இறைவர் திருப்பெயர்: சோமநாதர்
இறைவியார் திருப்பெயர்: பார்வதி
தல மரம்:
தீர்த்தம் : ஹிரண்யா, சரஸ்வதி, கபிலா, சாகரம்
வழிபட்டோர்:சந்திரன், இராவணன், கிருஷ்ணன், விக்கிரமாதித்தன், அப்பர்
- பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுவது இதுவேயாகும். "ஸோம லிங்கம் நரோ த்ருஷ்ட்வா ஸர்வபாபாத் ப்ரமுச்யதே" என்ற வாக்கியம் இதன் பெருமையை உணர்த்தும்.
- கிருத யுகத்தில் சந்திரனும், திரேதா யுகத்தில் இராவணனும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனும், கலியுகத்தில் விக்கிரமாதித்தனும் சிறப்பாக வழிபட்ட தலம்.
- ஸ்கந்த மஹாபுராணத்தின் மிக்கபெரிய பகுதியாகத் திகழ்வது ப்ரபாஸ கண்டம். இது 491 அத்தியாயங்களை உடையது. இதுவே இத்தலத்தின் பெருமை எவ்வளவு உயர்ந்தது என்பதைப் பறை சாற்றும்.
- மிகப்பழைய காலத்தில் சௌராஷ்டிரத்தின் பிரபாஸ் பட்டன்/ தேவபட்டன பகுதியைச் சேர்ந்ததாக விளங்கியது. இமயமலை தோன்றும் முன்பே இப்பகுதி இருந்ததாகவும், கற்கால மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளி நாகரிகம் தழைத்தபோது சிவனைப் பசுபதி என்று பெயரிட்டு வணங்கி வந்தனர். பாண்டவர்கள் இப்பகுதியை அமைத்தபோது, அதற்குக் குசஸ்தலி என்று பெயரிட்டனர். பின்னர்தான் இப்பகுதி, சுரதா, சௌராஷ்டிரா என்றெல்லாம் வழங்கப்பட்டது. ஒரு காலத்தில் பிரபாஸ் பன்னாட்டு வணிகச் சிறப்பு வாய்ந்த துறைமுகமாக விளங்கியது.
- மேற்குக் கடற்கரை ஓரம் இருந்த தலங்களுள் பாரத காலத்திலிருந்தே பிரபாஸ் மிகப்புனிதம் வாய்ந்த தலமாகக் கருதப்பட்டது. இந்திரன்,சூரியன், முனிவர்கள் பலரும் வழிபட்ட இத்தலத்தைப பாண்டவர்களும், கிருஷ்ணனும்,பலராமனும், வழிபட்டனர். கோகர்ணத்திலிருந்து துவாரகை செல்லும் வழியில் அர்ச்சுனன் இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. பரீக்ஷித் மன்னன், ஜனமேஜயன் ஆகியோரும் இங்கு யாத்திரை செய்துள்ளனர். எனவே, க்ருஷ்ணரது காலத்திற்குப் பல காலம் முன்னதாகவே புனிதம் மிக்க தலமாக இது திகழ்ந்துள்ளதை அறியலாம்.
- மகாபாரதத்தில் பலமுறைகள் சரஸ்வதி நதி கடலில் சங்கமம் ஆகும் இடத்தில் பிரபாஸ் இருந்த செய்தி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பாரதப்போர் முடிந்ததும் யாதவர்கள் குடிபோதையில் தங்களுக்குள் போரிட்டு மாண்டார்கள்.கிருஷ்ணபகவானும் பலராமனும் மட்டுமே எஞ்சினார்கள். மான் உறங்கிக்கொண்டிருப்பதாகத் தவறாகக் கருதிய வேடன் ஒருவனது அம்பு அங்கு உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணன் மீது பாயவே கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்றது. அவ்வாறு கிருஷ்ணன் தனது சரீரத்தை நீத்த இடம், சோம்நாத் கோயிலருகில் உள்ள பாலகடிர்தா என்பதாகும். இங்கு ஹிரண்யா, சரஸ்வதி, கபிலா ஆகிய மூன்று நதிகள் கடலோடு சங்கமிக்கின்றன.
- தக்ஷன் தனது 27 பெண்களைச் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். அவர்களுள் ரோகிணியிடம் மட்டுமே சந்திரன் பிரியமாக இருக்கக்கண்டு மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டனர். அதனால் வெகுண்ட தக்ஷன், சந்திரனின் கலைகள் தேய்ந்து போகும்படி சபித்து விட்டான். அந்நிலையில் சிவபெருமான் ஒருவரே அவனுக்கு அடைக்கலம் தந்து, பிறைச் சந்திரனை ஏற்று அருளியதோடு கலைகள் 15 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் வளருமாறு அருளினார். அவ்வாறு சந்திரன் இறைவனை வழிபட்ட இடமே பிரபாஸ் என்கிறார்கள். அது முதல் சுவாமிக்கும் சோமநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ஊரும் ஸோம்நாத் ஆயிற்று.
