சிவமயம்
(பிரதிகளிற் காணப்படும் வேற்றுமைகள் ( ) என்று பகவரைகளுள் தரப்பட்டுள்ளன)
1. சிவபுராணம் - சிவனது அநாதி முறைமையான பழமை; என்பது. சிவனது அருவநிலைமை கூறுதல்
(சிவபுராணமும் கீர்த்தித் திருவகவலும் சிவனுடைய உயிர், அருள் நிலைமை என்பது அருவநிலை).
2. கீர்த்தித்திருவகவல் - சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை (சிவனுடைய அருளின் முறைமை).
3. திருவண்டப் பகுதி - சிவனுடைய தூலசூக்குமத்தை வியந்தது (சிவனுடைய தூலசூக்குமத்தை விகற்பித்தது,
யோகநூல் தூல சூக்குமத்தை வியந்தது).
4. போற்றித் திருவகவல்- சகத்தினுற்பத்தி; என்பது, பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல் (ஞானஞ் சகத்து உற்பத்தி.)
5. திருச்சதகம் - பத்தி வைராக்கிய விசித்திரம்; என்பது, பத்து வகையாக இரட்சித்த முறைமை;
1. மெய்யுணர்தல்-தேகாதி பிரபஞ்சங்களைக் கண்டு நீங்கல்;
2. அறிவுறுத்தல்- பொறியோடே கூட்டுதல், அருள் தரிசனம், குருதரிசனம்;
3. சுட்டறுத்தல்- தன்செயலறுத்தல் (ஆனந்தத்தழுந்தல்);
4. ஆத்தும சுத்தி - அனுபவத்தழுந்தல் (ஆனந்தபரவசமாதல்);
5. கைம்மாறு கொடுத்தல் - தன்னைச் சிவத்தினிடத்திலே கொடுத்தல் (ஆனந்தாதீதமாதல்);
6. அனுபோகசுத்தி- சுகமேலீடு (சுட்டறிவொழித்தல்);
7. காருணியத்திரங்கல்- சிவனுடைய வெற்றிப் பாட்டிரங்கல் (ஆத்தும சுத்தி);
8. ஆனந்தத் தழுவல் (கைம்மாறு கொடுத்தல்);
9. ஆனந்த பரவசம் (அனுபவசுத்தி);
10. ஆனந்தா தீதம்.
6. நீத்தல் விண்ணப்பம்- பிரபஞ்ச வைராக்கியம் (நீத்தல் விண்ணப்பமும் திருவெம்பாவையும் தெசசத்திகளை
விகற்பித்தது. தெச சத்திகளாவன: அம்பிகை, ஞானாம்பிகை, கௌரி, கங்கை, உமை, பராசக்தி, ஆதிசக்தி,
இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி ஆக பத்து )
7. திருவெம்பாவை - சத்தியை வியந்தது; சத்திகளாவார்: அம்பிகை, கணாம்பிகை, கௌரி, கங்கை ,உமை,
பராசத்தி, ஆதிசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி என ஒன்பதின்மர் (தெசசத்திகளையும் வியந்தது).
8. திருவம்மானை- ஆனந்தக் களிப்பு; என்பது, சுகமேலீடு (ஆனந்தக் கனிவு,)
9. திருப்பொற்சுண்ணம் - ஆனந்த மனோலயம்; என்பது, தானன்றி நிற்றல் (திருச்சுண்ணம் என்பது தன்னறி நிற்றல்).
10. திருக்கோத்தும்பி - சிவனோ டைக்கியம்; என்பது, சிவனுடன் இடையறாது நிற்றல்.
11. திருத்தெள்ளேணம்- சிவனோடடைவு; என்பது, சிவனுடனே சென்று கூடுதல் (சிவனுடைச் செலவு).
12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம்; என்பது, சிவனுடைய அருட்சத்தி விளையாட்டு.
13. திருப்பூவல்லி- மாயா விசய நீக்குதல்; என்பது, மாயையினுடைய பலத்தை மறுத்தல் (மாயா விஷயமறுத்தல்).
14. திருவுந்தியார் - ஞானவெற்றி அருட்சத்தியினுடைய சாமர்த்தியம். (ஞான வெற்றிப்பாடு)
15. திருத்தோணோக்கம் - பிரபஞ்ச சுத்தி; என்பது, ஆன்மாக்களைச் சுத்திகரித்தல்.
16. திருப்பொன்னூசல் - அருட்சுத்தி; என்பது, அருளோடு கூடுதல் (அருள் கூட்டம் என்பது அருளோடே கூடினது).
17. அன்னைப்பத்து- ஆத்தும பூரணம்; என்பது, ஆன்மா சிவனுடனே நிறைதல் (ஆத்தும சம்பூரணம்).
18. குயிற்பத்து - ஆத்தும விரக்கம்; என்பது, சிவனைக் கண்டிரங்குதல் (ஆத்தும விகாரம் என்பது சீவனைக் கண்டிரங்குகிறது).
19. திருத்தசாங்கம்- அடிமைகொண்ட முறைமை; என்பது, பத்தடையாளம் (பத்து வகையாய் அடிமை கொண்டது).
20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி; என்பது, ஏகமாகிய திரோதாயி மறைப்பான மலம் நீக்குதல்.
21. கோயில் மூத்ததிருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம் (சிவானந்தத்தில் திகைப்பு என்பது சிவானந்தம் அளவறுக்கொண்ணாமை).
22. கோயிற்றிருப்பதிகம் - அனுபோக விலக்கணம்; என்பது, சிவானு பூதிக் கடையாளம்.
