
ஆயாதன சமயம்பல
அறியாதவ னெறியின்
தாயானவன் உயிர்கட்குமுன்
தலையானவன் மறைமுத்
தீயானவன் சிவனெம்மிறை
செல்வத்திரு ஆரூர்
மேயானவன் உறையும்
மிடம்வீழிம் மிழலையே. 1.011.5
பேயாயின பாடப்பெரு
நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு
பாகம்மிக வுடையான்
தாயாகிய வுலகங்களை
நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமானிடம்
நெய்த்தானமெ னீரே. 1.015.3
பந்தார்விரல் உமையாளொரு
பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய
செழுநீர்வயற் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ்
குரவங்கமழ் குன்றில்
எந்தாயென இருந்தானிடம்
இடும்பாவன மிதுவே. 1.017.5
தாயுநீயே தந்தைநீயே
சங்கரனே யடியேன்
ஆயுநின்பால் அன்புசெய்வான்
ஆதரிக்கின் றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னுள்
ஐவர்நின்றொன் றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன்
வலிவலமே யவனே. 1.050.7
தாயானே தந்தையு
மாகிய தன்மைகள்
ஆயானே ஆயநல்
லன்பர்க்க ணியானே
சேயானே சீர்திக
ழுந்திருக் காறாயில்
மேயானே யென்பவர்
மேல்வினை மேவாவே. 2.015.4
சிந்தா யெனுமால்
சிவனே யெனுமால்
முந்தா யெனுமால்
முதல்வா எனுமால்
கொந்தார் குவளை
குலவும் மருகல்
எந்தாய் தகுமோ
இவள்ஏ சறவே. 2.18.2
ஓயா தஅரக்
கன்ஒடிந் தலற
நீயா ரருள்செய்
துநிகழ்ந் தவனே
வாயா ரவழுத்
துவர்நா கேச்சுரத்
தாயே எனவல்
வினைதான் அறுமே. 2.024.8
தீயுற வாயஆக்கை யதுபற்றி வாழும்
வினைசெற்ற வுற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்
நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல
விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே. 2.086.4
சாயல்நன் மாதொர்பாகன் விதியாய சோதி
கதியாக நின்ற கடவுள்
ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன்
இருளாய கண்டன் அவனித்
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு
மலையின்கண் வந்து தொழுவார்
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்
நறையூரின் நம்ப னவனே. 2.087.4
பேய்கள் பாடப்பல் பூதங்கள்
துதிசெய பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட
மாநடம் ஆடும்வித் தகனார்ஒண்
சாய்கள் தான்மிக வுடையதண்
மறையவர் தகுசிர புரத்தார்தாந்
தாய்க ளாயினார் பல்லுயிர்க்
குந்தமைத் தொழுமவர் தளராரே. 2.102.7
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே. 3.004.6
தும்மல் இருமல்
தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம்
விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த்
தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை
அஞ்செ ழுத்துமே. 3.22.6
வாயிடைம்மறை யோதிமங்கையர்
வந்திடப்பலி கொண்டுபோய்ப்
போயிடம்எரி கானிடைப்புரி
நாடகம்இனி தாடினான்
பேயொடுங்குடி வாழ்வினான்பிர
மாபுரத்துறை பிஞ்ஞகன்
தாயிடைப்பொருள் தந்தையாகுமென்
றோதுவார்க்கருள் தன்மையே. 3.037.5
தேயுமதி யஞ்சடையி லங்கிடவி
லங்கன்மலி கானிற்
காயுமடு திண்கரியின் ஈருரிவை
போர்த்தவன் நினைப்பார்
தாயெனநி றைந்ததொரு தன்மையினர்
நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை யோதிநிறை
தோணிபுர மாமே. 3.081.5
யாகாயாழீ காயாகா
தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா
காயாகாழீ யாகாயா. 3.117.2
யாகாலாமே யாகாழீ
யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா
ழீகாயாமே லாகாயா. 3.117.5
நேரகழாமித யாசழிதா
யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே
தாழிசயாதமி ழாகரனே. 3.117.11
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழலர்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலங்
கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே. 3.123.5
தந்தையுந் தாயு மாகித்
தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி
முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தைநீ சரண மென்றங்
கிமையவர் பரவி யேத்தச்
சிந்தையுட் சிவம தானார்
திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.029.4
தந்தையாய்த் தாயு மாகித்
தரணியாய்த் தரணி யுள்ளார்க்
கெந்தையு மென்ன நின்ற
ஏழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே என்றென்
றுள்குவா ருள்ளத் தென்றுஞ்
சிந்தையுஞ் சிவமு மாவார்
திருப்பயற் றூர னாரே. 4.032.8
விளைவறி விலாமை யாலே
வேதனைக் குழியி லாழ்ந்து
களைகணு மில்லேன் எந்தாய்
காமரங் கற்று மில்லேன்
