சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது ஒரு மானைத் துரத்தி அறைக்கதம் சென்று வீழ்த்தினான். களைப்பிலும் பசியிலும் சோர்ந்த மன்னனுக்கு அமைச்சர் முதலானோர் உணவு அளிக்க, சுயம்பு லிங்க மூர்த்தியை வழிபட்டே தினமும் உண்ணும் நியமம் கொண்டிருந்ததால் மறுத்தான். மன்னனை உண்பிக்கவேண்டி அழகிய லிங்கம் ஒன்றைக் கொண்டுவந்து அது சுயம்பு என்று கூறினர். மன்னன் அது சுயம்பு அல்ல என்பதைத் தெரிந்து தன விரதம் குறைப்பட்டதென உயிர் விடத்துணிந்தான். அப்போது, "கொன்றைமர நிழலில் ஆப்பு வடிவில் எழுந்தருளியுள்ளேன். குரவங்கமழ் குழலாலுடன் எம்மைப் புசிக்க!" என்ற அசரீரி கேட்டு மகிழ்ந்தான். அவ்விடத்தில் ஆப்புடை ஈசனை தரிசித்து வணங்கினான். அவ்விடத்துக் கோயிலும் நகரும் நிறுவி ஓராண்டு வழிபட்டான்.
சோழாந்தகன் மகன் சுகுணன் மதுரையை ஆண்ட காலத்தில் பஞ்சம் ஏற்பட்டது. ஆறு, குளங்கள் வற்றின. அந்தணர்கள் சிலர் பருத்தி பயிரிட, ஒருவர் ஏரியின் ஒரு பகுதியில் இறைவனுக்கு நிவேதனத்திற்கு சிறிதளவு நெல் பயிரிட்டார். நெல் வளர்ந்து வர, பருத்தி விதைத்தவர்கள் ஏரி நீர் பருத்திக்கு வேண்டும் என்று பாய்ச்சினர். இறைவன் நிவேதனத்திற்கு நெல்லுக்கு நீர் கிடைக்காது வாடிய வேதியர் இறைவனிடம் தன்னோடு அவ்விடத்தை விட்டு நீங்க வேண்டினர். இறைவனைப் பின்தொடரும் ஆற்றல் இல்லாததால் இறைவனிடம் வேண்ட அவர் விடையின் காலடிச் சுவடும் கொன்றை நாண்மலரும் உள்ள பாதையில் பின் தொடரக் கூறினார். அப்படிப் பின்தொடர்ந்து வைகையின் வடகரையில் இறைவன் வந்தமர்ந்த இடம் இடபபுரம் என்னும் திருவாப்பனூர் ஆகும். அங்கெ உள்ள தீர்த்தமும் இடப தீர்த்தம் ஆயிற்று.
இடபபுரத்தை அடைந்த வேதியன் இறைவனுக்குப் படைக்க அன்னத்திற்கு என்ன செய்வது என்று திகைத்தபோது, "உள்ளன்போடு வையை மணலெடுத்து உலையிலிட்டுச் சமைத்தால் உணவாகும். இதைப் பிறர்க்கு உரைத்தால் சோறாகாது." என்று இறைவன் அருள அதன்படி நாள்தோறும் வையை மணலெடுத்து அன்னம் சமைத்து இறைவனுக்கு அர்ப்பணித்து உண்டு வந்தார். ஒரு நாள் அவர் மனைவி எல்லோருக்கும் பஞ்சம் வருத்தத் தமக்கு மட்டும் எப்படிச் சோறு கிடைக்கிறது என்று வேதியனிடம் கேட்டாள். அது பிறர்க்கு உரைக்கலாகாது என்பதால் வேதியன் மறுத்தும், மனைவி கூறாவிட்டால் உயிர் துறப்பேன் என்றபோது வேறு வழியின்றிக் கூறிவிட்டார்.மறுநாள் மணலெடுத்து உலையிலிட்டபோது அது சோறாகவில்லை. வேதியன் மனம் வருந்தி இறைவனிடம் வேண்ட, இறைவர், "மன்னனிடம் உம் நிலை உணர்த்தியுள்ளோம். அவனிடம் செல்" எனப் பணித்தார். வேதியன் மன்னனிடம் செல்ல அவன் வேதியனுக்கு மாளிகையும் தடையின்றி நிவேதனத்திற்கு உணவும் ஏற்பாடு செய்தான்.
உலையில் இட்ட வையை ஆற்று மணலை இறைவன் அன்னமாக ஆக்குவித்து "அன்னவிநோதன்" என்று பெயர் பெற்ற அற்புதப் பதி.
கந்தசாமிப் புலவர் பாடிய திருவாப்பனூர்ப் புராணம் உள்ளது.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. முற்றுஞ் சடைமுடிமேன் (1.88); பாடல்கள் : சேக்கிழார் - ஆறு அணிந்தார் (12.28.885) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், செஞ்சடையார் திருவாப்பனூர் (12.37.101) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
இங்குள்ள நடராசர், சிவகாமி மூர்த்தங்கள் பெரியதாகவும், கலையழகு மிக்கதாயும் உள்ளன.
மார்கழி மாதம் சதய நட்சத்திரம் முதல் திருவாதிரை ஈறாக எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெறும்.
பங்குனி உத்திரத்தன்று மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் இத்திருக்கோயிலுக்கு எழுந்தருளி பக்தியில் சிறந்த பொன்னனையாளுக்குக் காட்சியளித்து இரசவாதம் செய்யும் திருவிளையாடல் நடைபெறும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வைகை ஆற்றுக்கு அருகில் உள்ளது. மதுரையிலிருந்து நகரப்பேருந்துகள் உள்ளன.
தொடர்பு :
0452-2530173
09443676174
Related Content
திருஆலவாய் - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாற
திருப்பரங்குன்றம் சத்யகிரீஸ்வரர் முருகன் திருக்கோயில் வரலாறு