- சோம்நாத் நம் தர்மத்தின் எழுச்சியின் சின்னமாகும். முரடர்களால் பலமுறை சூறையாடப்பட்டும் மீண்டும் கம்பிரமாக நிற்கும் திருக்கோயில்.
- புராணங்கள் மூலம் பாதாள லோகத்தில் நாகர்கள் வசித்ததை அறிகிறோம். மூன்று விதமான நெருப்புடன் சரஸ்வதி நதி இங்கு கடலில் கலப்பதாகப் புராணம் கூறும். எனவே அதனை அக்னி தீர்த்தம் என்றும் கூறுவதுண்டு. நாக லோகத்திற்கும் சோமநாதருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் புராணம் விவரிக்கிறது. நாகர்களான பார சைவர்கள் ஆண்ட போது சிவ வழிபாடு மேலோங்கி இருந்தது.
- குப்தப் பேரரசின் போது இவ்வாலயம் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. ஜூனாகாத் நகரைத் தலைநகரமாகக் கொண்ட குப்த சாம்ராஜ்ஜியத்தில் பிரபாஸ் புகழோடு விளங்கியது. ஸோம்நாத்தைப் பராமரிக்க ஒரு கிராமம் அளிக்கப்பட்டது. இவ்வாறு சுமார் இருநூறு ஆண்டுகள் உன்னத நிலையில் இக் கோயில் இருந்து வந்தது.
- குப்தர்கள் ஆட்சிக்குப் பிறகு வலபி மன்னர்கள் ஆட்சியில் சோம்நாத்தில் இரண்டாவது கோயில் கட்டப்பட்டது ( கி.பி. 640-649) என்றும் அப்போது பழைய கல்வெட்டுக்கள் மறைந்து போயின என்றும் சரித்திர ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். முதல் கோயில் இருந்த இடத்திலேயே இரண்டாவது கோயிலின் கர்ப்பக் கிருகம் எழுப்பப்பட்டது. கடல் உள்ளே வராதபடி தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.
- நான்காம் தாரசேன மன்னரது ஆட்சியில் இப்பகுதி பன்னாட்டுத்துறைமுகமாக விளங்கியது.கி.பி.722 ல் பாதாமியை ஆண்டு வந்த சாளுக்கியர்கள் கைவசம் வலபியர்களின் அரசு மாறியது. இதே சமயத்தில் தான் ( கி.பி. 711 ) அரேபியர்களின் பார்வை பாரத நாட்டின் மீது விழுந்தது. சிந்து மாநிலம் வழியாக முன்னேறிய அரேபியப் படை மார்வார், ப்ரோச், உஜ்ஜைன்,மால்வா ஆகிய பகுதிகளை வென்று சௌராஷ்டிர மன்னரையும் வென்று தனது ஆளுகைக்குக் கொண்டு வந்தது.
- கி.பி. 731 – 738 கால கட்டத்தில் அரேபியப் படைகள் நுழைய முற்பட்டபோது, சாளுக்கிய அரசரான புலிகேசி அதனை முறியடித்து விரட்டினார். சௌராஷ்ட்ரத்தை வளைத்து உஜ்ஜைன் வரை வந்த படைகளை பிரதிஹரா வம்சத்தைச் சேர்ந்த நாகபட்டா என்ற மன்னர் விரட்டியடித்தார்.கி.பி.815ல் இரண்டாம் நாகபட்டா என்ற மன்னரது ஆட்சியில் கனோஜ் தலைநகர் ஆகியது. அப்போதுதான் மூன்றாவது முறையாக ஸோம நாத் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். கி.பி. 1019 ல் போஜ ராஜன் காலத்தில் குஜராத் மிகுந்த வளர்ச்சி பெற்றது. சிவ பக்தரான போஜ ராஜா பல கோயில்களைக் கட்டினார்.
- கி.பி. 1026 ம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ம் நாள் கஜினி முகமதின் முகலாயப் படைகள் இங்கு வந்து கோயிலை நாசம் செய்தன. மூல லிங்கமானது கஜினியினால் உடைக்கப்பட்டது . கோவிலின் விலையுயர்ந்த ஆபரணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. சிறுவர்களும் பெண்களும் கடத்திச் செல்லப்பட்டனர்.
