logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

எய்தனூர், சந்தானபுரி என்றழைக்கப்படும் ஆதிபுரத் தல வரலாறு

Om symbol

இறைவர் திருப்பெயர்: ஆதிபுரீஸ்வார், சந்தானபுரீஸ்வரர், சந்தான நகராதீசுவரர், விஷ்ணு வல்லபர், திருமாந்துறையார்

இறைவியார் திருப்பெயர்: பத்மதள நாயகி

தல மரம்:

தீர்த்தம் : கிழக்கில் பிரம்மதீர்த்தம் வடக்கில் சோமதீர்த்தம் தெற்கில் வாலிதீர்த்தம் தென்கிழக்கில் சூரியதீர்த்தம் தென்மேற்கில் பத்மதீர்த்தம் வாயுவில் சக்கரி தீர்த்தம் மேற்றிசையில் ஞான தீர்த்தம் ஈசான்யத்தில் இருடி தீர்த்தம்,அம்பிகை சந்நிதியில் வாணி தீர்த்தம்

வழிபட்டோர்:வாலி, பிரமன், சூரியன், சரஸ்வதி, சப்தரிஷிகள்

Loading map...

Sthala Puranam

  • தலச்சிறப்பு பிரும்மாண்ட புராணத்தில் க்ஷேத்திர வைபவ காண்டம் 6 ஆம் அத்தியாயம் தொடங்கிக் கூறப்பட்டுள்ளது. இத்தலத்து மஹிமை சூதபுராணிகரால் சனகாதி மகரிஷிகளுக்கு கங்கைக் கரையில் உள்ள முக்தி மண்டபத்தில் கூறப்பட்டது.
  • இறைவன் பாணப்ரயோகம் செய்ய ஏற்பாட்டுடன் (பாண சந்தானம்) இருந்ததால் “சந்தான புரி” என்றும், தேவர்கள் அனைவரும் ஒன்று கூடியதால் “ஆதிபுரி” என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
  • திரிபுர சம்ஹாரத்தின் போது, சாரதியாக விளங்கியவர் ப்ரம்ஹ தேவன். சிவபெருமான் பாணம் ஏவ தயாரான அந்த அழகைக் கண்டு மயங்கிட  ரதம் சற்றே தடுமாறியது. திருமால் ரிஷபமாக மாறி அப்போது தாங்கினார். தன் கடமையில் தவறிய அபராதத்திற்கு இத்தலத்தில், வைகாசி சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று ப்ரம்ஹ தேவர் இறைவனை வழிபட்டு, தோஷம் நீங்கப் பெற்றார். ப்ரம்ஹ தேவர் பூசித்த லிங்கம் இங்குள்ளது.
  • கிஷ்கிந்தையை அரசாண்டு வந்த வானர வீரன் வாலி சிறந்த சிவபக்தன். தினமும் நான்கு சமுத்திரங்களில் நீராடி நித்ய கருமங்களை விதிப்படி செய்து, பின்பு கயிலைக்குச் சென்று நந்தியெம் பெருமான் அநுமதி பெற்று சிவபெருமானையும், உமை அம்மையையும் வணங்கி வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். அதன் பின்பே தன் நகர் அடைந்து அரசு பரிபாலனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள், தென் திசைக்கடலிலே, தன் சந்த்யாவந்தன, நித்திய கரும விதிகளை முடிக்கும் தறுவாயில், திக்விஜயம் செய்து வந்து கொண்டிருந்த ராவணன், வாலியின் பின்புறமாகச் சென்று, குறும்புத்தனம் கொண்டு கட்டிப்பிடிக்க முயன்றான்.  வாலி பின்னால் யாரென்றும் பாராமல், கட்டிப்பிடிக்க முயன்ற கையை இடுக்கிக் கொண்டு, வாலினால் ராவணன் உடலை முழுவதும் சுற்றி, மற்ற சமுத்திரங்களில் நீராடிப் பின் கயிலையை அடைந்தான். அவன் நந்தி தேவரை வணங்கி நின்ற பின், நந்தி தேவர் அவனை நோக்கி “சிவ பக்தியில் சிறந்தவனே, எம்பெருமான், திரிபுர ஸம்ஹாரத்தை முன்னிட்டு முப்பத்து முக்கோடி தேவர்களோடு அதிகைக்கு அருகில் உள்ள ஆதிபுரத்தில் எழுந்தருளியுள்ளார். நீ அவ்விடம் செல்! உன் வாலில் கட்டுண்டிருக்கும் ராவணன் அவ்விடத்தை அறிவான்" என்று கூறினார். ராவணன் கெஞ்சியும், ஆதிபுரத்தைக் காட்டினால் தான் விடுவேன் என்று வாலி சொல்ல, ராவணன் அந்த க்ஷேத்திரத்தை அடையாளம் காண்பித்தான். பின்பு, வாலி, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனைத் தரிசிக்கச் சென்றான்.
