logo

|

Home >

hindu-hub >

temples

திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: சிஷ்டகுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சூரிய தீர்த்தம். பெண்ணையாறு

வழிபட்டோர்:சுந்தரர், அப்பர், சேக்கிழார், நாரதர், வசிட்டர், அகத்தியர், வீமன், சூரியன் ஆகியோர்.

Sthala Puranam

Turaiyur temple

  • அகத்தியர் வழிபாடு செய்த தலம்.
  • வீமன் வழிபட்டது.
  • சுந்தரர் காலத்தில் ஊரில் தென்பால் ஓடிய பெண்ணையாறு; இன்று வடபால் ஓடுகிறது. (பழைய பெண்ணையாறு, மலட்டாறு என்னும் பெயரில் தென்பால் உள்ளது.)
  • இத்தலத்திற்கு வந்த சுந்தரரை, இறைவன் கிழவடிவில் தோன்றி ஆட்கொண்ட இடம் துறையூருக்கு அண்மையில் உள்ள 'கிழப்பாக்கம்' என்பதாகும். அவ்விடத்தில் சிவலிங்கமும் கோயிலும் உள்ளன. இவ்வாறு ஆட்கொண்ட திருமேனியே பசுபதீஸ்வரர் - பூங்கோதை நாயகி எனப்படுகிறது.
  • திருவெண்ணெய் நல்லூரில் இருந்து சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவபெருமானை வேண்டிப் பதிகம் பாடினார். அப்போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார். சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும் வயதான் தம்பதியைக் காணவில்லை. அப்போது "நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்" என்று அசரீரி வாக்கு கேட்க, சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார்.
  • சுந்தரர் கோயிலைப் பார்த்துத் தரிசிக்க, அப்போது இறைவன் கோயில் விமானத்திலிருந்து ரிஷபாரூடராய்க் காட்சி தந்ததாகவும் சொல்லப்படுகிறது. (இதற்கேற்ப இருந்த கோயில் அமைப்பு பிற்காலத்தில் திருப்பணி செய்தோரால் மாற்றப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.)

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சுந்தரர்    -    1. மலையார் அருவித் திரள் (7.13); பாடல்கள்      :    அப்பர்     -       நறையூரிற் சித்தீச் சரம் (6.70.10),                                         பிறையூருஞ் சடைமுடியெம் (6.71.4);                   சேக்கிழார்   -       சிவன் உறையுந் திருத்துறையூர் (12.5.79,80 & 81)  தடுத்தாட்கொண்ட புராணம்.

