logo

|

Home >

hindu-hub >

temples

சித்தவடமடம் (கோட்லாம்பாக்கம், சிதம்பரேசர் கோயில்) Siddhavadamadam (Kotlampakkam, Chitambareswarar Temple)

இறைவர் திருப்பெயர்: சிதம்பரேஸ்வரர், சிற்றம்பலநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சிவகாமசுந்தரி.

தல மரம்:

ஆலமரம் (வட வ்ருக்ஷம்)

தீர்த்தம் :

வழிபட்டோர்:குபேரன், லக்ஷ்மி, அகஸ்தியர், கருடன், சுந்தரர், ஸ்ரீனிவாச ரத்னகேட தீக்ஷிதர்

Sthala Puranam

  • அஷ்டதிக் பாலகர்களில் ஒருவராகிய குபேரன் இத்தலத்து இறைவனைப் பூஜித்து, இழந்த தன் பதவியையும்,
    இருநிதியையும் பெற்றார். 
  • நாரணனைப் பிரிந்த லக்ஷ்மி. அகஸ்திய மகரிஷியின் உபதேசப்படி, 'சம்பத் கௌரி விரதம்' இருந்து தன் கணவனான மஹாவிஷ்ணுவை மீண்டும் அடைந்த திருத்தலம்.
  • அகத்திய மகரிஷி வாதாபி என்ற அசுரனைப் புசித்ததால், (நரமாமிசம் உண்ட தோஷத்தால் ஏற்பட்ட குன்ம நோய் நீங்க, இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி, இறைவனை பூஜித்து, தன் நோய் நீங்கி இறைவன் அருள் பெற்ற தலம்.
  • கருடன் தன் தாயான விநதையின் அடிமைத் தளையை நீக்க, இங்குள்ள சித்தலிங்கத்தை பூஜித்து, பராக்கிரமம் பெற்று, தேவலோகத்திலிருந்து அமிருதம் கொண்டு வரக் காரணமாக இருந்த தலம்,
  • திருவதிகையை மிதிக்க அஞ்சிய சுந்தரர் சித்தவடம் என்னும் இப்பகுதியில் இருந்த ஒரு மடத்தில் இரவு தங்கினார். இம்மடம் கோயிலுக்கு மேற்கில் முற்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
  • இரவு உறங்கும்போது இறைவன் முதியவராக வந்து சுந்தரரின் தலைமீது கால்படும்படி வைத்து உறங்குபவரைப் போல இருந்தார். விழித்த சுந்தரர், "ஐயா மறையவரே! என் தலைமீது உம் திருவடி படுமாறு வைத்துள்ளனையே" என்று கேட்க, அம்முதியவர், "திசைஅறியா வகை செய்தது என்னுடைய மூப்பு" என்றுரைத்தார். சுந்தரர் வேறு திசையில் தம் தலை வைத்துப் படுத்தார்; அங்கும் அவர் தலைமீது திருவடி படுமாறு இறைவன் செய்யவே, கோபமுற்ற சுந்தரர் "இங்கு என்னைப் பல்காலும் மிதித்தனை நீ யார்?" என்று கேட்க, இறைவன் "என்னை அறிந்திலையோ?!" என்று கூறி மறைந்தார். இறைவனின் அருஞ்செயலை அறிந்த சுந்தரர் மனம் வருந்தி "தம்மானை அறியாத சாதியார் உளரே" என்றெடுத்துப் பாடிப் பரவினார். இவ்வாறு சுந்தரருக்குத் திருவடி தீட்சை அருளிய தலம் இதுவாகும்.

வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - ஒத்த வடத்திள  (4-2-3)  சுந்தரர் - தம்மானை அறியாத சாதியார் (7-38-1).

Specialities

  • திருவதிகைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மடம் என்பது பெரிய புராணக் குறிப்பு.
  • இப்பகுதி தற்போது கோட்லாம்பாக்கம் என்று வழங்குகிறது. சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கிய இப்பகுதி, தற்போது கோடாலம்பாக்கம் என்றாகி, அதுவும் மருவி கோட்லாம்பாக்கம் என்றாயிற்று. கோடல் என்பது செங்காந்தள் மலரைக் குறிக்கும். எனவே இம்மலர்கள் நிறைந்த பகுதியாக இஃது முற்காலத்தில் இருந்திருக்கலாம்.
  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • சித்தவடமடம் என்கிற கோட்லாம்பாக்கம் கிராமம், வடமொழி விற்பன்னரும் அம்பாள் உபாசகருமான ஸ்ரீமான் ரத்னகேட ஸ்ரீநிவாச தீக்ஷிதர் அவர்களுக்கு அரச மான்யமாக வழங்கப்பட்டது. ஸ்ரீமான் தீக்ஷிதர், தேவியின் திருவருளால் அமாவாசையைப் பௌர்ணமியாக்கிய அற்புதம் நிகழ்த்தியவர். மேலும் தன் மகளான மங்களாம்பிகையை சிவ பக்தரான அடையபலம் மகான் அப்பைய தீஷிதருக்கு மணமுடித்தவர். இருவருமே தங்கள் வடமொழிப் புலமையால் அரசர்களால் பாராட்டப்பட்டு பரிசுகள் பெற்றவர்கள். ரத்ன கேடயம் பரிசாகப் பெற்றதால் ஸ்ரீனிவாச தீக்ஷிதர் "ரத்ன கேட தீக்ஷிதர்" என்றே அழைக்கப்பட்டார்,     

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு பண்ருட்டியிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் திருக்கோவிலூர் சாலையில் புதுப்பேட்டை வந்து, விசாரித்து வீதியின் கோடியிலுள்ள சித்தவடம் கோயிலை அடையலாம்.

Related Content

திருஅதிகை வீரட்டானம் (திருவதிகை) தலவரலாறு

திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோயில் தலவரலாறு

எய்தனூர், சந்தானபுரி என்றழைக்கப்படும் ஆதிபுரத் தல வரலாறு