logo

|

Home >

hindu-hub >

temples

திருவொற்றியூர் (சென்னை) திருக்கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்.

இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம்.

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் , பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன், பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர், 27 நட்சத்திரங்கள் முதலியோர்.

Sthala Puranam

thiruvoRRiyUr temple

தல வரலாறு

  • ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் இறை (வரி) விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க" என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

     

  • உபமன்யு முனிவரிடத்து சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், "படம்பக்கநாதர் " என்ற திருநாமத்தையும் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை (சுவடு) இறைவன் திருமேனியில் இன்றும் காணலாம்.

     

  • சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தலமரமான மகிழ மரத்தின் முன்னால், "நான் உன்னைப் பிரியேன்" என்று சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, இத்தல எல்லையைத் தாண்டியதும், தன் கண்பார்வையை இழந்தார்.

     

  • 'வட்டப்பாறை அம்மன் ' (காளி) சந்நிதி - இந்த அம்மன் ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.

     

  • பட்டினத்துப் பெருமானுக்குப் பேய்க் கரும்பு இனித்த இடம் இஃது ஆகும்; ஆதலின் தனக்குரிய இடம் இதுவே என்று முடிவு செய்து கடற்கரையொட்டிய (அவர் கோயில் உள்ள) இவ்விடத்தில் சமாதியானார் என்பது வரலாறு.

 

திருமுறைப் பாடல்கள்		: 

பதிகங்கள்  :  சம்பந்தர்   -   1. விடையவன் விண்ணுமண்ணுந் (3.57); 
                                
                அப்பர்     -   1. வெள்ளத்தைச் சடையில் (4.45),
                                2. ஓம்பினேன் கூட்டை வாளா (4.46),
                                3. செற்றுக் களிற்றுரி கொள்கின்ற (4.86),
                                4. ஒற்றி யூரும் ஒளிமதி (5.24),
                                5. வண்டோங்கு செங்கமலங் (6.45);

                சுந்தரர்    -    1. அழுக்கு மெய்கொடுன் (7.54), 
                                2. பாட்டும் பாடிப் பரவித் (7.91);

பட்டினத்துப் பிள்ளையார்  -    1. இருநில மடந்தை (11.31) திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது;  
                           
பாடல்கள்  :  சம்பந்தர்   -       உளங்கொள்வார் (1.76.4);

               அப்பர்     -       பற்றற் றார்சேர் (4.15.1), 
                                  ஓம்பினேன் கூட்டை (4.46.1 & 2), 
                                  திரையார் புனற்கெடில (6.7.4), 
                                  காடலாற் கருதாதார் (6.10.2),  
                                  சிறையார் வரிவண்டு (6.22.3), 
                                  கானேறு களிற்றுரிவைப் (6.30.4), 
                                  வானவர்க்கு (6.41.8), 
                                  அண்ணா மலையமர்ந்தார் (6.51.3), 
                                  உரையாரும் (6.62.6), 
                                  பிறையூருஞ் (6.71.4), 
                                  காரார் கடல்நஞ்சை (6.78.9), 
                                  வானகத்தில் வளர்முகிலை (6.80.8),  
                                  உழையாடு (6.81.7), 
                                  கார்முகிலாய்ப் (6.91.6), 
                                  பாரிடங்கள் (6.96.6);

 
             சுந்தரர்   -          வாரமாகித் திருவடிக்குப் (7.5.9), 
                                  சுற்றுமூர் (7.31.2), 
                                  ஒற்றியூ ரென்ற (7.32.8), 
                                  வேதம் ஓதி (7.49.7), 
                                  விண்பணிந் தேத்தும் (7.69.3), 
                                  வாரிடங்கொள் (7.89.8); 

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - தஞ்சாக மூவுலகும் (11.6.22) க்ஷேத்திரத் திருவெண்பா;           

கபிலதேவ நாயனார்               - அடியோமைத் (11.22.15) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை; 

பரணதேவ நாயனார்              -  மகிழ்ந்தன்பர் (11.24.65 & 99) சிவபெருமான் திருவந்தாதி; 

பட்டினத்துப் பிள்ளையார்          -  சென்றேறி (11.30.63) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;    

நம்பியாண்டார் நம்பி              -  கம்பக் கரிக்கும் (11.34.55 & 70) திருத்தொண்டர் திருவந்தாதி; 

சேக்கிழார்                         -  வரை வளர் (12.21.332,333,334 & 338) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,   
                                       தென் திசையில் (12.28.1028,1030,1069,1070,1072 & 1073) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                       அங்கு சிலநாள் (12.29.199,201,204,213,217,218,219,231,243,264,266,269,274 & 345) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,
                                       பேருலகில் ஓங்கு (12.45.1 & 7) கலிய நாயனார் புராணம். 