  • சிவபெருமான் வாலியைக் கண்டவுடன் அவனை அநுக்ரஹித்து, “வாலி, நீ எம்மை வைகாசி மாதம் சுக்லபக்ஷ அக்ஷயத் திருதியை அன்று பானக பூஜை முதலியவைகளால் திருவதிகையில் அர்ச்சித்து தரிசிப்பாய்." என்று திருவாய் மலர்ந்தருளினார். அதன் பின்னர் வாலி, ஆதிபுரமான எய்தனூரில், பங்குனி மாதம் க்ருத்திகை தொடங்கி உத்திரம் நன்னாளில் உற்சவாதிகளைச் செய்தான். அவன் வேண்டுகோளின்படி, பங்குனி பெளர்ணமியில் கெடில நதியிலும், வாலி உருவாக்கிய அதன் சிற்றோடையிலும் கங்கை ஆவிர்ப்பவிக்க சிவபெருமான் அருளினார். வாலி பூஜித்து அருள் பெற்ற லிங்கம் ‘வாலீசுவரர்' என வழங்கப் பெறுகிறது.
  • வாலிக்குப் பிறகு, இறைவன் ஆணைப்படி சங்குகர்ணன், சுகர்ணன், கண்டாகர்ணன் ஆகிய பூதகணங்கள் பங்குனி உற்சவாதிகளைச் செய்து பூஜித்து வந்தனர். 
  • மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு வசந்த காலத்தில் சிவபெருமான், உமை அம்மையோடு ஜலக்ரீடை செய்தார். அம்பாள், அழகிய செந்தாமரை மலரைக்கண்டு, சிவனை அம்மலர்களால் அர்ச்சிக்க எண்ணங்கொண்டார். அதனால்  உமா தேவி தன்நிலை மறந்து மானஸ பூஜையில் இருந்தார். அப்போது இறைவன், தம்மை உமாதேவி தாமரை மலரால் மனதால் பூஜிப்பதை அறிந்து . பத்மதள நாயகியே, ஜலக்ரீடைக்கு வருக’ என அழைக்க, இத்தல நாயகிக்கு பத்மதள நாயகி எனும் இத்திருப் பெயர் உண்டாயிற்று.
  • அந்த சமயத்தில், தாருகாவனத்தில் இருந்து சப்தரிஷிகள் வந்தனர். இறைவனும், இறைவியும் ஜலக்ரீடையில் இருப்பதை அறிந்து கொண்டு, அதற்குப் பிறகே தரிசித்தல் முறை என்று அத்தலத்தில் தங்கள் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினர். அம்மையும் அப்பனும் ஜலக்ரீடை முடிந்து வந்து அமர்ந்தபின் அவர்களை முறைப்படி பூசனை செய்து அருட் பிரசாதம் பெற்று தம் இருப்பிடம் அடைந்தார்கள். 
  • பெண்ணை நதிக் கரையில் பிரௌட தேவராய புரத்தில் வாழ்ந்த யக்ஞசர்மா என்ற அந்தணரது புதல்வர் ப்ரஹ்ம சர்மா சிறந்த சிவ பக்தர். அவரது பக்திக்கு மெச்சிய இறைவன் அவர் முன் தோன்றி வேண்டும் வரம் யாது? என்று கேட்க, அவர் சிவபெருமான் திருவடிப்பேற்றை வேண்டினார். அப்போது இறைவன் அவரிடம், “ஆதிபுரியில் வாலியானவன், பங்குனி மகோற்சவம், செய்கின்றான் அவ்விழாவில் ஐந்தாம் திருநாள் அன்று நீ நம்மைத் தரிசிப்பாயாக" என்று கூறி மறைந்தார். அவ்வாறே, ப்ரஹ்ம சர்மாவும், ஆதிபுரம் அடைந்து சுவாமியின் திருவீதி உலாவைத் லக்ஷ்மி நாராயணர் ஸன்னிதிக்கு நேராக திருவீதியில் தரிசித்து நிற்கையில், ஸ்வாமி. ஆதிபுரீஸ்வார் பிம்பத்தில் ஒளி தோன்றியது. ப்ரஹ்ம சர்மாவும் சோதி வடிவினராய் ஸ்தோத்திரம்* செய்ய, ஈரொளியும், ஓரொளியாக ஈசுர பிம்பத்தில் மறைந்தது. இவ்வாறு ப்ரஹ்ம சர்மாவிற்கு இறைவன் அருளினார். * இத்தோத்திரம் "துவாதச மஞ்சரி" என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.
