logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thiruppuvanam-araiyarpunalu

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பூவணம் - அறையார்புனலு


1.64 திருப்பூவணம்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

அறையார்புனலு மாமலரும் ஆடர வார்சடைமேல்
குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடை யானிடமாம்
முறையால்1முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள் தாம்வணங்கும்
திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப் பூவணமே. 1.64.1

மருவார்மதில்மூன் றொன்றஎய்து மாமலை யான்மடந்தை
ஒருபால்பாக மாகச்செய்த வும்பர் பிரானவனூர்
கருவார்சாலி யாலைமல்கிக் கழல்மன்னர் காத்தளித்த
திருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப் பூவணமே. 1.64.2

போரார்மதமா உரிவைபோர்த்துப் பொடியணி மேனியனாய்க்
காரார் கடலின் நஞ்சமுண்ட கண்ணுதல் விண்ணவனூர்
பாரார் வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணி பொன்கொழித்துச்
சீரார்வாரி சேரநின்ற தென்திருப் பூவணமே. 1.64.3

கடியாரலங்கற் கொன்றைசூடிக் காதிலொர் வார்குழையன்
கொடியார்வெள்ளை யேறுகந்த கோவண வன்னிடமாம்
படியார்கூடி நீடியோங்கும் பல்புக ழாற்பரவச்
செடியார்வைகை சூழநின்ற தென்திருப் பூவணமே. 1.64.4

கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதில் கூட்டழித்த
போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந் தானிடமாம்
ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள் போற்றிசைப்பத்
தேரார்வீதி மாடநீடுந் தென்திருப் பூவணமே. 1.64.5

நன்றுதீதென் றொன்றிலாத நான்மறை யோன்கழலே
சென்றுபேணி யேத்தநின்ற தேவர் பிரானிடமாம்
குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில் சூழ்மலர்மேல்
தென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப் பூவணமே. 1.64.6


பைவாயரவம் அரையிற்சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப
மெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந் தானிடமாம்
கைவாழ்வளையார்2 மைந்தரோடுங் கலவியி னால்நெருங்கிச்
செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்திருப் பூவணமே. 1.64.7

மாடவீதி மன்னிலங்கை மன்னனை மாண்பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையி னார்க்கிடமாம்
பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணி பொன்கொழித்து
ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப் பூவணமே. 1.64.8

பொய்யாவேத நாவினானும் பூமகள் காதலனும்
கையால்தொழுது கழல்கள்போற்றக் கனலெரி யானவனூர்
மையார்பொழிலின் வண்டுபாட வைகை மணிகொழித்துச்
செய்யார்கமலம் தேன்அரும்புந் தென்திருப் பூவணமே. 1.64.9

அலையார்புனலை நீத்தவருந் தேரரும் அன்புசெய்யா
நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன் தன்னிடமாம்
மலைபோல்துன்னி வென்றியோங்கும் மாளிகை சூழ்ந்தயலே
சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்திருப் பூவணமே. 1.64.10

திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப் பூவணத்துப்
பெண்ணார்மேனி யெம்மிறையைப் பேரியல் இன்தமிழால்
நண்ணாருட்கக் காழிமல்கு ஞானசம் பந்தன்சொன்ன 1.64.11
பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வது வானிடையே.


திருச்சிற்றம்பலம்.

பாடம்: 1. முறையார், 2. கைவாழ்வினையார்.
 

Related Content

Narration of the Beauty

பொன்னனையாள் நாடகம் The History of Ponnanaiyal enacted as Dra