logo

|

Home >

hindu-hub >

temples

திருவிடைக்கோடு சடையப்பர் (மகாதேவர்) ஆலயம்

இறைவர் திருப்பெயர்: சடையப்பர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:வ்யாக்ரபாதர், இடைக்காடர்

Sthala Puranam

திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம் குமரி மாவட்டத்திலுள்ள பன்னிரண்டு சிவாலயங்களில் ஒன்பதாவது,
இடைக்காட்டுச் சித்தர்
பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர்
இத்தலத்தில் சமாதியானார் என்றும் இடைக்காடு தான் இடைக்கோடு ஆகி பின்னர்
அதுவே திருவிடைக்கோடு என மருவியது என்றும் கூறப்படுகிறது. மூலவரின்
முன்னால் மேற்கு நோக்கி அமைந்துள்ள சந்நிதியே இடைக்காடர் சமாதி என்று
ஊர்மக்கள் கூறுகின்றனர். கோயிலின் கிழக்கே சிறிது தூரத்தில் காணப்படும்
இடைக்காடர் மலையையும், இடைக்காடர் குளத்தையும் இடைக்காடு சித்தரோடு
இணைத்துக் காட்டுகின்றனர்.

Specialities

கல்வெட்டின் அடிப்படையில் குமரி மாவட்டத்தின் பழமையான சிவாலயம் இது.

திருவிடைக்கோடு ஒரு காலத்தில் ஆய் மன்னர்களின் தலைநகராகத் திகழ்ந்தது என்பது வரலாறு.

திருவிடைக்கோடு கோயில் கிழக்குநோக்கி அமைந்திருந்தாலும், கோயில் முகப்பு வடக்கேதான் உள்ளது. வடக்கே காணப்படும் வாயில் வழியே தான் கோயிலின் உள்ளே செல்ல வேண்டும். கருவறையின் நேராக வாயில் இல்லை. சாளரமே உள்ளது. இது இக்கோயிலின் சிறப்பு அம்சமாகும். கோயிலின் கிழக்கே ஒரு குளம் உள்ளது. குளத்தின் கிழக்கே வயல்களும், தோட்டங்களும், மலைகளும் காட்சி தருகின்றன. வெளிப் பிரகாரத்தில் ஆல், அரசு, வேம்பு இவை மூன்றும் இணைந்து ஒரே மரமாக காட்சி தருகிறது. அதன் அடியிலே விநாயகர், நாகர் சிலைகள் சூழ அமர்ந்துள்ளார். இக்கோயிலில் சிவன், விநாயகர், சாஸ்தா மூன்று தெய்வங்களே உள்ளனர்.

திருவிடைக்கோடு கோயிலின் கிழக்கே பெரிய குளம் ஒன்றும், வடகிழக்கில் கிணறும் உள்ளன. 

சிவாலய ஓட்டம்: குமரி மாவட்டத்தில் திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் என்னும் பன்னிரண்டு சிவாலயங்கள் ஆன்மீக அடிப்படையில் மிகவும் பிரசித்தி பெற்றவை. சிவராத்திரியன்று இவ்வட்டார பக்தர்கள் சிவப்பு உடையணிந்து, கையிலே விசிறி ஏந்தி "கோவிந்தா, கோபாலா" என்னும் திருமாலின் திருநாமங்களை உச்சரித்துக்கொண்டே இந்த பன்னிரண்டு சிவாலயங்களை நோக்கி ஓடுவது கண்கொள்ளா காட்சியாகும். இது குமரி மாவட்டத்திற்கே உரிய ஓர் அரிய திருவிழாவாகும்.

திருவிழாக்கள்:
மாசி மாதம் கும்பாஷ்டமி, கார்த்திகை மாதம் விருச்சிகாஷ்டமி, திருவாதிரை, ஆயில்யம் நட்சத்திரங்களில் கிருததாரையும் நடக்கின்றது. 

