logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thiruppukali-vitiyay-vilaivay

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலி - விதியாய் விளைவாய


1.30 திருப்புகலி    
        
பண் -  தக்கராகம்        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்    
    கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்    
    பதியா வதுபங் கயநின் றலரத்தேன்    
    பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே.    1.30.1
        
    ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன்    
    மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந்    
    தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த    
    பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே.    1.30.2
        
    வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன்    
    புலியின் னதள் கொண்டரை யார்த்த புனிதன்    
    மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப்    
    பொலியும் புனற்பூம் புகலிந் நகர்தானே.    1.30.3
        
    கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி    
    அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன்    
    இயலாலுறை யும்மிடம் எண்திசை யோர்க்கும்    
    புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே.    1.30.4
        
    காதார்கன பொற்குழை தோடதி லங்கத்    
    தாதார்மலர் தண்சடை1 யேற முடித்து    
    நாதான் உறையும் மிடமா வதுநாளும்    
    போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே.    1.30.5
        
    வலமார்படை மான்மழு2 ஏந்திய மைந்தன்    
    கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன்    
    குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன்    
    புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே.    1.30.6
        
    கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச்    
    செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக    
    அறுத்தான் அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப்    
    பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே.    1.30.7
        
    தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல    
    எழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்ற    
    கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டிப்    
    பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே.    1.30.8
        
    மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்    
    தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி    
    நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்    
    பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே.    1.30.9
        
    உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்    
    அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்    
    கிடையாதவன் தன்நகர் நன்மலி பூகம்    
    புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே.    1.30.10
        
    இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன்    
    புரைக்கும்பொழிற் பூம்புக லிந்நகர் தன்மேல்    
    உரைக்குந்தமிழ்ஞான சம்பந்தனொண் மாலை    
    வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே.    1.30.11
        
    திருச்சிற்றம்பலம்.    
    பாடம்: 1. தன்சடை, 2. மாமழு.    

 

Related Content

Speak the Glory, Bring in Joy

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலியும் - திருவீழிமிழலையு