logo

|

Home >

hindu-hub >

temples

திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் தலவரலாறு (கிராமம்)

இறைவர் திருப்பெயர்: சிவலோகநாதர், முடீஸ்வரர், முண்டீசர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வநாயகி, செல்வாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : முண்டக தீர்த்தம் (அ) பிரம்ம தீர்த்தம்.

வழிபட்டோர்:அப்பர், திண்டி, முண்டி (இவர்கள் இறைவனின் காவலர்களாவர்), பிரமன், இந்திரன் ஆகியோர்.

Sthala Puranam

Tirumunicharam temple

  •  பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள தலம். மக்கள் இவ்வூரைக் "கிராமம்" என்று அழைக்கின்றனர்.
  • இறைவனின் காவலர்களாகிய 'திண்டி' 'முண்டி' வழிபட்ட தலம்.
  • துவாபர யுகத்தில் சொக்கலிங்க மன்னன் என்பவன் வேட்டைக்கு வந்தபோது குளத்தில் ஒரு அதிசயமான தாமரை மலரைக் கண்டான்; ஆள் அனுப்பி, அம்மலரை பறித்து வருமாறு கட்டளையிட்டான். அவனும் சென்று பறிக்கையில் அம்மலர் அவன் கைக்கு அகப்படாமல் சுற்றி வரலாயிற்று. அதுகண்ட மன்னன், அதன்மீது அம்பெய்ய, குளம் முழுவதும் செந்நிறமாயிற்று. அது கண்ட மன்னன் மயங்கி அதனருகே சென்று பார்த்தபோது அம்மலரில் இலிங்கமிருப்பதைக் கண்டான்; அதை எடுத்து அக்குளக்கரையில் ஆலயம் எடுப்பித்துப் பிரதிஷ்டை செய்தான் என்று வரலாறு சொல்லப்படுகிறது. மன்னன் அம்பு எய்திய காரணத்தால் இன்றும் சுவாமி மீது அம்புபட்ட தழும்புள்ளது. இதனால் சுவாமிக்கு 'முடீஸ்வரர் ' என்றும் பெயர் வந்தது. இப்பெயரே கல்வெட்டில் "மௌலி கிராமம்" என்று குறிக்கப்படுகின்றது. நாளடைவில் மக்கள் 'மௌலி ' என்பதை விட்டுவிட்டு 'கிராமம்' என்றே அழைக்கலாயினர். 'முடீச்சுரம்' என்ற பெயர் 'முண்டீச்சுரம்' என்றாயிற்று என்பதும் எண்ணத்தக்கது.
  • வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப் பை, (பொக்கணம்) தந்தார் ஆதலின் இவ்விறைவன் கல்வெட்டில் 'பொக்கணம் கொடுத்த நாயனார் ' என்றும்; மற்றும் ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர் என்றும் குறிக்கப்பபெறுகின்றார். (ஆற்றின் கரையிலுள்ள கோயில் - ஆற்றுத்தளி).

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    அப்பர்    -    1. ஆர்த்தான்காண் அழல்நாகம் (6.85);

Specialities

  • துவார வாயிலில் விநாயகரும் முருகனும் இடம் மாறியுள்ளனர். (முருகனின் இடக் கீழ்க்கை நாராச முத்திரையுடன் - அகமர்ஷண நீரைக் கீழே விடும் அமைப்பில் - இருப்பது கவனிக்கத் தக்கது.)
  • தட்சிணாமூர்த்தி கல்லால மரமின்றி மலைமீது நந்தியை வாகனமாகக் கொண்டு காட்சித் தருகிறார்.
  • சுவாமி அம்பாள் விமானங்கள் மிகப் பழமையானவை.
  • திண்டி முண்டி இருவர் திருவுருவச் சிலைகள் உள்ளன.
  • இத்திருக்கோயி­ல் சோழ மன்னர்களில் முதற்பராந்தக சோழன், இரண்டாம் ஆதித்தகரிகாலன், முதலாம் இராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலானோர் காலங்களிலும், பாண்டியர்களில் கோனேரின்மை கொண்டானாகிய சுந்தரபாண்டிய தேவன், வீரபாண்டிய தேவன் இவர்கள் காலங்களிலும், இராஷ்டிரகூட மன்னரில் கன்னர தேவர் காலத்திலும், விஜயநகர மன்னரில், வீரவிருப்பண்ண உடையார் காலத்திலும் செதுக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
  • இக்கோயில் கி. பி. 943-ல் கேரள மன்னனான வெள்ளாங்குமரன் என்பவனால் (முதற்பராந்தகன் காலத்தில்) கருங்கல்லால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.
  • பழமையான கல்வெட்டுக்களில் திருமுடீச்சரம் என்றே பெயருள்ளது. முடியூர் நாடு என்னும் தனிப் பெயர் கொண்ட நாட்டுக்குத் தலைநகராக இருந்தது.
  • மதுரை கோப்பரகேசரி வர்மனின் 24-வது கல்வெட்டில் முடியூர் நாட்டு முடியூர் என்றுள்ளது.
  • சௌந்தரபாண்டியன் காலக் கல்வெட்டில் முடியூர் நாட்டுக் 'கிராமம் ' என்றுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழயாக அரசூர் செல்லும் பாதையில் சென்று, திருவெண்ணெய்நல்லூரைக் கடந்து 2-கி. மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். விழுப்புரத்திலிருந்து நகரப்பேருந்து செல்கிறது. தொடர்பு : 04146 - 206700

Related Content

திருநாவலூர் தலவரலாறு

திருநெல்வெண்ணெய் (நெய்வெணை) தலவரலாறு

திருஅறையணிநல்லூர் தலவரலாறு

இடையாறு தலவரலாறு

திருவெண்ணெய்நல்லூர் தலவரலாறு