தளையவிழ் கோதை நல்லார்
தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லேன் எந்தாய்
என்செய்வான் தோன்றி னேனே. 4.078.9
விவந்தா டியகழல் எந்தாயென்
விண்ணப்பம் மேலிலங்கு
தவந்தா னெடுக்கத் தலைபத்
திறுத்தனை தாழ்புலித்தோல்
சிவந்தா டியபொடி நீறுஞ்
சிரமாலை சூடிநின்று
தவந்தா னிருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே. 4.111.11
அரைப்பா லுடுப்பன கோவணச்
சின்னங்கள் ஐயமுணல்
வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி
வாழ்க்கைக்கு வானிரைக்கும்
இரைப்பா படுதலை யேந்துகை
யாமறை தேடுமெந்தாய்
உரைப்பார் உரைப்பன வேசெய்தி
யாலெங்கள் உத்தமனே. 4.113.7
எம்மை யாரிலை
யானுமு ளேனலேன்
எம்மை யாரும்
இதுசெய வல்லரே
அம்மை யாரெனக்
கென்றென் றரற்றினேற்
கம்மை யாரைத்தந்
தார்ஆரூர் ஐயரே. 5.007.6
மனத்துள் மாயனை
மாசறு சோதியைப்
புனிற்றுப் பிள்ளைவெள்
ளைம்மதி சூடியை
எனக்குத் தாயையெம்
மானிடை மருதனை
நினைத்திட் டூறி
நிறைந்ததென் னுள்ளமே. 5.15.2
மந்த மாக
வளர்பிறை சூடியோர்
சந்த மாகத்
திருச்சடை சாத்துவான்
பந்த மாயின
தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய்தந்தை
எம்பெரு மானுமே. 5.035.6
தாயு மாயெனக்
கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும்
ஆண்ட பெருந்தகை
தேய நாதன்
சிராப்பள்ளி மேவிய
நாய னாரென
நம்வினை நாசமே. 5.085.4
யி னும்நல்ல
சங்கர னுக்கன்பர்
ஆய வுள்ளத்
தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை
யுண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துப்
பட்ட மனத்தரே. 5.100.9
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் றன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ்
சேயானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 6.019.8
தந்தைதா யில்லாதாய் நீயே யென்றும்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
முந்திய முக்கணாய் நீயே யென்றும்
மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும்
நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6.041.9
மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை
வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி
என்னானை யெந்தை பெருமான் தன்னை
இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 6.046.2
தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்
சங்கரனைச் சந்தோக சாமம் ஒதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை
வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 6.050.4
முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்
மொய்பவளக் கொடியனைய சடையார் போலும்
எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும்
இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்
மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6.053.9
கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானை
என்னானைத் தென்னானைக் காவான் றன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே. 6.079.8
பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்
தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 6.91.1
தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. 6.094.5
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ
ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே. 6.095.1
கந்தங் கமழ்கா ரகில்சந்
தனம் உந்திச்
செந்தண் புனல்வந்
திழிபெண்ணை வடபால்
மந்தி பலமா
நடமாடுந் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 7.013.3
நொந்தா ஒண்சுடரே
நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய்
மனமே புகுந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான்
திருமேற் றளியுறையும்
எந்தாய் உன்னையல்லால்
இனியேத்த மாட்டேனே. 7.021.1
சந்தா ருங்குழையாய்
சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய்
விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 7.024.7
சந்தார் வெண்குழையாய்
சரிகோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள்
ஒருபாகம் அமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான்
அடியேனையும் ஏன்றுகொள்ளே. 7.027.5
எண்ணார் தங்கள் எயிலெய்த
எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகங் காக்கின்ற