இக்கோயிலில் வேறொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் சுசீந்திரம் மார்கழி தேரோட்ட விழாவன்று ஆளூரிலிருந்து இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த ஒருவர் தானே நெய்து முடித்த ஒரு பரிவட்டத்தை பாறையடியிலுல்ள ஒரு ஹரிஜனப் பக்தரிடம் கொடுக்க அவர் அதனை கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. இதற்கும் ஒரு கதை கூறுவர். திருவிடைக்கோடு கோயிலைச் சுற்றி தினமும் வலம் வந்து கொண்டிருந்த ஒரு காளையை கொல்வதற்கு இருவர் திட்டம் தீட்டினர். என்றும், ஊர் மக்கள் சுசீந்திரம் தேரோட்ட விழாவிற்குச் சென்றிருந்த நேரத்தில் அவர்கள் கோயில் சென்று ஒருவர் காளையைப் பிடித்து வைக்க மற்றொருவர் கத்தியைத் தீட்டினார் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு தீட்டிய கல்லிலே இரத்தம் ஆறாக ஓடியது என்றும் அதே நேரத்தில் பிடித்துவைத்திருந்த காளையும் மறைந்துவிட்டது என்றும் கூறுகின்றனர். இந்த அற்புத நிகழ்ச்சிகளைக் கண்டு அஞ்சிய இருவரும் தங்கள் தவற்றினை உணர்ந்து அதுமுதல் மூலவருக்கு பரிவட்டம் காணிக்கையாக
தொடங்கினர். அவர்களது சந்ததியினர்கள்தான் இன்றும் கோயிலுக்கு பரிவட்டம் வழங்குகின்றனர் என்று கூறப்படுகிறது.

கோயில் கல்வெட்டுக்கள்
குமரி மாவட்டப் பகுதிகள் திருவிதாங்கூர் மாநிலத்தில் இருந்தபோது திருவிதாங்கூர் அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையில் திருவிடைக்கோடு ஆலயத்தில் உள்ள 27 கல்வெட்டுக்களைக் பதிப்பித்தனர். அவற்றுள் 4 கல்வெட்டுகள வட்டெழுத்திலும், ஒரு கல்வெட்டு மலையாளத்திலும், பிற கல்வெட்டுகள் தமிழிலும் செதுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகள் தமிழகத்துடன் இணைந்த பிறகு தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இந்த ஆலயத்திலுள்ள 22 கல்வெட்டுகளைப் பதிப்பித்துள்ளனர்.

