இறைவர் திருப்பெயர்: பிப்பிலிகேஸ்வரர் (பிப்பிலி - எறும்பு), எறும்பீஸ்வரர், எறும்பீசர், மதுவனேஸ்வரர், மணிகூடாசலபதி, மாணிக்கவண்ணர், மலைக்கொழுந்தீஸ்வரர், திருபுவனசுந்தரர், மாணிக்கநாகர், ஆதித்த பட்டாரகர்
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி , சுகந்த குழலேஸ்வரி, இரத்தினாம்பாள்.
தல மரம்:
தீர்த்தம் : பிரம தீர்த்தம் என்னும் பாவநாச தீர்த்தம்: - இது கோயிலுக்கு எதிரே உள்ள தெப்பக்குளம்.
பதும தீர்த்தம் என்னும் இலக்குமி தீர்த்தம் - கோயிலுக்கு ஈசான மூலையில் அமைந்துள்ளது.
மது தீர்த்தம்: தேவர்கள் செய்தது.
குமார தீர்த்தம்: கோயிலுக்கு வடபுறத்தில் உள்ளது.
இவை தவிர சூரியபுஷ்கரணி, சந்திரபுஷ்கரணி, கல்யாண தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன.
வழிபட்டோர்:முருகன், திருமால், திருமகள், பிரமன், இரதி, இந்திராதி தேவர்கள், அக்கினி, அகத்தியர், நைமிசா முனிவர், அப்பர், சேக்கிழார்,நைமிசாரண்ய ரிஷிகள், இந்திரன், தேவர்கள்.

- புராணப்படி இதற்கு பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினகூடம், திருவெறும்பிபுரம், எறும்பீசம், பிரமபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம், குமாரபுரம் எனப் பல பெயர்களுண்டு. தென் கயிலாயம் என்றும் இத்தலத்தைச் சொல்வர்.
- இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங்கொண்டு வழிபட்ட தலமாதலின் இத்தலம் இப்பெயர் பெற்றது.
- கரன் என்ற அசுரனை அழிக்கத் தேவர்கள் வழிகேட்டுப் பிரமனை அனுகினர். அவர் சொல்லியவண்ணம் இந்திரனும், தேவர்களும் தங்கள் உருவம் அசுரர்களுக்குத் தெரியக் கூடாதென்றெண்ணி, எறும்பு வடிவங்கொண்டு இத்தலத்திற்கு வந்து வழிபட்டனர். அவ்வாறு வழிபடும்போது சிவலிங்கத்தின் மீதிருந்த எண்ணெய்ப் பசையால் மேலேற முடியாது கஷ்டப்பட, சுவாமி புற்றாக மாறி, எறும்புகள் மேலேறிப் பூசை செய்வதற்கு வசதியாகச் சொரசொரப்பான திருமேனியுடையவரானார். அவர்கள் மேலேறுவதற்கு வசதியாகச் சாய்ந்தும் பூசையை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
- ஆதிசேடனுக்கும் வாயு தேவனுக்கும் இடையே யார் வலிமை மிக்கவர் என்ற போட்டியில் ஆதிசேடன் கைலாய மலைக்கு சென்று அதனைச் சுற்றிக்கொள்ள வாயுதேவன் பலமான காற்றை வீசி அவ்விடத்தில் இருந்து அகற்ற முயன்றார். பலத்த காற்றின் துன்பம் தாளாமல் எல்லோரும் அவதிக்குள்ளாக, தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். கைலாய மலையை விட்டு விடுமாறு அவர் ஆதிசேடனிடம் பணித்தார். அதற்கு இணங்கிய ஆதிசேடன் தன் தலையைத் தூக்கினார். அந்த சமயத்தில் வாயு தேவன் மிக பலமாகக் காற்றை வீசித் தாக்க அம்மலையில் சில சிகரங்கள் தென்னகத்தே வந்து விழுந்தன அவற்றில் ஒன்று எறும்பியூர் மலை. இதனால் இம்மலைக்குத் தென் கயிலாயம், ரத்ன கூடம் என்ற பெயர்கள் வந்தது.
- பிரம்மா இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டார். அந்தத் தீர்த்தம் இப்போது பிரம்ம தீர்த்தம் பாவனாச தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
- அகத்தியர் லோபாமுத்திரையுடன் வழிபட்டு எறும்பியூர் ஈசன் திருவருளால் முருகப்பெருமானிடம் ஞானோபதேசம் கிடைக்கும் என்று வரம் பெற்ற தலம்.
- எறும்பியூர்த் தலபுராணம் உள்ளது.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. விரும்பி யூறு விடேல்மட (5.74), 2. பன்னியசெந் தமிழறியேன் (6.91); பாடல்கள் : அப்பர் - கொடுங்கோளூர் (6.70.5); சேக்கிழார் - சிலந்திக்கு அருளும் (12.21.302) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், ஏறு உயர்த்தார் (12.28.348) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சியை அடுத்த இருப்புப் பாதை நிலையம், திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ளது. திருச்சியிலிருந்து அடிக்கடி நகரப்பேருந்துகள் உள்ளன.
தொடர்பு :
09842957568