23. செத்திலாப்பத்து - சிவானந்த மளவறுக் கொணாமை என்பது, சிவானந்த மணுகிச் செயிக்கப்படாமை (சிவானந்த மலைவு).
24. அடைக்கலப்பத்து - பக்குவ நிண்ணயம்; என்பது, வித்து மங்குரமும்போல என்றல் (வஸ்து நிண்ணயம்).
25. ஆசைப்பத்து - ஆத்தும விலக்கணம்; என்பது, ஆன்ம பேதத்தையறிதல் (ஆத்தும ரூபத்தை அறிதல்).
26. அதிசயப்பத்து - முத்தியிலக்கணம்; என்பது, மோட்சத்தின் அடையாளம்.
27. புணர்ச்சிப்பத்து - அத்துவித விலக்கணம்; என்பது, ஒன்றுமல்ல இரண்டுமல்ல என்றல் (அத்துவிதானந்த இலக்கணம்).
28. வாழாப்பத்து - முத்தி யுபாயம்; என்பது, பிரபஞ்சத்தைவிட்டுப் பரபோகத்தைக் கூடுதற்குபாயம் (மோட்ச உபாயம், மோட்ச லட்சணம்).
29. அருட்பத்து - மகாமாயா சுத்தி; என்பது மாயையைச் சுத்தி பண்ணுதல்.
30. திருக்கழுக்குன்றப் பதிகம் - குருதரிசனம்; என்பது, பசுத்துவங் கெட்டவிடம் (சற்குரு தெரிசனம்).
31. கண்டபத்து - நிருத்த தரிசனம் (பரமானந்த நிருத்த தரிசனம்)
32. பிரார்த்தனைப் பத்து- சதாமுத்தி; என்பது, ஆன்மாக்களுக்கு முத்தி நிச்சயம் பண்ணுதல் (செகமுத்தி).
33. குழைத்த பத்து - ஆத்தும நிவேதனம்; என்பது, நேயத்தோடே ஒன்றினது (குழைத்தல்)
34. உயிருண்ணிப்பத்து- சிவானந்த மேலிடுதல்; என்பது, நேயமேலிடுதல்
35. அச்சப்பத்து - ஆனந்த முறுதல்; என்பது, நேயத்திலே ஒன்றுபட்டுச் சிக்கென அழுந்தினது. ( ஆனந்த முற்றுதல்)
36. திருப்பாண்டிப்பதிகம்- சிவானந்த விளைவு என்பது, சுகமேலீடு ( திருப்பாண்டி விருத்தம்; சிவானந்த விரைவு).
37. பிடித்தபத்து - முத்திக் கலப்புரைத்தல்; என்பது மற்றுள்ள ஆன்மாக்களுக்கு முத்தியின் சுகத்தைச் சொல்லியது.
38. திருவேசறவு- சுட்டறிவொழித்தல்; என்பது, தன்செயலற நிற்றல் (ஏசற்பத்து சுட்டறிவு ஒழிதல்).
39. திருப்புலம்பல்- சிவானந்த முதிர்வு; என்பது, சிவானந்தம் பெறாவிச்சை (சிவானந்தமிடி).
40. குலாப்பத்து - அனுபவமிடையீடுபடாமை; என்பது, விட்டுப்பற்றாமல் ஒரு தன்மையாவது (அனுபவம் இடையறாமை)
41. அற்புதப்பத்து -அனுபவம் ஆற்றாமை; என்பது, அனுபவமுற்றுதல் பொறாமை, விம்முதல் .
42. சென்னிப்பத்து - சிவவிளைவு; என்பது, சீவனுக்கு நிச்சயப்படுதல் (சிவனுக்கு நிச்சயப்படுதல்)
43. திருவார்த்தை- அறிவித்தன்புறுதல்; என்பது, உன்னாலறியப்படாத துரைக்க அறியென்றது
(அறிவிக்க அறிதல் என்பது உன்னால் அறியப்படாதது நானாக அறி என்றது).
44. எண்ணப் பதிகம்- ஒழியா வின்பத்து வகை; என்பது, தேகமுதலாகிய ஆசையை அறுத்தல் (எண்ணப்பத்து அவாவினை ஒறுத்தல்).
45. யாத்திரைப்பத்து- அனுபவாதீத முரைத்தல்; என்பது, அனுபவத்திலதீதப்பட்டுப் போனது.
46. திருப்படையெழுச்சி - பிரபஞ்சப்போர்; என்பது, மலவிளைவற்றது.
47. திருவெண்பா- அணைந்தோர் தன்மை; என்பது, பரிசவேதிபோல என்றது.
48. பண்டாய நான்மறை - அனுபவத்துக்கையமின்மை உரைத்தல் (அனுபவத்துக் கைம்மாறுரைத்தல் இப்படி
இரட்சிக்கப்பட்ட ஆசாரியற்குக் கைம்மாறிலை என்றது).
49. திருப்படையாட்சி- சீவ உபாதியொழித்தல்; என்பது கிரியா சூனியம் (பிரபஞ்சத்தில் சீவ உபாதி ஒழித்தல்).
50. ஆனந்தமாலை- சிவானுபவ விருப்பம்; என்பது, சிவனாந்த மேலீட்டில் கிரியாசத்தியழிவுரைத்தல்
(மின்னேரனைய பூங்கழல் வழக்கழித்தல் வழக்கறிவுரைத்தல்).
51. அச்சோப்பதிகம் - அனுபவவழியறியாமை; என்பது, அனுபவத்ததிசயம்
(அச்சோப்பத்து- அனுபவம் வந்தவழி அறியாமை அனுபவவதிசயம் என்பது, அனுபவம் வழியறியாமை).
திருச்சிற்றம்பலம்.