  • விஸ்வாமித்ர மகரிஷி, வசிஷ்டருடன் போட்டியிட்டு பல தவங்கள் செய்து, பிரம்ஹதேவன் அருளால் "ப்ருஹ்மரிஷி' பட்டம் பெற்றார்.  ப்ருஹ்மரிஷி பட்டம் பெற்ற பின், அவர் வசிஷ்டர் ஆசிரமத்தில் உள்ளே நுழைய முற்பட்டார். அப்போது வசிஷ்டரது தவ அக்கினி அவரைச் சூழ்ந்து வருத்தியது. உடனே பிரம்மாவைத் தியானித்து, அவரை வரவழைத்தார். அவரிடம் 'எனக்கும் உமது குமாரராகிய வசிஷ்டருக்கும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை உரைத்தருள வேண்டும்' என்று பிரார்த்தித்தார். பிரம்மாவும், “ இதைப்பற்றி நான் உரைப்பதை விட, இதை அறிவதற்கு, அகத்தியர், ஆதித்தன், ஆதிசேஷன், ஆகியவர்களை அழைத்து வந்தால், அவர்களை நடுவில் இறுத்தி நான்  இதன் உண்மையை உமக்குத் தெரிவிக்கிறேன்”  என்று கூறி மறைந்தார். விஸ்வாமித்திரர் சூரியலோகம் சென்று, சூரியனைப் பிரார்த்தித்தார். சூரியன் தானில்லாது உலகம் இருளில் மூழ்கி விடும் என்று வரமறுத்துவிட்டார். விஸ்வாமித்திரர் அகஸ்தியர் ஆசிரமம் சென்று  நடந்த விவரங்களை உரைத்து, வரும்படி வேண்டினார். அகத்தியரும், தாம் இவ்விடம் விட்டு அகன்றால் பூமியின் சமநிலை சாய்ந்து மேடு பள்ளமாகி விடும் என்று கூறி வர மறுத்துவிட்டார், அதன்பின் பாதாள லோகம் சென்று ஆதிசேஷனை வரும்படி அழைத்தார் விஸ்வாமித்திரர். ஆதிசேஷன் தான் வந்தால் பூமி ஆழ்ந்து மூழ்கி விடும், வர இயலாது எனத் தெரிவித்தார். விஸ்வாமித்திரர், பிரம்மதேவரிடம் நடந்ததைக் கூறி நின்றார். பிரம்மதேவர், வசிட்டரை அழைத்து வரச் செய்து, அகத்தியர், ஆதித்தன் ஆதிசேஷன் ஆகிய மூவரையும் அழைத்து வரக் கட்டளையிட்டார். வசிட்டர், சூரியனை அழைத்தவுடன், ஏற்கனவே சொன்ன காரணத்தைச் சொல்லி மறுதலித்தான். வசிட்டர், தன் மேல் வஸ்திரத்தைக்கொடுத்து இதை உம் தேரில் வைத்தால் ஒளி கொடுக்கும் என்று கூறினார். அவ்வாறே அதை வைக்க, அது மிகவும் பிரகாசித்து, உலகிற்கு ஒளியை வழங்கியது. அவ்வாறே தன் கமண்டலத்தை வைத்து உலகைச் சமப்படுத்தி அகத்தியரையும், தன் தண்டத்தை வைத்து, பூமியைத் தாங்கும்படி வைத்து ஆதிசேஷனையும் அழைத்துக் கொண்டு, மூவருடனும் பிரம்மதேவனிடத்தில் வந்தார்.
    அப்போது விஸ்வாமித்திரர், அம் மூவரையும் வணங்கி, தனக்கும், வசிட்டருக்கும் உள்ள குறை நிறைகளைக் கூறும்படி வேண்டி நின்றார். மூவரும், “உம்மிடத்தில் கோபம் அதிகமாவும், வசிட்டனிடத்தில் சாந்தம் அதிகமாவும் உள்ளது. கோபத்தால் தவம் குறையும். சாந்தத்தால் தவம் பெருகும்” என்று உரைத்து பின் தம் இருப்பிடம் சென்றனர். விஸ்வாமித்திரரும் மனமகிழ்ந்து சாந்த குணம் பெருகத் தவம் செய்ய வடதிசை சென்றார். வசிட்டரும் தன் வஸ்திரம், கமண்டலம், யோகதண்டம் இவைகளை வாவழைத்துக்கொண்டு தன் ஆசிரமம் அடைந்தார்.
