logo

|

Home >

hindu-shaivaite-festivals-and-vratas >

masi-magam

மாசி மகம்

  • மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும்.
  • ஒருமுறை சமுத்திரராஜனான வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கடலில் ஒடுங்கி இருந்தார். வருணன் செயல்படாததால் உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்து உயிர்களும் துன்புற்றன. தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்கும் படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் வருண பகவானை பிரம்மஹத்தியிலிருந்து விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசிமகத் திருநாளாகும். விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து இந்த நாளில் அனைவரும் புனித நீராட வேண்டும் என்றும் அவ்வாறு நீராடுவோருக்கு நல்லருள் கிடைக்கவேண்டும் என்றும் சிவபெருமானிடம் வரம் கேட்டார். எனவே மாசி மகம் நீராடல் சிறப்பு பெற்றது.
  • மாசிமகத்தன்று ஏழு கடல்களும் திருநல்லூரில் சப்தசாகர தீர்த்தத்தில் ஒன்று கூடுவதால் அங்கு நீராடி வழிபடுதல் சிறப்பு.
  • மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சிறப்பான மாசி மகம் ஆகும்.
  • திருஞானசம்பந்தா் தன்னுடைய மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாட்டு விழாவைப் பற்றிக் கூறுகிறார்.
  • முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி.1009) திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை மகாதேவா்க்கு மாசிமகத்தன்று பெருந்திருவமுது படைக்கப்பட்டதாகவும், அதற்காக ஒன்றரை மா அளவு நிலம் நல்கப்பட்டு இரண்டு கல அரிசி கிடைக்க வழி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
  • இராசேந்திர சோழன் 4-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1016) நாகப்பட்டினக் கூற்றத்து ஊராா்கள் இறைவனது மாசிமக விழாவின் ஆறாம் நாள் செலவுகளுக்காக நிலமளித்த செய்தியினை அவ்வூரிலுள்ள கல்வெட்டின் மூலமாக அறியலாம்.
  • முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1126) தளபதி நரலோக வீரன் சிதம்பரம் கோயிலில் செய்த திருப்பணிகளை அழகான தமிழ்ப்பாடல்களாகவும், சமஸ்கிருதச் சுலோகங்களாகவும் சிதம்பரம் நூற்றுக்கால் மண்டபத்து தூண்களில் கல்வெட்டாக பொறித்துள்ளார். அவற்றில் ஒரு பாடலில் மாசிக் கடலாடலைப் பற்றியும், அதற்காக அம்மன்னன் அமைத்த மண்டபம், பெருவழி ஆகியவற்றையும் பற்றிக் கூறுகிறது.
  • திருமறைக்காட்டில் ஏழு நாள் கொண்டாடப்பட்ட மாசித் திருநாளின் போது இறைவன் மோகனதேவருக்கு நாள் ஒன்றுக்கு பதின்கலமாக எழுபது கலம் நெல் தானமாக அளிக்கும் வகையில் பாலையூா் கிழவன் நாரணன் காடன் நிலம் தந்துள்ளதைப் பற்றியும், அம்மன்னனே இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மாசிமகத்துக்கு பெருந்திருவமுது இறைவனுக்கு படைத்திட வேண்டி இன்னும் கூடுதலாக நிலமளித்துள்ளதைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
  • குடுமியான் மலையில் உள்ள குலோத்துங்கன் மற்றும் பரகேசரி பட்டமுடைய மற்றொரு சோழ மன்னன் ஆகியோரின் கல்வெட்டுக்கள் மாசி மக நாளில் பிராமணா்களுக்கும், பதினைந்து சிவனடியாா்களுக்கும் உணவு வழங்க 15 கழஞ்சு பொன் முதலாக வழங்கப்பட்டதைப் பற்றிக் கூறுகின்றன. 
  • மாசிமக விழாவின்போது தெய்வங்கள் நீராடுவதும் அதன் பிறகு அருகில் அமைக்கப்பட்ட மண்டபம், தோப்பு ஆகியவற்றில் காட்சி தருவதும் அத்தெய்வங்களுக்கு பெருந்திருவமுது படையல் படைக்கப்படுவதும் மரபு என்று மேற்சொன்ன கல்வெட்டுச் செய்திகள் விளக்குகின்றன.

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
அடல்ஆனே றூரும் அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே  போதியோ பூம்பாவாய். 2.047.6

See Also:

Related Content

மகாமகம்

Krishna Yajur Veda Namakam - Discourse - Subramanian Sharma