரூருஞ் செஞ்சடையார் அருளினால்
நீங்க அவர்
சேரூராம் திருமுருகன் பூண்டியினில்
சென்று எய்திப்
போரூரு மழவிடையார் கோயிலை
நாடிப் புக்கார். 12.043.168
செறிவுண்டு என்று திருத்தொண்டில்
சிந்தை செல்லும் பயனுக்கும்
குறியுண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று
இல்லோம் நிறை கருணையினால்
வெறியுண் சோலைத் திருமுருகன்
பூண்டி வேடர் வழிபறிக்க
பறியுண்டவர் எம்பழவினை வேர்
பறிப்பார் என்னும் பற்றாலே. 12.058.7
செற்றார் தம் புரம் எரித்த சிலையார்
செல்வத் திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு
நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு
முற்றாத முலை உமையாள் பாகன் பூத
முதற்கணமே உடன் செல்ல முடியாப் பேறு
பெற்றார் தம் கழல் பரவ அடியேன்
முன்னைப் பிறவியினில் செய்த தவம் பெரியவாமே 12.070.2