logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thiruaiyaru-kalaiyar-mathiyo

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருஐயாறு - கலையார் மதியோ


 1.36 திருஐயாறு    
        
பண் -  தக்கராகம்        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    கலையார் மதியோ டுரநீரும்    
    நிலையார் சடையா ரிடமாகும்    
    மலையா ரமுமா மணிசந்தோ    
    டலையார் புனல்சே ருமையாறே.    1.36.1
        
    மதியொன் றியகொன் றைவடத்தன்    
    மதியொன் றவுதைத் தவர்வாழ்வு    
    மதியின் னொடுசேர் கொடிமாடம்    
    மதியம் பயில்கின் றவையாறே.    1.36.2
        
    கொக்கின் னிறகின் னொடுவன்னி    
    புக்க சடையார்க் கிடமாகும்    
    திக்கின் னிசைதே வர்வணங்கும்    
    அக்கின் னரையா ரதையாறே1.    1.36.3
        
    சிறைகொண் டபுரம் மவைசிந்தக்    
    கறைகொண் டவர்கா தல்செய்கோயில்    
    மறைகொண் டநல்வா னவர்தம்மில்    
    அறையும் மொலிசே ருமையாறே.    1.36.4
        
    உமையா ளொருபா கமதாகச்    
    சமைவா ரவர்சார் விடமாகும்    
    அமையா ருடல்சோர் தரமுத்தம்2    
    அமையா வருமந் தணையாறே.    1.36.5
        
    தலையின் தொடைமா லையணிந்து    
    கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்    
    நிலைகொண் டமனத் தவர்நித்தம்    
    மலர்கொண் டுவணங் குமையாறே.    1.36.6
        
    வரமொன் றியமா மலரோன்றன்    
    சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்    
    வரைநின் றிழிவார் தருபொன்னி    
    அரவங் கொடுசே ருமையாறே.    1.36.7
        
    வரையொன் றதெடுத் தஅரக்கன்    
    சிரமங் கநெரித் தவர்சேர்வாம்    
    விரையின் மலர்மே தகுபொன்னித்    
    திரைதன் னொடுசே ருமையாறே.    1.36.8
        
    சங்கக் கயனும்3 மறியாமைப்    
    பொங்குஞ் சுடரா னவர்கோயில்    
    கொங்கிற் பொலியும் புனல்கொண்டு4    
    அங்கிக் கெதிர்காட் டுமையாறே.    1.36.9
        
    துவரா டையர்தோ லுடையார்கள்    
    கவர்வாய் மொழிகா தல்செய்யாதே    
    தவரா சர்கள்தா மரையானோ    
    டவர்தா மணைஅந் தணையாறே.    1.36.10
        
    கலையார் கலிக்கா ழியர்மன்னன்    
    நலமார் தருஞா னசம்பந்தன்    
    அலையார் புனல்சூ ழுமையாற்றைச்    
    சொலுமா லைவல்லார் துயர்வீடே.    1.36.11
        
    திருச்சிற்றம்பலம்.    
    பாடம்: 1. வரையார்தவையாறே, 2. சேர்தரமுத்தம் சேர்தரு முத்தம்.    
         3. சங்கத்தயனும், 4. புனல்கொண்ட.    

 

Related Content

Help in Distress

Saw Their Holy Feet, the Unseen I saw !!

The Best Abode of God

The support for orphans

You are all my feelings !