- பின்னர் ஜுனகாத் அரசர் , அஜ்மீர் மால்வா ஆகியோர், கோயிலை மீண்டும் நிர்மாணித்தனர். ஆனால் கி.பி.1298 ம் ஆண்டு டெல்லி சுல்தான் அல்லாவுதீன் கில்ஜியின் படைகள் இக்கோயிலைத் தாக்கின. ஜோதிர்லிங்கம் உடைக்கப்பட்டது. பிறகு ராஜா ராவன்வர் என்பவர் மீண்டும் கோயிலை உருவாக்கி, சிவலிங்கத்தைத் ஸ்தாபித்தார்.
- கியாசுதீன் துக்ளக்கின் மகன் பதவி ஏற்றதும் சோம்நாத் ஆலயம் சூறையாடப்பட்டது. சிவலிங்கமும் மூன்றாவது முறையாகக் கொள்ளை அடிக்கப்பட்டது. பின்னர் பிரபாஸ் மற்றும் ஜுனேகாத் அரசர்கள் இணைந்து டெல்லிப் படையை விரட்டி விட்டு, மீண்டும் சோம்நாத் ஆலயத்தைக் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்தனர்.
- ஆனால் ஜாபர் கான் என்பவனால் நான்காவது முறையாக சோம்நாத் ஆலயம் சூறையாடப்பட்டது.1377 ல் ராஜா பஜாடி என்பவர் கோயிலைப் புதுப்பித்தார்.
- ஜாபர் கான் இடித்ததால் ஐந்தாம் முறையாக ஆலயம் சூறையாடப்பட்டது. ஆனாலும் இந்துக்கள் அங்கு சென்று பூஜை செய்தனர்.
- இதைக் கண்டு சகிக்காமல்,ஜாபர்கான் கோயிலுக்குள் நுழைந்து சிவலிங்கத்தை உடைத்து, பூஜை நடை பெறாதபடி செய்தான். இந்த ஆறாவது தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரமான கொள்ளைகள் நடைபெற்று ஆலயம் சீரழிந்தது.
- கி.பி.1415 ல் அகமது ஷா என்பவன் இக்கோயிலின் எந்த பகுதியும் இருக்கலாகாது என்று ஆணை இட்டான். இந்துக்கள் மத மாற்றம் செய்யப்பட்டனர். இதன் பிறகு ஜுனாகத் அரசர் கி.பி. 1451முதல் ஐந்து ஆண்டுகள் இக்கோயிலைத் திரும்பவும் கட்டி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார்.
- கி.பி. 1490 ல் பிரபாஸ் மீண்டும் சூறையாடப்பட்டது. எண்ணற்ற கோயில்கள் அழிக்கப்பட்டன.இந்து உருவங்களைப் பூஜிப்பதைத் தடை செய்தனர். இதனால் மனம் உடைந்த இந்துக்கள் சரஸ்வதி ஆற்றையே இறைவனாக வழிபட்டனர்.
- கி.பி. 1547 ம் ஆண்டு போர்ச்சுகீசியர்களது படையெடுப்புக்கு இப்பகுதி உள்ளானது. அக்பரது காலத்தில் நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருந்தது.
- கி.பி. 1665 ல் அப்துல் கான் என்பவனுடன் இங்கு வந்த ஔரங்கசீப் முதலில் அந்தணர் ஒருவரையும்,ஒரு பசுவையும் கொன்று விட்டு, ஸோம்னாத்தின் மீது படை எடுத்தான். கி.பி. 1704 ல் மீண்டும் சோம்நாத் மீது படை எடுக்க ஔரங்கசீப் ஆணையிட்டான். ஆனால் அது நிறைவேறும் முன்பாக 1707 ம் ஆண்டு மாண்டு போனான். பிறகு கி.பி. 1786 ம் வருடம் இந்தூர் மகாராணி அகல்யா பாய் அவர்கள் சோம்நாத் கோயிலை புனர் நிர்மாணம் செய்து சிவலிங்க பிரதிஷ்டை செய்தார்.
- 1947 வரை அமைதியாக இருந்த நிலையில் ஜுனாகத் நவாப் பாகிஸ்தானுடன் சேர முயற்சி செய்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு ஏற்படவே, நவம்பர் 9 ம் தேதி தான் மட்டும் பாகிஸ்தானுக்கு ஓடி விட்டார். நவம்பர் 15 ம் தேதி ஜுனாகத் மாகாணம் இந்தியாவுடன் இணைந்தது. இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சீரிய முயற்சியால் சோம்நாத் கோயில் அறக்கட்டளை துவக்கப்பட்டது. ஜாம்நகர் ராஜா திக் விஜய் சிங் அதற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். கி.பி. 1951 ம் ஆண்டு சோம்நாத் ஆலயம் முழுவதுமாகக் கட்டப்பெற்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதியான டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்களால் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
- சோம்நாத் ஆலயம் மீண்டும் எழுவதற்கு மூல காரணமாய் இருந்த சர்தார் படேல் அவர்களுக்கும் திரு. K.M. முன்ஷி அவர்களுக்கும் ஹிந்துக்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். 1922 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் இளைஞனாக இங்கு சென்ற திரு முன்ஷிஜி அவர்கள் கோயிலின் நிலையைக் கண்டு கதறி அழுதிருக்கிறார். கிருஷ்ண பகவான் தன்னுடலை நீத்த இடத்திலிருந்து கடலை நோக்கிய வண்ணம் குமுறியிருக்கிறார். மீண்டும் அங்கு கோயில் எழும்புமா என்பது அப்போது அவருக்கு எளிதில் நிறைவேற முடியாத கனவாகவே தோன்றியது. கோயில் கட்டுவதற்கு காந்தி-நேரு ஆகியோர் மூலம் அரசாங்க உதவி மறுக்கப்பட்ட நிலையிலும், இவ்விருவரும் ஒரு ட்ரஸ்ட் நிறுவி ஆலயத்தை எழுப்பி அழியாப் புகழ் பெற்றனர். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சர்தார் படேலின் திருவுருவச் சிலை சோமநாதர் ஆலயத்தை நோக்கி நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். திரு முன்ஷி அவர்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலமும், பொறியியல் வல்லுனர்கள் மூலமும் நன்கு பரிசீலித்து இத்தனை அழகான கோயிலை நிர்மாணிக்க உதவியுள்ளார்கள். அவர்கள் எழுதியுள்ள “ Somanatha the shrine eternal “ என்ற அருமையான நூல் வெளி வந்தது.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் நறையூரிற் சித்தீச்சரம் (6.70.10)
- மொகன்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களில் சிவன் ஹடயோகியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஸோம்நாத்தில் உள்ள லகுளீசர் சிற்பமும் இதையே காட்டுகிறது. பாரத நாடு முழுமைக்கும் பாசுபத வழிபாடு ஸோம்நாத் ஆலயத்தை மையமாகக் கொண்டே இருந்திருக்கிறது. பாசுபத ஆசார்யர்களுள் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த லகுளீசர் என்பவர் நர்மதைக் கரையில் உள்ள ப்ரோச் நகருக்கு அருகில் தோன்றியவர். சிவனது வடிவாகவே எண்ணப்பட்டவர். சோம சர்மா என்ற பாசுபத ஆச்சார்யர் தனது நான்கு மகன்களுடன் பிரபாஸ் தீர்த்தத்திற்கு வந்து தங்கி விட்டார். எனவே கி.பி. முதல் நூற்றாண்டிலேயே ஸோம்நாத்தில் கோயில் இருந்தது.
- ஸோமவித்யா என்ற நூலும், ஸ்காந்த மஹா புராணமும், ஸோமவார அமாவாசையன்று இங்கு உள்ள சரஸ்வதி நதி,மற்றும் கடல் நீராட்டையும், ஸோம நாதர் தரிசனத்தையும் மிகவும் புனிதம் வாய்ந்தவையாகக் குறிப்பிடுகின்றன.
- பாண கங்கா என்ற இடத்தில் கடலுக்குள் இரு சிவலிங்கங்களைத் தழுவியபடி அலைகள் திரண்டு வருகின்றன.
- காசி ராமேசுவரம் செல்வது போலவே ஹிந்துக்கள் தமது ஆயுளில் ஒரு முறையாவது ஸோம்நாத் ஜ்யோதிர் லிங்கத்தைத் தரிசிக்க வேண்டும். கார்த்திகை சோமவாரங்கள், மகாசிவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திரிவேணி சங்கமத்தில் நீராடி,முன்னோருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
நன்றி: திரு. சிவபாதசேகரன் அவர்கள், சென்னை
அமைவிடம்:
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து வேராவல் ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து சுமார் ஐந்து கி.மீ. சென்றால் அரபிக் கடலோரம் கம்பீரமாய் நிற்கும் ஸோம்நாத் ஆலயத்தை அடையலாம்.
Shree Somnath Trust
Prabhas Patan -362 268, Ta. Veraval
Dist. : GIRSOMNATH, GUJARAT STATE, INDIA.
Ph.No : +91-2876-232694
Email :
[email protected]