இறைவர் திருப்பெயர்: உமாமகேஸ்வரர், பூமீஸ்வரர், பூமிநாதர்.
இறைவியார் திருப்பெயர்: தேகசௌந்தரி, அங்கவளநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : பிரம தீர்த்தம். சக்தி தீர்த்தம்
பூமி தீர்த்தம்
ஆலயத்தின் எதிரே பூமி தீர்த்தம் அல்லது பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய குளம் உள்ளது. இக்குளம் பூமிதேவியால் உண்டாக்கப்பட்டது. வைகாசி விசாகம் மற்றும் மார்கழி திருவாதிரைப் பெருவிழாக்களில் பக்தர்கள் இதில் நீராடுவர்.
வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார்
- முற்காலத்தில் ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமிதேவியைப் பாதாளத்திற்குக் கொண்டுச் சென்றான். அவளை மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டு மேலே கொணர்ந்தார். பின் அவர் பூமிதேவிக்கு ஷடாட்சர மந்திரத்தை உபதேசித்து மேலும் நிலைபெற்று இருக்க திருநல்லம் பதியில் சிவபெருமானைப் பூசை செய்யுமாறு அறிவுறுத்தினார். காவேரி நதிக்கரையில் சூரியன் பூசித்த தலத்திற்குத் தெற்கே இரண்டு க்ரோச தூரத்தில் ஒரு தலம் உள்ளது. அங்கு பத்ரம் என்று பெயர் பெற்றதும், கடலில் இருந்து பிறந்ததுமான ஒரு அரசமரம் உள்ளது. அங்கே சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு, நிலை பெற்று இருப்பாயாக என்று திருமால் கூற, பூமாதேவியும் அவ்வாறே செய்தாள். பூமி தேவி ஐந்து சுலோகங்களால் சிவபெருமானை வழிபட்டாள். சிவபெருமானும், தேவிகளுடன் பெருமாளும் அவள் முன் தோன்றினர். சிவபெருமான் பூமி தேவியை நோக்கி என்ன வரம் வேண்டும் என்று வினவ, நீங்கள் உமையன்னையுடன் இத்தலத்தில் விளங்க வேண்டும் என வேண்டினாள். அது முதல் இந்தத் தலம் பூமீஸ்வரம் என்று புகழ் பெற்றது. பூமிதேவியும் வரம் பெற்றாள்.
- கௌதம முனிவரும், மூவாயிரம் முனிவர்களும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு தரிசிக்கப் பேரவா கொண்டனர். அதன் பொருட்டு அவர்கள் காவிரியின் கரையிலுள்ள அரச வனத்தில் சிவபெருமானை நோக்கிக் பஞ்சாட்சர மந்திரத்தைத் தியானித்து, கடுந்தவம் புரிந்தனர். உமாதேவியுடன் தோன்றி சிவபெருமான் காட்சியளித்தார். அக்காட்சியைக் கண்டு வணங்கி மகிழ்ந்த அவர்களது தவத்திற்கு இரங்கி, கௌதம முனிவர் சிவபெருமானை நோக்கி, "பெருமானே! நாங்கள் உமது ஆனந்தத் தாண்டவத்தைக் காணவே தவம் புரிந்தோம்; எமக்கு அதனைக் காட்டியருளுக" என வேண்டினார். அதற்குச் சிவபெருமான், "முனிவர்களே! உங்கள் எண்ணம் ஈடேறும்; கவலைப்படாதீர்; யாம் பூமிதேவியால் பூசிக்கப்படும் காலத்தில் ஆனந்தத் தாண்டவக் காட்சியைக் காட்டியருளுவோம்; அதுபோது நீங்களும் கண்டு தரிசிக்க!" எனக் கூறி மறைந்தார். அதன்படியே, பூமிதேவிக்கு ஆனந்தத் தாண்டவக் காட்சி அருளிய காலத்தில், கௌதம முனிவரும் மற்ற முனிவர்களும் கண்டு தரிசித்து, பேரின்ப வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர். ஆனந்தத் தாண்டவக் காட்சியை உலக மக்களும் கண்டு தரிசித்து, மட்டிலா மகிழ்ச்சியில் திளைக்க, இத்தலத்தில் மிகப்பெரிய ஆனந்தத் தாண்டவ (நடராசர்) மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.