கருத்தா திருத்த லாகாதாய்
பண்ணா ரிசைக ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 7.052.6
எம்மான் எந்தை மூத்தப்பன்
ஏழேழ் படிகால் எமையாண்ட
பெம்மான் ஈமப் புறங்காட்டிற்
பேயோ டாடல் புரிவானே
பன்மா மலர்க ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 7.052.9
காயும் புலியின் அதளுடையர்
கண்டர் எண்டோட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்
தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப்
பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 7.053.3
ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா
லியாவ ராகிலென் அன்புடை யார்கள்
தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்
சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்
மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
கொள்வ தேகணக் குவழக் காகில்
ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.054.4
கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நான்உழன் றுள்தடு மாறிப்
படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 7.060.1
புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
இன்னம் என்றனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 7.060.3
தந்தை தாயுல குக்கோர்
தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்
பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே. 7.075.4
மான்றிகழுஞ் சங்கிலியைத்
தந்துவரு பயன்களெல்லாந்
தோன்றஅருள் செய்தளித்தாய்
என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்
இங்கிருந்தா யோவென்ன
ஊன்றுவதோர் கோலருளி
உளோம்போகீர் என்றானே. 7.089.10
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே 8.001
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
வானகத்து அமரர் தாயே போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றி 8.4
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
ஈங்கோய் மலை எம் எந்தாய் போற்றி
சாவமுன் னாள்தக்கன் வேள்வித்
தகர்தின்று நஞ்சம்அஞ்சி
ஆவஎந் தாய்என் றவிதா
விடும்நம் மவரவரே
மூவரென் றேஎம்பி ரானொடும்
எண்ணிவிண் ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன
பாவந் திரிதவரே. 8.05.4
பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்றென்றே பேசிப் பேசிப்
பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசிப்
போற்றியெம் பெருமானே என்று பின்றா
நேசத்தாற் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே அவாவெள்ளக் கள்வ னேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே. 8.5.24
வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்ற
னேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்றங்
கெண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமா றறியாத எந்தாய் உன்றன்
வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்
எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே. 8.5.25
ஓய்வி லாதன உவமனில்
இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து
நாயி லாகிய குலத்தினுங்
கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித்
தாயி லாகிய இன்னருள்
புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை
உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. 8.5.39
எந்தையாய் எம்பிரான்
மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய்தம்பிரான்
தனக்கஃதிலான்
முந்தி என்னுள்
புகுந்தனன் யாவருஞ்
சிந்தை யாலும்
அறிவருஞ் செல்வனே. 8.5.47
தன்மை பிறரால் அறியாத
தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை ஆண்டையா
புறமே போக விடுவாயோ
என்னை நோக்கு வார்யாரே
என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி
எந்தாய் எங்குப் புகுவேனே. 8.5.59
புகுவேன் எனதே நின்பாதம்
போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி
நாண மில்லா நாயினேன்
நெகும்அன் பில்லை நினைக்காண
நீஆண் டருள அடியேனுந்
தகுவ னேஎன் தன்மையே
எந்தாய் அந்தோ தரியேனே. 8.5.60
என்னைஅப் பாஅஞ்ச லென்பவர்
இன்றிநின் றெய்த்தலைந்தேன்
மின்னையொப் பாய்விட் டிடுதிகண்
டாய்உவ மிக்கின்மெய்யே
உன்னையொப் பாய்மன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
அன்னையொப் பாயெனக் கத்தனொப்
