இறைவர் திருப்பெயர்: சத்தியவாகீஸ்வரர், பொய்யாமொழியார்.
இறைவியார் திருப்பெயர்: கோமதியம்பாள், ஆவுடைநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : பச்சையாறு, சத்திய தீர்த்தம்.
வழிபட்டோர்:தேவர்கள், இராமன், சீதை, இலக்குவனன்.
Sthala Puranam
இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் "சோரகாடவி" என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதைய மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு.
ஒருமுறை, காசிப முனிவருக்கு பிள்ளைகளாகப் பிறந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டி நின்றனர். இறைவனார் தேவர்களிடம் பொதிகைமலையின் தென்புறத்தில் தாம் எழுந்தருளியிருக்கும் களக்குடி சென்று தவஞ்செய்யுமாறு கூறினார். தேவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் தேவர்கள் அசுரர்களுடன் போர் புரிய, சிவபெருமான் தமது கணங்களுடன் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றியை நல்கினார். இதன் காரணத்தினாலேயே தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமானுக்கு "சத்தியவாகீசர், பொய்யாமொழியார்" என்றும், இப்பதிக்கு "சத்திய நகரும்" என்றும், இங்குள்ள தீர்த்தம் "சத்திய தீர்த்தம்" என்றும் பெயர் வழங்கலாயிற்று என்றும் தலவரலாறு சொல்லப்படுகிறது.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3).
Specialities
மணி மண்டபத்தில் அழகிய சிற்பங்களும் இசைத் தூண்களும் அமைந்து உள்ளன. 21 கதிர்கள் உள்ள தூண்களில் தட்டினால் மூன்று ஸ்தாயியிலும் உள்ள 21 ஸ்வரங்கள் முறையே உண்டாகின்றன.
சுவாமிக்கு 1. புன்னைவனநாதர், 2. பிரமநாயகன், 3. பரிதிநாயகன், 4. சுந்தரலிங்கம், 5. களந்தை லிங்கம், 6. பைரவ லிங்கம், 7. வீரமார்த்தாண்ட லிங்கம், 8. திரிபுரஹரன், 9. வைரவநாதர், 10. சாமள மகாலிங்கர், 11. சோம நாயகர், 12. குலசை நாயகர் முதலிய பெயர்களும் வழங்குகின்றன.
கோயிலின் முன் வாயிலில் இக்கோயில் திருப்பணி செய்த வீரமார்த்தாண்டவர்மனும், சுந்தரரும், சேரமானும் இருபுறமும் உள்ளனர்.
மார்ச்சு மாதம் 20, 21, 22 ஆகிய நாள்களிலும், செப்டம்பர் 20, 21, 22 ஆகிய நாள்களிலும் சூரியனின் கதிர்கள் சுவாமி மீது படும் அற்புதக் காட்சி கண்டு மகிழத்தக்கது.
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது.
இக்கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனை புறமேரிச்சுவரமுடைவிய்ய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது.
Contact Address