logo

|

Home >

hindu-hub >

temples

சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்: ஸ்தாணு

இறைவியார் திருப்பெயர்: அறம்வளர்த்த அம்மன்

தல மரம்:

தீர்த்தம் : பிரபஞ்ச தீர்த்தம், பழையாறு

வழிபட்டோர்:இந்திரன், அத்ரி, அனசூயை

Sthala Puranam

  • அகலிகையிடம் ஆசைப்பட்டதால் இந்திரன் சாபம் பெற்றான். சாபவிமோசனம் பெற ஞானகான வனத்திற்கு வந்தான். அவனது தேர் ஞானகான வனத்தின் ஒருபுறம் நின்றது. அது தேரூர் எனப்பட்டது. ஐராவதம் யானை மருந்துவாழ்மலைக்கு வந்தது. அது தன் கொம்பால் தரையைக் கீறி ஆற்றை உற்பத்தி செய்தது. அது கோட்டாறு எனப்பட்டது. இந்திரனின் தவம் பலித்தது. ஸ்தாணுவாக்கிய இறைவன் அவன் முன் தோன்றினான். இந்திரன் சாபம் நிங்கித் தூய்மை அடைந்த இடம் ஆதலால் (சுசி இந்திரம்; சுசி - தூய்மை) சுசீந்திரம் என ஆயிற்று.
  • இங்குள்ள தாணுமாலயனை ஒவ்வொரு இரவும் தேவேந்திரனே பூஜை செய்கிறான் என்று ஒரு நம்பிக்கை. இங்கு அர்த்த ஜாம பூஜை கிடையாது. ஆனால் பூஜா திரவியங்களைச் சேகரித்து வைத்து விட்டு அர்ச்சகர்கள் நின்று கொள்வர். அர்த்தஜாம பூஜை அமராபதியால் நடப்பதால் மாலை பூஜை செய்தவர் மறுநாள் காலை கடைதிறக்கக் கூடாது என்பது கட்டளை. இது காரணமாக இங்கு பூஜைக்கு இருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். காலையில் கடை திறக்கும்போது 'அகம் கண்டது புறம் கூறேன்' என்று சத்தியம் செய்தே வாயில் திறக்க வேணும் என்பது உத்தரவு. தேவேந்திரன் கட்டளையிட்டபடியே இங்கு தாணுமாலயருக்கு, இக்கோயிலைக் கட்டினான் என்பது கர்ணபரம்பரை.
  • இக்கோயிலில் இறைவியாகக் கருதப்படும் அறம்வளர்த்த அம்மன் கதை ஒன்று உண்டு. சுசீந்திரம் ஊரை அடுத்த தேரூர் என்ற ஊரில் வாழ்ந்த பள்ளியறை நாச்சியார் என்ற கன்னி தாணு கோயிலுக்கு வந்தாள். கோயிலைச் சுற்றி வந்தபோது அவள் மாயமாக மறைந்தாள். இறைவன் அவளை ஆட்கொண்டான். இந்த நிகழ்ச்சி 1444-ஆம் ஆண்டு நடந்தாக புராணக்கதை தெரிவிக்கிறது. இதன் நினைவாக மாசிமாதம் திருக்கல்யாணம் நடக்கிறது.
  • பாணாசுரனை அழிக்க தேவி கன்னியாகுமரியாகப் பிறந்தாள். அவள் கன்னியாக இருக்கும்போது மட்டுமே அசுரனை வெல்ல முடியும் என்பது வரம். தாணு குமரி கல்யாணம் சூரியன் தோன்றும் முன் நடக்காமல், குமரி அசுரனை அழித்தாள்Suchindram Thanumalayan Temple

Specialities

Suchindram Sthanumalayan Temple Pond

  • ஏறத்தாழ 3 1/2 ஏக்கர் பரப்பில் கோயில் வியாபித்திருக்கிறது.
  • முற்காலப் பாண்டியர், பிற்காலச் சோழர், பிற்காலப்பாண்டியர், வேணாட்டார், விஜயநகர நாயக்கர், திருவிதாங்கூர் ஆகிய அரசர்களின் காலத்தில் கட்டுமானம் நடந்திருக்கிறது. 
  • இக்கோயிலில் மூலவராக தாணு(சிவன்), மால் (விஷ்ணு), அயன் (பிரம்மா) மூவரும் இங்கு இருப்பதாக ஐதீகம். ஆனால் "சுசிந்திரமுடையார் பரமசிவன்' எனக் கல்வெட்டுகள் குறிப்
    பிடுகின்றன. இக்கோயிலின் வடபகுதியில் சிவனுக்கும், தெற்கே விஷ்ணுவிற்கும் கருவறைகள் உள்ளன. இதன் விமானத் தூபி தங்கத்தகட்டால் வேயப்பட்டது. இக்கருவறை கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்டது.
  • 6 மீட்டர் உயரப் பாறையில் கைலாசநாதர் கோயில் உள்ளது.
  • இக்கோயில் நாடகசாலை, கோபுரவாசல் வெளிப் பிரகாரம், ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டபம், குலசேகரமண்டபம், சித்திரசபை, ஆதித்ய மண்டபம், செண்பகராமன் மண்டபம், வீரபாண்டியன் மண்டபம், உதயமார்த்தாண்ட மண்டபம், ரிஷப மண்டபம் என்னும் மண்டபங்களை உடையது.
  • நாடகசாலை 1797-1819-ஆம் ஆண்டுகளில் 8 தேவதாசிகளால் கட்டப்பட்டது. நம்பூதிரிப்பெண் ஒருத்தியும் கட்டுமானத்திற்கு உதவியிருக்கிறாள்.