பாயென்னரும் பொருளே. 8.6.16
வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 8.8.4
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய். 8.8.7
நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 8.10.10
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 8.10.12
நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பெருமான்
மாயப் பிறப்பறுத் தாண்டானென் வல்வினையின்
வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 8.13.3
ஏசா நிற்பர் என்னைஉனக் கடியான்
என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும் பேணா
நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ
லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய்
இனித்தான் இரங்காயே. 8.21.6
முன்னை என்னுடை வல்வினை போயிட
முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன்
எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில்
இளமதியதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 8.26.3
தாதாய் மூவே ழுலகுக்குங்
தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே
பெருந்தேன் பில்க எப்போதும்
ஏதாம் மணியே என்றென்றேத்தி
இரவும் பகலும் எழிலார்பாதப்
போதாய்ந் தணைவதென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 8.27.9
கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்
கண்ணனும் நண்ணுதற்கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 8.29.4
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 8.037.3
பால்நினைந் தூட்டும் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 8.037.9
ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பறு மாகாதே
உன்னடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே
கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே
காரணமாகும் அனாதி குணங்கள் கருத்துறு மாகாதே
நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே
நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணுது மாகாதே
என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே
ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே. 8.049.2
தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே
தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ. 8.50.5
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 8.051.9
புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென்றிரப்பத்தன் னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற் றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே. 8.கோவை.11.86
தாயின்நேர் இரங்கும் தலைவஓ என்றும்
தமியனேன் துணைவஓ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
நலம்புரி பரமர்தம் கோயில்
வாயில்நேர் அரும்பு மணிமுருக்(கு) அலர
வளரிளம் சோலைமாந் தளிர்செந்
தீயின்நேர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 9.008.3
பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
பெரியதங் கருணையும் காட்டி
அன்னைதேன் கலந்(து)இன் அமு(து)உகந்(து) அளித்தாங்(கு)
அருள்புரி பரமர்தம் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து
பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 9.8.9
கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே
முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் முறையோத்(து)
அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 9.009.1
அம்பரா அனலா; அனிலமே புவிநீ
அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே
எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே
எந்தையும் தாயுமா யினையே. 9.11.9
மோதலைப் பட்ட கடல்வயி(று) உதித்த
முழுமணித் திரள்அமு(து) ஆங்கே
தாய்தலைப் பட்டங்(கு) உருகிஒன் றாய
தன்மையில் என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும் அவ்வகையே
நிசிசரர் இருவரோடு ஒருவர்
காதலிற் பட்ட கருணையாய் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 9.13.7
பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவல்
படிவழி சென்று சென்றேறிச்
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி
தெரியினும் தெரிவுறா வண்ணம்
எந்தையும் தாயும் யானுமென் றிங்ஙன்
எண்ணில்பல் லூழிகள் உடனாய்