கல்வெட்டு தரும் தகவல்கள்
இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் பழமையானது கி.பி. 869-ல் ஆய்குல மன்னன் கோக்கருநந்தடங்கள் காலத்தில் செதுக்கப்பட்டதாகும். இம் மன்னன் கி.பி. 857 முதல் 885 வரை இப்பகுதியை ஆண்டு வந்தான் என்பத வரலாறு. அன்றைய ஆய் நாட்டின் தலைநகராக திருவிடைக்கோடு இருந்தது என்று கூறுகிறார் வரலாற்று ஆசிரியர் டாக்டர் கே. கே. பிள்ளையவர்கள். முதுகுளத்து வாணியன் புல்லமுருகன் என்பான் திருவிடைக்கோடு மாதேவர்க்கு திருநந்தா விளக்கு எரிப்பதற்கு நெய் அளப்பதற்காக 25 பசுக்கள் தானமாக அளிக்கப்பட்ட தகவலை இந்த பழமையான கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதே மன்னர் காலத்தில் கி.பி. 877-ல் செதுக்கப்பட்ட வேறொரு கல்வெட்டு மூலவருக்கு நாள்தோறும்
உழக்கு நெய் அளக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்த தகவலைக் கூறுகின்றது. கி.பி. பத்தாம் நூற்றாண்டை சார்ந்த ஒரு கல்வெட்டு ஓமாய நாட்டு அரையனின் நினைவாக அந்நாட்டின் தலைவனான ஊர் வேளான் என்பான திருநந்தாவிளக்கிற்கும், திரு அமர்துக்குமாக நிலம்விட்டுக் கொடுத்த தகவலைத் தெரிவிக்கிறது. இந்த ஓமாய நாட்டை கோக்கருநந்தடங்கள் காலத்துச் செப்பேடு ஒன்று குறிப்பிடுகிறது. மேலும் இதே மன்னன் கி.பி. 866-ல் முஞ்சிறையை அடுத்துள்ள பார்த்தீப சேகரபுரத்தில் ஒரு பெருமாள் ஆலயம் எழுப்பி அதன் அருகே ஒரு பல்கலைக் கழகத்தையும் நிறுவினான் என்ற அரியதோர் தகவலை அச்செப்பேடு தெரிவிக்கின்றது. கி.பி. 13-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட ஒரு
கல்வெட்டு வீரபாண்டிய ஆல் குடியான் வேளான் என்பான் மூலவருக்கு தினமும் திருஅமிர்து படைப்பதற்கு கட்டிமாங்கோட்டில் நிலம் அளித்த தகவலைக் கூறுகின்றது. வட்டெழுத்தால் செதுக்கப்பட்ட இந்த நான்கு கல்வெட்டுகளும் கோயில் வெளிப்பிரகாரத்தில் தெற்குப்பகுதியில் காணப்படும் பாறையில் காணப்படுகின்றன. இப்பாறையில் செதுக்கப்பட்டுள்ள வேறொரு கல்வெட்டு பண்டைய மலையாள எழுத்தில் செதுக்கப்பட்டுள்ளது. கொல்லம் ஆண்டு 548-ல் (கி.பி.1373) செதுக்கப்பட்ட இக்கல்வெட்டு அன்றைய வேணாட்டு மன்னர் கீழப்பேரூர் இரவிவர்மன் திருவடி பெயரைக் குறிப்பிடுகின்றது. குமரி மாவட்டத்தில் மளிகைச் சாமான்களை வெஞ்சனம் என்று கூறுவர். இந்த "வெஞ்சனம்" என்ற சொல்லை அதே பொருளில் இப்பாறையில் காணப்படும் கி.பி. 12-ம் நூற்றாண்டு தமிழ்க் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. இக்கோயில் தூண்களில் கழைக்குட்டம் இராமன் தேவன், கேரளத்துச் சரப்பள்ளி, மருதன்நாகன், பள்ளத்துப் பள்ளிச்சை மணியன் கல்லன், கேரளன் அய்யப்பன், பாறைச்சாலை நாகன் ஆதிச்சன், குட்டமங்கலம் காமன் கிருட்டினன், மருதத்தூர் ஈச்சுவரன், குழிக்காட்டு சாத்தான் அரங்கன், முடவம்புறத்து பெரிய திருவடி திருவனந்தாழவான் ஆகியோர் இக்கோயிலில் பல தூண்களை
நிறுவினர். இவர்களது பெயர்கள் தூண்களிலே தனித்தனியே செதுக்கப்பட்டுள்ளன. ஒரு தூணில் காணப்படும் கல்வெட்டு மட்டும் மூலவரை சடயப்பர் என்று குறிப்பிடுகிறது. மக்களும் மூலவரை இன்று சடையப்பர் என்றே அழைக்கின்றனர். கொல்லம் ஆண்டு 902-ல் (கி.பி. 1727) செதுக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டு இராசராசத் தென்னாட்டு குறுநாட்டைச் சார்ந்த கடிகைப் பட்டணத்தில் உள்ள மணவாளக்குறிச்சியில் வாழ்ந்த கணக்குப் பெருமாள் கண்டன் என்பான் இக்கோயிலில் துவாதசியன்று 54 பிராமணர்களுக்கு உணவளிப்பதற்கு நிலம் வழங்கியதாகத் தெரிவிக்கின்றது. இக்கோயிலில் கொல்லம் ஆண்டு 835-ல் (கி.பி. 1660) செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு ஓர் அரிய செய்தியைத் தருகிறது. பண்டைக் காலத்தில் கோயில்ச் திருப்பணிகளை பரம்பரையாகச் செய்யும் பெண்களை தேவதாசிகள் என்று அழைப்பர். அதேபோல கல்குளம் நீலகண்ட சுவாமி கோயிலில் நியமிக்கப்பட்ட ஆண்களை "தேவபுத்திரர்" என்று இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது ஓர் அரிய தகவலாகும். இக்கல்வெட்டுகள் தரும் தகவல்களிலிருந்து கி.பி. 1818-ஆம் நூற்றாண்டு வரை திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம் சிறப்புடன் திகழ்ந்தது என்றும், நாட்டின் பல்வேறு பகுதி மக்கள் இக்கோயிலுக்கு நிலமும் பொருளும் தானமாக
அளித்து வந்தனர் என்றும் தெரிய வருகிறது. 

பன்னிரண்டு சிவாலயங்களுள் நாகர்கோவிலை அடுத்துள்ளது திருவிடைக்கோடு ஆலயம்தான். இது வரிசையில் ஒன்பதாவது சிவாலயமாகும். நாகர்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் வில்லுக்குறியை அடுத்துள்ளது

Contact Address

Related Content

அகத்தீச்சுரம் அகஸ்தீஸ்வரமுடைய நயினார் திருக்கோயில்- (அகத்தீஸ

തിരുവിടയ്ക്കോട് ചടയപ്പർ മഹാദേവർ)

சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் திருக்கோயில் (Kanyakumari Guhanat

நாகர்கோவில் சோழராஜா மஹாதேவர் திருக்கோயில்