    ஆனால் சிவபெருமானது அனுமதியில்லாமல் இடத்தைவிட்டு அகன்ற தோஷம்  நீங்க ஆதிசேஷன் காளஹஸ்தியில் பூஜை செய்தான்.  அகத்தியர் மதுரையில் சோமசுந்தரரைப் பூசித்து தோஷம் நீங்கப் பெற்றார். ஆதித்தன் இந்த ஆதிபுரத் தலத்தை அடைந்து ஆடிமாதப் பெளர்ணமில் அம்சும தந்திரம் என்ற விதிப்படி தன் கிரணத்தால் பூஜித்து தோஷம் நீங்கப்பெற்றான். சூரியன் வழிபட்ட சூரியலிங்கம் இங்குள்ளது.
  • ஆதிபுரத்தலத்தில் ரூபாவதி, வித்தியாவதி என்ற பெண்கள் வாழந்து வந்தனர் ரூபாவதி, பொருட்செல்வத்தில் சிறந்து விளங்கினாள், வித்யாவதி, கல்விச் செல்வத்தில் மேன்மை பெற்றிருந்தாள். அவர்கள் இருவருக்குள்ளும் கல்வி பெரிதா,செல்வம் பெரிதா என்று வாதம், பத்ம தள நாயகி சந்நிதியில் அமையப்பெற்ற ஞானமண்டபத்தில் ஊரில் உள்ள சான்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. வாதத்தில் இருபக்கத்திலும் முடிவுக்கு வர இயலாமல் வாதம் தொடர்ந்தது அவர்கள் அனைவரும் அம்பிகையை தியானிக்க, அம்பிகை குபேரனை வரவழைத்து, வாதத்தின் இருபக்கத்தையும் கேட்டு, தீர்ப்புச் சொல்லும்படி கட்டளையிட்டு மறைந்தார். குபேரன் இருவரையும் நோக்கி, செல்வத்தைக் காட்டிலும் கல்வியே பெரிது என்று தீர்ப்பு உரைத்தார். குபேரன் ஆதிபுரீஸ்வரரை வணங்கி, சோமதீர்த்தம் என்ற தீர்த்தம் உண்டாக்கி, தன் பதியை அடைந்தார். குபேரன் தீர்ப்பால் வெகுண்ட ரூபாவதி, வித்தியாவதியை பிசாசாகக் கடவாய் என்று சாபமிட்டாள். வித்தியாவதியும், ரூபாவதி முட்டாள் தனமும், மதம் பிடித்தவளாக அலையுமாறு சாபமிட்டாள். பின் வித்தியாவதி, ஆதிபுரத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னிதியில் த்யானத்தில் அமர்ந்தாள். அவளுடைய நிலை கண்டு வருந்திய ஸரஸ்வதி தேவி ஆதிபுரத்தை அடைந்தார். தன் பெயரால் ஓர் தீர்த்தம் ஏற்படுத்தி, இறைவனையும் இறைவியையும் பூசித்து, வித்யாவதியின் பிசாசுத் தன்மை நீங்க வேண்டினாள், இறைவரும் மகிழ்ந்து, ‘வாணி தீர்த்தத்தில் நீராடினால் வித்தியாவதி நன்னிலை பெறுவாள்." எனஅருளி மறைந்தார். ஸரஸ்வதியின்  முயற்சியால் இறைவனின் அருள் பெற்ற வித்யாவதி  ஆதிபுரத்தில் சிவத்தொண்டு புரிந்து இறைவனின் திருவடிப் பேற்றை அடைந்தாள். 
  • ஏனாதி நாத நாயனார் சிவபக்தர்களிடம் அளப்பரிய அன்பும் மரியாதையையும் உடையவர். அவரை நேரடியாக வெல்ல இயலாது சூழ்ச்சியால் கொல்ல நினைத்த பகைவன், அவரிடம் பயந்தது போல் மெதுவாகச் சென்று, அருகில் சென்றவுடன் வேகமாகச் சென்றான். சென்றவன், தன் நீறணிந்த நெற்றியைத் திறந்து காட்டினான். நீறணிந்த நெற்றியைக் கண்டவுடன் நாயனார் வாளைத் தணித்து நிறைந்தவர் பகைவராயினும் ஊறு விளைவிக்கலாகாது என நின்றார். பகைவன் அவரது பக்தித் திறம் அறியாது அவர் மேல் வாளை வீசவும், ஆதிபுர நாதர் அக்கணமே தோன்றி ஏனாதி நாத நாயனாருக்கு ஞான தேகத்தைக் கொடுத்து முக்தி அளித்தார். 
  • மதுரையைச்சேர்ந்த ராஜசேகர பாண்டியன் அரசனும் ஆதி புராதீசரை வணங்கி அருள்பெற்றான்.
  • ஞானசம்பந்தப் பெருமானும், இவ்வாலயத்தில் ஞானமண்டபம் கட்டி, சமணர்களை வென்று, ஞானதீர்த்தம் என்ற தீர்த்தத்தையும் ஏற்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.