 

Specialities

சிறப்புகள்

  • ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம்.

     

  • இத்தல இறைவனை மூவர் பெருமக்கள், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், வள்ளலார் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர்.

     

  • சுந்தரர், சங்கிலியாரை மணந்துகொண்ட சிறப்புடையத் தலம்.

     

  • கலிய நாயனாரின் அவதாரத் தலம்.

    	அவதாரத் தலம்	: திருவொற்றியூர்.
    	வழிபாடு		: இலிங்க வழிபாடு.
    	முத்தித் தலம் 	: திருவொற்றியூர்.
    	குருபூசை நாள் 	: ஆடி - கேட்டை.
    

     

  • முற்றத்துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்றத் தலம்; வடலூர் வள்ளற்பெருமானின் வாழ்வொடு இயைந்த பதி.

     

  • தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு பக்கத்தில் ஆதிசங்கரர் உருவமும்; அடுத்துள்ள வேப்பமர நிழலில் பெரிய லிங்கம் ஆவுடையாரின்றி உள்ளது.

     

  • 'ஒற்றியூர் ஈஸ்வரர் ' கோயில் முன் மண்டபத் தூண்கள் அற்புதமான சிற்பங்களையுடையது; மேலே உள்ள தூணில் - விதானத்தில் சூரியன் தலைப்புறமும், சந்திரன் காற்புறமும் அமைய மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில் பஞ்சாட்சர விளக்கம் அமைத்துக்காட்டப்பட்டுள்ள (கற்சிற்பம்) அழகு கண்டுணரத் தக்கது.

     

  • சுவாமி, அம்பாள் ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது.

     

  • சுந்தரர், சங்கிலியாருடன் திருக்கல்யாண கோலத்தில் காட்சிதரும் சுந்தரமூர்த்தியார் மண்டபத்தில் மக்கள் இன்றும் திருமணங்கள் நடத்திச் செல்கின்றனர்.

     

  • கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது.

     

  • மூலவர் சுயம்பு; நாக வடிவில் அமைந்துள்ள சிவலிங்கத் திருமேனி. சிவலிங்கமும், ஆவுடையாரும் சதுர வடிவில் அமைந்துள்ளன. சதுர வடிவமான கவசம் சுவாமிக்குச் சார்த்தப்பட்டள்ளது; ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் மட்டும் இக்கவசம் அகற்றப்பட்டு புனுகுசட்டம், சவ்வாது, சாம்பிராணித் தைலம் ஆகியவை மட்டுமே சார்த்தப்படுகிறது. இந்நாள் முதலாக மூன்று நாள்களுக்கு மட்டுமே சுவாமி, கவசமில்லாதிருப்பார்; மீண்டும் சார்த்தப்பட்டு ஆண்டு முழுவதும் சுவாமி கவசத்துடனேயே காட்சியளிக்கின்றார். அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே நடைபெறுகிறது.

     

  • வள்ளற்பெருமானின் பாடல்களும், திருமுறைப் பதிகங்களும் கோயிற்சுவரில் கல்லில் பொறித்துப் பதிக்கப் பெற்றுள்ளன.

     

  • இக்கோயிலிலிருந்து சிறிது தொலைவில் (எண்ணூர் நெடுஞ்சாலையில்) பட்டினத்தார் திருக்கோயில் உள்ளது. பட்டினத்தார் இங்குதான் சமாதி அடைந்துள்ளார்.

     

  • இங்கு ஆடித்திங்கள் உத்திராட நட்சத்திரத்தில் (பட்டினத்தார்) குருபூஜை நடைபெறுகின்றது.

     

  • இக்கோயிலில் சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், இராஷ்டிர கூடர்கள், விஜய நகர மன்னர்கள், சம்புவராய மன்னர்கள் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.

Contact Address

அமைவிடம் அ/மி. தியாகராசர்சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 600 019. தொலைபேசி : 044 - 25733703, +91-9444479057. மாநிலம் : தமிழ் நாடு சென்னையின் ஒரு பகுதி. 'உயர்நீதி மன்றப்' பகுதியிலிருந்து திருவொற்றியூருக்கு அடிக்கடி நகரப் பேருந்து செல்கிறது. காலடிப்பேட்டையை அடுத்து, 'தேரடி' நிறுத்தத்தில் இறங்கினால் வீதியின் கோடியில் கோயிலைக் காணலாம். சென்னையின் முக்கியப் பகுதிலிகளிலிருந்தும் நகரப்பேருந்து வசதி உள்ளது.

Related Content