சோமவார விரதம் சிவபெருமானுக்கு உகந்த எட்டு மகா விரதங்களில் ஒன்றாகும். இந்த விரதம் ஸ்கந்த புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. உமையோடு இருந்து திருவருள் புரிவதால் சிவபெருமானுக்கு சோமன் (ஸஹ உம = ஸோம) என்று திருநாமம் உண்டு. சிவ அஷ்டோத்தரத்தில் சோமாய நமஹ என்று இறைவன் வணங்கப்படுகிறார்.
அனுஷ்டிக்கும் முறை
கார்த்திகை மாதத்தில் சோமவார தினத்தன்று, அதாவது திங்கட்கிழமையன்று, சூரியோதயப்பொழுதில் கண் விழித்தெழுந்திருந்து பரமசிவனை தியானித்து வணங்க வேண்டும். பிறகு நிர்மலமான தண்ணீரில் நீராடி, முறைப்படி சந்தியாவந்தனமும் செய்து, சகல மங்களங்களையும் கொடுக்கவல்லவரான சிவபெருமானை பூஜித்து சிவ பக்தர்களையும், பதிவிரதையான பெண்மணிகளையும் உமாதேவி மகாதேவர்களாகவே கருதி, பூஜை செய்து, அவர்களுக்கு உணவு படைத்து, தான் ஒரே ஒரு தடவைதான் உணவு உட்கொள்ள வேண்டும். சிவபூஜை செய்ய இயலாதவர்கள் என்றால் அத்தகையவர்கள் தெளிந்த நீரில் நீராடி நித்திய கர்மாக்களையும் செய்து முடித்து, மங்களமான சிவாலயத்திற்குச் சென்று பார்வதி மணாளனை வணங்கி வழிபடவேண்டும். அப்பெருமானுக்குச் சுத்தமான பஞ்சாமிருதம் முதலானவற்றால் அபிஷேகம் செய்வித்து, நல்ல வில்வ தளங்களால் அர்ச்சனை செய்வித்து, பணத்தைப் பெரிதாகப் பாராமல் திவ்வியமான ஆகாரப் பொருட்களையும் நைவேத்தியம் செய்வித்து, சிவபக்தர்களான அந்தணோத்தமர்களுக்கு உணவு படைத்து விட்டுப் பிறகுதான், தான் ஆகாரத்தை உட்கொள்ள வேண்டும். அதிலும் அப்படி உட்கொள்ளும் ஆகாரம் எந்த வகையிலும் விரதத்தைக் கெடுக்காத விதத்தில் சத்வமாக அளவாக இருக்கவேண்டும். ஆகாரம் எதையுமே உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பதும் நல்லது தான்! இவ்வாறு சிறப்பு வாய்ந்த சோமவார விரதத்தை எவனொருவன் சாஸ்திர முறைப்படி அனுஷ்டித்து வருகிறானோ, அவன் சகல பாபங்களிலிருந்தும் விடுபடுவான். இந்த உலகில் அனுபவித்த மகிழ்ச்சிருந்து விடுபட்டு கடைசியில் கைலாசத்தையும் அடைந்து விடுவான்.
சோமவார விரதத்தின் சிறப்பு
- பூர்வீக காலத்தில் பதிவிரதத் தன்மை மிகுந்த ஸீமந்தினி என்னும் அரசகுமாரி ஒருத்தி, சோமவார விரதத்தை விதிமுறைப்படி அனுஷ்டித்து வந்தாள். அப்போது இரண்டு பிரம்மசாரிகள் கபடத்தனமாகத் தம்பதிகள் போன்ற வடிவத்தில் உருமாற்றம் செய்துகொண்டு அங்கே வந்தார்கள். அப்போது அவ்விரு வரையும் உண்மையான தம்பதிகள் என்றே தன் மனதில் உறுதிப்படுத்திக் கொண்டு அந்த ராஜகுமாரி பூஜை செய்தாள். அதன் மூலமாக இரு பிரம்மச்சாரிகளும் உண்மையாகவே ஆண் பெண் பாலகர்களாக மாறி நிஜ தம்பதிகளாகவே ஆகிவிட்டார்கள். இத்தகைய அற்புதத்தை சோமவார விரதத்தின் மூலமாக அரசகுமாரி சீமந்தினி செய்திருக்கிறாள்.