வந்தணு காது நுணிகியுள் கலந்தோன்
மருவிடம் திருவிடைமருதே. 9.017.5
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத்
தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லைய தாகிய எழில்கொள் சோதி
என்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்
பல்லையார் பசுந்தலை யோ(டு) இடறிப்
பாதமென் மலரடி நோவ நீபோய்
அல்லினில் அருநடம் ஆடில் எங்கள்
ஆருயிர் காவலிங்(கு) அரிது தானே. 9.26.6
சேயிழை யார்க்கினி வாழ்வரிது
திருச்சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை என்றடைந்தேன்
தனிமையை நினைகிலை சங்க ராவுன்
பாயிரும் புலியதள் இன்னுடையும்
பையமேல் எடுத்தபொற் பாத மும்கண்
டேயிவள் இழந்தது சங்கம் ஆவா
எங்களை ஆளுடை ஈசனேயோ. 9.026.8
ஏயிவரே வானவர்க்கும்
வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்கும்
தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியம் சூடிய தில்லைச்
சிற்றம் பலவர்
வாயின கேட்டறிவார்
வையகத்தார் ஆவாரே. 9.27.6
எந்தை எந்தாய் சுற்றம் முற்றும்
எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர்
அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன்
எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே
என்று பல்லாண்டு கூறுதுமே 9.28.13
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயனும் அல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 10.1.8
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே. 10.1.1.4
தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவாலய மாகுமே 10.3.12.8
கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே 10.3.18.13
போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே. 10.4.6.27
அம்மனை அம்மை அரிவை மனோன்மனி
செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும்
இம்மனை செய்த இந்நில(1) மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே. 10.4.8.99
அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அம்மையும் அத்தனு மாரறி வாரென்னை
அம்மையோ டத்தனும் யானும் உடனிருந்
தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே. 10.4.8.100
மதித்திடும் அம்மையும் மாமாது மாகும்
மதித்திடும் அம்மையு மங்கனல் ஒக்கும்
மதித்தங் கெழுந்தவை காரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகிலாவே. 10.4.9.32
ஆமே அனைத்துயி ராகிய அம்மையுந்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே யவனடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே. 10.4.13.24
இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே. 10.5.17.4
ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே. 10.6.11
கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக
வாயில்கொண்டு ஈசனும் ஆளவந் தானே. 10.7.3.3
மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே. 10.8.20.2
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ்
செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பது தானே. 10.8.43.10
அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து
அன்னையும் அத்தனை யான்புரந் தேனே. 10.9.20.9
இறைவனே எவ்வுயிரும்
தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம்
செய்வான் - இறைவனே
எந்தாய் எனஇரங்கும்
எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான். 11.5.5
எமக்கிதுவோ பேராசை
யென்றுந் தவிரா
தெமக்கொருநாள் காட்டுதியோ
எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன
புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம். 11.5.70
விசும்பில் விதியுடைய
விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடந்
தேய்ப்ப - முசிந்தெங்கும்
எந்தாய் தழும்பேறி
யேபாவம் பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி. 11.5.76
கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை
மீதழித் திட்
டேற மிகப்பெருகின்
என்செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும்
வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடுங் கங்கைத் திரை. 11.5.90
ஈசனே எந்தாய்
இறைபோற்றி - 11.9
மன்னா கயிலாயா
மாமுத்தம் மாணிக்கம்
பொன்னார மாக்கொண்டு
பூணாதே - எந்நாளும்
மின்செய்வார் செஞ்சடையாய்
வெள்ளெலும்பு பூண்கின்ற
தென்செய்வான் எந்தாய் இயம்பு. 11.10.51