Specialities

  • திருக்கோயில் ஐதிகப் புடைப்புச் சிற்பமாக இராவணன் வாலியின் வாலில் கட்டுண்ட நிலையில் எய்தனூர் இங்குதான் என்பதுபோல் ஒருவிரல் கீழ்க்காட்ட மற்றொரு விரல் சிவபெருமான் திருமேனியைக் காட்ட வாலி வழிபடுமாறு அமைந்துள்ளது.
  • கோவிலில் பிரயோக சக்கரத்துடன் கோஷ்டத்தில் மஹாவிஷ்ணுவும், தனியாக லக்ஷ்மி நாராயணரும் எழுந்தருளி உள்ளார். 
  • சப்தரிஷிகளும் ஆலய விமானத்தில் சிற்ப வடிவில் அமைந்துள்ளார்கள்.
  • இத்தலத்து துர்கை, த்ரிபங்கி நிலையில், சிம்ம வாஹனத்தில், ப்ரயோகச் சக்கரத்துடன் கூடிய விஷ்ணு துர்கையாக எழிலுடன் அருள் பாலிக்கிறாள்.
  • பல்லவர் கால சிங்கம் தாங்கிய தூண்கள் அழகாக மிளிர்கின்றன.
  • ஏனாதிநாதர் ஸன்னிதி இங்கு விளங்குகிறது. கருவறை கோஷ்டத்தில் எல்லா மூலைகளிலும் வாள் கேடயத்துடன் உள்ள புடைப்புச் சிற்பங்கள் ஏனாதிநாதர் தொடர்புக்கு வலு சேர்க்கின்றன. (ஆயினும் திருத்தொண்டர் புராணத்தில் சோணாட்டில் எயினனூர் என்ற குறிப்பும் கவனிக்கத் தக்கது.)
  • வித்யாவதி, ராஜசேகர பாண்டியன் சிலாரூபங்கள் தக்ஷிணா மூர்த்தி ஸந்நிதியின் கீழ்பால் விளங்குகின்றன.
  • இத்தலத்தை ஸ்ரீருத்ரத்தைப் பாராயணம் செய்து 10 முறை வலம் வருதல் இகபர நன்மைகளைத் தரும். ப்ரதோஷ காலத்தில் 7 முறை வலம் வந்து வணங்கினால் அளப்பரிய நன்மைகள் பெற்று சிவப்பரம்பொருளின் அருளைப் பெறலாம்.
  • பிரம்மோற்சவம் பங்குனி மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் தொடங்கி 10 நாள் கொண்டாடப்படுகிறது.
  • புரட்டாசி உத்திரத்தில் ஏனாதி நாத நாயனார் குருபூஜை நாடகத்துடன் நடைபெறுகிறது.
  • கல்வெட்டுக்கள்: கருவறை கோஷ்டத்தில் கல்வெட்டுக்கள் உள்ளன. இவை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவை ஆகும். இக்கல்வெட்டுகள் மூலம் திருவையீந்திரன் வீரையன் சேனன் என்ற தலைவன் திருமாந்துறையூர் என்று வழங்கப்பட்ட இவ்வூரில் குலோத்துங்க சோழ ஈஸ்வரமுடையாருக்கு அளித்த கொடைகளை அறியலாம். அத்தலைவன் எய்தனூர் கட்டளை என்ற சேவையையும் துவங்கியதை அறியலாம்.

Contact Address

நடுநாடு என்று வழங்கப்படும் தமிழகப்பகுதியில் தென்னாற்காடு மாவட்டம் திருவதிகை வீரட்டானேசுவார் ஆலயத்திற்குக் கிழக்கில் 15 கிமீ தொலைவிலும் திருமாணிக்குழி வாமன புரீஸ்வார் ஆலயத்திற்கு வடக்கில் 3கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது
Loading map...

Related Content

திருஅதிகை வீரட்டானம் (திருவதிகை) தலவரலாறு

திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோயில் தலவரலாறு

சித்தவடமடம் (கோட்லாம்பாக்கம், சிதம்பரேசர் கோயில்) Siddhavad

எயினனூர்