- தவசீலரான வசிஷ்டரும் இந்த விதத்தை அனுஷ்டித்த மகிமையாலேயே கற்புக்கரசியான அருந்ததியைத் தம் பத்தினியாக அடைந்தார்.
- முன்பொரு சமயம் 'விபு' என்ற அரசன் சிறப்பு வாய்ந்த சோமவார விரதத்தை அனுஷ்டித்துத் தனது பிள்ளை இல்லாக் குறையைத் தீர்த்துக் கொண்டான்.
- சோம சர்மா என்ற அந்தணரும் இந்த விரதத்தை அனுஷ்டித்த மகிமையால் அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஈஸ்வரனின் அருளால் அடையப் பெற்றார்.
- வஜ்ரபாகு என்ற அரசனொருவனுக்கு ஏராளமான பகைவர்கள் இருந்து வந்தார்கள். அப்போது அந்த அரசன் இந்த சோமவார விரதத்தை அனுஷ்டித்து, பகைவர்கள் அற்றவனாக ஆகிவிட்டான்.
- கீசகன் என்ற அந்தணன், இந்தச் சோமவார விரத மகிமையால் யமனைக் கூட வென்றுவிட்டான்.
- சிம்மன் என்ற அரசன், இந்த விரதத்தை மேற்கொண்டதன் விளைவாக அஷ்ட ஐஸ்வரியங்களையும் அடையப் பெற்றான்.
- வேதாங்கன் என்பவன் இந்தச் சிறந்த விரதத்தை அனுஷ்டித்துத் தன் மனைவியுடனும், மானிட சரீரத்துடனேயே சிவலோகத்திற்குச் சென்றான்.
- தர்மவீரியன் என்பவன் இந்தச் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து மோட்ச சாம்ராஜ்யத்திற்குச் சென்றான்.
- கர்கசீலன் என்பவன் இந்த விரதத்தைப் புத்திர பெளத்திரர்களோடு அனுஷ்டித்து, அதன் பயனாக இந்த உலகத்தில் சகலவித போக பாக்கியங்களையும் அனுபவித்து விட்டுப் பிறகு அவர்களோடு சேர்ந்து சிவலோகத்தை அடைந்து, மோட்சத்தையும் அடைந்தான்.
- சத்தியசந்தன் என்பவனின் மகளான விராடன் என்பவன், மஹாபாபியாகவும், திருட்டுத் தொழிலில் ஈடுபட்டும், பரஸ்திரீகளிடம் சகவாசம் கொண்டும் மகாதுஷ்ட மார்க்கங்களைத் திரிந்து வந்தான். அவன் ஒருநாள் வேசியொருத்தியின் வீடு தேடிச்சென்றபோது, அங்கே ஆயுதபாணிகளாகக் காவலர்கள் வந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் விராடன் அஞ்சி காட்டை நோக்கி வேகமாக ஓடினான். அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. தினம் பூராவும் சாப்பிடுவதற்கு ஆகாரம் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவன் அங்குள்ள கிழங்குகளையும், காய்கனிகளையும் பிடுங்கித் தின்றுவிட்டு, அந்தக் காட்டில் உள்ளே ஒளிந்து திரிந்து கொண்டிருந்தான். அதற்கு மறுநாள் ஒரு நச்சுப்பாம்பு அவனை நன்றாகக் கடித்தது. அதனால் விராடன் விஷம் தலைக்கேற உயிர் துறந்தான். அப்போது அவனைக் கட்டியிழுத்துக்கொண்டு போவதற்காக யமதூதர்கள் அங்கு விரைந்து வந்தார்கள். அதே சமயத்தில் அங்கு வந்திருந்த சிவதூதர்கள், யமதூதர்களை அடித்து விரட்டி விட்டு, விராடனை ஒரு திவ்விய விமானத்தில் ஏற்றிக்கொண்டு சிவலோகம் நோக்கிச் சென்றனர். விரட்டப்பட்ட எமதூதர்களோ, தங்கள் தலைவனிடம் விரைந்து