தாயும் நீயே
தந்தையும் நீயே 11.14
தாயாய் மன்னுயிர்
தாங்குந் தந்தையைச் 11.15
வந்தா றலைக்கும் வலஞ்சுழி
வானவ வானவர்தம்
அந்தார் மகுடத் தடுத்தபைம்
போதில்அந் தேனுழக்கிச்
செந்தா மரைச்செவ்வி காட்டும்
திருவடிக் குஞ்செல்லுமே
எந்தாய் அடித்தொண்டர் ஓடிப்
பிடித்திட்ட இன்மலரே. 11.22.20
மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
கீறு தடுப்பக் கிடக்குமே - நீறடுத்த
செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி
எந்தாய்நின் சென்னி இடை. 11.25.2
பொற்றா மரையின்
முற்றா முகிழென
உலகேழ் ஈன்றும்
நிலையில் தளரா
முலையுடன் பொலியும்
ஒருபால் ஆகம் 11.29
உலகம் ஏழும்
பன்முறை ஈன்று
மருதிடம் கொண்ட
ஒருதனிக் கடவுள் 11.29
வையம் ஏழும்
பன்முறை ஈன்ற
ஐய திருவயிற்
றம்மைப் பிராட்டி 11.29
தம்மைப் பிறவிக் கடல்கடப்
பிப்பவர் தாம்வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்தெழில்
ஏகம்பர் மொய்கயிலை
அம்மைக் கருங்கண்ணி தன்னொடின்
பந்தரும் தண்புனமே
எம்மைக் கவலை செயச்சொல்லி
யோவல்லி எய்தியதே. 11.30.25
தந்தையும் தாயும் சாதியும் அறிவும்நம்
சிந்தையும் திருவும் செல்கதித் திறனும் ...(20)
துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும்
இன்பமும் புகழும் இவைபல பிறவும்
சுவைஒளி ஊறோசை நாற்றம் தோற்றம்
என்றிவை முதலா விளங்குவ எல்லாம்
ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து ...(25)
நின்றனன் தமியேன் நின்னடி அல்லது
சார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிக்
சேர்விட மதனைத் திறப்பட நாடி
எய்துதற் கரியோய் யான்இனிச்
செய்வதும் அறிவனோ தெரியுங் காலே. ...11.31
கொத்தார் மலர்க்குழலாள் ஒரு
கூறாய் அடியவர் பால்
மெய்த் தாயினும் இனியானை
அவ்வியன் நாவலர் பெருமான்
"பித்தா பிறை சூடி
எனப் பெரிதாம் திருப்பதிகம்
இத்தாரணி முதலாம் உலகு
எல்லாம் உய்ய எடுத்தார். 12.6.74
தள்ளும் முறைமை ஒழிந்திட இத்
தகுதி ஒழுகும் மறையவர் தாம்
தெள்ளு மறைகள் முதலான ஞானம்
செம் பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்று அளித்த
அம்மை முலைப்பால் உடன் உண்ட
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம்
பெருமை உடையார் ஆயினார். 12.22.11
துன்னு பல்லுயிர் வானவர் முதலாச் சூழ்ந்து
உடன் செலக் காஞ்சியில் அணையத்
தன்னை நேர் வரும் பதும மா நாகம்
தம்பிராட்டி தாள் தலைமிசை வைத்தே
அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய்
அடியனேன் உறை பிலம் அதனிடையே
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன
மலை மடந்தை மற்று அதற்கு அருள் புரிந்து. 12.25.55
நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி
நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது
அஞ்செழுத்துமே ஆக ஆளுடைய அம்மை
செம்மலர்க் கை குவித்தருளித்
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரியத்
தரிப்பரே அவள் தனிப் பெருங் கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து
தோன்றினார் மலை மகள் காண. 12.25.57
கொய்த பன்மலர் கம்பை மா நதியில்
குலவு மஞ்சனம் நிலவு மெய்ப் பூச்சு
நெய் தரும் கொழும் தூப தீபங்கள்
நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும்
போதினில் உதவ மெய்ப் பூசை
எய்த ஆகம விதி எலாம் செய்தாள்
உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி. 12.25.60
பூதியாகிய புனித நீர் ஆடிப் பொங்கு
கங்கை தோய் முடிச் சடை புனைந்து
காதில் வெண் குழை கண்டிகை தாழக்
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனாராயுமாதவஞ் செய் அவ்
வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்த
மாது மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு
வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்தார். 12.25.66
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும்
அன்னை தன் திருக் காமக் கோட்டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது வழிக்
கொள்ளாத தன் மருங்கு போதலினால்
சந்த மாதிர மயங்கி எம் மருங்கும்
சாயை மாறிய தன் திசை மயக்கம்
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும்
உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளதால். 12.25.74
ஆழிவிடம் உண்ட வரை அம்மை
திருப்பால் அமுதம் உண்ட போதே
ஏழ் இசை வண் தமிழ் மாலை
இவன் எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல
