இறைவர் திருப்பெயர்: அர்த்தநாரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பாகம்பிரியாள்.
தல மரம்:
தீர்த்தம் : தேவ தீர்த்தம். பிரம தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், கபிலதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், கேதார கௌரி.

- மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. தெய்வத்திருமலை, நாகமலை, உரககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.
- ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்திப் பிடித்துக் கொள்ள வாயு தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்று பந்தயம். இதன்படி ஆதிசேஷன் மேருமலையை படம் எடுத்து மூடிக்கொள்ள வாயு வீசிய வேகத்தில் மலையின் சில முகடுகள் பறந்து சென்று பல இடங்களில் விழுந்தன. அவற்றில் ஒன்று திருச்செங்கோடு. அதனால் இம்மலைக்கு நாககிரி வாயுமலை என்றும் பெயர்கள் உண்டு
- கேதாரகௌரி, மரகத லிங்கத்தைப் பூசித்து, இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது.
- சம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை 'நளிர்சுரம்' பற்றி வருத்த 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் பதிகம் பாடி, 'தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்' என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.
- இத்தலத்துச் சொல்லப்படும் ஒரு செய்தி :- இங்கு வாழ்ந்த குணசீலர் என்ற புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டாராம். பாண்டிப்புலவரேறு என்பவர்; "சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே" - என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடினாராம்; அப்போது, சிறுவனாக வந்த வேலவன் "அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே" - எனப் பாட்டினை முடித்து அப்புலவரைத் திரும்பிப் போகும்படிச் செய்தார் என்ற செய்தி இம்மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாகுமென்று சொல்லப்படுகிறது.
- வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வெந்தவெண் ணீறணிந்து (1.107); பாடல்கள் : கபிலதேவ நாயனார் - சிவன்மாட் டுகவெழுதும் (11.23.95), சிவபெருமான் திருவந்தாதி, பட்டினத்துப் பிள்ளையார் - இறைத்தார் புரம்எய்த (11.30.59) திருஏகம்பமுடையார் திருவந்தாதி, சேக்கிழார் - அண்டர் பிரான் (12.28.324 & 327) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சேலம், ஈரோடு, நாமக்கல் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். ஈரோட்டிலிருந்து 18-கி. மீ. மற்றும் நாமக்கல்லிலிருந்து 32-கி.மீ. தொலைவில் உள்ளது.
தொடர்பு :
04288 - 255925, 09364229181.