வந்து தகவலைத் தெரிவித்தனர். யமன் அங்கிருந்து சட்டென்று புறப்பட்டுச் சென்ற பாதி தூரத்தில் சிவகணங்களை நோக்கி, 'சிவகணங்களே! இந்த மகாபாபியை எதற்காக திவ்விய விமானத்தில் ஏற்றிக்கொண்டு செல்கிறீர்கள்? இவன் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் செய்ததாக எனக்குத் தெரியவில்லையே?' என்று வினவினன். அதைக் கேட்டதும் சிவகணங்கள் அவனை நோக்கி, 'யமனே! இவன் சோமவாரத்தில் மழையால் நீராட்டப்பெற்று, அன்னத்தை ஆகாரமாக உட்காள்ளாமல், கிழங்கு காய் உட்கொண்டு ஏதோ புண்ணிய வசத்தாலும், தெய்வ வசத்தாலும் இவனுக்கு இவனறியாமலேயே சோமவார விரதத்தை அனுஷ்டிக்கும்படி நேர்ந்துவிட்டது. அந்தப் புண்ணிய மகிமையால் தான் இவனுக்குச் சிவ லோகத்தை அடையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சிவ லோகத்தில் இவன் நீண்ட காலம் தங்கியிருந்து விட்டுக் கடைசியில் மோக்ஷத்தையும் அடையப் போகிறன் என்பதில் சந்தேகமே இல்லை. சிவபெருமானின் உத்தரவின் பேரிலேயே நாங்கள் இங்கே வந்து சேர்ந்தோம். ஆகையால் நீ வீணாக விசாரிக்காமல் உன் உலகத்திற்கே திரும்பிச் சென்று விடுவதுதான் நல்லது!' என்று கூறினார்கள். அவ்வார்த்தைகளைக் கேட்டதும் யமன் அஞ்சி நடுங்கியவனாக சிவதூதர்களையும், அந்தப் புண்ணிய புருடன் விராடனையும் வணங்கி விட்டுத் தன் உலகத்திற்குப் போய்ச் சேர்ந்தான்.
- சந்திரனும் இந்த விரதத்தை அனுஷ்டித்து, பரமசிவனிடமிருந்து சந்திரன் என்ற தன்மையை அடைத்தான். அப்போது அவனுக்கு எதிரில் சிவபெருமான் காட்சியளித்தவுடன், அவன் அவரை மகிழ்ச்சிப் பெருக்கோடு வணங்கி, ''ஈசனே ! இந்த மகிமை வாய்ந்த விரதத்திற்குச் சோமவாரவிரதம் என்ற பெயர் உண்டாக வேண்டும். இந்த சோமவாரவிரதத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு, அவர்கள் கோரும் சகல மனோபீஷ்டங்களும் நிறைவேறி, முடிவில் மோட்சமும் கிடைக்கவேண்டும்!' என்று வேண்டிக் கொண்டான். அவ்வாறே அவன் வேண்டிய வரத்தைக் கொடுத்து விட்டு சிவபெருமான் மறைந்தார்.
ஆகையால் சோம வாரத்தில் சிவபெருமானுக்குப் பிடித்தமான இந்தச் சிறந்த விரதத்தை எவர்கள் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்களுக்கு அப்பெருமான் தம் தேவியான பார்வதி தேவியோடு பிரத்யட்சமாகி, மனதின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பார் என்பது நிச்சயம். சிவசங்கரருக்குப் பிரியமான இந்த சோமவார விரத மகாத்மியத்தை எவர்கள் படிக்கிறார்களோ, கேட்கிறார்களோ, அல்லது கேட்கச் செய்கிறார்களோ, அவர்கள் இந்த உலகத்தில் சகல போகங்களையும் குறைவின்றி அனுபவித்து மகிழ்ந்திருந்துவிட்டுக் கடைசியில் மோட்சத்தையும் அடைவார்கள்.
See Also: