logo

|

Home >

hindu-hub >

temples

வழுவூர் வீரட்டம் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: வீரட்டேஸ்வரர், கஜசம்ஹாரர், கஜாரி, ஞானசபேசன்.

இறைவியார் திருப்பெயர்: பால குஜாம்பிகை, இளங்கிளை நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : பஞ்சமுக தீர்த்தம்.

வழிபட்டோர்:ஜேஷ்டா தேவி, நாகர்கள், பிடாரி, சப்தமாதர்கள்.

Sthala Puranam

பிரளய காலத்தில் உலகெல்லாம் அழிந்தும் இவ்வூர் அழியாது பிரளயத்தினின்றும் வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது.

 

தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த ஆபிசார வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன்பால் ஏவிவிட, பெருமான் அந்த யானையை அழித்துத் தோலைப் போர்த்திக் கொண்டருளிய வீரச் செயல் நிகழ்ந்த தலம்.

 

ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடிவர, அதையழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன - அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை, பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல முற்பட; இறைவன் எழுந்து வெளிப்படவே, முருகப் பெருமான் தன் தாய்க்கு "இதோ தந்தையார்" என்று சுட்டிக் காட்டினாராம். இவ்வரலாறு பற்றிய காட்சி கோயிலுள் சிற்பங்களாக உள்ளன.

vazhuvur temple

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

  • அட்ட வீரட்டத்தலம்; எனினும் பாடல் பெற்ற தலத்தில் இஃது இடம் பெற வில்லை.vazhuvur temple

 

இத்தலத்துக்குரிய கஜசம்ஹார மூர்த்தியும், அவர் எழுந்தருளியுள்ள ஞான சபையும் சிறப்பானவை.

 

இது பிப்பிலவனம், சமீவனம், தாருகாவனம், பதரிகாவனம் ஆகிய நான்கு வனங்களால் சூழப்பட்ட வீரட்டானம் என்று சொல்லப்படுகிறது.

 

ஜேஷ்டா தேவி, நாகர்கள், பிடாரி, சப்த மாதாக்கள் வழிபட்ட லிங்கங்கள் பைரவர் சந்நிதிகள் உள்ளன.

 

கஜசம்ஹார மூர்த்தி அழகான மூர்த்தம்; அழகிய வேலைபாடமைந்தது.

 

அம்பாள் திருமேனி - இடுப்பில் முருகனுடன் காட்சி. முருகன் ஒருவிரலை பக்கத்திலுள்ள மூர்த்தியைச் சுட்டும் நிலையில் இருப்பதும், அம்பிகை ஒரு பாதத்தைத் திருப்பி நடந்து செல்ல முயலும் அமைப்பில் இருப்பதும் கண்டு மகிழத்தக்கது. இவ்வமைப்பு தலபுராணம் தொடர்புடையது.

 

  • மூலவர் - சுயம்பு மூர்த்தி; நாகாபரண அலங்காரத்தில் அழகு மிளிர காட்சித் தருகிறார்.

 

  • சுவாமி மண்டபத்தில் அட்ட வீரட்டச் செயல்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

 

  • மாசி மகத்தில் பெருவிழாவும், கஜசம்கார ஐதீக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 

  • இக்கோயிலில் 10 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்துச் சாலையில் வழுவூர் என்று கைகாட்டி உள்ள இடத்தில் இறங்கி, 2 கி.மீ. சென்றால் ஊரையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

Related Content

திருஅதிகை வீரட்டானம் (திருவதிகை) தலவரலாறு

திருக்கோவலூர் வீரட்டம் தலவரலாறு