காழி வரும் பெரும் தகை
சீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர
வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு
மனத்து எழுந்த விருப்பு வாய்ப்ப. 12.27.178
அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம்
அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருள் சமய முதல் சைவ நெறி தான்
பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம்
ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித்
தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று
செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே. 12.27.185
ஆரணமும் உலகு ஏழும்
ஈன்று அருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம் பெருகு
கருணை திருவடிவான
சீர் அணங்கு சிவபெருமான்
அருளுதலும் சென்று அணைந்து
வார் இணங்கு திருமுலைப்பால்
வள்ளத்துக் கறந்து அருளி. 12.34.67
எண்ணரிய சிவஞானத்து இன்
அமுதம் குழைத்து அருளி
உண் அடிசில் என ஊட்ட
உமை அம்மை எதிர் நோக்கும்
கண் மலர் நீர் துடைத்து அருளிக்
கையில் பொன் கிண்ணம் அளித்து
அண்ணலை அங்கு அழுகை தீர்த்து
அங்கணனார் அருள் புரிந்தார். 12.034.68
காதல் உடன் அணைந்து திருக் கழுமலத்துக்
கலந்து வீற்று இருந்த தங்கள்
தாதை யாரையும் வெளியே தாங்க
அரிய மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து
போதம் முலை சுரந்து அளித்த புண்ணியத்
தாயாரையும் முன் வணங்கிப் போற்றி
மே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக்
கா இறைஞ்ச விருப்பில் சென்றார். 12.34.100
சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை சங்கரனை
சசி கண்ட மவுலியானை
விடையானை வேதியனை வெண் நீற்றானை
விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு
அணையில் துயின்றானும் பரவும் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த
ஒள்ளிழையாள் உள் மெலிவு என்று எடுத்துப் பாட. 12.34.482
கோயில் உட்புகுவார் உச்சி
குவித்த செங்கைகளோடும்
தாயிலும் இனிய தங்கள்
தம்பிரானாரைக் கண்டார்
பாயும் நீர் அருவி கண்கள்
தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்யர் ஆகி
விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார். 12.34.584
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண
ஏழ் உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும்
அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும்
அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சிச்
சண்பை வரும் சிகாமணியார் சாரச் சென்றார்
செம்மை நெறி வழுவாத பதியின் மாடோர்
செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார். 12.34.1008
உம்முடைய பெரும் தவத்தால் உலகு
அனைத்தும் ஈன்று அளித்த
அம்மை திருமுலைப் பாலில்
குழைத்த ஆரமுது உண்டார்க்கு
எம்முடைய குலக் கொழுந்தை
யாம் உய்யத் தருகின்றோம்
வம்மின் என உரைசெய்து
மனமகிழ்ந்து செலவிடுத்தார். 12.34.1167
தேன் நிலவு பொழில் கச்சித்
திருக்காமக் கோட் டத்தில்
ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம்
ஒழியாத கருணை யினால்
ஆனதிரு அறம் புரக்கும் அம்மை
திருக் கோயிலின் முன்
வானில் வளர் திருவாயில் வணங்
கினார் வன் தொண்டர். 12.35.284
நாயன்நீரே நான் உமக்கு இங்கு
அடியேன் ஆகில் நீர்எனக்குத்
தாயின் நல்ல தோழ ருமாம்
தம்பிர னாரே ஆகில்
ஆய அறிவும் இழந்து அழிவேன்
அயர்வு நோக்கி அவ்வளவும்
போய் இவ்விரவே பரவையுறு புலவி
தீர்த்துத் தாரும் என. 12.35.328
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று
அளித்தவள் திருமுலை அமுதுண்ட
வாழி ஞான சம்பந்தர் வந்து
அருளிய வனப்பினது அளப்பு இல்லா
ஊழி மாகடல் வெள்ளத்து மிதந்து
உலகினுக்கு ஒரு முதலாய
காழி மாநகர்த் திரு மறையவர்
குலக் காவலர் கணநாதர். 12.44.1
அத்தனாய் அன்னையாய் ஆர்
உயிராய் அமிர்தாகி
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து
கிளை முதல் தடிந்த
கொத்து அலர் தார்க் கோட்புலியார்
அடிவணங்கிக் கூட்டத்தில்
பத்தராய் பணிவார் தம்
பரிசினையாம் பகருவாம். 12.63.12
கோயில் வாயில் முன் அடைந்து
கூற்றம் செற்ற பெருந் திறலும்
தாயின் நல்ல பெருங் கருணை
அடியார்க்கு அளிக்கும் தண்ணளியும்
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு
இட்டுப் பாடக் கேட்டு அங்கண்
வாயில் வேறு வடதிசையில்
வகுப்பப் புகுந்து வணங்கினார். 12.075.8