- சந்திரகுலத் தோன்றலாகிய புரூரவஸ் தமக்குக் கர்க்க முனிவரால் சபித்துண்டாகிய குஷ்டரோகம் இத்தலத்தில் நீங்கப் பெற்றார். இத்தலத்தில் அவர் ஸ்ரீவைத்யநாதரைப் பிரதிஷ்டை செய்து துதிசெய்து வந்தார். இச்சன்னதி இரண்டாம் திருச்சுற்றில் வடகிழக்கில் அமைந்துள்ளது. இதனால் குஷ்டரோகம் நீங்கி மன்மதனையொத்த பொலிவுடன் வலிவுகூடி வாழ்ந்தார். இவ்வைத்தியநாதரை இத்தலத்தில் வழிபடுவோர் சகல நோய் நொடிகளும் நீங்கிப் பேரானந்த சுகவாழ்வு பெறுவர். இதனால் புரூரவஸ் வைகாசி மாதப் பெருவிழாவை நடத்தித் தான தருமங்களைச் செய்து சிவப்பேறு பெற்றார்.
- தர்ம சர்மா என்பவன் கங்கைக்கு அருகில் உள்ள தருமபுரம் என்னும் இடத்தில் வசித்து வந்தான். இவன் தகுதியற்ற
பொருளை அறியாமல் தானம் செய்ததால் வறுமையுற்றான். நாரதமுனிவர் இவர் மீது கருணை கொண்டு 'மாந்தாத' என்ற அரசனிடம் அழைத்துச் சென்று சிறிதளவு நிலத்தை தானம் பெறச் செய்தார். அந்த நிலத்தை தர்மசீலன் திருநல்லத்தில் உள்ள பூமிசுவரர் ஆலயத்தில் தானம் செய்தான். நாரதரின் கூற்றுப் படி இந்தத் தலத்தில் செய்யப்படும் தானம் அளவில் சிறியதாயினும் கூட பெரும் பலனைத் தரும். இத்தலத்தில் அரைக்கணம் வசித்தால் கூட முக்தி கிடைக்கும். இங்கு நிகழ்த்தபடும் பூசை, மந்திர உச்சாடனம் போன்றவை அளவற்ற பலனை எளிதில் தரும். ஆகவே தர்மசீலனும் சுபவாழ்வு பெற்றான். - இவ்வாலயத்தில் ஞானகூபம் என்னும் மகிமை வாய்ந்த தீர்த்தக் கிணறு தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு அருகில் உள்ளது. ஒரு சமயம் கௌட தேசத்தில் வசித்து வந்த வேத நிந்தை செய்வோரை வாதத்தால் வென்று வேதம் தழைக்கச் செய்து வந்த அந்தணர் ஒருவர், ஞானகூப வரலாற்றைத் தெரிந்து கொண்டு நேரே இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு இத்தலத்தைப் பிரிய மனமின்றி இங்குள்ள இந்திர தீர்த்தக் கரையில் குடில் அமைத்து வசிக்கலானார். இவர் காற்று மற்றும் இலைகளை உண்டு தேவர்களையும், முன்னோர்களையும் மகிழ்விக்கத்தக்க காரியங்களைச் செய்து வந்தார். நாள்தோறும் ஞானகூப நீரைப் பருகி இறைவனை வழிபட்டு முக்தி அடைந்தார். அவருடைய மகள் சுமதி என்பவள் ஓர் கிளி வளர்த்து வந்தாள். அக்கிளிக்கு தேன், பழங்களுடன் ஞானகூப நீரையும் கொடுத்து உண்ணச் செய்தாள். அக்கிளியும் சிவஞானம் பெற்று, அரசமரத்தில் அமர்ந்து, மக்களைப் பார்த்து ஞானகூபத்தின் சிறப்புகளைச் சொல்லி, இக்கிணற்றின் நீரைப் பருகி, இறைவனை வழிபட்டு வந்தால் சகலவித பாவங்களும், சாபங்களும் தீர்ந்து சிவபதம் அடைவர் என்பது சத்தியம் என்று ஓயாது கூறி வந்தது.
- ரதீதரர் என்ற வேதாந்த ஞானியிடம் பயின்றவனும், பாரியாத்ரா மலைச்சாரலில் வசித்து வந்த குலவர்த்தனன்
என்பவரின் மகனுமாகிய முரண்டகன் என்பவன் விதிவசத்தால் தனக்கு ஏற்பட்ட சாபங்கள் இங்கே நீங்கப்பெற்றான். - தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. கல்லால் நிழல்மேய (1.85); அப்பர் - 1. கொல்லத் தான்நம னார்தமர் (5.43); பாடல்கள் : அப்பர் - சீரார் புனற்கெடில (6.007.9); பட்டினத்துப் பிள்ளையார் - நண்ணிப் பரவும் (11.30.62) திருஏகம்பமுடையார் திருவந்தாதி, சேக்கிழார் - வைகல் நீடு மாடக் கோயில் (12.28.433 & 434) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - வடமட்டம், ஆடுதுறை - வடமட்டம் செல்லும் பேருந்துகளில் சென்று கோனேரிராஜபுரம் கூட்ரோடில் இறங்கி 1 கி. மீ. சென்றால் ஊரை அடையலாம்.
தொடர்புக்கு :- 0435 - 244 9830 , 244 9800.