Specialities

  • சுந்தரர் தவநெறி வேண்டிப்பெற்ற தலம்.
  • 'சிவஞானசித்தியார் ' என்னும் சாத்திர நூலைப் பாடிய அருணந்தி சிவாசாரியார் (சகலாகம பண்டிதர்) அவதரித்து வாழ்ந்த தலம். கோயிலுக்கு நேர் எதிரில் அருணந்தி சிவாசாரியாரின் சமாதிக்கோயில் உள்ளது.
  • இப்பதி பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது; மேற்கு நோக்கிய சந்நிதி.
  • அருணகிரிநாதரின் திருப்புகழும், வண்ணச் சரபம் தண்டபாணிசுவாமிகள் பாடல்களும் இத்தலத்திற்கு உள்ளது.
  • இங்கு சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் வடக்கு நோக்கியும் இருப்பது நினைந்து தொழத்தக்கது.
  • ரிஷபாரூடர் தவநெறி தந்த காட்சியும், சுந்தரர் கைகூப்பி வணங்கும் நிலையும் காணலாம்.
  • நால்வர் மண்டபத்தின் தூண் ஒன்றில் - இத்தலத்திற்கு சுந்தரர் பெண்ணையாற்றை ஓடத்தில் கடந்து வந்ததாகச் சொல்லப்படும் ஐதீகம் சிற்பமாக உள்ளது.
  • தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு தவநெறி தந்த காட்சி, சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது.
  • அம்பாள் சந்நிதிக்குப் எதிரில் உள்ள தலமரத்திற்குப் பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.
  • இத்தலத்து பிரதோஷத்திற்கு நந்திக் கொடி கட்டப்படுகிறது.
  • வைகாசி 10 நாள் பிரம்மோத்சவம் 
  • இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் விக்கிரமசோழ தேவர், `திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழன், பரகேசரி வர்மன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன் இவர்கள் காலங்களிலும்; விசயநகர வேந்தர்களில் அச்சுததேவ மகாராயர், தேவராயர் மகனாகிய மல்லிகார்ச்சுன தேவர், வீரநரசிம்ம ராயர், கிருஷ்ணதேவ மகாராயர், நரசிங்க தேவ மகாராயர் இவர்கள் காலங்களிலும்; சம்புவராயரில், இராச நாராயணச் சம்புவராயன் காலத்திலும் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் உள்ளன.
  • இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் தவநெறி ஆளுடையார் என்னும் திருப்பெயரால் குறிக்கப்பட்டுள்ளனர். இவ்வூர், சோழ மன்னர் கல்வெட்டுக்களில் ராஜ ராஜ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருத்துறையூர் என்றும் ராஜ ராஜ வளநாட்டு, திருமுனைப்பாடி, கயப்பாக்கை நாட்டுத் திருத்துறையூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. விசயநகர வேந்தர் காலத்தில் ராஜாதிராஜவள நாட்டு, திருமுனைப்பாடி கயப்பாக்க நாட்டு, திருவதிச்சீமை திருத்துறையூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
  • அச்சுததேவ மகாராயர் காலத்தில் இராமபட்டர் ஐயன், அரசனின் பொருட்டு, குறட்டி என்னும் ஊரை, தவநெறி ஆளுடையார்க் கோயிலைப் பழுது பார்ப்பதற்கும், இறைவர்க்கு வழிபாட்டிற்குமாகக் கொடுத்துள்ளான். இக்கோயிலில் துவார பாலகர்களை எழுந்தருளுவித்தவர் கங்கைய மாணிக்கம் என்பவராவர். அவர்களுக்கு வழிபாட்டிற்காக, பெண்ணையாற்றின் வட கரையில் 500 குழி நிலத்தையும் இவர் கொடுத்துள்ளார். நரசிங்கதேவ ராயர், தம்முடைய அவசரம் அண்ணமராசர் மூலம், திருத்துறையூர் தவநெறி ஆளுடைய நாயனார், வீமேச்சரம் உடையார், இராசூர் உடையார் இவர்களுக்கும், இவ்வூர்ப்பற்றில் உள்ள வேறு கோயில்களுக்கும், மாதந்தோறும் மகநாளில் வழிபாட்டிற்கும், பல ஆண்டுகளாகக் கோயிலில் இடிந்து கிடந்த பகுதிகளைக் கட்டுவதற்கும் ஆக ஏற்பாடு செய்திருந்தார். வெண்குன்றக் கோட்டத்து, தெள்ளாற்று நாட்டுத் தெள்ளாறு என்னும் ஊரில் இருந்த சிவப் பிராமணன் ஒருவன் தவநெறி ஆளுடையார் கோயிலுக்குச் சந்தி விளக்கின்பொருட்டு நிவந்தம் செய்திருந்தான்.
  • திருத்துறையூர் என்னும் தலத்தை வீமன் பூசித் துள்ளான் என்று தலவரலாறு கூறுவதற்கு ஆதாரமாக, வீமேச்சரம் உடையார் என்னும் பெயருள்ள திருமேனி ஒன்று, நரசிங்க தேவ மகா ராயரின் விகுருதி, ஐப்பசி 12 ஆம் நாளில் ஏற்பட்ட கல்வெட்டுக் குறிப்பிடுவது பாராட்டத்தக்கது. இந்த விகுருதி வருஷம் சகம் 1393 அதாவது கி.பி. 1471 ஆகும். இந்த நரசிம்மவர்மன் திருத்துறையூரைச் சுற்றியுள்ள கிராமங்களைத் தவநெறி ஆளுடையார்க்குச் சர்வமான்யமாகக் கொடுத்தவன் ஆவன்.(A.R.E. 1925 - 26 Part II )

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு பண்ருட்டி - புதுப்பேட்டை வழியாக அரசூர் செல்லும் சாலையில் 10-கி. மீ. சென்று "கரும்பூர்" சாலையில் திரும்பி 5-கி. மீ. சென்று இத்தலத்தையடையலாம். பண்ருட்டியிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இத்தலம் விழுப்புரம் - கடலூர் புகைவண்டி மார்க்கத்தில் உள்ள புகைவண்டி நிலையமுமாகும். தொடர்பு : 04142 - 248498, 09444807393.

Related Content

திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) தலவரலாறு

திருச்சோபுரம் (தியாகவல்லி) தலவரலாறு

திருஅதிகை வீரட்டானம் (திருவதிகை) தலவரலாறு

திருநாவலூர் தலவரலாறு

திருநெல்வெண்ணெய் (நெய்வெணை) தலவரலாறு