பொதுவாகக் கோயில்களில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். அதிகாலை, 6:00 மணிக்கு, திருவனந்தல், 8:00 மணிக்கு, காலசந்தி, பகல், 12:00 மணிக்கு உச்சிகாலம் மாலை, 6:00 மணிக்கு சாயரட்சை, இரவு, 8:00 மணிக்கு இரண்டாம் காலம், 9.00 மணிக்கு அர்த்தஜாமம் என்று ஆறு கால பூஜை நடைபெறும்.
தேவர்களும் இதே போல, ஆறுகால பூஜையை நடத்துவார்கள். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒரு ஆண்டு. தட்சிணாயணம், உத்ராயணம் என்ற இருவகை காலப்பிரிவுகள் அவர்களுக்கு இரவு பகல் ஆகும். தேவராஜனான நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், ஆறு கால பூஜையாக நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள்.
அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி. காலைப் பொழுது, மாசி மாதம் ஆகும். மதியம் – சித்திரை திருவோணம் அன்று. மாலைப்பொழுது – ஆனி ஆகும். இரவு நேரம் – ஆவணி மற்றும் அர்த்தஜாமம் – புரட்டாசி என்பது போன்றதாகும். அதன் பொருட்டே நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள்.
1. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில், மாலையில் அபிஷேகம்
2. ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்
3. ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம்.
4. புராட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில், மாலையில் அபிஷேகம்.
5. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்
6. மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம்.
கூத்தப் பெருமானை தரிசிக்க முத்தி. ஐந்தொழில் செய்து ஆடும் பெருமானின் அபிஷேகங்களைக் கண்டுமகிழ்தல் பெரும் பேறு தரும்.