இக்கோயிலின் இராஜகோபுரம் விஜயநகரப்பாணி. 7 நிலை, 41 மீட்டர் உயரம். விட்டலர் என்ற விஜயநகரப் படைத்தலைவர் 1544-ல் கோபுர அதிஷ்டானத்தைக் கட்டினார். திருவிதாங்கூர் அரசர் மூலந்திருநாள் கோபுரத்தைக் கட்டினார். கோபுர வேலை 1888-ல் முடிந்தது. கோபுரத்தின் 7 நிலைகளிலும் தாவரச்சாய ஓவியங்கள் உள்ளன.

கோபுரத்தை அடுத்த ஊஞ்சல் மண்டபம் 1584-ல் கட்டப்பட்டது. இங்கு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அறம்வளர்த்த அம்மன் திருமணம் இம்மண்டபத்தில் நடக்கும்.

வசந்த மண்டபம், தெற்கு வெளிப்பிரகாரத்தைத் தொட்டு இருப்பது. இங்கு மேற்கூரையில் நவக்கிரகச் சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபம் 1835-ல் கட்டப்பட்டது. இம்மண்டபத்தின் நடுவில் உள்ள சந்திரகாந்தக்கல்லில் செப்பு பஞ்சலோக படிமங்களை வைத்து குளிரூட்டப்படும் நிகழ்வு முந்தைய காலத்தில் நடந்தது.

அலங்கார மண்டபம். இங்கு இசைத்தூண்கள் உள்ளன. 1758-1798ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டடது.

வடக்கு பிரகாரமூலையில் இருப்பது சித்திர சபை. எட்டுதூண்கள் கொண்டது. எட்டிலும் அருமையான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபம் ஆரம்பத்தில் மரப்பணியால் ஆனது. 1835-ல் கல்லால் கட்டப்பட்டது.

கிழக்கு வெளிப்பிரகாரத்தில் இருப்பது ஆதித்ய மண்டபம். இங்கு பெருமாளின் கொடிமரமும், தாணுமூர்த்தியின் கொடிமரமும் பலிபீடங்களும் உள்ளன. இம்மண்டபம் 1479-1494 ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம். 

செண்பகராமன் மண்டபம் இக்கோயிலுக்குப் பெருமை சேர்ப்பது. இது கைமுக்கு மண்டபம் எனப்படும். 33 மீ நீளம் 26மீ அகலம் உடையது. 36 தூண்கள் கொண்ட இம்மண்டபத்தில் 500-க்கு மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இந்த மண்டப வேலை 1478-ல் முடிந்தது.

இக்கோயிலின் தெப்பக்குளம் 4 ஏக்கர் பரப்புடையது. இது கோயிலின் வடபுறம் உள்ளது. 13 தூண்களும், கோபுரமும் கொண்டது தெப்ப மண்டபம். இந்த குளத்தை முதலில் தோண்டி படிகள் கட்டியவன் வீரமார்த்தாண்டவர்மா குலசேகர பெருமாள். திருக்குளத்தின் படிக்கட்டு 1471-ல் கட்டப்பட்டது. தெப்பமண்டபத்தைக் கட்டியவர் திருமலை நாயக்கரின் தம்பி செவ்வந்தி நாயக்கர். இது 1622 - 1651 ஆம் ஆண்டிற்குள் கட்டப்பட்டிருக்கலாம்.

கல்வெட்டுக்கள்:
இக்கோயிலில் தமிழ் மொழியில் 130 கல்வெட்டுக்களும், வட்டெழுத்து வரிவடிவில் 15 கல்வெட்டுக்களும், கிரந்த எழுத்தில் 5 கல்வெட்டுக்களும் ஆக 150 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களில் பழையது 9-ஆம் நூற்றாண்டு, 17-18 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் அதிகம்.

இங்குள்ள சிற்பங்களில் காரைக்கால் அம்மையார் சிற்பம் முக்கியமானது. அம்மை வயது முதிர்ந்த பெண்ணாக காட்டப்பட்டுள்ளார். இவளது முதிர்ச்சி எலும்பு வடிவில் தெரிகிறது.

சுரதேவர் சிற்பம் அபூர்வமானது. இரண்டு தலைகள், ஆறு கண்கள், மூன்று கைகள், மூன்று கால்கள் என அமைந்தது. 

விழாக்கள்:
சித்திரை, ஆவணி, மார்கழி, மாசித் திருவிழாக்கள்.சித்திரை விஷு, கார்த்திகை சொக்கப்பனை, ஆடி களப பூஜை, ஆஞ்சநேயர் ஜெயந்தி ஆகியன முக்கிய திருவிழாக்கள். மார்கழி திருவிழா பெரியது. 9-ஆம் நாள் தேரோட்டம். 6-ஆம் நாள் விழா சம்பந்தர் ஞானப்பால் உற்சவம், சித்திரை திருவிழாவில் 10-ஆம் நாள் தெப்பவிழா.

  •  

Contact Address

Related Content

அகத்தீச்சுரம் அகஸ்தீஸ்வரமுடைய நயினார் திருக்கோயில்- (அகத்தீஸ

திருவிடைக்கோடு சடையப்பர் (மகாதேவர்) ஆலயம்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் திருக்கோயில் (Kanyakumari Guhanat

நாகர்கோவில் சோழராஜா மஹாதேவர் திருக்கோயில்

நாகர்கோவில் தழுவிய மகாதேவர் திருக்கோயில்